திங்கள், அக்டோபர் 11, 2010

வெட்டுப் புலியின் வீச்சுக்கள்

எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா அவர்களின் பார்வையில்...


வெட்டுப் புலியின் வீச்சுக்கள்




நாவலாசிரியர் தமிழ்மகன்,மற்றும்
இசை விமரிசகரும்,குடும்பநண்பருமான
சிவகுமார் ஆகியோருடன் நான்.
.
எரிவாயு அடுப்புக்களும்,லைட்டர்களும் அறிமுகமாகியிராத ‘40,’50 கால கட்டங்களிலும், அவை அறிமுகமாகிப் பரவலான பயன்பாட்டிற்கு வந்திராத ‘60களிலும் வெட்டுப்புலித் தீப்பெட்டி என்பது தமிழ்மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது ;
குறிப்பிட்ட அந்தக் கால கட்டத்தில் தங்கள் பாலிய மற்றும் பதின் பருவங்களைக் கடந்து வந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்த பலரின் நினைவுச் சேமிப்பிலும் இதன் சுவடுகளைக் காண முடியும்
.
அப்போதெல்லாம் வீட்டு மளிகைச் சாமான் பட்டியல்கள் தயாரிக்கப்படுகையில் ,வெட்டுப்புலித் தீப்பெட்டி என்ற அடைமொழியுடனேயே தீப்பெட்டி குறிப்பிடப்பட்டு வந்தது என்பதும் கூட ஞாபக அடுக்குகளில் தங்கியிருக்ககிறது.

மிகமிக யதார்த்தமாகக் கையாளப்பட்டுவந்த இவ்வாறானதொரு புழங்கு பொருளின் முகப்புப் படத்தில் ஒளிந்து கிடக்கும் சுவாரசியமான கதை போன்றதொரு நிகழ்வைத் தேடிக் கொண்டு தனது மிக நீண்ட
காலப்பயணத்தைத் தொடங்குகிறது
தினமணி உதவி ஆசிரியர் தமிழ்மகனின் ’வெட்டுப்புலி’நாவல்.
''புனைவின் சொற்கள் கொண்டு பல படைப்பின் வெற்றிடங்களை மூட முடிகிற படைப்பின் அதிபதியாக நான் தினமும் திரிந்தேன்''
என்று இந்தப் பயணம் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடுகிறது நாவல்.

நாயின் துணையோடு வயலுக்குப் போன சின்னா ரெட்டி என்பவர் , தன் கதிர் அரிவாளால் சிறுத்தையை வீழ்த்துகிறார்.
நாட்டுப் புறக் கதைகளுக்குப் பல மாற்று வடிவங்களைக் காண முடிவதைப் போலவே அடிப்படையான இந்த ஒரு மூலக் கதை வடிவத்துக்கும் பற்பல சுவையான மாற்று வடிவங்கள் இருப்பதை இந்தக் கதையின் பின்னணியைத் தேடிப்போகும் குழு கண்டடைகிறது.
’’சின்னாரெட்டி சிறுத்தையை வெட்டிய கதையை ஜெகநாதபுரத்தில் ஒருவிதமாகச் சொன்னார்கள்.ரங்காவரத்தில் வேறுவிதமாகச் சொன்னார்கள்.சில உறவுமுறைகளே கூட மாறிப்போயிருந்தன’’
’'கொசப்பேட்டை அண்ணாமலை நாயக்கரும்,ரங்காவரம் ஜானகிராம ரெட்டியும் வெவ்வேறு காலத்தையும்,சம்பவத்தையும் பிய்த்துப் போட்டார்கள்..சில வெற்றிடங்களை இட்டு நிரப்பி தையலடிக்கிறேன்’’
என்கிறது கதை சொல்லும் பாத்திரம்.

குறிப்பிட்ட இந்தக் கதை , நாவலில் ஒரு முகாந்திரம் மட்டும்தான். தீப்பெட்டியும்,அதன் பின்னணி குறித்த விதம் விதமான கதைகளும் நாவலின் இணைப்புக் கண்ணிகளாகக் கூடவே பயணித்தாலும் அவற்றோடு இழை பின்னிக் கொடுக்கப்படும் திராவிட இயக்க அரசியலும், திரைப்பட வரலாற்றுக் குறிப்புக்களுமே வெட்டுப்புலி நாவலில் தனிப்பட்ட கவனத்தைக் கவரும் செய்திகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்த இரட்டைப் பிறப்புக்களானதைச் சுட்டிக் காட்டும் தமிழ்மகன், ஒவ்வொரு பத்தாண்டும் ஏற்பட்டு வரும் சூழல் மாற்றங்களை அடையாளப்படுத்துவதற்கும் அவற்றையே சுட்டுக் குறிகளாகப் (indicators)பயன்படுத்திக் கொள்கிறார்.

''ஸ்ரீதரும் பாலசந்தரும் திரையுலகத் திருப்பு முனையாக மாறிய நேரத்தில் அண்ணா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப்பிடித்துவிட்டார்''
‘’தமிழ் சினிமா அறுபது பாடல்களில் இருந்து மெல்ல வடிந்து ஆறு பாடல்களில் வந்து நின்றது ''
என்று '60 கால கட்டத்தையும்

''ஆர்மோனியப் பேட்டியின் இடத்தை கீ போர்டு ஆக்கிரமித்தது. ரோஜா இதழ்கள் ராஜாவை வீழ்த்தியது''
ரோஜா இதழ்கள் ராஜாவை வீழ்த்தியது'' என்று '90 காலகட்டத்தையும் திரையுலகத்தில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில் குறிப்பிட்டுக் கொண்டு போகும் நாவல்,

''கண்ணீர்த் துளிகளும்,பச்சைத் தமிழனும் மாற்று மேடைகளில் அர்ச்சிக்கப்பட்டனர்''
’’காந்தியைக் கொன்றவர்களின் வாரிசுகள் ராவணேஸ்வரத்தைக் கொளுத்திய மிச்சத் தீயெடுத்து அதே வால்கள் மூலம் அயோத்தியைப் பற்ற வைத்தனர்’’
என்று அரசியல் அரங்கின் சூழல் மாற்றத்தை வைத்தும் காலத்தைக் கோடிட்டுக் கொண்டு போகிறது.

பூண்டி நீர்த்தேக்கக் கட்டுமானத்தின்போது தாங்கள் குழி வெட்டுவது தங்கள் கிராமத்துக்குத்தான் என்பது தெரிந்தே
அதற்கு மண்வெட்டிப் போடும் மாற்றுத் தொழிலைத் தேடிக் கொண்ட அப்பாவிகிராமத்து ஜனங்கள்,
திரைப்படத் தயாரிப்பை லகுவாகப் பணம் பண்ண ஏற்ற மாற்றுத் தொழிலாக்கிக்கொள்ள எண்ணியபடி சீநிவாசா சினிடோனைத் தேடிக் கொண்டு போகும் நில உடைமைக்காரர் ஆறுமுக முதலி,
குடிசைத் தொழிலாக இருந்த தீப்பெட்டித் தொழில் இயந்திரமயமாக்கப்பட்டதன் அடையாளமாக நிற்கும் பிம்மாண்டமான தொழிற்கூடம்
எனக் கால மாற்றங்களைத் தொழில்துறை மாற்றங்களை வைத்தும் குறிப்பிட்டுக் கொண்டு போகிறது நாவல்.

குறிப்பான கதைக் களம் '30 களுக்குப் பின்புதான் என்றபோதும் காலச் சக்கரத்தில் அதற்குப் பின்பாகவும் சில கட்டங்களில் பயணிப்பதால் 1910 , 2010 இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நெடியதொரு காலப் பின்னணி கொண்டிருக்கும் நாவல்,
தசரதரெட்டி,ஆறுமுக முதலி ஆகிய இரு குடும்பங்களின் மூன்று நான்கு தலைமுறை வரலாறுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும்
அது வாசகர்களின் முன் வைப்பது வெறுமே அந்தந்தக் குடும்பங்களின் வரலாறுகளை மட்டுமல்ல;
வட தமிழகத்தின் நிலவியல்,தொழில் முறை,பண்பாட்டு,அரசியல் மாற்றங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருக்கும் அலுப்புத் தட்டாத ஆவணங்களாகவே அவற்றை ஆக்கியிருப்பதையே தமிழ்மகனின் வெற்றி எனக் கூறலாம்.

புற மாறுதல்கள் மட்டுமே மாற்றத்தின் அளவுகோலாகிவிடுவதில்லை.
மனித மனப் போக்குகளிலும் காலம் தன் சுவடுகளைப் பதித்தபடி மாற்றங்களுக்கான மனப் போக்குகளை,சமரசங்களுக்கான விதைகளைத் தூவி விட்டுப் போகிறது.
திராவிட அரசியலில் தனித் திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படுகிறது.
கறாரான கடவுள் மறுப்புக்கொள்கை, ஒன்றே குலமாக,ஒருவனே தேவனாகப் பரிணமிக்கிறது.
அவசர நிலைக்கொடுமைகளும் கூடக் காலத்தின் கட்டாயத்தால் மறக்கப்பட்டு நிலையான ஆட்சி தர நேருவின் மகளுக்கு அழைப்பு வைக்கப்படுகிறது.
’நாம் இருவர் படத்தில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்ற சுதந்திரப் பாடலை முழங்க வைத்த செட்டியார் அடுத்த நான்கு ஆண்டுகளில் பராசக்தி வழி திராவிடக் குரலை ஒலிக்கச் செய்கிறார்.

பொதுத் தளத்தில் மட்டுமன்றி நாவல் பாத்திரங்களிடத்திலும் கூட வித்தியாசமான திருப்பங்களும், மாற்றங்களும் சம்பவிக்கின்றன.
சிறுத்தை வெட்டிய தீரராக முன்னிறுத்தப்பட்ட சின்னாரெட்டி, சிறியதொரு வண்டுக்கடிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து போகிறார்.
திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டுக் கொட்டகை மட்டுமே நடத்திவந்த ஆறுமுக முதலியாரின் மகன் சிவகுரு , சினிமாக் களத்தில் அகலக் கால் வைத்து அழிவைச் சந்தித்தவனாய்த் திரைப்படக் கொட்டகைக்கு முன்பாகவே பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பார்ப்பன எதிர்ப்புத் தளத்தில் , திராவிட சித்தாந்தத்தில் தீவிரமாக இயங்கிய கணேச முதலியாரின் இரண்டாம் மகன் தியாகராஜன், பாண்டிச்சேரி அன்னையின் தீவிர பக்தனாகிறான்.

தமிழ்மகன் ஒரு தேர்ந்த பத்திரிகைக்காரர் என்பதற்கான அழுத்தமான அடையாளங்கள் பலவற்றை நாவலில் பார்க்க முடிகிறது.
(நாவலுக்குரிய பல மூலப் பொருள்களைத் தினமணியின் சேமிப்புக் கருவூலத்திலிருந்து தேடி அடையும் அரிய வாய்ப்பு அவருக்கு வாய்த்திருப்பதை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை.)
நடுநிலையான ஒரு பத்திரிகையாளருக்குரிய சமநிலை நோக்கு , எந்த ஒரு தகவல் அல்லது கருத்துநிலையின் இரண்டு பக்கங்களையும் பாரபட்சமின்றி முன்வைப்பது மட்டுமே.
தமிழ்மகனின் பேனாவும் கூட அதைத்தான் செய்திருக்கிறது.
திராவிட அரசியலின் நெடி கதை முழுக்க அடித்தபோதும் அதன் மறுபுறத்தில் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளையும் பதிவு செய்து கொண்டே போகிறது தமிழ்மகனின் எழுதுகோல்.
பார்ப்பன எதிர்ப்பு வாதம் புரிபவர்களாகவே நாவலில் பல பாத்திரங்கள் வந்தாலும் அந்த வாதத்தின் சில வலுவற்ற பக்கங்களையும் முன் வைக்கத்
தவறவில்லை தமிழ்மகன்.

’அண்ணா,பெரியார்,ராஜாஜி,காந்தி,கூவம்,கங்கை,புளிய மரம்,வேலிக் காத்தான் எல்லாமும் இயற்கையின் பொருள் பொதிந்த தேவை. ..,ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை,எதையும் புறக்கணிக்கத் தேவையில்லை அல்லது ஆதரிக்கத் தேவையில்லை..எல்லாமே இயற்கையின் உற்பத்தி...தோன்றுவதெல்லாம் தோன்றியது போல மறையும் என்ற தெளிவுக்கு வந்து சேரும் தியாகராசன் பாத்திரத்திடம் திராவிடன்,ஆரியன் என்ற பேதம் மறைகிறது.
‘வித்தியாசம் இல்லாத எல்லாரும் நாமாக எண்ணுகிற புதிய உலகம் அவனுக்குக் கிடைத்து விட்டது’என்கிறார் ஆசிரியர்.
வாசகருக்கும் அவ்வாறானதொரு பார்வையைத் தருவதே அவரது நோக்கம் என்பதை நாவலின் சாரமான இந்த வரிகள் உணர்த்துகின்றன..

புலி வெட்டியவனின் கதையோடு தொடங்கும் கதையை , வெட்டப்பட்ட புலித் தலைவர் பற்றிய வரலாற்றுச் செய்தியோடு முடித்து இன்றைய நிகழ்வையும் நாவலின் நீரோட்டத்தில் இணைத்து விட்டிருக்கிறார் தமிழ்மகன்.

நாவல் களத்தில் அதிகம் சொல்லப்படாத பின்புலத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டதன் வழி,
காலகட்ட நாவல் (period novel)வரிசையில் காலம் கடந்து நிற்கும் தகுதியைப் பெற்று விடுகிறது தமிழ்மகனின் வெட்டுப்புலி.
நூல்விவரம்;
வெட்டுப்புலி,
தமிழ்மகன்,
உயிர்மை வெளியீடு-திச,2009,
விலை;ரூ.220.00
பக்;374






நன்றி;கட்டுரையை வெளியிட்ட வடக்குவாசல்செப்.2010 இதழுக்கு

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin