புதன், நவம்பர் 12, 2008

புண்ணியவதி

தாத்தா பழம்போல இருந்தார். மரக் கட்டிலில் அமர்ந்து கிண்ணத்தில் பொரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எண்பத்தைந்தாவது வயதிலும் அவருக்கு சில பற்கள் இருந்தன. பார்வை மங்கிவிட்டதால் குத்துமதிப்பாக ஓரிடத்தை நோக்கியபடி பேசினார்.

"'ஹலோ யங் கேர்ள்... பொரி சாப்பிடு'' என்று பொரியேந்திய கையோடு காற்றில் துழாவினார். நான் அவர் கையைப் பற்றி அதை வாங்கிக் கொண்டேன். ஏனோ எனக்குக் கண்களில் நீர் துளிர்த்தது.

"இங்கிலீஷ் நல்லா பேசுவியா?''

"பேசுவேன் தாத்தா...''

"வந்ததிலிருந்து பேசலையே?''

"நீங்களும்தான் பேசலை''

மடக்கிவிட்டதை ரசிப்பதுபோல் சிரித்தார்.

"இந்தக் காலத்துப் பசங்களுக்கு இங்கிலீஷ் அறிவு கம்மிதான். அவன் என்னமா பேசுவான் தெரியுமா?.. அவன் பேரு.... அட என்னம்மா இது என் பேரையே மறந்து போய்விட்ட மாதிரி... "சி.எம்." ஆகூட இருந்தானே ரெண்டு வருஷம்? ''

"அறிஞர் அண்ணாவா?''



"ஆங்... எங்க காலேஜ் ஸ்டூடண்ட்தான். இங்கிலீஷ்ல அடுக்கு மொழி பேசுவான். பிற்காலத்தில் அண்ணா ரொம்ப பிரபலமாகி காலேஜ் ஃபங்ஷன்ல பேசுவதற்கு வரும்போதெல்லாம், புரொபஸர் ராவ் சாகேப் ஆர்.கிருஷ்ணமூர்த்தில்லாம் "மை பாய்'னு அண்ணாவைக் கூப்பிடுவார். இத்தனைக்கும் கிருஷ்ணமூர்த்தி பிராமின். அண்ணா பெரியார் கட்சி'' ஞாபகப்பின்னல்கள் அறுந்துவிடாமல் இருக்க அவசர அவசரமாகக் கூறுவது மாதிரி இருந்தது.

தாத்தா மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து தனியாக் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்தவர். படிப்பு வாசனையை தன் குடும்பத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்.

"என்னமோ என்மேல உங்க அப்பனுக்குக் கோபம். நீ இங்க வந்திருப்பது அவனுக்குத் தெரியுமா?''

"தெரியாது. ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டார் தாத்தா.''

"உடம்பு எப்படி இருக்கு அவனுக்கு?''

"அப்படியேதான் இருக்கு.''

"இருமலும் சளியுமா இருக்கிறதா சொன்னாங்க. இப்பவும் சிகரெட் பிடிக்கிறானா?''

"இல்ல தாத்தா''

அவ்வளவு பெரிய வீட்டில் தாத்தா மட்டும்தான் இருந்தார். சாப்பாடெல்லாம் மாதக் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒரு அம்மா சமைத்துக் கொண்டு வருகிறார். துணிமணி துவைத்துப் போடுவது, தண்ணீர் பிடித்து வைப்பது இத்யாதி வேலைக்கெல்லாம் சேர்த்து அந்த அம்மாவுக்குச் சம்பளம். பீரோவைத் திறந்து செலவுக்கான பணம் எடுப்பதுவரை அந்த அம்மாவுக்கு உரிமையிருந்தது.

"தேவகி செத்து பத்து வருஷமாச்சு. அவ கூட வாழ்ந்ததே கனவு மாதிரி ஆகிடுச்சு'' என்று பாட்டியைப் பற்றி நினைவுக் கூர்ந்தார்.

"உங்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா. எப்ப உங்கப்பனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாளோ அப்பத்தலர்ந்து என்கிட்ட தாம்பத்தியம் வெச்சுகிட்டதில்ல. என்னமோ அப்படியொரு "பிரின்ஸிபிள்' அவளுக்கு. இருபத்தஞ்சு வருஷம் சன்யாசி மாதிரிதான் வாழ்ந்தா.''

தாத்தா எதைப்பற்றிப் பேசினாலும் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் இருந்தது.

வீராப்பும் தொனியும் அற்று அலங்காரம் இல்லாமல் வந்து விழும் அனுபவ உண்மைகளை, சும்மா செவி சாய்த்துக் கொண்டிருப்பதே நிம்மதியளிப்பதாக உணர்ந்தேன்.

"ஏம்மா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? இப்ப என்ன ஏஜ் உனக்கு?'' என்றார்.

"இல்லை தாத்தா. நான் படிக்கப் போறேன்.''

"அதுக்கும் இதுக்கும் என்னம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டுகூடத்தான் படிக்கலாம்? நா படிக்கலையா?''

"உங்க காலம் வேற. இப்பக் கூட படிக்கிறவங்களலாம் கிண்டல் பண்ணுவாங்க''

"எது நல்லதோ அது எல்லாம் கிண்டலாப் போச்சு ''

பொரிக்கிண்ணத்தை வைத்துவிட்டு "போதும்மா. கொஞ்சம் தண்ணிகுடு'' என்றார்.

பானையில் இருந்த தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.

"ஹாட் வாட்டர் இருக்குமே?... சரி பரவால்ல'' அதையே குடித்தார்.

"உங்கப்பன் மேல எனக்குக் கோபம்லா இல்லம்மா. இன்னொரு பொண்ணுகூட தொடர்பு வெச்சிருக்கான்னு தெரிஞ்சதும் "இனிமே என் முகத்தில முழிக்காதடா, போயிடு'ன்னு சொல்லிட்டேன். ரோஷக்காரன். அப்ப போனவன்தான். அந்தப் பொண்ணுக்குக் குழந்தைக் குட்டி எதுவும் கிடையாதாமே?...''

"ஒரே ஒரு குழந்தை பொறந்து இறந்துடுச்சு தாத்தா. அப்புறம் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணிக்கிட்டாங்களாம். போன வருஷம் அவங்களும் இறந்துட்டாங்க''

"ச்சோ.. தெரியாதே'' என்றார் தாத்தா.

"அதுக்கப்புறம் உங்கப்பா என்னைப் பார்க்க வந்ததில்ல. முப்பது வருஷமாச்சு அவனைப் பார்த்து. "முகத்தில முழிக்காதடா'னா என்ன அர்த்தம்னு இப்ப யோசித்துப் பார்த்தா வேடிக்கையா இருக்கு. ஒரே வார்த்தைக்கு அத்தனை வலிமை. என்னமோ அது வலிமை மாதிரிகூட தெரியல. "முழிச்சா' என்னன்னு நினைக்கும்போது அதற்கு அவசியம் இல்லாமப் போயிருக்கும். தயக்கம் இருந்திருக்கும். அப்புறம் அதுவே பழக்கமாயிடும். வாழ்க்கையே ஒரு பழக்கம்தானேம்மா?''

வார்த்தை ஜோடனைக்காக ரொம்ப சிரமப்படாமல் இதைச் சொன்னார். ""கல்யாணம் பண்ணி வெச்சு அஞ்சு வருஷமா குழந்தை பொறக்காம இருந்தது. குழந்தை பெத்துக்கணும்னு இப்படி கல்யாணம் பண்ணக்கிட்டான். இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஏதோ தாத்தா சொல்றார்னு கேட்டுக்கிட்டு இருக்கே. இல்லையா மீனா?'' என்றார்.

நான் முதலில் தலையசைத்தேன். தாத்தா பார்வைக்கு நான் ஆமோதித்தது தெரிந்திருக்காது என்பதை உணர்ந்து, "ஆமா'' என்று சிரித்தேன்.
"என் தங்கம். கிழவன் சொல்றதைச் சொல்லட்டும். கேட்டு வைப்போம்னு கேட்டுக்கிற?''


"இல்லை தாத்தா. இது வரைக்கும் அப்பா சொன்னதைத்தான் கேட்டிருக்கேன். நீங்க எப்படிச் சொல்றீங்கனு பார்க்கிறேன்.''

"யார் பக்கம் நியாயம் இருக்கு?'' குழந்தைத்தனமான குதூகலத்துடன் சவால் விடுவதுமாதிரி கேட்டார்.

"இதில இரண்டு பக்கம் இருக்கிற மாதிரியே தெரியலை. இரண்டும் ஒரே பக்கம்தான்""

"பிரில்லியண்ட் கேர்ள். அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் புரிஞ்சுக்க முடியும்'' என்றார். "இதில் காலத்தையும் இடைவெளியையும் மறந்துவிடக்கூடாது'' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

ஆழ்ந்த யோசனையில் சிறிது நேரம் இருந்தார். நான் அவர் கட்டிலில் இருந்த திருமூலர் நூலை எடுத்து மெல்ல இங்கும் அங்குமாகப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன்.

கண்தான் தெரியவில்லையே அப்புறம் எதுக்கு புத்தகத்திலேயே வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

"உன்னோட சித்தி இறந்து போனது தெரியவே தெரியாதும்மா. புண்ணியவதி... அவ முகத்தை ஒரு தடவைக்கூட பார்த்ததில்லை'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.

மூடிய மேல் துண்டுக்குள் அவர் உடல் குலுங்குவது தெரிந்தது.

ஒளவை

ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் அமுதாவிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை.
அமுதா என் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள். ஆரம்பித்தில் அதை நான் உணரவே இல்லை.

ரயில் சினேகம் போல இதை ஆபிஸ் சினேகம் என்று நினைத்திருந்தேன். அவள் அப்படி நினைக்கவில்லை. அவள் மீது மரியாதை செலுத்திக் கொண்டிருந்ததை எல்லாம் நான் ரொம்ப நாளாகக் கவனிக்காமல் இருந்துவிட்டது இப்போது வருத்தமாக இருக்கிறது.

நான் சுழலில் சிக்கிய சிறிய மரத்துண்டு போல அவளுடைய நட்பில் இழுத்துச் செல்லப்பட்டேன்.

"சார்... யுனிவர்சிட்டி வரைக்கும் போயிட்டு வரலாமா?''என்றாள். அவளுடைய வண்டியில் இருந்த மழைக் கோட்டை எடுத்துக் கொண்டு என்னுடைய ஸ்கூட்டரிலேயே வந்தாள்.

அவளுடைய ஹெட் ஆப் த டிபார்ட்மென்ட் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். வகுப்பு முடிந்து அவர் வரும்வரை நீண்ட படிக்கட்டுகளில் அமர்ந்து காத்திருந்தோம். மழைத் தூறிக் கொண்டிருந்தது. மழைக் கோட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

எதிர்பார்க்காத தருணத்தில் "சொல்லுங்கோ சார்'' என்றாள்.




எதைப் பற்றியாவது சொல்லிக் கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று நான் அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். நான் அப்படி நினைப்பதைப் புரிந்து கொண்டவள் போல "ஏதாவது சொல்லுங்க சார்'' என்றாள் கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாகக் கவனித்தபடி.

""நிகலாய் கோகலின் "ஓவர் கோட்' மாதிரி நாமே ஆளுக்கு ஒண்ணு மாட்டிக் கிட்டு இருக்கோம்'' என்றேன்.

""அது யாரு நிகலாய் கோகல்?''

நான் நிகலாய் கோகலின் எழுதின "மேல் கோட்டு' சிறுகதை பற்றிச் சொன்னேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

பெண்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டும்தான் இப்படி மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். இங்கிதம் பார்க்காமல் நாசுக்குக்கான முனைப்பில்லாத சிரிப்பு அது. சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு "அப்புறம்?'' என்று ஆர்வமாகக் கேட்டாள்.

மேல் கோட்டு பற்றியில்லாமல் அங்கு பட்டாணி விற்றுக் கொண்டிருப்பவனைப் பற்றிச் சொன்னாலும் அமுதா ஆர்வமாகக் கேட்டாள். இது அமுதாவின் சுபாவம்.

நேரமாகிக் கொண்டிருந்தது. அவளுடைய மேடம் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த இடத்துக்கே சென்றோம். பெண்பால் புலவர்கள் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அவர்.

"ஒளவையார் என்ற பெயரில் பல பெண்பால் புலவர்கள் இருந்தார்கள். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவை வேறு. முருகனிடம் சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒüவை வேறு. சங்க காலத்தில் காதலைப் பற்றிப் பாடிய ஒளவைகளே அதிகம். ஆக, ஒளவைகள் என்றால் பாட்டி என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய இளம் ஒளவைகள் இருந்திருக்கிறார்கள்...''

வகுப்பு நடந்து கொண்டிருந்த அறையின் வராண்டாவில் நடை போட்டவாறு இருந்தோம்.

""நிஜமாகவா சார்?''

"ஆமா'' என்றேன்.

"நான் என்ன கேட்டேன். நீங்க எதற்கு ஆமா'னு சொன்னீங்க?'' என்று சிரித்தாள்.

"ஒளவைதானே?''

""சாரி சார். நான் ஏதோ நச்சரிக்கறதால சும்மாவாவது "ஆமா'னு சொல்லிட்டீங்களோன்னு நினைச்சேன்.''

""உங்களைப் போய் நச்சரிக்கறதா நினைப்பேனா?''

"நினைக்க மாட்டீங்க. ஆனா நான் நச்சரிக்கிறேன்னு எனக்கே தெரியும்.''

"அமுதா, ஒளவை நல்லா இருக்கணும்ணு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் கதையில ஒளவையை சின்னப் பெண்ணா கற்பனை செய்து பாருங்களேன்''

""நல்லா இருக்குல்ல?'' என்று வியந்தாள்.

"சங்க காலத்தில் இவ்வளவு பெண்பால் புலவர்கள் வேறு மொழிகளில் இருந்தார்களா'னு தெரியல. இங்க இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே பெண்கள் ரொம்ப சுதந்திரமா இருந்தாங்கன்னு தெரியுது. ஒளவையும் அதியமானும் இன்டலக்சுவல் ஃப்ரண்ட்ஸô இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது''

""இன்னைக்கு இங்கு வராம போயிருந்தா. இந்த அருமையான விஷயம் பத்திப் பேசாமப் போயிருப்போம் இல்லையா?''

நான் சொல்லுகிற விஷயத்தைக் கேட்டு அளவுக்கு அதிகமாகவே வியந்தாள் அமுதா. அவள் என் மீது வைத்திருக்கிற அன்பும் மரியாதையும் என்னைக் கவனத்துடன் பேசவைக்கும். ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்ட மாதிரி அஞ்சவும் செய்கிறேன் சில நேரம். அவளுடைய வியப்புக்கு உகந்த விஷயங்களைப் பேச வேண்டும் என்றும் அவள் என் மீது நம்பிக்கைக்கு உரியவனாக என்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் ஓயாமல் போராடுகிறேன்.

சட்டென்று மேகம் கவிழ்ந்து வடிகட்டிய சூரிய ஒளி வளாகம் முழுதும் சூழ்ந்தது. அமுதா மேடத்தைப் பார்த்து பட்ட மேற்படிப்பு முடித்து பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது குறித்துப் பேசிவிட்டு வந்தாள்.

அவளை ஹாஸ்டலில் கொண்டுபோய்விடும்போது நன்கு இருட்டிவிட்டது.

திடீரென்று அவளுக்கு மாப்பிள்ளை தேர்வாகிவிடவே, ஆபிûஸவிட்டும் ஹாஸ்டலைவிட்டும் அவள் விலகிக் கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு அந்தத் திடீர் தனிமை உலுக்கிவிட்டது ஆறுமாதம் ஹாஸ்டல் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் என்கூட நிழல்மாதிரி வியாபித்திருந்தவள் ஏற்படுத்தியிருந்த தாக்கம்.

இடையில் ஊரில் இருந்து அவள் "எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்'' என்று போன் செய்த போது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப்பட்டேன்.

அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது.

"அதனால என்ன சார். நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்''

எனக்குக் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

"அமுதா நீ ஏன் ஆம்பளையா பிறக்காமப் போனே? என்ன இருந்தாலும் நாம முன்னமாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?''

கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"முடியும் சார். நாம எப்பவும் போல இருக்கலாம் சார்... கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்''


அமுதா அவளுடைய திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கணவராகப் போகிற அதிர்ஷ்டசாலியும் கூட வந்திருந்தார்.

என் மகளுக்குக் கரடி பொம்மை, ஸ்வீட் என்று வாங்கிவந்திருந்தாள்.

அவர் என்னுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

"என்னுடைய ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு இவங்க வரணும்னும் இவங்களோட ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு நான் வரணும்னும் ஒப்பந்தம். என்னுடைய ஒரே ஒரு ஃப்ரண்ட் இவர்தான்னு சொன்னாங்க. அதான் உங்களை இன்வைட் பண்ண நானும்கூட வந்தேன்'' என்றார்.

"ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல்'' என்றாள் அமுதா குறுக்கிட்டு.

என் கண்கள் கலங்கின. என் நல்ல தோழிக்கு நல்ல கணவர் கிடைக்கப் போகிறார் என்று பூரித்தேன்.

என் மனைவி டீ எடுத்துக் கொண்டு வந்தாள். எங்கள் வீட்டில் உபசரிப்பு என்றால் டீ தான். இரண்டுபேருமே டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் அதைத் தடுத்துப் பார்த்தேன்.

அமுதா "இருக்கட்டும் சார், நான் சில வேளைகளில் டீ குடிப்பேன்'' என்றபடி "சொல்லுங்க சார்'' என்றாள்.

நான் எதை எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் ""கார்ட்டூன் படங்கள்ல டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும். சி.டி. இருக்கு பாக்றீங்களா?'' என்றேன்.

"போடுங்களேன்'' அதிர்ஷ்டக்காரர்தான் சொன்னார்.

பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். மனம்விட்டுச் சிரித்தாள். "பிரில்லியண்ட் காமெடி..'' என வியந்து கொண்டே அமுதா தன் ஹான்ட் பேகிலிருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.

நெல்லிக்காய்.


(ஆனந்தவிகடன் - 2003)

செவ்வாய், நவம்பர் 04, 2008

திரைக்குப் பின்னே- 6

விக்ரம் சுமந்த வேதாளம்!


ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு அதிக பட்சம் எத்தனை வாய்ப்புகள் வரை அனுமதிக்கலாம்?
நடிகர் விக்ரம் தன் கடைசிப் படத்தையும் நடித்து முடித்துவிட்டார் இனி அவ்வளவுதான் என்று முடிவு கட்டும் வரை தோல்வியையே சந்தித்தவர்.

கெனி என்று நண்பர்கள் வட்டாரத்திலும் குடும்பத்தினர் மத்தியிலும் அழைக்கப்படும் இவர் தன் பெயரை சினிமாவுக்காக விக்ரம் ஆக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் சினிமாவை வேதாளமாகத் தன் முதுகில் சுமந்து திரிந்தார். சிறுவனாக மான்ட்போர்ட் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளி நாடக மேடைகளில் ஆங்கில நாடகங்களில் எல்லாம் அசத்தியவர். நினைவு தெரிந்த நாள் முதல் எமக்குத் தொழில் என்று கனவு கண்ட ஒரு நடிகன்.
ஆனால் அவர் திரைப்பட நடிகராக அடையாளம் காணப்படுவது அத்தனைச் சுலபமாக நிகழ்ந்துவிடவில்லை. இத்தனைக்கும் அவரை வைத்துப் படமெடுத்தவர்கள் எல்லாம் சினிமா உலகின் ஜாம்பவான்கள்.




இயக்குநர் ஸ்ரீதர் இவரை வைத்து "தந்துவிட்டேன் என்னை' படமெடுத்தார். படம் ஓடவில்லை. தொடர்ந்து வெற்றிப்படங்களாக இயக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் விக்ரமன். இவரை வைத்து இயக்கிய புதிய மன்னர்கள் அவுட். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் இவரை வைத்து இக்கிய "மீரா 'காற்றினிலே கரைந்த கீதமாகிவிட்டது. நடிகர் அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனத்தின் மூலம் தமிழில் தயாரித்த "உல்லாசம்' பிக் பி யை ஸ்மால் பி ஆக்கியது.

தமிழ் சினிமா உலகில் முதல் இரண்டு படங்களில் சாதிக்க முடியாதவர்கள் செண்டிமென்டாக ராசியில்லாதவர்கள் பட்டியலுக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். விக்ரம் சில நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்திருந்தார். கையில் படங்களே இல்லை. பாலா இயக்கிய சேது படம் இரண்டு ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கலசா டப்பிங் தியேட்டரில் "சுந்தரபுருஷன்' படத்தில் நடித்த யாரோ ஒரு நடிகருக்கு டப்பிங் கொடுப்பதற்காக வந்திருந்தார் விக்ரம். முதலில் அவரைப் பார்த்ததும் அடையாளமே தெரியவில்லை. பாதியாக இளைத்திருந்தார். ""சார் என்ன இப்படி இளைத்துப் போய்விட்டீர்களே? உடம்புக்கு என்ன?'' என்றேன்.
"சேது' படத்தில் அப்படியொரு கெட்டப். மொட்டை போட்டு இளைத்து பிச்சைக்காரன் மாதிரி ஒரு வர்றேன். படம் எப்படியும் இந்த மாதத்தில் ரிலீஸôயிடும் படம் பார்த்துட்டு சொல்லுங்க'' என்றார். படம் அதற்குப் பிறகு ஒரு வருடம் ஆகியும் வரவில்லை.

படம் ரிலீஸ் ஆனது. இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்றெல்லாம்கூட எழுதினார்கள். விக்ரம் வேதாளத்தைப் பிடித்துவிட்டார். இதன் தயாரிப்பாளர் சினிமாவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பில்டிங் கான்ட்ராக்டர். டைரக்டர் பலமுறை ஒரே படத்துக்குப் பூஜை போட்டு நொந்து போனவர். முக்கிய கதாநாயகி இல்லை. இளையராஜா மட்டும்தான் ஒரே துருப்புச் சீட்டு.
ஆனாலும் என்ன விக்ரம் வெற்றி இப்படித்தான் ஆரம்பித்தது.

வெற்றிடச் சுமை!

பிரபலம் என்பது ஒரு பெருங்கனவு. இன்னுமொரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பிரபலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற பலரும் இன்று சாதாரணமாக வாழ்ந்துவிட்டுப் போனவர்களும் எல்லாம் சரிநிகர் சமானமாத்தான் இருப்பார்கள். காலம் மிகப் பெரிய கம்யூனிஸ்ட். அது எல்லாப் புகழையும் பிரம்மாண்டத்தையும் நிரவி வைத்துவிடுகிறது.
சினிமா புகழுக்கும் தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து நிறைய நினைவுகளைச் சொல்லலாம்.

சினிமாவில் சீட்டுக் கட்டு கோபுரம் போல சிறிய அளவில் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்தார் ராகசுதா. கடைசியாக ரோஜாவனம், தம்பி போன்ற படங்களில் நடித்தார்.
ஒரு நாள் காலை கண்ணீர் தேம்பலுடன் அவரிடமிருந்து ஒரு போன் கால்.
விஷயம் இதுதான்.

சாலிகிராமத்தில் அவர்களுக்கு ஒரு வீடு உண்டு. அதைப் படப்பிடிப்புக்காக வாடகைக்குவிட்டிருந்தார்கள். அந்த வீட்டில் ப்ளூ ஃபிலிம் எடுப்பதாக ஒரு செய்தியை ஒரு வார இதழ் எழுதியிருந்தது. அந்த வீட்டை ஒரு மானேஜரின் மேற்பார்வையில் விட்டுவிட்டதால் ராகசுதாவோ அவருடைய சகோதரியோ அவருடைய வயதான பெற்றோர்களோ அடிக்கடி போய் பார்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டதால் அப்படியொரு தவறு நடந்தும்கூட இருக்கலாம்.
ஆனால் எழுதிய வார இதழோ ப்ளூ ஃப்லிம் எடுப்பதற்காகவே வாஸ்து பார்த்துக் கட்டப்பட்ட வீடு என்று எழுதியிருந்தது. அதாவது அவர்கள் திட்டமிட்டே இப்படியொரு வீட்டைக் கட்டியதாக எழுதியிருந்தது அவர்களைப் பெரிதும் பாதித்தது. அவர்கள் வீட்டில் அப்படியொரு படப்பிடிப்பு நடைபெற்றதாகச் சொல்வது வேறு. அவர்களே அப்படித் திட்டமிட்டார்கள் என்பது வேறு.
ராகசுதாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சம்பந்தபட்ட வார இதழில் எனக்குத் தெரிந்த நண்பரிடத்தில் விளக்கினேன். என்னால் ஆன உதவி. மறுப்பு வெளியிட்டது.

"அண்ணா.. அண்ணா' என்று என் மீது அவருக்கு அத்தனை பாசம்.



கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் மைசூரில் உள்ள சுவாமி நித்யானந்தர் ஆசரமத்தில் சன்யாசினி ஆனார். அத்தனை சினிமா வெளிச்சத்தையும் வழித்துத் தூக்கி எறிந்துவிட்டு, எல்லாச் சொத்துக்களையும் துறந்து பக்தர்களுக்குச் சேவை செய்து வருகிறார்.
ஏன் இந்தத் திடீர் முடிவு என்றேன்.

"புகழ் என்பது வெறுமையால் அடைக்கப்பட்ட பெரிய சுமை. அதை நான் இறக்கி வைத்துவிட்டேன். வாழ்க்கையில் துன்பம் வந்தால்தான் சன்யாசி ஆவார்கள் என்பது தவறான அபிப்ராயம். மிகப் பெரிய மகிழ்ச்சிக்காகவும் சன்யாசி ஆகலாம் என்பதற்கு நான் ஓர் உதாரணம்'' என்றார்.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=460

திங்கள், அக்டோபர் 27, 2008

திரைக்குப் பின்னே - 5

தீபாவளி செலவுக்கு!


ஒரு தீபாவளி மலருக்காகப் பேட்டி காண ஆச்சி மனோரமா அவர்களின் வீட்டுக்குப் போயிருந்தேன். பழமையும் அழகும் கலந்த வீடு. சிவாஜி கணேசன் வீட்டுக்கு எதிர் தெருவில் அவருடைய வீடு. நான் போயிருந்த நேரத்தில் ஒரு சமையல் பணி ஆள் தவிர வேறு யாரும் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டில் அமைதி அப்பியிருந்தது. ஏதாவது பேச்சு சப்தம், குழந்தைகளின் ஆட்டம் பாட்டம், மிக்ஸி} கிரைண்டர் எதுவும் இல்லை. சோபாவில் தனியாக சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.
மனோரமா வந்தார். "என்ன கேட்கப் போறீங்க?'' என்றார். எவ்வளவோ சொல்லி முடித்த அலுப்பு.கொஞ்ச நேரத்தில் ஒரு பழம் சினிமா நடிகை வந்தார். ""என்னடியம்மா எப்படி இருக்கே...'' என அவர் மனோரமாவை விசாரித்தபோதும் அதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பப் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருந்தபோதும் நான் ஏதோ என் கிராமத்து உறவினர் வீட்டில் இருப்பது மாதிரிதான் இருந்தது. பேட்டி நின்றது.




வந்த நடிகை தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினியின் தாயாக வடிவாம்மாள் வேடத்தில் நடித்தவர். அவருடைய கண்களும் உருவமும் அவருக்குக் குயுக்தி படைத்த குறுமனப்பான்மை உடையவர் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அல்லது அந்த மாதிரி தோற்றமிருப்பவருக்கு குயுக்தி படைத்த வேடங்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று சினிமா இயக்குநர்களும் நினைத்தனர்.
கொஞ்ச நேரத்தில் நானும் அவர்கள் பேச்சில் கவனம் கொண்டேன். வந்த அம்மாள் குடும்பத்தின் வறுமையான சூழலைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் மிகவும் துன்புறுத்துவதாக அவர் கண்ணீர் வடித்தார். சினிமாவில் எல்லாக் குடும்பங்களையும் அழவைத்துப் பார்க்கிற வேடத்தில் நடித்த அவர் தன் பிரம்மாண்டமான உருவத்தோடு அழுது கொண்டிருந்தது சினிமா நடிகர்களைப் பற்றிய என் அத்தனை மனச் சித்திரத்தையும் கேள்விக்குறியாக்கியது.
மனோரமா ஆறுதல் சொல்லி தீபாவளி செலவுக்கு இருநூறு ரூபாய் பணம் கொடுத்தார்."கொண்டுபோய் புள்ள கிட்ட குடுப்பே. அவன் குடிச்சுட்டு வந்து இன்னும் ரெண்டு சாத்துவான்... '' என்றார்.
"என்ன பண்றது.. மேல இருந்து ஓலை வர்ற வரைக்கும் பட்டுத்தான் ஆவணும். அண்ணனைப் பார்க்கலாம்னுதான் வந்தேன். எங்கயோ வெளிய போயிருக்காராம்'' என்றபடி கிளம்பிப் போனார்.
போனதும் மனோரமா பேச ஆரம்பித்தார். "அண்ணன்னு சொல்லிட்டுப் போறாங்களே.. யார்னு தெரியுதா? சிவாஜி அண்ணனைத்தான் சொல்றாங்க. அவரைப் பார்த்தாத்தான் பொறாமையா இருக்கு. எவ்வளவு பெரியவீடு.. அந்த வீடு முழுக்க புள்ளைங்க, பெண்ணுங்க, பேரன், பேத்தினு ராஜாவாட்டம் இருப்பாரு. எங்க வீட்டையும் பாருங்க. சம்பாதிச்சு என்ன புண்ணியம்? அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்'' என்றார்.
பேட்டி முடிந்து கிளம்பி வரும்போது சிவாஜி வீட்டுப் பக்கம் ஸ்கூட்டரைச் செலுத்தி, கூட்டுக் குடும்ப சாம்ராஜ்ஜியம் நடக்கும் அந்த வீட்டை ஒரு தரம் நின்று பார்த்துவிட்டுக் கிளம்பினேன்.


மிஸ்டர் ரைட்!



"பாண்டியன்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரஜினியின் ஒரு புகைப்படம் மிகவும் பிரபலம். ஸ்டைலாக தலையைக் கோதிவிட்டபடி ரஜினி புன்னகைத்துக் கொண்டிருப்பார். ப்ரெüன் நிற பேண்ட்}சர்ட். அவர் அணிந்திருக்கும் பனியனில் "ரைட்' என்று டிக் செய்திருக்கும். அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் நண்பர் ஸ்ரீராம் செல்வராஜ்.
ரஜினியிடம் அவருக்கு நல்ல நெருக்கம் இருந்த சமயம் அது. புதிய கேமிராவும் புரோபிளிட்ஸ் லைட்டுகளும் வாங்கிவைத்துவிட்டு முதலில் படம் எடுத்தால் ரஜினியைத்தான் படம் எடுப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார் அவர். ரஜினியைச் சந்தித்து ஒரு முறை இந்தத் தகவலைச் சொன்னார். இந்த மாதிரி காதுகுத்துக் கெல்லாம் ஏமாறுகிறவன் இல்லை நான் என்று என்பது போல் ரஜினி, அதற்கெல்லாம் நேரமில்லை என்று கூறிவிட்டார். ஸ்ரீராம் சளைக்கவில்லை. ""நீங்கள் எப்போது நேரம் தருகிறீர்களோ அதுவரை இந்த கேமிராவைத் தொடமாட்டேன்'' என்று உறுதியாகக் கூறிவிட்டுக் கிளம்பினார். என்ன நினைத்தாரோ ரஜினி, கூப்பிட்டு நாளைக்கு ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்றார். மறுநாள் போனதும் எப்படி வேணுமோ எடுத்துக்கோ என்றுகூறினார். அப்படி இவருடைய பிடிவாதத்துக்காகவே ரஜினி தந்த போஸ் அது.




அவருடன் சென்று ஒரு முறை ரஜினியை அவருடைய வீட்டில் சந்தித்திருக்கிறேன்.இன்னொரு முறை நாங்கள் இருவரும் ரஜினியைத் தேடி மைசூரின் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தது தனிக்கதை.
"முத்து' படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்துப் பேட்டி கண்டு அந்தப் படத்தின் புதிய ஸ்டில்களையும் பிரசுரித்து அசத்துவதாக எங்களுக்குள் திட்டம். நான் அப்போது வண்ணத்திரையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

மைசூர் சென்று இறங்கியதும் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலை அணுகினோம். அவர்கள் படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்டதாகவும் மைசூர் சுற்றுப்பட்டில் ஏதோ கிராமத்துப் பெயரைச் சொல்லி அங்கு இன்று படப்பிடிப்பு நடப்பதாகவும் கூறினார்கள். நாங்கள் ஒரு கிராமத்து தகர டப்பா பஸ்ஸில் ஏறி அந்தப் பிராந்தியத்தை அடைந்த போது அந்த இடம் வெறுமையாகக் கிடந்தது. அங்கிருப்பவர்கள் சிலர் இன்னும் ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் படப்பிடிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அங்கு பஸ் எதுவும் இல்லை. நடையோ நடை என்று வேர்க்க விறுவிறுக்க ஓடினோம். அவர்கள் சொன்ன இடத்தை அடைந்த போது அங்கும் படப்பிடிப்புக்கான தடயம் எதுவும் இல்லை. ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் கன்னடம், இந்தி, தமிழ் எல்லாம் கலந்து பேசி விபரம் கேட்டோம்.
அவன் இன்னொரு மலைக் குன்றைக் காண்பித்து அதன் பக்கத்தில் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னான். அந்தப் பக்கம் போன மாட்டு வண்டியைப் பிடித்தும் சிறிது தூரம் நடந்தும் போய்ச் சேர்ந்தோம்.
சாலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. "ஒருவன் ஒருவன் முதலாளி'' என்ற பாடலின் படப்பிடிப்பு அது. ரஜினி குதிரை வண்டியில் பயணித்துக் கொண்டே பாடுகிற பாட்டு. இன்னும் சற்று தாமத்திருந்தாலும் அடுத்த ஐந்து கிலோ மீட்டர் பறந்திருப்பார்கள்.
ரஜினியிடம் போய் விஷயத்தைச் சொன்னார் ஸ்ரீராம் செல்வராஜ். தயாரிப்பாளர் சொல்லாமல் நான் பேட்டியோ, போúஸô தரமுடியாது என்று ரஜினி கறாராகச் சொல்லிவிட்டார்.பசியும், களைப்பும், முயற்சி தோல்வி அடைந்ததும் சேர்ந்து எங்களுக்கு அழுகை வராத குறையாக ஆனது. சென்னைக்கு எந்த திசையில் இருக்கிறோம் என்றுகூடத் தெரியவில்லை. ரஜினியின் முடிவுதான் பிரதானம். இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் நிலைமையை விளக்கலாம் என்று பார்த்தால் அந்த வார வண்ணத்திரையில் அவரைப் பற்றி ஏடாகூடமாக ஏதோ துணுக்கு வந்துவிட்டதற்காக வாட்டி எடுத்தார்.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினோம்.
"மண்ணின் மீது மனிதனுக்காசைமனிதன் மீது மண்ணுக்காசை ''என்று நாகராவில் பாடல்வரி ஓடியது. ரஜினி வாயசைத்துக் கொண்டிருந்தார்.



விளம்பரம் இல்லாத உதவி



திரையுலகில் எனக்கு அறிமுகமான நல்ல மனிதர்களில் சிவசக்தி பாண்டியன் ஒருவர். அவருடைய அலுவலகப் பணியாளர்கள் அனைவருமே எனக்கு நல்ல பரிச்சயம். கதை விவாதங்களில் இருந்த நேரங்களிலும் மிக முக்கியமானவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதுகூட நான் உரிமையாக அவர் அறைக்குள் சென்றுவர முடியும்.
ஒருமுறை ஆசிரியர் ராம.திரு. சம்பந்தம் "ஏம்பா சினிமா எடிட்டர்.. உன்னால இன்னைக்குள்ள ஒரு சினிமா விளம்பரம் வாங்கித் தரமுடியுமா?'' என்று கேட்டார். தீபாவளி மலரில் திடீரென ஒரு விளம்பரம் நிறுத்தப்பட்டுவிட்டதால் அந்த இடத்துக்கு அப்படி ஓர் அவசரம்.நான் சிவசக்தி பாண்டியனுக்குத்தான் போன் செய்தேன். அரைமணி நேரத்தில் விளம்பர டிசைனும் செக்கும் வந்தது சேர்ந்தது. ஆசிரியர் ஆச்சர்யப்பட்டார்.
நான் தினமணியில் பணியாற்றி வேலையை ராஜினாமா செய்து விட்டுச் சென்ற போது அப்போது விளம்பரப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமநாதன் என்னை அணுகினார்.சிவசக்தி பாண்டியன் தயாரித்த திரைப்படங்களுக்கான விளம்பரப் பணம் 60 ஆயிரத்துக்கு மேல் வரவேண்டியிருந்தது. அப்போது அப்படிப் பாக்கி வைத்திருந்த பலருடைய பேருக்கும் அலுவகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருந்தவர்களுக்குத்தான் நோட்டீஸ் அனுப்புவதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக அந்த மாத பாக்கிக்காக இவருக்கும் நோட்டீஸ் போய்விட்டது.



அந்தக் கோபத்தில் "நான் உங்களுக்கு இனி பணமும் தரமாட்டேன் விளம்பரமும் தரமாட்டேன்'' என்று உறுதியாகக் கூறியிருந்தார் சிவசக்தி பாண்டியன். நான் வேலையைவிட்டுப் போய்விட்டால் அந்த விளம்பரப் பணத்தை வாங்கவே முடியாது என்பதாலும் இனி அவரிடம் நட்புறவைத் தொடர்வதும் கேள்விக் குறியாக இருப்பதாலும்தான் எங்கள் விளம்பரப் பிரிவு அலுவலர் ராமநாதன் என்னிடம் முறையிட்டார்.
சிவசக்தி பாண்டியனைச் சந்தித்தேன். "இந்த விளம்பரப் பணத்தை நிறுத்தி வைத்திருப்பதால் உங்களுக்கு ஏதும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமா'' என்று கேட்டார்.
ஆமாம் என்று ஒரு பொய்யைச் சொன்னேன். என் மீது அவர் வைத்திருந்த மரியாதையை இப்படிப் பயன்படுத்திக் கொண்டதில் வருத்தம்தான். ஆனால் அலுவலகத்துடன் ஒரு சுமுக உறவுக்கு அது காரணமாக இருக்கும் என்று அந்தப் பொய்யைச் சொன்னேன். அடுத்த வினாடி செக்கைப் போட்டு என் கையில் கொடுத்தார்.
பிறகொரு சமயம் அவர் என்னிடம் நெருக்கடியான நேரத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார். அவருக்கு நான் உதவ முடியாமல் போன வடு இன்னும் எனக்குள் இருக்கிறது.

வெள்ளி, அக்டோபர் 24, 2008

பழையன புகுதலும்

விகடன் தீபாவளி மலரில் என் சிறுகதை




வாக்கியத்தின் குறுக்கே துருத்திக் கொண்டிருந்த வார்த்தை மாதிரி இருந்தது அவரைப் பற்றிய ஞாபகம். ஒரு வார்த்தையை ஆதாரமாக வைத்துக் கொண்டு வாக்கியத்தையே மாற்றியமைப்பதில்லையா சில சமயம்? எல்லாவற்றையும்விட முக்கியமாக அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸாவில் சறுக்கு மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்ப்புறம் இறங்கிக் கொண்டிருந்தார் அவர். எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று நான் பார்த்தபோதே அவர் என்னைப் பார்த்த பார்வையிலும் அதே தவிப்பை அவதானித்தேன். நாங்கள் இருவரும் நின்று நிதானித்து ஞாபகப்படுத்திக் கொண்டு புன்னகைக்கும் நேரம் வரை பொறுத்திருக்கவில்லை வழுக்கிச் செல்லும் படிக்கட்டு. அவர் ஒரு முனையிலும் நான் ஒரு முனையிலுமாக எதிரெதிர் திசையில் சேர்க்கப்பட்டோம்.
அவர் போயேவிட்டார் கடைசி வரை திரும்பிப் பார்த்தவாறே.

யாராக இருக்கக் கூடும் அவர்?

ஏறிய முன்னெற்றியும் புருவத்தின் மேல் இருந்த தழும்பும் சட்டென ஒரு பரிச்சயத்தை நினைவுபடுத்தியது.

ரொம்ப பழகினவர்தான் ஆனால் பார்த்து ரொம்பநாள் ஆகிவிட்ட ஆசாமி என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நின்று கேட்டுவிட்டிருக்கலாம் என்ற தவிப்பு நேரத்தோடு சேர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது.

வாங்கிய மறுநாளே பழுதாகிப் போய்விட்ட என் செல்பேசியைத் திருப்பிக் கொடுத்து புதிய ஒன்றை வாங்கிச் செல்வதற்காக நான் வந்திருந்தேன்.

விலை உயர்ந்த செல்பேசி. ஆனால் கடைக்காரன் அதை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைத் தர சம்மதிக்கவில்லை. கொடுத்துவிட்டுச் செல்லுமாறும் பழுதுபார்த்துத் தருவதாகவும் சொன்னான். சுளையாக பத்தாயிரம் ரூபாயைக் வாங்கிக் கொண்டு இப்படி அலைய வைப்பதைக் குறித்து ஒரு மூச்சு அழுதுவிட்டு ஓடிடும் மாடிப்படியில் இறங்கி வந்தபோது அவரைப் பற்றிய ஞாபகம் காந்தப் புலத்துக்குள் வந்துவிட்ட குண்டூசி மாதிரி வந்து ஒட்டிக் கொண்டது. எனக்கும் அவரை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரதானமாக இருந்தது. இன்று நான் செய்வதாக இருந்த மற்ற வேலைகளுடனோ, தேவைப்பட்டால் அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டோ அவரைக் கண்டுபிடிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். எனக்கு இன்று ஓய்வுநாள்தான். அவரைக் கண்டுபிடிப்பது பயனுள்ள வேலையாக இருக்கக்கூடும்.

அப்பு செட்டியார் பள்ளிக் கூடத்தில் ஆறாம் வகுப்பு சேர்ந்ததிலிருந்து அத்தனை வகுப்புத் தோழர்களையும் யோசித்துப் பார்த்தேன்.

ராஜேந்திரன், திருமூர்த்தி, வாசுதேவன், சங்கர், சேகர் , கண்ணன் வாத்தியார் என்று நினைவு பால்ய ஞாபகங்களாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் நானே வலுக்கட்டாயமாக அந்த ஞாபகங்களிலிருந்து விடுவித்துக் கொண்டேன். நிச்சயம் பள்ளித் தோழராக இருக்கமுடியாது. கடைசியாக வேலைபார்த்த நிறுவனத்தில் பணியாற்றியவராக இருக்கலாம் என பலரையும் நினைவுபடுத்திப் பார்த்தேன். சுத்தம். அவர் யாரிடமும் ஒப்பிடமுடியாமல் நழுவிக் கொண்டிருந்தார். எனக்கு அவரைக் கண்டுபிடிக்கிற ஆர்வம் மெல்ல மெல்ல சவாலாக மாறிக் கொண்டிருந்தது.

தொண்டைக்குள் மாட்டிக் கொண்ட மீன் முள்ளாக, பல்லிடுக்கில் திக்கிக் கொண்ட மாம்பழ நாராக என்னை வேறு சிந்திக்க விடாமல் தன் வசமாக்கிக் கொண்டார்.

வாழ்க்கையில் எதிர்பட்ட மனிதர்கள் அனைவரையும் வேகமாக ஓட்டிப் பார்த்தேன். கல்லூரி, வேலை பார்த்த இடம், வேலை தேடிய இடம், வாய்த்த அதிகாரிகள், பால் பூத் வரிசையில் நிற்கையில் பழக்கமானவர்கள், சக பயணிகள், கம்பெனி வாசல் டீக்கடைக்காரன், உறவினர்கள், கல்யாணடூ கருமாதி சடங்குகளில் பார்த்தவர்கள், சினிமா தியேட்டரில் வம்பு சண்டை செய்தவன், அவசரத்துக்கு ஸ்கூட்டரில் லிஃப்ட் கொடுத்தவன் , நண்பர்கள், விரோதிகள், துரோகிகள்... அட! ... அடப்பாவி... அவனா?


அடக் கொடுமையே... வாழ்க்கையில் உன்னைச் செத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று யாரைப் பார்த்துச் சொன்னோமோ அவனா? தண்டையார் பேட்டையில் இருக்கும்போது ஒரு சலூனில் சவரம் செய்து கொள்வதற்காக வந்திருந்த நாங்கள் இருவரும் அவசரத் தேவை நண்பர்களானோம். சவரம் செய்து கொண்டு எழுந்தபோது பாக்கெட்டில் சுத்தமாகக் காசே இல்லை. வேறு சட்டையை மாற்றிப் போட்டுக் கொண்டு வந்தது தெரிந்து ஒருமாதிரி தட்டுத் தடுமாறி கடைக்காரரிடம் விஷயத்தைச் சொன்னேன். கடைக்காரன் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு நம்பலாம்தான் என்று முடிவெடுப்பதற்குள் அடுத்து சவர நாற்காலியில் துண்டைத் தட்டிவிட்டு உட்கார்ந்தவாறே, ``பரவால்ல சார்.. நான் குடுத்திர்றேன். அடுத்த தடவை கொடுங்க'' என்று அறிமுகமாகி நாளாவட்டத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யும் அவர் என் பூர்வீக வீட்டை விற்றுத்தர முயற்சி எடுத்துக் கொண்டதும் ஜிவ்வென்று ஒரு நொடியில் ஓடியது.

ஞாபக மணல், விரலிடுக்கில் நழுவிக் கொண்டிருந்தது.

என் தங்கைக்குத் திருமண ஏற்பாடு. உமாவுக்கு முடிந்த கையோடு எனக்கு என்று பேச்சு. வீட்டை விற்றுத்தான் எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டியிருந்தது. காமராஜ் கூட்டி வந்த பார்ட்டிக்கு வீட்டைப் பிடித்துப் போனது. வருகிற புதன் கிழமை ஒரு லட்சம் அட்வான்ஸ் தந்துவிடுவதாகவும். அடுத்த இரண்டு மாதத்தில் கிரயம் செய்வதாகவும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கல்யாண பத்திரிகை அச்சடித்தவனுக்கு ஆரம்பித்து 20 பவுன் நகை, கட்டில், பீரோ, வீட்டுச் சாமான்கள் எல்லாம் வீட்டைவிற்றால்தான்.. கல்யாண செலவுக்கு ஒரு லட்ச ரூபாய் போக மீதி மூன்று லட்சம் கையில் நிற்கும். மீதி பணத்தை பாங்கில் பிக்ஸட் டெபாஸிட் போட்டு வைத்துவிடலாம் என்பது தாத்தாவின் திட்டம். நகையாக வாங்கி வைத்தால் பின்னாடி விற்றுக் கொள்ளலாம் என்பது அம்மா சொன்னது. ஏதாவது கடை வைக்கலாம் என்பது எனக்குத் தோன்றிய யோசனை.

``கன்ஸ்ட்ரக்ஷன்ல போட்டீங்கன்னா மூணே மாசத்தில டபுளாக்கிடலாம்'' என்றான் காமராஜ். சவரக்கடையில் கேட்காமலேயே ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து காலத்தினால் செய்த உதவி செய்ததை நினைத்துப் பார்த்தேன்.

``மீதி மூணுல ட்சத்தில கொளத்தூர் பக்கமா ஒரு இடம் வாங்கி வீடுகட்டி வித்தோம்னா ரெண்டு பங்கா லாபம் கிடைக்கும். அரை கிரவுண்ட்... ஒண்ணரை லட்சம், வீடுகட்றதுக்கு ஒரு ஒண்ணரை லட்சம்... ஏன் ரெண்டே முக்கால்லயே முடிச்சிர்லாம். அரை கிரவுண்ட் வீடு இப்போ தாராளமா அஞ்சரை ஆறு போகுது... வெரட்டி வேலைய முடிச்சா மூணுமாசத்துல வீட்ட எறக்கிட்லாம்.''

திட்டம் சரியாகத்தான் இருந்தது.

இரண்டு பங்கு லாபம் வேண்டாம். அம்பதாயிரம் அதிகமாகக் கிடைத்தாலும் லாபம்தானே? மூணு லட்சம் லாபம் கிடைக்கும் என்று சொல்லும் இடத்தில் அம்பதாயிரமாவது நிச்சயம். கிடைக்கும் என்று சொன்ன லாபத்தில் ஆறில் ஒரு பங்கு. பெரிய மனுஷன் பெயரை வைத்திருக்கிறான். சொன்னபடி நடந்து கொள்வான் என்றும் தோன்றியது. நல்ல உழைப்பாளி. நம்பகமான ஆள். போதாதா?

``சரி. ஜாக்கிரதையா இறங்கணும் ''

``நம்பி பணம் குடுக்கிறீங்க. நீங்க சொல்லணுமா?''

``எனக்கு மூணு லட்சம்கூட வேணாங்க. அம்பதாயிரம் போதும்.''

சிரித்தான்.

``அம்பதாயிரம் போதுமா?... சரி நான் ஒரு அம்பதாயிரம் போட்டு ஒரு லட்சமா தர்றேன். மீதி ரெண்டு லட்சம் எனக்கு போதுமா'' மறுபடி சிரித்தான். நான் போதும் என்று தலையாட்டினேன். ``என்ன சார் இந்தக் காலத்தில இப்படி இருக்கீங்க? டீல் படி உங்களுக்கு ரெண்டு லட்சம், எனக்கு ஒரு லட்சம் சார். இப்படித்தான் எல்லாருக்கும் பண்றேன்.''

``இப்படி நிறைய கட்டி வித்திருக்கீங்களா?''

``பழனி ஆண்டவர் கோவில் தெருவுல சீனிவாசன் தெரியுமா?... அட முன்னாடி கவுன்ஸிலரா இருந்தாரே? விபூதி பட்டை ... குங்குமம்..'''

அவன் குறிப்பிட்டவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை.

``அது பரவால்லங்க. மூணு மாசத்துல பணம் திரும்பிடுமா? ஏன்னா வீட்ல சமாளிக்க முடியாது.''

``சார் கல்யாண செலவைப் பாருங்க. மீதி பாங்க்ல இருக்கிற மாதிரி என்கிட்ட இருக்கட்டும். பிக்ஸட்ல போட்டா மூவாயிரம்கூட குடுக்க மாட்டான். நான் ரெண்டு லட்சம் தர்றேன் போதுமா? வாங்கிற இடத்தை உங்க மேலேயே "பவர்' பண்ணிக்கோங்க. வீடுகட்டும் போது கூட இருந்து வேலை செய்யறவனுங்களுக்குப் பணம் செட்டில் பண்ணுங்க.. யாராவது ஏமாத்திட முடியுமா? வீடு உங்க பேர்ல இருக்கு. பணமும் உங்ககிட்ட இருக்கு. நான் ஓடி ஆடி லாபம் சம்பாதிச்சுத் தரப் போறேன். அதுக்கு ஒரு பங்கு கூலி . பணம் போட்ட உங்களுக்கு ரெண்டு பங்கு லாபம்..''

பேச்சுக்காக ஒரு சந்தேகம் கிளப்பலாம் என்றால்கூட வாய்ப்பே தரவில்லை.

``கண்டிப்பா சேர்ந்து பண்ணுவம் சார்''
மூன்றே மாதத்தில் விற்றவீட்டைவிட பெரியவீடாக வாங்கிவிடவேண்டும் என்று மனதில் ஒரு அவசர சவால்.

வீட்டில் போய் விஷயத்தைச் சொன்னபோது யாரும் ரசித்ததாகத் தெரியவில்லை.

``ஏண்டா... மூணு லட்சத்துக்கு வீட்டை முடிச்சுட்டு ஆறுலட்சம்னு சொன்னா வாங்கிறவன் என்ன இளிச்சவாயனாடா? வாங்கிறவன் அங்க மெனை விலை என்னா, கட்டுமானத்துக்கு எவ்வளோ புடிக்கும்னு கணக்கு போடமாட்டானா? எல்லாரும் கால்குலேட்டர் வெச்சிருக்கான்டா உன்னாட்டம். அப்பிடியே எவனோ ஆறுலட்சம் குடுத்தாலும் அப்பிடி விக்கிறதுதான் நியாயமா?'' என்றார் தாத்தா.

காமராஜைப்போய் சந்தேகிக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது.

``ஆறு லட்சம் இல்லைனாலும் அம்பதாயிரம் கிடைச்சாலும் லாபம் தானே?'' என் ஆசையை வெளியிட்டேன்.

``அதெல்லாம் வேண்டாம்பா'' சின்னதாக மறுத்தார் அம்மா.

அப்பா எதுவும் பேசவில்லையென்றாலும் வில்லிவாக்கத்தில் புது வீடு மூன்று லட்சத்தில் விலைக்கு வருவதாகச் சொல்லி அதற்கான வில்லங்க சான்றிதழ் வாங்கும் வேலையில் இறங்கினார் அடுத்த நாளே. தாத்தாவுக்கு வில்லிவாக்கம் வீடு முழு சம்மதம். ``மூணு மாசத்தில் வில்லிவாக்கத்தில் வாங்கிப் போடுகிற வீடே அம்பதாயிரம் விலை ஏறிடும் நீ போட்ட கணக்குப்படி'' என்றார் தாத்தா என்னிடம் கண் சிமிட்டி.

விஷயத்தைச் சொல்லிவிட இரண்டு நாள்களாக காமராஜைத் தேடினேன்.

ஆள் அகப்படவில்லை. மூன்றாம்நாள் பார்த்தபோது, ``செந்தில் நகர்ல கார்னர் ப்ளாட் முக்கா கிரவுண்ட் விலைக்கு வருது. ரொம்ப சீப்பா பேசி முடிச்சிருக்கேன். ரெண் ரூபா. கார்னர் ப்ளாட் வீடுனா ஏழு ரூபாய்க்கு கண்ணை மூடிக்கிட்டு வாங்குவான்'' கண்களில் பெருமிதம் பூரிக்கச் சொன்னான் காமராஜ்.

எப்படி விஷயத்தை உடைப்பதென்று புரியவில்லை. இவ்வளவு சொன்ன பிறகும் நான் மெழ்னமாக இருப்பது அவனுக்கே உறைத்திருக்க வேண்டும்.

``என்ன யோசிக்கிறீங்க ? எதுவா இருந்தாலும் சொல்லுங்க'' என்றான்.
சொன்னேன்.

கையை முதுகுக்குப் பின்னால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்து மூச்சை இழுத்துவிட்டான். கால்கள் விரைத்து அகட்டி நின்றான். மனுஷன் முறுக்கிக் கொண்டான் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். எல்லாவற்றையும் சொன்னபிறகும் ``சரி. எனக்கின்னா சொல்றே?'' என்று பிரத்யேகமாகக் கேட்டான். அழுத்தம் திருத்தமாக ஒருமுறை கேட்டுக் கொள்வதைப் போல்.

``அதான் சொல்லிட்டனே''
``சரி. நீ போ.'' திடீரென அவன் ஒருமையில் விளித்தது ஒரு மாதிரியாக இருந்தது. ``அப்ப புதன்கிழமை அட்வான்ஸ் கொடுக்க காலைல ஒம்போது மணிக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க. வந்துருவீங்களா?''

நான் இல்லாத பக்கமாகத் திரும்பிக் கொண்டு தலையசைத்தான்.

வருகிறவர்களுக்கு கேசரியும் காபியும் செய்வதாக ஏற்பாடு. நடுவீட்டுத் தரையில் பெரிதாக துப்பட்டா விரித்து சாமி படத்துக்கு விளக்கேற்றி வைத்திருந்தாள் உமா. என்னென்ன டிசைனில் என்னென்ன நகைகள் வாங்க வேண்டும் என்று அவளுக்குக் கனவு.

அட்வான்ஸ் கொடுக்க வருகிறவர் வரும்போது சாப்பிட்டுக் கொள்வதாக தாத்தாவும் அப்பாவும் சொல்லிவிட்டதால் எல்லோரும் அதே முடிவைப் பின்பற்றினோம். காமராஜ் கோபத்தில் வராமல் இருந்துவிடுவான் என்று பார்த்தேன். சரியாக எட்டரைக்கெல்லாம் வந்துவிட்டான்.

ஒரு லட்சம் என்பது சேர்ந்தாற்போல பார்த்ததில்லை யாரும். பத்து நூறு ரூபாய் கட்டுகள். சின்ன ப்ரீப்கேஸில் ஒருமுறை அடுக்கிப் பார்க்க வேண்டும். அப்படியாக சினிமாவில் பார்த்தது. ``ஐநூர் ரூபாயா இருந்தா ரெண்டே கட்டுதான்'' என்று உமா சொன்னபோது அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என்று மனதுக்குள் விரும்பினேன்.

பட்டுப்புடவை பத்தாயிரத்துக்குக் குறையக் கூடாது என்பது சம்பந்திவீட்டாரின் வேண்டுகோள். அவர்கள் குடும்பத்தில் முதல் இரண்டு மருமகளும்கூட அப்படித்தான் அணிந்து வந்தார்களாம். அதில் அவ்வளவாக உடன்பாடு இல்லை போல உமா அலுத்துக் கொண்டாள். மருமகள் முறுக்கு . கல்யாண வீடு என்றால் இப்படியான இரு தரப்பு முறுக்கல்களுக்கும் பஞ்சம் இருக்காது. எப்படியோ கல்யாணம் முடிந்தால் அடிவயிற்று நெருப்பை இறக்கி வைத்துவிடலாம் என்ற திருப்தி அம்மாவுக்கு.

ஒன்பதரை ஆகி, பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. காமராஜைப் பார்த்துத் தாத்தா கேட்டார். ``வந்துருவாங்கல்ல?''

``போன் பண்ணி பார்க்றேன்'' என்றேன்.

``நீ சாப்பிட்றேம்பா'' என அம்மா காமராஜை வேண்ட, ``எல்லாரும் வந்திடட்டும்'' என்று எழுந்தான். நானும் எழுந்து ``போன் பண்ணிட்டு வந்திட்றேன்'' என்றபடி வெளியே வந்தேன்.

போன் போட்டதும் யாரோ பெண்மணி எடுத்தார். ``அப்சல் சார் இல்லீங்களா?''

``வெளியே போயிருக்காரு''

வைத்துவிடப் போகிறார்கள் என்ற அவசரத்தில் ``ஒரு நிமிஷங்க. தண்டையார் பேட்டையில இருந்து பேசறேன். எங்க வீட்டை வாங்கறதுக்கு அட்வான்ஸ் கொடுக்க வர்றேன்னாரு...''

``அவர் திருத்தணிக்கில்ல போயிருக்காரு..''

``இல்லங்க.. ஒம்போது மணிக்கு இங்க வர்றேன்னு சொல்லியிருக்காரு. வீட்ல சரியா கேட்டு சொல்லுங்க.. எல்லாரும் வெயிட் பண்றோம்.''

``நேத்து அப்படித்தான் சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்புறம் அதில ஏதோ மாத்தமாயிடுச்சுன்னு சொல்லிட்டுப் போனாரு''

``இல்லங்க.. இது..''

``நீங்க மீடியேட்டர் ராமு கிட்ட பேசுங்க...''

``நம்பர் இருக்குங்களா?''

குறித்துக் கொண்டேன்.

அடுத்து ராமு நம்பரை அழுத்துவதற்கு முன் காமராஜைப் பார்த்தேன். ``இன்னா கேன்சலாமா?'' என்றான் சந்தோஷமாக.

``ஏன் இப்படி சொல்றாங்கனு புரியலையே''

இவன் எதுக்கு இவ்வளவு சந்தோஷமாகக் கேட்கிறான். கேசரி செய்து வைத்துவிட்டு சாப்பிடாமல் காத்திருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

``சரி. நாளைக்கு நேர்ல போய் பேசிக்கலாம் விடு.'' புன்னகை மாறாமல் சொன்னான்.

``இல்ல. மீடியேட்டர் ராமு நம்பர் கொடுத்திருக்காங்க. பேசிப் பார்க்கலாம்.''

``அவன் யார்யா குறுக்க... வுடு நாளைக்கு காலைல முடிச்சிர்லாம்'' காமராஜ் காத்திருத்தவன் மாதிரி சொன்னதையே சொன்னான்.

நான் அவசரமாக ராமுவின் எண்ணைச் சுழற்றினேன். ரிஸீவரைப் பிடுங்கி வைப்பதில் அவசரமாக இருந்தான் காமராஜ். ``நாளைக்குப் பாத்துடுவோம்''

``ஹலோ ராமு சாருங்களா? நான் தண்டையார் பேட்டைல இருந்து பேசறன் சார்... அப்சல் சார் இன்னைக்கு அட்வான்ஸ் தர்ரேன்னு சொன்னாரு. எல்லாரும் வெயிட் பண்றோம்...''

``இன்னாய்யா விளையாட்றியா? என்னமோ நேத்து ஆளனுப்பி இப்ப வீட்டை விக்றதா இல்லனு சொன்னியாமே?''

``ஸார்... நான் ஏன் சார் அப்படிச் சொல்றேன். பெரியவங்கள்லாம் வெயிட் பண்றாங்க சார். அப்படி சொல்லியிருந்தா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பமா சார்?''

``காமராஜ்தான் வந்து சொன்னாருப்பா. முதல்ல விக்கிறதா இல்லனு சொன்னாரு... அப்புறம் அஞ்சு லட்சம் தந்தாதான் கொடுக்கமுடியும்னு சொன்னதா சொன்னாரு.. அப்புறம் அவரே அந்த வூடு அந்த வெல போகாதுனு சொல்றாரு .. நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்கன்றாரு... "நீ யார் பக்கம் பேசறே எழுந்து வெளிய போ'னு அனுப்பிட்டோம். இந்த டீலிங்கே வேணாம்னு திருத்தணில ஒரு மாந்தோப்பு வாங்கறதுக்குப் போயிட்டாரு'' தேவையில்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதாக நினைத்தானோ, என்னவோ துண்டித்துவிட்டான்.

``ரிஸீவரை இப்படி மூட்டை மேல வெச்சுட்டுப்போறியே... அதனாலதான் நான் யாருக்கும் போன் தர்றதில்ல'' மளிகைக் கடை நாடார் சத்தம் போட்டதும்தான் ரிஸீவரை ஒழுங்காக வைத்தேன். சூழ்நிலைக்குப் பொருந்தாத புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் காமராஜ். அவனே சொல்லட்டும் என்பதுபோல விரக்தியாக நின்றிருந்தேன். ஒருவேளை வந்து அட்வான்ஸ் கொடுத்துவிடுவார்களோ என்ற சந்தேகம் இருந்ததால்தான் வந்ததாகச் சொன்னான்.


``கொட்டினாத்தான் தேளு... இல்லாட்டி புள்ளபூச்சிதான். அதான் கொட்டினேன் '' என்று ஏதோ ஆரம்பித்தான். புள்ள பூச்சி என்றால் என்னவென்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தேள் தெரியும். `கொட்டிவிட்டேன்' என்று சொல்வது புரிந்தது.
அவனை ஞாபகப்படுத்துவதற்காக நான் பட்ட அவஸ்தையைவிட மறப்பதற்கு பல மடங்குப் பிரயத்தனத்தனப்பட வேண்டியிருக்கிறது இப்போது.

சனி, அக்டோபர் 18, 2008

திரைக்குப் பின்னே -4

முரட்டுக் கேள்வியும் மென்மையான பதிலும்!

பத்திரிகையுலகில் சங்கடப்படுத்தும் கேள்விகள் நிறைய கேட்க வேண்டியிருக்கும். அப்படிக் கேட்கும்போது கோபித்துக் கொண்டு பாதியில் பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு போகிற சம்பவங்கள் நிறைய இருக்கும்.

பொறுமையாகப் பதில் சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்ச் சினிமாவை மீண்டும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியவர் என்று ஏவி.எம். மெய்யப்பச் செட்டியாரைச் சொல்வதுண்டு. பாரதிராஜாவின் "பதினாறு வயதினிலே', மகேந்திரனின் "உதிரிப் பூக்கள்', பாலு மகேந்திராவின் "அழியாத கோலங்கள்', ருத்ரய்யாவின் "அவள் அப்படித்தான்' எனப் பரபரப்பில்லாமல் நிதானமாகவும் எதார்த்தமாகவும் கதை சொல்லும் பாணியை "முரட்டுக் காளை'யை வைத்து முட்டித் தள்ளிவிட்டார் அவர் என்பார்கள்.

நியாயமான குற்றச்சாட்டுதான்




ஏவி.எம். சரவணனை ஒருமுறை சந்தித்து இந்தக் கேள்வியைக் கேட்டேன். அதாவது ஏன் இப்படிக் குட்டிச் சுவராக்கினீர்கள் என்பதுதான் என் கேள்வி. பேட்டியின் பொதுத் தலைப்பு ஏடாகூடமான எட்டுக் கேள்விகள்... எட்டு கேள்விகளுமே இப்படித்தான் இருந்தன.
""எங்கள் நிறுவனத்தைப் பற்றி பலரும் இப்படி எழுதி முடித்துவிட்டார்கள். நேரில் கேட்டதற்கு ரொம்ப சந்தோஷம்'' என்று பொறுமையாக பதில் சொன்னார்.

""ஏவி.எம். ஸ்டூடியோ ஆரம்பித்த நேரத்தில் உருவான சுமார் 14 ஸ்டூடியோக்கள் இப்போது மூடப்பட்டுவிட்டன. அதில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலையும் போய்விட்டன. எங்கள் நிறுவனமும் அந்த நேரத்தில் சுமார் பத்து ஆண்டுகளாகப் படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருந்தது. எங்கள் ஊழியர்களின் நிலையும் கேள்விக்குறியாக இருந்தது. அவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கக் கூடிய படங்கள் எடுக்க வேண்டுமானால் பிரம்மாண்டமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். "முரட்டுக் காளை', "சகலகலாவல்லவன்' போன்ற படங்கள் எடுத்தோம். நல்லவிதமான டிரண்டை ஒரேயொரு "முரட்டுக் காளை' வந்து மாற்றிவிடும் என்பது வீண்பழி. மக்கள் ஒரே மாதிரியான படங்களைத் திரும்பத் திரும்ப பார்ப்பதில்லை. அவர்களுக்கு அடிக்கடி விருப்பங்கள் மாறிவிடும். அது மாதிரி ஒரு சூழலும் அப்போது இருந்தது. படத்தை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்; தொழிலாளர்களின் வாழ்வும் காப்பாற்றப்பட்டது. இதுதான் நடந்தது''' என்றார்.

அடுத்த கேள்வி. "பாரதியாரின் கவிதைகளை மெய்யப்பச் செட்டியார் முடக்கி வைத்திருந்தார். நாட்டுடமை ஆக்குவதற்குத் தடையாக இருந்தார் என்கிறார்களே?''

""பாரதியாரின் பாடல்களுக்கான ஆடியோ உரிமையை அப்பா வாங்கி வைத்திருந்தார். அதை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டதும் உடனடியாக அப்பா சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அதற்கான நஷ்ட ஈடாக ஒரு தொகையைக் கொடுக்க அரசு முன் வந்த போதும் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தவர்கள், அவசரப்பட்டு ஏற்படுத்திய பழி அது''

எந்த ஆவேசமான கேள்விக்கும் மிக அமைதியாகப் பதில் சொல்ல முடியும்தான்.

காலம் செய்த கோல்மால்!

நான் பார்த்த நடிகர்கள் பலரும் ஆரம்பத்தில் பத்திரிகையாளரிடம் மிகுந்த தோழமை காட்டுவார்கள். "நமக்குள்ள என்ன தலைவா' எனப் பதறிப் பதறி பறிமாறுவார்கள். படம் வெளியாகி ஓடிவிட்டால் அவர்களின் மேனேஜர், பி.ஆர்.ஓ., செக்யூரிட்டி, ரசிகர் மன்றத்தலைவர் என ஏழுகடல் தாண்டி எட்டாவது கடலில் கிளி வயிற்றுக்குள் பதுங்கிக் கொண்டு சந்திக்க முடியாதவர்களாக அவர்களே தங்களைச் சிறைப்படுத்திக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
நடிகர் செல்வா அப்படியோர் அபூர்வமனிதர். நல்ல திரைக்கதை ஞானம் உள்ளவர். அவருடைய அண்ணன் டாக்டர் ராஜசேகரின் எவனா இருந்தா எனக்கென்ன, மீசைக்காரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். அண்ணன் தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த நேரத்தில் இவர் தமிழில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். "தம்பி ஊருக்குப் புதுசு', "மதுரை மீனாட்சி,' "மாமியார் வீடு', "மைந்தன்' போன்ற படங்களில் நடித்தார். கோல் மால் என்றொரு படத்தை இயக்கியுமிருந்தார்.

ஒருநாள் அவர் வீட்டில் எல்லோரும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும் இரவு தன்னுடன் இருக்க முடியுமா என்றும் கேட்டார். நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். காரில் இரவு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தோம். வீட்டில் லேஸர் டிஸ்க் போட்டு ஹோம் தியேட்டரில் படம் போட்டு காண்பித்தார். அப்போது (1991) லேஸர் டிஸ்க், புரெஜெக்டர், ஹோம் தியேட்டர் என்பதெல்லாம் இந்தியாவில் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறது என்று எண்ணிவிடலாம். அவர் கட்டிலில் என்னைப் படுத்துத் தூங்க வைத்தார். அவர் தரையில் படுத்துக் கொண்டு தூங்கினார். அவருடைய பல பிரத்யேக கனவுகளை, காதலை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வார். சினிமாவில் நிறைய சாதிக்க முடியும் என்று நம்பிக்கை அவருக்கு இருந்தது.




"அகிலன்' என்று ஒரு படம் அவரை வைத்து ஆரம்பிக்கப் பட்டது. அந்தக் கதையை என்னிடம் சொல்லி அந்தப் படம் வந்தால் தனக்கு மிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்று சொன்னார். அந்தப் படத்துக்காக மொட்டை அடித்துக் கொள்ள இருப்பதாகவும் அதற்குள் வேறு சில கமிட்மென்டுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்தப் படம் தயாராகாமல் போனது. நடுவே நான் முன்னின்று அவரை "மைந்தன்' படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தேன். என் நண்பர் புகழேந்தி இயக்கிய படம் அது. அந்தப் படத்தையும் அவர் மிகவும் நம்பினார். அதுவும் சரியாக ஓடவில்லை. ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் மகளோடு அவருக்குத் திருமணம் ஆனது. அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.

அவர் நடிக்க இருந்து நின்றுபோன படம் ஒருவேளை வெளியாகியிருந்தால் அவர் பெரிய நட்சத்திரமாக மாறியிருப்பார். "அகிலன்' படம் பின்பு "சேது' என்ற பெயரில் விக்ரம் நடித்து வெளியானது. "சேது' படத்தைத் தெலுங்கில் வாங்கி செல்வாவின் அண்ணன் ராஜசேகர் நடித்தார். செல்வா அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் ஒத்தாசையாக இருந்தார். காலம் செய்யும் கோல்மால்?

நினைத்துப் பார்க்கும்தோறும் வருத்தமாக இருக்கிறது.

கடவுளைத் தேடி...

மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டு வந்த மாதிரி இருக்கிறது என்றார் கெüதமி. மார்பக புற்றுநோய் ஏற்பட்டு மீண்டு வந்த பிறகு அவரைச் சந்தித்தபோதுதான் அப்படிச் சொன்னார். பேட்டி மிகவும் தத்துவரீதியாக அமைந்தது. அவருடைய அப்பா பெரிய டாக்டர். ரமண மகரிஷியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு வைத்தியம் பார்த்த நால்வரில் ஒருவர். நாத்திகவாதி. "யூ.ஆர். அனந்தமூர்த்தி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பற்றியெல்லாம் சிறுவயதில் அப்பா தனக்கு நிறைய சொல்வார்' என்றார் கெüதமி. பெங்களூர் கான்வென்டில் கெüதமி படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய பள்ளியில் எதற்காகவோ மாணவிகளிடம் அவர்கள் வழிபடும் தெய்வம் பற்றி கேட்டிருக்கிறார்கள். கெüதமிக்கு எந்தத் தெய்வத்தை நம் வீட்டில் வணங்குகிறார்கள் என்பதே தெரியவில்லை.




அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று அப்பாவுக்கு போன் செய்திருக்கிறார்.

"உனக்கு ஏதாவது சாமி பிடிச்சா அதன் பெயரைச் சொல்லிவிடு'' என்று கூறிவிட்டாராம்.
பேட்டி முடிந்து கிளம்பும்போது அவருடைய மகள் அங்கே பூனையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

"உங்கள் மகள் என்ன சாமியைக் கும்பிடுகிறார்?'' என்றேன்.

"அவளிடமே கேளுங்கள்'' என்றார்.

கேட்டேன். "உனக்குக் கடவுள் யார்?''

அந்தச் சிறுமி ஆள்காட்டி விரலால் தன் நெற்றியைக் காட்டினாள்.

செவ்வாய், அக்டோபர் 14, 2008

திரைக்குப்பின்னே-3

கார்கில் நிதி எங்கே?




வேகத்தின் மறு பெயர் அஜீத்.

பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார். அதே போல் கார் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அப்படியொரு வெறி. "அஜீத் போன்ற நடிகர்கள் இப்படியான ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுரை சொன்ன தயாரிப்பாளருக்கும் "எனக்கு அறிவுரை சொல்ல எந்த நாய்க்கும் உரிமையில்லை'' என்று அவசரமாக பதிலடி கொடுத்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். காலில் சக்கரம் கட்டியவர். அவர் ஓட்டாதது எனக்குத் தெரிந்து ரயில் மட்டும்தான். எந்திரப் படகு ஓட்டுவதிலும்கூட அவருக்குத் திறமையிருந்தது.



இதே வேகம் அவருடைய நட்பிலும் இருக்கும். பழகிவிட்டால் அப்படி பாசம் காட்டுவார். அவர் அலுவலகத்துக்குப் போனால் மற்றவர்களுக்கு முன்னால் அவர் நம் மீது ஏற்படுத்தும் முக்கியத்துவம் ஆச்சர்யப்படுத்தும். 'முகவரி' படப்பிடிப்பில் அவர் எனக்கு ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவிதம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. என் மீது மிக உயர்வான மரியாதை இருந்தது. அதே போல பத்திரிகையாளர்களில் என் மீது கோபப்பட்டது மாதிரி வேறு யாரிடமும் கோபப்பட்டிருப்பார் என்றும் சொல்ல முடியாது.

சினிமா தொழிலாளர்களும் தயாரிப்பாளர்களும் பெப்சி- படைப்பாளி என்று பிரிந்திருந்தபோது அஜீத் தொழிலாளர் பக்கம். அப்போதே நிறைய தயாரிப்பாளர்கள் இவர் மீது விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்கள். 'வாலி' மட்டும் தோல்வி அடைந்திருந்தால் அப்போதே அஜீத் வதமாகியிருப்பார். தொடர்ந்தது அஜீத்தின் பாய்ச்சல். சினிமாவில் எந்தவிதக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வந்தவராக இருந்தும் அவருடைய வெற்றிகளினால் மட்டுமே எழுந்து நின்றார். 'ஜனா', 'ராஜா', 'ஆஞ்சநேயா', 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' எனத் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன. "என்ன சார் தொடர்ந்து தோல்விப் படமா கொடுக்கிறீங்களே'' என்றேன். தன்னம்பிக்கையோடு பதில் சொன்னார். "இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா? என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்'' என்றார். ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதைவிட துணிச்சலான பதிலில் சிறிது நேரம் சிலாகித்து நின்றுவிடுவேன்.

கார்கில் போரின் போது திரைப்பட நட்சத்திரங்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தினார்கள். கலைநிகழச்சி நடத்தி பணம் சேகரித்தார்கள். அஜீத் மட்டும் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டேன். "இத்தனை கோடி ரூபாயை கொட்டிக் கொடுப்பது எதற்காக... ராணுவ வீரன் செத்துப் போனால் அதற்கு ஈட்டுத் தொகை தருவதற்கு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் தருகிற பணம் செத்துப் போன அந்தச் சகோதரர்களின் குடும்பத்துக்கா போகிறது? இங்கே தமிழ் நாட்டில் ஏழெட்டு ராணுவ வீரர்களை கார்கில் போரில் இழந்திருக்கிறோம். நாம் கார்கில் நிதி தந்ததால் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? நாம் கொட்டிக் கொடுத்த பணம் எங்கே போனது'' என்றார்.

நானும் 'கார்கில் நிதி எங்கே, கணக்கு கேட்கிறார் அஜீத்' என்று எழுதினேன். மறுநாளில் இருந்து அஜீத்தை யாரும் தூங்கவிடவில்லை. தேசபக்திக்கு எதிரானவர் என்று சிலரும் தமிழ்த்திரையுலகுக்கே எதிரானவர் என்றும் தி.மு.க.வுக்கு எதிரானவர் என்றும் அவருடைய தலை உருண்டது.

"நான்தான் சொன்னேன் என்றாலும் நீங்களும் அப்படியே போட்டுவிடுவதா?'' என்று கோபித்துக் கொண்டார். இந்த மாதிரி ஒரு கோபத்துக்குப் பிறகு நானும் அவரிடம் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்தேன்.

குஷ்பு-சுந்தர்.சி. திருமணம். பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. அஜீத் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். "ரொம்ப சாரி'' என்றார். வேறு எதுவுமே பேசவில்லை. சுமார் பத்துமுறை அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொன்னார். வருத்தம் தெரிவிப்பதிலும் அவ்வளவு வேகம்.

சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்!

எதெல்லாம் தமிழ் சினிமாவில் முடியாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிற ஆர்வம் இயக்குநர் ஷங்கருக்கு உண்டு. சாலையெல்லாம் பெயிண்ட் அடிப்பது, ஒரு லட்சம் பானைகளை வாங்கி அதன் நடுவே நடிகர்களைப் பாடி ஆட வைப்பது, உலக அதிசயங்களையெல்லாம் ஒரே பாட்டில் காட்டுவது, கமல்ஹாசனை 70 வயதுக் கிழவனாக நடிக்க வைப்பது என்று தொடர்ந்து அவர் படத்தில் சில அம்சங்கள் இருக்கும். எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினையைப் பிரமிப்பான விதத்தில் தீர்த்து வைப்பது அவருடைய பாணி. ஊழலை வர்மக் கலை தெரிந்த கிழவன் தீர்த்து வைப்பது, லஞ்சமும் ஜாதிய வெறியும் உள்ள அரசியல் வாதியை ஒரு நாள் முதல்வனாக இருந்து தீர்த்துக் கட்டுவது, அப்பளம் போடும் அப்பாவி (போன்ற?) பிராமணன் ஒருவன் தமிழ்நாட்டு போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது என்று ஒருவிதமான சுவாரஸ்யத்தைக் கண்டுபிடிப்பார். அதற்கு கிராபிக்ஸ், பிரமாண்டம், பாம்பே நட்சத்திரங்கள், கங்காரு, ஒட்டகம், ஏ.ஆர்.ரஹ்மான், பானை, ஓட்டை உடைசல் பாட்டில்கள் எல்லாம் சேர்ப்பார். அவருடைய தனித் திறமையே எல்லாருடைய திறமைகளையும் (சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்) மிக லாவகமாக ஒருங்கிணைப்பதுதான்.



குமுதம் இதழில் பணியாற்றியபோது அவருடைய வாழ்க்கைப் படிப்பினை மூலமாகப் புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு நம்பிக்கை தருகிறமாதிரி ஒரு தொடர் எழுத உத்தேசித்தோம். நீண்ட யோசனைக்குப் பிறகு அந்தத் தொடருக்கு சம்மதித்தார். சங்கரூ... என்று அழைக்கப்பட்டவர் ஷங்கர் ஆன கதை அது. தலைப்பு 'சங்கர் முதல் ஷங்கர் வரை' என்று வைத்தோம். என்னென்னவெல்லாம் எழுதலாம், தன் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க வேண்டியவர் யார், யார்? திருப்பு முனை ஏற்படுத்தியவர் யார்? என்றெல்லாம் நிறைய சொன்னார். அதையெல்லாம் பட்டியில் இட்டுக் கொள்வதற்காகவே நான்கைந்து நாள்கள் பேசினோம். "நீங்கள் எழுதிக் காட்டுங்கள். எப்படி வந்திருக்கிறது என்று நான் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன். அப்புறம் அச்சுக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்றார். எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லியாகிவிட்டது. கதை விவாதம் போல அவ்வளவு சிரத்தையாக அதில் ஈடுபட்டார். எங்கள் சந்திப்பின் போது வேறுயாரையும் சந்திக்க மாட்டார். போன்கூடப் பேச மாட்டார். எனக்கும் சேர்த்து அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். அவ்வளவு கவனத்தோடு இருந்தார். பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள்.

அந்த வாரக் குமுதத்தில் அறிவிப்பும் வைத்தோம். அறிவிப்பைப் பார்த்துவிட்டு ஷங்கர் எனக்கு போன் செய்தார். "இந்தத் தொடரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை, நிறுத்திவிடுங்கள்'' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குமுதம் நிர்வாகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை. அலறி அடித்துக் கொண்டு அவருடைய அலுவலகத்துக்கு ஓடினேன்.

"ஏன் ஸார்?''

"வாரா வாரம் என்னிடம் பேசிவிட்டு நீங்களாகத் தொகுத்து எழுதுவதாகத்தானே பேசினோம்.. 'ஷங்கர் எழுதும்' என்று அறிவிப்பு வைத்தால் என்ன அர்த்தம்?''

"சினிமா துறையினர் வாழ்க்கைத் தொடர் எல்லாமே அப்படித்தான். அவர்கள் சொல்ல சொல்ல அதைப் பத்திரிகையாளர் எழுதுவார்கள்... அவர்கள் எழுதுவதாகப் போடுவார்கள்.''

"நீங்கள் எழுதுவதாக வந்தால்தான் இதற்கு நான் சம்மதிப்பேன். அல்லது நானே எழுதித் தரவேண்டும் என்றால் இப்போது எனக்கு அதற்கு நேரமில்லை.''

"நீங்கள் எழுதுகிறீர்கள் என்று போட்டால்தான் எங்கள் விற்பனைக்கு உதவும்'' என்றேன். கடைசி வரை சம்மதிக்கவே இல்லை.

ஆசிரியர் குழுவில் பேசினேன். ஒவ்வொரு வாரமும் தொடரின் இறுதியில் 'சந்திப்பு: தமிழ்மகன்' என்று வெளியிடுவதாகக் கூறினார்கள். அதன் பிறகே அந்தத் தொடர் வெளியானது.

அவருடைய பிடிவாதத்தில் ஒளிந்திருந்த மெல்லிய நேர்மையையும் எதிலும் எடுத்துக் கொள்ளும் கவனத்தையும் ரசித்தேன். அவருடைய முதல் படத்தின் டைட்டிலைப் போலவே அவர் இருந்தார்.




ஒரு சமையல் குறிப்பு:

டி.வி.யில் மைக்ரோவேவ் சமையல் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை வினோதினி.

எனக்குள் அவர் குறித்து வேறு சமையல் குறிப்புகள் ஓடின.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வடபழனி கமலா திரையரங்குக்குப் பின்புறம் ஒரு வாடகை வீட்டில் இருந்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் வண்ண வண்ணப் பூக்கள் மூலமாக கதாநாயகியாக ஆன நேரம். பத்திரிகையாளர்கள் யாராவது சென்றால் அவர் வீட்டில் சாப்பிடாமல் வெளியேறவே முடியாது. அவரே தோசை வார்த்துப் பரிமாறுவார். டீ போட்டுத் தருவார். அவருடைய அம்மாவும் அப்படிப் பரிமாறுவார்கள். வீட்டில் இருந்தால் மட்டும்தான் என்றில்லை. படப்பிடிப்பில் பார்க்கும்போதும் புரடக்ஷன் ஆள்களைக் கூப்பிட்டு "இவருக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்'' என்பார். ஆச்சர்யமாக இருக்கும்.




ஒருமுறை "எதற்காக இப்படி வற்புறுத்துகிறீர்கள். எனக்குப் பசிக்கிறது என்றால் நானே கேட்கிறேன்'' என்றேன்.

அவர் ஒரு சம்பவம் சொன்னார். அப்போது தாய் பத்திரிகையில் (89- 92 வாக்கில் ) மனோஜ் என்றொரு பத்திரிகையாளர் இருந்ததாகவும் சிறிய வயதில் சரியான நேரத்தில் ஒழுங்காகச் சாப்பிடாததாலேயே அவர் சின்ன வயதில் இறந்து போனதாகவும் சொன்னார். "பத்திரிகையாளர்கள் செய்திக்காகச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பல பத்திரிகைகளில் ஒழுங்காகச் சம்பளமும் கொடுப்பதில்லை. என்னால் முடிந்தது அவர்களைச் சாப்பிட வைப்பதுதான்'' என்றார்.

இத்தகைய குறைந்தபட்ச கொள்கைகளில்தான் எவ்வளவு நியாயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

வியாழன், அக்டோபர் 09, 2008

திரைக்குப் பின்னே - 2

அந்திமத்தில் அணையும் விளக்குகள்





நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் 'முதல்குரல்' என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். ('பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்' டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.


நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக 'ஒன்ஸ்மோர்', 'என் ஆச ராசாவே', 'பூப்பறிக்க வருகிறோம்', 'மன்னவரு சின்னவரு,' 'படையப்பா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் 'அலை ஓசை' மணி, 'குமுதம்' செல்லப்பா, 'தேவி' மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்...? பதில்: "தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?'') கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.


இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. "சாப்பிட்டோம் சார்'' என்றால் "ஆமா. அதை முடிக்கணும் முதல்ல'' என்பதில் கிண்டல்.


ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே "நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?'' என்றார். "உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்'' என்றேன். "அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.'' என்றபடி கமலம் அம்மாவை அழைத்து "பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்'' என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து "இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு'' என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை "நல்லா சூடா இருக்கா?'' என்று வம்பு செய்தார்.


பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.

ஸ்ரீவித்யாவின் பிடிவாதம்

'சங்கமம்' படத்தின் படப்பிடிப்பில் விந்தியாவைப் பேட்டி காண வாசன் ஹவுஸுக்குப் போயிருந்தேன். பெரிய நட்சத்திரப் பட்டாளம். ரகுமான், 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, டெல்லி கணேஷ், விஜயகுமார், ஸ்ரீவித்யா இன்னும் சில உப நடிகர்கள் சூழ்ந்திருந்தனர். சுரேஷ்கிருஷ்ணா இயக்கம். விஜயகுமார் ஏதோ கோபமாகச் சொல்ல எல்லாக் கலைஞர்களும் நாதஸ்வரம், தவில் போன்ற தம் இசைக் கருவிகளையும் மூட்டை முடிச்சுகளையும் எடுத்துக் கொண்டு கிளம்புவதாகக் காட்சி.


ஒத்திகைக் காட்சியின்போது எல்லோரும் இயக்குநர் சொன்னது மாதிரி நடித்துக் காண்பித்தனர்.அடுத்து டேக்.. 'வெண்ணிற ஆடை' மூர்த்தி அவராக ஒரு வசனம் பேசினார்.
"என்ன எல்லாரும் அவங்கவங்க சாமான்களைக் கையில புடிச்சிக்கிட்டுக் கிளம்பிட்டீங்க?'' என்றார். இது அவருடைய டிரேட் மார்க் வசனம்.


எல்லோரும் சிரித்து ரசித்தனர். சுரேஷ்கிருஷ்ணாவும் நகைச்சுவையாக இருக்கும் என்று சம்மதம் போல விட்டுவிட்டார்.


ஸ்ரீவித்யா மட்டும் சம்மதிக்கவே இல்லை. "வேண்டாம்ணே... இந்த வசனம் இந்தக் காட்சிக்கு இருக்கிற சீரியஸ்னஸையே கெடுத்திடும்'' என்றார் வெ.ஆ. மூர்த்தியிடம். கடைசியில் அந்த வசனத்தை நீக்கிவிடுவதாக சுரேஷ்கிருஷ்ணா உறுதியளித்தார்.படத்திலும் அக் காட்சி இடம்பெறவில்லை.


ஆய்த எழுத்து

சூர்யா - ஜோதிகா காதல் விவகாரம் பற்றி பத்திரிகைகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்த நேரம். சூர்யாவின் அப்பா சிவகுமார் இப்படி அவர்களின் காதலைப் பற்றி எழுதிய ஒரு வார இதழுக்கு போன் செய்து கெட்ட வார்த்தையில் அரைமணி நேரம் திட்டியதாகவும் செய்திகள் பத்திரிகையாளர்கள் மத்தியில். இந்த நேரத்தில் என்னை சூர்யாவைச் சந்தித்து அவர்களின் காதலைப் பற்றிக் கேட்கச் சொல்லியிருந்தார்கள்.


வேறு எந்தப் பத்திரிகையாளருக்குமே சந்திக்க நேரம் கொடுக்காதவர் எனக்கு மட்டும் நேரம் கொடுத்திருந்தார். அவருக்குப் பிடிக்காத இந்தக் கேள்வியைக் கேட்டு அவர் நம் மீது வைத்திருக்கும் மரியாதையைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்று யோசனையாக இருந்தது.


அவருடைய வீட்டில் அவருடைய அம்மா தயாரிப்பில் அருமையான காபி ஒன்றைக் குடித்துவிட்டு பேச அமர்ந்தோம். சூர்யாவுக்கு ஒரு போன் வந்தது. "சரி காரில் போய்க்கிட்டே பேசுவோமா?'' என்றார்.




காரில் கிளம்பினோம். அபிராமபுரம் கடந்து கார் போய்க் கொண்டிருந்தது. நான் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அலுவலகம் எதிர்பார்க்கிற கேள்வியை இன்னும் கேட்காமலேயே வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஜோ பற்றியெல்லாம் கேட்க வேண்டாம் என்ற ஒப்புதலோடுதான் பேசுவதற்கே சம்மதித்திருந்தார். ஒரு வீட்டின் முன்பு கார் நின்றது. "இதோ வந்திட்றேன். இது யார் வீடு தெரியுமில்லே..?'' என்றார்.


"தெரியவில்லை'' என்றேன்.


"இது மணிரத்னம் வீடு. 'ஆய்த எழுத்து' சம்பந்தமா பேசணும்னு வரச் சொன்னார் அதான் அவசரம்'' என்றபடி காரிலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கார் சீட்டில் அவருடைய பர்ஸ். கத்தையாகப் பணம். துருத்திக் கொண்டு தெரிகிறது. கார் ஏசி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையாகப் பழகுகிறார் என்று பெருமையாக இருக்கிறது.


ஆனால் இனி நேரமில்லை அவர் வந்ததும் மெல்ல கொக்கி போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். வந்தார். தி. நகர் நோக்கி கார் போய்க் கொண்டிருந்தது.


"நீங்க தப்பா நினைக்கலனா'' என்று என் கேள்வியை ஆரம்பித்தேன். அவர் புரிந்து கொண்டு திரும்பிப் பார்த்தார். நானும் அதைப் பற்றித்தான் என்பதுபோலப் பார்த்தேன்.


கொஞ்ச நேரம் கார் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சங்கடப்படுத்துகிற வேலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. "உங்களுக்கு விருப்பமில்லையென்றால் வேண்டாம்'' என்றேன்.


அவர் முகத்தில் ஒரு வினாடி வாட்டம். பின் சுதாரித்து "இந்த மாதிரி கேட்பதுதான் உங்க வேலை... ஆனா எனக்கும் கல்யாண வயசில் தங்கை இருக்கிறா. ஆனா என்னவெல்லாமோ எழுதறாங்க. நிறைய பொய் எழுதிடறாங்க. விஷயம் என்னோட முடிஞ்சுடில. வீட்ல எவ்வளவு பிரச்சினை ஏற்படுது தெரியுமா?'' என்றார்.


அலுவலக எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக 'காதல் பற்றி சூர்யா' என்று தலைப்பிட்டு அவர் கடைசியாகச் சொன்னதையே பதிலாக எழுதினேன்.


பேட்டி நன்றாக இருந்ததாக சூர்யா சொன்னார். அலுவலகத்திலும் 'சூப்பர்' என்றார்கள்.

தமிழ்மகன்

திங்கள், அக்டோபர் 06, 2008

திரைக்குப் பின்னே- 1

உயிரோசையில் என் சினிமா அனுபவ தொடர் வேலையாகிறது. அது இங்கே...

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி!




நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.

தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்..சந்திரசேகரன் (அப்போது எஸ்.. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.

விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.

``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.

பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.




அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்..சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

எடிட்டர் கேட்ட கேள்வி: ``பையன் என்ன பண்றாரூனு சொல்லவேயில்லையே''



சன் டி.வி. நடிகைகளும் நானும்!


சன் டி.வி. ஆரம்பித்த நேரம். சன் டி.வி. பார்க்க வேண்டுமானால் அதற்கான ஆண்டெனா ஒன்றும் வாங்க வேண்டும். அதன் விலை 12 ஆயிரம். அப்போது டி.வி.யின் விலை சுமார் 4 ஆயிரம் சன் டி.வி. பார்க்க ஆன்டெனா வாங்க 12 ஆயிரம் என்றால் யார் டி.வி. வாங்குவார்கள்? சன் டி.வி. பரவலாக அறியப்படாமலேயே இருந்தது. அந்த நேரத்தில் சன் டி.வி.க்கு பேட்டி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்கவே மாட்டார்கள். நான் அப்போது வண்ணத்திரையில் பொறுப்பாசிரியராக இருந்தேன். என்னை அணுகி நடிகைகளிடம் அனுமதி வாங்கித் தருமாறு டி.வி.யில் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் கேட்பார்கள். நானும் அப்போது வளர்ந்து வரும் நிலையில் இருந்த சில நடிகைகளிடம் சன் டி.விக்குப் பேட்டியளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போது பல நடிகைகள் என்னிடம் வைத்த கோரிக்கை: ``வண்ணத்திரையிலும் அந்தப் பேட்டியைப் பிரசுரிப்பீர்களா?''

வண்ணத்திரையில் பேட்டி வெளியிட்டால்தான் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களும் உண்டு.



என் ஞாபகம் சரியாக இருந்தால் செண்பகா, வினோதினி, யுவராணி, சொர்ணா, ரேஷ்மா, மடிப்பு அம்சா உள்ளிட்ட பலர் அப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

தினமணிக்குப் பிறகு மீண்டும் ஒரு நடை வண்ணத்திரையில் பணியாற்றப் போனேன். வண்ணத்திரையை விளம்பரப்படுத்த சன் டி.வியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என இதழின் நிர்வாக இயக்குநர் தயாநிதிமாறனிடம் கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்தேன். பலமுறை நோட் எழுதினேன். ஒருமுறை அவர் தோள்மீது கை போட்டபடி தெளிவாகச் சொன்னார். ``வண்ணத்திரை விளம்பரமெல்லாம் சன் டி.வி.யில போட்டா நல்லா இருக்காது தமிழ்''

உண்மைதான். வண்ணத்திரையில் பேட்டி போட்டால் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களில் முக்கால் வாசிப்பேர் சன் டி.வி. சீரியல்களில் பத்தோடு பதினொன்றாக நடிக்கப் போய்விட்டதை நானும் புரிந்து கொண்டேன்.




அவதாரங்களின் பின்னால்...

திரைத்துறையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு மிக அமைதியாக இருப்பவர்களில் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஒருவர். அவர் படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகும். ஆனால் அவர் படம் எந்தப் பத்திரிகையிலும் வெளியானதில்லை. இதுவரை பலநூறு படங்களை விநியோகித்தவர். பல திரைப்படங்களைத் தயாரித்தவர். சசியை இயக்குநராக அறிமுகப்படுத்திய "ரோஜாக்கூட்டம்', விஜயகாந்தின் மார்க்கெட்டை உயர்த்திய "வானத்தைப் போல', "ரமணா', ஷங்கர், சுஜாதா, விக்ரம் கூட்டணியில் தயாரான "அந்நியன்', கமலின் "தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்கள் உலக அளவில் பிரபலம். ஆனால் இவர் எப்படியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. "வானத்தைப் போல' திரைப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. அப்போதும்கூட இவர் சார்பாக இவருடைய தம்பிதான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வளவு ஏன் ஜாக்கிசானின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து இந்திய வெளியீட்டு உரிமையை வாங்கித் திரையிட்டு வருகிறார். இவருடைய அழைப்பை ஏற்றுத்தான் சென்னையில் நடைபெற்ற தசாவதார பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு அவர் வந்திருந்தார். அந்த விழா மேடையில்கூட அவர் இடம் பெறவில்லை. ஏன் விழாவுக்கேகூட வந்தாரா என்று தெரியவில்லை.



திரைப்படங்கள் தயாரிப்பது பெயருக்காகவும் புகழுக்காகவும்தானே? அது இரண்டையும் இப்படி உதறித் தள்ளுகிறாரே என்று இவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யப்பட்டுக் கேட்பேன்.

"படம் எடுப்பது நம் வேலை, அவ்வளவுதான்'' என்பார்.

சரி சினிமா எடுத்து ஆடம்பரமாக வாழ்வதில் ஆர்வம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. மிக எளிமையான உடை. சாதாரண டீ சர்ட். சாதாரண பேண்ட். கைகளில் மோதிரங்கள் மின்னாது. இவ்வளவு ஏன் அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. பகட்டாகச் சுற்றித் திரிவதும்கூட இல்லை. பெரும்பாலும் பச்சை கேரட்டும் கறிவேப்பிலையும் காலை ஆகாரம்.

ஒருமுறை அவரும் நானும் வடபழனி சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். காலை நேரம் பொங்கலும் காபியும் சாப்பிடுவதாக உத்தேசம். எங்களுக்கு பரிமாறுவதற்காக வந்த ஓட்டல் ஊழியர், வணக்கம் சார் என்றார் ஆஸ்கார் ரவியைப் பார்த்து. வணக்கமும் பொங்கலும் சொல்லி அனுப்பிவிட்டு பதற்றத்தோடு என்னிடம் கேட்டார்: "அவருக்கு என்னை எப்படித் தெரிந்தது?.. விசாரித்துச் சொல்லுங்களேன்'' என்று கேட்டுக் கொண்டார்.

காபி வைக்கப்பட்டதும் சாதாரணமாக விசாரித்தேன். இவரை உங்களுக்குத் தெரியுமா?

சர்வர் "தெரியுமே'' என்றார்.

"எப்படி?''

"டைரக்டர் சசி சாரோட கார் ஓட்டிக்கிட்டு வருவாரே?'' என்றார்.

சர்வர் போனதும் ரவி நிதானமாக விவரித்தார். "ரோஜாகூட்டம் நேரத்தில நானும் சசியும் அப்பப்ப இங்க சாப்பட வருவோம். நான் டிரைவர் வெச்சுக்கிறதில்லை. எப்பவும் நான்தான் ஓட்டிக்கிட்டு வருவேன். சசியோட டிரைவர்னு நினைச்சுட்டார் போலருக்கு'' என்றார்.
பலகோடிகள் போட்டு அவர் தயாரிக்கும் படங்களைவிட பிரமிப்பாக இருந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin