வியாழன், நவம்பர் 17, 2011

சமகால சரித்திரத்தை எழுதும்போது எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால்கள்!

என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தன் எழுதிய 'புதிய நந்தன்' சமகால சரித்திரத்தை முன்வைத்து எழுதப்பட்ட சிறப்பான சிறுகதை. இது 1934- ல் மணிக்கொடியில் வெளியானதாக ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் கதையில் வரும் பாவாடை, தாழ்த்தப்பட்ட இனத்தவன். கிருஸ்தவ பாதிரியார் ஒருவரால் மனமாற்றம் அடைந்து மதமாற்றமாகிறான். அவனுக்கு டேனியல் ஜான் என்று பெயரும் மாறுகிறது. கிருஸ்தவ மதத்தில் இந்து மதத்தின் கொடுமைகள் இல்லை என்று நம்புகிறான். பாதிரியாருடைய மகளைக் காதலிக்கிறான். பாதிரியார் கொதித்துப் போகிறார். 'பறக்கழுதையே வீட்டைவிட்டு வெளியே போ' என்று துரத்தி அடிக்கிறார். மதங்களின் போலித்தனத்தால் கசப்படைந்து திரு.ராமசாமி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து தோழர் நரசிங்கம் என்ற பெயருடன் தனக்கு தோன்றிய உண்மைகளை தீவிரமாகப் பிரசாரம் செய்கிறான்.
நந்தனை வதைத்தெடுத்த வேதியரின் வழி தோன்றலாக வந்த 1000 வேலி நிலம் கொண்ட பிராமண பண்ணையார் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் அடிமையாகக் கிடக்கும் கருப்பனின் மகன்தான் நாம் மேலே சொன்ன பாவாடை என்கிற டேனியல் என்கிற நரசிங்கம்.
பண்ணையாருக்கு ராமநாதன் என்கிற மகன். காந்தியாரின் 1930-ல் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கலெக்டர் பதவியைத் துறந்து, நரசிங்கத்தின் தங்கை மீது மையல் கொள்கிறான். சாதி அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இயற்கை அவர்களை வென்றுவிடுகிறது. கருப்பனிடம் விஷயத்தைச் சொல்ல அது மகா பாவம் என்று பதறுகிறான்.
அந்த நேரத்தில் மகாத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்துக்காகப் பிரசாரம் செய்ய வருகிறார். இவர்களின் ஆதனூரில் ஐந்து நிமிடம் தங்கப் போவதாகவும் ஏற்பாடாகிறது.
காந்தியைச் சந்திக்க முக்கியமாக மூன்று பேர் தயாராகிறார்கள்.
பார்ப்பன பண்ணையார் காந்தியாரைச் சந்தித்து புராண ஆதாரங்களுடன் காந்தியின் ஹரிஜனக் கொள்கையைத் தகர்க்கக் காத்திருக்கிறார்.
தோழர் நரசிங்கம் காந்தியின் சாதீயக் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பக் காத்திருக்கிறான்.
கண்ணில்லாக கருப்பனும் "மவாத்துமா' கிழவரைப் "பார்க்க' கிளம்புகிறான்.
நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு கோஷித்துக் கொண்டு வருகிறது மதாராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.
ரயிலுக்கு எதிரில் குருடன் தண்டவாளத்தில் நடந்து வருகிறான்.
தூரத்தில் இருவர் கருப்பன் ரயில் எதிரில் நடந்து போவதைக் கண்டுவிட்டனர். மகனும், மருமகனும். இயற்கை சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.
மூவரும் சேரும் சமயம்... ரயில் அவர்கள் மீது மோதிவிட்டுப் போய்விடுகிறது.. ஹதம். ரத்தக்களரி.
மூவரின் ரத்தங்கள் ஒன்றாகக் கலந்தன. ஒன்றாய்த்தான் இருந்தன. இதில் யாரை நந்தன் என்பது? என்பதாக முடிகிறது கதை.
சமகால அரசியலைக் கதைக்களமாக்கிய சிறுகதை என்ற விதத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறுகதை.
தமிழ் மக்களின் பேச்சோடும் மூச்சோடும் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியலை பெரும்பாலான எழுத்தாளர்கள் கதைகளில் விவாதிக்கவோ, போகிற போக்கில் சுட்டிக் காட்டியோ எழுதுவதையும் தவிர்க்கிறார்கள். தனியாக ஓர் ஆணும் பெண்ணும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல பல கதைகளில் எந்தவித சமூக பாதிப்பும் இல்லாத கதாபாத்திரங்கள் அதனால் உருவாகின. சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவான பல கதைகளில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டிருந்தார்கள்... போன்ற குறிப்புகளைக்கூட பல கதைகளில் குறிப்பிடத் தவறினர். பிராந்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தினால் கதைகளின் சர்வதேசத் தரம் கெட்டுவிடும் என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
ஜே ஜே சில குறிப்புகளில் "சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற கேள்வியில் காலத்தின் அடையாளம் வந்துவிடக் காண்கிறோம்.
சுஜாதாவின் ஜன்னல் மலர்கள் நாவலில் 'பிராமணர்கள் போஜனப் பிரியர்கள்.. சாப்பிட்டுவிட்டு வாயு பாணம் விட்டுக் கொண்டிருப்பார்கள்' என்று ஒரு திராவிடர் கழக தோழர் சொல்லுவார்.
சொல்லிவிட்டு 'இதைச் சொன்னது யார் என்று தெரியுமா?' என்று கேட்பார்.
'யார்... அண்ணாங்களா?' என்பார் எதிரில் இருப்பவர்.
'பாரதியார்யா.. பாரதியார்' என்று தோழர் உற்சாகமாகச் சொல்லுவார்.
எந்த பாத்திரம் என்ன பேசும் என்பதில் இருக்கும் நம்பகத் தன்மை படைப்பைப் பலப்படுத்தும். வாசகனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும். பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, பாவைச்சந்திரனின் நல்லநிலம் போன்றவை தமிழில் அந்த முயற்சியை செய்தன. பி.ஏ. கிருஷ்ணன் நெல்லையையும் பாவைசந்திரன் கீழை தஞ்சை பகுதியையும் களமாக்கி சுமார் ஒரு நூற்றாண்டு சரித்திரத்தைச் சொல்லியிருந்தார்கள். 20-ம் நூற்றாண்டின் பல தலைவர்கள் நாவலில் இடம்பெற்றார்கள். சில வேளைகளில் கதாபாத்திரங்களாகவும் அவர்கள் இடம்பெற்றார்கள்.

