ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து அதிஷா எழுதியிருக்கும் விமர்சனத்தில் இருந்து சில பகுதிகள்....
முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.
கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!
எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!
ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!
அதிஷாவின் முழு விமர்சனம்
1 கருத்து:
அறுபது வயது கடந்த பிறகு ஒருத்தி நன்றாக இருப்பதாகவும் கவலை இல்லை என்று சொல்வதும் மனதை அழுத்துகின்றன. இந்தச் சமூகத்தில் பெண் என்பவள் ஒரு கற்பின் பிம்பமாக நிறுத்தப் படுவதை கதை சொல்வதாக நினைக்கிறேன். கதை கட்டமைப்பை ஊடறுத்து இஸமாக முடியும் ரசவாதத்தை நிகழ்த்துகிறது.
கருத்துரையிடுக