சனி, ஆகஸ்ட் 27, 2011

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு -வெங்கட் சுவாமிநாதன்



தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கிய விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன். வெட்டுப் புலி நாவல் குறித்த அவருடைய விமர்சனம் இது.
கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.


குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.


ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு

கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.


ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.


தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.


இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப் படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.


எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்பு லிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.


வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டிதான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்வத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலெயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சிதான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.


பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.


ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .


ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.


தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.


“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.


அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”


இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.

பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.


“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”


மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”


இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.


இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்
“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா


“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”


அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.


“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”


பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.


“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”


“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”


இது ஒரு காட்சி.


இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.


இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங் களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார் தமிழ்மகன்.


இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.


பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.


இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.


ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.


இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.


வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?


அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..


லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.


முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.


லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.


இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.


ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.


நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.


அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:


நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?


(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).


எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.


இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”


அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.


“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.


“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.


“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.


நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.


இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.


பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.


“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.


கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.


தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.


அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.


”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”


எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.


இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.


“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?


இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”


“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?


பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.


”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.


”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”


பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…


எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.


திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.


தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.


நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.


தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.


திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.


எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.




வெட்டுப்புலி: தமிழ் மகன் (நாவல்) உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018 ப..374 விலை ரூ. 220

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்கள் நாவல் இந்துத்வாவினரிடமும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களிடையேயும் பேராதரவைப்பெற்று வருகிறது. தமிழ் ஹிந்து காமின் வெசாவின் விமர்சனம் வந்திருக்கிறது. வெ சா இந்துதவாப் பாசறையைச் சேர்ந்தவர்.

சீக்கிரம் பெரும்புகழ் காத்திருக்கிறது உங்கள் நாவலுக்கு. பாராட்டுக்கள்

ராஜா சொன்னது…

அன்பின் தமிழ்மகன்,

நன்றி.

இந்த விமர்சனம் தமிழ்ஹிந்து இணையதளத்தில் வெளிவந்தது என்பதைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே... அதையும் குறிப்பிட்டிருக்கலாம் -

http://www.tamilhindu.com/2011/09/tamilmagans-vettupuli-book-review/

மதன்மணி சொன்னது…

வணக்கம் நலமா

தமிழ்மகன் சொன்னது…

பெயரில்லாமல் கருத்து வெளியிட்டவருக்கு எப்படி தகவலைத் தெரிவிப்பதென்று தெரியவில்லை.

என்னுடைய நாவலுக்கு திராவிட எதிர்ப்பாளரிடம் ஆதரவு ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது சரியான கண்ணோட்டமில்லை. இதற்குமுன்னால் சுமார் 25 பேருக்கும் மேல் இந்த நாவலைப் பாராட்டியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அவர்களில் பலர் திராவிட இயக்கத் தோழர்கள்தான்.
இந்த நாவலில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு எதிரானவர்களும் விவாதிக்கும் பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. நாவலில் பலர் திராவிட இயக்கக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இப்படியான விவாதங்கள் ஏற்படும் சாத்தியத்தைச் சொல்லியிருக்கிறேன். அதில் வெங்கட்சாமிநாதன் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக விவாதிப்பவர்களை மட்டும் எடுத்து பட்டியல் இட்டிருப்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்.
நீங்கள் நாவலைப் படிக்காதவர் என்று நினைக்கிறேன்.

கடந்த நூற்றாண்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கான ஒரு தேவை இருந்ததையும் அதைப் பின்பற்றிய சில குடும்பங்களின் மத்தியில் அதனால் ஏற்பட்ட சச்சரவுகளையும் சொல்லியிருக்கிறேன். எல்லா இயக்கங்களுக்குமே இப்படியான பொது ஜன மரபு ஒன்று உருவாகும்.
புத்தரின் இயக்கம் தொடங்கி, ராமானுஜரின் இயக்கம் தொடங்கி, கார்ல் மார்க்ஸின் இயக்கம் தொடங்கி, காந்தியின் இயக்கம் தொடங்கி எல்லாவற்றிலும் வறட்டு நம்பிக்கையாளர் ஏற்பட்டு அந்த இயக்கத்தை சீர்குலைப்பர். ஒவ்வொரு இயக்கத்தின் தேவையும் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டிய நேரம் ஏற்பட்டுவிட்டதற்கு இந்த வறட்டு ஆசாமிகளின் பெருக்கம்தான் அடையாளம். தி.க... தே.மு.தி.க. அளவுக்கு நீர்த்துப் போவது ஒரு அடையாளம்தான். இந்த நாவலை இந்துத்துவா ஆசாமிகள் நிச்சயம் ஆதரிக்க மாட்டார்கள். கவனமாகப் படித்தால் திராவிட இயக்கத்தினரும்கூட ஆதரிக்க மாட்டார்கள். இது இரண்டையுமே விமர்சனக் கண்ணோடு பார்ப்பவர்கள்தான் இந்த நாவலின் நிஜமான ஆதரவாளராக இருக்க முடியும். அதற்கு மிக நேர்மையான அறிவு தேவைப்படும்.
காலத்தின் தேவைக்காக உருவான தத்துவம் பொய்யாகிவிடுவதில்லை.
அது வேறு ஒரு திசையில் இருந்து வேறுமாதிரி வெளிப்படும்.
என்னுடைய பணி அந்தத் தத்துவத்தைக் கண்டெடுப்பதல்ல. அதற்கான தேவை ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே. அதைத்தான் நான் செய்திருக்கிறேன். ஒரு நாவலாசிரியனுக்கு அதை நேர்மையாகவும் கலாபூர்வமாகவும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஓரளவுக்கு நான் அதைச் செய்திருக்கிறேன்.
மதன் மணிக்கு... நலம்.

LinkWithin

Blog Widget by LinkWithin