வெள்ளி, நவம்பர் 30, 2012

முகம் அறியாத ஒரு நண்பரின் பாராட்டு மழையில் நனைவதுதான் எத்தனை ஆனந்தம் தருகிறது. தினேஷ்குமார் என்னைப் பற்றி அவருடைய வலை தளத்தில் இப்படி எழுதி இருக்கிறார்.

தி.ஜா அவர்களும் தமிழ்மகன் அவர்களும்


அம்மா வந்தாள்

தி.ஜா அவர்களின் மோகமுள் படித்து இருக்கிறேன், மனசை போட்டு உலுக்ககூடிய நாவல், படிக்க படிக்க யமுனா மீது காதல் வந்தது, இதற்கு முன்பு ' சுஜாதா' சாரின் உள்ளம் துறந்தவன் படித்த போது மஞ்சரி மீதும், வண்ணத்துபூச்சி வேட்டை படித்த போது ரேகா மீதும், பொன்னியின் செல்வனில் மணிமேகலையின் மீதும்  காதல் வந்தது, இவ்வாறாக நான் பலரை காதலித்து இருக்கிறேன். மோகமுள் படித்த பிறகு அவ்வளவாக தி.ஜா பக்கம் நான் செல்லவில்லை, பின்னர் ஒருநாள் அவரின் சிறு கதைகள் தொகுப்பை பார்த்து எடுத்து கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தேன்.எனக்கு கு.ப.ரா. அவர்களின் சிறுகதைகள் ரொம்ப பிடிக்கும். தி.ஜா அவர்களின் சிறுகதைகளும் கு.ப.ரா வின் சிறுகதைகள்  போலவே ரொம்ப அருமையாகவும், வாழ்வின் மகத்துவங்களை பளிச்சென்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிற்று. குறிப்பாக 'கடன் தீர்ந்தது' சிறுகதையை படிக்கும் போது ஏன் என் கை நடுங்கியது என்று இன்னமும் எனக்கு தெரியவில்லை.சிலிர்ப்பு,பரதேசி வந்தான், ...ப்பா போன்ற கதைகள் மனசில் இன்னமும் இருக்கின்றன, அந்த தொகுப்பில் அவரின் இரண்டு பயண கட்டுரைகள் இடம்பெற்று இருந்தது, எனக்கு அதில் 'உதயசூரியன்' மிகவும் பிடித்து இருந்தது. அவரின் ஜப்பான் பயணம் குறித்த அந்த கட்டுரை மிகவும் எளிமையாக அதே சமயம் ஜப்பான் குறித்த வர்ணனைகள் மிக அழகாக இருக்கும், அங்கு அவர் சந்தித்த மனிதர்கள் குறித்து எழுதி இருந்தார் ஜப்பானிய மக்களின் பழக்க வழக்கங்கள், தேநீர் விருந்து, அவர்களின் மர வீடுகள், எதையுமே புன் சிரிப்போடு ஏற்று கொள்ளும் அவர்களின் பண்பு, எதை செய்தாலும் எளிதாகவும் அதே சமயம் அழகாவும் செய்யும் அவர்களின் நேர்த்தி, இப்படி பல விஷயங்கள் எனக்கு வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பானை பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியது.

பின்னர் அம்மா வந்தாள் நாவலை தேடி படித்தேன் (அந்த சிறு கதைகள் தொகுப்பில் பல முன்னணி எழுத்தாளர்கள் (என் சுஜாதா உட்பட) தி.ஜா பற்றி எழுதி இருந்தார்கள்) அதில் அம்மா வந்தாள் நாவல் வெளிவந்த சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாக கூறப்பட்டு இருந்தது, உடனே தேடு தேடு என்று தேடி ஒரே நாளில் படித்து முடித்த பிறகு தான் வேறு வேலை பார்த்தேன் அம்மா வந்தாள் படித்த போது 'இந்து' மீது காதல். இந்து கதாபாத்திரம் அவ்வளவு வலிமையானது. தன கணவனை பற்றி கேக்கும் போது "தனியாக அவரை பற்றி நினைக்க வேண்டுமா என்ன ? அதன் உடம்போட மனசோட போட்டு தச்சு இருக்கே"னு சொல்லும் போது அதோட வீரியம் புரியும், அந்த அம்மா கதாபாத்திரம் தான் முக்கியமானதாக இருந்தாலும் எனக்கு வேத பள்ளியில் நடைபெறும் காட்சிகளே பிடித்து இருந்தது, அம்மாவை குறித்து நான் அவ்வளவாக அலட்டி கொள்ளவில்லை, மொத்தமாக சொல்லவேண்டும் என்றால் மோகமுளில் யமுனா "இதுக்கு தானே ?" என்று கேக்கும் போது பளார் என்று அறைந்தார் போல இருக்கும், அதே போல் அம்மா வந்தாளிலும் பல காட்சிகள் இடம் பெறும் , இதோட இந்த அம்மாவை பார்க்க  வரமாட்டியா என்று அம்மா அப்புவை பார்த்து ரயில்வே ஸ்டேஷன்ல கேக்குற ஒரு காட்சி போதும்.

எட்டாயிரம் தலைமுறை

"மீன் மலர்" சிறுகதை தொகுப்பின் மூலமாகத்தான் எனக்கு தமிழ்மகன் அவர்கள் அறிமுகம், அதில் முதல் கதை அதன் தலைப்பு எனக்கு நினைவு இல்லை, ஆனாலும் அதன் கடைசி வரி எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு, "பெண்கள் யாரை முழுமையாக நம்புகிறார்களோ அவரகளிடம் தான் இப்படி வாய் விட்டு மனம் விட்டு சிரிப்பார்கள்". சத்தியமான உண்மை இது. பெண்களை வெகு சுலபமாக திட்டி இன்றைய சினிமாவில் பாடல் வருகிறது அனால் ஒரு பெண் அவள் பெண் என்பதற்காகவே போற்ற பட வேண்டியவள் என்பது என் எண்ணம்.பெண் எவ்வளவு மிருதுவானவள் என்பதற்கு மேலே  தமிழ்மகனின் கூற்றே சான்று. அதே நூலில் "வார்த்தையில் ஒளிந்திருக்கும் கிருமி" மிக மிக உண்மையான கதை, அதில் அந்த சிங்கத்தின் சமயோசித புத்தி வியக்க வைக்கும், பின்னர் அவரின் "ஆண்பால் பெண்பால்" நாவல் படித்து இருக்கிறேன், அது குறித்து ஏற்கனவே என் ப்ளாகில் எழுதி இருக்கிறேன்
           
நேற்று அவரின் "எட்டாயிரம் தலைமுறை" சிறு கதைகள் தொகுப்பை படித்தேன், கதையின் முடிவு பெரும்பாலும் வாசகர்களின் யுகத்திற்கே விட்டுவிடுவது தனி சிறப்பு, 20 கதைகள், எழுப்பும் கேள்விகள் நிறைய... 'மாமியார் மருமக சண்டையில ஆம்பளைங்க யார் பக்கமும் நிக்காம இருந்தாலே போதும், பாதி பிரச்சனை தீர்ந்ததுனு' ஜெயந்தி சொல்லிட்டு படி இறங்கி போற காட்சி இன்னும் கண்ணுலேயே இருக்கு. அப்பாவின் மரணம் நிகழ்ந்த பிறகு இடுகாட்டில் அந்த மகன் படும் வேதனைகளும், அந்த ஹும்”  தன அப்பாவுடையதாக இருக்குமோ, இருந்து விட கூடாதோ என அவன் ஏங்கும் இடம் கண்ணீரை வரவைக்கும், பின்பு நண்பனுடன் வண்டியில் செல்லும் போது  வாய்விட்டு அழுவதும், அந்த இடத்தில அவன் நண்பன் அவனின் அப்பாவை போல் சித்தரிக்க பட்டதும் அருமை. "ஒரு தேர்தல் ஒரு பசு" கதையில் மனிதம் அந்த கன்று வெளியேறுவது போல அழகாக வெளிப்படுத்தி இருப்பார், தேடல் கதையில் அம்மாவை பார்த்து வேகமாய் பார்க்காததை போல் மவன் ஓடும் போது அவன் மீது கோபமோ கோபம். "அக்கா" இந்த கதை தான் எனக்கு மிகவும் பிடித்த கதை. அந்த தம்பி கதாபாத்திரம் சாராய கடையில் வேலை பார்த்து கொண்டு, கிட்டதட்ட இதும் கோயில்தான் என எண்ணுகிற இடம் அருமை. அக்கா ஓடிவிட்டாள் என தெரிந்ததும் அவன் படுகிற அவஸ்தை சொல்லி மாளாது.. கூட்டத்தின் கடைசியில் ஒருவனல வரும் "ரொம்ப நல்லவனா இருகிறதும் மன நல குறைபாடு தான்" வரிகள் என்னவோ பண்ணுது சார், "நல்லவர்கள் குறைவாகவும் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதும் தான் பிரச்சனையோ, இருக்கும் கொஞ்ச நஞ்சம் நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றி விடத்தான் இத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன" ஒரு நல்லவனை பிறர் சந்தோசத்தை மதிப்பவனை இந்த சமூகம் பைத்தியகாரனாக்கி விடுகிறது. "ரோஜா" எப்படி என்று தோன்றியது குறித்த எட்டாயிரம் தலைமுறை கதை புனைவின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்,முதன்முதலில் ஒரு பெண்ணை ஏக்கபார்வையுடன் பார்த்ததை "பர்ஸ்ட் பர்ஸ்ட் அடிக்க பட்ட பர்ஸ்ட் சைட்" என்ற வர்ணனை சிறந்த நகையுணர்வு. புது மாப்பிள்ளை மாமனார் வீட்டில் படும் அவஸ்தையை சிரிப்பாகவும், கணவன் மனைவி தாம்பத்யத்தை வெகு இயல்பாகவும் சித்தரித்து இருக்கிறார் "அடுத்த பக்கம் பார்க்க" கதையில், எல்லா உணர்ச்சிகளையும் அழுத்திகொண்டு சிரிப்புடனே எதையும் எதிர்கொள்ளும் "நேசம்" மணி கதாபாத்திரம் காலகாலத்துக்கும் மனசுல இருக்கும், பொண்டாட்டி அவங்க காதலன் கூட ஓடிப்போனதை கூட இயல்பாய் எடுத்து கொண்டு அவங்க மேல பழி வரகூடாதுன்னு நினைக்குற மனச நான் மதிக்கிறேன். சதி கதைல "கிஷ்னால்" ஊத்தி கொளுத்திகிட்ட ஜானகி அக்கா ரொம்ப பாவம், வேலையில்லாமல் ஒருவன் தன் வீட்டில் படும் கஷ்டங்களை பாதிப்பு கதையில் துல்லியமாக எழுதி இருக்கார். அதும அவன் கதை எழுதுறவனா இருந்தா போச்சு, சுத்தமா மரியாதை கிடையாது. அவர் அப்பா கடைசியா சொல்ற வார்த்தை தான் ஒரு எழுத்தாளரை வாழவைக்கிறது.
 
 
 
அவருடைய வலைதளம் செல்ல கிளிக் செய்யவும்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin