தமிழ்மகன் |
தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.
சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
எப்போதும் சென்னை நகரையும் அதன் பெருமையையும், அழகியலையும் பதிவு செய்வது ஒரு சிலருக்கு கை வந்த கலை. அதிலும் சென்னையை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு சென்னை நகரின் மீதும், அதன் பழமையின் மீதும் இருக்கும் ஈடுபாடு அலாதியானது. அந்த வகையில் தமிழ்மகன் எப்போதும் சென்னையின் கம்பீரத்தை தனது எழுத்தில் நேர்த்தியாக வடிப்பவர். அவரது வெட்டுப்புலி நாவலில் சென்னையின் நூற்றாண்டு வாழ்வை மிக அழகாக பதிவு செய்திருப்பார். அதிலும், திரைப்படங்கள் சார்ந்தும், ஸ்டுடியோக்கள் சார்ந்தும் அவர் பதிவு செய்திருப்பவை மிக முக்கியமானவை.
தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரே வாய்ப்பாக இருந்தன டூரிங் டாக்கீஸுகள். சிவாஜியின் நூறாவது படம் பற்றியும் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் கல்யாணம் செய்து கொண்ட பின் நடித்து முதன் முதலில் வெளியான படத்தை பற்றியும் அவர்கள் விரல் நுனியில் விஷயம் வைத்துக் கொள்ள டி.வி.யோ, செல்போனோ.. ஏன் தொலைப்பேசியோ அப்போது இல்லை. பத்திரிகைகள் கூட அத்தனை பரவலாக இருக்கவில்லை. அப்படி இருந்த சில பத்திரிகைகளை புறநகர் தமிழர்கள் பெரும்பாலோர் வாசிக்க முடியாதவர்களாகவோ, வாங்க முடியாதவர்களாகவோ, போதிய ஆர்வம் இல்லாதவர்களாகவோ இருந்தனர். எனக்குத் தெரிந்த எழுபதுகளில் அவர்கள், காலை முழுதும் கடும்பணி புரிந்துவிட்டு, செகண்ட் ஷோ பார்த்துவிட்டு காடுமேடெல்லாம் கடந்து இரவு இரண்டு மணி வாக்கில் தூங்கப் போனார்கள். அதை களைப்பு நீங்க வைக்கும் கடமையாக செய்துவந்தனர்.
தங்கள் திரைத் தெய்வங்களைக் காண, கோவிலுக்குப் போவதுபோல அவர்கள் போவதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் வசதியானவர்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போவார்கள். பொதுவாக டூரிங் தியேட்டர் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சற்றேறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மக்கள் வருவார்கள்.
நான் சென்னையில் இருந்து காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகளுக்கு மட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறைக்கும்கூட எங்கள் ஊருக்குப் போய்விடுவேன். எங்கள் ஜெகநாதபுரம் கிராமத்துக்கு காரனோடையில் ஒரு டூரிங் டாக்கிஸும் ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் ஒரு டூரிங் டாக்கிஸும் இருந்தன. முறையே நாகு டாக்கீஸ். வெங்கடேஸ்வரா டாக்கீஸ் இது இரண்டுமே சுமார் நான்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில். "ஒளிவிளக்கு', "எங்க வீட்டுப் பிள்ளை' போன்ற படங்கள் என்றால் பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி என்று போய் வருபவர்கள் உண்டு. இப்போது பர்மா பஜாரில் "ஒளிவிளக்கு' சி.டி.யை பிளாட் பாரத்தில் பரப்பி விற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஏனோ மனசு கனக்கிறது.
எங்கள் வீடுகளில் படம் பார்ப்பது மிகுந்த ஆட்சேபகரமான விஷயமாக கருதப்பட்டு வந்ததால் (ரேடியோவில் சினிமா பாடல்கள் கேட்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது) எல்லோரும் தூங்கிய பின் செகண்ட் ஷோ பார்ப்பதுதான் ஒரே வழி.
அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக பம்பு ஷெட்டு காவலுக்குப் போகிறோம் என்று மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு சொல்லுவோம். ஆரம்பத்தில் வீட்டிலும் அதை நம்பினார்கள். பம்பு ஷெட் காவல் என்பது இரவு பத்து மணிக்கு மேல் த்ரி பேஸ் கரண்டு வந்த பிறகு மோட்டரை ஆன் செய்கிற வேலை.
இரவில்தான் பம்பு ஷெட்டுக்கான கரண்டு வரும். பத்து மணிக்கு மோட்டரை ஆன் செய்துவிட்டு படத்துக்கு ஓடுவோம். பத்தே காலுக்குப் படம். ஒரு சைக்கிள் இருக்கும். ஆனால் பெரும்பாலும் அதில் மூன்று பேருக்கு மேற்பட்டவர்தான் பயணிக்க வேண்டியிருக்கும். சீட்டில் உட்கார்ந்து இருப்பவன் தவிர, பின் பக்கம் கேரியரில் அமர்ந்திருப்பவனும் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்து ஒப்புக்கு சப்பாணியாக பெடல் மிதிப்பான். சைக்கிள் என்பது சும்மா பெயருக்குத்தான். அதில் எப்போதும் பெடல் கட்டை இருக்காது. ட்யூபில் காற்று எந்த நேரத்திலும் கம்மியாகத்தான் இருக்கும். பிரேக் இல்லாமல் இருப்பதை நாங்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை.
டபுள்ஸ் போனாலே சோழவரம் போலீஸ்காரர்களுக்குக் கொண்டாட்டம். பிடித்துவைத்து கையில் இருப்பதைக் கறந்துவிடுவார்கள். ட்ரிபில்ஸ், ஃபோர்பில்ஸ் எல்லாம் போனால்? "கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என்று விளம்பரப்படத்தில் வருவதுபோல குதூகலமாகிவிடுவார்கள். போதாததற்கு லைட் இல்லையென்றால் பிடிக்கலாம் என்றுவேறு அவர்களின் குதூகலத்தை எண்ணை விட்டு வளர்த்தார்கள். ஒவ்வொரு நாள் படம் பார்த்துவிட்டு வரும்போதும் எங்களுக்கு எமகண்டம்தான். ஜி.என்.டி. ரோடை கடந்து கிராமத்துக்குச் செல்லும் சாலைக்குத் திரும்புகிறவரை உயிரே போகும். சில நேரங்களில் அவர்களின் விசிலை கவனிக்காததுபோல வேகமாக ஓட்டிச் செல்ல முயற்சி செய்வோம். மூன்று பேரை நான்கு பேரை வைத்துக் கொண்டு தப்பிப்பது சாமானிய வேலையில்லை. மாட்டிக் கொண்டால், செவுள் பிய்ந்து கொள்கிற அடி கிடைக்கும். "சி.ஐ.டி. சங்க'ரோ, "பாகப்பிரிவினை'யோ பார்த்துவிட்டு வந்த திருப்தியில் அந்த அடியெல்லாம் எங்களுக்கு உரைத்ததே இல்லை.
சந்தேக கேஸ் சிஸ்டம் இருந்ததால் போலீஸ்காரர்களுக்கு செகண்ட் ஷோ பார்க்கிற மக்களைச் சந்தேகப்படுவது இயல்பாக இருந்தது.
மாதத்திற்கொருமுறை சந்தேக கேஸில் யாரையாவது பிடித்ததாகக் கணக்கு காட்ட வேண்டும் என்பது போலீஸ்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். என் நண்பர்கள் சிலர் லாக்கப்பில் அடைபட்டு மறுநாள் கோர்ட்டில் பைன் கட்டவிட்டெல்லாம் திரும்பி வந்தார்கள்.
இன்னொரு தொல்லையும் மின்வாரிய ஊழியர்களின் மூலம் ஏற்பட்டது. அப்போது விவசாயத்துக்கு இலவச மின்சாரம் நடைமுறையில் இருந்ததால், பத்து மணிக்கு கரண்ட் கொடுப்பார்கள். பெரும்பாலோர் மோட்டரைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போய் படுப்பார்கள். கொஞ்ச நேரத்தில் மீண்டும் கரண்ட் போய்விட்டு திரும்ப வரும். மீண்டும் மோட்டர் போட்டால்தான் ஓடும். நிறைய பேர் தூங்கிவிட்டதால் மோட்டர் போடாமல் விட்டுவிடுவார்கள். மின்வாரியத்துக்கு கரண்ட் மிச்சம்.
ஆனால் நாங்களோ பம்பு ஷெட் காவலுக்குப் போவதாகக் கிளம்பி வந்தவர்கள். ஏன் கரண்ட் வந்ததும் மோட்டர் போடவில்லை என்று கேட்பார்கள். பம்பு ஷெட்டுக்குப் போவதற்கு சைக்கிள் எதற்கு? போன்ற சந்தேகங்கள் வந்து, நாங்கள் படம் பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். போலீஸிலும் மாட்டிக் கொண்டு குடும்ப மானத்தை வாங்கிவிட்டதால் நாங்கள் கெüரவமாக படம் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் நிறுத்திவிட்டோம்.
சொல்லி வைத்தது மாதிரி நாங்களும் கொஞ்சம் பெரிய மனிதர்களாக ஆனோம். எனக்கும் என் மைத்துனருக்கும் ஒரே நாளில் திருமணம். இருவருக்கும் 21 வயது ஆரம்பித்துவிட்ட ஒரே சட்ட ரீதியான தகுதியின் காரணமாக அந்தத் திருமணம் நடந்தது. எப்போது வேண்டுமானாலும் படம் பார்க்கும் தகுதி எங்களுக்கு வந்துவிட்டதால் செகண்ட் ஷோவை முற்றிலுமாக விட்டுவிட்டோம்.
"டெண்ட் கொட்டாயில்' படம் பார்ப்பது சமூகத்தின் பார்வையில் ஒரு மாத்து கம்மியான விஷயமாக இருப்பதும் எங்களைப் படம் பார்ப்பதில் இருந்து விலக்கிவிட்டது. பெரும்பாலும் அதில் படம் பார்ப்பவர்கள் கடும் உழைப்பாளிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட சாதியினர்...
டூரிங் டாக்கீசைப் பற்றி இப்போது நினைவுபடுத்த முடிந்தவை..
டெண்ட் கொட்டாயில் "சேர் } 50' என்றும் "தரை }30' என்றும் தாற்காலிகமாக சுண்ணாம்பில் எழுதியது போன்றதொரு போர்டு நிரந்தரமாக பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்தது. விலைவாசி ஏற்றம் காரணமாக "சேர் }50', "சேர் - 60' என்று ஆன போதுகூட சேர் என்பதை மாற்றாமல் எண்ணை மட்டும்தான் மாற்றினார்கள்.
எங்களூருக்குச் சற்று தள்ளி, பூச்சி அத்திப்பேடு, தாமரைப்பாக்கம், மேலப்பேடு, கரலப்பேடு போன்ற இடங்களில் டெண்டு கொட்டகைகள் இருந்தன. டெண்ட் கொட்டகை என்பது நீளவாக்கில் ஒரு கோழிப்பண்ணை கொட்டகை போல இருக்கும். கோழிகள் வெளிவராமல் இருக்க அடைக்கப்படும் கம்பி வேலி மட்டும் அதில் இருக்காது. பெரிய துணி கட்டி திரையில் படம் காட்டுவார்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் புரஜெக்டருக்கு நேராக தலையைக் காட்டினால் திரையில் சரோஜா தேவி மறைந்து பெரிய நிழல் தலை மட்டும் திரையில் தெரியும். அந்த ஒரு வினாடி சரோஜா இழப்புக்காக அந்த மறைத்தவனை அடிப்பதற்கு ஆள்கள் கோஷமிட்டபடி ஆர்ப்பரிப்பார்கள்.
மணலில் உட்கார்ந்து படம் பார்ப்பதுதான் மிகவும் பிடிக்கும். காலை நீட்டி உட்காரலாம். காலியாக இருந்தால் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம். முன்னால் இருப்பவர் தலை மறைத்தால், மண்ணைக் கோபுரமாகக் குவித்து உயரமாக உட்கார்ந்து கொள்ளலாம். சிலர் பெண்களுக்கான தடுப்போரமாக உட்கார்ந்து சில்மிஷங்களில் ஈடுபடுவார்கள். அதன்மூலம் சின்ன சந்தோஷங்களோ, சின்ன சண்டைகளோ நேரத்துக்கு ஏற்ப, ஏற்படும்.
ஃபிலீமை மாற்றி ஓட்டினால், கரண்ட் போனால், பிலிம் கட்டாகி வெண்திரையாக காட்டப்பட்டால் சவுண்டு விடலாம். அந்தக் கலகக் குரலுக்குப் பணிந்து பாதி காசை திருப்பித் தருமாறு உரிமைப் போரில் குதிக்கலாம். சில நேரங்களில் முதலாளி வந்து மறுநாள் இலவசமாக படம் பார்ப்பதற்கு அனுமதிக்கலாம். அப்போதெல்லாம் எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது போல இருந்தது. கிணற்றில் பொழுதெல்லாம் குளித்து, பக்கத்துத் தோட்டங்களில் மாங்காயோ, நாவல் பழமோ திருடித் தின்றுவிட்டு, பள்ளிக்கும் போய் வந்து, இரவெல்லாம் சினிமா பார்த்து, கோலியோ.. பம்பரமோ அந்தந்தப் பருவ விளையாட்டில் ஈடுபட்டு... அதன் பிறகும் என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டுவதற்கு நேரம் இருந்தது. இப்போது காலையில் கண் விழித்த உடனேயே பசங்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட டென்ஷனை பார்க்கிறேன். படிக்கிறார்கள். பள்ளிக்குப் போகிறார்கள். டி.வி. பார்க்கிறார்கள். நாள் மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. அவர்களின் நேரங்களைக் களவாடியது யாரென்று தெரியவல்லை.எதற்கு இந்தக் கட்டுரைக்குத் தேவைப்படாத வீண் கவலை? என் விஷயத்துக்கு வருகிறேன்..
பின்னாள்களில் பகலிலேயே படம் பார்த்துவிட்டு வருவதற்கும் ரெட்ஸில்ஸ் நடராஜா தியேட்டரிலும் அம்பிகா தியேட்டரிலும் பொன்னேரி வெற்றிவேல்} கெளரி தியேட்டரிலும் நாற்காலியில் அமர்ந்தே படம் பார்க்கிற வாய்ப்புகள் அமைந்தன. டூரிங் டாக்கிஸில் தடுப்பு அரண்கள் இல்லாமல் இரண்டு பக்கமும் காற்றோட்டம் இருக்கும். தியேட்டரில் பகல் ஷோக்களில் எல்லா கதவும் அடைத்து புழுக்கமும் ஃபிலிம் சுருள் ஓடும் இடத்தில் இருந்து வரும் புகையின் காரணமாக ஏற்படும் பிராணவாயு பற்றாக்குறையும் எனக்குத் தொடர்ச்சியான தலைவலிக்குக் காரணமாக அமைந்து படம் பார்க்கிற ஆசையே போய்விட்டது.
இப்போதும் இரவில்தான் விவசாயத்துக்கான கரண்ட். ஆனால் கரண்ட் வந்தால் மோட்டார்கள் அதுவாகவே ஓடுகிற வசதிகள் வந்துவிட்டன. சைக்கிளுக்குப் பதில் பெரும்பான்மையானவர் வீட்டில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. எங்கும் டெண்ட் கொட்டகைகள்தான் இல்லை. டெண்ட் கொட்டகைகளின் இடத்தை சன் டிவி பிடித்துவிட்டது. எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த டாக்கீஸஸுகளின் வேலையை இப்போது விஜய்க்காகவும் பரத்துக்காகவும் சன் டிவி செய்து கொண்டிருக்கிறது.
சினிமா நிருபராக பணியாற்றிய நேரங்களில் 50} 60 பேர் படம் பார்க்கக் கூடிய சிறிய ஃப்ரிவியூ தியேட்டர் முதல் சத்தியம் ஸ்ரீ போன்ற திரையரங்குகள் வரை ஏஸியில் உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கிற போதும் எப்போதாவது ஒரு தரம் சந்தேக கேஸஸுக்குச் சிக்காமல் தப்பித்து ஓடி படம் பார்த்த நினைவு மனதுக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக