வியாழன், மே 08, 2008

முன்னாள் தெய்வம்

சிறுகதை

தமிழ்மகன்


தூரத்தில் லாந்தர் விளக்கின் வெளிச்சம் மினுக், மினுக் என்று தள்ளாடியது.

"வர்றாங்க சாமீ. நீங்க போயி படுங்க'' என்றபடி இனி எல்லாம் சரியாகிவிட்டது என்பதுபோல், இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறிக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டான் சுடலை. கோபத்தின் உச்சத்தில் இருந்தார் பெருமாள் ரெட்டியார். சுடலையின் இந்த சால்ஜாப்புக்கெல்லாம் சமாதானமாகி விடுகிற நிலையில் இல்லை அவர்.

"சவுட்டு மண்ணு ஓட்ட வேண்டிய நேரத்தில் சினிமா கொட்டாய்ல படம் பார்த்துட்டு வர்றானுங்களே... பொறுக்கலுங்க. வரட்டும்...''

லாந்தர் விளக்கு வெளிச்சத்தோடு, இப்போது மாட்டு வண்டி மணிச் சத்தமும் கேட்டது. மாட்டு வண்டி நிதானமாக வந்தது. அடியாட்கள் இரண்டு பேரும் வண்டியிலிருந்து இறங்கி, நடந்து வந்துகொண்டிருந்தனர். 'திருட்டுத்தனமா சினிமா பார்த்துட்டு வர்றவனுங்க இவ்வளவு பொறுமையா வரமாட்டாங்களே' கண்களைத் தீட்டிக் கொண்டு பார்த்தார் ரெட்டியார்.

"என்னடா லேட்டு?'' என்று கேட்டுக் கொண்டே மீண்டும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வண்டிக்கு எதிரே வந்து நுகத்தடியைப் பிடித்து வண்டியை நிறுத்தினான் சுடலை.

வண்டிக்காரன் பதட்டத்துடன் முன்னால் ஓடிவந்து, ""மண்ணெடுக்குற இடத்தில் சாமி சிலை கெடைச்சது ரெட்டியாரே'' என்றான்.

"என்னடா சொல்றே?'' வண்டியின் பின்புறம் சென்று ஒருவித பக்தி பயத்துடன் நோட்டமிட்டார் பெருமாள் ரெட்டியார்.

உத்தேசமாக மூன்றடி உயரமுள்ள கருங்கல் சிலை . அம்பாள்! "ஆத்தா' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்... "கீழ் எறக்கி வையுங்கடா... டேய் இந்த இடத்தைச் சுத்தமா பெருக்குங்கடா'' படபடவென கட்டளையிட்டார் ரெட்டியார். ""வீடு கட்ட ஆரம்பிச்ச நேரம்... ஆத்தா என்னைக் கோயில் கட்ட ஆணையிட்டிருக்கா'' என்று அவருக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார்.

"இல்ல ரெட்டியாரே... புது வாயல்காரனுங்க எங்க ஊர் எல்லைல தான் சிலை கிடைச்சது. அதனால இது எங்களுக்குத்தான் சொந்தம்னுட்டாங்க. நான் விடல "இது ரெண்டு ஊரு எல்லை. இது எங்களுக்குத்தான் சொந்தம்'னு சொல்லி எடுத்துக்கிட்டு வந்துட்டேன். அவனுங்க பெரிய மனுஷங்களோட புறப்பட்டு வர்றோம்னு சொல்லியிருக்கானுங்க.''

"விடக்கூடாது ரெட்டியாரே'' என்று ஆவேசமாகக் குரல் கொடுத்தான் சுடலை.

அம்பாள் சிலையை இப்போதைக்குப் பிள்ளையார் கோவிலிலேயே வைத்திருப்பதென்றும் வருகிற சம்பா பட்டத்துக்குள் அம்பாளுக்குத் தனியாகக் கோவில் கட்டுவதென்றும் ஊரின் பெரிய தலைக்கட்டுகள் ஐந்தாறு பேர் முடிவெடுத்து முடிப்பதற்கும் புதுவாயல்காரர்கள் ஜலஜலவென்று இரண்டு மாட்டு வண்டியில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

வீட்டுத் திண்ணையிலேயே ரெண்டு ஜமுக்காளத்தை விரித்துப் போட்டு வந்தவர்கள் அனைவரையும் உட்காரச் சொன்னார்.

புது வாயல்காரர்கள் சார்பாக மாரியப்ப ரெட்டியார் பொறுமையாகப் பேசினார். "சிலை கிடைச்சது எங்க ஊரு எல்லைல. ஏதோ பெருமாள் ரெட்டியார் படியாளுங்களாச்சேன்னு வம்பு பண்ணாம கொடுத்தனுப்பிச்சோம்.''

"இப்ப என்னாங்கறீங்க?'' என்றார் பெருமாள் ரெட்டியார்.

"எங்க ஊரு எல்லைல கிடைச்சது எங்களுக்குத்தான் சொந்தம்னு சொல்றோம்.''

"மொதல்ல அது உங்க ஊரு எல்லை இல்லை. ரெண்டு ஊருக்கும் பொது எல்லை. பொறம்போக்கு நிலம். நாங்க மண்ணெடுக்கும்போது கிடைச்சிருக்கு... ஆத்தா எங்க ஊருக்கு வரணும்னு விருப்பப்பட்டிருக்கா. இல்லாட்டி போன வாரம் முழுக்க பள்ளிக்கூடம் கட்ட உங்க ஊருக்கு மண்ணெடுத்துக் கிட்டிருந்தீங்களே... அப்ப கிடைச்சிருக்க மாட்டாளா?'' கூர்மையாக ஒரு கேள்வியைப் போட்டார் பெருமாள் ரெட்டி.

இதே விஷயத்தை இரு தரப்பினரும் மூன்று மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாள் ரெட்டியாரின் சம்சாரம் அந்த இரவு நேரத்திலும் ஒரு அண்டா நிறைய காபி போட்டுக் கொண்டு வந்து கோயிலுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

"டேய் சுடலை ... எல்லாருக்கும் காபி குடுடா''

மாரிமுத்து ரெட்டியார் ரோஷமாக, "காபி இருக்கட்டும். இதுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க...'' என்றார்.

இந்த நேரத்தில்தான் ஒருவிதமாக முறுக்கிக் கொண்டு, கண்களை அகல விரித்துக் கொண்டு நிற்க முடியாமல் ஆடினான் சுடலை.

`'டேய் சுடலை'' என்று அவனை உசுப்பினார் பெருமாள் ரெட்டியார்.

"டேய்... பொன்னியம்மாடா நானு... உங்களையெல்லாம் எல்லைல நின்னு காக்கறதுக்காக வந்தேன்டா... டேய் ரெண்டு ஊருக்கும் எல்லைல எனக்குக் கோயில் கட்டுங்கடா...'' சுடலை மீது சாமி வந்திருப்பதை ஒரு வினாடி தாமதத்தில் புரிந்து கொண்ட அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

ஊர் எல்லையில் கோயில் கட்டுவதில் இரு தரப்பினருக்குமே மாற்று கருத்து இல்லை. புதுவாயல்காரர்களும் சந்தோஷமாகக் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பினர்.

"டேய் சுடலை, உம்மலே சாமி வருமா?'' என்று விசாரித்தார், பெருமாள் ரெட்டியார்.

"இதுதான் முதத் தடவை ரெட்டியாரே!""

அடுத்த தடவைகளில் தேர்ந்த சாமியாடி ஆகியிருந்தான் சுடலை. ஊர் எல்லையில் பொன்னியம்மன் கோயில் கட்டி முடித்ததும் 5 நாள் திருவிழா. கோவிலுக்கு ஆடு, கோழி பலியிடக்கூடாது என்று சாமியாடி அறிவித்ததுகூட சுடலைதான். ஆத்தாவுக்குக் காவு கொடுப்பது பிடிக்காமல் போனதில் ஜனங்களுக்குச் சின்ன ஏமாற்றம் இருந்தாலும் சுடலை மேல் வந்து சொல்லிவிட்டாளே என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
திருவிழாவில் முதல் நாளன்று பொங்கல் பானைகளோடு ஊரே திரண்டு நின்றது. உடம்பெல்லாம் மஞ்சளும், குங்குமமுமாக ஆவேசமாக இருந்தான் சுடலை. உடுக்கையின் லயத்துக்குத் தலையைச் சுழற்றி சுழற்றி ஆடிக் கொண்டிருப்பது சாமானிய வேலையாக இல்லை. இயல்பாகவே அவன் திடகாத்திரமானவன். ஒரு கையில் வேப்பிலைக் கொத்தும், இன்னொரு கையில் பிரம்பும் வைத்துக் கொண்டிருந்தான் சுடலை. பம்பை, உடுக்கைக்காரர்களும் அவன் முன்னே செல்ல ஊரே எல்லைக் கோயிலுக்குத் திரண்டது.

எல்லையை நெருங்க, நெருங்க எதிர் திசையில் இருந்து இன்னொரு உடுக்கைச் சத்தமும் கேட்டது. புதுவாயல்காரர்களும் பொங்கல் வைக்க வந்து கொண்டிருந்தனர். எந்த ஊருக்கு முதல் மரியாதை என்பதுபோல் கூட்டத்தினுள் பேச்சு எழுந்தது. இந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக சுடலை, எதிரே வரும் கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான். சுதாரித்து அவனைப் பின் தொடரக்கூட முடியவில்லை. அப்படியொரு ஓட்டம்.

புதுவாயல் சார்பாகச் சாமியாடிக் கொண்டு வந்தவனை உலுக்கிப் பிடித்து ""யாருடா நீ? சாமின்னு சொல்லி ஊரை ஏமாத்தறயா?... உன்னை...'' தலைமுடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி கையில் இருந்த பிரம்பால் விளாச ஆரம்பித்தான்.

இரண்டு ஊர் மக்களும் திகைத்துப் போய்விட்டனர். இப்படியும் நடக்குமா என்றிருந்தது இரு தரப்பினருக்கும். விளாசிய விளாசலில் கதிகலங்கிப் போய் ஒரு ஓரமாக நின்று விட்டான். புதுவாயலுக்காகச் சாமி ஆடிக் கொண்டு வந்தவன்.

"பொன்னியம்மா இங்கே இருக்கேன்டா... எவனாவது ஏடாகூடமா பண்ணீங்க.... தொலைச்சுருவேன்...''
புதுவாயல் சார்பாக மாரிமுத்து ரெட்டியார் இரண்டடி முன்னே வந்து "மன்னிச்சிடு தாயே'' என்று கற்பூரத்தை ஏற்றி சுடலையின் உள்ளங்கையில் வைத்தார். தகதகவென எரியும் கற்பூரத்தோடு மூன்று முறை சுற்றி வாய்க்குள் போட்டுக்கொண்டான் சுடலை. அதற்குப் பிறகு, யார் மீதும் பொன்னியம்மா சாமியாட வருவதில்லை.

அடுத்த 25 வருஷத்துக்கு பொன்னியம்மா என்றால் அது சுடலை என்று ஆகிவிட்டது.
பெரிய குங்குமப் பொட்டு, உடம்பெல்லாம் விபூதி என மணம் வீசும் மனிதனாகிப் போனான் சுடலை. உழுவதும் மருந்தடிப்பதும், களையெடுப்பதும் அவனுக்கு உகந்த தொழிலாக இல்லாமல் போனது. கோயில், கும்பாபிஷேக வேலைகள், நன்கொடை வசூல் என்று ஒருவித அறப்பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.
கோயிலுக்கு முன்னால் இருந்த புறம்போக்கு நிலத்தில் மின்சார வாரிய துணை மின்நிலையம் வந்ததும் கோயிலுக்கு மவுசு குறைந்து போனது. சப்}ஸ்டேஷன் வந்ததால் ஊருக்கு நிறைய பம்ப் செட் இணைப்பும் ரைஸ் மில்லும், சில கம்பெனிகளும் இயங்க ஆரம்பித்தன. கோயிலுக்கு இரண்டு பக்கமும் வரிசையாக ஃபேக்ட்டரிகள்.

காது குத்துவதற்குப் பிரார்த்தித்துக் கொண்டவர்கள் மட்டும் எப்போதாவது கோயிலுக்கு வந்தார்கள். சுடலையும் கோயிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த ப்ளாஸ்டிக் பைப் செய்யும் கம்பெனியில் வாட்ச்மேனாகச் சேர்ந்து விட்டான். எல்லாம் மருமகள் வந்த ராசி!

கோயிலுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சுடலை ஒரு சமயம் ஆவேசமாகச் சாமி வந்து ஆடியபோது, "இன்னா பெருசு... சும்மா இருக்க மாட்டியா?'' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டனர். அதன்பிறகு சுடலை மீது சாமி வருவதில்லை.

பொன்னியம்மாளும் அந்தக் கோயிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள்.

சனி, ஏப்ரல் 19, 2008

சிறுகதை கன்று

தமிழ்மகன்
ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸýம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.

அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண பார்வையில் எனக்குச் சிறுமியாக இருப்பதுதான் சரி என தோன்றினாள். மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. பிச்சைக்காரியாக இருந்தாலும் வலிந்து பரிதாபத்தைக் கண்ணில் தேக்கி வைத்துக் கொண்டு அழுக்காக இருக்க வேண்டும் என்று விரும்பாதவளாக இருந்தாள். சாப்பிடுவதற்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். ஒரு சில ஓட்டலுக்கு இப்படி ஒரு ராசி. க்யூவில் நின்று காத்திருந்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும் தருணத்தில் இப்படியான ஓர் ஆர்வமூட்டும் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பது மற்றெல்லாவற்றையும்விட சுலபமான திசைதிருப்பலாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியேறுபவர்களில் ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அதிகம் கெஞ்சாத தொனியில் அவள் "சார் சார்'' என்றாள். பெரும்பாலும் அதற்குப் பலன் இருந்தது. ஏதோ டைம் கேட்பதற்காகக் கூப்பிடுகிறாள் என்று திரும்பி பின் சுதாரித்து அவர்கள் பிச்சை போடுவது தெரிகிறது. தட்டில் விழும் காசுகளை அவள் உடனடியாக பர்ஸில் எடுத்துப் போட்டுக் கொண்டாள். ஏதோ மீன்காரியும் காய் கறி விற்பவளும் காசை வாங்கி சுருக்குப் பையில் போட்டுக் கொள்வது போல ஒருவித வியாபார மிடுக்கு அதில் தெரிந்தது. பிச்சை எடுப்பதை அவள் ஒரு தொழில் போல நினைத்திருக்கக் கூடும். இடுப்பில் கையூன்றி அவள் ஒய்யாரமாக நிற்பது அவளுக்கு இது கேவலமான தொழில் என்பது போன்ற உலக நியாயங்கள் தெரியாது என்பதை உணர்த்தியது. இன்று புதிதாய் பிச்சைக்காரி ஆனவளோ? என்னைப் போலவே எல்லோரும் அவளிடம் இயல்பு தவறிய ஈர்ப்பு இருப்பதைக் கவனித்தனர். ஆனால் என்னைப் போல இப்படி நேரம் எடுத்து கவனிக்கவில்லை.

அவளுடைய மலர்ந்த விழிகளாலோ, கூரிய நாசியோலோ நான் மேலும் ஈர்க்கப்பட்டதோடு, இரந்து பிழைக்கக் கூடிய தன்மை இவளிடம் இல்லையே எப்படி இந்த பூமியில் அவளால் தொடர்ந்து பிச்சை எடுத்துப் பிழைக்க முடியும் என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. மாற்று யோசனையாக இவளுக்கு என்ன வேலையைக் கொடுத்தால் இவளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் "சார் 3}வது டேபிள் காலி'' என்ற குரல் கேட்டது. உட்கார வைத்து விடுகிறார்களே தவிர சாப்பாடு வடிக்கவில்லை, அப்பளம் ரெடியாகவில்லை என்ற தாமதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

சாப்பிட உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் சர்வருக்கும் சாப்பிட வந்தவருக்கும் சண்டை வராத டேபிள்கள் எத்தனை எண்ணிக் கொண்டிருந்தேன்.

ரேஷன் கடை ஊழல், பெனிபிட் பண்டு மோசடி, போன ஆண்டு கட்டிய பாலம் இடிந்து 100 பேர் பலி, கன்னா பின்னாவென்று கணக்குக் காட்டும் எலக்ட்ரிசிட்டி மீட்டரை சரிபார்த்துத் தருவதற்கு லஞ்சம், டிரைவிங் லைசென்ûஸக் காட்டிய பிறகும் பைக் சாவியை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏடாகூடமாக விசாரிக்கும் போலீஸ்... இப்படி கோபப் படவேண்டிய எத்தனையோ இடங்களில் மக்கள் காட்டும் பொறுமைகள் எல்லாம் ஹோட்டல் டேபிள்களில் வந்த பின்புதான் ஆவேசமடைகின்றனபோலும்.

இந்த ஒரு பிறவியை மக்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று கவனிப்பதற்கு ஒதுக்கிவிட்டு அடுத்தப் பிறவியில் இருந்து வாழலாமா என திடீரென நினைத்தேன். ஏதோ ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி என ஒன்று இல்லாமல் போனாலும் பெரிய பாதகம் இல்லை போலத்தான் தோன்றியது. அந்தப் பெண் போன பிறவியில் இளவரசியாக இருந்திருப்பாளோ? வெறும் சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து என் கை மேலேயே ரசத்தை ஊற்றிவிட்டுப் போனான் சர்வர். சாம்பார் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டோமா என்று திடீரென சுரணை வந்து, அதன் மீதே கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றச் சொல்லி சாப்பிட்டேன்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டாவது வேலை இது. காலை ஆறுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினால்தான் பத்துமணிக்காவது ஆபிஸýக்குப் போகமுடியும் என்ற இடைவெளி. அப்புறம் அம்மா தந்த சாப்பாடாக இருந்தாலும் மத்தியானத்தில் சாப்பிடவா முடியும்?

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பக்கத்துக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைப்பதில் இருக்கும் ஈடுபாடும் இன்பமும் எனக்குச் சாப்பாட்டில் இருந்ததில்லை. சாப்பிட்ட பிறகு ஒரு தம் போடலாம் என்பதற்காகச் சாப்பிடுகிறேன். எழுந்தால் ஒரு தம் அடிக்கலாம் என்பதற்காகவே காலையில் நான் கண் விழிக்கிறேன். இனி சிகரெட் கடையெல்லாம் மூடியிருப்பார்கள் என்பதற்காகவே இரவு படுக்கப் போகிறேன். சொல்லப் போனால் சிகரெட் புகைப்பதற்காகச் சம்பாதிப்பதாகவே ஆகிவிட்டது.

சற்று தொலைவில் அந்தச் சிறுமி. வெய்யிலுக்காக கண்களை இடுக்கிக் கொண்டு நிற்பதிலும் உலகப் பரபரப்பில் இருந்து ஒதுங்கி நிற்கிற நிதானமும் அலட்சியமும் என்னை மீண்டும் ஈர்த்தது. நாம் வெளியே வந்த போது எங்கே போயிருந்தாள்? இவளைப் படிக்க வைத்தால் மிகச் சிறந்த விஞ்ஞானியாகவோ, விளையாட்டு வீராங்கனையாகவோ வந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாள். அவள் மீது நம்பிக்கையோ, இரக்கமோ தோன்றியது.

சாப்பிட்ட களைப்பு நீங்குவதற்காக அருகே இருந்த பெட்டிகடையில் அவரவர் ரசனைக்கேற்ப பீடியோ, சிகரெட்டோ, வெற்றிலையோ போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கிளிப்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சஞ்சிகைகளை ஆனவரைக்கும் குனிந்து நெளிந்து படித்தார்கள். படிப்பதில் இவ்வளவு ஆர்வமா எனப் பெருமையாக இருக்கும். பத்திரிகையைக் கையில் கொடுத்தால் அப்படி படிப்பார்களா என்று தெரியவில்லை. காசு கொடுத்து வாங்கி இவர்கள் கையில் திணித்துப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு வசதியில்லை. இவர்களில் யாருக்குமே அவள் குறித்து அக்கரை ஏற்படாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சூரியன் ஓட்டலுக்கு நேர் மேலே இருந்தது. எந்தப் பக்கத்திலும் நிழலே இல்லை. ஓட்டலின் சுவரில் நிழலாலேயே பெயிண்ட் அடித்த மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது. இப்படியான தருணத்தில் ஆல்பெர் காம்யூவின் அந்நியன் கதையில் வருவது போல சுட்டுவிட முடியுமா நம்மால் என்று இருந்தது. யோசனை வேறு பக்கம் திரும்பியது. துப்பாக்கியை ஒருமுறை தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிட்டுமா? துப்பாக்கி இல்லாவிட்டால் போகிறது. உருட்டுக்கட்டையை எடுத்து ஒருத்தன் நடுமண்டையில் அடிக்க முடியுமா?...

அந்தச் சிறுமியை மீண்டும் பார்த்தேன். அவள் நடைபாதை மேடையில் அமர்ந்து காலை சாலையில் தொங்கவிட்டபடி வெயிலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த சிறிய மணிபர்ûஸத் திறந்தாள். அதன் உட்புறத் திறப்பில் சிறிய கண்ணாடி. அதில் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உலர்ந்து போன சிக்கடைந்த சிகையை விரல்களால் பின்பக்கம் தள்ளிவிட்டாள். பின்னர் முன் நெற்றியில் சிறிய முடிக் கற்றையை விரல்களால் சுருட்டிவிட்டுக் கொண்டாள். அவளுடைய முகம் அவளுக்கு வியப்புக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். தன் மூக்குத்தியைத் திருகி அதில் பொறித்த உருவத்துக்கு ஏற்ப இப்படித்தான் இருக்க வேண்டும் போல நிலைப்படுத்தினாள். மெல்ல தன் நுனி நாக்கால் அக்கண்ணாடியைத் தொட்டாள்.

கண்ணாடியிலிருந்த நாக்கும் அவளுடைய நாக்கைத் தொட்டது. அவள் பூரிப்பான புன்னகையோடு அதை உள்வாங்கிக் கொண்டு அதே வேகத்தில் இதை யாராவது பார்த்துவிட்டார்களா என்று கவனித்தாள். என்னையும் என் கண்கள் அவள் மீது நீண்ட நேரமாய் ஊடுருவி இருந்ததையும் அவள் கணித்தாள். நான் கவனித்துவிட்டேன் என்பது அவளுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். வித்தியாசமாக எதுவும் நடந்துவிடவில்லை என காட்டிக் கொண்டு இயல்பாக பர்ûஸ மூடினாள்.

நான் அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குப் புரிந்துபோனது. ஆனால் நான் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ளாமல் கவனக் குவிப்பு எதுவும் இன்றி சும்மா வெறித்துக் கொண்டிருந்ததாகத்தான் இருக்கும் என அவள் எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது உண்மைதானா என்பதைச் சரிபார்த்துக் கொள்வதில் அவளுக்குத் தவிப்பு இருந்தது. மீண்டும் நான் அவளைக் கவனிக்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். அதை நான் என்னவென்று விவரிப்பது. மிக நாசூக்கான அவதானிப்பு அது. நான் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அவளுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே அவள் அங்கிருந்து எழுந்து ஓட்டலின் மறு முனைக்குப் போய் அனிச்சையாக கையேந்தி நின்றாள். அவள் செய்யக் கூடாத வேலை என்று உறுதியாகிவிட்டது எனக்கு. நாமே அழைத்துச் சென்று வளர்க்கலாமா என்று ஆவேசம் ஏற்பட்டு, பிறகு ஏதாவது அனாதை ஆசரமத்தில் வைத்து படிக்க வைக்கலாம் என்று மாறியது.

அதிகபட்சம் 13 வயசு இருக்கலாம். சரியான ஆகாரம் சாப்பிடாதவளாக உணர்ந்து 14 வயதாகவும் இருக்கலாம் என்று கணித்தேன். போதிய கவனிப்பு இருந்தால் அவளுடைய நிறத்துக்கு இன்னும் அழகாகவே இருப்பாள். யாருடைய இரக்கம் காரணமாகவோ வழங்கப்பட்டிருந்த அந்த பாவாடை- சட்டையும்கூட அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது. அவள் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் என்று தெரிந்தது. கன்றுக்குட்டிக் காதல் என்பார்களே அதற்குச் சற்று முந்தைய உணர்வு என்று சொல்லலாம் அதை. அந்த உணர்வு எனக்கானதா? அவளுக்கானதா? என்பது அவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமில்லை. இருந்தாலும் அதை இருவருக்குமானதாகத்தான் நான் நினைத்தேன். ஒருவரை ஒருவர் கவனிக்கிறோம் என்ற பால் ஈர்ப்பு. வெட்கம் தடவிய உணர்வு. ஒரு பையனாக இருந்தால் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்காது என நினைத்தேன்.

வெயில் உக்கரமாக இருந்தது. கூட்டமும் கடை வாசல் பக்கமாகவே குழுமிவிட்டது. கடையில் தொங்கவிடப்பட்டிருந்த படுதாவும் புகைப்பிடிப்பு வஸ்துகளும் மக்களை இந்தப் பக்கமாக நகர்த்திவிட்டது. அந்தச் சிறுமி இருந்த இடத்தில் யாருமே இல்லை. யாருமில்லாத இடத்தில் அவளால் பிச்சையும் எடுக்க முடியாதே. ஆனால் அவள் இந்தப் பக்கம் வராமல் இருப்பதற்கு நான் இருப்பதுதான் காரணமா என்பதை அறிந்த போது வருத்தமாக இருந்தது.

நான் அவள் கண்ணாடியில் பார்த்து அலங்காரம் செய்து கொள்வதைக் கவனித்து விட்டதற்காக இப்படி நடந்து கொள்கிறாளா? ஒருவேளை நாம் இருக்கும்வரை இந்தப் பக்கம் வரவே மாட்டாளோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நான் இன்னொரு சிகரெட்டை வாங்கிக் கொளுத்திக் கொண்டேன்.

மனசின் பனிமூட்டம் மெல்ல விலக ஆரம்பித்தது. இவள் அம்பிகா போல அல்லவா இருக்கிறாள் என்று பதறிப் போய் சுதாரித்தேன். அவள் முகத்தை நெருங்கிச் சென்று பார்க்கவோ, அல்லது பட்டை வெயிலில் கருகிக் கொண்டிருக்கும் அவளுக்கு ஓடிப் போய் குடை பிடிக்க வேண்டுமென்றோ தோன்றியது. கிராமத்தில் கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்த போது ஊரில் இருந்த இன்னொரு பாட்டியின் வீட்டுக்கு என்னைப் போலவே விடுமுறைக்காக வந்திருந்தவள்தான் அம்பிகா.இருவருமே ஐந்தாம் வகுப்பு என்பதைத்தவிர எங்களுக்குள் வேறெந்த சிறப்பு ஈர்ப்புகளும் இல்லை. ஆனால் அவள் விடுமுறை முடிவதற்குள்ளாகவே திடீரென்று அவளுடைய ஊருக்குப் புறப்பட்டுவிட்டபோது ஏதோ இருந்தது என்று தெரிந்தது. அவள் போனதும் எனக்கும் அங்கு கொண்டாட எதுவுமில்லாததுபோல் ஆனது. அதன் பிறகு வேறு எந்த கோடைவிடுமுறைக்கும் வராமலே போய்விட்ட அம்பிகாதான் இப்போது ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி போல் என் முன் நிற்பதாக மகிழ்ந்தேன். அவள் இப்படித்தான் பாவாடை சட்டை போட்டிருந்தாள். இடுப்பில் கை வைத்து நிற்பதும் இப்படித்தான்.

நான் அவள் முகத்தைப் பார்த்து அம்பிகா ஜாடைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு அம்பிகாவின் முகம் அத்தனைத் தெளிவாக நினைவில் இல்லை. பாவாடை, சட்டை, ரிப்பன், நடை} பாவனை என்று மொத்தமான அபிப்ராயமாக அவள் இருந்தாள். நான் சிகரெட் புகையை ஊதுவதற்காகத்தான் அந்தப் பக்கம் திரும்பியதாகச் செயல்பட்டேன். உண்மையில் அவளும் என்னை அடிக்கொருதரம் ரகசியமாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். நான் இருக்கும் பகுதிநோக்கி வருவதில் தயக்கமும் இருந்தது. அவள் அடுத்த முறை பார்த்தபோது அவளுடைய இத்தனை செய்கையையும் உளவாங்கிக் கொண்டதன் அடையாளமாக ஒரு புன்னகையைச் சிந்தினேன்.

அவளுக்கு அது தன்னை நோக்கித்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திடுக்கிட்டு வேறுயாருக்கானதோ என்று விழித்தாள். என்ன சந்தேகம் இந்தப் புன்னகை உனக்குத்தான் என்பதாக மீண்டும் சிரித்தேன். திகைத்தே போனாள். அது எனக்கு மேலும் சிரிப்பை ஏற்படுத்தியது. தன் மீதான இப்படியொரு கவனத்தை அவள் பெரிதும் விரும்பினாள்போல தெரிந்தது. இதற்கு முன்னால் இப்படியொரு நிகழ்வு அவளுக்கு எற்பட்டிருக்குமா தெரியவில்லை. அது அவளுக்குப் பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்திருக்க வேண்டும். சில்லறைகள் இல்லாதத் தட்டில் விரலால் கிறுக்கி, எந்த பாதிப்பும் ஏற்படாதவளாகக் காட்டிக் கொண்டாள்.

அவள் இப்போது மேலும் அழகாகத் தெரிய ஆரம்பித்தாள். முகம் பழக ஆரம்பிப்பதும் மனசு அதற்கு ஒரு பிரத்யேக வடிவம் கொடுக்க ஆரம்பிக்கிறது. ரஜினிகாந்த் கண்டக்டராகவே இருந்திருந்தால் அவருடைய போட்டோவை சலூனில் ஒட்டி வைப்பார்களா? கருணாநிதி ஒரு ஆரம்ப பள்ளிக்கூட வாத்தியாராக இருந்திருந்தால் அவரைப் பார்க்க இப்படியொரு கூட்டம் கூடுமா? அவர்கள் செய்த சாதனை, அதனால் எற்பட்ட புகழ் இதையெல்லாம் மீறி முகம் பழகிப் போய் அந்த முகத்தை நேரில் பார்க்கிற ஆர்வம் என ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

பிச்சை எடுப்பதற்கான ஒரு தகுதியும் அவளிடம் இல்லை போல தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு பெரிய நகைக்கடை அதிபரின் மகளாக ஏசி அறையில் இருப்பதுதான் அவளுக்குப் பொருத்தமான வாழ்க்கையாக இருக்கும் போலவும் நினைத்தேன்.அவள் மனதால் கோடீஸ்வரி போல இருந்தாள். வரவர எனக்கு இந்த எண்ணம் வலுத்துக் கொண்டே போனது.

முனிவரின் நிஷ்டையைக் கலைத்த பாவத்துக்காக இளவரசிக்கு இப்படியொரு சாபம் வழங்கப்பட்டு, மிகவும் கதறி அழுது விமோசனம் வேண்டினாள் அவள். முனிவரும் மனமிரங்கி "இந்தப் பிறவியில் நீ மணக்க வேண்டிய இளவரசன், அடுத்த பிறவியில் வசந்தா பவன் வாசலில் சிகரெட் பிடித்தபடி இருந்து உனக்குப் பிச்சை இடுவான். அப்போது இருவரும் இளவரச ரூபம் கொள்வீர்கள்'' என்று கூறியிருந்தாள் நன்றாக இருக்குமே என நினைவுகள் குமிழிட்டது.

ஆவேசமாக வந்த ஒரு பெண்மணி, அந்தச் சிறுமியின் கையில் இருந்த தட்டைப் பிடுங்கி அதாலேயே அவளுடைய தலையில் ஒரு அடி போட்டுவிட்டு ""இன்னாடீ பண்ணீங்கீறே இம்மா நேரமா இங்க?'' என்றாள்.

இப்படியொரு அவமானத்தை என் எதிரில் எதிர்கொண்டது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும் அவளுக்கு. ஆனால் செம்மையான உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்திப் பழக்கமில்லாதவளாக அவள் இருந்தாள்.

"கூட்டம் அங்க நிக்குது.. இங்க இன்னா பண்றே?'' என்றபடி முடியைப் பிடித்து இழுத்து கடை இருந்த பக்கம் நோக்கித் தள்ளினாள்.

அவள் ஆவி புகுந்தவள் போல நானிருந்த பக்கம் நோக்கித் தட்டேந்தி எந்திரத்தனமாக வந்தாள். இருந்தாலும் ஒரு இளவரசியின் நடைதான் அது. என் எதிரே வந்து தயக்கமில்லாம் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். நானும் நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன். காசு போடுவதா, கையைப் பிடித்து அனாதை இல்லத்துக்கு அழைத்துச் செல்வதா? சட்டென்று அங்கிருந்து அகன்றுவிடுவதா?... அந்தக் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தேன்.

பாக்கெட்டில் இருந்த காசும் அதற்குக் கீழே இருந்த இதயமும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தன.

வெள்ளி, ஏப்ரல் 11, 2008

பொறாமைப்பட வைக்கும் புத்தகம்

வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)

தமிழ்மகன்



தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கருணாநிதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் படைப்பிலக்கியங்கள் மூலம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் படைப்புக்கும் பின்னணியில் ஏதோ நோக்கமும் கொள்கையும் இருந்தன. பக்தியை வளர்த்தார்கள், தேசியத்தை வளர்த்தார்கள், தமிழினத்தை வளர்த்தார்கள், மனித நேயத்தை வளர்த்தார்கள், கலையை வளர்த்தார்கள் போன்ற ஒன்றில் இவர்களில் பலர் பொருந்திவிடுகிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் தமிழைத் தக்க வைக்கிற வேலையைச் செய்தார்கள் என்பதும் பொருந்தும்.

ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி தமிழருக்கு அறிமுகம் செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, பிறமொழி இலக்கியங்களைத் திரட்டித் தந்த க.நா.சு. போன்ற பலர் இந்த மொழியின் சுறுசுறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பல ஆங்கில எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர்கள் பலரை, அவர்களை நேர்காணல் செய்து அவர்கள் வார்த்தைகளாலேயே அவர்களை அறிமுகம் செய்யும் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் அ.முத்துலிங்கம். காலச்சுவடு வெளியீடான "வியத்தலும் இலமே' அந்த விதத்தில் தமிழில் புது முயற்சி. இதுவரை இத்தனை விஸ்தாரமாகச் செய்யப்படாத சாதனை.

இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ, அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால் முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், சிறுகதைக் கோட்பாடுகள், அவர்களுடைய படிப்பு ரசனை, அவர்களின் எழுத்து பாணி என்று இங்கு எழுதும் இளம் படைப்பாளிகளின் விருப்பத்தை உணர்ந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று எழுதியிருக்கிறார். இவ்வளவு பேரையும் நேரிலேயே சந்தித்திருக்கிறாரே எனப் பொறாமையாக இருக்கிறது.


"எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுத தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்' என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்பரவு பணியாளராக வேலை செய்தவர். எதற்காக பிரபலமான பின்னும் வேலை . செய்தீர்கள் என்ற கேள்விக்கு நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன் என்கிறார். அகில் சர்மாவோ "வாழ்வது ஒரு முறைதான். இப்போது எழுதவில்லை என்றால் வேறு எப்போது எழுதுவது' என்று பல லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்யும் வேலையை உதறிவிட்டு இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் எழுதியவர்.

""ஒரு எழுத்து ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான் திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ்.

இளம் எழுத்தாளர் நஸீகு அலி முதல் 80 களில் இருக்கும் ஆலீஸ் மன்றோ வரை பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிக்கான நேரம் கொடுத்துவிட்டோம் என்ற நியாயத்தில் மனைவியின் பிரசவ நேரத்தையும் பொறுத்துக் கொண்டு இயல்பாக பேசிய கிறிஸ் ஃபிலார்டி. வெறுப்பும் சலிப்புமாகப் பேசும் ஃப்ராங்க் மக்கோர்ட் எல்லோரையும் தேடித் தேடி பேட்டி கண்டிருக்கிறார்.

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற சினுவ ஆச்சிபிக்கு பெரிய அளவில் விருது கெüரவங்கள் கிடைக்கவில்லை ஆனால் அவரைப் பார்த்து மலைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு மகத்தான கெüரவங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நஸீகு அலியிடம் கேட்கிறார். முப்பது பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதும் 28 வயதில் அவர் எழுதிய "திங்ஸ் ஃபால் அபார்ட்' என்ற முதல் நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரமிக்கிறார் நஸீகு. சினுவா அச்சுபி மீது அப்படியொரு மரியாதை. அவர் படிப்பதற்காக நஸீகு ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தாராம். படிக்க நேரமில்லை என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தாராம். பொக்கிஷம் போல அந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வருகிறாராம். அப்படி மதிக்கிறார்.

அதே போல் ஒரு எழுத்தாளரை மதிப்பதில் சிகரம் தொட்ட இன்னொரு எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. "நான் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையை படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்' என்கிறார் செடாரிஸ்.

ஆலிஸ்மன்றோவின் சிறுகதைகள் 40லிருந்து 70 பக்கங்கள் இருக்கும். இங்கே சிலர் அதை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்கிறார்கள். (பிப்.11 - 2008 நியூ யார்க்கர் இணைய இதழிலும் அவருடைய "ஃப்ரீ ராடிகல்' என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.)

சிறுகதையின் வடிவம் குறித்த அவர்களின் பார்வை, தரிசனம் அனைத்தும் நம்முடைய கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும்கூட பொருந்தி வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அது மனித வாழ்வின் பரந்துவிரிந்த பொதுத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.

கலிபோர்னியாவின் பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் (hart) சொல்லும் தமிழ் சாதிய நடைமுறைகள் ஆச்சர்யமான புதிய சந்தேகங்களை விதைக்கின்றன. ஆர்யர்களின் வருகைக்குப் பின்னர்தான் சாதி முறை ஏற்பட்டதென்றால் அது அவர்களின் சமூகத்தில் இல்லையே என்கிறார். அவர்களின் வருகைக்கு முன்பே இந்திய சமூகத்தில் சாதி முறை இருந்தது என்பதும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அந்த வர்ண பேதங்கள் வளர்ந்தற்குக் காரணம் அந்த வாழ்வுமுறை ஏற்கெனவே இருந்ததன் காரணத்தால்தான் என்பது அவருடைய கூற்று. ரஷ்யன், லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் என பூமிப் பந்தின் பிரபல மொழிகள் பலவற்றை அறிந்தவராக இருக்கிறார் ஜார்ஜ் எல் ஹார்ட். அவருடைய கருத்துகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாததாகவும் உள்ளது. வேதங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வர்ண பேதங்களுக்கான இலக்கணங்களும் சாதி ரீதியாக மனிதர்களை இழிவுபடுத்தியிருப்பதும் தெளிவாகிற அளவுக்கு பண்டைய தமிழ்நூல்களில் குறிப்படப்படவில்லை. தமிழ் சமூதாயத்தில் இப்படியொரு வாழ்வியல் முறை இருந்திருப்பின் அவை தமிழ்நூல்களில் வலியுறுத்தப்படாமல் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதும் கேள்வி.

களவு ஒழுக்கம் குறித்து அகப் பாடல்களில் வருகிறது. ஆனால் கர்ப்பமான பெண்கள் சம்பந்தமாகவோ, கர்ப்பிணி பெண்ணின் பாடலாகவோ எதுவும் இடம்பெறவில்லையே என்ற முத்துலிங்கத்தின் கேள்வியே புதிய கோணத்தைத் தருகிறது. அதற்கு ஹார்ட் தரும் பதில் இது: "சங்க காலத்தில் இன்று போல அன்றும் பழமையான சம்பிரதாயங்களையே கடைப்பிடித்தனர். ... கவிகள் சமூகம் ஏற்காத ஒன்றையே வர்ணித்தனர், இப்போதைய தமிழ் சினிமா போல.'

அவருடைய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை உருவாவதற்கு பாடுபட்டவர் ஹார்ட். 9 ஆண்டுகாலமாக அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.

இதில் இரண்டொரு "ஒரு பால்' எழுத்தாளர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருக்கிறார் முத்துலிங்கம். அதில் ஒருவர் ஷ்யாம் செல்வதுரை. "சினமன் கார்டன்' என்ற அவருடைய பரபரப்பான நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பித்திலும் பொருத்தமான திருக்குறளைக் கையாண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஒருவார்த்தையும் தெரியாது என்பது வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களுக்கேயான வேதனை. காம இலக்கியம் படைக்கும் இலங்கையைப் பூர்வீகமாகமாகக் கொண்ட மேரி ஆன் மோகன்ராஜ் என்பரை பேட்டி கண்டிருக்கிறார். அவருக்கும் தமிழ் மறந்தே போய்விட்டது.

மார்க்ரெட் அட்வூட், பிரிஸ்கி, எலெய்ன் பெய்லின், டேவிட் ஓவன், வார்ரென் கரியோ போன்ற பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மிகவும் எளிமையான கேள்விகள் மூலம் ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டுவருவது முத்துலிங்கத்தின் பாணியாக இருக்கிறது. உங்கள் சிறுவயது ஞாபகங்கள் என்ன? இப்போது என்ன எழுதுகிறீர்கள்? போன்ற கேள்வியைக் கேட்கிறார். அதே போல் நம் புதுமைப்பித்தன், பாரதி, நம்முடைய பழமொழி போன்றவற்றை அவர்களிடம் நினைவூட்டுகிறார். பெருமையாக இருக்கிறது.

இந்தப் பேட்டிகளில் (சற்றே) விலகி நிற்பது மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியின் பேட்டி. அந்தப் பெண்ணே ஒரு ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை இரண்டுநாளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்றுநாளில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று இவருக்கு விளங்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான். அதை பத்திரமாக பேண வேண்டும். 26 மைல் ஓட வேண்டுமானால் 30 மைலோ, 35 மைலோ ஓட வேண்டும் அப்போதுதான் மாரத்தானில் ஓடுவதற்குச் சுலமாக இருக்கும் என்பது ஜெனிவீவ் கருத்து.

வியப்பூட்டும் பெண். நிச்சயம் இந்த ஆண்டு மாரத்தானில் வெல்லப் போவது அவள்தான்.. அல்லது வெல்ல வேண்டியவள் அவள்தான்.

விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளைமுதல் தடைவிதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. இப்படி பலவிதங்களில் நம்மை பொறாமைப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆங்கில பாணியில் சிந்திக்கும் ஒரு தமிழர் என அவரை நினைத்தேன். பிறகு அதை மாற்றிக் கொண்டேன்.

அவருக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தில் "நீங்கள் பழந்தமிழ் ஆர்வம் கொண்ட ஓர் ஆங்கிலேயரைப் போல சிந்திக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தேன்.

"எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள், எனக்கு சிரிப்புதான் வருகிறது' என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவருடைய வெட்கமும் பொறாமையாகத்தான் இருக்கிறது.


வியத்தலும் இலமே

அ.முத்துலிங்கம்

காலச்சுவடு வெளியீடு.

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

என்னுடைய இரண்டு படங்கள்




இந்த இரண்டு படங்களில் ஒன்றில் என் புத்தகத்தை படிக்கிறார் மருத்துவர். இன்னொன்றில் என் தோள்மீது கை போட்டபடி விஜயகாந்த்.

பொறாமைப்பட வைக்கும் புத்தகம் - நூல்விமர்சனம்

தமிழ்மகன்


தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கருணாநிதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் படைப்பிலக்கியங்கள் மூலம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் படைப்புக்கும் பின்னணியில் ஏதோ நோக்கமும் கொள்கையும் இருந்தன. பக்தியை வளர்த்தார்கள், தேசியத்தை வளர்த்தார்கள், தமிழினத்தை வளர்த்தார்கள், மனித நேயத்தை வளர்த்தார்கள், கலையை வளர்த்தார்கள் போன்ற ஒன்றில் இவர்களில் பலர் பொருந்திவிடுகிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் தமிழைத் தக்க வைக்கிற வேலையைச் செய்தார்கள் என்பதும் பொருந்தும்.
ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி தமிழருக்கு அறிமுகம் செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, பிறமொழி இலக்கியங்களைத் திரட்டித் தந்த க.நா.சு. போன்ற பலர் இந்த மொழியின் சுறுசுறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
பல ஆங்கில எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர்கள் பலரை, அவர்களை நேர்காணல் செய்து அவர்கள் வார்த்தைகளாலேயே அவர்களை அறிமுகம் செய்யும் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் அ.முத்துலிங்கம். காலச்சுவடு வெளியீடான "வியத்தலும் இலமே' அந்த விதத்தில் தமிழில் புது முயற்சி. இதுவரை இத்தனை விஸ்தாரமாகச் செய்யப்படாத சாதனை.
இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ, அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால் முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், சிறுகதைக் கோட்பாடுகள், அவர்களுடைய படிப்பு ரசனை, அவர்களின் எழுத்து பாணி என்று இங்கு எழுதும் இளம் படைப்பாளிகளின் விருப்பத்தை உணர்ந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று எழுதியிருக்கிறார். இவ்வளவு பேரையும் நேரிலேயே சந்தித்திருக்கிறாரே எனப் பொறாமையாக இருக்கிறது.

"எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுத தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்' என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்பரவு பணியாளராக வேலை செய்தவர். எதற்காக பிரபலமான பின்னும் வேலை . செய்தீர்கள் என்ற கேள்விக்கு நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன் என்கிறார். அகில் சர்மாவோ "வாழ்வது ஒரு முறைதான். இப்போது எழுதவில்லை என்றால் வேறு எப்போது எழுதுவது' என்று பல லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்யும் வேலையை உதறிவிட்டு இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் எழுதியவர்.
""ஒரு எழுத்து ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான் திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ்.
இளம் எழுத்தாளர் நஸீகு அலி முதல் 80 களில் இருக்கும் ஆலீஸ் மன்றோ வரை பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிக்கான நேரம் கொடுத்துவிட்டோம் என்ற நியாயத்தில் மனைவியின் பிரசவ நேரத்தையும் பொறுத்துக் கொண்டு இயல்பாக பேசிய கிறிஸ் ஃபிலார்டி. வெறுப்பும் சலிப்புமாகப் பேசும் ஃப்ராங்க் மக்கோர்ட் எல்லோரையும் தேடித் தேடி பேட்டி கண்டிருக்கிறார்.
ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற சினுவ ஆச்சிபிக்கு பெரிய அளவில் விருது கெüரவங்கள் கிடைக்கவில்லை ஆனால் அவரைப் பார்த்து மலைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு மகத்தான கெüரவங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நஸீகு அலியிடம் கேட்கிறார். முப்பது பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதும் 28 வயதில் அவர் எழுதிய "திங்ஸ் ஃபால் அபார்ட்' என்ற முதல் நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரமிக்கிறார் நஸீகு. சினுவா அச்சுபி மீது அப்படியொரு மரியாதை. அவர் படிப்பதற்காக நஸீகு ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தாராம். படிக்க நேரமில்லை என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தாராம். பொக்கிஷம் போல அந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வருகிறாராம். அப்படி மதிக்கிறார்.
அதே போல் ஒரு எழுத்தாளரை மதிப்பதில் சிகரம் தொட்ட இன்னொரு எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. "நான் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையை படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்' என்கிறார் செடாரிஸ்.
ஆலிஸ்மன்றோவின் சிறுகதைகள் 40லிருந்து 70 பக்கங்கள் இருக்கும். இங்கே சிலர் அதை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்கிறார்கள். (பிப்.11}2008 நியூ யார்க்கர் இணைய இதழிலும் அவருடைய "ஃப்ரீ ராடிகல்' என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.)
சிறுகதையின் வடிவம் குறித்த அவர்களின் பார்வை, தரிசனம் அனைத்தும் நம்முடைய கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும்கூட பொருந்தி வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அது மனித வாழ்வின் பரந்துவிரிந்த பொதுத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.
கலிபோர்னியாவின் பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் (ட்ஹழ்ற்) சொல்லும் தமிழ் சாதிய நடைமுறைகள் ஆச்சர்யமான புதிய சந்தேகங்களை விதைக்கின்றன. ஆர்யர்களின் வருகைக்குப் பின்னர்தான் சாதி முறை ஏற்பட்டதென்றால் அது அவர்களின் சமூகத்தில் இல்லையே என்கிறார். அவர்களின் வருகைக்கு முன்பே இந்திய சமூகத்தில் சாதி முறை இருந்தது என்பதும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அந்த வர்ண பேதங்கள் வளர்ந்தற்குக் காரணம் அந்த வாழ்வுமுறை ஏற்கெனவே இருந்ததன் காரணத்தால்தான் என்பது அவருடைய கூற்று. ரஷ்யன், லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் என பூமிப் பந்தின் பிரபல மொழிகள் பலவற்றை அறிந்தவராக இருக்கிறார் ஜார்ஜ் எல் ஹார்ட். அவருடைய கருத்துகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாததாகவும் உள்ளது. வேதங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வர்ண பேதங்களுக்கான இலக்கணங்களும் சாதி ரீதியாக மனிதர்களை இழிவுபடுத்தியிருப்பதும் தெளிவாகிற அளவுக்கு பண்டைய தமிழ்நூல்களில் குறிப்படப்படவில்லை. தமிழ் சமூதாயத்தில் இப்படியொரு வாழ்வியல் முறை இருந்திருப்பின் அவை தமிழ்நூல்களில் வலியுறுத்தப்படாமல் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதும் கேள்வி.
களவு ஒழுக்கம் குறித்து அகப் பாடல்களில் வருகிறது. ஆனால் கர்ப்பமான பெண்கள் சம்பந்தமாகவோ, கர்ப்பிணி பெண்ணின் பாடலாகவோ எதுவும் இடம்பெறவில்லையே என்ற முத்துலிங்கத்தின் கேள்வியே புதிய கோணத்தைத் தருகிறது. அதற்கு ஹார்ட் தரும் பதில் இது: "சங்க காலத்தில் இன்று போல அன்றும் பழமையான சம்பிரதாயங்களையே கடைப்பிடித்தனர். ... கவிகள் சமூகம் ஏற்காத ஒன்றையே வர்ணித்தனர், இப்போதைய தமிழ் சினிமா போல.'
அவருடைய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை உருவாவதற்கு பாடுபட்டவர் ஹார்ட். 9 ஆண்டுகாலமாக அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.
இதில் இரண்டொரு "ஒரு பால்' எழுத்தாளர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருக்கிறார் முத்துலிங்கம். அதில் ஒருவர் ஷ்யாம் செல்வதுரை. "சினமன் கார்டன்' என்ற அவருடைய பரபரப்பான நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பித்திலும் பொருத்தமான திருக்குறளைக் கையாண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஒருவார்த்தையும் தெரியாது என்பது வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களுக்கேயான வேதனை. காம இலக்கியம் படைக்கும் இலங்கையைப் பூர்வீகமாகமாகக் கொண்ட மேரி ஆன் மோகன்ராஜ் என்பரை பேட்டி கண்டிருக்கிறார். அவருக்கும் தமிழ் மறந்தே போய்விட்டது.
மார்க்ரெட் அட்வூட், பிரிஸ்கி, எலெய்ன் பெய்லின், டேவிட் ஓவன், வார்ரென் கரியோ போன்ற பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மிகவும் எளிமையான கேள்விகள் மூலம் ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டுவருவது முத்துலிங்கத்தின் பாணியாக இருக்கிறது. உங்கள் சிறுவயது ஞாபகங்கள் என்ன? இப்போது என்ன எழுதுகிறீர்கள்? போன்ற கேள்வியைக் கேட்கிறார். அதே போல் நம் புதுமைப்பித்தன், பாரதி, நம்முடைய பழமொழி போன்றவற்றை அவர்களிடம் நினைவூட்டுகிறார். பெருமையாக இருக்கிறது.
இந்தப் பேட்டிகளில் (சற்றே) விலகி நிற்பது மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியின் பேட்டி. அந்தப் பெண்ணே ஒரு ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை இரண்டுநாளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்றுநாளில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று இவருக்கு விளங்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.
நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான். அதை பத்திரமாக பேண வேண்டும். 26 மைல் ஓட வேண்டுமானால் 30 மைலோ, 35 மைலோ ஓட வேண்டும் அப்போதுதான் மாரத்தானில் ஓடுவதற்குச் சுலமாக இருக்கும் என்பது ஜெனிவீவ் கருத்து.
வியப்பூட்டும் பெண். நிச்சயம் இந்த ஆண்டு மாரத்தானில் வெல்லப் போவது அவள்தான்.. அல்லது வெல்ல வேண்டியவள் அவள்தான்.
விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளைமுதல் தடைவிதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. இப்படி பலவிதங்களில் நம்மை பொறாமைப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆங்கில பாணியில் சிந்திக்கும் ஒரு தமிழர் என அவரை நினைத்தேன். பிறகு அதை மாற்றிக் கொண்டேன்.
அவருக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தில் "நீங்கள் பழந்தமிழ் ஆர்வம் கொண்ட ஓர் ஆங்கிலேயரைப் போல சிந்திக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தேன்.
"எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள், எனக்கு சிரிப்புதான் வருகிறது' என்று பதில் அனுப்பியிருந்தார்.
அவருடைய வெட்கமும் பொறாமையாகத்தான் இருக்கிறது.

வியத்தலும் இலமே
அ.முத்துலிங்கம்
காலச்சுவடு வெளியீடு.

புதன், ஏப்ரல் 02, 2008

கடவுள் தொகை - சிறுகதை

தமிழ்மகன்

"கடவுள் இருக்கிறாராப்பா?'' என்றான் மகன்.

பொதுவாக இந்த வயசில் இப்படியான எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில்தான் எனக்கும் அப்படியான சந்தேகம் எழுந்தது.

பால் போடாமல் போய்விட்ட பால்காரனிடம் சண்டை போட்டுவிட்டு அப்படியே இன்றைக்கான பாலை வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியின் எரிச்சல் இந்தக் கடவுள் சர்ச்சையால் மேலும் அதிகமாகும் என்று தோன்றியது. பையன் கேட்ட கேள்விக்கும் நான் அதற்கு பதில் அளிப்பதற்குத் தயாராவதையும் அவள் கவனித்துவிட்டாள். அந்த கவனிப்பில் "ஆரம்பிச்சிட்டீங்களா?' என்ற முறைப்பும் இருந்தது.

"பால் வாங்கிட்டு வரலாம் வர்றீயா?'' - பையனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

"கடவுள் இப்ப என்னப்பா செய்வாரு?'' என்றான் ஆர்வமாக.

"நிச்சயமா பால் வாங்கிட்டு வர போய்க்கிட்டு இருக்க மாட்டாரு'' சிரித்தான்.

"எப்ப கேட்டாலும் கடவுள் பத்தி சரியாகவே சொல்ல மாட்டேங்கிறியேப்பா... அவர் காபி சாப்பிடுவாரா?'' குரலில் அலுப்பு தெரிந்தது.

"எனக்கும் சரியா தெரியலைப்பா... காபி சாப்பிடுவாரா? வெண் பொங்கல் சாப்பிடுவாரா? பிட்சா சாப்பிடுவாரான்னுலாம் கேட்கக் கூடாது. சாமியை நீ உன்னை மாதிரி ஸ்கூல் போய்ட்டு வர்றவர்னு நினைச்சியா? அவரை நம்ம ஸ்கேல்ல அளக்கக் கூடாது... புரியுதா? அது நம்ம கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது''

"எல்லாரும் கும்பிட்றாங்களே?.. ''

"நீயும் கும்பிடேம்பா''

"எதுக்கு கும்பிடணும்?''

"நல்லா படிப்பு வரணும்னு கும்பிடு''

"அப்ப படிக்க வேண்டியதில்லையா?''

பால்காரனிடம் விவரத்தைச் சொல்லி பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு திரும்ப ஆரம்பித்தோம்.

"ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறியேப்பா''

"என்னடா?''

"சாமி கும்பிட்டா பாஸ் ஆகிட முடியுமா? படிக்க வேண்டியதில்லையா?''

"நம்ம முயற்சியும் இருக்கணும். கடவுள் நம்பிக்கையும் இருக்கணும்''

"சாமி கும்பிடாமயே நல்லா படிச்சா பாஸôக முடியாதா?''

"பெசாம வாடா... இதப்பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்றதுக்கு இன்னும் அனுபவம் வேணும்.''

பையன் போட்ட அதட்டல் காரணமாகவோ, பதிலில் சற்றே சமாதானமாகியோ அமைதியாக வந்தான். அடுத்து அவன் ஏதோ யோசித்து கேள்வி ஆரம்பிக்கும் போது நல்லவேளையாக வீடு வந்துவிட்டது.

"அப்பாவும் புள்ளையும் இப்படி அன்ன நடை போட்டுகிட்டு வந்தா நேரமாகுதில்ல'' என்று மனைவிகாட்டிய வெறுப்பில் அவனும் அல்ஜீப்ரா படிக்கப் போய்விட்டான். ஏதோ அவள் போடுகிற இப்படியான அதட்டிலில்தான் குடும்பமே நடப்பதாக எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இல்லாவிட்டால் நானும் குழம்பி, குடும்பத்தையும் குழப்பி விடுவேனோ என்று பயம் வந்துவிட்டது எனக்கு.

எதிலும் தீர்மானமான அபிப்ராயம் ஏற்படுவதில்லை. எது நல்லது என்பதில் ஏகப்பட்ட குழப்பம். இருக்கிறதா இல்லையா குழப்பம். வேண்டுமா வேண்டாமா என்பதில் குழப்பம். அதிகமா கம்மியா என்பதில் குழப்பம்.

போன வாரம் இருந்திருந்து சட்டை எடுக்கப் போய் எந்த நிறம் எடுப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்.

வெளிர் நீல சட்டை விரும்புபவர்கள் உண்மையை நேசிப்பவர்களாக இருப்பார்கள் என்று படித்திருந்ததால் நான் அந்த நிறத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன். மனைவியோ "அழுக்குத் தாளாது வீட்டில மஞ்சள் கலர்ல தண்ணி வருது... ஒரு தடவை துவைத்ததும் இந்தக் கலரே இருக்காது. பெசாம நம்ம தண்ணி ஏத்தா மாதிரி செம்மண் கலர்ல எடுத்துக்கங்க'' என்றாள்.

அவள் சொல்வதில் நியாயம் இருந்தது. அதிலும் வெளிர் நீலத்தில் செம்மண் நிறமும் கலந்து என்னை வேறொரு குணவானாகக் காட்டுவதையும் தவிர்க்கலாம். செம்மண் நிறம் என்பது ஏறத்தாழ நரேந்திர மோடியை ஞாபகப்படுத்த, "இன்னும் கொஞ்சம் டார்க்கா இருந்தா நல்லது'' என்றேன்.

அவன் சிவப்பு நிறத்தை எடுத்துப் போட்டான். அது கம்யூனிஸ்ட் அடையாளமாக இருந்தது. இது பரவாயில்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் தோரணையில் அதை நான் என் மீது போர்த்திப் பார்த்த போது, "இதையா எடுத்துக்கப் போறீங்க?'' என்ற மனைவியின் கேள்வியில் எதிர்ப்பு வெளிப்பட்டது.

"ஏதோ ஒண்ணு...'' எந்தவித நோக்கமும் இல்லாமல்தான் இதை நான் தேர்வு செய்தேன் என்பதைப் போல் அலட்சியமாகச் சொன்னேன்.

"ஏதோ ஒண்ணுனு சொல்லாதீங்க... காசு என்ன மரத்திலா காய்க்குது?... ஆள் பாதி... ஆடை பாதி. ட்ரஸ்ஸýதான் முக்கியம். உங்க நிறத்துக்கு ஏத்ததா எடுத்துக்கங்க'' ஆடைவிஷயத்தில் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது என்று நானே ஒரு கணம் வருத்தப்பட்டேன். அவளுடைய பேச்சில் பொதிந்திருந்த அக்கறைதான் அதற்குக் காரணம்.
கடைக்காரன் வேறொரு உத்தி சொன்னான். "பேண்டுக்கு மேட்சா எடுத்துக்கங்க சார்...''

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏனென்றால் நாங்கள் எடுக்கப் போனது ஒரே ஒரு சட்டை மட்டுமே. வெறும் சர்ட் மட்டும் எடுப்பது நாகரீகமற்ற செயலோ? இப்போது இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது. தரமான துணியாக இல்லை என்று சாக்கு போக்கு சொல்லி வெளியேறி விடலாமா? இல்லை போனால் போகிறது என்று ஒரு பேண்டையும் எடுத்துவிடலாமா? உண்மையில் நம்மிடம் உள்ள பேண்டுகள் எல்லாம் கேசவன் கல்யாணத்துக்கு முந்தையவை. கடைசியாக கேசவன் கல்யாணத்துத்தில்தான் சம்பந்தி சீர் என்று எனக்கும் ஒரு பேண்ட் சர்ட் எடுத்துத் தந்தார்கள். கேசவனுக்குக் கல்யாணமாகி என்ன ஐந்து வருஷம் இருக்குமா? அதற்கு மேலேயே இருக்கலாம். அவனோட பையனே இப்ப மூணாவது படிக்கிறானே... அஞ்சு வயசுல ஒண்ணாவது சேர்ந்திருந்தாக்கா இப்ப... எட்டு வயசு... இப்பல்லாம் நாலு வயசிலயே ஒண்ணாவது போட்டுட்றாங்க. என்னோட கணக்கு வாத்தியாருக்கு சர்க்கஸ் புலினு பேரு. எப்பப் பார்த்தாலும் ஆ..ஆ...ஆ...வ்வ்வ் கொட்டாவி விடுவாரு. சர்க்கஸ்ல புலி வாயைத் திறந்து காட்டச் சொல்லி ரிங் மாஸ்டர் குத்தும் போது அப்படித்தான் திறக்கும். பாவம் புலிகள். முண்டந்துறைல ஒரு தரம்...

"பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? ஏதாவது ஒரு கலர் எடுங்க''
நான் சட்டென்று பச்சை நிறத்தில் பெரிய பெரிய கட்டமாகப் போட்ட சட்டையைத் தேர்ந்தெடுத்தேன்.

"இது என்ன லுங்கி மாதிரி''

நமக்கு சட்டை எடுக்கக்கூடத் தெரியவில்லையே என்ற வருத்தமும் மனைவி என்னை மிகவும் ஆட்சி செய்வதாக ஏற்பட்ட எரிச்சலும் சேர்ந்து கொண்டது. இத்தகைய உணர்வுகளால் நான் மேலும் அமைதியாகிவிட்டேன்.

"இதப் போட்டுக்கங்க'' கருப்புச் சட்டையில் கிளிப்பச்சை நிறத்தில் பூப் போட்ட சட்டையை எடுத்துத் தீர்மானமாக என் முன் நீட்டினாள். அது மாதிரி சட்டையை நான் என் வாழ்நாளில் போட்டதே இல்லை. நமக்குப் பழக்கமே இல்லாத சட்டைப் பொருந்துமா என்று தெரியவில்லை. இப்படித் திடீர் என்று வித்தியாசப்படுத்திக் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றியது.

இவ்வளவு கதையும் எதற்காகச் சொல்கிறேன் என்றால் எனக்கு எதிலுமே தீர்மானமான முடிவுகள் இருந்ததில்லை., கடவுள் உட்பட.
சட்டையைத் தேர்ந்தெடுப்பதிலாவது ஏதோ ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கடவுள் விஷயத்தில் அவர் இல்லாமலேயே இருப்பதிலும் சங்கடம் எதுவும் இல்லாததால் சட்டையைவிட மேலும் ஒரு வாய்ப்பு அதிகரித்துவிட்டது.

மனித நாகரீகத்தில் மனிதர்களைவிட அதிகமான கடவுள் தொகை இருந்திருப்பதாகப் படிக்கிறோம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் விதம்விதமான கடவுள்கள். ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு கடவுள். கொஞ்சமாவது மனிதன் மனசாட்சிக்குப் பயப்படுகிறான் என்றால் அது கடவுள் என்ற சித்தாந்தம் இருப்பதால்தான் என்றார் என் நண்பர். அப்படியானால் அப்படி ஒரு சித்தாந்தம் இருப்பது நல்லதுதான் என்று நான் முடிவெடுத்திருந்த நேரத்தில்தான் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் எங்கள் கடவுளே சிறந்தவர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு குண்டு வெடிப்புகளும் ரயில் எரிப்புகளும் நடந்தது. கடவுள் சித்தாந்தம் இருப்பதால்தான் வன்முறைகள் நடப்பதாக நான் நண்பரிடம் வாதிட்டேன்.

"இது பரவாயில்லை. மதம் மட்டும் மக்களை இப்படி ஆவேசமாகக் கட்டி வைக்கவில்லையென்றால் பொம்பளைக்காகவும் பொருளுக்காகவும் அடிச்சுக்கிட்டு மனித இனமே அழிஞ்சு போயிருக்கும். பரவால்ல சார்.. ஒரு பாபர் மசூதி... இரட்டை கோபுரம்னு சின்னச் சின்ன விஷயத்தோடு முடிஞ்சிடுது ...'' என்றார். சரி கடவுள் சித்தாந்தமும் ஒரு பக்கம் இருந்துட்டுதான் போகட்டுமே நமக்கென்ன என்று விட்டுவிட்டேன்.

இப்போது மகன் ஆரம்பிக்கிறான்.

இரவு படுக்க வந்த பிறகு "கடவுள் தூங்குவாரா? அவருக்கும் கனவு வருமா? அப்துல் கலாம் கனவு காண சொல்றாரே... கடவுளும் காணுவாரா?''

"மனிதர்கள் மாதிரியே கடவுளைப் பொருத்திப் பார்க்கக் கூடாதுனு சொன்னேனா இல்லையா''

"பின்னே?''

"அவருக்கு உருவமில்லை, பெயரும் இல்லை. அவர்னு சொல்றதே இல்லை. அதாவது அவர் என்பதே இல்லை. ஆணல்லன், பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்னு பாடி வெச்சிருக்காங்க''

"பார்க்க முடியுமா?''

"கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்... பார்த்தவர்கள் சொல்வதில்லை... பார்த்ததாகச் சொல்றவங்க பார்த்ததே இல்லை''

"அதனாலதான் நீ பார்த்ததா சொல்ல மாட்டறீயா?''

"......''

இந்த முறையும் மனைவிதான் என்னைக் காப்பாற்றினாள். "ஏய்... பெசாம தூங்குங்க... குழந்தைங்க குழந்தைங்களா பேசணும். முன்னேர் சரியா போனா பின்னாடி வர்ற ஏரும் சரியா வரும்''

அதன் பிறகு யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் தூங்கிவிட்டோம் என்று சொல்வதற்கில்லை. மகன் வெகு நேரம் புரண்டு கொண்டிருந்தான். குழந்தையை நாம் சரியாக வளர்க்கத் தெரியவில்லையோ என்று கவலையாக இருந்தது.

அவன் குட்டி சாமியாராகவோ, குட்டி நக்ஸலைட்டாகவோ ஆவது பொருத்தமில்லாததாக இருந்தது.

பத்தாவதில் நல்ல மார்க் எடுத்தால்தான் ப்ளஸ் ஒன் சேர்த்துக் கொள்வேன் என்று பள்ளியின் தாளாளர் சர்க்குலர் அனுப்பியிருந்தார்.

தினமும் பிள்ளையார் பூஜை செய்யச் சொல்லி, திருப்பாவை முப்பதும் ஒப்பிக்கச் சொல்லலாமா? மகன் மீது கடவுளைத் திணிப்பது சரியா? சின்னக் குழந்தையை இப்படி இம்சைக்கு ஆளாக்கிவிட்டோமே... மற்ற குழந்தைகள் மாதிரி கிரிக்கெட் பேட் கேட்டு அடம்பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நானும் புரண்டு கொண்டிருந்தேன்.

காலையில்தான் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த என் மனைவிதான் இரவெல்லாம் ஆடாமல் அசையாமல் மனதுக்குள்ளாகவே புரண்டு கொண்டிருந்தது புரிந்தது.

"என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க மனசுல... இதென்ன வீடா மடமா?... ராத்திரியெல்லாம் குழந்தைகிட்ட என்ன பேசறீங்க... பைத்தியக்காரனாக்கிடுவீங்க போலருக்கே... நாளையிலிருந்து நீங்கதான் குழாய்ல போய் தண்ணி புடிச்சுகிட்டு வரணும். ரேஷன் கடைக்குப் போகணும்... கரெண்ட் பில் கட்டணும்... காய்கறி வாங்கியார்றது... கேபிள் டி.வி. சரியா தெரியலைனா போய் சொல்லிட்டு வர்றது... ஒட்ரை அடிக்கிறது எல்லாம் நீங்க ரெண்டு பேரும்தான் செய்யணும்... சும்மா இருந்து இருந்து கொழுப்பேறிப் போச்சி ரெண்டு பேருக்கும். கடவுள் ஆராய்ச்சி பண்றீங்களா? கடவுள் ஆராய்ச்சி...'' ... பொரிந்து தள்ளினாள்.

நான் கிணற்றில் இருந்து தண்ணீர் சேந்துகிற வேலையைச் செய்தேன். அவன் பிஸிக்ஸ் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பள்ளிக் கிளம்பியவனின் நெற்றியில் விபூதி வைத்து "கண்டதையும் நினைச்சு மனசைக் குழப்பிக்காதடா... நல்லா படி'' என்று தலைவாரிவிட்டாள்,

நான் அவன் பேனாவில் இங்க் இருப்பது தெரியாமல் மேலும் இங்க் ஊற்றி... தரையைத் துடைக்கத் துணியைத் தேடினேன்.

"நான் துடைச்சுக்கிறேன் விடுங்க... இந்த மாதிரி விதண்டா வாதம் பேசிக்கிட்டிருந்தா நான் எங்க போவேன்'' என்றாள்.

அவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு "நல்லா படிப்பா'' என்றேன். என் குரலே எனக்கு வேறு மாதிரி கேட்டது. அவன் என்னை ஏற இறங்க பார்த்தான்.

"சரிப்பா''

"இப்போதைக்குக் கடவுள் இருக்கார்னு வெச்சுக்கோ. அதுக்கு மேல கேட்காதே... யோசிக்காதே''

பரிதாபமாகப் பார்த்தான்.

"நல்ல மார்க் எடுத்தாத்தான். நல்ல வேலை கிடைக்கும். நீ சம்பாரிச்சாத்தான் வீட்டு மேல வாங்கின கடனை அடைக்க முடியும். அம்மாவுக்கு அந்தக் கஷ்டம்தான்''

"சரிப்பா'' என்று பள்ளிக்குள் நுழைந்தான். குழந்தையின் கழுத்தில் நுகத்தடி சுமத்திய வலி.
தெருமுனை முருகனுக்குச் சந்தனாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்ணீர் வந்தது. சுலபத்தில் அடக்க முடியவில்லை.


tamilmagan2000@gmail.com

புதன், மார்ச் 19, 2008

இரண்டு கடிதங்கள்- சிறுகதை

தமிழ்மகன்

"என்ன அண்ணாச்சி படிப்புல மூழ்கிட்டாப்ல இருக்கு. பரீட்சையா எழுதப் போறீரோ?''

அண்ணாச்சி படித்துக் கொண்டிருந்த பக்கத்தின் முனையை ராக்கெட் செய்வது மாதிரி மடித்துவிட்டு "எல்லா உன்னாலதான். நேத்தே சப்ளை பண்றேன்னு சொல்லிப்புட்டு இன்னமும் ரெடி பண்ணித்தராம இருக்கே. எந்தா நேரம் உம்மூஞ்சை பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கறது? ஏதாவது பேப்பர் வாங்கியாந்து படிக்கலாம்னு போனா ஒருத்தன் ரோட்டோரத்தில பழைய பொஸ்தகமா போட்டு ஒக்காந்திருந்தான். பத்து ரூபானு ஒண்ணு புடிச்சாந்தே''

"என்ன பொஸ்தகம் அது?''

இப்படிக் கேட்டதும்தான் படிக்கும் புத்தகத்தின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டு, புத்தகத்தை அப்படியே கவுத்துப் போட்டு

''ம்... பாற்கடலாமில்ல?... லா.ச.ரா.. என்று புத்தகத்தை எழுதியவரின் பெயரையும் சேர்த்தே படித்தார். எழுதினவம்பேரா இருக்கும். சீக்கிரம் கட்டுய்யா.. பத்து லென்த் ஆறங்குலம் பைப்பு, இம்ப்ளேர் நெட்டு 15, ஸிக்ஸ்டீன் எம்.எம். போல்டு- நெட்டு...''

"அண்ணாச்சி எத்தனை வாட்டி சொல்லுவே.. எல்லாம் பை நிமிட்ல ரெடியாய்டும். நீ அப்பிடி படிச்சுகிட்டே இரு.. டீ சொல்றேன்''

"ஆமா... செந்நீரா ஆறு டீ யாச்சு'' அலுத்தபடி புத்தகத்தில் ஊன்ற ஆரம்பித்தார். கதை என்னமோ அவரை ஆர்வமாகத்தான் ஈர்த்தது. ஒரு பக்கம் படிப்பதற்குள் டீயும் மசால் வடையும் வரவே, அதைச் சாப்பிட்டுவிட்டு எண்ணெய் கையை எங்கே துடைப்பது என்று உத்தேசிப்பதற்குள் "அண்ணாச்சி ரெடி'' என்றான் கடைக்காரப் பையன். வண்டிக்காரனைப் பிடித்து பூக்கடையில் இருந்து தம் முகப்பேர் கடைக்கு பேரம் பேசி சாமான் "செட்'டையெல்லாம் ஏற்றிவிட்டு, இவரும் ஒரு பஸ்ûஸப் பிடித்து அவனுக்கு முன்னால் முகப்பேர் போய் முன்கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஓடிக் கொண்டிருந்தபோதுதான் புத்தகத்தைக் கடையிலேயே வைத்து விட்டு வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு ஒரு நடை ஓடிப் போய் புத்தகத்தை எடுத்துவந்து விடலாமா என்ற எண்ணமும் அட அடுத்த வாரம் வரும்போது எடுத்துக்கலாம் என்ற எண்ணமும் குழப்பிக் கொண்டிருக்கையில் பஸ் வந்து விட்டது.

கடைக்குப் போன கையோடு "ஏந் தம்பி என்னோட பொஸ்தகத்தை அங்கயே வெச்சுட்டு வந்துட்டேன். எடுத்து வெய்யி. அடுத்தவாரம் வர்றப்ப வாங்கிக்கிறேன்'' என்றார்.

"அண்ணாச்சி புக் எதுவும் இங்க இல்லையே... நான்கூட நீங்க படிச்சுட்டா நான் கொஞ்சம் படிக்கலாமே நினைச்சேன். கோட்டைவுட்டீங்களா? எவன் அடிச்சுட்டுப் போயிட்டான்னு தெர்லயே''

"நல்லா இருந்ததே கதைனு பார்த்தேன். முடிக்கிற நேரத்தில... அந்த பொஸ்தகம் பேரு ஞாபகம் இருக்கா உனக்கு?''

"ம்ம்.. ஞாபகம் இல்லையே அண்ணாச்சி''

"எழுதின ஆளு பேரு?''

"நீதானே வெச்சிருந்தே. நா கையாலும் தொடலையே.. பேர் மாதிரி இல்லையே. ஏதோ இன்சில் மாதிரியில்ல படிச்ச... ரா'னு முடிஞ்சது மாதிரி ஞாபகம்.''

"ஆமாமாம்.. கண்டுபிடிச்சுடலாம்விடு.. பொஸ்தக கடைல கேட்டுப் பாக்றேன்... எல்லாம் ஒழுங்கா வந்து எரக்கிட்டுப் போய்ட்டான்.. லெதர் வாஸர் வாங்காம வந்துட்டேன். சரி அடுத்த வாரம் வர்றேன்.''

அண்ணாச்சிக்கு கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதுகூட அதை அப்படி நேசித்துப் படிக்கவில்லை. இனி அது நம்மிடம் இல்லை என்றதும் கூட்டுக் குடும்பத்தில் மாட்டிக் கொண்டு ஒரு பெண் படும் வேதனையை நினைத்து கொஞ்சம் வருந்தவும் செய்தார். "இன்னும் சாந்தி முகூர்த்தம்கூட முடியலையே... சும்மா தெரிஞ்சோ தெரியாமலோ இப்படியும் அப்படியும் இடிச்சுக்கிட்டதுதான் புருஷங்கிட்ட அவ கண்ட சுகம். ஆபிஸ் விஷயமா புருஷன் வெளியூர் போய்ட்றான். தலைதீபாவளிக்குக் கூட வீட்ல இருக்க முடியல அவனால. மாமியார்காரி என்னடான்னா கிணத்துத் தண்ணிய சமுத்திரமா அடிச்சுக்கிட்டுப் போய்டப் போகுதுங்கிறா. ஐயருவூட்டுக் கதை.' கடைசியில் அந்தக் கதை என்னாச்சு என்ற முடிவை யாராவது சொல்லிவிட்டால்கூட போதும் என்று இருந்தது. அவருக்கிருந்த நட்பு வட்டாரத்தில் இதைப் பற்றி பேசவும் முடியாது. எல்லாம் இரும்பு வியாபாரி, சிமெண்ட் வியாபாரி.

மறுநாள் திருமங்கலம் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும்போது `என்.சி.பி.எச். புத்தகத் திருவிழா' என்று புத்தகக் கடையைப் பார்த்தார். ரொம்ப நாளாக அது அங்கு இருந்த தடயம் அவருக்குப் பதிவாகியிருந்தாலும் ஆச்சர்யமாகப் பார்த்தார். புல்லட்டை நிறுத்திவிட்டு உள்ளே போய் பார்த்தார். அவர் படித்த புத்தகத்தின் அங்க அடையாளங்களோடு ஒரு புத்தகமும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதே மாதிரி சாயலில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அதை எதையும் வாங்கிவிட்டு புரியுமோ, புரியாதோ என்று பயந்தார்.

"என்ன ஸôர் வேணும்?'' என்றார் கடைச் சிப்பந்தி.

"எனக்கு ஒரு புக் வேணும். அதுதான் இங்க இருக்கான்னு பாக்கேன்''

"என்ன புக்கு பேர் சொல்லுங்க''

"அதைத்தானே மறந்துட்டு முழிக்கேன்''

"தமிழ் புக்குதானே?''

"நா வேறென்னத்த கண்டேன்?''

"எழுதினவர் யார்னு...?''

"ஏதோ.. ரா'னு முடிஞ்சாப்ல ஞாவகம் அவர் பேரு''

"ஓ... அவர்தா?.. இருக்கு.. இருக்கு'' என்று அவர் இரண்டு அடுக்குத் தள்ளி ஒரு புத்தகத்தை எடுத்துவந்தார்.

"சேகுவேரா கடிதங்கள்... இதில்லையே தம்பி. அந்த புக்கும் லெட்டர் மாதிரிதான் எளுதியிருந்தது... ஆனா''

"கடிதம்னா இதுதான். ரா'ல முடியுதுன்னா இது தவிர கி.ரா. கடிதங்கள்னு ஒரு புக் இருக்கு பாக்றீங்களா?''

"இல்ல வேணாம். இதையே பில் போடுங்க. கேட்டதுக்கு ஆசையா கொண்டாந்து காம்பிச்சீங்க..''

"சேகுவேரா பத்தி நிறைய பப்ளீஷர் போட்டிருக்காங்க. அதனால நீங்க இவரோட வேற ஏதாவது புக்கை பார்த்திருப்பீங்க. இதுவும் பிரமாதமான புக். நெஞ்சை உருக்கிடும்.''

"அதேதான். நெஞ்சை உருக்கிறாப்லதான் இருந்துச்சு அதுவும். அதான் தேடி வந்தேன். சரி குடுங்க. இதுவும் அவர் எழுதினதா இருந்தா சந்தோஷம்தான்''
பில் போட்டு புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். வெளியே வந்ததும் செüந்திரபாண்டி புல்லட்டில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்து முகத்தை மூடிக் கொண்டார். "தலைவரு புக்கெல்லாம் வாங்கி படிக்கிறார்ப்பா' என்று பரிகாசம் செய்வான்.

இரவு சாப்பிட்டு முடித்து வெத்தலை பாக்கும் சார்மினார் சிகரெட்டுமாக மாடிக்கு வந்து புத்தகத்தைப் பிரித்தார். படிக்கப் படிக்க இது வேறு ஏதோ சங்கதி என்று புரிந்தது. இது ஏதோ வெளிநாட்டில் நடந்த போர்கள், புரட்சிகள் என்று போனது. பொண்டாட்டி புள்ளை குட்டியைப் பார்க்காம காட்டிலும் மேட்டிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தன் தம் குழந்தைகளுக்குக் கடிதம் எழுதறாப்லலாம் இருந்தது. குளிர்ல காட்டிலும் மழையிலும் துப்பாக்கியைத் தூக்கிகிட்டுப் போறானுங்க. யார்கிட்ட சண்டைக்குப் போறாங்க. சண்டை போட்டுட்டு என்ன பண்ணப் போறாங்க ஒண்ணும் புரியல. ஆனா லட்சிய வெறி. குதிரை கறி சாப்பிட்டது பத்தியெல்லாம் எழுதியிருந்தான். விவசாயிங்களுக்கு அதுதான் எல்லாம். அதை அடிச்சு சாப்பிடணும்னா முடியுமா? சில பேர் சாப்பிட மாட்றாங்க. அந்த ரா வேற இந்த ரா வேற. அவரு மோர்ஞ்சாதம். இது குதிரைக் கறி. அது வேற லெட்டரு... இது வேற லெட்டரு.
சிமெணட் தட்டுப் பாடுபற்றியும் டி.எம்.டி. கம்பிகளின் விலையேற்றம் குறித்தும் தினமானி நாளிதழ் அவ்வப்போது கட்டுரை வெளியிடுவதால் அண்ணாச்சி அந்த நாளிதழை வாங்க ஆரம்பித்திருந்தார். அதில் இந்தக் கட்டிடம் சம்பந்தமான சமாசாரங்கள் தவிர வேறு சில துறைகளையும் தொட்டுச் சென்றனர். அதைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்தாளர் தம் பேட்டியில் சு.ரா., கு.ப.ரா., லா.ச.ரா., கி.ரா. போன்ற எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். தாம் படித்த பொஸ்தகத்தின் எழுத்தாளர் இரண்டு எழுத்துக்களுக்கு மேல் உள்ளவராக நன்றாக ஞாபகம் இருந்ததால், சு.ரா., கி.ரா இருவரையும் நீக்கிவிட்டு கு.ப.ரா., லா.ச.ரா. இருவர் மீதும் கவனத்தைக் குவித்தார். கடையில் வேறு யாரும் இல்லை. துணிச்சலாக தினமானிக்கு போன் போட்டார்.

போனை எடுத்தவரிடம் "கு.ப.ரா., லா.ச.ரா. போன் நம்பர் கிடைக்குமா ஸôர்'' என்றார்.

மறுமுனையில் ரிஸீவரை சரியாக மூடாமலேயே "கழுத்தறுப்புங்க'' என்பது கேட்டது. "எதுக்கு ஸôர் அவங்க நம்பரு?''

"அவங்ககிட்ட ஒரு டவுட் கேக்கணும்''

"அவங்க ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்க ஸôர்''

கடையில் அடிபம்பு வாஸர் இருக்கா என்று கேட்டு ஒரு பெண்மணி வந்து நின்றாள். "இருங்கம்மா... தர்றேன்... இல்ல ஸôர் இங்க. இந்த ரெண்டு பேர்ல ஐயர் வூட்டு கதை எளுதர்து யாரு ஸôர். அதான் என் டவுட்டு.''

"ரெண்டு பேருமே ஐயர் கதை எழுதறவங்கதான்'' சொன்ன வேகத்தில் ரிஸீவரை வைத்துவிட்டார்கள்.

அண்ணாச்சியும் ரிஸிவரை வைத்துவிட்டு "சொல்லுமா'' என்றார் பெண்மணியிடம்.

"ஐயர் கதை எழுதறவர்னு சொன்னீங்களே என்னது? சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் எல்லாமே ஐயர் கதை எழுதியிருக்கா. என்ன விஷயம்? சொல்லுங்களேன், தெரிஞ்சா சொல்றேன்''

அண்ணாச்சி தயங்கி அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஐயமாரு வூட்டுப் பொண்ணு போலதான் இருந்தது.

"ஒரு பொண்ணு தம் புருஷனுக்கு லெட்டர் எழுதறா. அது ஒரு கூட்டுக் குடும்பம். புருஷனும் பொஞ்சாதியும் இப்பத்தான் கல்யாணமானவங்க. இன்னும் சரியா பேசக்கூட இல்ல. புரிஞ்சுதுங்களா... தீபாவளி... தல தீபாவளி. ஆனா புருஷன் வேலை விஷயமா வெளியூர் போயிட்றான். இப்பிடி போகுது கதை.''

"பாற்கடல்னா அது?''

"ஆமாம்மா... அதேதான். பாதிக் கதை படிச்சேன். கடைசில என்னாச்சுனு தெரிஞ்சுக்கலாம்னு''

"அதுவா? அதான் தலைப்பிலயே சொல்லிட்டாரே.. பாற்கடல்னு. குடும்பம்னா அதில ஆலகால விஷமும் இருக்கும், அமிர்தமும் இருக்கும்னு முடிச்சுட்டார்.''

"ஐய்யய்யோ.. அப்பிடியா?'' அதிர்ந்தார் அண்ணாச்சி.

கடைப்பையன் வந்து அடிபம்பு வாஷரை எடுத்துக் கொடுத்து காசை வாங்கி கல்லாவில் போட்டான். அந்தப் பெண்மணி சற்றே அகன்றதும் "பஸ்ல ஜன்னலோரத்தில எப்பவும் ஒரு பொஸ்தகம் படிச்சுக்கிட்டு போவும் இந்த அக்கா. அவங்க வூட்டுக்காரு துபாய்ல வேலை செய்றாரு'' என்றான் பையன்.

"அடக் கொடுமையே இந்தப் பொண்ணோட நிஜக் கதைதான் போலருக்கு'' என்று கதைமுடிவு தெரிந்த திருப்தியில் சேகுவேரா கடிதங்களைத் தொடையில் தட்டி படிக்க ஆரம்பித்தார் அண்ணாச்சி.

புதன், மார்ச் 12, 2008

சிறுகதை: அமரர் சுஜாதா


தமிழ்மகன்


இறந்து போனவரிடமிருந்து இன்று எனக்கொரு இ மெயில் வந்திருந்தது. அதுவும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து. முதல்கட்டமாக பேரதிர்ச்சிக்கு ஆட்பட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிர்ச்சியும் பயமும் அடைவது மட்டும்தான் இதைப் பற்றி ஆராய்வதற்கான முதல்படியாக இருந்தது. பேசாமல் சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். அப்படி செயலிழந்து இருப்பது ஏன் என்று எனக்குத் தெரிந்தது. மூளையின் செயல்பாடுகள்பற்றி "தலைமைச் செயலகம்' என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருந்த புத்தகத்தில்தான் அதைப் பற்றியும் படித்திருந்தேன். மூளைக்குச் செய்திகளைக் கடத்தும் ஆக்ஸôன்கள், நியூரான்கள் பற்றியது அது. செய்திகளை எடுத்துச் செல்லும் ஆக்ஸôன்கள் அறுந்துவிடுவதால்தான் அதிர்ச்சி எற்படும் நேரங்களில் நாம் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நிற்கிறோம் என்று அவர் எழுதியிருந்தார். அறுந்த தொடர்பு இணைகிறவரை அமைதியாக இருப்போம் என்று காத்திருந்தேன்.

நிதானமாக சுதாரிப்பு ஏற்படுவதை உணர்ந்தேன்.

இறந்து போனவர்கள் மெயில் அனுப்பும் வசதி எதையும் பில்கேட்ஸ் ஏற்படுத்தித் தந்ததாகக் கேள்விப்படவில்லை. பிறகு வேறு என்ன சாத்தியக் கூறுகள் இருக்க முடியும் என்று யோசித்தேன்.
எதையும் விஞ்ஞானபூர்வமாக அணுகிய மனிதரிடமிருந்து இப்படி ஒரு அமானுஷ்ய நிகழ்வா என்ற கிளைச் சிந்தனை வேறு.
போன ஆண்டு கடிதங்கள் எல்லாம் இந்த ஆண்டு கையில் கிடைப்பது மாதிரி எங்கெல்லாமோ சுற்றிவிட்டு இந்த ஈ மெயில் இப்போதுதான் கம்ப்யூட்டருக்குக் கிடைத்ததா? என்ன அபத்தம். அப்படி வாய்ப்பே இல்லை.

வாசகர்களுக்கு நான் ஒரு விஷயத்தை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். நான் எழுதிய சிறுகதை ஒன்றை என்னுடைய தோழிக்கு நேற்று மின்னஞ்சல் செய்தேன். அதுதான் விஷயம். தோழியின் பெயரும் சுஜாதா. ஏதோ பெயர் குழப்பத்தில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்கதையை அனுப்பிவிட்டேன். தோழி மறுபடி போன் செய்து கதை எனக்கு வரவில்லையே மீண்டும் அனுப்ப முடியுமா என்று கேட்க, ஈமெயிலை மறுபடி திறந்த போதுதான் இந்த அதிர்ச்சி. என் கதையைப் படித்துவிட்டு சுஜாதா எழுதியிருந்த பதில் ஈமெயில். இதோ அதுதான் இது:

கதை வித்தியாசமாக இருந்தது. இறந்தவர்கள் பற்றி யோசிப்பது மனிதனின் இயல்பான தேடல் குறித்தது. இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் எல்லா எழுத்துக்கும் ஆதார ஸ்ருதி. எல்லோரும் இறக்கப் போகிறவர்கள்தானே எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்ற அடிப்படையில் சிலர் எழுதுகிறார்கள். இறவா புகழை அடைய வேண்டும் என்பதற்காகச் சிலர் எழுதுகிறார்கள். சாகிறவரை அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் சாகவேண்டும் என்பதற்காகச் சிலர் எழுதுகிறார்கள். சாவு என்ற ஒன்று இல்லையென்றால் எழுத்துக்கே அவசியமிருக்காதோ என்று தோன்றுகிறது. சாவைப் பற்றி வந்த உருப்படியான கதை. ஆனால் ஆறுமாதங்கள் உருண்டோடின போன்ற பதங்களுக்கு வேறு வாக்கியங்களை உருவாக்கலாம்.
-சுஜாதா
மேற்படி கடிதத்தில் சுஜாதாவின் வார்த்தைப் பிரயோகம் இருப்பது உண்மைதான். ஆனால் தமிழ் எழுத்தாளர்களில் நிறையபேர் அவரைப் போல எழுதுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியாராவது என்னைக் கிண்டல் செய்யும்நோக்கோடு எழுதியிருந்தால்... ஆனால் அவர்களுக்கு சுஜாதாவின் மின்னஞ்சலின் ரகசிய குறியீட்டு எண் தெரிந்திருக்க வேண்டுமே? அவருடைய உதவியாளர் யாருக்காவது பாஸ்வேர்டை சொல்லி வைத்திருந்திருப்பாரோ?

அவருடன் நெருங்கிப் பழகியிருந்த சிலரிடம் கேட்டேன். ûஸபர் கிரைம் பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் அவர்தான். பாஸ்வேர்டை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த கவனம் பற்றிச் சொன்னார்கள். அதுவுமில்லாமல் பாஸ்வேர்ட் யாருக்காவது தெரிந்துபோக வாய்ப்பிருப்பதால் அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பவர் அவர் என்றும் சொன்னார்கள்.

என்னுடைய கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்வதற்கு வரும் ஆசாமியைத் தொடர்பு கொண்டு நடந்த கதையை எல்லாம் சொல்லி விளக்கம் கேட்டேன்.

"அவருடைய பாஸ்வேர்ட் தெரிந்திருந்தாதான் ஸôர் அனுப்ப முடியும். இல்லாட்டி சான்úஸ இல்லை'' என்று ஒரே வரியில் வைத்துவிட்டார்.
சரி என்று நானும் விட்டுவிட்டேன். அந்தத் தருணத்தில்தான் அவருடைய கணேஷும் வஸந்தும் மூளைக்குள் புகுந்து ஒரு ஜிவ்வு ஜிவ்வினார்கள்.
மறுபடி சுஜாதாவுக்கே இன்னொரு ஈ மெயில் அனுப்புவது என்று தீர்மானித்தேன்.

என்ன இருந்தாலும் தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளரான அமரர் சுஜாதாவின் பெயரில் இப்படி விளையாடுவது நியாயமே இல்லை. இது அவருக்குச் செய்யும் அவமானம். இந்த விளையாட்டைத் தொடராதீர்கள்.
-தமிழ்மகன்


ஈ மெயில் அனுப்பிவிட்டு சிலவினாடிகளில் இன்னொரு பதில் ஈ மெயில் சுஜாதாவிடமிருந்து.



இறந்த ஒருவரை வைத்து இப்படியெல்லாம் விளையாடக் கூடாது என்ற உங்கள் அபிப்ராயம் சரிதான். ஆனால் இறந்த ஒருவர்தான் உங்களிடம் இப்படியெல்லாம் விளையாடுகிறார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நம்ப வைப்பதற்கு என்னிடம் ராஜ இலச்சினையோ, முதுகு மச்சமோ இல்லை. பேசாமல் இறந்த ஒருவரால் எப்படி ஈ மெயில் அனுப்ப முடியும் என்று யோசியுங்கள். கண்டுபிடிக்கிறீர்களா பார்க்கலாம். உங்களுக்கு 24 மணி நேரம் கெடு.
சுஜாதா
வாசகர்களே தலையைச் சுற்றுகிறதா இல்லையா? இந்த ஒரு நாளில் நான் என்ன செய்ய முடியும்? இன்னும் சிலரிடம் சொல்வதைத் தவிர. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். சுஜாதா எழுதிய கடைசி வாக்கியம்வரை உற்சாகமும் துள்ளலும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் இறந்த பின்னுமா? அவர் எழுதிய காலமானவர் கதை ஞாபகம் வந்தது. ஏதாவது காலக் குழப்பம் ஏற்பட்டு தேதி மாறிப் போய் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறதா?
மனிதர் கருட புராணம் எல்லாம் படித்தவர். அந்த மாதிரி சூட்சுமம் ஏதாவது கைவரப் பெற்றுவிட்டாரா?

விஞ்ஞானமும் வேதாந்தமும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்வதாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் இருக்கிறவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை எதற்கு இந்தப் பரீட்சைக்குத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. இதையெல்லாம் தாங்கும் சக்தியோ, போராடிக் கண்டுபிடிக்கும் திராணியோ இல்லாதவன் நான்.

வாலி, மணிரத்னம், ஷங்கர், கமல்ஹாசன், அப்துல்கலாம், மதன், ராவ் என்று அவருக்கு நிறைய நெருக்கமான ஆட்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரியாருக்காவது இப்படி ஒரு ஈ மெயில் வந்திருந்தால் அது நாடுதழுவிய செய்தியாகவோ உலகு தழுவிய செய்தியாகவோ இருந்திருக்கும்.
வேதாந்தம், அமானுஷ்யம், சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம் போன்ற வஸந்த் பாணி விஷயங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு கணேஷ்போல இந்த விஷயத்தைக் கையாள்வோம் என்று முடிவு செய்து கொண்டேன். எனக்கு சுஜாதா எழுதிய "கொலையுதிர் காலம்' நாவல்தான் இப்படி முடிவெடுக்க உதவியது. விஞ்ஞானம்... விஞ்ஞானம்... எனக்குத் தெரிந்து விஞ்ஞான நோக்கோடு விஷயத்தை எதிர் கொள்பவர் கோவர்தன்தான். பெங்களூருவில் இருக்கிறார். இன்னும் 6 மணி நேரமே இருக்கும் அவகாசத்தில் அவருடைய ஆலோசனையை நாடினேன்.

மனிதர் எப்போதும் போல் மும்பை செல்வதற்காக ஏர் போர்ட்டில் காத்திருந்தார். விஷயத்தை உள்வாங்கிக் கொண்டார்.

"அது எழுத்தாளர் சுஜாதாவின் ஈ மெயில்தானா என்று தீர்மானியுங்கள். நான் என் வேலையை முடித்துவிட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்'' } ரத்தின சுருக்கமாக இவ்வளவுதான் சொன்னார்.

அவர் சொன்ன முக்கியமான சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள சுஜாதாவின் நண்பர்கள் சிலரை அணுகினேன். அட்சரம் பிசகினாலும் தவறாகிவிடும் என்பதால் எழுத்து எழுத்தாகக் குறித்துக் கொண்டேன். முகவரி சரியாகத்தான் இருந்தது. அது சாட்சாத் சுஜாதாவின் ஈமெயிலே தான். அவசரப்பட்டு இரண்டொரு தரம் கோவர்தனுக்கு போன் செய்த போதும் முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவே செய்தி வந்தது. தவிப்பு தாளவில்லை எனக்கு. இரண்டு நாளாக இதே வேலையாக இருக்கிறேன். யாருமே இதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று இந்த பொறுப்பற்ற உலகத்தின் மீதே கோபமாக இருந்தது.

சரியாக மாலை அவரே தொடர்பு கொண்டார்.

"ஈ மெயில் சரிதானா?''

"மிகச் சரியாக இருக்கிறது''

"வேறுயாருக்காவது அவருடைய ஈ மெயில் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?''

"அதையும் விசாரித்துவிட்டேன். அந்த விஷயத்தில் படு ரகசியம் காத்திருக்கிறார்.''

"அப்படியானால் ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. ஆட்டோ இன்டலஜன்ஸ் புரோகிராமிங்.''

"சில ஈ மெயில் பார்த்திருப்பீர்கள். கடனட்டைக்கான தொகை ரூ... கிடைத்தது. நன்றி... அல்லது எங்கள் வலைதளத்தில் உங்களைப் பதிவு செய்ததற்கு நன்றி என்று தயார் நிலை வாக்கியங்களோடு சில கடிதங்கள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படியானது.''

"ஆனால் நான் எழுதிய கதையைப் படித்துவிட்டு விமர்சித்திருக்கிறாரே?''

"ஆயிரக் கணக்கான கதைகளைப் படித்ததன் மூலம் எல்லாவற்றையும் ஒரு பார்முலாவுக்குள் அவரால் கொண்டு வரமுடிந்திருந்தால் கம்ப்யூட்டரேகூட உங்கள் கதையைக் கணிக்க முடியும். அதாவது அந்த மாதிரி புரோக்ராம் செய்ய முடியும்.''

"ரொம்ப நன்றி கோ...''

ஓட்டமாய் ஓடி சுஜாதாவுக்கு அடுத்த மெயிலைத் தட்டினேன்.
"கண்டுபிடித்துவிட்டேன் ஐயா. இதுதானே விஷயம்?' என்று.
அடுத்த நிமிடம். "வெரிகுட்' என்றொரு மெயில் ஒன்று அவரிடமிருந்து வந்தது. அடுத்த விநாடி கம்ப்யூட்டர் பட்டென்று அணைந்துவிட்டது. என்னடா இது எல்லாம் கூடி வருகிற நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று பதறிப் போய் மீண்டும் கம்ப்யூட்டரை ஏற்றினேன்.

வேகமாக ஈ மெயிலை திறந்தேன்.
... சுஜாதா... அட அவர் அனுப்பிய ஈ மெயிலே இல்லையே... அனுப்பிய மெயில் பட்டியலிலும் இல்லை. பெற்றுக் கொண்ட பட்டியலிலும் இல்லை.
இதுவும் அவர் வேலைதானா?




நன்றி: தினமணிகதிர் 9.3.2008


tamilmagan2000@gmail.com

செவ்வாய், பிப்ரவரி 12, 2008

மம்முத திருவிழா


குட்டிப் பெண்ணாய் ஜெயா டி.வி.யில் 9 வயதில் "கிட்' நியூஸ் வாசித்துக் கொண் டிருந்தபோதே "அட' சொல்ல வைத்தவர் ஸ்ரீதேவி. இப்போது அந்த வயதை இரட்டிப் பாக்கிக் கொள்ளுங்கள். "அடடா' சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், நாட்டியத்தாரகை, பொதிகையில் டி.வி. காம்பியர், சோஷியாலஜி மாணவி என்று பல முகங்கள் இவருக்கு.

முகம் 1: டி.வி.யில் இருந்து ஆரம்பிப்போமா? பொதிகையில் "கதை கதையாம் காரண மாம்' நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி.
பழைய திரைப்படம் ஒன்றை ஒரு வாரத்துக்கு அலசுவோம். அது எப்படி ஒரு படத்தையே ஒரு வாரத்துக்கு அலசுவது? தினமும் இரவு 9 மணிக்குத் துவங்கும் இந்த அரைமணிநேர நிகழ்ச்சியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சம் பவங்கள், நடிகர்- நடிகைகள் பற்றிய குட்டித் தக வல்கள், தொழில்நுட்பத் தகவல்கள் என ஒவ் வொரு நாளும் சுவாரஸ்யமாக வழங்குகிறோம்.
இந் நிகழ்ச்சி மறுநாள் மதியம் 2 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இதைத் தவிர திரைவிமர்சனம் நிகழ்ச்சியை யும் தொகுத்து வழங்கி வருகிறேன். தொகுப்பா ளினியாக ஏராளமான வாய்ப்புகள் வந்தாலும் எனக்கு பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடு இருப்பதால் நான் அவற்றைத் தவிர்த்து வருகி றேன்.

முகம் 2: பரத நாட்டிய ஈடுபாடு ஏற்பட்டது எப் படி? மூன்று வயது முதலே எனக்கு பரத நாட்டியத்தில் ஆர்வம்தான். பள்ளிக்குச் செல் வதற்கு முன்பிருந்து நாட்டிய வகுப்புக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். எனக்குத் தொழில் நாட்டியம் என்று அப்போதே பெற் றோரும் முடிவு செய்துவிட்டார்கள். இப் போது சுதாராணி ரகுபதியின் பரதாலியா நாட் டியப் பள்ளியில் பயின்று வருகிறேன். நாட்டி யத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் செய்வதில் ஆர் வம் காட்டிவரும் அவருடைய மாணவியாக இருப்பது மிகுந்த பெருமையாக இருக்கிறது.
நாட்டிய நாடகங்களாக அவர் அமைத்த நிகழ்ச் சிகளில் அவருடன் பங்கு பெற்று பலருடைய பாராட்டையும் பெற்றேன்.

முகம் 3: என்னென்ன நாட்டிய நாடகங்களில் இதுவரை பங்கு பெற்றிருக்கிறீர்கள்? சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்தான் நான் முதலில் பங்கு பெற்றது. அதில் எனக்கு மாதவி வேடம். சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற நாட்டிய நாடகம் இது.
கடந்த ஆண்டில் மமுதா நாட்டிய நாட கத்தை அரங்கேற்றினோம். மன்மதா என்பதன் மரூவுதான் மமுதா. ரதி- மன்மதனின் காதல் காவியத்தை கிராமங்களில் "மம்முத திருவிழா' என்றுதான் அழைக்கிறார்கள். சில கிராமங்க ளில் 15 நாள்களுக்கு மம்முத திருவிழா நடக்கும் என்பார்கள். இந்த நாட்டிய நாடகத்தில் பரதம், தெருக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற பல அம்சங்கள் கலவையாக இடம் பெறும். பாட்டாக மட்டும் இல்லாமல் இடை யிடையே வசனங்களும் இடம் பெறும். இதில் நான் ரதியாக நடித்திருந்தேன். என் குரு மன்மத னாக நடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு டிசம்பர் சீஸ னில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மத்திய அரசின் சென்டர் கல்சுரல் ரிúஸôர்ஸ் ட்ரெய்னியாகவும் தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் கிளாஸிகல் ஆர்ட் விழிப்பு ணர்வு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கி றேன். அத்துறைகள் சார்பில் அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். தில்லி, கரூர், சிவகாசி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை.

முகம் 4: கல்லூரியில் உங்களின் இந்தக் கலைத் துறை ஆர்வங்களை எப்படி எடுத்துக் கொள் கிறார்கள்? மிகவும் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
சில டெஸ்ட் நேரங்களில் நான் வெளியூர் நிகழ்ச்சிகளில் இருக்க வேண்டியிருந்தால் அந் தத் தேர்வைத் தனியாக எழுத அனுமதிக்கிறார் கள். கல்லூரி சார்பாக என்னைப் பல போட்டி களுக்கு அனுப்புகிறார்கள்.
சோஷியாலஜி படிப்பு எனக்குச் சமூகப் பார் வையை ஏற்படுத்தியிருக்கிறது. சோஷியல் சர் வீஸ் செய்யும் ஆர்வமும் இன்னொரு பக்கம் மெல்ல மொட்டுவிட ஆரம்பித்திருக்கிறது.
அனாதை குழந்தைகள் என்று முன்னாடி வார்த் தையாக அறிமுகமாகியிருந்தார்கள். இப் போது அவர்கள் வாழ்க்கையாக அறிமுகமாகி யிருக்கிறார்கள். நிச்சயம் ஏதாவது செய்வேன்.
தமிழ்மகன்

திங்கள், ஜனவரி 28, 2008

நோவா

சிறுகதை

தமிழ்மகன்


"நண்பர்களே வணக்கம்.

உலகம் மாகாணக் கூட்டமென்பதால் அனைத்து மொழியினருக்குமான மாற்றுக் கருவியை எல்லோர் இருக்கையிலும் பொருத்துவதில் கூட்டம் சற்றே தாமதப்பட்டுப் போனது. சீன மொழியில் இருந்து உருது மொழிக்கும் ஜார்ஜிய மொழியில் இருந்து குஜராத்தி மொழிக்கும் மாற்றம் செய்வதில் சிற்சில இலக்கணக் குறைபாடுகள் இன்னமும் தவிர்க்கப்படவில்லை. உதாரணத்துக்கு சில இலக்கணப் போலிகளையும் (தசை} சதை, ல்ட்ர்ற்ர்- ச்ர்ற்ர்) சில ஆகு பெயர்களைப் (பிரான்ஸ் தங்கம் வென்றது) புரிந்து கொள்வதில் சில மின்புரி தவறுகள்... அடுத்த உலக மாகாணக் கூட்டத்துக்குள் இவற்றைச் சரி செய்துவிட முடியும் என்று நம்புகிறேன். சரி.. இப்போதைய கூட்டம் அது பற்றியதல்ல....'' சற்றே அமைதிக்குப் பிறகு அனைவருக்கும் ஏற்கெனவே அதைப் பற்றித் தெரியும் என்றாலும் ஒரு முன்னோட்டம் போல அதைப்பற்றி சொல்ல வேண்டிய தம் கடமையை நிறைவேற்றினார் சர்வ தலைவர்.

"....இன்றைய மாநாடு ஒருவர் பற்றி இன்னொருவர் கொள்ளும் அபிப்ராயம் பற்றியது. அதாவது ஒரு அபிப்ராயத்தை அவர் இல்லாத நேரத்தில் மற்றவர்களிடம் பரப்புவது சம்பந்தமானது. இது மனித சமுதாயத்தில் மிகக் கொடிய வன்மமாக இருந்திருக்கிறது. இப்போது இது புழக்கத்தில் இல்லையாயினும் அப்படியான குணம் நான்காம் உலகப் போருக்குக் காரணமாகிவிடக்கூடாது என்பதுதான் இம் மாநாட்டின் நோக்கம். இங்கு கூடியிருக்கும் மனித வள, மொழியியல், மனவியல் அறிஞர்கள் யாருக்காவது அதைப் புரிந்து கொள்ள முடிந்ததா? விளக்க முடியுமா? யென்சான் நீங்கள்..?''
ஜப்பானிய மொழியியல் அறிஞரான அவர்தான் இந்தக் கூட்டத்துக்கே (கூட்டம் என்பதுகூட பொருத்தம்தான். ஏறத்தாழ 170... மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு மீந்தவர்களுக்கான பிரதிநிதிகள் மட்டுமே அங்கு இருந்தனர்) காரணமானவர். கடந்த காலங்களில் நிறைய போர்களுக்கு இதுதான் காரணமாக இருந்தது என்று கண்டுபிடித்தவர் அவர்தான். ஆரம்ப விளக்கம் சிறப்பாக இருந்தால் அதைச் சார்ந்து மற்றவர்களும் தெளிவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார். நிதானமாகவும் தெளிவாகவும் பேச ஆரம்பித்தார் யென்சான்.

"ஒருவர் பற்றி இன்னொருவர் பெருமையான அபிப்ராயங்களைச் சொல்வதைப் புகழ்வது என்று சொல்கிறார்கள். அதற்காக ஒரு காலத்தில் பலரும் ஏங்கியதாகத் தெரிகிறது. ஒருவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது. வாய் மார்க்கமாகவோ, எழுத்து மூலமாகவோ ஒருவரை ஒருவர் இப்படி செய்து கொண்டார்கள். தாம் நிறையப் புகழப் பெற வேண்டும் என்ற பேராசைதான் வன்முறைக்குக் காரணமாகிவிட்டது''

"அந்தக் காலத்தில் அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான். ஆனால் அதனால் போர்கள் எப்படி உருவாகும்? சகமனிதர்களை வெட்டிச் சாய்ப்பதும் கொல்வதும் எங்கே வந்தது?'' என்ற சந்தேகத்தையும் கூடவே அவருடைய விளக்கத்தையும் முன் வைத்தார் பிரெஞ்சு மனவியல் அறிஞர் வார்னே பிரான்கோ. "ஒருவரை பற்றி ஒருவர் நல்ல அபிப்ராயங்கள் சொல்வது இப்போதும் சில சமயங்களில் கடைபிடிக்கப்படுகிறது. சென்ற மே மாதத்தில் நாமும் அப்படி செய்தோம்...''

"நாமா?'' என்றார் தலைவர் சற்றே திகைப்புடன்.

"ஆமாம். செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் உருவாக்குவதில் நம் விஞ்ஞானிகள் நிறைவுகட்டத்தை அடைந்த போது இதே உலக மாகாணப் பிரதிநிதிகள் சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டதை நான் கண்ணுற்றேன். இப்போது இங்கு இருக்கும் காப்ரியேல், அந்த விஞ்ஞானிகளை "மறுபுவிகண்ட மாண்பர்கள்' என்று விளித்தார். ஆனால் அது புகழ் வார்த்தைதான். சென்ற நூற்றாண்டின் பழக்க தோஷமாக இருக்க வாய்ப்பிருக்கிறது''

கேப்ரியலுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "அப்படியா சொல்கிறீர்கள்?... அது ஊக்க வார்த்தை வகைப்பட்டதுதானே?''

"நிச்சயமாக இல்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள். அதிகபட்சமாக அவர்களைப் பார்த்து நிறைவாகச் செய்தீர்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். என்னுடைய ஆய்வில் கடந்த காலங்களில் வெளியூருக்குச் சுற்றுலா போய்விட்டு வந்த அரசியல் தலைவர்களையெல்லாம் தமிழகத்தில் "மலேயா கண்ட மாவீரனே' என்று பாராட்டி வரவேற்று இருக்கிறார்கள். இதைப் போல் நம் தலைவர் வெளிநாடு போய் வரும்போது பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் "உலக நாடுகளின் ஒளிவிளக்கே' என்று மிகைப்படுத்திப் புகழ்ந்தார்கள். இதனால் இந்தக் குழுவினருக்கும் எதிர்க் குழுவினருக்கும் ஆவேசமும் கோபமும் வன்மமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.''

பிரான்கோவின் வாதத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து "அந்தக் காலத்தில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்று வரும் முறை இருந்தது. அதை பொருண்மை ஆற்றல் முறையினால் ராக்கெட் இல்லாமலேயே சென்றுவரும் முறையைக் கண்டுபிடித்ததால் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். மறுபுவிகண்ட மாண்பர்கள்' என்ற வாக்கியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்'' என்றார் கேபிரியல்.

"இது குறித்து மாற்றுக் கருத்து இருப்பவர்கள் சிற்றுண்டி இடைவேளைக்குப் பிறகு பகிர்ந்து கொள்ளலாம்'' தலைவர் திரையில் இருந்து மறைந்தார்.

எல்லோரும் அரங்கத்தின் வெளியே நீண்ட காரிடாரில் நடைபோட்டபடி ஏறத்தாழ ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்கள்போல நடைபழகிக் கொண்டிருந்தார்கள். உலகம் என்பது அந்த 45 மாடிக் கட்டிடடத்துக்குள் சுருங்கிவிட்டது சகலருக்கும் வருத்தமூட்டுவதாக இருந்து சமீபகாலங்களில் அதற்காக வருத்தப்படும் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார்கள். காடுகள், மலைகள், அருவிகள், மலர்கள், எல்லாமே திரையில் பார்த்து ரசிக்கும் சமாசாரங்கள்தான். "டூன்மேன்' அமைப்பினர் கிராபிக்ஸ் இயற்கை காட்சிகள் உருவாக்கி செயற்கை பறவைகளையும் விலங்குகளையும் உருவாக்கியிருப்பதால் போருக்கு அடுத்த ஐந்தாம் தலைமுறைக்குச் செயற்கை ரசிப்பு மட்டுமே தெரிந்தது, சொல்லப் போனால் மிகவும் பிடித்தும் போனது. சரியாகச் சொன்னால் இந்த "நோவா கப்ப'லில் மனிதர்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டிருந்தனர்.

"என்ன புரதச் சட்டினியும் வைட்டமின் ஆப்பமும்தானா?'' என்று நெருங்கிவந்த ஆப்ரிக்க மரபியல் அறிஞரான முப்பட்டோவைப் பார்த்து ஏதோ நினைவில் இருந்து விடுபட்டவராகச் சிரித்தார் இந்திய ஆன்மிக இயலாளர் குப்தா.

"ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள் போலிருக்கிறதே?'' என்ற முப்பட்டோவின் கையில் கார்போ கூழும் சிட்ரிக் தொக்கும் இருந்தது.
""இது இந்தியர்களின் மரபுரீதியான செயல்தானே?'' சாதுர்யமாக அவருக்குப் பதிலளித்து பதில் சிரிப்பும் செய்தார்.

"தலைவர் இதை இவ்வளவு பெரிய விஷயமாகப் பாவிப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? எப்போதோ வழக்கொழிந்து போன இந்தப் பாராட்டு வார்த்தைகள் குறித்த கருத்தரங்கு எந்தவிதத்தில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

குப்தா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். "இடைவேளைக்குப் பிறகு இது குறித்துப் பேசலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.. மற்றபடி ஆப்ரிக்க -இந்திய இனவரலாறு ஆய்வு எப்படி இருக்கிறது?''

"நியூஸிலாந்திலும் இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் பாம்புகள் குறித்தும் லிங்க வழிபாடுகுறித்தும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மூன்று பகுதி பழங்குடிகளிடம் இருக்கும் பெயர் ஒற்றுமைகள் ஆச்சர்யமானவை. கிளியோ பாத்ரா} துங்கபாத்ரா, கங்கா}காங்கோ என... மனிதர்கள் எல்லோரும் ஒரே இடத்தில்தான் இருந்திருக்கிறார்கள், இப்போது நாம் இருப்பது போல..'' அரங்க நுழைவாயில் விளக்குகள் ஒளிரவே அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.

திரையில் தலைவர் "ஆரம்பிக்கலாம்'' என்றார்.
குப்தா ஆரம்பித்தார். "அபிப்ராயங்கள் சொல்வதில் இரண்டு விதங்கள் இருப்பதை அறிகிறேன். ஒருவரைப் பற்றி இன்னொருவர் அவர் இல்லாத நேரங்களில் அபிப்ராயம் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆரம்ப அமர்வில் சொல்லப்பட்ட அபிப்ராயங்கள் அனைத்தும் ஒருவர் மற்றவரை மிகைவூக்கப்படுத்துவது சம்பந்தமானதாக இருந்தது. இதில் நான் இன்னொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன்... அதாவது ஒருவகையில் அதற்கு முரண்படுவதாகவும் இது இருக்கும். அப்படி அபிப்ராயம் தெரிவிப்பதில் குறைவூக்கம் செய்யும் தன்மைகளும் இருந்தன என்பதுதான்.''

"புதிதாக இருக்கிறதே... குறைவூக்கமா? சக மனிதர் ஒருவரை இன்னொருவர் எதற்காக குறைவுபடுத்த வேண்டும்?'' தலைவர் ஆச்சர்யத்தோடு கேள்வியை முன் வைத்தார்.

குப்தாவின் முகம் சலனமற்று இருந்தது. லேசான வருத்தமும் அதில் தென்படுவதை அவருடைய மனவோட்டமானியின் ஊசலாட்டத்தை வைத்து அனைவருமே அறிந்தனர். ஒருவருடைய மனவோட்டத்தைப் புண்படுத்தும்விதமாக யாரும் செயல்படும் சமயத்தில் அதை அறிந்து அந்தச் செயலை மாற்றிக் கொள்ளும் பொருட்டுதான் அக் கருவியே அனைவரின் இருக்கையிலும் இணைக்கப்பட்டிருந்தது. தலைவர் நெகிழ்வோடு, "தாங்கள் வருத்தமுருவதாக அறிகிறோம்'' என்றார்.

"வருத்தம் இந்த ஆய்வின் பொருட்டுதான். குறைவூக்கம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஒரு மனிதனை எதற்காக அவருடைய நிஜமான தன்மையைவிட குறைத்து மதிப்பிட வேண்டும் என்று கேட்டீர்கள்.. அது அந்தக் காலத்தில் இருந்த போலி குணத்தின் விளைவு..''

தலைவர் தீர்மானமான குரலில் "குப்தா அது தெரிந்து கொள்ளகூட தகுதியற்ற விஷயம் என்று சொல்கிறார். அத்தகைய மோசமான விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை. உங்கள் வாக்குகளை அளிக்கலாம்.''

அப்படியான போலியான குணம் பற்றித் தெரிந்து கொள்வதில் உண்மையிலேயே உறுப்பினர்களுக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. 97 விழுக்காடு தெரிந்து கொள்ள விரும்புவதாக பட்டனை அழுத்தினர்.

"நீங்கள் கூறலாம்'' என்றார் தலைவர் குப்தாவை நோக்கி.

"என் கடமையை முடிந்த அளவு தெளிவாகச் செய்ய விரும்புகிறேன்'' என்று குப்தா ஆரம்பித்ததிலிருந்தே அது சிரமமானதொரு விஷயமென்று அனைவரும் அதைப் புரிந்து கொள்ள ஆயத்தமாயினர்.

"குறைவூக்கம் என்ற வார்த்தை இன்றைய நாகரீக உலகத்தில் உருவாக்கப்பட்ட வார்த்தை.. அக் காலங்களில் ஒருவரை ஒருவர் மறைவாக குறைத்து மதிப்பிட்டனர். அப்படிச் செய்து கொள்வதில் அவர்களுக்கு ஒருவித ஆனந்தம் இருந்தது. அதை அக் காலங்களில் அவதூறு சொல்லுதல் என்பார்கள்...'' அமைதியாக அரங்கைப் பார்த்தார் குப்தா. எல்லோர் முகத்திலும் "அதில் ஆனந்தம் இருக்க முடியுமா?' கேள்விக்குறி.
குப்தா தொடர்ந்தார்.. "புறம்கூறல், இல்லாததும் பொல்லாததும் சொல்லுதல், போட்டுக் கொடுத்தல், வதந்தி பரப்புதல், வத்தி வைத்தல்...''

"என்ன பட்டியல் இது?'' தலைவர் இடைமறித்தார்.

"இப்படியெல்லாம் அதைச் சொல்லுவார்கள். நான் சிறுவயதாக இருக்கும்போது என் தாத்தா இந்த வார்த்தைகளைப் பிரயோகித்ததைக் கேட்டிருக்கிறேன்.என் மனதில் இன்றும் அவை பசுமையாக இருக்கின்றன. ஆனால் இப்படிச் சொல்வதால் என்ன நன்மை என்று என்னாலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அக் காலத்தில் கிறிஸ்து என்பவரை முன்னிறுத்தியும் திருவள்ளுவர் என்பவரை முன்னிறுத்தியும் இன்னும் சிலருடைய பெயரிலும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. அவர்கள் கணக்குப்படி ஏறத்தாழ கி.பி. 2200 வரை இது புழக்கத்தில் இருந்திருக்கிறது. என் தாத்தாவுக்கே அவை சொல்லக் கேள்விதான். அவர் அவற்றைப் பிரயோகித்தவராகத் தெரியவில்லை. அப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு அதனால் ஏற்பட்ட விரோதத்தால் அவதியுற்றுவந்தனர்.''

"முதலில் அதில் ஆனந்தம் இருந்ததாகக் கூறினீர்கள் குப்தா'' என்று ஞாபகப்படுத்தினார் ஒரு சீன அறிஞர்.

"அதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. இப்படிப் புறம்கூறுவதால் ஆரம்பத்தில் காரணற்ற மகிழ்ச்சியும் பிறகு அதனால் இருவருக்குள்ளும் மன வருத்தமும் தொடர்ச்சியாக விரோதமும் ஏற்பட்டிருக்கிறது..''

"புறங்கூறுவதால் ஏதேனும் சம்பந்தபட்ட நபருக்கு ஆதாயம் இருந்ததா?'' என்றார் சிலி நாட்டு தொல்லியலாளர்.

"ஆதாயம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆதாயம் கிடைத்தால் கூடுதல் உற்சாகத்தோடு செயல்படுவார்கள்.''

"நம்பவே முடியவில்லை. ஆதாயம் இல்லாமலும் இதைச் செய்வார்களா? ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?''

"உதாரணம் சொல்லுகிற அளவுக்கு எனக்கு விவரம் போதாதாது.. யூகத்தின் அடிப்படையில் சொல்வதென்றால்... ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு லாயக்கானவரா என்று இன்னொருவரிடம் அபிப்ராயம் கேட்டால் "அவனுக்கு என்ன தெரியும்.. மண்ணாங்கட்டியும் அவனும் ஒன்றுதான். பல சந்தர்ப்பங்களில் அவன் மேலதிகாரியிடம் அவமானப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்' என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவன் அந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவனாக இருப்பான். மேலதிகாரிகளும் அவன்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். ஆனால் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். அந்தப் பதவியைத் தான் அடைய வேண்டும் என்ற எண்ணமோ, அதற்கான தகுதியோ இல்லாதவரும் அப்படி அபிப்ராயம் சொல்லும் நடைமுறை இருந்தது.''

"உண்மைக்கு மாறானதைச் சொல்வார்கள். அப்படித்தானே? அதாவது அந்தக் காலத்தில் பொய் என்று ஒரு வார்த்தை உண்டே...''

"சரியாகச் சொன்னால் பொய்தான். ஆனால் பொய் என்பது பயத்தின் காரணமாக ஏற்பட்டது... அதிகாரியின் திட்டுகளில் இருந்து, கணவரின் திட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்படுவது... ஆனால் இந்தப் பொய்யில் மன மகிழ்ச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருவரைப் பற்றி மிகையாகவோ, முற்றிலும் மாறாகவோ சம்பந்தபட்ட நபர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்''} இரண்டுக்குமான வித்தியாசத்தை ஓரளவுக்கு விளக்கினார் குப்தா.

அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. "சம்பந்தபட்ட நபர் இருக்கும் நேரத்தில் எப்படி நடந்து கொள்வாராம்?'' சிரிப்பினிடையே கேள்வியைப் போட்டார் தலைவர்.

"குறைகூறிய அதே நபர், யாரை குறையாகக் கூறினாரோ அவரை வலிய அழைத்து "என்னிடம் இப்படி உங்களைப் பற்றி அபிப்பராயம் கேட்டார்கள். நானும் நீங்கள்தான் உலகிலேயே திறமைசாலி என்று சொன்னேன். அந்தப் பதவி நிச்சயம் உங்களுக்குத்தான்' என்று ரகசியமாகவும் பெருமையாகவும் சொல்லுவார்கள்''

"குப்தா இத்துடன் உங்கள் கற்பனையை நிறுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. புறம்கூறும் மனிதன் இப்படி இரண்டுவிதமான மனநிலையில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்?.. புறம் பேசப்பட்டதால் பாதிக்கப்பட்டவனைவிட புறம்கூறியவனை நினைத்தால்தான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. எதற்காக வன்மமும் போரும் ஏற்பட்டது என்ற நம் ஆராய்ச்சி இவ்வளவு கேலிக்கூத்தாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை'' என்றார் தலைவர். அவர் சொல்வது போல் எல்லோர் மனவோட்ட மானிகளும் ஆயிரம் மகிழ்ச்சிப் புள்ளிகளைத் தாண்டியிருந்தது. மிகவும் வேடிக்கையான ஆராய்ச்சியாக இருப்பதால் இதை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்ற கருத்துக்கு 100 சதவீத வாக்கு விழுந்ததால் கூட்டத்தை அத்துடன் கலைத்துவிட்டு எழுந்தனர்.

தூரத்தில் இருக்கும் ஒருவரை உபயோகமற்றவர், மண்ணாங்கட்டி என்று அபிப்ராயம் சொல்வதும் கிட்டே வந்ததும் திறமைசாலி என்பதுமான விளையாட்டை தன் பேரக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்து மன மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் முப்பாட்டோ.
குப்தாவுக்கு அது விளையாட்டான விஷயமாகத் தெரியவில்லை. குழந்தைகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகத் தெரிந்தது.

புதன், ஜனவரி 23, 2008

One hundred years of solitude - jyotir mayi


போனில் 10 கேள்விகள்







கல்லூரிக்குப் போகும்போது டைரக்டர் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டார் என்கிறார்கள். நீங்கள் எப்படி?

இல்லை. என்னை யாரும் அப்படி கூப்பிடலை. நான் ஏசியா நெட் டி.வி.யில் காம்பியரிங் செய்துகிட்டிருந்தேன். அதை பார்த்துட்டுதான் நடிக்கக் கூப்பிட்டாங்க.

நடிக்க வரவில்லை என்றால் டாக்டர் ஆகியிருப்பீர்கள் அப்படித்தானே? (நிறைய பேர் அப்படி சொல்றாங்க...)

குழந்தையா இருந்தப்ப டீச்சர் ஆகணும்னு ஆசை இருந்தது. அப்புறம் ஜர்னலிசம் படிச்சுட்டு டி.வி.யில சேர்ந்துட்டேன்.

கிளாமரா நடிப்பேன், கவர்ச்சியா நடிக்க மாட்டேன் என்கிறார்களே சில நடிகைகள்?

புடவையிலேயே கிளாமரா இருக்கலாம்ங்கறதுதான் என்னோட விளக்கம்.

உங்களைப் பற்றி வந்த கிசு கிசுவில் நீங்கள் ரசிச்சது எது?

ரசிக்கிற மாதிரி எதுவும் படிக்கலை.

பெரியார் படத்தில் நாகம்மையா நடிச்சீங்க. அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?

டைரக்டர் சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன். அவங்க போட்டோ ஒன்னு பார்த்தேன். நான் அவங்க மாதிரி இருக்கேனானு தெரிஞ்சுக்கறதுக்காக.

உங்களுக்கு இந்தப் பெயரை யார் வைத்தார்கள் என்று தெரியுமா?

நிச்சயமா சினிமா டைரக்டர் வெச்சது இல்லை. இது என் சொந்தப் பெயர். அப்பா வெச்சது.

படிக்கும் பழக்கம் உண்டா? இப்ப என்ன படிக்கிறீர்கள்?

One hundred years of solitute என்ற நாவல். கேபிரியல் கிரேஸியா மார்க்யூஸ் எழுதியது

"எப்படி இருந்தவ இப்படி ஆகிட்டேன்' என்று நினைத்ததுண்டா?

கல்லூரி படிக்கிற வரைக்கும் எனக்கு மேக்-அப், ட்ரஸ் இதிலெல்லாம் இன்ட்ரஸ்ட் இருந்ததே இல்லை. என்னோட ஃப்ரண்ட்ஸ் இப்ப என்னைப் பார்த்துட்டு ரொம்ப ஆச்சர்யப்பட்றாங்க.

உங்கள் வெய்ட் எவ்வளவு? (ஹெட்வெய்ட் தனி)

நார்மலா 53 கிலோ. ஹெட் வெய்ட்.... என்கிட்ட பேசறவங்களைப் பொறுத்து வித்தியாசப்படும்.

-தமிழ்

வியாழன், ஜனவரி 17, 2008

ஹும் -சிறுகதை

தமிழ்மகன்

உயிரைக் கீறும் ஓசையாக இருந்தது அது. சொல்லப் போனால் மற்றவர் யாருக்கும் அப்படி ஓசை ஏற்பட்டதாகக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. சுற்றியிருந்த இருபது முப்பது பேரில் ஒருவருக்குமா கேட்டிருக்காது என்று சந்தேகமாக எல்லோரையும் மிரள மிரள பார்த்தேன். இறந்துபோன அப்பாவின் உணர்ச்சியற்ற முகம் என்னை கேலியாகப் பார்ப்பது போல இருந்தது. ஆனால் அவர்தான் ஹீனசுரத்தில் முனகியது போல இருந்தது எனக்கு.
அப்பா இறந்துவிட்டார் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது. இல்லையென்றால் அவரை இப்படி எல்லா சடங்கும் முடிந்து சுடுகாடு வரை தூக்கி வந்து விறகுக் கட்டை மேல் கிடத்தியிருக்க மாட்டோம் என்பது புரியாமல் இல்லை. ஆனால் நான் கேட்டது அப்பாவின் குரல்தான்... அதில் சந்தேகமே இல்லை.

அப்பா இறந்துவிட்டார் என்று உறுதி செய்தது யார்... சொல்லப்போனால் யாரும் இல்லை. உடம்பு சில்லிட்டு இருந்தது. நாடித் துடிப்பே இல்லை என்பது பக்கத்துவீட்டு செட்டியார்தான் அம்மாவின் அழுகையைப் பார்த்துவிட்டு அவசரத்துக்குச் சொன்னது. சொல்லக்கூட இல்லை. உதட்டைப் பிதுக்கி பெருமூச்சு விட்டார். எல்லோரும் அதையே உறுதியான முடிவாக ஏற்றுக் கொண்டோம். 77 வயதில் அப்பாவின் உடம்பு வாகுக்கு நாடித் துடிப்பு என்பதே எளிதில் தெரிந்து கொள்ள முடியாததாகத்தான் இருந்தது. கையால் பார்த்தெல்லாம் அந்தத் துடிப்பை தேர்ந்த டாக்டரால்தான் இனம் காண முடியும். கையால் தொட்டுப் பார்த்து இப்படி முடிவுக்கு வந்தது சரிதானா?
"முன்னையிட்ட தீ .... தம்பி இப்படி வந்து நில்லு... முகத்தை பாத்துக்கோ... முன்னையிட்ட தீ முப்புறத்திலே... அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே...'' பண்டாரம் தோளுக்கு மேல் தண்ணீர் பானையைத் தூக்கி வைத்துச் சுற்றி வரச் சொன்னார்.

அப்பா என்னை எங்கே அழைத்துச் சென்றாலும் டாக்ஸியிலோ ரிக்ஷாவிலோதான் அழைத்துச் செல்வார். தியேட்டர் என்றால் பால்கனி. சர்க்கஸ் என்றால் முன் வரிசை சோபாவில். முதன் முதலில் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றதும், லைப்ரரிக்கு அழைத்துச் சென்றதும் அப்பாதான். குழந்தைகளுக்குச் செல்லம் கொடுப்பது எப்படி என்று போட்டி வைத்தால் அப்பாவை அடித்துக் கொள்ள ஆள் இருக்க மாட்டார்கள். முதுமைக்கே உரிய இயலாமையும் எரிச்சலும் அவரை கடைசி காலங்களில் மாற்றிவிட்டது. இருந்தாலும் அப்பாவை அந்த முதுமைக்கான இலக்கணத்தில் அடக்க முடியாது. அப்பா குழந்தைத் தனமாகத்தான் இருந்தார். மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் பசங்களோடுதான் சகவாசம். தேர்ட் அம்பயர் வேலையெல்லாம் பார்ப்பார். கடைசிவரை நடமாட்டம் இருந்தது. அடிக்கடி லோ பிரஷர் என்று கண்ணை மூடிக் கொண்டு மயக்கத்தில் படுத்திருப்பார். மீண்டும் உற்சாகமாகிவிடுவார். நாடி ஒடுங்கிப் படுத்துக் கிடப்பார். அல்லது கம்பளி போர்த்திக் கொண்டுதான் உலாவல். "டாக்டராவது கீட்ராவது... வயித்த வெட்டிப் பார்க்கணும். கிட்னிய மாத்திப் பார்க்கணும்னு ஏதாவது சொல்லுவானுங்க... லூஸýப்பசங்க' என ஒரே போடாகப் போட்டதில் நாங்களும் வசதியாக விட்டுவிட்டோம். இப்போது இறந்துவிட்டாரா... அல்லது அப்படியான மயக்கமான உறக்கமா என்று தெரியவில்லை.

இப்போது பாடையில் இருந்து இறக்கி வைத்தபோது வலியோடு முனகிய சப்தம் கேட்டதே... யாருக்குமே கேட்கவில்லையா?
அதிகாலையில் அம்மாவின் அலறல் சத்தம்... 'அப்பா மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்டா'... நான் ஓடிவருகிறேன். அப்பாவின் தலை ஈஸி சேரில் சாய்வுப் பட்டையில் இருந்து சரிந்து ஒருபக்கமாய் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. பதட்டமாக இருக்கிறது.... அப்பாவுடன் புரூஸ் லீ படம் பார்த்தது ஞாபகம் வருகிறது. கட்லெட் வாங்கித் தந்தது ஞாபகம் வந்தது.

பண்டாரம் நிறுத்தி பானையில் இரண்டாவது ஓட்டை போடுகிறார். முதுகில் சில்லென்று வழியும் நீர். முன்னூறு நாள் சுமந்து... டிங் டிங்.. டிங் டிங்.. டிங் டிங்..

பதட்டத்தோடு தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு ""அப்பா அப்பா'' என்கிறேன் அவர் முகத்தருகே சென்று. அது அப்பாவை எழுப்புவதற்கா, கதறலா என்று எனக்கே புரியவில்லை. அப்பாவின் மரணத்துக்காக அழுவது இதுதான் முதல் முறை... இந்த மாதிரி அழுவதை அப்பா விரும்புவாரா என்ற திடீர் சந்தேகம். ஐயோ கடைசியில் இறந்தே போய்விட்டாரா? பயம் தொற்றுகிறது... இரவு "ஃபேனை போடுடான்னா லைட்டை போட்டுட்டுப் போறியே' என்று கடைசியாகச் சொன்னது நினைவு வருகிறது. எரிச்சலோடு லைட்டை நிறுத்தி விட்டு ஃபேனை போட்டது ஞாபகம் வருகிறது. கடைசி கட்டளை... கொஞ்சம் மகிழ்ச்சியாக அவருடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாமோ என்று காலம் கடந்து தோன்றுகிறது. பையன் பின்னாலேயே தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து "அப்பா பிஸ்கட் வேணும்' என்கிறான். "பெசாம இருடா'' என்று அதட்டுகிறாள் மனைவி. என்னையும் அறியாமல் கண் கலங்கி ""தாத்தா நம்மைவிட்டுப் போய்ட்டாருடா'' என்கிறேன் மகனை அணைத்துக் கொண்டு. மகன் 'எங்கே போய்விட்டார்?' போல தாத்தாவைப் பார்க்கிறான்.
மூன்றாவது சுற்று... பானையில் பெரிய ஓட்டையாக விழுந்திருக்க வேண்டும். தண்ணீர் குபுக்கென்று வழிந்துவிட்டு நின்றுவிட்டது. புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்... புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்... அவசரமாக ஒரு தோராய வரிசை... எல்லோரும் ஆளுக்கு நாலனாவோ, எட்டணாவோ சொம்புத் தண்ணீரில் போட்டு நமஸ்கரித்து புண்ணியம் தேடினர்.

அப்பா முகம் தூங்கும் போது இப்படித்தான் இருக்கும்... வாயில் வெற்றிலையை நுணுக்கி சொருகி வைத்திருந்ததுதான் வித்தியாசம்... அவர் வெற்றிலை போடுகிறவர் அல்ல. எப்போதாவது மீன் குழம்பு சாப்பிட்டால் சாஸ்தரத்துக்கு ரெண்டு வெற்றிலை போட்டுக் கொள்வார். அப்பாவுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா? காலையில் இருந்து இத்தனை களேபரத்தில் எழுந்திருக்க மாட்டாரா? பையன் பென்சிலை கீழே போட்டாலே ""என்னடா சத்தம்... கொஞ்ச நேரம் தூங்க விட்றியா?'' என்பாரே... இவ்வளவு புகை... இத்தனை அழுகை... என்னதான் லோ பல்ஸôக இருந்தாலும் இப்படி மயங்கிக் கிடக்க முடியுமா? குளிப்பாட்டும் போது எழுந்திருந்திருக்க மாட்டாரா?

"புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்... முகத்த பாக்கறவங்க பார்க்கலாம். முக்ததை பார்க்கறவங்கலாம் பார்க்கலாம்'' கையில் வராட்டியுடன் பண்டாராத்தின் அவசரம். வெளியே இன்னொருவரின் பிணம் வந்துவிட்டதாம். பக்கத்திலேயே இன்னொரு விறகு அடுக்கு தயாராக இருந்தது. வந்திருக்கும் உடலை அதில் ஏற்றி வைத்து "முன்னை இட்ட தீ... முன்னூறு நாள் சுமந்து' பாட வேறோரு பண்டாரம் தயாராக இருந்தார். அந்தப் பிணத்துக்குப் புண்ணியாதானம் செய்யவும் முகத்தைப் பார்க்கவும் இன்னொரு பானையில் தண்ணீரும் எல்லாம் சேர்ந்து குழப்பமாகத் தெரிந்தது.
கடைசியாக நாம் ஒருமுறை சோதித்துப் பார்க்காமல் விட்டுவிட்டுவிட்டோமே... நெஞ்சோடு காதை வைத்துக் கேட்டால் மூச்சுவிடுவது தெரியாதா?... பக்கத்தில் நின்றிருந்த செல்வத்திடம் நமக்கு வந்த சந்தேகத்தைச் சொல்லலாமா?

"முடிங்க சீக்கிரம்... இருட்டுதில்ல... வெளிய வெய்ட் பண்றாங்களே... உங்களை மாதிரிதானே இருக்கும் அவங்களுக்கும்?'' இடுகாட்டு பணியாள் குழுமியிருந்தவர்களைப் பார்த்து மொத்தமாகக் குரல் கொடுத்தான்.
அதுதான் சாக்கென்று வராட்டியை அப்பாவின் முகத்தில் மூடுவதற்குத் தயாரானான். என் கை அனிச்சையாக அவனைத் தடுத்தது. என்னை ஆறுதலாகத் தாங்கிக் கொள்வது போல செல்வம் தோளோடு இழுத்து அணைத்துக் கொண்டான். எரிப்பதைத் தடுப்பதா? எழுவதா? என்ற குழப்பத்தில் இறைவன் விட்ட வழி என்று துணைக்குக் கடவுளைச் சேர்த்துக் கொண்டேன்.
ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அப்பா எழுந்து உட்கார்ந்து கொள்ளமாட்டாரா?
கடந்த ஆண்டில் ஒருமுறை அப்பாவுக்கு லோ பல்ஸ் ஆகி மூர்ச்சை ஆனபோது ஹாஸ்பிடல் கூட்டிப்போய் கரண்ட் ஷாக் வைத்து எழுப்பினோம். "இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்திருந்தா அவ்ளவுதான்'' என்றான் அந்தப் பயிற்சி டாக்டர் உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்துடன். ஆனால் அப்போது மூச்சு ஏறி இறங்குவது நன்றாகத் தெரிந்ததே...

அப்பாவின் கால் மாட்டில் கற்பூரம் வைத்து தீப்பெட்டியை நீட்டிக் கொளுத்தச் சொன்னார். கொளுத்தினேன். திரும்பிப் பார்க்காமல் போயிடுங்க...
பாடையை இறக்கி வைக்கும்போது வலியோடு மெலிதாக முணகியது அப்பாதான். ஏற்கெனவே அவர் உடம்பு முடியாமல் இருந்தபோது, காரில் ஏற்றும்போது இப்படி முணகியிருக்கிறார். அப்பாவின் குரல் மகனுக்குத் தெரியாதா?

ஐயோ... உயிரோடுதான் அவரை எரித்துவிடுகிறோமா? அவசரமாக அப்பாவை நோக்கித் திரும்பினேன். "டேய்... டேய் வாடா'' செல்வம் வெளியே இழுக்க... ""சார் திரும்பிப் பார்க்காமக் கூட்டிட்டுப் போங்க'' பண்டாரமும் வெட்டியானும் அதட்டலுடன் வலியுறுத்த செல்வம் இன்னும் வேகமாக வெளியே இழுத்தான்.
""பாடைக்கும் பூவுக்கும் ரெண்டாயிரம்தான் சார் குட்த்தாரு... இன்னும் ஐநூர் ரூபா தரணும்..'' என்று குறுக்கிட்டவனை "தருவாங்க இருப்பா'' என்றபடி செல்வம் என்னைப் பார்க்க நான் சுந்தரத்தின் பக்கம் திரும்பி ஜாடை காட்டினேன். ஐநூரு ரூபாயை வாங்கிக் கொண்டு, "டெத் சர்டிகேட் நானே வாங்கித் தந்துட்டமா... அதுக்குத் தனியா ஐநூர் ரூபா ஆவும்'' என்றான் மறித்தவன்.

இவர்கள் எல்லாம் யார்? அப்பா இறந்த அரை மணி நேரத்தில் எப்படி தகவல் தெரிந்து வந்தார்கள். இவர்களிடம் கொடுக்கிற காசு நியாயமான தொகைதானா...?

என் பதிலை எதிர் பார்க்காமல் "காலைல வாங்க அஸ்தி எடுத்து வெக்கிறேன்" என்றான்.

பண்டாரம் ஓடிவந்து "பதினாராம் நாள் காரியத்துக்கு முன்னாளே ராத்திரி வந்துடுவேன். பசு மாட்டுக்குச் சொல்லிடுங்க... இந்தாங்க லிஸ்ட்டு... நானே வாங்கியாந்துடட்டுமா, நீங்க வாங்கி வெக்றீங்களா?''

"எவ்வளவு தரணும்?''

"நானே வாங்கியார்றதுக்கா? மூவாயிர்ரூபா குடுங்க''
கொடுக்கச் சொல்லி மறுபடி சைகை. "எரியுதா?''

"ஆமா சார்.. நாங்க பாத்துக்றோம் கிளம்புங்க. காலைல அவங்களை கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன் அஸ்திய... நீங்க போங்க''

"நீ செல்வம் பைக்ல வந்துடுப்பா''யாரோ சொன்னார்கள்.
உயிரோடுதான் கொளுத்திவிட்டோமா? சுடுகாட்டுக்கு வந்து எரித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது இது என்ன கொடுமையான சிந்தனை? இருக்காது. தலையில் எண்ணெயும் சீக்காயும் தேய்க்கும்போதே உறைந்து போய் கிடந்ததே உடம்பு.. "ஹும்' என்ற அப்பாவின் முணகல் பிரமையா?

"போலாமா?'' என்றான் செல்வம்.
தயாரான போது அவனுடைய பைக் கீழே சரிந்து கிடந்ததைப் பார்த்து அலுத்துக் கொண்டான். "ஜனங்களுக்கு என்ன அவசரமோ... சுடுகாட்டுக்கு வந்துகூட''

"ஹும்'' பைக்கை ஒரே மூச்சில் தூக்கி நிமிர்த்தினான். அப்பாவின் அதே ஹும்.
பாடையில் இருந்து அப்பாவை இறக்கும்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவன் செல்வம்தான். இவன்தான் இப்படி முணகினானோ?
""போகலாம். வேஷ்டி மாட்டிக்கப் போகுது. ஒரு பக்கமா உக்காந்துக்க. காலை வெச்சுக்கிட்டியா?''

"ம்''

எல்லோரும் தலா பைக்கிலோ, நடந்தோ அவரவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். செல்வம் பைக்கைக் கிளப்பினான்.
மனம் விட்டு அழுவதற்கு மனமும் நேரமும் இப்போதுதான் அமைந்தது எனக்கு. பைக்கின் பின்னால் அமர்ந்து முழுசாக அழுதேன். அப்பா முதன் முதலில் என்னை இப்படி ஸ்கூட்டரில் ஸ்கூல் அழைத்துப் போனதில் இருந்து ஞாபக வெள்ளம் கரை புரண்டது. காலில் சுளுக்கு பிடித்த போது அப்பா அவர் மடியில் என் காலை எடுத்து வைத்துக் கொண்டு இரவெல்லாம் அழுத்திக் கொண்டிருந்த அடுத்த சம்பவம். அவருடைய கைச் சூடு நேற்றுவரை என் உடம்பில் பதிந்த ஞாபகம்... அவர் கடைசியாக என்னைத் தொட்ட இடம் என்னிடம் இருந்தது. அப்பா எங்கே?...

உயிர் இருந்ததா என்று கடைசியாக ஒருமுறை பார்த்திருந்திருக்கலாமோ?

வெள்ளி, ஜனவரி 04, 2008

அவாரிய மலைப் பிரவாகம்!

லட்சியவாதங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட துப்பறியும் நாவல்கள், யதார்த்த இலக்கியங்கள், விஞ்ஞான புனைகதைகள், மாயாவாத இலக்கியங்கள் என தமிழ் வாசகனுக்கு சகல நாவல் வாசிப்பு அனுபவங்களும் கைகூடியிருக்கிறது. மிகச் சிறிய குழுவாக இருந்தாலும் அந்த வாசகக் கூட்டத்துக்கு எழுத்துலக "நல்லது கெட்டதுகள்' ஓரளவுக்குக் கைகூடியிருக்கிறது.
இந்த எல்லாவற்றிலும் ஹாஸ்யம், துன்பியில், நையாண்டி, புரட்சிகரம், மங்கலகரம் புத்திசாலித்தனம் விறுவிறுப்பு எல்லாமும் உள்ளடங்கியிருக்கிறது. கதைக்களம் அல்லது எழுத்து நடை இதைத் தீர்மானிக்கிறது.
ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிற முதல் இரண்டு மூன்று பக்கங்களிலேயே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதாவது இந்தப் புத்தகம் மேலே சொன்னவற்றில் எந்த ரகம் என்பதில்.
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது நூலிலும் அப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு நான் முதல் சில பக்கங்களைப் புரட்டிக் கொண்டு வந்தேன். ஒரு முடிவுக்கு வருவதற்காகவே நிறைய பக்கங்களைப் படித்து, முடிவு செய்துவிட்டுத்தான் படிக்க வேண்டும் என்ற அவசியத்தை மாற்றிவிட்டது நாவல்.
ஃப்ளாஷ் பேக் உத்தியில் ஒரு பெண்ணின் நீண்ட நினைவுப் பதிவாக விரிகிறது கதை.
நமக்குச் சற்றும் பழக்கமில்லாத பின்னணியில் நகர்கிறது கதை. அவாரிய மலைவாழ் மக்களின் வாழ்க்கை. மலையும் மலைசார்ந்த இடமும்தானே என குறிஞ்சித் திணையைக் கற்பனை செய்து கொள்ள முடியுமா? தேனோ, தினைமாவோ முருகனோ இல்லை. அதற்கு பதிலாக வேறு உணவுகள். கொழுக்க வைத்த மாட்டிறைச்சி.. பாலாடைக்கட்டி, ரொட்டி... முருகனுக்குப் பதில் அல்லா. அங்கிருக்கும் உணவு வேறு, உடைகள் வேறு. பேசும் மொழிவேறு, ஊர் பெயர் ஆசாமிகளின் பெயர் எல்லாம் வேறு.
வெளிநாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போது எப்போதும் ஏற்படும் உணர்வுதான். ஆனால் நம்மையும் அவர்களையும் இணைக்கும் பொது அம்சம் அது சவால் நிறைந்த இன்னொரு வாழ்க்கையைச் சொல்கிறதா என்பதில்தான் இருக்கிறது. அது காதலிக்கிறவன் கதையோ, கட்டடம் கட்டுகிறவன் கதையோ.. இன்னொரு மனிதனின் சவாலைச் சொல்கிறது, பிரச்சினையைச் சொல்கிறது என்பதுதான் இத்தனைத் தடைகளையும் மீறி நம்மை படிக்க உந்துகிறது. ஷேக்ஸ்பியர் படித்திருக்கிறாயா, டால்ஸ்டாய் படித்திருக்கிறாயா, மார்க்வெஸ் படித்திருக்கிறாயா என்று பேச வைக்கிறது.
பஞ்ச தந்திரக் கதையாக இருந்தாலும் பஞ்ச பாண்டவர் கதையாக இருந்தாலும் பரந்தாமன் கதையாக இருந்தாலும் அவற்றில் வரும் நரியையோ, எம் பெருமான் நாராயணனையோ நாம் மனிதர்களாகத்தான் பார்க்கிறோம். மனித குணங்களை ஏற்றி அவை எதிர் கொள்ளும் பிரச்சினைகளைத்தான் பார்க்கிறோம். அதனால்தான் மனைவியை மீட்க ராமர் பாலம் கட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை எல்லாம் பின்னே காட்டு விலங்குகளுக்கும் கடவுளுக்குமா பொருந்தும்?
ஆனால் அது இந்த நாவலில் வரும் அவாரிய மக்களுக்குப் பொருந்துகிறது.
மலையில் இருந்து அருவி கொட்டும் சீஸன் ஆரம்பிக்கிறது. முதலில் அதைப் பார்க்கிறவர்கள் என்ன வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்களோ அது நிறைவேறும் என்பது சம்பிரதாயம். பாத்திமாத் என்ற சிறுமி இறந்து போன தன் தந்தை (அகமது) திரும்ப வருவாரா என்று நிராசை கொள்கிறாள்.
மலையில் இருந்து விழும் நீர் எப்படிப் பொங்கிப் பாயுமோ அப்படியேதான் கதையும் நகர்கிறது.
அந்தச் சிறுமியின் தந்தை எப்படி இறந்தான்? அது இயற்கையான மரணம்தானா? பின்னணியில் இருந்த சதி என்ன? பாத்திமாத்தோடு சேர்ந்து மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அகமதின் மனைவி பரீஹான் எப்படிக் குடும்பம் நடத்துகிறாள். அவர்களுக்கு உதவும் உமர்தாதா} ஹலூன் தம்பதிகள். அவர்களின் மகன்கள். பரீஹானை அடைய வெறி கொண்டு அலையும் ஜமால். அவனுடைய மகனுக்கு பாத்திமாத்துக்கும் ஏற்படும் காதல் பரவசம்.உமர்தாதாவின் மகனுக்கும் பாத்திமாத்துக்கும் திருமணம் செய்ய பெரியவர்களின் விருப்பம். காதல் முக்கோணத்தில் பாத்திமாத்தின் கவலை. பரீஹான் மீது விழும் கொலைப் பழி. நீதிபதிகளின் முன்னால் வைக்கப்படும் பரபரப்பான ஆதாரம். இரண்டாம் உலகப் போர். அது காவு கொள்ளும் காதல்கள். அத்தனை நிகழ்வுகளுமே அருவி நீரின் பிரவாகத்தோடு சுணக்கமின்றி நகர்கின்றன.
நாம் எப்படி யூகிக்கிறோமோ அப்படியே நகரும் கதையாக இருக்கிறது இது. அப்படி நாம் யூகிப்பதற்கான காரணங்களையும் நாவலின் ஆசிரியரே டிப்ஸ் தருகிறார். நாவல் எழுதும் யாரும் இப்படித் துணிவார்களா என்பது தெரியவில்லை. இந்த நாவல் எப்படி முடியப் போகிறது என்பதும் நாவலின் திருப்பமான விஷயங்கள் என்ன என்பதும் நாவலின் நடுநடுவே சொல்லப்பட்டுவிடுமாயின் அந்த நாவலை மேற்கொண்டு படிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும் என்று நினைப்பது சகஜம்தான்.
உதாரணத்துக்கு அகமது மரணத்தில் சந்தேகம் இருப்பது முதலிலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அதையும் மீறி நாவலைப் படிக்க வைப்பது உமர்தாதா என்ற விவசாயக் கிழவன். மண்ணை அவன் நேசிப்பது போல வேறொருவர் நேசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவனுடைய தைரியமும் உழைப்பும் நேர்மையும் தியாகமும்தான் நாவலுக்கு நீடித்த சுவாரஸ்யத்தைத் தருகிறது என்பது என் கருத்து. கதையைச் சொல்லிச் செல்வதாக வரும் பாத்திமாத்தோ, கணவனோ பாத்திமாத்தின் தந்தையோ தாயோ அல்ல நாவலின் கதாநாயகன். உமர்தாதா... ஆமாம் அவர்தான்.
மனிதர்களிடம் அவர் காட்டும் கருணை, அநீதியை அவர் தட்டிக் கேட்கும் துணிவு .
அவருடைய பேச்சில் தொனிக்கிற வாழ்வின் அனுபவத் தெறிப்புகள் நிச்சயம் உலகத்துப் பெரிய மனிதர்களுக்கெல்லாம் பொது குணமாக இருக்கும் என்பதை நம்ப வைக்கிறது. எல்லா மறுமொழிகளுக்குமே அவருக்குப் பழமொழிகளே பதிலாக அமைவது பிரமிக்க வைக்கிறது. மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது உட்பட அவருடைய பழமொழிகள் நாவெலெங்கும். பாஸþ அலியெவா அவருடைய சொந்தக் கதை இது என்று சொல்லியிருக்கிறார். அவருடைய மூன்று சகோதரிகள்தான் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்தக் கதையில் வரும் பரீஹான் இந்த நாவல் புத்தகமானபோது உயிருடன் இருப்பதாகவும் முன்னுரையில் கூறியிருக்கிறார்.
உண்மைக் கதை எப்போதும் அதன் சுட்டெறிக்கும் வெப்பத்துடன்தான் இருக்கிறது.



தமிழ்மகன்



மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
பாஸþ அலீயெவா
மொழி பெயர்ப்பாளர்: பூ. சோமசுந்தரம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
அம்பத்தூர்,சென்னை }98.

விலை ரூ. 140

LinkWithin

Blog Widget by LinkWithin