சமகால சரித்திரத்தை எழுதும்போது எதிர்கொள்ளும் பிரதான நெருக்கடிகள் என்று பார்த்தால் ஆதாரங்கள்தான்.
1940 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நம் கதாநாயகன் ரயிலுக்காகக் காத்திருப்பதாக எழுத முடியாது. ஏனென்றால் அப்போது நுங்கம்பாக்கத்தில் ஸ்டேஷனே இல்லை. அந்தக் கதாநாயகன் பேண்ட் போட்டிருந்தான் என்று எழுதினாலும் தவறுதான். ஏனென்றால் அப்போது பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்றுதான் சொல்ல வேண்டும். பேண்ட் என்பது அமெரிக்க பிரயோகம். 1960-களில்தான் பேண்ட் என்ற வார்த்தை இங்கு புழக்கத்துக்கு வந்தது.
எழுத்தாளர் எஸ்.வி.வி. ஒரு சிறுகதையில் 'மாலை ஐந்து மணியிருக்கும். ஆளரவமற்ற மாம்பலம் ரங்கநாதன் தெரு. நம் கதாநாயகன் கையில் வைத்திருந்த ஓரணாவை ஏதேச்சையாக கீழே தவறவிட்டான். அது டன் டனாங் டங் என்று சப்தமெழுப்பியபடி உருண்டோடியது' என்று எழுதியிருப்பார். 40களின் ரங்கநாதன் தெரு அது. மாலை ஐந்து மணிக்கு ஆளரவமில்லாமல் இருந்த ரங்கநாதன் தெருவை அந்தக் காலப் பின்னணியோடு பார்க்க வேண்டும்.
இதில் சமகால அரசியலையும் சொல்லும்போது வேண்டாத தலைவலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்னைப் பற்றி ஏன் இப்படி எழுதினாய் என்று ஆட்டோவில் ஆசிட் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது மோசமான அரசியல்வாதிகளைப் பற்றி மிகமிக மோசமாகத்தான் எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. லட்சக்கணக்கில் விற்கும் அந்தப் பத்திரிகைகளையே கண்டு கொள்ளாதவர்கள், ஆயிரம் பிரதி பதிப்புகளுக்கெல்லாம் அசரமாட்டார்கள். அப்படியே அவர்கள் வெகுண்டெழுந்து வந்தாலும் இலக்கிய உலகில் இருக்கும் அரசியலில் உதைபட்டு உரமேறியவர்களாக இருப்பவர்களுக்கு அதைச் சமாளிக்கிற பக்குவம் கை வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.
அதே சமயத்தில் பாண்டியன் வரலாறு, சோழர் வரலாறுகளை பின்னணியாக வைத்து கதை எழுதுவதைவிட சமகால சரித்திரத்தை மையப்படுத்தி எழுதும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் சமகால அரசியல் பற்றி ஏறத்தாழ எல்லா வாசகருக்குமே ஒரு பார்வை இருக்கும். அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிறிய தவறும் சீக்கிரத்திலேயே பரவி கேலிக்குரியதாகிவிடும் ஆபத்து இருக்கிறது.
என்னுடைய வெட்டுப் புலி நாவலில் முப்பதுகளில் மோரிஸ் மைனர் கார் வாங்க ஆறுமுக முதலி திட்டமிடுவார். ஆனால் அப்போது மோரிஸ் கார் இருந்தது... மோரிஸ் மைனர் வரவில்லை என்று காலஞ்சென்ற எஸ்.வி. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். பேண்ட், டரவுசர் வித்தியாசத்தைக் குறிப்பிட்டவரும் அவர்தான்.
மேலும், சமகால அரசியலை நாவலாக்கும்போது அது புலனாய்வு பத்திரிகைபோல மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் எழுத்தாளன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin