இந்த வார கல்கி(10.7.11)யில் என் சிறுகதை
இந்தக் கதை எந்த ஆண்டில் நடக்கிறது, எந்த நாட்டில் நடக்கிறது என்பது எனக்கு அத்தனை துல்லியமாகத் தெரியவில்லை. இப்போதிருக்கிற அரசியல் தலைவர்கள் பலர் அப்போது சிலையாகவோ, புகைப்படமாகவோ மட்டுமே எஞ்சியிருந்தனர்.
பாராளுமன்றத்தின் மாடி அறையில் ஒரு பொறுப்பான பதவியில் இத்தனை அவ நம்பிக்கையோடு நின்று கொண்டிருப்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. அரசியல் நெருக்கடி. எதைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது என்பதையே பதிலாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தம். கூட்டணிக் கட்சிகளின் தொல்லை அதிகமாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் பணிந்து போக வேண்டிய கட்டாயம். பிரதமர் தன் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு கண்ணாடி வழியே பாராளுமன்ற ஜன்னலுக்கு மேல் இருந்த சூரியத் தடுப்பைப் பார்த்தார். அந்தப் புறாக்கள் இனப் பெருக்க வேட்கையோடு ஒன்றை நோக்கியென்று மூச்சை இழுத்துவிட்டபடி உக்கும் கொட்டிக் கொண்டிருந்தன.
அறைக்குள் இருக்கும் குளிரைவிட வெளியே அதிகமாக இருக்கும் என்ற சிந்தனையை ஜன்னலோரத்திலேயே முடித்துவிட்டு இருக்கைக்கு வந்தார்.
குடியாட்சி பெற்று 12- வது பிரதமர் வரை நாடு ஓரளவுக்கு ஸ்திரமாகத்தான் இருந்தது. குறிப்பாக 13-வது பிரதமர் எதிர்க் கட்சிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளுக்கும் பணத்தாலேயே பதில் சொன்னார். அது ஒரு விபரீத ருசியை ஏற்படுத்திவிட்டது. எதிர்க்கட்சிகள் தினம் குற்றம் கண்டு பிடித்தனர். அதுவுமின்றி அவர்களுக்கு சிரமம் வைக்காமல் நாட்டில் அத்தனைக் குற்றங்கள் இருந்தன. கமிஷன் வாங்காமல் எந்த ஒப்பந்தத்தையும் போட முடிவதில்லை. எவ்வளவு கமிஷன் வாங்கினாலும் எதிர் கட்சிகளுக்கு அதில் பாதிக்கு மேல் செலவிட வேண்டியிருக்கிறது. கமிஷன் வாங்கவில்லையென்றால் உடனே ஆட்சியைக் கலைத்துவிடுகிறார்கள். சரியானபடி கமிஷன் வாங்காததால்தான் கடந்த முறை ஆட்சியிலிருந்த கட்சி கலைக்கப்பட்டது என்பது கடைகோடி பிரஜைக்கும் தெரியும். இந்த சாதுர்யம்கூட இல்லாத இவனெல்லாம் எதற்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஹேலோகிராமில் கார்ட்டூன் போட்டார்கள்.
அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க வேண்டியிருந்தது. ஆட்சிக் கôலங்களில் பிரதமருக்கôன பிடிமôனமே இல்லôமல் பேôய்விட்டது. பணம் பேசியது. லஞ்சமும் ஊழலும் பேசியது. பிரதமர் பேசுவதற்கு ஒன்றுஒன்றுமில்லாமலாகிவிட்டது.
தகாரிலும் புரிசாவிலும் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை. இன்னமும் அந்தப் பகுதிகளில் கம்யூனிஷ முழக்கங்கள் இருந்தன. மூன்று மணிக்கு ராணுவ அதிகாரிகளுடன் முக்கியமான கூட்டம். இதுவரை அங்கு மூன்று ரயில்கள் கொளுத்தப்பட்டுவிட்டன. பாலங்கள் பல தரைமட்டமாகிவிட்டன. ராணுவத்தைக் களமிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்று திட்ட வரையறை செய்ய வேண்டியிருந்தது. இரண்டு முப்பது ஆகிவிட்டது. உதவியாளர் ராணுவ அதிகாரிகள் வந்துவிட்டதையும் உள்துறை அமைச்சர் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்று கூறிவிட்டுச் சென்றார். தன்னிறைவைான கிராமங்களின் அவசியத்தைப் பற்றிய புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் படிக்க ஆரம்பித்தார் பிரதமர். நாட்டின் குடியாட்சிக்காகப் பாடுபட்ட மகத்தான தலைவர் எழுதிய நூல் அது. அவருடைய நிறைய கொள்கைகள் நடைமுறை சாத்தியமில்லாமல் போய்விட்டன. மனச் சோர்வான நேரத்தில் அதைப் படிக்கும்போது நகைச்சுவை ஊற்றெடுக்கும்.
உதவியாளர் மீண்டும் வந்தார்..
"வந்தாச்சா?'' பிரதமரின் குரலைக்காட்டிலும் சைகையால் கேட்டதை வைத்துத்தான் உதவியாளர் ஆமோதித்தார். உள்ளே வரச்சொல்லுங்கள் என்பதையும் மெல்லிய தலையசைப்பில் உணர்த்திவிட்டு தொப்பியைத் தலையில் பொருத்திக் கொண்டார்.
மொத்தம் ஆறுபேர் உள்ளே வந்து பிரதமருக்கு வந்தனம் சொல்லி, இருக்கையை நோக்கி அவர்கைகாட்டியதும் அமர்ந்தனர். ஒரு துண்டு அமைதிக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் தொண்டையைச் செறுமினார். அறையில் இருந்த மீதி அனைவரும் அவரை நோக்க ஆரம்பித்தனர். அவர் ஆரம்பிக்கட்டும் என்ற வழிவிடல் அது.
"மக்கள் நிறைய பலியாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டியிருக்கும். மூன்று ரயில்கள் இந்த இரண்டு மாதத்தில் தடயமில்லாமல் எரிந்து போயிருக்கின்றன. அதிலிருந்த மக்களோடு. காவல்துறையினர் யாரும் அந்தப் பிராந்தியத்தில் இனி இருக்க முடியாது. உயிர் பிழைத்து இருக்க வேண்டுமானால் காக்கி அணிந்த தாவரம்போல இருக்க வேண்டியிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் இல்லை, கல்வி இல்லை, நல்ல குடிநீர் இல்லை, உணவு இல்லை... மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்... அல்லது அலை அலையாக பஞ்சம் பிழைக்க வெளியே தப்பிச் செல்கிறார்கள். நம்முடைய ஆபரேஷனில் சிலர் மடிய வேண்டியிருப்பது அவர்களின் நன்மைக்காக.... அதற்கு அனுமதிக்க வேண்டும்.''
பிரதமர் உள்துறை அமைச்சரை நோக்கினார். "என்ன செய்யலாம்?'
"மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் செய்ய முடியாதா... அதாவது முடிந்த அளவுக்கு...'' அமைச்சரின் தொனியில் நம்பிக்கையில்லை. ஒரு கடமைக்காகத்தான் கேட்டார்.
"முடிந்த அளவுக்கு என்பதை நீங்கள் சொல்ல வேண்டியதே இல்லை. தேவையில்லாமல் ஒரு உயிரும் பிரியாது.''
பிரதமர் நாட்டின் நிலையை விளக்க எதிரில் இருந்த குறிப்புக் காகிதங்களை கையில் எடுத்து வைத்துக்கொண்டுபேச ஆரம்பித்தார். "நாம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தப்படி ஆண்டுக்குக் குறைந்தபட்சம் எட்டாயிரம் டன் யுரேனியத்தை துமரியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் மகத்தான சாதனையைச் செய்தோம். ஆஸ்திரேலியாவே அதிர்ந்துபோனது. அவர்களுடைய யுரேனிய சாம்ராஜ்ஜியம் பற்றி உங்களுக்குத் தெரியும். அந்த ஆண்டில் மட்டும் பனிரெண்டாயிரம் டன் அனுப்பி வைத்தோம். புரட்சியாளர்கள் தீவிரம் அதிகமானதும் கடந்த ஆண்டில் அது பாதியாகக் குறைந்தது.இந்த ஆண்டு சுத்தமாக வேலையே நடக்கவில்லை. யுரேனியம் மொத்தமும் பிரச்னையாளர்கள் இருக்கும் அந்த இடத்தில்தான் இருக்கிறது. இனி ஒரு கிராம் யுரேனியத்தை எடுக்க வேண்டுமானாலும் எங்கள் எல்லோரையும் கொன்றுவிட்டுத்தான் எடுக்க முடியும் என்று சூளுரைக்கிறார்கள்."
"அவர்கள் நமக்கு எவ்வளவு காலம் அவகாசம் தருவார்கள்?'' ஜெனரல் கேட்டார்.
"சொல்லப்போனால் அவர்கள் கெடு முடிந்துவிட்டது. அவகாசமே கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். கேட்கவும் முடியாது'' அவகாசத்தைப் பற்றியபேச்சுக்கே இடமில்லை என்பதைத்தான் பிரதமர் அப்படி உணர்த்துவதற்கு முயற்சி செய்தார்.
"ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?'' ஒப்பந்த ஷரத்துகள் பற்றி நன்றாகத் தெரிந்த அமைச்சரே இப்படியொரு கேள்வியைக்கேட்பது அனைவருக்குமே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அமைச்சரே தொடர்ந்தார்.. "அணு ஒப்பந்தத்தோடு நம்முடைய இருநாட்டு நல்லுறவும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியும். இருநôட்டு வர்த்தக உறவுகள் பலவும் பாதிக்கும். நம் சொந்த மக்களேயே நாம் பலியாக்குவதைவிட அந்த பதிப்பு குறைவுதானே?''
"இல்லை மினிஸ்டர். துமரியாவைப் பற்றி அப்படி எடைபோடதீர்கள். அமெரிக்காவைவிட மோசமானவர்கள். பெட்ரோல் இருந்தது வரை வளைகுடா நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பி வைக்க ஏதாவது நொண்டி சாக்குகள் சொன்னார்கள் நினைவிருக்கிறதா? ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், எகிப்து... வரிசையாக எல்லா நாட்டிலும் தளவாடங்களைக் கொண்டு போய் நிறுத்தியது போல இங்கும் நடக்கும். அமைதி குலைந்து போய்விட்ட நாடுகளில் அவர்கள்தான் அமைதி ஏற்படுத்துவார்கள். புரிகிறதா? அவர்களின் அகராதியில் இருக்கும் அமைதி. நாடே ரணகளறியாகும். மறுபடி எழுந்திருக்க நூறு வருஷம் ஆகும். அல்லது எழுந்திருக்காமலேயேகூட போகலாம். சாம் மாமா மூக்கை நுழைக்க காரணங்களே தேவைப்பட்டதில்லை. துமரியா அவர்களையே மிஞ்சிவிட்டார்கள். அவர்கள் ஏற்படுத்தும் அமைதியைத்தான் எதிர்பார்க்கிறீர்களா?''
பிரதமர் கையை உயர்த்தி ஜெனரலைக் கட்டுப்படுத்தி, "அவர்கள் உள்ளே வந்து அமைதிப்படுத்துகிறவரை நாம் சும்மா இருக்கப் போவதில்லை. நம்முடைய போர் சாதனைகள் எல்லாம் எங்களுக்கு நினைவிருக்கின்றன'' என்றார்.
அதுதான் பிரதமரின் சாதுர்யம். ராணுவத்தின் பெருமையை ராணுவத் தளபதியிடமே சொல்லுவது அவரை சட்டென கட்டுப்படுத்த உதவியது. "போர் என்றால் தயங்குபவர்கள் இல்லை. ரிஸர்வ் ட்ரூப்பையும்சேர்த்து இரண்டு கோடிக்கும் அதிகமான சிப்பாய்கள் எந்த நேரமும் தயாரக இருக்கிறார்கள். ஆனால் அதற்குத் தேவையிருக்குமானல் அது நாம் இப்போது திட்டமிட்டிருக்கும் ஆபரேஷனைவிட அதிக பாதிப்புடையதாகத்தான் இருக்கும். முதல்கட்டமாக நாம் தீவிரவாதிகளை சரிக்கட்டுவது உத்தமம்'' உப தளபதி முதல்முறையாகப் பேசினார்.
"நிலைமை போருக்கு உகந்ததாக இல்லை. ஏற்கெனவே ஆயுதம் வாங்குவதில் கமிஷன் வாங்கி எதிர் கட்சியாளர்கள் அத்தனைப் பேருக்கும் பலமுறை கொடுத்தாகிவிட்டது. நம்பிக்கை தராத ஆயுதங்கள். நாம் கட்டுப்படுத்தவேண்டியது உள்ளூர் பிரச்னையாளர்களைத்தான். அவர்களுக்கு ஆரம்பம் முதலே யுரேனிய சுரங்கங்கள் அமைப்பதில் எதிர்ப்பு இருந்தது. பூமிக்குள் இருக்கும் மிகப் பெரிய பொக்கிஷம். நாட்டின் வளமே அதில்தான் புதைந்து கிடந்தது. நாடு அதை வெளிக் கொணருவதில் உறுதியாக இருந்தது. மக்களுக்கு பெரும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தோம். ஒட்டுமொத்த மாநிலத்தின் வறட்சியை, வறுமையைப் போக்க இருபதாயிரம் பேருக்கு வேலை கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. விரைவிலேயே புதிதாக வேலையில்லாதவர்கள் உற்பத்தியாகிவிட்டார்கள். சொற்பம் பேர் வேலைதேடி வெளிமாநிலத்துக்குச் சென்றார்கள்.பெரும்பகுதி காட்டுக்குள் இருக்கிறார்கள், தலைமறைவு பயிற்சி எடுத்துக்கொண்டு. நிலைமை கையை மீறிப்போய்விட்டது. அதன் பிறகு அங்கு வளர்ச்சித் திட்டங்கள் அமைப்பதும்கூட இயலாததாகிவிட்டது. முக்கியமாக "பசுமை தகார் திட்டம்'. அதை அவர்கள் நம்ப மறுத்துவிட்டார்கள்.''
அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்ததுயர் குற்றம் என்ற சந்தேகம் பேசிக்கொண்டிருந்த பிரதமர் உற்பட ஏழுபேருக்கும் ஒரே நேரத்தில் உதித்தது.
"முதல் கட்டமாக ஐம்பது பட்டாலியன் களமிறங்கவேண்டியிருக்கும்.. ஆரம்பமே அவர்களை கதிகலக்கச் செய்ய வேண்டும். மிரட்டலே போதும் பாதி உயிரிழப்பைத் தவிர்க்க செய்யும். அவர்கள கட்டை விட்டு வெளியே ஓட ஆரம்பித்துவிடுவார்கள்.''
மார்ஷல் தனது போர்தந்திரங்களை விவரிக்க ஆரம்பித்தார். ஜன்னலுக்குவெளியே அமைதிக்கான சின்னமான புறாக்கள் இரண்டு குதூகலமாகக் கொஞ்சிக் கொண்டிருப்பதையும் பார்த்தர். இனிய முரண்பாட்டை ரசித்தாலும் அவருடைய இஸ்திரிபோட்ட முறுக்கிய மீசைக்குக் கீழே புன்னகை தவழவில்லை.
விளக்கு வெளிச்சத்தில் கூட்டமாக உறங்கிக் கொண்டிருந்தனர்.பெரிய குடிலில் தோராயமாக இருபது முதல் நாற்பது வயதினர்.சிறிய கட்டிலில் தலைவர் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே மூவர் மட்டும் மரத் துண்டின் மீது கூர்மையான கவனத்துடன் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். நடுநிசி. வனப்பூச்சிகளின் ரீங்காரங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
"நம்மை ஒடுக்க ராணுவம் வரப்போவதாக தகவல் வந்திருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடிதான் காரணம். அரசு எந்திரத்தின் மக்கள் விரோதபோக்குக்கு இன்னுமொரு அடையாளம்'' என்றார் தலைவர்.
"நாம் இங்கிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர வேண்டியிருக்குமா?'' ~ஒருதோழர் கேட்டார்.
"விலைமதிப்பில்லா தியாகத்துக்குத் தயாராகவேண்டிய கட்டாயம். போராட வேண்டிய களத்தில்தான் நிற்கப் போகிறோம். ஆனால் காட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை. நாட்டுக்குள் இருப்போம். மக்களோடு மக்களாக. அதிகபட்சம் மூன்று பேருக்கு மேல் ஓர் இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. காட்டுக்குள் நம்மைத் தேடிவரும் ராணுவத்துக்கு ஒரு தடயமும் கிடைக்கக் கூடாது. பிரிந்து இருப்போம். உணர்வுகள் இணைத்துவைத்திருக்கும். ஆயுதங்களைப் பதுக்கி வைக்க இடம் தேர்வு செய்தாகிவிட்டது.''
மொத்தம் 40 குழுக்களாக தகாரின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களுக்கும் தகவல்கள் அனுப்ப வேண்டும். பல இடங்களில் குழந்தைகளும் சிறுவர்களும் இருந்தனர். பெண்கள் பெரும் அவதியிலும் உடல் பிணியிலும் குழந்தை பராமரிப்பையும் ஆயுதப் பயிற்சியையும் மேற் கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போதிய மருத்துவ வசதியும் போஷாக்கும் இல்லாமல் பதினாறு குழந்தைகள் இறந்துபோய்விட்டன. நகருக்குள் சென்று வருவது ஒவ்வொரு முறையும் சில உயிரிழப்புகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
மூவரில் தலைவருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தவன் புரட்சிக் கூட்டத்தின் முக்கிய போராளி. கடந்த சில தினங்களாக அவனுக்குத் தொடர்ச்சியான இருமல். சளியோடு ரத்தமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
"நாம் நம் கோஷத்தைச் சற்று தளர்த்திக் கொண்டால் ராணுவ முற்றுகையை அவர்கள் ஒத்தி வைப்பார்ர்கள் அல்லவா?'' இருமலின் ஊடே அவன் சொன்னான்.
"நம் அச்சம் அவர்களை மேலும் ஆவேசமாக ஒடுக்குவதற்குத்தான் உதவும். இது நாம் உறுதியாக நம் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டிய நேரம். செர்னோபிள், ஃபுகுஷிமா என்று எத்தனை ஆபத்துகள் வந்தாலும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனைப் பற்றி ஒருபோதும் அக்கறை இருப்பதில்லை. லாபத்தை மட்டும் குறிவைக்கும் கேவலமான தரகர்களுக்கு நிகராக மாறிவிட்டார்கள். தமிழ்நாடு என்ற பிராந்தியத்தில் இரண்டாவது முறையாக சுனாமி வந்தபோது என்ன பயங்கரம்? அந்த மாநிலத்தின் இரண்டு பக்கமும் அணுக்கரு உலை. இரண்டும் அந்த நேரத்தில் நொறுங்கிவிடப் போகிறது உலகமே பதறியது... அப்படியாகியிருந்தால் அங்கு யாராவது மிஞ்சியிருப்பார்களா? அதன் பிறகும் புத்தி வரவில்லை... அந்த மாநிலத்திலேயே மூன்றாவது அணுக்கரு உலை துவங்கப் போகிறார்களாம். லாபம், அதைக் கொண்டு மேலும் லாபம்.. மனிதர்கள் அத்தனை பேரையும் கொன்று முடித்தப் பின்னும் அந்த வெறி அடங்காது. லாபம் முக்கியமா மனிதர்கள் நலன் முக்கியமா என்பதை தீர்மானிப்பதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் தடுமாற்றம் இருக்கிறது. அவர்கள் செய்கிற முட்டாள்தனத்தால் சாவதைவிட நாமே தேர்ந்தெடுக்கும் இந்த மரணம் மகிழ்ச்சியானது?''
விளக்கம் கேட்டவன் அமைதியாக இருந்தான்.
"நாம் எந்த ரயிலையும் எரிக்கவில்லை. பழியை நம்மீது போட்டு போராளிகளைத் தீர்த்துக் கட்டும் பணியை முடுக்கிவிடுவதற்காகத்தான்... மக்களிடம் நமக்கான விரோதத்தை வளர்ப்பதற்கு. பத்திரிகைகளும் அதை பூதாகரமாக்குகின்றன. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அனுபவப் பாடங்கள் ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். இன்று நம் ராணுவம்.. ஆட்சிகள் மாறும், காட்சிகளும் மாறும். மக்கள் நலன்தான் முக்கியம். நாளை ஐ.நா. ராணுவம் வரும்... அப்போது நம்நாடும் சேர்ந்து புழுங்க வேண்டியதுதான்.. ஸ்திரத் தன்மையில்லாத நாடு. உலக அமைதிக்கே பங்கமாக இருக்கிறது என்பார்கள்... மக்களுக்கான உண்மையான ஊழியர்களாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உயிரிழப்பைக் குறைத்துக் கொள்ளத்தான் நாம் பிரிகிறோம்... உரிமைகளைக் குறைத்துக் கொள்வதற்காக அல்ல. உலக நாடுகளையெல்லாம் தம் காலடியில் போட்டுக் கொள்ள நினைப்பவர்களுக்கு அப்போது ஆளுவதற்கு மண் இருக்கும். மனிதர்கள் இருக்க மாட்டார்கள்'' தலைவரின் பேச்சு கிரீச் கிரீச் என்ற சுவர் கோழியின் சப்தத்துக்கு இடையே கேட்டுக் கொண்டே இருந்தது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன.
ஃபீல்ட் மார்ஷல் உறுதியாக இருந்தார். மலை முகட்டில் இருந்தது அந்த ராணுவ தலைமையகம். பெரிய சுருட்டை வாயில் வைத்திருந்தார். ஜன்னல் கண்ணாடியை இறக்கி சாம்பலைத் தட்டும்போது பரவசமாகப் பார்த்தார் மார்ஷல் . மக்காக் குரங்கு ஒன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தபோது பதிலுக்குச் சிரிப்பது போல இருந்தது. மிக அழகான குரங்கு. இத்தனை நாள் இந்தப் பிராந்தியத்தில் மக்காக் எதையும் பார்த்ததில்லை. மிக தூரத்தில் நுரையால் செய் மாலை போல அருவி தெரிந்தது. காட்டுத் தீ பூக்கள் கிழக்குப் பள்ளத்தாக்கு முழுதையும் செக்கச் சிவப்பாக்கியிருந்தன. இன்னும் இரண்டு மாதங்கள் சிவப்பாக இருக்கும் அந்தப் பகுதி, பின் பச்சைப் பசேலென மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு புத்தாடை.
ஜன்னலருகே இன்னஉம் ஐந்து நிமிடம் நின்றால் கவிஞனாகிவிடுவோமோ என்று அவருக்கு பயமாக இருந்தது.மீண்டும் அறைக்குள் நடந்து மறு எல்லைக்கு வந்தார்.
உள்ளூர் கலவரத்தை அடக்க உலக தாதா வந்துவிடாமல் அமர்க்களம் இல்லாமல் காரியமாற்ற வேண்டும். பிரச்னை கை மீறிப் போனால், போக வேண்டியதே இல்லை} அப்படிச் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் தந்தாலே போதும் உள்ளே நுழைந்துவிடுவார்கள். ஆற்றல் உற்பத்திக்கான ஒரே சாதனம் அணுக்கரு உலை என்று ஏற்றுக் கொண்டாகிவிட்டது. புரட்சியாளர்கள் இல்லை என்கிறார்கள். உலகில் பல நாடுகள் அணுக்கரு உலையை மூடிவிட்டன. துமரியாவிடம் குடுமியைக் கொடுத்தாகிவிட்டது. அப்படித்தான் ஆட்டுவான்.
பொறுப்பாக சமாளிக்க வேண்டியிருந்தது. முதல் கட்டமாக காட்டுக்குள்தான் வேட்டையை ஆரம்பிக்க வேண்டும்.
"பிரதமர் லைனில் இருக்கிறார்''
டெல் திரையில் செயற்கை குரல் அறிவிப்புடன் பிரதமர் அலுவலக எண் ஒளிர்ந்தது.
"சொல்லுங்கள் திரு. பிரதமர் ..''
"அங்கிருந்து கேட்கிறார்கள். ராணுவ உதவி வேண்டுமா என்று..''
"நாம் நடவடிக்கை எடுக்கப் போவது அவர்களுக்கு எப்படித் தெரியும்?''
"நம்முடைய நடவடிக்கை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.. யுரேனியம் கிடைப்பது தாமதமாவதால் உதவி வேண்டுமா என்கிறார்கள். ஆனால் உளவுத்துறையில் சில சந்தேகங்கள் தெரிவித்தார்கள். நாம் பேசும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகிறதாம். ''
"எதை வைத்துச் சொல்கிறார்கள்?''
"நாம் அன்று பேசியது ஒரு அட்சரம் பாக்கியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது''
"நம் ஆறு பேரில் ஒன்று கருப்பாடு?''
"எனக்கு யார் மீதும் சந்தேகமில்லை. யாரை நம்புவதென்றும் தெரியவில்லை... இந்த மாதிரி நேரத்தில் பிரதமராக இருப்பது தண்டனை போலத்தான்.. அடுத்த முறையாவது எதிர்கட்சி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை'' பிரதமரின் பேச்சில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.
மீண்டும் சாம்பலைத் தட்ட ஜன்னலுக்கு வந்த போது மக்காக் மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. மரக்கிளை ஒன்று முதுகில் கிழித்திருக்க வேண்டும். காயம் இரண்டு அங்குலத்துக்குக் கிழிந்து... பக்கு கட்டிப் போய் இருந்தது. இதுவரை ஒருமுறையும் அது சொறிந்து கொள்ளவில்... சட்டென்று தன் மேல் பாக்கெட்டில் இருந்த "பென்மென்' ரிவால்வரை எடுத்து குரங்கை நோக்கிச் சுட்டார். குரங்கின் மேல்பாகம் பஞ்சுபோல பறக்க, சொத்தொன்று ஓர் எலக்ட்ரானிக் டிவைஸ் கீழே விழுந்தது.
துமரியாவுக்கு அடுத்த நாட்டை நோட்டம் பார்ப்பதில் அத்தனை ஆர்வம்... பிரதமருக்குப் போன் செய்து அந்த ஜன்னல் புறாக்களைச் சுட்டுவிடும்படி சொன்னார் மார்ஷல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக