அஞ்சலிக்கு வயது ஐந்து. இரவு படுத்திருந்த தன் அப்பாவின் மீது ஏறி அமர்ந்தபடி ‘‘நான் ஒன்று கேட்பேன் வாங்கித் தருவாயா அப்பா?’’ என ஆசையாகக் கேட்டாள். அவள் அப்படி என்ன ஆசைப்படுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள அப்பாவுக்குமட்டுமின்றி அவளுடைய அம்மாவுக்கும் அண்ணனுக்கும்கூட ஆசையாகத்தான் இருந்தது.
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
நன்றி: சுட்டி விகடன் feb 1-15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக