மலரும் நினைவுகள் என்ற வலைப்பதிவில் நண்பர் ஆதவன் எழுதிய புத்தக அறிமுகம் இது.
வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்..
(திறனாய்வு அல்ல.. புத்தக அறிமுகம் மட்டுமே..)
புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை.
விலை: ரூபாய் 220/- (நாவலின் ஆசிரியர் உழைப்புக்கு இது மிகக் குறைவு)
நீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகம் வெட்டுப்புலி. படிக்கத் தொடங்கியதும், என்னைத் தானாகவே அடுத்தடுத்த பகுதிகளுக்கு இட்டு சென்றது புத்தகத்தின் சரடுகளே.. ஒரு நாவலாசிரியரின் வெற்றியும் அதுவே. படிக்கும் வாசகனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல், தோள் மீது கைப்போட்டு, அழைத்து சென்று ஒரு புதுப் பரவசத்தை ஏற்படுத்த வேண்டிய தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்த எல்லா நாவலாசிரியர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெட்டுப்புலி நாவல் மூலம் தமிழ்மகனும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
"cheeta fight" என்கிற தீப்பெட்டியில் ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுத்தைப் புலியை வெட்டப்போகும் காட்சி நாம் எல்லோரும் பார்த்ததே. ஆனால் அந்த ஒற்றைக் கட்சியின் வழியாக நூற்றாண்டு கால சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் பற்றிய மிக ஆழமான பதிவை தனது இந்த நாவலின் வழியாக சொல்லி இருக்கும் தமிழ் மகன் நிச்சயம் வரலாற்றில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர்.
எந்த விதத் திரிபும் இல்லாமல், ஒரு சாரார் பக்கம் மட்டுமே சாய்ந்துவிடாமல், இவ்வளவு நடுநிலைமையோடு ஒரு ஒரு பரப்பின் வரலாற்றை பதிவு செய்திருப்பது, அதுவும் புனைவுகளோடு, உயர்ந்த இலக்கியத் தரத்திற்கு ஈடாக உண்மைக் கலந்த கதையை, வரலாற்றோடு இணைத்து பதிவு செய்திருப்பது மிக போற்றத்தக்க முயற்சி.
ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலேயே இப்படியாக சொல்லி இருப்பார். "வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும், விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்."
திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தாலும், இந்த நாவல் அந்தக் கால சூழ்நிலையை தழுவி செல்கிறதே தவிர, அந்தக் கட்சியின் பக்கம் சாய்ந்து செல்லவில்லை. மிக சவாலான பணியது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணியை நாவலின் வழியாக படிக்கும்போது நாமும் அதே காலக்கட்டத்துக்கு சென்று வருவது நாவலின் காட்சிப்படுத்துதலுக்கு சிறப்பு. இந்த நாவலில் அண்ணா வருகிறார். கலைஞர் வருகிறார். பிரபாகரன் வருகிறார். பெரியார் வருகிறார். திராவிட இயக்கங்களின் வேரான திரைப்படத் துறையும் அதன் வளர்ச்சியும் இந்த நாவலின் வழியாக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருநெல்வேலி, போன்ற தென் மாவட்டங்களைப் பற்றி ஒரு விதமான பரவசத்துடனும், சென்னை போன்ற மாநகரத்தைப் பற்றி ஒருவிதக் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கும் தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் இந்த நாவலில் ஏதாவது ஒரு பகுதியை முழுமையாக படித்தால் (நேர்மையோடு) கூட சென்னை சார்ந்த ஒரு சிறந்தக் காவியம் உருவாகக் கூடும். சினிடோன் நாராயணன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுக முதலியார் எனும் கதாபாத்திரம் திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குவதில் தொடங்கி, தன் முயற்சியில் தொடர் தோல்விகள் அடைவது வரை மட்டுமே யாராவது திரைப்படமாக எடுத்தால், தற்கால சூழலில் அது மிக யதார்த்தமான படமாக இருக்கும்.
"பெரிய பாளையம் வரும்போதே உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவில் வாசலிலேயே உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்த கூழையும், ஊறுகாயையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இருவரும் சற்று நேரம் களைப்பாறினார். வேப்பமரத்து நிழலும் நடந்த களைப்பும் சட்டென இருவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சற்று தூரத்தில் குருவிக்காரர்கள் சிலர் உண்டிகோல் செய்துகொண்டும் மைனா, கிளி, அணில்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர்."
மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். ஏதோ மதுரை மாசி வீதியிலோ, திண்டுக்கல் நெய்க்காரன் பட்டியிலோ, நடந்த சம்பவம் அல்ல மேற்சொன்னது. இது நடந்தது சென்னையில். சென்னைப் புறநகரான பெரியபாளையம் பகுதியில்.
சென்னையில், குருவிகள் இல்லை, மைனா என்றொரு பறவையே இங்கு இருந்திருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் எல்லா மேதாவிகளும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் கூட சென்னை நகரின் மீது (நினைவிருக்கட்டும் நான் கூட சென்னையை பிறப்பிடமாக கொண்டவன் அல்ல.) கொண்ட அளவுக் கடந்த பாசத்தினால் நாவலை சென்னை சார்ந்த படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாவலாசிரியர் அப்படி எவ்விதமான பிரக்னையுமின்ரி சென்னை சார்ந்த எல்லா விசயங்களையும், இந்த ஒற்றை நாவலில் பதிவு செய்திருக்கிறார். பிற்காலத்தில் சென்னை நகரின் வரலாறு தவறாக திரிக்கப்படுமாயின் அதற்கு இந்த நாவல் மிக சரியான பதிலாக அமையும்.
ஒரு நாவலின் மிக முக்கிய பணி, எல்லாவற்றையும் மிக தெளிவாக, மிக நுணுக்கமாக விவரிப்பது. வெட்டுப்புலி நாவலில் சென்னையில் வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் உயர்ந்த பண்புகளும், மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
நாவல் பற்றி சொல்ல வந்த எதை விடுவது, எதை தொடுவது என்கிற குழப்பம் எனக்குள் மேலோங்கி இருப்பதால், நான் எனக்கான, சென்னை நகரின் மேன்மையைப் போற்றும் ஒரு சில விடயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பேன். புனைவுக் கலந்த நாவல்தான் என்றாலும், அதன் ஆசிரியரே, எது நிஜம், எதுக் கற்பனை என்பதை முதலிலேயே சொல்லி விடுவதால் எவ்விதக் குழப்பமும் இன்றி நாவலை வாசிக்க முடிகிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியும், மிக கவனமாக வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசிப்பு உலகிற்கு புதிதாக வந்தவர்கள் கூட எந்த வித தயக்கமுமின்றி வாசிக்க வேண்டிய நாவல் வெட்டுப்புலி. காரணம் அதன் எளிய நடையும், மொழி வடிவமும். நமக்கு புரியாத ஒரு சில சொற்களுக்கு ஆசிரியரே பொருள் கூறிவிடுவதால் நமக்கு படிப்பதும், கதையை தொடர்ந்து செல்வதும் எளிதாகி விடுகிறது.
முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினால் போதும், அடுத்தடுத்த பகுதிகளுக்கு இந்த நாவல் உங்கள் கைப்பிடித்து அழைத்து செல்லும்.
வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.
எல்லோரும் அவசியம் வாசிக்க, நேசிக்க வேண்டிய நாவல்
3 கருத்துகள்:
வலிகளுக்குச் சின்ன ஒத்தடம்
நாவலில் கடந்த நூற்றாண்டின் சென்னையைப் பதிவு செய்வதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது உங்கள் விமர்சனத்தின் மூலம் அறிய முடிகிறது. சென்னை வேற்று மாநில, வேற்று மாவட்ட மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் மாவட்டம். சுமார் அரை நூற்றாண்டுகளாக இங்கு இறக்கு மதியானவர்கள் பல லட்சம் பேர். ஆனால் இந்த அரை நூற்றாண்டுகளாக அவர்களால் தொடர்ந்து தூற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இங்கு இருப்பவர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள் போலவும் சுத்தம் சுகாதாரம் அற்றவர்கள் போலவும் செம்மை குணம் இல்லாதவர்களாகவும் நல்ல மொழி வளம் இல்லாதவர்களாகவும் தொடர்ந்து நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி, இலக்கிய உலகிலும் இப்படிச் சித்திரிக்கப்படும் போது வேதனையாக இருக்கிறது.
கவிஞர் சுகுணா திவாகர் எழுதிய நூல் அறிமுகம்
http://tamilnirubar.org/?p=1985
வெட்டுப்புலி : பத்திரிகையாளர் தமிழ்மகனால் எழுதப்பட்ட இந்த நாவல் எழுபது ஆண்டுகளாய்த் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானிக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் தமிழ்ச்சினிமா வரலாற்றையும் நாவலுக்குள் கொண்டுவந்திருக்கிறது. கதையின் நாயகனின் தாத்தாதான், வெட்டுப்புலி தீப்பெட்டியில் இடம்பெற்றிருக்கும் சிறுத்தையை வென்ற சின்னாரெட்டி என்றறிந்து மேலும் தரவுகள் தேடி நாயகனும் நண்பர்களும் பயணிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள். இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்துபோனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு வெவ்வேறு தகவல்பரப்பில் முரண்பட்டு தொடரும் கதையின் போக்கு முப்பதுகளில் நீதிக்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான அரசியல் உராய்வுகள். நாடகநடிகர்களைக் கொண்டு சினிமா என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயல்கிற மனிதர்களின் போக்கு என தொடங்குகிறது. இறுதியாக மு.க.அழகிரி மத்திய அமைச்சராவதோடு நாவல் முடிகிறது. சமகால வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நாவல் வெறுமனே சுவாரசியத்தால் தூண்டப்படுகிற பிரதியாய் மட்டுமல்லாது, வரலாறு குறித்த பிரக்ஞ்யை நம்முன் உசுப்புகிறது. வெளியீடு : உயிர்மை.
பகிர்விகளுக்கு நன்றி சார்.
நிச்சயம் வாங்கி படிக்கிறேன்.
வாழ்த்துகள்.
கருத்துரையிடுக