ஞாயிறு, நவம்பர் 07, 2010

துன்பம் நேர்கையில்...



" சுவாமி ஜி,
மொத்தம் 25 சிம் கார்டுகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சிம் கார்டைப் பயன்படுத்தவும். மேலும் ஒரு சிம்கார்டை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். தொடர்ந்து ஒரே ஊரில் இருக்க வேண்டாம். குறைந்த பட்சம் 50 கிலோ மீட்டர் நகர்ந்துவிடவும்.. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலத்து போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்கவும்.''
அந்தத் துண்டுச் சீட்டில் இவ்வளவுதான் எழுதியிருந்தது. அதற்குக் கீழே சிவப்பு மையில் "யாரையும் நம்ப வேண்டாம்.' என்று அடிக் குறிப்பு. அதை மட்டும் சிவப்பு மையில் எழுதியிருந்த விதம் அச்சுறுத்தும்படி இருந்தது. அந்தக் குறிப்புக் காகிதத்தைக் கிழித்து குப்பையில் எறிந்தேன்.
"எழுத மறந்து போய் கடைசி நிமிடத்தில் கையில் கிடைத்த வேறு பேனாவில் எழுதியிருக்கலாம். அது சிவப்பு பேனாவாக அமைந்து போனது எதேச்சையானது.' மனதைத் தேற்றிக் கொள்வதற்காக அப்படி நினைத்தாலும் யாரையும் நம்ப வேண்டாம் என்பது முக்கியமான ஒன்றுதான். நிதானமாக மடித்து வைத்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பெயர் தெரியாத மலையொன்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. காலை வெயில் எங்கேயோ பதுங்கியிருந்தது. விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் தயக்கமான சூழல்.
உலகம் முழுதும் 142 மடங்கள் ஸ்தாபித்து 15 ஆயிரம் பிரசங்கங்களுக்கு மேல் செய்து உலகத்தை ஏழு முறை பிரயாணித்து, கடவுளின் அவதாரமாகப் போற்றப்பட்டு லட்சக்கணக்கானோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி... இன்று "யாரையும் நம்ப வேண்டாம்' நிலைக்கு ஆளாகி... வார்த்தைகள் கொடூரமானவை. சுலபத்தில் காயப்படுத்தக் கூடியவை.
"அச்சம் அறிவின் சத்ரு. வானக்கூரையின் கீழே யாரும் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை." திருப்பூர் கூட்டத்தில் போனவாரம் பேசியது நினைவு வந்தது. இப்போது அச்சம் என்பது ஒரு வார்த்தையாக இல்லாமல் ஒரு உருவமாகவும் உணர்வாகவும் கண் முன்னாலும் மனத்திலும் திரண்டு நின்றபடி கிலி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அச்சப்பட வேண்டியதில்லை என்று சொல்வது சுலபமாக இருந்தது.
எனக்கு உண்மையிலேயே மக்களின் அச்சம் வேடிக்கையாக இருந்தது அப்போது. வீணாக மக்கள் அச்சத்திலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதாக நினைத்தேன். பிரசங்கத்தில் வலியுறுத்தினேன். இப்போது அச்சத்திலிருந்து வெளியே வருவது கடினமாக இருந்தது.
சொல்லுதல் யாருக்கும் எளிய}அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
எத்தனை சுலபமாகச் சொல்ல முடிந்தது? வார்த்தையில் ஏதும் இல்லை என்று.
""வார்த்தை என்பது சில எழுத்துக்களின் சேர்க்கை. உங்களை ஒருவன் முட்டாள் என்று திட்டினால் உடனே நீங்கள் கோபப்படுகிறீர்கள், கவலைப்படுகிறீர்கள். அந்த நான்கு எழுத்துக்களின் சேர்க்கை உங்களை அந்த நிலைக்கு ஆளாக்குகிறது. வெறுமனே மு என்றோ, ள் என்றோ, ட் என்றோ, டா என்றோ சொல்லும்போது உங்களுக்குக் கோபம் ஏற்படுவதில்லை. முட் என்றாலுமோ, டாள் என்றாலுமோ கோபம் வருவதில்லை. டாள்முட் என்றாலும் அதற்கு ஒரு பொருளும் கொள்ள முடிவதில்லை. அந்த நான்கு எழுத்துக்களை அந்த வரிசையில் அடுக்கினால் மட்டுமே கோபம் ஏற்படுகிறது.
இதில் உள்ள வினோதத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வரிசை மட்டும் உங்களை ஏன் பாதிக்க வேண்டும். "ஒண்ணு இண்ட்டு ரெண்டு இண்ட்டு மூணு இண்ட்டு நாலு." இதுதான் அந்த நான்கு எழுத்துக்களைக் கொண்டு உருவாக்க முடிகிற அதிகபட்ச வாய்ப்பு. 32 வகையாக எழுதலாம். அதில் ஒன்றைத் தவிர மீதி 31 வகை உங்களைக் கோபம் ஏற்படுத்தாதவை. அதே எழுத்துக்களின் மற்ற சேர்க்கைகள் ஏற்படுத்தாத வலியை இந்த காம்பினேஷன் மட்டும் ஏற்படுத்துவதற்கு அனுமதிப்பது நம்முடைய பலவீனம் மட்டுமே. ஒவ்வொரு ஓசைக்கும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துகிறோம். அவ்வளவுதான். வெரிகுட் என்றால் சந்தோஷப்படுகிறோம். மடையன் என்றால் கோபப்படுகிறோம். வார்த்தைகளிலிருந்து விடுபடுங்கள்.
அந்த நிலையை நீங்கள் எய்த வேண்டும். அதற்காகத்தான் இந்த "முக்தி ஜீவ மோக்ஷா' பயிற்சி முகாமை நடத்துகிறோம். எந்த எழுத்தும், எந்த செயலும் உங்களைப் பாதிக்காது. எதுவும் உங்களைத் தீண்டாது. சலனமற்ற மனம் உங்களுக்கு வாய்க்கும்.''
நேற்றுதான் பேசியது போல இருந்தது.
டி.வி.யில் காட்டுகிறார்கள். "சத்தியானந்தாவைச் செருப்பால் அடிக்க வேண்டும். நேரில் கிடைக்காததால் போட்டோவை அடிக்கிறோம்.' மக்கள் ஆசிரம வாசலில் செருப்பாலும் உருட்டுக்கட்டையாலும் போஸ்டர்களை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் திட்டுவதும் அடிப்பதும் வலித்தது.
"அவர்களின் வார்த்தைகளுக்குப் பொருளில்லை; அவர்கள் விளாசும் உடல் எனக்கானதல்லை. குடுவையை உடைத்தாலும் அதற்குள் இருக்கும் காற்றும் ஆகாயமும் உடைந்து போவதில்லை...' நான் போதித்தவை என்னையே ஏளனமாகத் திரும்பிப் பார்க்கின்றன. புத்திக்கு எட்டியது உணர்வுகளுக்கு எட்டவில்லை. அல்லது உணர்வுகளுக்கு எட்டியது புத்திக்குப் புரியவில்யோ?
"புத்தியும் உணர்வும் உடலுக்கானது. குளிரென்று உணர்வதும் குழப்பமென்று உழல்வதும் உடம்புதான்.... உடம்போடு ஒட்டிப் பிறந்த புத்திதான். ஆன்மாவுக்கு சலனமில்லை. அதற்கு அனலும் ஒன்றுதான் புனலும் ஒன்றுதான்.' பக்தர்கள் உறைந்துபோய் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"உடல் சட்டை போல. ஆத்மா அடிக்கடி சட்டையை மாற்றிக் கொண்டிருக்கிறது. நாம் சட்டையைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ஆத்மா பற்றி யோசிப்பதில்லை' எத்தனை பேர் எத்தனைவிதமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நானும்தானே மாறாத புன்னகையோடும் கருணை வழியச் சொன்னேன்? கீதையின் கண்ணனோடு உருவகப்படுத்தி காலண்டர் போட்டார்களே?
என்னை அடிப்பதே என் சட்டையை அடிப்பதாக இருக்கும்போது என் போஸ்டரை அடிப்பது எதில் சேர்த்தி? என் சட்டையின் உருவத்தைத்தான் செருப்பால் அடிக்கிறார்கள்... சொல்லப்போனால் செருப்பால் என்பதுகூட பொருளற்றது. நானோ, செருப்போ, அடிப்பவரோ எல்லாமே ஒன்றுதான். பரமாத்மாவின் பல்வேறு வடிவங்கள். அடிப்பவனும், அடிவாங்குபவனும் அடிக்கும் பொருளும் எல்லாமே பரம்பொருள். நான் ஏன் கலங்க வேண்டும்?
என்னிடம் இருக்கும் சிம் கார்டை செல் போனுக்குள் பொருத்தினேன். "பரம்பொருளுக்குள் பரம் பொருளைப் பொருத்தினேன்.' யாரிடம் பேசுவதென்று தெரியவில்லை.
ஆசிரமத்தின் மேலாளர்தான் இப்போது முதுகில் குத்தியவர். தொலைக்காட்சியில் ஆசிரமத்தின் அடாவடி செயல்பாடுகள் என்று வீடியோவைப் போட்டு நாசப்படுத்தியவர். எனக்கு வலதுகரமாக இருந்து அத்தனை நிர்வாகத்த்தையும் பார்த்தவர். அவரே விலை போய்விட்டார். யாரை நம்புவது என்று முடிவெடுக்க முடியவில்லை.
பத்மாஷினிக்கு போன் போடலாமா? வேண்டாம். பெண்களிடம் பேசினால் விஷயம் விபரீதமாகிவிடும்.
"ஆணென்ன, பெண்ணென்ன? அல்லாது அலியுமென்ன? எல்லாமே அவன் சொரூபம்தான். உருவங்கள் தற்காலிகமானவை. உருவங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உணர்வுகளும் தற்காலிகமானவை. ஓர் ஆத்மா ஆண் உடம்பில் இருக்கும்போது, மீசை வைத்த ஆம்பளை என்று கர்வம் கொள்கிறது. பெண் உடம்பில் இருக்கும்போது கற்பில் சிறந்தவள் என்று நிரூபிக்க நினைக்கிறது. சட்டைக்குள் இருக்கும் ஆத்மாக்களை உணர்வுகள் என்றைக்கும் பாதிப்பதில்லை.'
மக்கள் ஆரவாரமாக கேட்டார்கள். பூரித்துக் கைதட்டினார்கள். என் பேச்சுகள் அடங்கிய சி.டி. பல லட்சம் விற்பனையானது. நான் எழுதிய புத்தகங்கள் பல லட்சம் விற்பனையானது. ஒரே நாளில் மூன்று லட்சம் பிரதிகள் விற்றதாக சாதனை சொன்னார்கள்.
இப்போது நடிகையைத் தழுவியது குற்றம். அகலிகைக்கு இந்திரனைத் தழுவும்போது, இந்திரனையே வீழ்த்திவிட்ட தன் அழகின் மீது கர்வம் இருந்தது. அப்படி ஒரு கர்வத்தைத்தான் அந்த நடிகை என்னைத் தழுவியபோது அடைந்தாள். உலக ஆன்மீக பைத்தியங்கள் எல்லாம் டி.வி.யில் பார்ப்பதற்கே பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறவனை சட்டையை உரிக்க வைத்துவிட்டேனே என்ற கர்வம். எனக்கும் பதில் கர்வம். அவளையும் டி.வி.யில் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது ஜனத்திரள்? ஒருவேளை அது ஆன்மீக பைத்தியத்தைவிட அதிக எண்ணிக்கை கொண்டதாக இருக்கும். அகலிகை கர்வத்துக்கு முனிவன் சாபமிட்டான். என்னுடைய கர்வத்துக்கு மக்கள் இடுகிறார்கள். ஆரவாரமாக கைதட்டியவர்கள், புத்தகம் வாங்கியவர்கள், கட்டுரைகளை பிரசுரித்த பத்திரிகைகள் எல்லாமே எழுதுகின்றன. பரமஹம்சர், ஜகத்தேவோ, சுவாமிஜி.. எல்லா பட்டங்களும் பதுங்கிக் கொண்டன.
செக்ஸ் சாமியார் தலைமறைவு.
இப்போது யார் எடுத்துச் சொல்வது? பிரம்மச்சரிய பயிற்சியின் ஒரு அங்கம்தான் அந்தச் சம்பவம். காந்தி ஜியும் இளம்பெண்களோடு படுத்திருந்து பரீட்சை செய்து பார்த்த பயிற்சிதான்.... இப்படி சமாதானம் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? எங்கும் நீக்கம் அற நிறைந்திருக்கிற உனக்கு அந்த டி.வி. ஒளிபரப்பை நிறுத்த வக்கில்லையா என்பார்களோ? எனது சக்தி சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. நான் சக்தியற்றவன். நான் சக்தியற்றவன் என்பதை மக்கள் மறப்பதற்கு கொஞ்ச காலமாகலாம். அப்போது மீண்டும் சக்திமானாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடுவேன்.
என் மீது நீங்கள் வைத்திருக்கும் பக்தியையும் சிரத்தையையும் சோதிக்கவே அப்படியான ஒளிபரப்பை நிகழ்த்தினேன் என்று அப்போது சொல்லிப் பார்க்கலாம். ஆன்மிகம் வேறு.. சித்துவேலைகள் வேறு. அந்த டி.வி. ஒளிபரப்பை நிறுத்த நினைத்திருந்தால் எனக்கு ஒரு நொடி போதும். இப்போதே சொல்லிப் பார்க்கலாம்.
கோர்ட் கேட்குமா? போலீஸ், அரசியல்வாதிகள், அறிஞர்கள்.. இத்தனை நாளாய் நம்பிக் கொண்டு பின்னால் வந்த பக்தர்கள், சீடர்கள்? யாரும் ஏற்கப் போவதில்லை. தத்துவங்கள் வேறாக... சட்டங்கள் வேறாக.. நம்பிக்கைகள் வேறாக இருக்கின்றன. பத்மாஷினி இப்போது என்னை நம்பிக் கொண்டிருக்கிறாளா, எதிரணியில் இருக்கிறாளா, அரசாங்கத்துக்குக் காட்டிக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறாளா? போன் செய்தால் அதை ரெக்கார்ட் செய்து போலீஸில் ஒப்படைப்பாளா? உதவுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறாளா?
செல்போன் அடித்தது.
பேசியது, திருவண்ணாமலையிலிருந்து ஒரு பக்தர்.
""நேபாளத்துக்குச் சென்றுவிட எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கிற இடத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஷிவ் கன்ச் என்றொரு இடம் இருக்கிறது. அங்கு சென்றுவிடுங்கள். அங்கு உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் மூவருக்கும் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ''
"நடந்தா?''
"இல்லை, கார் வரும். டிராவல் ஏஜென்ஸி கார். உங்கள் பெயரை அருணாச்சலமா? என்று கேட்பான். ஆமாம் என்று சொன்னால் போதும்.''
பூர்வாசிரமத்தில் ஒரு பெயர். சன்னியாசி ஆனதும் இன்னொன்று. இப்போது ஊருக்கு ஒரு பெயர். ""சரி''
"இந்த சிம் கார்டை இத்துடன் அகற்றிவிடுங்கள். அடுத்த கார்டை போட்டு வையுங்கள். அடுத்த போன் வரும். நீங்கள் யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம்.''
பேசியவர் யாரென்று கூட தெரியவில்லை. அசரீரி. குரல் மட்டும். பேச்சில் பக்தி இருந்ததாகவும் தெரியவில்லை. புத்திசாலித்தனமாக வேறு இடத்தில் சேர்க்க வேண்டிய பொறுப்பு மட்டும் இருந்தது. பேச்சில் சுவாமிஜி இல்லை, அறிமுகம் இல்லை, மரியாதைகூட இல்லை. அதற்கெல்லாம் நேரமில்லை என்று விட்டுவிட்டிருக்கலாம். யாருடைய நேரம் யாருக்கு இல்லாமல் போய்விட்டது? யாரோ எங்கிருந்தோ சொன்னபடி செய்ய வேண்டியிருந்தது. சொன்னபடி என்பதுகூட நாகரிகம் கருதித்தான். யாரோ இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
சட்டம், ஒழுக்கம், தத்துவம், தர்க்கம் எல்லாமும் சிதைந்துவிட்டன. நடைமுறை என்ற ஒன்றுதான் சாஸ்வதம்.
எல்லாம் சுமுகமாக இருக்கும்போது அவை ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்ட மாயத்தோற்றம் தெரிகிறது. அசாதாரண நிலைகளில் அவை சுலபமாகப் பிரிந்துவிடுகின்றன.
நிலநடுக்கம், போர், நம்பிக்கை மறைதல் போன்ற நிலைகுலைவான நேரங்கள் மனிதத் தன்மையை உப்புக் கல்லை மழை நீர் போல கரைத்துத் தள்ளிவிடுகின்றன. எஞ்சுவது மிருக குணம் மட்டும்தான். வறுமையும் வறட்சியும் நிலவும்போது யார் நாகரிகமாக ஹலோ சொல்லி கண் சிமிட்டி சிரிக்க முடியும்? ஒருவர் வாய்க்குப் போகும் உணவை இன்னொருவர் பிடுங்கித் தின்னும் நேரத்தில் தத்துவம் யாருக்கு வேண்டும்?
வெளியில் ஹார்ன் சத்தம் கேட்டது. "துமாரா நாம் அருணாச்சல்?''
என்னையும் அறியாமல் "அச்சா'' என்றேன்.
ஆளுக்கு ஒரு பெட்டி வீதம் மூவரும் எடுத்துக் கொண்டோம்.
எண்ணிறந்த ரூபமாய் கண்ண பரமாத்மா கோபியரோடு விளையாடி மகிழ்ந்தது பக்தியென்றால் நான் ஒரு பெண்ணோடு இணைந்திருந்தது மட்டும் எப்படி குற்றமாகும்? நான் ஒரே நேரத்தில் இந்தியாவிலும் நியூஜெர்ஸியிலும் காட்சி தந்ததாக எழுதினார்களே? நியூஜெர்ஸி ஆசரமத்தில் இருந்தபோது, ஆந்திராவில் ஒரு பெண்மணி கேன்சரால் அவதிப்பட்டதாகவும் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாஸ்பிடலில் திடீரென்று நான் தோன்று அவளைக் குணமாக்கிவிட்டதாகவும் ஆசரமத்தின் சஞ்சிகையில் போட்டிருந்தார்கள். சஞ்சிகையைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே நேரத்தில் நியூஜெர்ஸியில் அந்த நகர மேயரோடு உரையாடிக் கொண்டிருப்பதாக பக்கத்தில் ஒரு போட்டோ. சரி ஜனங்களுக்கு இந்த மாதிரி சித்து வேலைகளில் எல்லாம் தேவையாகத்தான் இருக்கிறது. அதாவது சித்துவேலை செய்வதாகப் பிரசாரம் செய்வது... எல்லாம் பொய். அவர்கள் சிலாகித்த நேரத்தில் நான் பாட்டுக்கு மலச்சிக்கலில் அவதியுற்றிருந்தேன். சளிபிடித்திருந்ததால் ஆவிபிடித்துக் கொண்டிருந்தேன். நியூஜெர்ஸியிலும் ஆந்திராவிலும் தோன்றினேனாம். ஜெராக்ஸ் காப்பியா எடுக்க முடியும் ஒருத்தனை? ஃபேக்ஸில் அனுப்பி வைக்க முடியுமா? ஹா.. ஹா. அபூர்வ ஆற்றல் என்றார்கள்.. பிள்ளை வரம் கேட்டு காலில் விழுந்த பெண்ணுக்கு ஆசிர்வதித்தேன். குழந்தை பிறக்கும் என்றேன். அவளோ மீண்டும் சுற்றி வந்து காலில் விழுந்தாள். மீண்டும் ஆசிர்வதித்தேன். காரில் ஏறப் போகும்போது மீண்டும் வந்து காலில் விழுந்தாள். மீண்டும் ஆசிர்வதித்தேன். அவளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று ஆசிர்வதிப்புக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததாக சிலாகித்தார்கள். நல்லவேளை அவள் நூறு முறை ஆசிர்வாதம் வாங்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இன்னொரு குந்தி ஆகியிருப்பாள். அவையத்து குந்தியிருப்பச் செயல்! ஹா.. ஹா.. ஹா!
"எதுக்குச் சிரிக்கிறீங்க சாமி?''
"உலகத்தை நினைச்சேன், சிரிச்சேன்'. மெüனமாக இருந்தேன். உடல்வேறு ஆத்மா வேறு. உடலின் இச்சைகளுக்கு ஆன்மா பொறுப்பாகுமா? ஆன்மாவின் தூண்டல் இல்லாமலேயே உடல் தன்னிச்சையாக "இச்சை' கொள்ளுவதுதான் சாத்தியமா?
கார், ஈரச் சாலையில் மெல்லிய சரசரப்புச் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. இருபக்கமும் அடர்த்தியான மரங்கள். வனம் தீவிர அமைதியாக இருந்தது.
"ஆப்ரிக்காவில் இருந்து பிரிந்த நிலத்துண்டு ஆசிய பிராந்தியத்தில் மோதித் தள்ளியதால்தான் இமயம் உருவானது. அமைதியான மலைக்குக் கீழே கொந்தளித்துக் கொண்டிருக்கும் பாறைக்குழம்பு. எந்த நேரத்திலும் இமயம் தரை மட்டமாகலாம். கடலாக இருந்த இடம் உலக்தின் உயரமான மலைச்சிகரமாக ஆகும்போது, மீண்டும் அது தரை மட்டமாவதுதானா பெரிய விஷயம்? என்ன ஒவ்வொரு நிகழ்வுக்கும் இடையே ஒரு லட்சம் வருஷம் இடைவெளி. மனிதனுக்கு ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மலைப்பாக இருக்கிறது. ஆன்மாவுக்கு... யுகங்களெல்லாம் ஒரு நொடியாம்' } கடந்த மாதம் இங்கிலாந்தில் பேசியபோது மக்கள் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"கார் கண்ணாடியை இறக்கிடட்டுமா?''
"வேணாம் சுவாமிஜி. யார் கண்ணுலயாவது பட்டா ஆபத்து. மூணு ஸ்டேட் போலீஸ் தேடுது. டி.வி.யில வேற தொடர்ந்து போட்டுக் காட்டிக்கிட்டே இருக்காங்க. யார் கண்ணுல பட்டாலும் ஆபத்து. நீங்ககூட காவிய கழட்டிட்டு பேண்ட், சர்ட் போட்டுக்கிட்டா நல்லது.''
தீர்மானமாக முறைத்தேன்.
"எப்படியாவது இந்தியாவை விட்டு தப்பிச்சுட்டா அப்புறம் மாத்திக்கலாம்னு சொல்ல வந்தேன்.''
"தப்பிக்கணுமா? யாரு?, யார் கிட்ட இருந்து?''
அனந்தானந்தாவுக்கு இருக்கிற சூழ்நிலைக்கு நான் இப்படி கேட்டது, விதண்டாவாதம்போல இருந்திருக்கலாம். கண்ணாடிவழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தார்.
ராட்சஷ விருட்சங்கள் நிழலால் சாலையை மூடியிருந்தன. மழைமேகம் வேறு. மழை வலுக்க ஆரம்பித்தது. அப்படியே காரைவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்றுவிடலாம் போல இருந்தது. ஒரு மின்னல் காருக்கு முன்னால் நெடுக்க வானத்தில் ஒளிர்ந்து மறைந்தது. சாலையில் ஒரு நீண்ட நாகம் நெளிந்தோடி மறைவதைக் கண்டேன்.
காரே சிறை போலத்தான் இருந்தது. ஒரு சரிவில் நீண்ட புல்வெளியும் அதன் முடிவில் அழகான குளமும் இருப்பதைப் பார்த்தேன். காரை நிறுத்தச் சொன்னேன்.
இயற்கை உபாதை தணிப்பதற்காக நிறுத்தச் சொல்வதாக அவதானித்து நிறுத்தினர். அங்கியைக் கழற்றிவிட்டு, வேட்டியுடன் வெளியே இறங்கி நின்றேன். மழை, பாவங்களைக் கரைக்க வந்தாற்போல பெய்தது. குளிப்பதும் மழையில் நனைவதும் ஒன்றா? இல்லவே இல்லை. மழை கங்கை. புனித நீர். ஆகாச கங்கா. அது மண்ணுக்குள் புகுந்து ஊறி, அடிபம்பில் வெளியேற்றி, பிளாஸ்டிக் பக்கெட்டில் பிடித்து வைத்து, சோப்பும் ஷாம்பூவும் போட்டு குளித்துவிட்டு வருவதும் கொட்டும் மழையில் பத்துநிமிஷம் கலந்து கரைவதும் எப்படி ஒன்றாக முடியும்? மழையின் சில துளிகள் பட்டதுமே உடல் நடுங்க ஆரம்பித்தது. மழை ஊசிகள். காரில் இருந்தவர்கள், சுவாமி உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தனர். எதிர்காலத்தில் இப்படியொரு அத்துவானக் காட்டில் மீண்டும் ஒரு தரம் இறங்கி நிற்க முடியுமா என்று திடீரென்று ஓர் எண்ணம் கவ்வியது. குளத்தை நோக்கி ஓடினேன். இத்தனைக் கோடி பண வரவு இல்லாமல் ஆசிரமம் சிறியதாக தஞ்சையில் ஒரு குடிசையில் இருந்த நினைவும் கூடவே சேர்ந்து கொண்டது. எத்தனை ஆனந்தமான கால கட்டம். காவிரி ஆறு ஓரத்தில் ஆசிரம குடிசை. இரண்டு மாமரங்கள், நான்கு கொய்யா மரங்கள் இவ்வளவுதான் மொத்த சொத்து. எப்போது பணம் சேர ஆரம்பித்தது?
சென்னையிலும் ராஞ்சியிலும் நெல்லூரிலும் கிளைகள் துவங்க பக்தர்கள் வந்தனர். கல்யாணம் ஆகவில்லையா, குழந்தை பிறக்கவில்லையா, வேலை கிடைக்கவில்லையா, நோய் தீரவில்லையா, பணம் தேவையா எல்லாவற்றுக்கும் நான்தான் தீர்வு.

மன அமைதியும் சில உணவு முறையும் சில உடற்பயிற்சியும் செய்யுங்கள் என்றேன். எல்லாவற்றுக்கும் பலன் இருந்தது. ஒன்றைப் பத்தாக பிரசாரம் செய்தார்கள். விளைந்த பலனும் என் அமானுஷ்ய சக்தியின் விளைவு என்று பிரசாரம் தேவைப்பட்டது. பிரசாரம் பணமாகியது. பணம் பிரசாரத்துக்கு செலவானது... மீண்டும் அது பெரும் பணமானது.. பணம்.. மேலும் பணம். கட்டுப்படுத்த முடியாத பணம். விரைவிலேயே இங்கிலாந்திலும், கனடாவிலும்... கோடி, கோடியாக நன்கொடைகள், பைத்தியம் போல பக்தர் கூட்டம். சாமியாராக இருந்தால் என்ன? சமுதாயத்தில் மரியாதை கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது? முதல் சறுக்கல் அங்குதான். பற்றிக் கொண்டு எழுந்து நிற்க முடியாத சறுக்கல்.
அழுது கொண்டே குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். பளிங்கு போல இருந்தது நீர். கூழாங்கற்கள் தெரிந்தன. நீரில் இறங்கினேன். நீர் மேலும் சில்லென்று இருந்தது. நடுக்கம் கூடியது. பற்கள் அடித்துக் கொண்டன. சிறிது தூரம் நீந்தி மீண்டும் கரைக்கு வந்தேன். அதற்குள் அனந்தானந்தாவும் மற்ற இருவரும் ஓடிவந்து ""என்ன இது விளையாட்டு? இரவுக்குள் நேபாளம் போய்விட வேண்டும் இல்லையென்றால் ஆபத்து'' என்று அச்சுறுத்தினர்.
ஒருவர் குடையை விரித்து தலைதுவட்ட துவாலை கொடுத்தார். மற்றவர் புதிய ஆடையைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
""வாஸôம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருங்ணாதி நரோபராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி.'' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.
ஸôங்கிய யோகத்தில் கண்ணன் எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறான்? பழைய ஆடைகளைக் களைந்துவிட்டு புதிய ஆடையை அணிவது போன்று ஆத்மா பழைய உடலை விட்டு புதிய உடலுக்கு மாறுகிறது.
பைத்தியம் முற்றிவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கக் கூடும். கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் காரில் ஏற்றினர். புதிய ஆடைக்குப் போய்விடுவது கீதையில் சொன்னதுபோல நிஜமா? அப்படியானல் இப்போதே புதிய உடைக்கு நம் ஆன்மாவை மாற்றிவிட்டால்?ஐயோ... ஒருவேளை மாறாமல் போய்விட்டால்?
மாறாமலேயே போய்விட்டால்தான் என்ன என்றும் இருந்தது. எந்த ஆடையும் வேண்டியதில்லை. 120 ஆண்டுகள் வாழ்ந்து மறைவேன் என்று ஆஸ்திரேலிய தமிழர்கள் மத்தியில் பேசியது நினைவு வந்தது. இன்னும் 90 ஆண்டுகள் வாழ்ந்து அதை நிரூபித்தாக வேண்டும். அடக் கொடுமையே இன்னும் 90 ஆண்டுகளா? அப்படியானால் எத்தனை நாள்கள்... 90ஐ 365 ஆல் பெருக்கி... செல்போனில்தான் கால்குலேட்டர் இருக்கிறதே... கணக்குப் போட ஆரம்பித்தேன்.
புதிய சிம்கார்டு போட்டு ஒரு போனும் வரவில்லை.
நேபாளம் வழியாக எந்த நாட்டுக்குப் போக வேண்டியிருக்கும் என்று தெரியவில்லை. ஒரு திருப்பத்தில் டீக்கடை ஒன்று இருந்தது. "நடுக்கமாக இருக்கிறது டீ சாப்பிட வேண்டும்' என்றேன்.
அனந்தானந்தா என் மீது மிச்சமிருந்த கடைசி மரியாதையை பிரயோகித்துக் காரை நிறுத்த சம்மதித்தார்.
காரிலேயே இருக்குமாறு கூறிவிட்டு கண்ணாடி டம்ளரில் டீ வாங்கிக் கொண்டு வந்தார். தேவாமிர்தமாக இருந்தது.
செல்போன் ஒலித்தது.
மூவருக்கும் பாஸ்போர்ட் தயாராகிவிட்டதாகவும் நார்வேயில் ஒரு வாரம் தங்கிவிட்டால் பிறகு கனடா போய்விடலாம் என்றும் சொன்னார்கள். பூமியைவிட்டு வேறெங்கும் போய்விட முடியாதல்லவா? பூமியின் ஒழுக்க விதிகள் ஏறத்தாழ எல்லா நாட்டிலும் ஒன்றுதானே?
அடுத்த சிம்கார்டு மாற்றப்பட்டது. யாரும் பேசிக் கொள்ளவில்லை. டிரைவர் மட்டும் ஏதோ இந்தி பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"போனில் பேசியது யாரென்று தெரியவில்லையே'' என்றேன்.
"நார்வே போய் சேருகிற வரை இப்படியான குரல்களைத்தான் நம்ப வேண்டியிருக்கும். வேறு வழியில்லை'' அனந்தானந்தா விரக்தியோடு சிரித்தார்.
நாங்கள் நினைத்திருந்ததைவிட பெரிய வீடாக இருந்தது அது. காம்பவுண்டு சுவரிலிருந்து நன்கு உள்வாங்கிய வீடு. தரை, சுவர் பகுதிகள் மரச்சட்டங்களால் உருவாக்கப்பட்டு குளிர் பெருமளவு கட்டுப்பட்டிருந்தது. வீட்டில் இருந்தவர் வீட்டுப் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருப்பவர்.ஏற்கெனவே போதுமான அளவுக்கு அவருக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும். கார் வருவதைப் பார்த்ததும் வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டதோடு, பெட்டிகளையும் உள்ளே கொண்டு செல்வதற்கும் உதவினார்.
"ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் உணவு தயாரிக்கிறேன்'' என்பதைத்தான் அவர் ஹிந்தியில் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. காரை ஓட்டி வந்தவர் நெற்றி வரைக்கும் கையை உயர்த்தி மரியாதை செலுத்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
இங்கிருந்து வேறு காரில் பயணிக்க வேண்டியிருக்கும்.
புதிய ஆட்கள், புதிய மொழி, புதிய இடம், புதிய உணவு... நாங்கள் மூவரும் முடிவெடுக்க முடியாதென்று முடிவாகத் தெரிந்தது. எங்கிருந்தோ, யாரோ ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்மைகள்.
ஜன்னல் வழியாக பார்த்தபோது வலது பக்கத்தில் திடீரென்று தோன்றி மற்றொரு வளைவில் மறைந்து கொண்ட கருப்புத் தார்சாலையின் துண்டு மட்டும் தெரிந்தது. அது நாங்கள் வந்த சாலையா, போக வேண்டிய சாலையா என்று தெரியவில்லை. ரம்மியமாக இருந்தது.
குறை காலத்தையும் இங்கேயே கழித்துவிட்டால்கூட போதும் என்று இருந்தது. அந்தத் துண்டுச் சாலையில் இரண்டு ஜீப்புகள் சர்ரென்று விரைந்ததைக் கவனித்தேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தால் அது போலீஸ் ஜீப். வனச் சரக ஜீப்பாகவும் இருக்கலாம். வீண் அச்சம். வீண் அச்சம் என்றாலும் அதுதான் வேகமாக பரவியது. உடலும் ஆத்மாவும் ஒன்றேயாகி தவித்தன. மாயத்தோற்றம். கயிறுதான் பாம்பாகத் தோற்றம் காட்டுகிறதோ?
தலைமறைவாகி ஓட ஆரம்பித்ததில் இருந்து யாரை நம்புவதென்றும் குழப்பம் மிகுந்து வருகிறது. கடவுளை நம்பியிருக்கலாம் என்று திடீரென்று ஒரு எண்ணம் மனதின் குறுக்கே வெட்டிச் சென்றது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சரளமான நடையில் நல்ல வர்ணனை.
-ஜெகன்

LinkWithin

Blog Widget by LinkWithin