திங்கள், அக்டோபர் 17, 2011
நியாயச் சங்கிலி
ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென வித்தியாசம் காண இயலாத மங்கோலிய பெண் தரத்தில்தான் வைத்திருந்தேன்.
அவளுடைய பல்வரிசை அலாதியானது. அவளை அருகே அழைத்து கொஞ்ச நேரம் சிரிக்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்போல இருந்தது. அடுத்தகட்டமாக அந்தச் சிறிய நாசிக்குள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எப்படி சென்று உருமாறித் திரும்புகிறது என்ற ஆச்சர்யமும் உடன் சேர்ந்து கொள்ளும்.
சிரிக்க எத்தனிக்கும்போது முன் இரண்டு செவ்வக பற்கள் மட்டும் கார்ட்டூன் முயலுக்கானது போல வெளியே தெரியும். அவளைப் பிடித்துப் போக அதுவே போதுமானது. முழு அழகையும் தரிசிக்க வேண்டுமானால் அவளுக்குப்பிடித்தமாதிரியான நல்ல ஜோக்கைச் சொல்ல வேண்டும். ஜோக்கைவிட அவளுக்குப் பிடித்தமானதாக அது இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
"பழனிச்சாமி இன்னும் வரவில்லையா?'' என்று நான் ஒரு தரம் அவளைக் கேட்டபோது சிரித்தாள். இது ஒரு ஜோக்கா என்று கேட்கக்கூடாது. அவளுக்குப் பிடிக்க வேண்டும் என்று அதனால்தான் முதலிலேயே சொன்னேன். அப்படிச் சிரிக்கும்போது அவள் முகம் சட்டென தேவதையின் முகமாக மாறிவிடும். வடகிழக்கு தேவதை.
பழனிச்சாமி அந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டராண்ட் மேனேஜர். எம்.பி.ஏ. படித்தவன் என்பது அவனுடைய நடவடிக்கையில் சுத்தமாகத் தெரியாது. அவன் வந்துவிட்டால் ஓட்டல் ஊழியர்கள்அவனுடைய கட்டுப் பாட்டுக்குள் இயங்குவார்கள். அவனுக்கு அடிமை போல நடிப்பார்கள். நான் ஜூலியாவிடம் கேட்டபோது அவன் வந்திருக்கவில்லை.
இந்த ஓட்டலில் நடக்கும் ஊழலை வேவு பார்க்க அனுப்பியிருப்பதால் முதலில் என் கவனம் அவன் மீதுதான் இருந்தது. அவன் பெண்களைப் பணிய வைப்பதில் கவனமாக இருந்தான். என்னைப் பணித்திருப்பது இந்த மாதிரி செக்ஸ் ஊழல்களைக் கண்காணிக்க அல்ல. ஓட்டலின் லாபம் அதனாலும் குறைந்திருந்தது வேறுவிஷயம்.
ஓட்டலின் லாபம் பலவிதங்களில் கணிசமாக குறைந்திருந்தது. அதற்கான காரணத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்கு அங்கேயே ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்து கேட்கும்போதெல்லாம் காளான் சூப், இறால் பிரியாணி... எனக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து நிறைய பெண்கள் அங்கே ஹவுஸ் கீப்பிங், சமையல் எடுபிடி வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். நாளெல்லாம் பாத்திரங்கள் கழுவிக் கொண்டும் காய்கறிகளை நறுக்கிக் கொண்டும் அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் இருந்தார்கள். எப்போதும் ஈரத்தில் அவர்கள் எப்படித் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பது புதிராக இருந்தது. அவர்கள் யாருக்கும் ஐந்தாயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை. அங்கு வேலை பார்க்கிற பெண்கள் எல்லோரும் கொட்டி வாக்கத்தில் ஒரு வீடு எடுத்துக் குழுவாக தங்கியிருக்கிறார்கள் என்றார்கள். சாப்பாடு ஓட்டலில். சம்பளத்தில் பெரும்பகுதியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்றலர்ந்த மலர்கள் போல எப்போதும் கலகலப்பாகவும் இருந்தார்கள்.
அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் அட்மின் மேனேஜர் தரப்பில் சிறிய அளவுக்கு ஊழல் நடப்பதை அறிந்தேன்.
இணக்கமானவர்களுக்கு சில சலுகைகள் இருந்தன. அதிகார துஷ்பிரயோகம்தான். அதற்கு ஊழல் என்ற பெரிய வார்த்தையை பிரயோகிக்காமல் தவிர்த்தேன். பழனிச்சாமி அதற்கு ஒரு படி அதிகம். சிலரை பயன்படுத்திக் கொள்வதும் தெரிந்தது.
பாலுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல செக்யூரிட்டி மேனேஜர் அலெக்ஸôண்டர். ஸ்டோர்ஸ் அவனுடைய கண்ட்ரோலில் இருந்தது.
இந்த மூன்று பிரிவும் தனித்தனி ராஜாங்கமாக இருந்தது. ஒருவர் தயவு இல்லாமல் ஒருவர் தவறு செய்ய முடிந்தது. அல்லது ஒருத்தர் தவறை மற்றவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இதைக் கண்காணிக்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது தெரிந்ததும் என் முப்பதுக்கும் குறைந்த வயதைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மூவருமே இறங்கி வந்து வழிந்தனர்.
காபி ஆர்டர் செய்வதற்கே யோசனையாக இருந்த என்னை "வொய் டோன்ட் யு பிரஃபர் மஸ்ரூம் சூப்?' என பழனிச்சாமி விசாரித்ததில் கொஞ்சம் ஐஸýம் பெருந்தன்மையும் இருந்தது.
"வீட்டுக்கு பிரியாணி பார்ஸல் பண்ணி வெச்சிருக்கேன்' என்கிறார் அலெக்ஸôண்டர்.
இந்த சூப்புக்கும் பிரிஆணிக்கும் பணியாத மனம் ஜூலியாவின் புன்னகைக்குப் பணிந்தது. தினமும் என்னுடைய டேபிளைத் துடைத்து தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குடுவையில் அழகான மலர் ஒன்றை சொருகி வைத்துவிட்டுப் போவாள். நான் பேசவில்லை என்றால் அவளும் பேச மாட்டாள். அதனால் நான் எப்படியும் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவளுடன் பேசுவதற்கு விஷயமே இல்லாததால் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அதற்காக யோசித்து வைக்க வேண்டியிருந்தது.
"மஞ்சள் நிறம்தான் உனக்கு பிடிக்குமா? நீயும் மஞ்சள்.. உன் உடையும் மஞ்சள்'
நான்கைந்து நாட்களாக இதை யோசித்து வைத்திருந்து இன்றுதான் அவள் மஞ்சள் உடையில் வந்திருந்ததால் சொன்னேன். சிரித்தாள். ஜென்ம சாபல்யம்.
அவள் ஜீன்ஸ் பேண்டும் களங்கம் இல்லாத மனதோடு கை வைக்காத பனியனும் அணிந்து வந்தாள்.
ஒருமுறை அவள் கம்ப்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக என்னுடைய விரல்கள் அவளுடைய விரல்களோடு பட்டபோது மின்தாக்குதல்போல உணர்ந்தேன்.
அன்று நான் சாரி என்று சொன்னதற்காகச் சிரித்தாள்.
பரவாயில்லை என்றது அந்தச் சிரிப்பு.
"உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்?''
அவள் மூன்று விரலைக் காட்டிவிட்டு ஒருவிரலை உடனே மடித்துவிட்டாள். ""அண்ணனை மிலிட்டரிக்காரர்கள் சுட்டுவிட்டார்கள். இரண்டு தங்கைகள்.. திரிபுராவில் படிக்கிறார்கள். நான்தான் வேலைசெய்து பணம் அனுப்புகிறேன்'' என்றாள் ஆங்கிலத்தில். அவளுடைய தமிழ் உச்சரிப்பில் இருந்த பிழைகளும்கூட அழகாகத்தான் இருந்தன.
"எதற்காக சுட்டார்கள்?''
அவள்கண்கள் அதற்குள் சிவந்து போயிருந்தது. ""என் அண்ணன் நல்லவன். நியாயம் பேசுபவன்'' அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி உள்ளே வரவே எதுவுமே பேசிக் கொள்ளவில்லைபோல துரிதமாக மாற்றிக் கொண்டாள். நான்தான் சுதாரித்துக் கொள்ளமுடியாமல் தடுமாறினேன்.
எம்.டி. அழைப்பதாகச் சொன்னான் பழனிச்சாமி.
ஓட்டலின் டைரக்டர் கிருஷ்ணதாஸ் உடுப்பிக்காரர். ரோஸ் திரவத்தால் நிரப்பப்பட்ட பலூன் மாதிரி இருந்தது அவருடைய முகம்.
வந்த ஒரு மாதம் கழித்துத்தான் இப்போதுதான் அவரைப் பார்த்துப் பேச முடிந்தது. அவருக்கு பெங்களூரில், மும்பையில், டெல்லியில் என்று ஓட்டல்கள் இருந்தன. பறந்து கொண்டே இருப்பவர்.
"ஏதாவது தெரிந்ததா?'' என்றார்.
கே.ஓ.டி. யில் நடக்கும் ஊழலைச் சொன்னேன்.
கிச்சன் ஆர்டர் டோக்கன். சாப்பிட வருபவர்களிடம் ஆர்டர் எடுப்பவர்கள் இரண்டு கார்பன் காப்பி வைத்து மொத்தம் மூன்று ரசீது தயாரிப்பார்கள். ஒன்று கிச்சனுக்குப் போகும். இன்னொன்று அக்கவுண்ட் டிபார்ட்மெண்டுக்கு இன்னொன்று கஸ்டமருக்கு. பெரும்பாலும் கார்பன் வைக்காமல்தான் ஆர்டர்கள் எடுக்கப்படுகிறது என்றேன். சாப்பிட வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவு பரிமாறப்பட்டுவிடும். அதற்கான பில்லும் கொடுக்கப்படும். ஆனால் சமையல் கூடத்தில் இருக்கும் பில்லும் அக்கவுண்டுக்கு வரும் பில்லும் அதைக்காட்டாது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அதில் இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னேன்.
கிருஷ்ணதாஸ் உஷ்ணமாவது தெரிந்தது. அமைதியாக தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் டை கட்டி ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்த பத்து பதினைந்து பையன்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பையன்கள் டை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். எல்லாம் ஒரே நாளில். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரப்பட்டுவிட்டோமோ, அவசரப்பட்டுவிட்டாரா என்று குழம்பினேன். அடுத்து அவரைச் சந்தித்து வேலையைவிட்டு அவர்களை நீக்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முயன்றேன். எம்.டி. டெல்லி போய்விட்டார் என்றார்கள்.
முதன் முறையாக எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சியதைப் பார்த்தேன். மானேஜர்களின் அச்சம்கூட பாதிக்கவில்லை. ஜூலியா மழையில் நனைந்த பூனைபோல ஒடுங்கிப் போய் என் அறைக்குள் வந்தாள். என்னை நேர் கொண்டு பார்க்கவும்கூட பயந்தாள். அதிகார வர்கத்து ஆசாமிபோல பார்த்தாள். அவளுடைய புன்னகையை கொலை செய்த குற்றம் என்னை உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அதே நாளில் தொழிலாளர் கணக்கெடுப்பு அதிகாரிகள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஓட்டலுக்குப் பெரிய சிக்கல்தான். நிறைய பேர் கணக்கில் வராத தொழிலாளர்கள்தான். பலரும் தினக்கூலி போலத்தான் இருந்தார்கள். நிர்வாக மேலாலாளரைப் பார்த்துவிட்டு, மத்தியான சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டுக் கிளம்ப இருந்த அவர்கள் தொழிலாளர்கள் விஷயத்தில் நியாயமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அன்று இரவே அவர்களுக்கு ஐந்தாவது மாடியில் ரூம் போட்டு கவனித்ததையும் அறிந்தபோது எரிச்சலும் வருத்தமும் அதிகமானது. அன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டவள்... வேண்டாம் அது உண்மையாக இருக்கக் கூடாது.
போதாதா? தொழிலாளர் நலன்கள் மிகச் சிறப்பாகப் பேணப்படுவதாக சான்றிதழ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
நான் என்னுடைய பாûஸ சந்தித்து ஓட்டலில் இப்படியெல்லாம் நடப்பதைச் சொன்னேன். என்னுடைய முதலாளி சென்னையின் முக்கியமான ஆடிட்டர். அவர் பார்வைக்கு பல நிறுவனங்களின் வரவு செலவுகள் வரும். கேரட் வில்லைகளை சுவைத்துக் கொண்டே பதற்றமில்லாமல் ராட்சஷத்தனமாக வேலை பார்ப்பார்.
நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, சிறிய ஏப்பத்தோடு ""நம்ம வேலையே எல்லா ஊழலையும் நேர்மையாக செய்ய வைப்பதுதான்'' என்றார்.
"மிகக் குறைந்த சம்பளத்துக்குப் பெண்களை வேலை வாங்குவதோடு எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறார்கள். பாவம் அந்த வெளியூர் பெண்கள்.. நம்மால் எதுவுமே செய்ய முடியாதா?''
ஆடிட்டர் செல்போனில் யாருக்கோ போன் போடுவதில் தீவிரமாக இருந்தார். அவருடைய அலட்சியம் என்னை மேலும் குரலை உயர்த்த வைத்துவிட்டது.
"கோடி கோடியாக ஊழல் செய்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் ஊழல் செய்கிறவர்களை வேலையைவிட்டு அனுப்புவது என்ன நியாயம் சார்?''
"உன் வேலையை மட்டும் பார்''ஆடிட்டர் கோபமாக செல்போனை டேபிளின் மீது வீசினார். அது மூடி தனியாக பேட்டரி தனியாக கழன்று தொடர்ந்து வேலைசெய்யுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"ஒரு ஓட்டல் நடத்தணும்னா எவ்வளவு பேருக்குக் கப்பம் கட்டணும் தெரியுமா? எத்தனை அரசியல்வாதி, எத்தனை அதிகாரி, எத்தனை போலீஸ்காரன்... நேர்மையா இருந்தா சைக்கிள்ல ட்ரம் டீ கூட விக்க முடியாது தெரியுமா?.. உன்னை அங்க எதுக்கு அனுப்பினேன்?... முதலாளிக்கு யாரெல்லாம் துரோகம் பண்றான்னு பாக்கச் சொன்னேன்... முதலாளி என்ன துரோகம் பண்றான்னா பாக்கச் சொன்னேன்? நீ என்ன பெரியண்ணாவா... நாட்டையே கண்காணிக்கிறதுக்கு?''
எதிர்பாரா தாக்குதலால் நிலைகுலைந்து போனேன்.
"ஒவ்வொரு மட்டத்தில ஒவ்வொருவிதமா ஊழல் நடந்துகிட்டு இருக்கு. நம்ம எல்லையோட நாம நின்னுடணும்.. தொடர்ந்து போய்க்கிட்டே இருந்தா அது அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் போகும்.. முடியுமா?'' அறிவுரை போல சொன்னார்.
நான் பொறுமையாக டேபிளில் கிடந்தவற்றை ஒன்று சேர்த்து அவரிடம் கொடுத்துவிட்டு மெத்தென்று அடியெடுத்து வைத்து வெளியேறினேன். "செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என சம்பந்தமில்லாமல் திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்தது.
ஒரு ஓட்டல் நிர்வாகம் உலகையே புரிய வைத்துவிட்ட ஞானோதயம். அவரவர் தரப்பில் குற்றங்களும் அதற்கான நியாயங்களும் கற்பிக்கப்பட்டன.
கன்னிமரா நூலகத்துக்கு எதிரே பைக்கை நிறுத்தி இரண்டு "வில்ûஸ' ஒரே நடையில் புகைத்துவிட்டுக் கிளம்ப இருந்த நேரத்தில் ஜூலியா அவர்கள் ஊர் பையனோடு வருவதைப் பார்த்தேன்.
"அண்ணனை எதற்காகக் கொன்றார்கள்' கேள்வி அப்படியே உறைந்துபோய் இருந்தது மனத்தில்.
பையன் தன் ஒல்லியான கால்களுக்குக் கச்சிதமாக ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தான். ஜூலியா என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அதைத் தவறவிடவில்லை. அவனைக்காட்டி, "நான் மணக்க இருப்பவர்.. என் அண்ணனோட நண்பர்' என்றாள்.
இருவர் மீதும் ஒரே நேரத்தில் பரிதாபம் ஏற்பட்டு, வேகமாக அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அவன் என்னோடு கைகுலுக்க தயாராகியிருந்தான்.
தினமணி தீபாவளி மலர்-2011- இதழில் வெளியான சிறுகதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
//களங்கம் இல்லாத மனதோடு கை வைக்காத பனியனும் அணிந்து வந்தாள்.//
எங்கயோ போய்டீங்க சார் -;)
//அவரவர் தரப்பில் குற்றங்களும் அதற்கான நியாயங்களும் கற்பிக்கப்பட்டன.//
//ஒவ்வொரு மட்டத்தில ஒவ்வொருவிதமா ஊழல் நடந்துகிட்டு இருக்கு. நம்ம எல்லையோட நாம நின்னுடணும்.. தொடர்ந்து போய்க்கிட்டே இருந்தா அது அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் போகும்.//
முற்றிலும் உண்மை.
கருத்துரையிடுக