ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2009

கட்டில் தோழன்


முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா குஞ்சு பொறித்துவிடுமா? அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நான் வந்து சேர்ந்து இரண்டாவது முறையாக அது முட்டை இட்டு, வீணடித்துவிட்டது. கால் இடறி முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன.
இந்த ஆஸ்பித்திரியில் சேர்க்கப்பட்ட யாரும் உயிர் பிழைத்துப் போனதாக சரித்திரமே இல்லை. எந்த ஆஸ்பித்திரியில் சேர்ந்தாலும் சாகாமல் தப்பித்து இருக்க முடியுமா என்ன? ஆனாலும் இந்த ஆஸ்பித்திரிக்கு ஒரு பிரத்யேக லட்சணம் உண்டு. அதைச் சொல்கிறேன். எல்லோரும் மரணமடைவதற்காகவே இங்கு வந்து சேருவதாகப் பட்டது. இத்தனைக்கும் பெரிய சிபாரிசு இருந்தால்தான் அங்கு சேர முடிந்தது. ஐஐடியில் படிக்க இடம் கிடைத்த மாதிரிதான் எனக்கு இங்கு இடம் கிடைத்தது. மனிதர்களுக்கு இருக்கும் உயிராசைதான் இந்த ஆஸ்பித்திரி நடப்பதற்கான ஆதாரம். ஒருநிமிடமாவது ஆயுளை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கடைசி சொட்டு ஆசை இருக்கிறவரை இதற்கு பூர்ண ஆயுசுதான்.
சொத். இருந்த இன்னொரு முட்டையையும் உருட்டி உடைத்துவிட்டது அந்தப் புறா. அந்த இடம் புறாக்கள் முட்டையிடுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல, மழை நீர் வடிந்து செல்வதற்காக துத்தநாகத் தகட்டால் அடிக்கப்பட்ட "ப' வடிவ கால்வாய். மேலே இன்னொரு மாடி கட்டிவிட்டதால் இதன் வழியாக மழைநீர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. நிர்வாகமும் அதைக் கழற்றுவதற்கான செலவைவிட அதை அப்படியே விட்டுவிடுவது லாபம் என்று நினைத்திருக்கலாம்.


புறாக்கள் ஓயாமல் சிறகுகளை கோதிவிட்டபடி இருந்தன. அந்தப்புரத்து ராணிகள் தலைகோதியபடியே இருப்பது போன்ற ஞாபகத்தை ஏற்படுத்தின. அது சப்ஜா வகைப் புறா. இந்தியாவில் அதற்கு அப்படித்தான் பெயர். இறக்கைப் பகுதியில் இரண்டு கோடுகள் இருக்கும். அவசரத்தில் ஒரு விரலின் விபூதி சரியாகப் பூசப்படாத சைவ நெற்றி போல.
நேற்று மூட்டையாகக் கட்டித் தூக்கிச் செல்லப்பட்டவரின் படுக்கையில் இன்று வேறு ஒரு ஆசாமியைக் கொண்டுவந்து கிடத்தினார்கள். உயரமானவர். திடகாத்திரமாகவும் சிவப்பாகவும் இருந்திருப்பார் என்று தோன்றியது. ஒரு யூகம்தான். இங்கு வருகிறவர்கள் ஒட்டி உலர்ந்து போய் மொட்டை அடிக்கப்பட்டு போன மாதம் பார்த்தவருக்கே அடையாளம் தெரியாமல் போய்விடுவதுண்டு. நிறைய பேரை அப்படிப் பார்த்த அனுபவத்தில் இங்கு வந்து சேருகிறவர்களின் கடந்த மாத உருவத்தை உருவகிக்கும் திறன் எனக்கு அதிகமாகிவிட்டது.
இப்போது வந்தவர் பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர் என்றார்கள். எப்பேர்பட்ட சிம்மமாசனத்தில் இருந்தாலும் நோய்படுக்கை ஒன்றுதான். அடடா எப்படியெல்லாம் சிந்திக்கிறேன். இருந்தாலும் அவர் சிட்டிகை போட்டால் எல்லோரும் அவர் எதிரில் குனிந்து ஏவல் செய்ய காத்திருந்தனர்.
"ஏன் ஜெனரல் வார்ட்ல போட்டிருக்கீங்க?'' என்று அவர் கேட்டபோது, வேறு அறை எதுவும் காலியாக இல்லை என்பதைச் சொல்ல பதறினர். உடன் வந்திருந்த நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நான் "வேறு அறை எதுவும் காலி இருந்திருந்தால் சேர்த்திருப்பார்களே?'' என்றேன்.
அவரைப் போலவே ஒடுங்கிப் போய் படுத்திருந்த இன்னொரு மொட்டைத் தலையனான என்னைப் பார்த்து அவருக்குக் கோபப்படுவதா? சிரிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னைப் போல் சிரிப்பதற்கு அவருக்கு தைரியம் பத்தாது. அவர் கோபம்தான் பட்டார். அதையும் பார்வையால் மட்டும்தான் படமுடிந்தது.
"எந்த ஊர்?'' என்றார் கம்பீரமாக கேட்கும் தொனியில். ஏற்கெனவே பழகியவர்களாக இருந்தால் மேற்படி வாக்கியத்தின் இறுதியில் இருக்கும் "கேட்கும் தொனியில்' என்ற வார்த்தைகள் தேவைப்பட்டிருக்காது.
"சென்னைதான்'' என்றேன்.
அதை அவர் அலட்சியமாக ஏற்றார். தென் தமிழகத்தில் இருந்து வருகிற பலர் அப்படித்தான். சென்னைவாசிகள் அடாவடியாக ஆட்டோ கட்டணம் வசூலிப்பவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
என் பக்கத்துக் கட்டிலில் புதிதாகச் சேர்ந்தவரைப் பார்க்கப் புதிதாக ஒரு தம்பதி வந்திருந்தது. அவர்கள் பொருத்தமான ஜோடியாகத் தோன்றவில்லை. இந்த நேரத்தில் எனக்கு இப்படியொரு ஆராய்ச்சி தேவையா? என்னால் ஒருவிஷயத்திலேயே தொடர்ச்சியாகச் சிந்தனையைச் செலுத்த முடியவில்லை. மரண நிமிடங்கள் என்னை அப்படி அவசரப்படுத்துகிறதோ என்னவோ? இருக்கப் போகிற நாள்களில் நல்ல விஷயங்களாக நினைப்போம் என்று முடிவெடுத்தேன். நல்ல விஷயங்களைப் பட்டியலிட முயற்சி செய்தேன்.
எனக்கு வயிற்றில் புற்று இருப்பதாக முடிவானது. வயிறு வீக்கம் கணிசமாக இருந்தது. கதிர்வீச்சு தெரபி சிகிச்சைகள் முடிந்து இப்போது ஈமோதெரபியில் வந்து நிற்கிறது. கட்டிலில் படுத்துக் கொண்டு உலகத்தை வெறித்துக் கொண்டிருப்பதற்கு எதற்காக இவ்வளவு வைத்தியம், எதற்காக இத்தனை செலவு? வயிற்றுக்குள் ரப்பரை வைத்துத் திணித்தது போல இருக்கிறது. தேவையில்லாத எதையோ திணித்து வைத்திருப்பதுபோல இருக்கிறது வயிற்றுக்குள். சுமப்பது தலைவலியாக இருந்தது. கையைவிட்டு வயிற்றுக்குள் பிசைய முடிந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ச்சே... நல்ல விஷயமாக நினைக்க வேண்டும்.
புறா முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பதைப் பார்க்க வேண்டும் என்பது குறைந்தபட்ச ஆசையா? பேராசையா? அதுகூட வேண்டாம்.
பக்கத்துப் படுக்கையில் இருப்பவரைச் சிரிக்க வைப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாம். முடியும் என்று தெரியவில்லை. அவருக்கு எரிச்சல் கொண்ட முகம். நன்றாக இருந்த நாளிலேயே சிரித்தவராகத் தெரியவில்லை.
அல்லது புதிதாக வேலைக்கு வந்திருக்கும் இளம் மருத்துவர் செங்கோட்டையைச் சேர்ந்தவராக இருப்பார் என்று யூகித்ததை உறுதிப்படுத்த முடிந்தால்கூட நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.
இப்படியொரு படுக்கையில் இருந்து கொண்டு வேறு நல்ல சிந்தனை கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நல்ல உடம்புக்குள்தான் நல்ல சிந்தனை இருக்கும். நல்ல சிந்தனை என்றால் என்ன என்ற குழப்பம் தொற்றியது. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது நல்ல சிந்தனைதான். பின்லேடன், மகாத்மா காந்தி எல்லோரும் நீடூழி வாழ்க. யாருக்கும் தீங்கு இல்லாமல் சிந்திப்பது எப்படி உடலும் உயிரும் பற்றி சிந்திக்கலாம் என்று ஆசையாக இருந்தது. நமக்கு ஏற்பட்டிருக்கிற இந்த உபாதையெல்லாம் உடலுக்குத்தான். உயிரை இந்த வலிகள் எதுவும் செய்வதில்லை. பால் பாயிண்ட் பேனா ரீபிள் போல. மேலே உள்ள கூடு உடைந்திருந்தாலும் நசுங்கியிருந்தாலும் ரிபீள் நன்றாக இருந்தால் எழுதும். உபயோகப்படுத்த முடியாமல் போனால் இந்த ரீபிளை வேறு பேனா கூட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.... அட.. இப்படியொரு உதாரணத்தை யாராவது சொல்லியிருப்பார்களா?
ஆனால் இது உயிர், உடலுக்குச் சிறந்த உதாரணமாகத் தெரியவில்லை. ரீபிள் தீர்ந்து போனால் வேறு ரீபிள் போடுவது மாதிரி இந்த உடம்புக்குப் புது உயிர் போட முடியுமா என்ன? எதையுமே சிந்திக்க வேண்டாம் என நினைத்தேன். மண்டைக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதாக நினைப்பது சந்தோஷமாக இருந்தது. யார் அடுத்துப் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது என வேறுபக்கம் திரும்பியது. நல்லது, நல்லவர் என்பதெல்லாம் என்ன என்ற குழப்பம் தொற்றி அசதி ஏற்பட்டது.




"ஹாட் வாட்டர்'' என்றார் பக்கத்துக் கட்டில் பெரியவர். ஆனால் அவருடன் வந்தவர்களோ, அவரைப் பார்க்க வந்த தம்பதியோ பக்கத்தில் இல்லை. என் ப்ளாஸ்க்கில் இருந்து கொஞ்சம் சுடுதண்ணீரை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். அவருடைய தலையைச் சற்றே உயர்த்தி பருகச் செய்தேன். அவர் என்னை நல்லவன் என்று நினைத்திருக்கலாம். இந்தச் செயலுக்குப் பெயர் நற்செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? நல்லவன் என்று அவர் நம்மை நினைக்காமல் போயிருக்கக் கூடுமெனில் "யார் இவன்' என்று நினைத்திருக்கலாம். நல்லவன் என்பதும் யார் இவன் என்பதும் ஒன்றுதான்.
"உனக்கு எவ்வளவு நாளாக இருக்கிறது?'' என்றார்.
"ஒரு வருஷமாக'' என்றேன்.
"எனக்கு ரெண்டு வருஷம் ஓடிவிட்டது. ப்ராஸ்டேட்டில் கேன்ஸர். வலியும் இப்போதெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஓல்டு டிஸ்டம். இனி தாளாது. அலுவலகத்தில் என்னை "ஃபயர் பிராண்ட்' என்பார்கள். சிங்கம் போல இருந்தேன். நான் அப்படி இருக்கக் கூடாது என்பது காலத்தின் ஆசை போலும்.''... அவருடைய ஆங்கில உச்சரிப்பு தமிழ்போல இருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் தேவைக்கு அதிகமாக இழுத்து உச்சரித்தார்.
நோய்வாய்பட்டு படுத்திருப்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கும் என்பார்கள். பெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. சிங்கம் போல இருப்பவர்களுக்குத்தான் வருகிறது. என்னை முயல் என்று சொல்லலாம். அதாவது முயல்போல துறுதுறுவென இருந்தேன் என்பதைவிட, இவரைப் போன்ற சிங்கங்களுக்கு "ஒருவாய்' உணவாக இருந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும்.
"எல்லோர் முகத்திலும் சவக்களையாக இருக்கிறது. அப் கோர்ஸ் என் முகத்திலும்தான். தனி ரூம் கேட்டிருக்கேன்'' என்றார். என்ன நினைத்தாரோ கொஞ்ச நேரம் கழித்து ""உன் முகத்தில் அந்தச் சாயல் தெரியவில்லை'' என்றார்.
மரணத்தை எதிர் கொள்ளும் உறுதி தெரிந்தது. அவர் சொன்னதில் ஓல்டு சிஸ்டம் இனி தாங்காது என் ற வார்த்தை பிடித்திருந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் எது தெரிந்திருக்கிறதோ இல்லையோ, இது தெரிந்திருக்கும். "வயசாகிவிட்டது. இனி தாக்குப் பிடிக்க முடியாது' அதை ஒத்துக் கொள்வதில் எவ்வளவு தயக்கம் பலருக்கும்.

ஆயா படுக்கையில் விழுந்தபோது தாத்தா பதறி அடித்துக் கொண்டு அவரை ஆஸ்பித்திரிக்குத் தூக்கிச் செல்லாதது இரக்கமற்ற தன்மையாக தோன்றியது. ""ஒண்ணும் வேண்டியதில்லை. அவ ஆனந்தமா இருக்கா'' என்று ஸ்ருதி பெட்டியை இயக்கியபடி ""ஹரே ராம கிருஷ்ணா... ஜெயராம கிருஷ்ணா'' என்று பாட ஆரம்பித்தார். ஆயாவின் முணகலைக் கேட்கவிடாமல் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தார். பட்டிக்காடு அது. ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டுமானால் டாக்ஸி வரவழைத்து பதினைந்து கிலோ மீட்டராவது பயணிக்க வேண்டும். அந்தத் தூரத்தில் 24 மணி நேர மருத்துவமனை ஒன்று உண்டு. பெரும்பாலும் கம்பவுண்டர் வைத்தியம்தான். யார் கையால் செத்தால் என்ன என்பது போல் அவனிடம் போய் கொண்டிருந்தார்கள் மக்கள். எப்போதெல்லாம் பாட்டி வலி பொறுக்கமுடியாமல் கத்துகிறாளோ அப்போதெல்லாம் தாத்தா ஸ்ருதி பெட்டியைப் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தபடி முகுந்தா, வைகுந்தா, முருகா, ஆனை முகத்தானே என்று ஒரு சாமிப்பாட்டு பாடினார். உடம்பு ஊதி, நீர் கோர்த்து முதுகுப் புண்ணால் துடித்தார் பாட்டி. ஐந்தாம் நாளில் அடங்கிவிட்டது. ""அவ்வளவுதான். எடுத்துடுங்கப்பா'' என்றார். திண்ணையில் போய் அமர்ந்து கொஞ்ச நேரம் கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருந்தார். அதில் ஆர்ப்பாட்டம், மிகை உணர்ச்சி எதுவும் இல்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார். "பொழுதோட எடுத்துடுங்கடா'' என்றார் பலமுறை. சடங்குகள், சாங்கியங்கள் இருந்தன. பாட்டி விடைகொடுக்கும் தைரியமும் தன் மரணத்தை எதிர் நோக்கும் திராணியும் எனக்குப் புதிய அனுபவங்கள். சுற்றத்தார் எல்லோரும் அந்த அனுபவத்தைக் கிரகித்துக் கொள்ளாதது ஆச்சர்யமாக இருந்தது.
என்னை அழைத்து "பசியா இருக்குடா.. சாப்பிட ஏதாவது இருக்குமா பாரு... இல்லாட்டி நாடார் கடையில கடலை உருண்டை ரெண்டு வாங்கியாந்து குடு'' என்றார்.

"மிஸ்டர். நான் தனி ரூம் கேட்டு வாங்கிட்டேன். முதல் மாடி. நேரம் இருந்தா வா'' என்றார் பக்கத்துப் படுக்கைப் பெரியவர்.
"வருகிறேன்'' என்றேன்.
"இது ராக் பிக்யான் தானே?'' புறாவைக் காட்டிக் கேட்டார்.
"இதை பந்தயக்காரர்கள் சப்ஜா என்பார்கள்''
"சப்ஜா..? புறா ஒவ்வொர் முறையும் இரண்டு முட்டைப் போட்டதும் அடைகாக்க உட்கார்ந்துடும். ஒரு முட்டைக்கும் அடுத்த முட்டைக்கும் சுமார் இரண்டு நாள் இடைவெளி இருக்கும். முதல் முட்டை ஆண், இரண்டாவது முட்டை பொட்டை... பொட்டை எப்பவுமே இரண்டாவதுதான்... ஹா.. ஹா.. ஹா''
"பொட்டைதான் எப்பவும் புதுசு... ஆம்பளை எப்பவுமே பழசு'' என்றேன்.
"ஹா.. ஹா.. லாஜிக்''
அவரை சக்கரம் வைத்த படுக்கையில் வைத்து லிஃப்ட் பக்கம் நகர்த்திக் கொண்டு போனார்கள். படுத்தபடியே "வர்றேன்'' என்றார்.

தாத்தா மரணத்துக்குத் தயாரானது பலருக்கும் தெரியாது. பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கலும் கடலை பருப்பு வடையும் உற்சாகமாகச் சாப்பிட்டவர் அடுத்த சில நாளில் பேதியும் வாந்தியுமாகப் படுத்தார். என்ன உற்சாகம் அவருக்கு. "அவ்வளவுதான்டா... கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. அப்பப்ப ஓடியாந்து சுத்தம் பண்ண வேண்டியதில்லே. ஒரு நாளைக்கு ஒரு தரம் போதும். மருந்து மாத்திரை, ஆஸ்பித்திரி எதுவும் வேண்டாம். என்னை இங்க அங்க தூக்கிட்டுத் திரியாதீங்க'' என்று தீர்மானமாக அறிவித்தார். கை காலெல்லாம் நீர் கோர்த்து முதுகுப் புண்ணோடு மிகவும் போராடினார். பாட்டியாவது ஐந்து நாளில் போய் சேர்ந்தார். இவர் இரண்டு மாதம் கிடந்து துடித்தார். பக்கத்தில் இருந்து பக்தி பாட்டு பாடுவதற்குக்கூட யாருமில்லை. உடம்பை நோக்கி சாரை, சாரையாக எறும்புகள் படையெடுத்தன. அவரைச் சுற்றி எறும்பு மருந்தை தூவி வைத்தனர். அப்போதும் எறும்புகள் சுற்றுவதைப் பார்த்து யாரோ அவர் உடம்புக்குக் கீழேயெல்லாம் எறும்பு மருந்தைத் தூவிவிட்டனர். தாத்தாவால் வலி பொறுக்க முடியவில்லை. தன்னை மீறி முணகினாரே தவிர, "ஆஸ்பத்திரியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்' என்பதை மட்டும் நினைவு தப்பிய பின்னும் சொல்லிக் கொண்டிருந்தார். கடுமையான உழைப்பாளி அவர். மரணத்தோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தபோது அதை நான் முழுமையாக உணர்ந்தேன்.

இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது என் படுக்கைக் கருகே இண்டர் காம் மணி அடித்தது. எடுத்தபோது "எஸ்.எம்.டி. பேசறேன். மேலே வர்றியா?'' என்று குரல்.
"எஸ்.எம்.டி.னா?''
"அட, உன் பக்கத்துக் கட்டில் தோழன், மிஸ்டர்.''
"ஓ. நீங்களா..? வர்றேன் சார்''
தனி அறை. "யாரும் கூட இருக்க வேணாம்னு அனுப்பிச்சிட்டேன். உட்கார். அந்தப் பேப்பரைத் தூக்கிக் கீழ கிடாசிட்டு உட்காரு மிஸ்டர்.''
"ஏன் யாரும் கூட இல்லை? தனி அறை எடுத்ததற்கு...''
"யாரும் இருக்கக் கூடாதுன்னுதான் தனி அறை கேட்டேன். அவங்களுக்கும் தொந்தரவு.. எனக்கும் தொந்தரவு. எண்பது கிலோ இருந்தேன். இப்ப நாப்பது கிலோ.. கண்ணு அவுட்... ரெட்டினா டேமேஜ். மூணு அடி தள்ளி நின்னா தெரியலை.''
"நல்லதா ஏதாவது பேசுவோம்...''
சிரித்தார். "என்னையே எடுத்துக்க... பாதி பேர் அவரை மாதிரி வருமான்னு சொல்லுவான். பாதி பேர் அயோக்கியன்னு ஏசுவான்... எனக்கு எல்லாம் ஒண்ணுதான். சரி... நல்லதா ஏதாவது பேசுமே. அதில என்ன கஷ்டம் இருக்கு?''
நல்லதாக ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிவிட்டார். கீழே போய்விடலாம் என்று எழுந்தபோது நாற்காலி அசைவில் கண்விழித்தார். "துரியோதனன் கதை மாதிரிதான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஒரு நல்லதும் தெரியல எனக்கு. ஒரு இன்ஜக்ஷன் போடணும். போட்றியா?''
"நர்ஸ் யாராவது இருக்காங்களானு பார்க்கிறேன்.''
"அது என்ன மிஸ்டர் பிரமாதம்? எடு அதை நான் சொல்லித்தர்றேன். இவ்வளவு நாள் ஆஸ்பித்திரில இருந்து இதை கத்துக்கலைன்னா எப்படி?''
கட்டுப்பட்டேன். சரக்கென்று பாட்டிலில் இருந்து இன்ஜெக்ஷனால் மருந்து உறிஞ்சினார். "இடுப்புல போட்டுடு'. போட்டேன்.
மருந்து பாட்டிலையும் ஊசியையும் ஜன்னல் பக்கம் வீசி எறிந்தார். அது புறாக்கள் வசிக்கும் துத்தநாக தகட்டில் போய் விழுந்தது. படபடவென சிறகோசை கேட்டது. ""உனக்கு எல்லாமே நல்ல விஷயமா இருக்கா?'' என்றார்.
"தெரியலை. அதுக்கு இன்னும் நாளாகும்'' என்று சிரித்தேன்.
என்னுடைய பதில் அவருக்குப் பிடித்திருந்தது. "சரி. நீ போய் படு மிஸ்டர்''
"காலையில் பார்க்கலாம்'' என எழுந்தேன். நம்பிக்கையற்றுச் சிரித்தார். நான் அனிச்சையாக தூக்கியெறியப்பட்ட மருந்து பாட்டில் விழுந்த இடத்தைப் பார்த்தேன்.
"இன்னொரு மருந்து பாட்டிலும் இன்ஜெக்ஷனும் இருக்கு. உனக்குத் தேவைப்படும். எடுத்து வெச்சுக்க'' கண் சிமிட்டிச் சிரித்தார்.
"இந்த நேரத்தில இதை வாங்கித் தந்தவனும் இதை இன்ஜெக்ட் பண்ணவனும்தான் நல்லவன்''
நான் திகைத்தபடி நின்றிருந்தேன். மனிதர் கலக்கமின்றி இருந்தார்.
"சீக்கிரம் கீழே போயிடு மிஸ்டர்.'' அந்த ஹீனசுரத்தில் அதட்டலை உணர்ந்தேன். மருந்தை எடுத்துக் கொண்டேன். விழிகளை மூடித் திறந்து வழியனுப்பினார்.
நான் கீழே வந்தேன். ஜெனரல் வார்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு பூஜ்ஜிய பல்புமட்டும் எரிந்தது. புறாக்கள் அடுத்து முட்டையிடுவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருந்தன.

அம்ருதா ஆகஸ்ட் 2009

வெள்ளி, ஜூலை 31, 2009

விண் நட்சத்திரம் முதல் சினிமா நட்சத்திரம் வரை



எல்லா காலத்துக்குமான பொதுவான உண்மைகள் என்று ஏதேனும் இருக்க முடியுமா? அப்படி ஒன்று இருப்பதாகச் சொன்னால் அது எத்தனை பெரிய பொய்யாக இருக்கும்?

நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரங்கள் சில இப்போது இல்லாமல் இருக்கலாம். அதாவது நாம் பார்க்கிற இடத்தில் அவை இருக்கின்றன. ஆனால் அவை இருக்கும் இடத்தில் அவை இல்லை.

எத்தனையோ ட்ரில்லியன் பில்லியன் மைல் தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்து அடைவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. வந்து சேர்வதற்கான இந்த இடைப்பட்ட காலத்தில் நட்சத்திரம் அழிந்துபோயிருக்கலாம். ஆனால் அதன் ஒளி நம்மை வந்து சேர்ந்த வண்ணமிருக்கிறது. அதாவது அது அழிந்த பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகும் இல்லாத நட்சத்திரத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

அதே போல் நாம் உருவாகி, வாழ்ந்து, சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சூரிய மண்டலம் எங்கோ ஒரு நட்சத்திரத்தின் பார்வையில் இன்னும் உருவாகாமலேயே இருக்கலாம். அதாவது சூரியனின் கதிர் வீச்சு இன்னும் அந்த நட்சத்திரத்தை எட்டாமல் இருக்கலாம்.

அதாவது காலம் இடைவெளியைச் சார்ந்ததாக இருக்கிறது.

இப்படியாக ரிலேட்டிவிட்டி தியரி பற்றி சுமார் நூறு ஆண்டுகளாகச் சொல்லிச் சொல்லி போரடித்துப் போனதாக சிலர் சலித்துக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு மிச்சம் இருக்கத்தான் செய்கிறது. (எல்லா காலத்துக்குமான பொதுவான உண்மைகள் இல்லாதது போலவே எல்லா காலத்துக்குமான பொதுவான ஆச்சரியங்களும் இல்லைதானே? )

இன்னும் குறைவான கால விஸ்தீரணத்தைப் பார்ப்போம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து அரசர் படம் போட்ட ரூபாய் நோட்டுதான் இந்தியாவில் செல்லுபடியாகும். இப்போது காந்தி படம் போட்ட நோட்டு. வரும்காலத்தில் இந்தியாவையே புரட்டிப் போட்ட ஒரு மனிதர் தோன்றி அவருடைய படத்தை ரூபாயில் பிரசுரிக்க நேரிடலாம்.

என்னவென்றால் மனிதனின் வயது வரம்பு சொற்பமானதாக இருக்கிறது. அதற்குள் அவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட நினைக்கிறார்கள். "அப்பல்லோ ஹாஸ்பிடல்தான் பெஸ்ட்'' என்றோ "எங்கள் கடவுள்தான் மகத்தானவர்'' என்றோ.. "அந்த மனிதர் அயோக்கியர்'' என்றோ சொல்கிறோம்.

81 ஆம் ஆண்டில் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஆகாதவராகத் தோன்றியவர் கவிஞர் கண்ணதாசன்.

எங்கள் பள்ளியின் பின்புறம் செல்லும் சாலையில் அவருடைய இல்லம் இருந்தது. அன்று அவருடைய உடல் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. எங்கள் பள்ளியில் இருந்து வகுப்புத் தோழர்கள் சிலருடைய வேண்டுதலின் பேரில் நடேச முதலியார் பார்க் சுற்றுப்பாதையில் இருந்த அவருடைய வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆர். வந்திருக்கிறார், கலைஞர் வந்திருக்கிறார், சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சாலையே பரபரப்பாக இருந்தது.

கண்ணதாசன் பற்றி அவரவருக்குத் தெரிந்த சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அவர் எழுதிய நூல் ஒன்றில் (வனவாசம்?) அண்ணா உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சேர்க்கப்பட்டிருந்தபோது, ‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பார்கள், அதனால்தான் அமெரிக்காவில் அண்ணாவுக்குச் சாப்பிட முடியாமல் ஊசி மூலம் உணவு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று எழுதியிருந்தார்.

இந்த வாக்கியம் என்னை மிகவும் சுட்டது. தொண்டையில் கேன்சர் வந்து பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதரை இப்படி எழுதலாமா?



"உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டபோது கண்ணதாசனுக்கும்தானே ஊசிவழியாக உணவு ஏற்றப்பட்டது" என்று உடன்வந்த நண்பர்களைக் கேட்டேன். அண்ணாமீது எனக்கு ஏற்றப்பட்டிருந்த பிரியம் அப்படியானது. நண்பர்களும் என் கேள்வியின் நியாயத்தை ஒத்துக் கொண்டு வீட்டுக்கு அருகில் சென்றுவிட்டு அவருடைய உடலைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டோம்.




அதே ஆண்டில் மேல் நிலை பாடத்திட்டத்திலேயே கண்ணதாசனின் காலக் கணிதம் என்ற கவிதையைப் பாடமாக வைத்திருந்தார்கள்.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்...

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை

...

இகழ்ந்தால் என்னுடல் இறந்துவிடாது
புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு

மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்..



-என அந்தக் கவிதையின் பல வரிகள் உலுக்கின. பின்னாளில் அண்ணாவைப் பற்றி அவர் நல்லவிதமாக எழுதியதையும் படித்தேன். "நீ இப்போது எடுக்கும் முடிவு தவறு என்று உணரும்போது அதைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உனக்குக் கிடைக்காலேயேகூடப் போய்விடும்'' என்று ‘மொழி' படத்தில் ஒரு வசனம் வரும். அது எனக்கு நேர்ந்தது.

பாரதி தாசன் சொல்லாதன சில சொல்லியவர், ஆசு கவியாகத் திகழ்ந்தவர். ஒரு ஐம்பதடி தூரத்தில் அவருடலைப் பார்க்காமல் மனசு மாறி வந்துவிட்டது பைத்தியக்காரத்தனம் போலத் தோன்றுகிறது.



ஆசியா முழுதும் புத்தருக்குச் சிலை வைத்தார்கள், பிறகு பல இடங்களில் இடித்துத் தள்ளினார்கள். காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலினுக்குச் சிலை வைத்தார்கள் இடித்துத் தள்ளினார்கள். மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் கலைஞருக்கும் அது நேர்ந்தது.

எல்லாவற்றிலும் மனிதர்களுக்கு முடிவு கட்டும் அவசரம். சிலை வைப்பதிலும் பின்பு அதை இடிப்பதிலும்.

இப்படியான காரணங்களால் வரவர எல்லாவற்றிலுமே எனக்கு ஒரு நிதானம் ஏற்பட்டுவிட்டது.

"ரெண்டுல ஒண்ணு இப்பவே சொல்லிடு சார்'' என்கிறார் கடைக்காரர்.

"ரசமா? மோரா?'' என்கிறார் ஓட்டல் சிப்பந்தி.

உடனடியாக ஒரு பதிலைச் சொல்ல வேண்டியிருக்கிறது எல்லா இடத்திலும். குழப்பத்தோடு டி.வி.யைப் போட்டால், "ரெண்டுலதான் ஒண்ணைத் தொட வர்றீயா?'' என்று ஒரு கதாநாயகி குலுங்கிக் குலுங்கி ஆடிக்கொண்டிருந்தார்.


உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

செவ்வாய், ஜூலை 28, 2009

அண்ணா சகாப்தம்: 1937 முதல் 1969 வரை



பெரியாருடனும் அண்ணாவுடனும் மிக நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர் ஜே.வி.கே. பத்திரிகையாளரின் அனுபவம் என்பது அறிவார்ந்த விளக்கங்களும் காலப் பயணத்தோடு ஒப்பிட்டு உருவாக்கும் புதிய உண்மைகளும் கொண்டதாக இருக்கும். அவர்களின் பார்வை மற்றெல்லாருடையதையும் விட நுணுக்கமானது. இந்தப் பேட்டி அதை இன்னொரு முறை உறுதிப்படுத்துகிறது. அண்ணா பேச்சாளரானது எப்படி என்பது தொடங்கி, திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய காரணம் வரை} இவருடைய பார்வை வேறுபட்டு நிற்கிறது. பத்திரிகை உலகில் ஜே.வி.கே. என்று மதிப்போடு அழைக்கப்படும் அவருக்கு இப்போது 82 வயது. வயது தரும் பக்குவம்} ஆதாயம் தேவைப்படாத அப்பட்டமான உண்மையாகச் சுடுகிறது. இதோ அந்தச் சூட்டுடன்...

"1940 களில் தமிழகத்தின் மேடைப் பேச்சுகள் எப்படி இருந்தது தெரியுமா? காங்கிரஸ் கட்சி பலமான கட்சியாக இருந்த போதிலும் அதன் மேடைப் பேச்சு பலமற்றதாக இருந்தது. காங்கிரல் தலைவர்களின் பேச்சு புராண காலட்சேபம் போல இருக்கும். படித்த புலவர்களின் பேச்சு இலக்கணத் தமிழிலும் கடும் தமிழிலும் அமைந்திருக்கும். பொதுமக்களுக்குப் புரியாது.
அந்தச் சூழலில் 1943}ல் வந்தவாசி உயர்நிலைப் பள்ளியில் நான் படித்து வந்த நேரத்தில், காஞ்சிபுரத்து அண்ணாதுரை என்றவர் அற்புதமாக பேசுவார் என்று கேள்விப்பட்டேன். அடுத்து, செய்யாறில் 1943 ஜனவரி இறுதியில் பொங்கல் விழாவை ஒட்டிய கொண்டாட்ட நிகழ்ச்சியில் அண்ணாதுரை சிறப்புச் சொற்பொழிவு எனக் கேள்விப்பட்டு சென்றேன். பொதுக் கூட்ட பாணியே வித்தியாசமாக இருந்தது.
விழா வணக்கத்துக்கு முன், நாட்டுப் பண் என்ற தலைப்பில் நடிகர் டி.வி. நாராயணசாமி புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் "வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு' என்ற பாடலை இசையுடனும் உணர்ச்சிகரமாகவும் பாடினார். அடுத்து சி.என். அண்ணாதுரை எம்.ஏ. பேசுவார் என்று அறிவித்தனர். அவருடைய தமிழ்நடை} மேடைப் பேச்சு கண்டறியாத புதிய நடை. அடுக்கு மொழிச் சொற்கள் மூலம் சுண்டி இழுக்கும் பேச்சு.
குறிப்பாக, தமிழர்களைப் பார்த்து "இந்த ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது, மின்சாரத்தைக் கண்டுபிடித்தது யாரென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இங்கு வந்து சேர்ந்த மோட்டார்} ரயில் கண்டுபிடித்தது யாரென்றால் தெரியாது; ஆனால் எமனுக்கு வாகனம் எது என்று கேட்டால் நேரில் பார்த்து போல எருமை மாடு என்பார்கள். இதுதான் தமிழன் நிலை' என்று பேசினார். அதே போல் வடநாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டைச் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டிய அண்ணா, "பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வட புலத்து முதலாளிகள் இடத்தில்தான். இரும்புக்கு டாடா, செருப்புக்கு பாட்டா, ஜவுளிக்கு செல்லாராம்ஸ், வைரத்துக்கு சுராஜ் மல்ஸ்..'' என்று நீண்ட பட்டியலை அடுக்கிக் கொண்டே போனார். அவருடைய பேச்சின் நடை துண்டாக } அலாதியாக இருந்தது. தமிழக அரசியலில் எளிய குடும்பத்தில்} எந்த ஆதரவும் இல்லாமல் பிறந்த ஒரு இளைஞரை ராக்கெட் வேகத்தில் அரசியலில் வளர்த்தது அவருடைய அற்புதமான நாநயமே..'
1925 -ல் இருந்து பெரியாரின் பேச்சு மட்டுமே தமிழ் மேடைகளில் எடுப்பானதாக இருந்தது. அதற்குப் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாவின் பேச்சு நடை தனி வடிவத்தோடு பிரகாசிக்க ஆரம்பித்தது. ஆனால் பெரியாரின் பேச்சுக்கும் அண்ணாவின் சொற்பொழிவுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டையும் நேரில் கேட்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அண்ணாவின் பாணியில் நயமும் நெளிவுகளும் அதிகமிருக்கும். பெரியாரின் பேச்சு பலமான தர்க்க வாதத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்; காரசாரமானதும்கூட.
அண்ணாவின் பேச்சில் அணி அழகும் சிலேடையும் கமகமக்கும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1945-ல் ஜூலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் சொற்பொழிவு.

"இந்த நாட்டின் வறுமையைக் கவனிப்போம். வளமில்லாத ஒரு நாடு வறுமையில் இருந்தால் ஆச்சர்யமில்லை. அரபு பாலைவனத்தில், எஸ்கிமோ பனிக் காட்டில் வளம் இராது. இங்கு நீர்வளம், நிலவளம், குடிவளத்துக்கு குறைவில்லை; மக்களின் மனவளம் ஒன்றைத் தவிர. வற்றாத ஜீவ நதிகள்,, அவற்றால் பாசனம் பெறும் வயல்கள், அவற்றில் விளையும் மணிகள், நஞ்சையும் புஞ்சையும்! நாடெங்கும் சோலைகள்; சாலைகள்.. மண்ணுக்கடியில் பொன். கடலுக்கடியில் முத்து, காட்டிலே சந்தனம், இயற்கை கொஞ்சும் இந் நாட்டில் இல்லாமை இருக்கக் காரணம் என்ன?''' எத்தகைய சூழ்நிலையில் இத்தகைய காவிரி வெள்ளத்தைப் போன்ற சொற்பொழிவு. காங்கிரஸ் மேடைகளில் "அக்கிராசனாதிபதி அவர்களுக்கும் மகா ஜனங்களுக்கும் நமஸ்காரம். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் என்னவென்றால்.. அதாவது நமது நாட்டை சுரண்டி வரும் வெள்ளைக்காரர்களிடமிருந்து பாரத தேசத்தை எப்படி மீட்பது என்பதுதான்' என்று கூறிவிட்டு அவ்வப்போது "ஊம்'காரமும் முனகியும் ஒவ்வொரு சொல்லாக பிரசவிப்பார்கள். அந்த மேடைப் பேச்சில் இருந்து அண்ணாவின் பாணி தனித்து பளிச்செனத் தெரிந்தது. ஆனால் இந்தப் பேச்சு பாணி திடீரென்று ஆகாயத்தில் இருந்து அண்ணாவிடம் குதித்தது அல்ல.
இந்தப் பேச்சு பாணியைஅவருக்குத் தந்த பெருமை சென்னை மாநகருக்கே உரித்தானது.
பிறந்தது காஞ்சியாக இருக்கலாம். ஆனால் அற்புதமான மேடை பேச்சாளராக அரசியல்வாதியாக அண்ணா பிறந்தது சென்னையில்தான். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1920களின் இறுதியில் சேர்ந்த அண்ணாவை, அந்தக் காலத்தில் அற்புதமான ஆங்கில நாவலரான ஆர்க்காடு ராமசாமி முதலியாரின் பேச்சு நடை ஈர்த்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் அந் நாளில் அரசியல் களத்தில் பலமான சக்திகளாக விளங்கி வந்தன. அந்தக் காலத்தில் அரசியல் மேடைகளில் ஆங்கிலமே கோலோச்சியது. காங்கிரஸ் சார்பில் தீரர் சத்யமூர்த்தியின் ஆங்கில நடையும் நீதிக் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராமசாமி முதலியார் நடையும் எடுப்பாக இருந்தன. சத்யமூர்த்தியின் பேச்சு வாள்வீச்சு போல இருக்கும். முதலியாரின் பாணி புல்லாங்குழல் ரகம். பேச்சினூடே நடனச் சிலம்பின் ஓசையின் நயம் மிளிரும். அண்ணாவுக்கு முதலியாரின் பாணி பிடித்துப் போய்விட்டது.
சத்யமூர்த்தி பாணியில் டி.செங்கல்வராயன் பேச ஆரம்பித்தார். அண்ணாதுரையும் செங்கல்வராயனும் சென்னையில் இளைஞர் மன்றக் கூட்டங்களில் சொற்போர் நிகழ்த்தியதுண்டு. ஆக, முதலில் ஆங்கிலப் பேச்சாளராகவே அண்ணாவின் பொது வாழ்க்கை ஆரம்பமானது.
பின்னர் பைய ப் பைய அதே ஆங்கில பாணியில் தமிழில் பேச ஆரம்பித்தார். அதன் விளைவாக தமிழ் மேடையில் அண்ணா சகாப்தம் தோன்றியது. மற்ற பேச்சு நடைகள் எல்லாமே படுத்துக் கொண்டுவிட்டன.
ஆயினும் அண்ணா ஆரம்பத்தில் கவனம் செலுத்தியது தொழிற்சங்க இயக்கத்தில்தான். சென்னையில் பாசுதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவருடன் நெருங்கிப் பழகி, தொழிற்சங்க இயக்கத்தில் அண்ணா நுழைய ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நீதிக்கட்சியின் வீரியம் மிக்க தலைவரும் சண்டே அப்சர்வர் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியருமான பி. பாலசுப்ரமணிய முதலியாரைச் சந்திக்க நேர்ந்த வாய்ப்பு அண்ணாவின் பாதையையே மாற்றிவிட்டது. தொழிற்சங்கத்தில் ஊடாடிக் கொண்டிருந்த அண்ணாவை நீதிக்கட்சிக்கு மடைமாற்றிவிட்டவர் அவர்தான்.
அதோடு அரசியல் இரட்டையர்களாக நீதிக்கட்சியில் போற்றப்பட்டவர்கள் பாலசுப்ரமணியமும் முதுபெரும் பத்திரிகையாளர் டி.ஏ.வி. நாதனுமே.
இந்த இருவருடனும் அண்ணா பழக ஆரம்பித்த பிறகு நீதிக் கட்சியின் கொள்கைகளில் } குறிப்பாக சமூக நீதிக் கொள்கையில் அவருக்கு அழுத்தமான பிடிப்பு ஏற்பட்டது. அண்ணா நீதிக் கட்சியின் இளம் தொண்டனாக விளங்கினார். ஜமீன்தாரர்களும் மிட்டா மிராசுதார்களும் நிரம்பி வழிந்த நீதிக் கட்சியில் இளைஞர் அண்ணாவுக்கு அரவணைப்பு தந்து வளர்த்தவர் பாலசுப்ரமணியமே.
1952- முதலாவது பொதுத் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் நீதிக்கட்சி வேட்பாளராக பாலசுப்ரமணியம் போட்டியிட்டார். அந்தத் தருணத்தில் அவரை ஆதரித்து தென் சென்னையில் பிரசாரம் செய்த அண்ணா ," சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் என் அரசியல் ஆசான்' என்று நெகிழ்ந்து கூறினார்.
1935-ல் திருச்சியில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் தான் மாநில அளவில் முதன் முதலாக அண்ணா அறிமுகமான பின்னணி சுவை மிக்கது. அந்த மாநாட்டில் எல்லாத் தலைவர்களும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். அந்தத் தலைவர்களில் ஆர்க்காடு ராமசாமி முதலியாரும் ஒருவர். அவருடைய ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்க அம் மாநாட்டின் அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தகுதியான ஒருவரைத் தேடியபோதுதான் அண்ணா அறிமுகப்படுத்தப்பட்டார். முதலியாரின் அற்புதமான ஆங்கில உரையை அண்ணா மொழிபெயர்த்ததைக் கண்டு மாநாடே வியந்தது.
முதலியாரும் அண்ணாவின் மொழிபெயர்ப்பை மெச்சிப் பாராட்டியதோடு மொழிபெயர்ப்பில் "நுணுக்கமான கைவேலைகளும்' நிறைந்திருந்ததாகத் தட்டிக் கொடுத்தார். ஆனால் நீதிக்கட்சியின் தலைவரின் மொழிபெயர்ப்பவராக அறிமுகமான அண்ணா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நீதிக் கட்சியையே பெயர்த்து சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துவிட்டார். சுயமரியாதை இயக்கத்துடன் நீதிக் கட்சியை இணைத்து 1944- ல் சேலத்தில் திராவிடர் கழகத்தைப் பெரியார் உருவாக்கியபோது அவருக்குத் தோள் கொடுத்து துணை நின்றவர் அண்ணா.
திராவிடர் கழகத்தினர் அண்ணாவை தளபதி அண்ணா என்று போற்றினார்கள். 1942-ல் திராவிட நாடு என்ற வார ஏட்டைத் தொடங்கினார் அண்ணா. பேச்சு மேடையில் அவருடைய தமிழ் இளைஞர்களைச் சுண்டி இழுத்தது போல எழுத்திலும் அண்ணா தனி பாணியைக் கண்டார். திராவிட நாடு இதழின் 16 பக்கங்களையும் அவரே எழுதி நிரப்பினார்} பல புனைப் பெயர்களில்.



பரதன் என்ற பெயரில் நையாண்டி கட்டுரைகள், செüமியன் என்ற பெயரில் சமூகச் சித்தரிப்புகள், வீரன், சம்மட்டி என்ற பெயர்களில் அரசியல் எதிரிகள் மீது மூர்க்கத் தாக்குதல்.. 3-4 பக்கங்களில் தலையங்கமும் உண்டு. சுருங்கச் சொன்னால் பெரியாரின் சமுதாயப் புரட்சி கருத்துகளுக்குப் படித்த வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படச் செய்தவர் அண்ணாவே. எளிய மக்களுக்கும் இலக்கியச் சுவையை லாகவமாக எடுத்து ஊட்டிய முதலாவது சொற்பொழிவாளர் அண்ணாவே.
பேச்சு மேடையிலும் எழுத்து மேடையிலும் தனக்கென தனிப்பாணி வகுத்துக் கொண்டு புதிய வடிவுடன் பிரகாசிக்க ஆரம்பித்த அண்ணாவின் கவனம் நாடக உலகின் பக்கம் திரும்பியது. முதன் முதலில் அவர் இயற்றிய "சந்திரோதயம்' என்ற நாடகம் திராவிடர்க் கழக மேடையில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அது சுயமரியாதை பிரச்சார நாடகம். வசனத்தில் கேலியும் கிண்டலும் தூக்கலாக இருந்தது. அதை அடுத்து "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் அல்லது சந்திரமோகன்' என்ற நாடகம் அண்ணாவை இணையற்ற நாடக ஆசிரியராக அறிமுகப்படுத்தியது. தமிழ் கொஞ்சி விளையாடியது. ஒவ்வொரு வார்த்தையிலும் தேன் சுவை கொட்டியது. நாடகத் தமிழில் அண்ணா புதுமையைப் புகுத்தினார். அது மட்டுமல்ல. நாடகத் தமிழில் புதுமை மலர்ந்தது. அந்த நாடகத்தில் சிவாஜி வேடத்தை தாங்கி நடித்த வி.சி. கணேசன் என்ற இளைஞரை "சிவாஜி கணேசனாக' ஆக்கி விளம்ப வெளிச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
தமிழ் மேடை கண்டறியாத பேச்சாளர், தனி நடை கண்ட எழுத்தாளர், இணையற்ற நாடக ஆசிரியர் என்ற மும் முகப்புகளோடு நூதன வடிவத்துடன் அண்ணாவின் சகாப்தம் மலர்ந்தது!.
இந்தச் சூழ்நிலையில் 1947- ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. பெரியார் அந்த நாளை துக்கநாள் என்று அறிக்கைவிட்டார். "தமிழர் பிரதிநிதிகளைக் கலந்து பேசாமலேயே வெள்ளைக்காரன் ஆட்சியை வடபுலத்தாரிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டான். தமிழனைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 15 துக்கத்தினமே' என அந்த அறிக்கையில் பெரியார் கூறினார். ஆனால் அண்ணா அதை ஏற்க மறுத்தார்} தி.க.வில் இருந்தபடியே!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினமே.. சரித்திர மாணவன் என்ற முறையில் அதைச் சுதந்திரமாகவே மதிக்கிறேன். அந்நாளை தமிழகம் கொண்டாடிடத்தான் வேண்டும் என்று திராவிட நாடு இதழில் துணிச்சலோடு எழுதினார் அண்ணா. அதிலிருந்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. ஏராளமான இளைஞர்கள் அண்ணாவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்ததால் அவரைக் கட்சியைவிட்டு விலக்கப் பெரியார் விரும்பவில்லை. பெரியாரைவிட்டு விலக அண்ணாவும் துணியவில்லை.
அதே சமயத்தில் இவ்விரு தலைவர்களுக்கு இடையே அடிப்படையில் ஒரு வித்தியாசம் மனோரீதியாக உள்ளூர முளைத்துவிட்டது.
பெரியார், திராவிடர்க் கழகம் அரசியலில் பங்கு கொள்ளவே கூடாது, சமுதாயப் புரட்சி இயக்கமாகவே நீடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்புக் காட்டினார். அண்ணாவோ அரசியலில் திராவிடர் கழகம் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் தனது கொள்கைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆயினும் திராவிடர் கழகம் இந்த அடிப்படை வேறுபாட்டால் இரண்டாகப் பிளவுபடவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பை பெரியாரே ஏற்படுத்தித் தந்துவிட்டார்- 1949 ல் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம்.
"பொருந்தாத் திருமணம்- சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதம், தந்தையைத் தடுத்துப் பார்த்தோம், பயனில்லை. வேறு வழியின்றி தி.க.விலிருந்து வெளியேறுகிறோம்' என்று கண்ணீர்த் துளி சிந்தி அண்ணா வெளியேறினார். தி.க.விலிருந்த மிகப் பெரிய இளைஞர் படையையும் கூட்டிக் கொண்டு வெளியேறினார்.
தி.மு.க உதயமாகிவிட்டது. கழகத்தைப் பிளந்து புதிய அமைப்பை அண்ணா உருவாக்கியதை பெரியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணாவை மூர்க்கமாகத் தாக்க அவர் தயங்கவில்லை. ஆனால் அண்ணாவோ, பதிலுக்கு பெரியாரை தாக்கி ஒரு வார்த்தைக் கூட பேசவே இல்லை. தன்னை நோக்கி பெரியார் விடுத்த கண்டனக் கணைகளை எல்லாம் பூஜித்தார்.
பெரியாருடைய தாக்குதலை சமாளிக்க ஒரே வழி பேசாமல் விலகி நிற்பதுதான் என்று அண்ணா முடிவு செய்தார். பெரியாரைக் குறைகூறி எந்த அறிக்கையும் விடவில்லை. சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் 1949 செப்டம்பர் 17}ம் தேதி நடைபெற்ற தி.மு.க. துவக்கவிழாவில், "நாங்கள் தி.க.வில் இருந்து பிரிந்து வந்த போதிலும் எங்களின் நிரந்திரத் தலைவர் தந்தை பெரியாரே. இத்தனை ஆண்டுகளில் நான் கண்ட, நான் கொண்ட ஒரே தலைவர் பெரியார்தான். நாம் பிரிந்து வந்துவிட்டபோதிலும் அவரே நமது தலைவர். எனவே, தி.மு.க.வைப் பொறுத்த வரையில் தலைமை பீடத்தை நாம் காலியாகவே வைத்திருப்போம்' என்று கூறியதோடு நிற்கவில்லை. திராவிடர் கழகத்தின் கோட்பாடும் கொள்கைகளுமே தி.மு.க.வின் கொள்கைகளும் கோட்பாடும் ஆகும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அண்ணா பிரிந்து சென்றதைவிட பெரியாரின் கொள்கையைச் செயல்படுத்துவதற்காகவே அரசியலில் பிரவேசிப்பதாக அண்ணா அளித்த விளக்கம் பெரியாருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது. இச் சந்தர்ப்பத்தில் பெரியாரிடம் அண்ணா நடந்து கொண்ட, நடந்து காட்டிய பவித்திரமான பாணியை அருகில் இருந்து கவனிக்கக் கூடிய அரிய வாய்ப்பை பெற்றவன் என்ற முறையில்அப்போது நடந்த நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அண்ணாவை முதன் முதலில் பார்த்தது செய்யாறு பொங்கல் திருநாள் விழாவில். ஆனால் அடுத்த மூன்றாண்டுகளில் சென்னையில் அவருடன் மிக நெருக்கமாகப் பழகக் கூடிய அரிய அபூர்வ வாய்ப்பு நான் தேடாமலேயே எனக்குக் கிடைத்தது.
அந்தக் காலத்தில் அண்ணாவுக்குச் சென்னையில் தங்குவதற்கு இடமில்லை, அச் சமயத்தில் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பஸ் தொழிலதிபர் தேவராஜ முதலியார் அண்ணாவின் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தவர். அதோடு அண்ணாவின் புரவலராகவும் விளங்கியவர். அண்ணா போன்ற மேதை காஞ்சியில் பிறந்ததற்காக தொண்டை நாட்டு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசியவர். அண்ணா சென்னைக்கு வரும் போதெல்லாம் தங்குவதற்காக தன்னுடைய பேருந்து அலுவலக மாளிகையில் முதல் மாடியைக் காலி செய்து கொடுத்தார். அண்ணாவை அவருடைய குடும்பத்தில் ஒருவர் போலவே நடத்தினார். சென்னையில் கல்லூரி படிப்பில் ஈடுபட்டிருந்த நான் கல்லூரி நேரம் போக மற்ற தருணங்களில் பெரும்பாலும் என்தாய் வழி மாமா தேவராஜ முதலியாரின் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். அந்த முறையில் 1947}லிருந்து அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகரித்தது.
1949 தொடக்கத்தில் பத்திரிகை உலக பிதாமகனாக விளங்கிய டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்ட தினசரி நாளிதழில் ஆசிரியர் பிரிவில் பயிற்சி துணையாசிரியராகச் சேர்ந்தேன். அந்த நேரத்தில் பொருளாதார சங்கடங்களில் அந்த நாளிதழ் தள்ளாடிக் கொண்டிருந்தது. மாத ஊதியத்தை வழங்கக்கூடிய சக்திகூட நிர்வாகத்துக்கு இல்லை. ஆயினும் தீப்பொறி பறக்கும் தலையங்கங்களுடன் அந்த இதழ் தமிழ் வாசகர்களிடையே பவனி வந்து கொண்டிருந்தது.
ஒருநாள் அண்ணா என்னுடைய மாமாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு எனக்கொரு யோசனை கூறினார். ""தினசரியில் பொருளாதார நிலைமை சரியாக இல்லை என்று கேள்விப்படுகிறேன். பேசாமல் விடுதலை நாளேட்டில் சேர்ந்து கொள். சம்பளம் குறைவாக இருந்தாலும் பெரியார் மாதாமாதம் டாண் என்று கொடுத்துவிடுவார். பெரியாரோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு உனக்குக் கிடைக்கும். அது பிற்காலத்தில் பத்திரிகை தொழிலில் உனக்கு ஒரு செல்வம் போலவே பயன்படும். என் யோசனையை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதை உன் முடிவுக்கே விட்டு விடுகிறேன்'' என்று கூறிவிட்டார்.
அதை ஏற்று 1949 ஜூன் மாதத்தில் பெரியாரைச் சந்தித்து அவருடைய விடுதலை நாளிதழில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றேன். குத்தூசி குருசாமி ஆசிரியராக இருந்தார். அண்ணாவோடு வெளியேறிய இளைஞர் பட்டாளத்தில் அப்போதைய விடுதலை ஆசிரியர் பிரிவைச் சேர்ந்த துணையாசிரியர்களும் அடக்கம். அதனால் விடுதலை ஆசிரியர் பிரிவில் எடுப்பான இடம் கிடைத்துவிட்டது.
பெரியார் விடுதலை அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அவரோடு பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. விடுதலை இதழ் அப்போது சிந்தாதரிப்பேட்டையில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
1949 செப்டம்பர் 17}ல் தி.மு.க தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலை எட்டு மணி. பெரியாருடைய பிரச்சார வேன் வெளியூரிலிருந்து நேராக விடுதலை அலுவலகத்துக்கு வந்துவிட்டது. வேனைவிட்டு இறங்கி வந்த பெரியார், அவருடைய நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னை அழைத்தார். அன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள முக்கிய செய்திகள் என்னவென்று கேட்டார். அதன்பிறகு அவருடைய முகத்தில் வாட்டமும் வேதனையும் நிழலாடியதை உணர முடிந்தது. ஏதோ ஒருவிதக் கவலை அவருடைய மனத்தில் குடி கொண்டிருப்பது போல எனக்குப்பட்டது. பெரியாரை நோக்கி, "அய்யா ரொம்ப கவலையில் இருப்பதாகத் தெரிகிறதே? கழகத்தில் இருந்து அண்ணாவோடு ஏராளமானவர்கள் வெளியேறிவிட்டார்களே என்ற கவலையா அய்யா' என்று நான் வெள்ளந்தியாகக் கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். பெரியார் சிலிர்த்துக் கொண்டார். எப்பொழுதும் யாரையுமே "நீங்க... வாங்க' என்றே மரியாதையாகப் பேசும் வழக்கமுடையவர் பெரியார். என்னையும் அப்படித்தான் அழைப்பார்.
இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவருக்கு ஆத்திரமே வந்துவிட்டது.
""என்ன சொன்னே?.. அண்ணாதுரையோடு நிறையபேர் வெளியேறிவிட்டதால் நான் கவலைப்படுகிறேனா?.. பைத்தியக்காரா...'' என சுளீரெனத் தைக்கும் விதத்தில் கூறியதுடன், "அவர்கள் வெளியேறி விட்டதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த இயக்கத்தை யாரை நம்பி ஆரம்பித்தேன் தெரியுமா?' என்று கேட்டார். "ஆரம்பித்தவர்கள் சொன்னால்தானே தெரியும்?' என்று அடக்கத்தோடு கூறினேன். அது பெரியாரை இளக வைத்தது.
"யாரை நம்பி ஆரம்பித்தேன் தெரியுமா? என்னை நம்பி.. என்னையே நம்பி..' என்று திடத் தொனியில் மாரைத் தட்டியபடி சொன்னார்.
ஆயினும் சற்று நேரம் கழிந்த பிறகு மெதுவான குரலில் "நீ சொன்னதைப் போல என் மனதுக்குள் ஒரு கவலை இருந்து வருவது உண்மைதான்' என்று சொல்லி , அந்தக் கவலை என்ன என்பதை அவர் விளக்கியபோது திகைத்துவிட்டேன். பெரியார் அந்தக் கவலையை விவரித்தார்.
"அண்ணாதுரை எதற்காக நமது கழகத்தில் இருந்து விலகிச் சென்று புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்? அவருக்கு அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. என்னோடு இருக்கும் வரையில் நான் அதற்கு அனுமதி தரமாட்டேன். அதனால் வெளியேறிவிட்டார். இதுதான் உண்மையான காரணம். ஆனால் அண்ணாதுரை என்ன சொல்கிறார்? என்னுடைய கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காக அரசியலில் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாக. எதற்காகப் பசப்ப வேண்டும்? என் கொள்கைகளை நிறைவேற்றுவது எப்படி என்பதில் என்னைவிட அண்ணாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை? என்னுடைய கொள்கைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றவே முடியாது என்பதில் திட்டவட்டமான தீர்மானத்தைச் செய்துவிட்டுத்தான் கழகத்தை இயக்கமாகவே நடத்தி வருகிறேன். அண்ணாதுரையோ தி.மு.க என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அரசியல் என்று இறங்கிவிட்டால், பிறகு தேர்தல்களே முக்கியமாகிவிடும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு பணபலம் தேவை. பிறகு பல தரப்பிலிருந்தும் பணம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். அப்பொழுதே கொள்கைகள் எல்லாம் பின்னணிக்குத் தள்ள வேண்டிய கட்டாயத்துக்குப் போய்விடும். போதாகுறைக்கு தேர்தல் நிதியை வசூலிப்பதிலும் செலவிடுவதிலும் பல கட்டங்களில் சொல்ல முடியாத மனஸ்தாபம் கட்சிக்குள்ளேயே ஏற்படும். இது ஒருபுறம் இருக்க, தப்பித் தவறி தி.மு.க. ஆளும் கட்சியாக மாறிவிட்டாலோ அதிலிருந்துதான் என்னுடைய திராவிடர் கழக கொள்கைக்கே சரிவு ஏற்பட்டுவிடும். ஏனெனில் ஆளும் கட்சியாக மாறிவிட்ட பிறகு கட்சிக்குள்ளேயே பல மையங்கள் தோன்றிவிடும். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பதில் பலரும் இறங்கிவிடுவார்கள். ஏனெனில் அண்ணாவோடு சென்றிருப்பவர்களை எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். சாமானிய குடும்பங்களில் பிறந்தவர்கள். பலருக்கு சமுதாயத்தில் வசதியாக வாழ வேண்டும் ஆசை இல்லாமல் போகாது. இதன் விளைவாக கட்சிக்கே கெட்ட பெயர் ஏற்படும் அளவுக்குச் சென்றுவிடும். அந்தச் சமயம் பார்த்து என் கொள்கை ரீதியான எதிரிகள் ஊழல் என்ற கற்களால் திராவிட இயக்கத்துக் கொள்கைகளையே அழிக்கப் பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றுமானால் அதன் பிறகு கட்சிக்குள் ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளாலும் போட்டியாலும் கழகமே பலவிதமான பிளவுகளுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் நான் இப்பொழுது கவலைப்படுகிறேன். அதிலும் என்னுடைய கொள்கையை நிறைவேற்றுவதற்காகப் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாக அண்ணாதுரை கூறியிருப்பது மேலும் அந்தக் கவலையை அதிகமாக்குகிறது' என்று நீண்ட விரிவுரையை பெரியார் நிகழ்த்தினார்.
அண்ணாவைப் பொறுத்தவரையில் பெரியார் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் விடுதலை அலுவலகத்தில் என்னிடம் ஏதாவது கூறினால், அதைத் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பெரியார் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி அண்ணா அறிந்து கொள்வதுடன் எப்போதுமே மிகுந்த விழிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர். அந்த முறையில் அன்று காலை என்னிடம் பெரியார் பேசிய அவ்வளவையும் என்னுடைய மாமா வீட்டில் அண்ணாவிடம் விவரித்தேன். அண்ணா வெலவெலத்துப் போய்விட்டார்.
ஒன்று பெரியாரின் தீர்க்க திருஷ்டியின் தீட்சண்யத்தை எண்ணிப் பார்த்திருக்கலாம்.
இன்னொன்று இந்த இளைஞரிடம் எவ்வளவு பெரிய பேச்சை அவர் பேசியிருக்கிறார் என்பதை நினைத்தும் இருக்கலாம்.
ஆயினும் தி.மு.க.வை ஆரம்பித்த 13 ஆண்டுகளிலேயே அது பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்துவிட்டது. 1967 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி. காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், பி. ராமமூர்த்தியின் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைக் கொண்ட கூட்டணியின் மூலம் தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, பெரியாரின் செல்லப்பிள்ளையாக தி.மு.க.வில் இருந்து வந்த அன்பில் தர்மலிங்கத்தை அழைத்துக் கொண்டு நேராக திருச்சிக்குச் சென்று பெரியாரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தன் அரசையே பெரியாருக்குக் காணிக்கை ஆக்கினார்.
தி.மு.க. துவக்க விழாவில் "நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரைத்தான். அவர் பெரியாரே'என்று செய்த பிரகடனத்தை நிரூபித்துக் காட்டியதன் மூலம் அண்ணா அபூர்வ தரத்தை நிரூபித்துக் காட்டிவிட்டார்.


ஆயினும் தி.மு.க.வை தான் உண்டாக்கிய ஒரு ஸ்தாபனம் என்று அண்ணா எப்போதுமே நினைத்ததில்லை. சமூக நீதி சுயமரியாதை, தமிழ் உணர்வு போன்ற கொள்கைகளுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த மாபெரும் இயக்கத்தின் வாரிசாகவே தி.மு.க.வை அவர் எப்போதும் கருதினார். ஆனால் அதற்கு குடும்ப வாரிசுகளை நியமிக்கும் எண்ணமே எப்போதுமே வந்ததில்லை. அதுமட்டுமல்ல தி.மு.க. சார்பில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அண்ணா தேர்வு செய்தபோது ஒரு நியதியை கண்டிப்புடன் கடைபிடித்தார். தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா தரப்புகளுக்கும் குறிப்பாக மூத்த தமிழ்ச் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக் கூடிய விதத்தில் வேட்பாளர் பட்டியலை மிகுந்த விழிப்புடன் தயாரிப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார். இதே காரணத்தினால்தான் தி.மு.க.வில் குறிப்பாக மேல் அடுக்குகளில் தம் குடும்பத்தைச் சேர்ந்த எவரையும் அவர் அனுமதித்ததே இல்லை, இத்தனைக்கும் அவருடைய வளர்ப்பு மகன்களில் பரிமளத்தின் மீது தனி வாஞ்சை உண்டு என்பதை அண்ணாவோடு நெருங்கிப் பழகியவர்கள் அனைவரும் அறிவார்கள். அப்படி இருந்தும்கூட அவரை அரசியலில் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.
இது போன்ற பத்தியமான} சத்தியமான பொது வாழ்க்கையை அண்ணா இறுதிவரை கடைபிடித்தார். இதுவே அவருக்குத் தனிப் புகழைச் சூட்டியிருக்கிறது.

சந்திப்பு: தமிழ்மகன்
படங்கள்: ராதாகிருஷ்ணன்

தினமணி அண்ணா நூற்றாண்டு மலர் - 2009

அண்ணாவுக்கு அரிதாரம் பூசினேன்!



எஸ்.எஸ்.ராஜேந்திரன்



காங்கிரஸ் இயக்கத்துக்குத் திரையுலகம் சார்பாக ஓர் "அன்னை இல்லம்' இருந்தது. திராவிட இயக்கத்துக்குத் திரையுலகம் சார்பாக அன்று சென்னையில் செயல்பட்டது "அண்ணா இல்லம்'. அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு. இது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் வீடு. ஆனால் இரண்டாவது வீட்டின் தீவிரம் முதல் வீட்டில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

திராவிட நாடு நாளிதழை ஆரம்பிக்க அண்ணா நிதி திரட்டத் தொடங்கிய நாளில் எஸ்.எஸ்.ஆருக்கும் அண்ணாவுக்கும் முதல் அறிமுகம். அந்த நாள் தொடங்கி அண்ணாவின் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது அந்த நெருக்கம். அணைபோட்டுத் தடுக்கப்பட வேண்டிய மூன்று ஆறு(ஆர்)களில் ஒன்றாக காங்கிரஸ் பிரமுகர்களால் வர்ணிக்கப்பட்ட ஆர்களில் கே.ஆர்., எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோரில் முதன்மையானவர் எஸ்.எஸ்.ஆர். முக்கியமானவரும்கூட.

அண்ணாவுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அவருக்கு இருந்த ஈர்ப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.


"ஈரோட்டில் டி.கே.எஸ். கலைக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த நேரம்.

ராமாயணம் நாடகம் நடந்து கொண்டிருந்தது. எனக்குப் பரதன் வேடம். அண்ணனின் பாத அணிகளையே பூஜிக்கும் வேடம். ஆனால் உண்மையில் அண்ணாவின் மீதுதான் எனக்கு அப்படியொரு பக்தி இருந்தது. ஆனால் அவர் எப்படியிருப்பார் என்று தெரியாது. அண்ணாவின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேனே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. அந்த நாள்களில் கட்டுரை எழுதியவர்களின் படங்களையும் பிரசுரிக்கிற வழக்கம் அவ்வளவாக இல்லை. ப்ளாக் எடுத்து போட்டோவைப் பிரசுரிப்பது அக் காலத்தில் செலவு பிடிக்கிற சமாசாரமாக இருந்தது. அவருடைய எழுத்தால் மட்டுமே ஈர்க்கப்பட்டு, அவரை எப்போது காண்போம் என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஈரோட்டில் எங்கள் நாடக அரங்கிலேயே அண்ணா நடிக்க வருகிறார் என்ற தகவல்தான் அது. அந்த நாளை மறக்கவே முடியாது. ஆம்! 19.11.43... அண்ணனை நேரில் கண்ட நாள்.

அந்த முதல் சந்திப்பு சுவாரஸ்யமானது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வளர்ச்சி நிதிக்காக "சந்திரோதயம்' நாடகத்தை நடிப்பதற்காக அவர் வருகிறார் என்றார்கள். அண்ணா எப்போது வருவார் எப்போது வருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன் நான். டி.கே.எஸ். அவர்கள், "சந்திரோதயம்' நாடகத்தில் நடிப்பதற்காக வந்திருந்தவர்க்கெல்லாம் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை ஒப்பனை போடுமாறு கூறினார். எங்களுக்கு ஆளுக்கொரு முகத்தைக் கொடுத்தார்கள். எனக்கு வாய்த்த முகம் அவ்வளவு ஈர்ப்புடையதாக இல்லை. அதுவுமில்லாமல் அவர் இங்கும் அங்கும் திரும்பிப் பேசியபடியே இருந்தார். எனக்கு எரிச்சல் என்றால் எரிச்சல். சற்று தூரத்தில் ஒரு பெரியவர் அமைதியாக மேக்-அப் போட்டுக் கொண்டு இருந்தார். அவர்தான் அண்ணா என்று முடிவு செய்துவிட்டேன்.

இவரை இப்படித் திரும்பு... அப்படித் திரும்பு, தலையை மேலே தூக்கு, போதும் கீழே இறக்கு என்று ஆணையிட்டுக் கொண்டிருந்தேன். என் கவனமெல்லாம் பக்கத்தில் இருந்த பெரியவர் மீதே இருந்தது. மெல்ல நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரிடம் "அவர்தானே அண்ணா?'' என்றேன், அந்தப் பெரியவரைக் காட்டி.

அவர் பொறுமையாக "இல்லை. நான்தான் அண்ணா. அவர் ஈழத்தடிகள்'' என்றார்.

இவ்வளவு நாள்களாக யாரைப் பார்க்க வேண்டும் என்று துடித்தோமோ அந்த அண்ணாவையா நாம் இவ்வளவு நேரம் இந்தப் பாடுபடுத்தினோம் என்று பதறிப்போனேன். எனக்குக் குற்ற உணர்வாகிவிட்டது. அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று துடித்ததைச் சொன்னேன். அண்ணா அமைதியாகச் சிரித்துவிட்டுத் தட்டிக் கொடுத்தார்.

பின் நாள்களில் நான் சினிமாவில் பிரபலமான காலங்களில் அண்ணா அதைப் பலரிடம் நினைவுபடுத்திச் சிரிப்பார்.

50 -களில் மதுரை பகுதிகளில் தி.மு.க. என்றால் பலருக்குத் தெரியாது. இப்போது போல பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அப்போது இல்லை. தனி நபர் செல்வாக்கு முக்கியமானதாக இருந்தது. எங்கள் பகுதிகளில் நான் இருக்கும் கட்சி என்பதால் ராசேந்திரன் கட்சி, ராசேந்திரன் கொடி என்றுதான் தி.மு.க.வையும் கருப்பு சிவப்பு கொடியையும் மக்கள் சொல்லுவார்கள்.
ஒரு சம்பவம் சொன்னால் அப்போதிருந்த நிலைமை ஓரளவுக்குப் புரியும். ஒருமுறை முதுகளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணா கலந்து கொள்வதாக ஏற்பாடு. எதனாலோ அவர் வருவதற்குத் தாமதமாகிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அண்ணா வந்துவிடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து "அண்ணா வர்ற வரைக்கும் அண்ணாதுரையையாவது பேசச் சொல்லுங்களேன்'' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணா வருகிறவரை, அண்ணாதுரையை எப்படிப் பேச வைப்பது?

கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. நாங்களெல்லாம் அண்ணா அண்ணா என்று பேசுவோம். எதிர்க்கட்சிக்காரர்கள் அண்ணாவை, அண்ணாதுரை என்றே அழைப்பார்கள். அண்ணா, அண்ணாதுரை என்று தி.மு.க.வில் இரண்டு பேச்சாளர்கள் இருப்பதாக அவர் நினைத்துவிட்டார். அப்படியொரு நிலைமையில்தான் ஐம்பதுகளின் துவக்கம் ஆரம்பமானது.

தேவர் சமுதாயத்தினரிடையே தி.மு.க. செல்வாக்கு பெருவதற்கு -குறிப்பாக கம்பம், தேனி, மதுரை பகுதிகளில் -நான் காரணமாக இருந்தேன் என்பதற்காக இதைச் சொல்கிறேன். ராசேந்திரன் கட்சி என்பதற்காகவே கூட்டம் சேருவார்கள்.

1962 பொதுத்தேர்தல் எங்களுக்கெல்லாம் படு உற்சாகமான தேர்தல். அண்ணா பதட்டமாகத்தான் இருந்தார். முழுவீச்சோடு களம் இறங்கியிருந்தோம். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ஜவஹர்லால் நேரு வந்திருந்தார். தேனி மாவட்டத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை பகுதிகளில் நாம் ஜெயிப்பது கடினம்தான் என்று எண்ண ஆரம்பித்துவிட்டோம். அப்போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. நேருவின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்தவர் இறுதியில் "நம் ராஜாங்கத்துக்கே வாக்களிக்க வேண்டுகிறேன்' என்பதாக மொழிபெயர்த்தார். தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டவர் பெயர் ராஜாங்கம். நேருவே ராஜங்கத்துக்கு ஓட்டுப் போடச் சொல்லிவிட்டார் என்று மக்களில் பாதிப் பேர் தவறாகப் புரிந்து கொண்டு ஓட்டுகளை வாரி வழங்கினர். அப்போது தி.மு.க. பிரமுகர்களுக்கு பிரசாரத்துக்கு கார் தந்து அனுப்புவது நான்தான். அண்ணா, நெடுஞ்செழியன் என யார் சுற்றுப் பிரயாணம் செய்வதானாலும் என்னுடைய காரை அனுப்பிவிடுவேன். தேர்தல் சமயங்களில் என்னுடைய ஜீப், ப்ளைமூத், வேன்கள் எல்லாமே களத்தில் இருக்கும்.

தி.மு.க.வின் ஆரம்பக் கட்டத்தில் இருந்து அதில் பணியாற்றி வந்ததற்கு எனக்கு இருந்த ஒரே ஒரு காரணம் அண்ணா என்ற மூன்றெழுத்து மட்டும்தான். சினிமாவில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் நடிப்புக்கு நடுவே தி.மு.க. கூட்டங்களில் பிரசாரத்துக்குத் தொடர்ந்து செல்வேன். வில்லுப்பாட்டு கச்சேரிகள் நடத்துவேன். தி.மு.க. அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாகவும் அதில் அண்ணா முதலமைச்சராகவும் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சராகவும் ஈ.வி.கே. சம்பத், கலைஞர் கருணாநிதி போன்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதவி கொடுத்து பாடுவேன். அதில் இறுதியில் "எனக்கு என்ன பதவின்னு கேட்கிறீர்களா? இறுதிவரைக்கும் அண்ணாவின் அன்புத் தொண்டனாக இருப்பேன்' என்று முடிப்பேன்.

அதே போல் 1967 -ல் அண்ணா முதல்வரானபோது என் வீட்டில் இருந்துதான் மந்திரிசபையே அமைக்கப்பட்டது. என் வீட்டு போனில் இருந்துதான் நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்கள் அழைக்கப்பட்டு அவரவர்களின் அமைச்சரவையை அறிவித்தார் அண்ணா. எனக்கு எந்தப் பதவியும் பெற்றுக் கொள்ளவில்லை.
கருணாநிதியை என் வீட்டுக்கு அழைத்துவிட்டு, "இப்ப கருணாநிதி வந்ததும் எனக்கு போலீஸ் மந்திரி சபை வேண்டும்னு கேட்பார் பாரு'' என்றார். அதேபோல் கருணாநிதி வந்ததும் போலீஸ் மந்திரி பதவி வேண்டும் என்றார். "முதலமைச்சர் பதவியை வேண்டுமானால் கேள், போலீஸ் அமைச்சராக நான் பொறுப்பேற்க இருக்கிறேன்' என்று அண்ணா அப்போது சொன்னார். கருணாநிதியை அந்த அளவுக்கு அண்ணா கணித்து வைத்திருந்தார்.

அண்ணாவுக்கு முதன்முதலாக பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாடியவன் நான்தான். எல்டாம்ஸ் ரோடில் என் புதுவீட்டுக்கு "அண்ணா இல்லம்' என்று பெயரிட்டு அதன் திறப்புவிழாவோடு அண்ணாவின் 50 -வது பிறந்தநாளைப் பொன்விழாவாகக் கொண்டாடினேன். அதே போல் 51 -வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவருக்குப் பிறந்த நாள் நினைவாக 51 பரிசுகள் கொடுக்கத் தீர்மானித்தேன். வாட்ச், பேனா, சட்டை, வேட்டி என 50 பரிசுகளை எடுத்துக் கொடுத்தேன்.

"51 -வது பரிசு எங்கே?'' என்று அண்ணா சிரித்துக் கொண்டே கேட்டார். நான் என் சட்டைப் பையில் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தேன்.
அதில் 51

}வது பரிசு என் உயிர் என்று எழுதியிருந்தேன்.
அண்ணா கண்கலங்கிப் போனார்.

"வாழ வேண்டியவன் இப்படியெல்லாம் எழுதலாமா?'' என்று கண்டித்தார்.

அண்ணாவுக்கு தெருகூத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒருமுறை அண்ணாவும் நானும் சிவகங்கையில் ஒரு பொதுகூட்டத்துக்குப் போய்விட்டு இரவு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அண்ணா வருகிறார் என்றால் நான் பின் சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். அவர் முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு வருவார். திருச்சிக்கு அருகே கார் நின்றிருந்தது. நான் எழுந்து பார்த்தபோது அங்கே நடந்து கொண்டிருந்த தெருக்கூத்தில் முன் வரிசையில் அண்ணா உட்கார்ந்து தலைப்பாகைச் சுற்றிக் கொண்டு "சத்யவான் சாவித்திரி' நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். தூக்கம் கலைந்து நானும் அண்ணாவுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தேன். "நீ நிம்மதியாகத் தூங்குவாய் என்றுதானே காரை நிறுத்திவிட்டு வந்தோம். நீ ஏன் எழுந்து வந்தாய்?'' என்றார். கூத்து பார்க்க நானும் அண்ணாவும் வந்துவிட்டதில் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பரம திருப்தி. அண்ணாவை மேடைக்கு அழைத்து இரண்டு வார்த்தை பேசச் சொன்னார்கள். எமதர்மன் வந்துவிட்டான். எங்களுக்கு மேலுலகம் செல்வதற்கு இன்னும் காலம் இருப்பதால் இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறோம் என்று சுருக்கமாகப் பேசினார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் அவர் மேலுலகம் செல்வார் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். என் தாய் இறந்தபோதுகூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அண்ணாவின் மறைவு என்னால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயராக இருந்தது. அந்தத் துயரை மறக்க விடாமல் குடிக்க ஆரம்பித்தேன். தினமும் கடற்கரைக்குச் சென்று அங்கேயே குடித்துவிட்டு அவர் கல்லறைக்கு அருகிலேயே படுத்துக் கிடந்த நாள்கள் உண்டு. படப்பிடிப்புக்குப் போகமுடியவில்லை, வீட்டில் தங்க முடியவில்லை, யாருடனும் பேசிப் பழக முடியவில்லை. குடிதான் எனக்குத் தீர்வாக இருந்தது. சீக்கரமே குடல் கெட்டுப் போனது. அரசுப் பொது மருத்துவமனையில் என்னைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.என் நிலைமை கேட்டு தந்தை பெரியார் என்னைச் சந்திக்க மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். உரிமையாகத் திட்டினார். என்னை நீ வந்து பார்க்க வேண்டிய வயதில் நான் உன்னை வந்து பார்க்க வேண்டியிருக்கிறதே என்றார்.

"என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, இனிமேல் இப்படிக் குடிக்க மாட்டேன்'' என அவர் கையைப் பிடித்துக் கலங்கியபடி சொன்னேன்.

அண்ணா இறந்த சில ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.

மணிமகுடம் படப்பிடிப்பு. மிகப் பெரிய செட் அமைத்து ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்தோடு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஃபிலிம் சுருள் தீர்ந்து போனது. ஒரு காரை அனுப்பி லேபிலிருந்து ஃபிலிம் சுருளை எடுத்து வரச் சொன்னேன். போன கார் போனதுதான். என்ன ஆனதென்றே தெரியவில்லை. இப்போது போல உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை. அத்தனை பேரும் காத்திருக்கிறோம். எனக்கு எரிச்சல் என்றால் எரிச்சல். வேறு ஒரு காரை அனுப்பி ஃபிலிம் சுருளைக் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு முதலில் அனுப்பிய கார் வந்து சேர்ந்தது.

"அவனை அப்படியே போகச் சொல்லுங்கள்'' என்று என் உதவியாளரிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். ஆனால் அந்தக் கார் டிரைவர் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்புவதாகச் சொன்னார்கள். கோபத்தோடு "என்னய்யா?'' என்றேன்.

"அய்யா இது அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் கார். இந்தச் சவாரியில் வரும் பணத்தில்தான் அவர்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. பழைய கார் திடீரென்று பழுதாகிவிட்டது. அதைச் சரி செய்து கொண்டுவருவதில்தான் தாமதமாகிவிட்டது'' என்று விளக்கினார்.

அண்ணாவின் குடும்பத்துக்கா இந்த நிலை? என்று துடித்துப் போனேன். உடனடியாக ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டு போய் அம்மையாரிடம் கொடுத்தேன். தன் குடும்பத்துக்கென பேரையும் புகழையும் தவிர எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லாத் தலைவன் அண்ணா என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?



சந்திப்பு: தமிழ்மகன்



தினமணி அண்ணா நூற்றாண்டு மலர் -2009

ஞாயிறு, ஜூலை 26, 2009

ஒரு மரப்பெட்டிக் கனவு


விகடன் சிறுகதை





பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் எராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு "சின்னதாகிவிட்ட' ஆடைகள் எல்லாம் அதில் எதற்காகவாவது பயன்படும் என்று எடுத்து வைத்துவிடுவார்கள். சரவணன் தன் பதினாறு வயது அனுபவத்தில் பயன்பட்டதாகப் பார்த்ததில்லை . கொஞ்சம் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள்களும் அதில் இருக்கும். ஊறுகாய் ஜாடி, விநாயகர் அகவல், கார்த்திகை தீபத்துக்கான அகல்விளக்குகள் இப்படி..
ஆனால் அதனுள் ஒரு பிணம் இருக்கக் கூடுமோ என்று பயமாக இருந்தது சரவணனுக்கு. ரொம்ப சின்ன வயதில் "கண்டுபிடிக்கிற விளையாட்டு' விளையாடும் போது அதனுள் சென்று ஒளிந்து கொண்டது ஞாபகம் இருக்கிறது. மூச்சுத் திணறிப் போய், மேற்கொண்டு ஒளிந்திருக்க முடியாது என்பது தெரிந்ததும் உயிர் பிழைத்து வெளியே வந்துவிட்டான். கண்டுபிடிக்கிறவனிடம் வலிய சென்று பிடிபட்டு, விளையாட்டில் இருந்து விலகிக் கொண்டதும்கூட நினைவிருக்கிறது. அதன் பிறகு அந்தப் பெட்டி மீது ஒருவித அச்சமும் அருவருப்பும்கூட வந்தவிட்டது. இப்போது இப்படியொரு கனவு வந்த பின்பு அதை ஒரு முறை திறந்துதான் பார்த்துவிட்டால் என்ன என்றெண்ணினான்.
சே.. இது என்ன பைத்தியக்காரத்தனம் கனவில் வந்தது எப்படி நிஜமாக இருக்கும் எனவும் ஒருவேளை ஏதாவது இருந்து தொலைத்தால் என்ன செய்வது எனவும் அதைத் தவிர்த்துவிட்டான். அந்தப் பெட்டியைக் கடக்கும்போது அவனால் மட்டுமே உணரக்கூடிய துர்நாற்றமும் வெளிப்பட்டது.

இந்த ஆண்டு திருவிழாவுக்கு நாடகம் போடலாம் என்று பஞ்சாயத்துத் தலைவர் கேட்ட போது இளைஞர் குழாமிலிருந்து ""அதுக்கு நாங்க பொறுப்பு'' என்று குரல் வந்தது. பெண்களும் கூடியிருந்ததால் வெடுக்கென இப்படி ஒருவன் பதில் சொன்னான். ஆனால் அது யார் என்று யூகிக்கவிடாமல் செய்துவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். தலைவர் தானாகவே அதைச் சொன்னது பசுபதியாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து அவனை நோக்கியே அடுத்தடுத்துப் பேச ஆரம்பித்தார். பெண்கள் எதிரில் பின் வாங்கிவிடக் கூடாது என்று அவனும் முடிந்த வரை சமாளித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"பவளக்கொடியா?, காத்தவராயனா?.. என்ன கூத்துன்னும் சொல்லிட்டீங்கன்னா நோட்டீஸ்ல போட வசதியா இருக்கும்.''
பசுபதி தன் இளைஞர் பட்டாளத்தை ஒருதரம் பார்த்து, அவர்கள் அனுமதியோடுதான் அறிவிக்கிறேன் என்ற தோரணையில் "நாங்க புதுசா பண்றதா இருக்கோம்'' என பன்மையில் சொன்னான்.
"எங்களுக்குத் தேவை ஒரு தலைப்பு... எதாவது யோசிச்சு வெச்சிருப்பீங்கல்ல?''
பசுபதி மீண்டும் கெத்தாக தலையைத் திருப்பாமல் பின்பக்கமாகச் சாய்ந்து செவிமடுத்தான். அதாவது பின்னாடி இருக்கும் யாராவது ஒரு தலைப்பைச் சொல்லுங்கள் என்பதாக.
"ராஜதுரோகி'' பின்னால் இருந்துதான் யாரோ சொன்னார்கள். பசுபதி அதை "முன்மொழி'ந்தான்.

ராஜதுரோகி என்ற தலைப்பைச் சொன்னவன் யார் என்பதையும் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. திருவிழா குறித்து ஊர் மக்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பசுபதியின் பின்னால் கதிர்வேலு, சண்முகம், பஞ்சா, குமரேசன், கன்னியாம்பாளையத்தார் பையன் சரவணன், புளிமூட்டை எல்லாரும்தான் இருந்தார்கள். பசுபதி தன் நினைவை விளிம்புகட்டி அந்தக் குரலைக் கட்டிப்பிடிக்க முனைந்தான். அது அவனுக்கு வசப்படவே இல்லை.

"அது அவ்வளவு முக்கியமா? ராஜதுரோகி கதை என்னான்னு முடிவு பண்ணிட்டா போவுது..'' கதிர்வேலு சாந்தப்படுத்தினான்.
ராஜதுரோகி என்றால் அது அரசர்கள் இடம் பெற வேண்டிய கதை என்பதை முடிவு செய்து மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மனோகரா, ஆயிரத்தில் ஒருவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப் படங்களின் காட்சிகளை முன்னும் பின்னுமாக வரிசையாக அடுக்கினார்கள்.
ராஜவர்மனின் மகள் வசுமதியை கங்க நாட்டு மன்னன் குலோத்துங்கள் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று திருமணம் செய்ய துணிகிறான். மகளை மீட்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகத் தண்டோரா போடுகிறான் மன்னன். நளமாறன் கிளம்பிச் செல்கிறான். குலோத்துங்கனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள். அவன் மந்திரி சகுனிதேவனின் பிடியில் சிக்கி அவனுடைய கைப்பாவையாக இருப்பதை அறிகிறான். மன்னனையே சிறைபிடித்து வைத்துவிட்டு வசுமதியை மணக்கத் துடிக்கிறான் சகுனிதேவன். மக்களைத் திரட்டிப் போராடி சகுனி தேவனை வீழ்த்தி மன்னரை மீட்கிறான் நளமாறன். வசுமதியை அவனுக்கே மணமுடித்து நாட்டையும் ஒப்படைக்கிறான் குலோத்துங்கன்.
கதை இப்படி பிரமாதமாக அமைந்துவிட்டதில் பசுபதிக்குத் தலைகால் புரியவில்லை. மக்களைத் திரட்டிப் போராடுதல் என்றால் எப்படி மேடையில் காட்டுவது என்பதில் அவனுக்குப் பெரிய சந்தேகம் வந்துவிட்டது. மேடையில் குதிரைகளும் யானைகளும் போர் வீரர்களும் அம்பும் வேல்கம்பும் எப்படிக் கொண்டு வருவது என்று இரண்டு இரவுகள் ஓயாமல் சிந்தித்துவிட்டு நாடக விவாதம் நடக்கும்போது கேட்டும் விட்டான். யாருக்கும் விடை தெரியவில்லை.


நளமாறன் கிளம்பிப் போகிறான் என்று ஒருவரியில் சொல்லிவிட்டதையும் மேடையில் எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. பசுபதியின் மனத்திரையில் குதிரையில் ஏறி "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று பாடிச் செல்வதாக ஓடிக் கொண்டிருந்தது அது.
காட்சி ஒன்று, காட்சி இரண்டு என சிவராம ஆசாரிதான் அவசரமாக அதை ஓரளவுக்கு நாடகமாக்கினார். அரசர்கள் கதை என்றாலும் அதிலே ""இதோ டூ மினிட்ஸ்ல வந்து விடுகிறேன் அம்மா'' போன்ற வசனங்களும் இருந்தன. மக்கள் சிரிப்பார்கள் என்று அதற்குக் காரணம் சொல்லிவிட்டார் அவர். அவர் இதற்கு முன்னர் நடந்த "பூலோக நாகம்மா' கூத்திலும் நடித்து அனுபவப்பட்டவர். அவர் மட்டும் இல்லையென்றால் நாடகம் ஒரு இம்மியும் நகர்ந்திருக்காது. நாடகத்தில் யார் யாருக்கு என்னென்ன வசனம் எந்தக் காட்சியில் வரும் என்பதைச் சொன்னார். கதை வசனமாக மாறியபோது அது அடிப்படை கதையிலிருந்து விலகி வேறொரு கதைபோல இருந்தது பசுபதிக்கு. சகுனிதேவன் பகடை விளையாட்டில் கைதேர்ந்தவன் என்பது புதிதாக சிவராம ஆசாரியால் சேர்க்கப்பட்டது. அந்தக் கலையின் மூலம் ஐம்பத்து நான்கு தேசத்து அரசர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பதாக கதையை வளர்த்தியிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் கதை மிகவும் சிறியதாக இருக்கிறது என்பதுதான். அவர் இதைச் சேர்த்தபிறகும் நாடகத்தில் ஒன்பது காட்சிகள்தான் இருந்தன. ஒவ்வொரு காட்சியும் ஸ்கிரீன் (தூக்கி இறக்கும் நேரத்தையும் சேர்த்து) ஐந்து நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் நாடகம் முடிந்துவிடும் போல தோன்றியது. நாடகம் விடிய, விடிய நடக்கப் போவதாகவும் விளம்பரம் செய்திருந்தது நாடகத்துக்குப் பொறுப்பேற்றிருந்த அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
"நாடகத்தில் காமெடி காட்சிகளே இல்லை'' என்பதை ஞாபகப்படுத்தினான் பஞ்சா.
கன்னியாம்பாளையத்தார் பையனையும் சோமுவையும் காமெடி செய்ய சொன்னார்கள். ஒவ்வொரு காட்சியைத் தொடர்ந்தும் அவர்கள் மேடைக்கு வந்து அடுத்த காட்சியை எடுத்துக் கொடுத்து விளக்கிவிட்டு, சினிமா பாடல்களை இட்டுக் கட்டிப் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. உண்மையில் இந்த யோசனைக்கு நல்ல பலன் இருந்தது. நாடகம் காட்டுப் பாய்ச்சலாக இரண்டு மணி நேர நாடகமாகிவிட்டது.

"சின்ன பொண்ணே கோக்கிலமடி கட்டாணி கட்டாணி..
சீக்கிரமா வந்தியனா வாங்கித்தர்றேன் பட்டாணி...
ஒவ்வொன்னா பொறுக்கு....
என் மீசைய கொஞ்சம் முறுக்கு '' என கன்னியாம்பாளையத்தார் பையனுக்கு ஒரு அறிமுகப்பாட்டும் அமைக்கப்பட்டது. சோமு காமெடியனுக்கு ஜோடியாகப் பெண் வேடம் கட்டி ஆட வேண்டும்.
நாடகத்தில் இப்போது இரண்டு பெண் வேடங்கள்.. ஒன்று வசுமதி. கடத்தப்பட்டுவிடுவதால் ஆரம்பத்திலும் முடிவிலுமாக இரண்டு தடவை மேடையில் தோன்ற வேண்டும்.

"மூன்றெழுத்தில் ஒரு மாடிருக்கும்
அது மூன்று படி பால்கறக்கும்...
எருமை... அது எருமை....''
எனவும்
பாலிருக்கும் பசி இருக்கும்
பழமிருக்காது...
பஞ்சணையில் தூக்கம் வரும்
காத்துவராது
எனவும் கன்னியாம்பாளையத்தார் பையன் அதை நன்றாக மெருகேற்றினான்.
எல்லாம் சரியாக இருந்தது. வீரன் நளமாறன் வேடத்துக்கு பசுபதியைப் போட்டதுதான் வேதனையிலும் வேதனையாக இருந்தது. சுட்டுப் போட்டாலும் வசனம் வரவில்லை. அரசரே என்று அழைப்பதற்கே தட்டுத் தடுமாறிப் போனான். "நான் மாடக்கூடலை நாடி வந்தக் காரணம் என்ன தெரியுமா? நவில்கிறேன் கேளுங்கள்.." உணர்ச்சி கொந்தளிக்கும் வசனத்தை அவன் உள்ளங்கையில் எழுதி வைத்து வாசித்துவிடுவதாக ஒத்திகையின் போதே முடிவு செய்துவிட்டனர். தனித் தனியாக வசன மனப்பாடம் செய்வதும் சேர்ந்து எல்லோரும் நடித்துப் பார்ப்பதும் நடந்து கொண்டிருந்தது. நளமாறன் வேடம் மட்டும் வெற்றிடமாகவே இருந்தது. பசுபதி எப்போதும் நடிப்பதற்கு வருவதே இல்லை. "நீங்கள்லாம் நடிங்கடா நான் சமாளிச்சுடுவேன்' என்பான். பஞ்சாயத்துத் தலைவருக்கு பசுபதியின் மீது அபார நம்பிக்கை இருந்தது. அவன் ஒருத்தனால்தான் இந்த நாடகமே சாத்தியமானது என்று உறுதியாக இருந்தார். நாடக வசனங்கள் அவனுக்கு மட்டும்தான் தலைகீழ் பாடம் என்பதாக நினைத்து அவனை திருவிழாவுக்கான மற்ற வேலைகளுக்கு ஏவிக் கொண்டிருந்தார். அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் மாதிரி உடனே பைக்கை எடுத்துக் கொண்டு மறைந்துவிடுவான். அவன் மறைந்த கொஞ்ச நேரத்தில் நாடகப் பட்டாளத்துக்கு டீ வரும். சமயங்களில் பிஸ்கட்டும் சேர்ந்துவரும். "பசுபதி அண்ணன் குடுக்கச் சொன்னாரு' என்பான் டீ பையன். இது போன்ற காரணங்களுக்காக யாரும் பசுபதியைக் கோபித்துக் கொள்ளவும் முடியாமல் இருந்தது. ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை அம்மனுக்குக் கூழ் ஊற்றி அன்று இரவே ராஜதுரோகி நாடகம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஊர்க்காரர்களின் உறவினர்கள் சிலர் அழைப்பின் பேரில் நாடகம் பார்க்க வந்திருந்தனர்.
காலையில் இருந்தே ராட்டினம் சுற்றுபவன், பலூன் விற்பவன், ரிப்பன்} வளையல் விற்பவன் என களை கட்டியிருந்தது ஊர். பசுபதியை மட்டும் காணவில்லை. கன்னியாம்பாளையத்தார் பையனை வேகமாக ஓடி பார்த்துவிட்டு வரச் சொன்னதில் பசுபதி படுத்தபடுக்கையாக இருப்பதாகச் சொன்னான். குளிர் ஜுரம் தூக்கித் தூக்கிப் போடுவதாக விவரித்தான், பார்த்துவிட்டு வந்தவன். யாருக்கும் கைகால் ஓடவில்லை. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடைக்குக் கீழே பஞ்சாயத்துத் தலைவரை அணுகி இப்படி ஆகிவிட்டதைச் சொன்னார்கள். பஞ்சாயத்துத் தலைவர் அந்த நேரத்திலும் ""வேறு எல்லாருக்கும் சீக்கு வந்திருந்தாக்கூட கவலைபட்டிருக்க மாட்டேன். ஏன்னா பசுபதி சமாளிச்சுடுவான். பசுபதியே படுத்துட்டானே?'' என நம்பிக்கையாக இடிந்துபோனார்.
"பசுபதி பேச வேண்டிய வசனம் வேறு யாருக்குத் தெரியும்?'' வறட்சியாக விசாரித்தார்.
"கன்னியாம்பாளையத்தார் பையன் சரவணனுக்குத் தெரியும்'' என்றனர்.
"அவன் பொடியனாச்சே?''
"மீசை வெச்சு.. பனியனுக்குள்ள கொஞ்சம் துணியை அடைச்சுட்டா தெரியாது ரெட்டியாரே''
தலைவர் அரைமனதுடன் சம்மதித்தார். மானம் தாளாமல் ஊரைவிட்டு ஓடிவிடுவார் போல இருந்தது அவர் முகம்.
காமெடி வேடத்திலும் நளமாறன் வேடத்திலும் சரவணனே நடித்தான். மூன்றாவது காட்சிக்கு அப்புறம் "சகுனிதேவன்' குவார்ட்டர் அடித்துக் குப்புற விழுந்துவிட்டான்.
வசுமதியை மீட்டு வருவதாக அரசனிடம் சத்தியம் செய்துவிட்டு மேடைக்குப் வந்த சரவணனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. என்ன காரணத்தினாலோ அவன் கண்ட கனவு ஞாபகம் வந்தது.
மந்திரி இல்லாமலேயே காட்சியை முடித்துவிடலாம் என்றான் சரவணன்.
அதாவது தந்திரக்கார மந்திரியைத் தந்திரத்தாலே வீழ்த்தினான் நளமாறன். மன்னனுக்கு உண்மை புரியும் வரை மந்திரியை மயக்க மருந்திட்டு பெட்டியில் அடைத்துவிட்டான் என்று ஜோக்கராக வந்து காட்சி விளக்கம் தந்தான். தன் வீட்டில் இருந்த மரப் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லி அதில்தான் சகுனிதேவனை மயக்க மருந்திட்டு அடைத்து வைத்திருப்பதாகக் காட்டினான். குடித்துவிட்டு விழுந்து கிடந்தவனைத் தூக்கி வந்துப் பெட்டியில் போடுவதாகக் காட்டினான். ஒவ்வொரு காட்சியிலும் அந்தப் பெட்டி பார்வையாளரை திகிலூட்டியது. பெட்டி தென்படும் காட்சிகளில் குறிப்பாக அந்தப் பெட்டியின் மீது நளமாறன் ஒய்யாரமாகச் சாய்ந்து அரசனிடம் பேசிய காட்சியில் மக்கள் பரபரப்பானார்கள். ரெட்டியார் "உள்ள கிடந்து அவன் செத்துகித்துத் தொலைக்கப் போறான்டா'' என்றார்.
முதல் காட்சியில் ஸ்கிரீன் மாற்றியபோதே அவனை வெளியே எடுத்துவிட்டதைச் சொன்னபோது "அடராமா.. அவன் உள்ளதான் இருக்கான்னு பயந்துட்டன்டா'' என்றார்.
கடைசி வரை பசுபதிக்குப் பின்னால் இருந்து "நாடகத்துக்கு நாங்கப் பொறுப்பு, ராஜதுரோகி 'என குரல் கொடுத்தது தான்தான் என சரவணன் யாரிடமும் சொல்லவில்லை.
இதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் சரவணன் ஹிச்காக்கின் "தி ரோப்' படத்தைப் பார்த்தான். படம் டைரக்ட் செய்வதற்கான தகுதி இருப்பதாக அவன் மனதில் நம்பிக்கை உதித்தது. அடுத்த மூன்றாண்டுகளில் அவன் "நாடகப் பட்டாளம்' என்ற திரைப்படத்தை எடுத்தான்.

செவ்வாய், ஜூலை 21, 2009

நிறம்மாறும் மனம்


எனது மின்மலர் சிறுகதை தொகுப்பு குறித்து எழுத்தாளர் பாவண்ணன்...

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழிலக்கிய உலகில் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர் தமிழ்மகன். விறுவிறுப்பான கதைகூறல்முறையும் தடையற்ற தமிழ்நடையும் இவருடைய வலிமை.
21 சிறுகதைகள் அடங்கிய மீன்மலர் தொகுப்பு, அவர் வலிமைக்குச் சான்றாக வெளிவந்திருக்கிறது. கதைகளில் அவர் கையாளும் வெவ்வேறு விதமான உத்திகள் நல்ல வாசகஅனுபவத்தை வழங்குகின்றன.

தொகுப்பில் மிகச்சிறந்த கதையாக "அம்மை" அமைந்திருக்கிறது. இக்கதையில் அசைபோடும் உத்தியை வெற்றிகரமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் தமிழ்மகன். பத்தாவது வகுப்பு தேர்வெழுதுவதற்கு முன்பாக அம்மைபோட்டு படுத்த படுக்கையானதால் பள்ளியைவிட்டு நின்றுபோன மாணவனொருவன் கல்வியை இழந்தாலும் பிற்காலத்தில் சமூகம் மதிக்கிற ஓர் கட்டட ஒப்பந்தக்காரராக வளர்ந்து நிற்கிறான். தான் படித்த அதே பள்ளியின் குடிநீர்த்தேக்கத் தொட்டியைப் பழுதுபார்க்கும் வேலை அவனைத் தேடிவருகிறது. காசோலையைத் தருவதற்கு முன்பாக ஒரு பேச்சுக்காக தலைமையாசிரியர் "நீங்களும் இங்கதான் படிச்சிங்களாமே?" என்று தொடங்குகிற உரையாடல் அவனை பழைய இளமைநாட்களைநோக்கி இழுத்துச் செல்கிறது. கதை இந்தப் புள்ளியில் ஆரம்பமாகிறது. அம்மையும் தழும்பும் பள்ளியைவிட்டு நிற்பதற்கான புறக்காரணம் மட்டுமே என்பதையும் அவன் நெஞ்சில் ஆறாத தழும்பாக நின்றுவிட்ட சம்பவமொன்றே உண்மையான காரணமென்பதையும் படிக்கப்படிக்க புரிந்துகொள்கிறோம். அவன் உள்ளூர ஆசைப்பட்ட ஒரு மாணவியையும் அவன் வகுப்பாசிரியரையும் பார்க்கக்கூடாத கோலத்தில் இணைத்துப் பார்த்ததால் உருவான தழும்பைச் சுமந்துகொண்டு அந்தப் பள்ளிக்குள் நுழைய அவன் மனம் இடம்தரவில்லை. அவன் உடலைத் தாக்கிய அம்மையைவிட அவன் மனத்தைத் தாக்கிய அம்மையின் உக்கிரம் அதிகமானது. ஆசை வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கிற தன் வயசுப்பையனைவிட, தனக்குப் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியரின்மீது பிறந்த ஈடுபாடு புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர். தன் அலங்கோலத்தைப் பார்த்துவிட்ட மாணவன்மீது சட்டென ஒரு குற்றத்தைச் சுமத்தி அடிஅடியென்று அடித்து, பள்ளியைவிட்டு விரட்டுகிற ஆசிரியரின் தந்திரம் இன்னொரு புதிர். கதையின் உள்ளடக்கத்திலிருந்து எதிர்பாராத கணத்தில் மனத்தின் விசித்திரத்தன்மையைநோக்கி வாசகனைச் செலுத்துகிறது சிறுகதை.

மனத்தின் விசித்திரத்தன்மையைச் சித்திரப்படுத்துகிற இன்னொரு சிறுகதை "பழையன புகுதலும்". வீடு விற்றுத் தருகிற, கட்டித் தருகிற ஒரு தரகருக்கும் கதைசொல்லும் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்த அனுபவம் இக்கதையில் இடம்பெறுகிறது. திருமணச் செலவுக்காக பூர்வீக வீட்டை விற்கவேண்டியிருக்கிறது. வீட்டை விற்றுத் தரும் முயற்சியில் உதவுவதற்கு முன்வரும் தரகர் தானாகவே இன்னொரு திட்டத்தையும் முன்வைக்கிறார். கல்யாணச் செலவுபோக மிச்சமிருக்கும் பணத்தில் புறநகரில் வீட்டுமனையொன்றை குறைந்தவிலையில் வாங்கி புதுசாக வீடொன்றைக் கட்டி விற்றால் ஒன்றுக்கு இரண்டாக லாபம் கிடைக்குமென ஆசை காட்டுகிறார். லாபத்தை நினைத்து மனத்திலெழும் சபலம் தரகர் வார்த்தைகளை சத்தியமென்று நம்புகிறது. வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு அதில் உடன்பாடில்லை. வீட்டை விற்றுத் தந்தால் போதும், பணத்தை முதலீடு செய்யும் திட்டமெதுவும் வேண்டாம் என்று கறாராக அறிவித்துவிடுகிறது. தன் திட்டம் புறக்கணிக்கப்படுகிறது என்ற அளவில் தரகர் மனம் நிறம் மாறிவிடுகிறது. வீட்டை வாங்கவிருந்த நபரிடம் ஏதேதோ பொய்க்காரணங்கள் சொல்லி வரவிடாமல் தடுத்துவிட்டு, ஒன்றுமறியாத முகபாவனையோடு, முன்பணத்தோடு அவர் வரக்கூடும் என்று காத்திருக்கிற வீட்டு உறுப்பினர்களோடு தானும் இணைந்து காத்திருக்கிறார். உண்மை அம்பலமாகிற கணத்தில் கொட்டினாத்தான் தேளு, இல்லன்னா புள்ளப்பூச்சிதான் என்று சொல்லிவிட்டு செல்கிறார். உள்ளூர மனம்நிறைய நஞ்சோடும் வாய்நிறைய புன்னகைச்சொற்களோடும் இணைந்து உலவும் மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத புதிர்களாக இருக்கிறார்கள்.

மனம்நிறைய நஞ்சைச் சுமந்திருக்கும் மனிதனை அடையாளம் காட்டுகிற இன்னொரு கதை "வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி". அசாமில் சிங்கத்தைத் தேடி வருகிற குழுவைச் சேர்ந்த ஒருவன் பள்ளத்தாக்கில் தடுமாறி மயக்கநிலையில் சிங்கத்தின் குகைவாசலிலேயே விழுந்துவிடுகிறான். சிங்கம் அவனைக் காப்பாற்றுகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. உணவுக்கு ஏற்பாடு செய்கிறது. அதன் சகோதரச் சிங்கங்களும் குட்டிச் சிங்கங்களும் அவனோடு நன்கு உறாவடுகின்றன. காட்டுக்குள் வாழ்ந்த ஸ்டீபன் வழங்கிய பயிற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற சிங்கங்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கேட்டு மனிதன் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறான். சில நாட்கள் தங்கியிருந்ததில் காட்டுவிலங்குகளின் பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்துகொண்டதாக காட்டிக்கொள்கிறான் மனிதன். தான் புரிந்துகொண்டதை, உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக எடுத்துரைக்கப்போவதாக வாக்குறுதியும் அளிக்கிறான். ஆனால் வெளியேறிய மறுகணமே அவன் பேராசைமனம் விழிப்படைந்துவிடுகிறது. அடுத்த நாளே அந்தச் சிங்கங்களை வேட்டையாடி இழுத்துச் செல்ல நண்பர்களின் கூட்டத்தோடு அதே குகைவாசலைத் தேடி ஓடிவருகிறான். அவன் பேராசையை நுட்பமாக முன்னதாகவே அறிந்துகொண்ட சிங்கங்கள் குகையைவிட்டு வெளியேறிவிடுகின்றன. நெகிழ்ச்சியின் உச்சத்தில் வாக்குறுதி தருகிற மனிதன் மறுகணமே நஞ்சுள்ளவனாக மாறுவது பெரிய புதிர். வாழ்வில் ஏதோ ஒரு கணம் பண்புள்ள மனிதனை கொடிய விலங்காகவும் கொடிய விலங்கை பண்புள்ள மனிதனாகவும் தளம்மாற்றி நிறுத்திக் காட்டுகிறது. "சம்பா", "சோறியம்" ஆகிய சிறுகதைகளையும் மனிதமனத்தில் நிறைந்துள்ள நஞ்சை ஓரளவு அடையாளம் காட்டும் நல்ல கதைகளாகக் குறிப்பிடலாம்.

மனத்தின் ஆழத்தையும் அதில் நிறைந்துள்ள பலவிதமான நிறங்களையும் கண்டறிந்து பகிர்ந்துகொள்ள விழையும் தமிழ்மகனின் முனைப்பு அவருடைய மாபெரும் பலம். இந்த பலம்தான் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அவருக்குரிய இடத்தை வரையறுப்பதில் உதவியாக உள்ளது. பல விதமான களங்களைக் கையாள்கிற கதைகளில் ஒரேவிதமான மொழிநடையையே தமிழ்மகன் பயன்படுத்துவது ஒரு சின்ன பலவீனம். புதுமைக்காக முன்வைக்கப்படுகிற ஒரு விவாதம் அதன் இறுதிபபுள்ளிவரை நகராமல், வேறொரு மெலிதான திருப்பத்fதோடு முடிவடைந்துவிடுவது இன்னொரு பலவீனம். ( வீடு, கடவுள்தொகை). அடுத்தடுத்த தொகுப்புகளில் தமிழ்மகன் இதைத் தவிர்க்கக்கூடும் என்று நம்பலாம்.

( மீன்மலர். சிறுகதைத்தொகுப்பு. தமிழ்மகன். உயிர்மை வெளியீடு. 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம். சென்னை-18. விலை.ரூ.85)



நன்றி: தீராநதி - ஜூலை 09

26 குரங்குகள், அதனுடன் ஒரு படுகுழி




அமெரிக்கா எழுத்தாளர் கிஜ் ஜான்ஸன்

தமிழில்: தமிழ்மகன்


கிஜ் ஜான்ஸன்
ஃபேன்டஸி பிக்ஸனுக்கான இந்த ஆண்டின் நெபுலா விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் கிஜ் ஜான்ஸன். 1960- ல் ஐயோவா மாகாணத்தில் பிறந்தவர். "கல்சுரல் ஹிஸ்ட்ரி ஆஃப் இங்கிலாந்து' என்ற துறையில் தம் டிகிரியை முடித்தவர். விஞ்ஞானக் கதைகளுக்கான விருதுகள், ஃபேன்டஸி கதைகளுக்கான விருதுகள் பல பெற்றவர். மலையேற்றம், குழந்தைகள் புத்தக வெளியீடு என பலவித விருப்பங்கள் இவருக்கு உண்டு.
வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஏற்படும் இடையறாத கேள்வியை மனிதமனம் எப்படி தர்க்கரீதியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது என்பதுதான் "26 குரங்குகள் அதனுடன் ஒரு படுகுழி' என்ற கதைக்கான மையம். அந்தக் கேள்வி ஒரு சாராரிடமிருந்து இன்னொருத்தரின் தலைக்கு எப்படி இறக்கிவைக்கப்படுகிறது என்பதும் வாழ்க்கையில் அதீதமானது என எதுவுமே இல்லை என்பதும் கீழை தத்துவ சிந்தனையை நினைவுபடுத்துகிறது.



1
எய்மி செய்யும் மிகப் பெரிய சாகஸம் 26 குரங்குகளை மேடையில் காணாமல் போகச் செய்வதுதான்.

2
பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு "பாத் டப்'பை நகர்த்தி வைத்து யாரேனும் ஒருத்தர் மேடைக்கு வந்து அதை பார்வையிடுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். சிலர் ஏறி வந்து பாத் டப்பின் அடிப்புறத்தைப் புறத்தை நோக்கினர். அடிப்புறத்தின் எனாமல் பூசிய பகுதியைத் தொட்டும் கைகளால் உள்புறத்தை துழாவியும் பார்த்தனர். இது முடிந்ததும் மேடையின் மேலே இருந்து நான்கு சங்கலிகள் கீழே இறங்கியது. டப்பின் உதட்டுப் பகுதிகளில் இருக்கும் துளைகளில் சங்கலிகள் பூட்டியானதும் எய்மி தரும் ஜாடைக்குப் பின் பத்தடி உயரத்துக்கு பாத் டப் மேலே அந்தரத்தில் இழுத்துக் கட்டப்படும்.

அதன் மீது ஏணி ஒன்றைச் சாய்த்து வைப்பாள். அவள் கை தட்டியதும் 26 குரங்குகளும் மேடைக்கு ஓடிவரும். ஒவ்வொன்றாக ஏணியில் ஏறி பாத் டப்புக்குள் தாவி குதிக்கும். குரங்குகளின் குதிப்புக்கு ஏற்ப பாத் டப்பின் ஊசலாட்டம் இருக்கும். பார்வையாளர்களால் குரங்குகளின் தலை, கால், வால் போன்றவற்றைப் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறை குரங்கு தாவி குதித்தும் அது ஆடி அடங்குவதையும் காணலாம். எப்போதும் கடைசியாக ஏணியில் ஏறும் குரங்கு ஜெப். அது மார்பில் அறைந்தபடி ஏற்படுத்தும் கூக்குரல் அரங்கத்தை நிறைக்கும்.

பிறகு அரங்கத்தில் பரவும் விளக்கு வெளிச்சத்தில் பாத் டப்பின் இரண்டு சங்கலிகள் மட்டும் கீழே இறக்கப்படும். பாத் டப் அதன் உட்புறத்தைக் காட்டியபடி சரிந்துத் தொங்கும்.

காலி.

3

அவர்கள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தங்கள் டூர் பஸ்ஸýக்குத் திரும்புவார்கள். அதில் சிறிய கதவு .. சில மணி நேரங்களுக்கு முன் காலையில் குரங்குகள் அதில் நுழைந்து தனியாகவோ கூட்டமாகவோ குழாயில் தண்ணீர் பிடித்தன. அப்போது ஒரே நேரத்தில் தண்ணீருக்கு போட்டிபோடும்போது தண்ணி அடித்துவிட்டு அறைக்குத் திரும்பிய கல்லூரி மாணவர்களின் கூச்சல் போல இருக்கும். சில ஷோபாவில் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், ஏதாவது ஒன்றாவது மெத்தையில் படுத்திருக்கும், பல குரங்குகள் இலக்கு ஏதுமின்றி தங்கள் கம்பி கூண்டுக்குத் திரும்பி வந்திருக்கும். அவற்றின் போர்வைகளையோ மென் பொம்மைகளையோ மாற்றியமைக்கும் வேளைகளில் உறுமிக் கொண்டிருப்பவை அதன் பின் நிம்மதி பெருமூச்சுடன் குறட்டைவிட ஆரம்பிக்கும். அவை எல்லாம் உள்ளே சென்று அடங்கும் வரை எய்மியால் உண்மையில் உறங்க முடிவதில்லை.

பாத் டப்புக்குள் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எய்மமிக்கு எந்த யோசனையும் இல்லை, அல்லது அவை எங்கே செல்கின்றன என்றோ, மீண்டும் அவை திரும்பி வரும் அந்த சிறிய கதவு திறக்கப்படும் முன்புவரை என்ன நடக்கிறது என்றோ. அது அவளை மிகவும் தொல்லைபடுத்திக் கொண்டிருந்தது.

4

எய்மி இந்த நிகழ்ச்சிகளை மூன்றாவது ஆண்டாக நிகழ்த்துவதற்கான அனுமதி பெற்றிருந்தாள். சால்ட் லேக் ஏர்போர்ட்டில் இருந்து விமானங்கள் பறக்கும் பாதையின் கீழே அமைந்திருந்த மாதவாடகை அடுக்குமாடிக் குடியிருப்பில் அவள் இருந்தாள். ஏதோ ஒன்றால் மென்று தமக்குள் ஏற்பட்ட குழி இப்போது கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதுபோல ஒரு வெறுமையை உணர்ந்தாள்.

உட்டா மாகாண கண்காட்சியில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அவளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்த நிகழ்ச்சியை வாங்கி நடத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஏதற்காக அப்படியொரு யோசனை தோன்றியது அவளுக்குத் தெரியாது, நேராக அந்த முதலாளியிடம் சென்று ""நான் இதை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றாள்.

அவரும் உடனே சம்மதித்தார். இந் நிகழ்ச்சியை அவர் ஒரு டாலருக்கு விற்றார். இதே விலை கொடுத்துதான் நான்காண்டுகளுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியை தாம் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்தாகி முடிந்த பின் ""எப்படி முடிந்தது?இவற்றைப் பிரிவதால் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா?'' என்று கேட்டாள்.

"பாருங்கள், இது தனிப்பட்ட விவகாரம்தான். அவை என்னைப் பிரிந்து ஏங்கும். நான் அவற்றைப் பிரிந்து ஏங்குவேன். ஆனால் இதுதான் தருணம், அவற்றுக்கும் இது தெரியும்'' என்றார் அவர்.

தன் புது மனைவியுடன் சேர்ந்து சிரித்தார். அவருடைய இளம் மனைவியின் ஒரு கையில் ஒரு வெர்வெட் குரங்கு தொங்கிக் கொண்டிருந்தது. "நாங்கள் ஒரு தோட்டத்தை வாங்கத் தயாராகிவிட்டோம்'' என்றாள்.

அவர் சொன்னது சரிதான். குரங்குகள் அவரைப் பிரிந்து ஏங்கிப் போய்விட்டன. ஆனால் இவளை வரவேற்கவும் செய்தன. ஒவ்வொரு குரங்கும் இவளிடம் நாகரீகமாக கைகொடுத்து இப்போது அவள் வைத்திருக்கும் பஸ்ஸýக்குள் ஏறிக் கொண்டன.

5

எய்மியிடம் 19 ஆண்டு டூர் பஸ் ஒன்று குரங்குகளுக்கான கூண்டுகளோடு இருந்தது. அதில் பச்சைக்கிளிக்கானது போன்ற அளவில் இருந்து (இது வெர்வெட்டுக்கானது) மக்காக் வகை குரங்குக்கான படுக்கையோடு கூடிய கூண்டுவரை இருந்தன. குரங்குகள் பற்றி புத்தகங்கள் அடங்கிய அலமாரி.. பபூன் குரங்குகளின் பரிணாமமும் சுற்றுச் சூழலும், நிகழ்ச்சி நடத்துவதற்கான சமம்பிரதாயமான பொருள்கள், ஒரு தையல் மிஷின், கோல்ஃ விளையாட்டுக்கான சமாசாரங்கள், சில ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த "24 குரங்குகள்! படுகுழியை நோக்கி' என்ற போஸ்டர்கள் ஒரு கற்றை , பழுதான ஒரு பச்சைநிற சோபா, மற்றும் குரங்குகளுக்கு உதவ ஒரு பாய் ஃப்ரண்ட்.

இவற்றை எதையாவது ஒன்றையேனும் எதற்காகச் சுமக்கிறோம் என்பதை அவளால் சொல்ல முடியாது. அது அவளுடைய பாய் ஃப்ரண்டாக இருந்தாலும். அவன் பெயர் கியோஃப். அவனை அவள் ஏழு மாதங்களுக்கு முன் பில்லிங்க்ஸில் சந்தித்தாள். எய்மிக்கு எங்கிருந்து எவ்வளவு கிடைக்கும் என்பதில் எந்த யோசனையும் இல்லை. எதிலும் தொடர்ச்சியான அர்த்தம் இருப்பதாகவும் தோன்றவில்லை. இருந்தாலும் அவள் நம்பிக்கை வைப்பதை நிறுத்த முடியாமல் இருந்தாள்.

அந்த பஸ் குரங்குகளால் நிரம்பியிருப்பதால் எப்போதும் குரங்குகளால் ஆன வாசனையாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பாத்டப் சாகஸத்துக்குப் பின் ஆனால் குரங்குகள் வந்து சேரும் முன்னர் சின்னாமான் வாசனை இதில் முகிழ்க்கும். அந்த டீயைத்தான் எய்மி சமயங்களில் குடிப்பாள்.

6

செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால், குரங்குகளால் சாகஸம் செய்ய முடிகிறது, உடை உடுத்திக் கொண்டு ஹிட் படங்களில்- இதில் மாட்ரிக்ஸ் திரைப்படம் பிரபலம்- தோன்றச் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தி நடிக்க வைக்கலாம். மனிதக் குரங்குகள், சிங்கவால் குரங்குகள், கோலாபஸ்கள் போன்றவை பழக்குவதற்கு எளிமையானவை. வயதான பேங்கோவை சிவப்பு ஜாக்கெட் அணிவித்து கையில் ஒரு சவுக்கும் கொடுத்து சிம்மாசனத்தில் உட்கார வைக்கலாம். சிம்பான்சியை (அதன் பெயர் மிமி, அது குரங்குவகை இல்லை) கை சாதுர்யங்கள் நிறைந்த விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தலாம். அவள் அத்தனை சிறப்பாகச் செய்யக் கூடியவள் இல்லையென்றாலும் காதில் பூ சுற்றுவதில் திறமையானவள்.
குரங்குகளால் மர நாற்காலிகள் மற்றும் கயிறுகளைக் கொண்டு பாலம் அமைக்கவும் தங்கள் பெயர்களை பலகையில் எழுதிக் காட்டவும் முடியும்.

குரங்கு நிகழ்ச்சி இந்த ஆண்டில் 127 காட்சிகளை நிகழ்த்தி மைய மேற்கத்திய நாடுகள் முதல் சமவெளி பிராந்தியங்கள் வரை மிகவும் பிரபலமடைந்துவிட்டது. எய்மியால் இன்னும்கூட அதிகமாக நிகழ்ச்சிகள் நடத்த முடியும், இருப்பினும் கிருஸ்துமஸ்ûஸ முன்னிட்டு இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

7

இது பாத் டப் நிகழ்ச்சி:

எய்மி பளபளவென மின்னும் கத்திரிப் பூ நிறத்தில் சிக்கென உடையணிந்து மாயாஜாலம் செய்வாள். ஆழ் நில நிறத்தில் ஒளிரும் மேடையில் நட்சத்திரம் மின்ன தோன்றுவாள். குரங்குகள் அவளுக்கு முன் வரிசையாக நிற்கும். அவள் சொல்வதற்கேற்ப அவை ஆடைகளைக் கழற்றி மடித்து வைக்கும். ஜெப் குரங்கு ஒரு மூலையில் நாற்காலியில் அமர்ந்தபடி நிழலான தோற்றத்தில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்.

அவள் கைகளை உயர்த்துவாள்.

"இந்தக் குரங்குகள் உங்களை சிரிக்க வைக்கும் பிரமிக்க வைக்கும். உங்களுக்காக ஆச்சர்யங்களையும் ஜாலங்களையும் நிகழ்த்தும். இதன் கடைசி அங்கம் வித்தியாசமானது பிரம்மாண்டமானது''

அவள் கைகளை சட்டென விரித்ததும் திரைவிலகி பாத் டப் மேடையில் தெரியும். அவள் அந்த பாத் டப்பின் வளைந்த விளிம்புகளில் கையால் தடவியபடிசுற்றிவருவாள்.

"சிறிய விஷயம்தான், இது பாத் டப். எந்த வகையிலும் சாதாரணமானதுதான். காலைச் சிற்றுண்டிபோல எளிமையானது. சில நிமிடங்களில் உங்களில் ஒருவரை மேடைக்கு அழைத்து இதை உங்களுக்கு உறுதிப்படுத்துவேன்''

"ஆனால் இதில் குரங்குகளும் மேஜிக் வஸ்துகளாக இருக்கும். இதில் இறங்கு பயணிக்கும். எங்கே செல்கின்றன என்று யாருக்கும் தெரியாது. எனக்கும்தான்'' சற்றே தாமதித்து ""குரங்குகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது. அவை இதை யாரிடமும் பகிர்ந்து கொள்வதுமில்லை''

பிறகு பாத் டப் சோதனை முடிந்து பார்வையாளரிடம் "தங்கள் ரகசிய பயணத்தை முடித்துக் கொண்டு அவை திரும்புவதற்கு சில மணி நேரங்கள் ஆகும்'' பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டலைக் கேட்பாள். குரங்குகளை வரிசையாக அனுப்பி வைப்பாள்.

8

எய்மியின் குரங்குகள்:

2 சியாமாங்குகள், இவை ஜோடிகள்.

2 அணில்வால் குரங்குகள். இவை மிகவும் சுறுப்பானனவை.

2 வெர்வெட்டுகள்.

ஒரு குயினான், இது கர்ப்பமாக இருக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இது எப்படி நிகழ்ந்ததென்று எய்மிக்கு புரியவில்லை.

3 ரிஸஸ் குரங்குகள். அவை மோசடி வித்தைகளில் ஓரளவுக்குத் தேர்ந்தவை.

ஒரு வயதான காபிச்சின் பெண் குரங்கு, பெயர் பேங்கோ.

ஒரு மக்காக், 3 பனிக்குரங்குகள் (ஒன்று குட்டி), ஒரு ஜாவா மக்காக். இவை சிறிய குழுவாக இருக்கும், ஒன்றாக உறங்கும்.

ஒரு சிம்பன்சி, சொல்லப்போனால் இது குரங்கு அல்ல.


ஒரு கிப்பன்

2 மார்மோசெட்டுகள்

ஒரு கோல்டன் டாமமரைன், ஒரு காட்டன் டாப் டாமரைன்

ஒரு நீள மூக்கு குரங்கு

சிவப்பு மற்றும் கருப்பு கோலாபஸ்கள்

ஜெப்

9

ஜெப் ஒரு "பராஜ்ஜா குவானான்' வகையாக இருக்கும் என்று எய்மி நினைத்தாள். அது மிகவும் வயதாகிப் போய் கிட்டத்தட்ட மமுடியெல்லாம் இழந்து இருந்தது. அதைப் பற்றி அவளுக்கு கவலையாக இருப்பினும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்தாள். பாத் டப்பில் கடைசியாக இறங்குவது இதுதான். மற்ற நேரங்களில் ஆரஞ்சும் சில்வருமான நிறம் பூசப்பட்ட நாற்காலியில் அமர்நந்து பார்த்துக் கொண்டிருக்கும். வயதான நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் தோரணையில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும். சில நேரங்களில் எய்மி அதன் கையில் ஒரு கோலைக் கொடுத்து வைப்பாள். அணில்வால் குரங்குகள் அந்தக் கோலைத் தாண்டிக் குதிக்கும்.

10

குரங்குகள் எங்கே செல்கின்றன என்பதோ எங்கே மறைகின்றன என்பதோ யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் அவை வெளிநாட்டு நாணயங்களுடனோ துரியன் பயத்துடனோ அல்லது கூரான மோராகான் செருப்புகளை அணிந்து கொண்டோ திரும்பி வந்தன. ஒவ்வொரு முறையும் அடிக்கடி ஏதாவது ஒன்று கர்ப்பம் தரித்துத் திரும்பி வந்தது. குரங்குகளின் எண்ணிக்கை நிலையற்று இருந்தது.


"எனக்குப் புரியவே இல்லை'' கியோஃப் ஏதாவது யோசனை சொல்வான் என்ற எண்ணத்தில் அவனிடம் கேட்டாள் எய்மி. அவளால் எதையுமே அதற்கு மேல் தெரிந்து கொள்ள முடியவில்லை. எதிலும் தீர்மானம் இன்றி அவள் வாழ்க்கையை எதிர் கொண்டதில்லை, இந்த ஒரு விஷயம்} சரி இந்த எல்லா விஷயமும்தான். குரங்குகள் குழுவாக இருப்பது, சீட்டாட்டங்கள் தெரிந்து வைத்திருப்பது, அவளுடைய வாழ்க்கையைத் திசை திருப்பியது, பாத் டப்பில் இருந்து மறைந்து போவது.. எல்லாமே} இதனோடே மல்லு கட்டிக் கொண்டிருந்தாள் சதா நேரமும். பெரிய மலை ஒன்றில் பிரேக் செயலிழந்த வாகனத்தில் கீழிறங்கும் உணர்வோடு அடிக்கடிபோராடும் அவள் இந்தத் தருணத்தில் மீண்டும் துவள ஆரம்பித்தாள்.

எய்மியைவிட கியோஃப் இந்தப் பிரபஞ்சத்தை அதிகம் நம்புபவனாக இருந்தான். நம்பிக்கைதான் செயல்களுக்கும் அர்த்தம் தருவனவாகவும் எல்லா மக்களும் அன்பு செலுத்துபவர்கள்தான் என்றும் அவன் மனப்பூர்வமாக உணர்ந்ததால் அவனுக்கு ஆதாரங்கள் தேவைப்படவில்லை. "நீ மற்றவர்களைக் கேட்டுப் பார்'' என்று அடிக்கடி சொல்வான்.

11

எய்மியின் பாய் ஃப்ரண்ட்:

ஒரு பாய்ஃப்ரண்டிடம் எய்மி என்ன எதிர்பார்ப்பாளோ அத்தகையவனாக கியோஃப் இல்லை. ஒரு விஷயம் அவன் எய்மியைவிட இளையவன். அவனுக்கு 28, அவளுக்கு 43. இன்னொன்று அவன் அமைதியானவன். மூன்றாவது எடுப்பான தோற்றமும் தோள்வரை சரிந்து விழும் பட்டு போன்ற அடர்த்தியான தலைமுடி கொண்டவன். சவரம் செய்யப்பட்ட அவனுடைய தாடையின் விளிம்புகள் பளிச்சென தெரியும். அதிகம் சிரித்தாலும் அடிக்கடி சிரிக்காதவனாக இருந்தான்.

சரித்திரத்தில் டிகிரி முடித்திருந்த கியோஃப்பை அவள் ஒரு பைக் மெக்கானிக்காகத்தான் மோன்டானா கண்காட்சியில் சந்தித்தாள். நிகழ்ச்சி முடிந்ததும் எய்மமிக்கு வேலை எதுவும் இல்லாததால் அவன் பியர் சாப்பிட வருகிறாயா என்றதும் சம்மதித்தாள். அது அதிகாலை 4 மணி, அவர்கள் இருவரும் பஸ்ஸýக்குள் முத்தம் கொடுத்துக் கொண்டனர். குரங்குகள் தங்கள் படுக்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் எய்மமியும் கியோஃப்பும் காதலிக்க ஆரம்பித்தனர்.

காலை உணவு முடிக்கும்போது குரங்குகள் ஒவ்வொன்றாக மேலே வந்து அவனுக்குக் கை கொடுத்தன, பிறகு அவற்றுடன் நன்கு பழகவும் ஆரம்பித்தான். அவள் அவனுடைய காமிரா துணிமணிகள், மற்றும் அவனுடைய சகோதரி கடந்த கிருஸ்துமஸ்ஸýக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஓவியம் தீட்டப்பட்ட வண்ணப் பலகை ஆகியவற்றை பராமரிக்க உதவினாள். அவளுடைய இடத்தில் அந்த ஓவியப் பலகையை வைக்க இடம் ஏதும் இல்லாததால் பஸ்ஸின் மேற்கூரையாக பயன்பட்டது. சில சமயங்களில் அணில்வால் குரங்குகள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும்.

எய்மியும் கியோஃப்பும் அவர்கன் காதல் குறித்து ஒருபோதும் பேசிக் கொண்டதில்லை.

கியோஃப் மூன்றாம் வகுப்பு டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தான். ஆனால் அது தண்டனை பெற்றதாக இருந்தது.

12

ஜெப் இறந்து கொண்டிருந்தது.

பொதுவாக பேசும்போது, குரங்குகள் குறிப்பிடும்படியான உடல் உறுதி பெற்றதாகக் கூறுவர். எய்மி அவ்வப்போது அவற்றின் சைனஸ் பிரச்சனைகளையும் வாய்வு கோளாறுகளையும் தொற்று நோய்களையும் சரி செய்து வந்தாள். மிகவும் மோசமான தருணங்களில் சில மருத்துவமனைகளையும் சிறப்பு மருத்துவர்களையும் நாடுவாள்.

ஆனால் ஜெப் இருமலால் அவதிப்பட்டது. முடி முற்றிலும் உதிர்ந்துவிட்டது. மெதுவாக நகர்ந்தது, நிகழ்ச்சிகளின் போது தடுமாறியது. செயிண்ட் பாலில் ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி நடந்தபோது கோமோ உயிர்காட்சிசாலையின் மருத்துவர் வந்து குரங்குகளைப் பரிசோதித்தார். பொதுவாக குரங்குகள் நலமாக இருப்பதாகக் கூறி ஜெப்பை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றார்.

மருத்துவர் கினா, "இதற்கு என்ன வயதாகிறது?'' என்று கேட்டார்.

"எனக்குத் தெரியாது'' இந்த நிகழ்ச்சியை யாரிடமிருந்து வாங்கினாளோ அவருக்கும்கூட இது தெரிந்திருக்கவில்லை.


"இதற்கு மிகவும் வயதாகிவிட்டது.. அதாவது மிகவும் மோசமான அளவுக்கு'' என்றார் கினா.

செனைல் டெமென்டியா, ஆர்த்ரிட்டிஸ், இதயக்கோளாறு. எப்போது நடக்கும் என்று கினா சொல்லவில்லை. "இது மகிழ்ச்சியான குரங்கு'' என்றாள் அவள். "அது போகிறபோது போகட்டும்''

13

எய்மி இதைப் பற்றி நிறைய நினைத்தாள். ஜெப் இறந்து போனால் நிகழ்ச்சி என்னாகும்? எல்லா நிகழ்ச்சியின் போதும் ஒளி வெள்ளம் பாயும் நாற்காலியில் அது அமைதியாகஅமர்ந்து பார்த்துக் கொண்டிருக்குமே. இந்தக் குரங்கினால்தான் மற்ற குரங்குகள் கட்டுப்பட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதாக அவள் நினைத்தாள். குரங்குகள் மறைவது பற்றியும் திரும்பி வருவது பற்றியும் அவளுக்கு மிகுந்த யோசனையாக இருந்தது.

ஏனென்றால் எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருந்தது. அப்படித்தானே? அப்படியொரு காரணம் இல்லாத பட்சத்தில் ஒருவர் எப்படி நோய்வாய் படமுடியும்? அல்லது உங்கள் கணவர் உங்களிடம் அன்பு செலுத்தாமல் போய்விட முடியும்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரணமடைய முடியும்? காரணமே இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கும்? எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஜெப்பின் மரணத்துக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும்.

14

எய்மி இந்த வாழ்க்கையை எதற்காக நேசிக்கிறாள்:

அதற்கு ஒரு அர்த்தமும் இருக்கவில்லை. அவள் கண்ட இடத்தில் வாழ முடியாது. அவளுடைய உலகம் 38 அடி அகலமும் 127 காட்சிகளினால் ஆன நீளமும் இப்போது 26 குரங்குகளால் ஆன ஆழமும் கொண்டது. இதுதான் முடிந்தது.

அவள் நடத்தும் காட்சிகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அவை வேறு இடங்களுக்குச் செல்லும்போது அவளுடைய சிறிய உலகம் சற்றே விரிவடையும். அதே காட்சிகள்தான், இடம் மட்டுமதான் மாறிக் கொண்டிருக்கும். சமயங்களில் அவள் செல்லும் புதிய ஊர்களின் வித்தியாசமான இரவு நேர சீதோஷ்ண நிலை, மேடு பள்ளமான நிலம், மலைகள், சமவெளிகள், வான விளிம்பு... இவற்றில்தான் வித்தியாசத்தை உணர்கிறாள். மற்றபடி எப்போதும் போல்தான்.

கண்காட்சியின் உலகம் இவ்வளவுதான்: விழா, விலங்குகளை அடைத்துவைக்கும் கூடாரம், கலைநிகழ்ச்சி, கார் ரேஸ், கருகிய சர்க்கரையின் மணம், கேக்கின் மணம், விலங்குகளின் படுக்கை.

இதில் கியோஃப் மட்டும் ஒரு வித்தியாசம்: தாற்காலிகமான, அர்த்தமற்ற, காதலற்ற உறவு.

15

இவை எய்மியின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களாவன:

1. அவள் கால் எலும்பு சில ஆண்டுகளுக்கு முன் முறிந்து கொண்டது. அதனால் எலும்பில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக வதைபட்டாள். அதன் பிறகும் அவளுக்கு வலி இருந்தது.

2. அவளுடைய கணவன் அவனுடைய அலுவல் உதவியாளரிடம் காதல் வயப்பட்டு விலகிச் சென்றுவிட்டான்.

3. அவளுடைய சகோதரிக்கு கேன்ஸர் என்று தெரிந்த அதே வாரத்தில் அவளுடைய வேலையில் இருந்து நீக்கப்பட்டாள்.

4. பல்வேறு கேள்விக்குரிய வாய்ப்புகளுக்குப் பிறகு அவள் தனிமையாக்கப்பட்டு வரைபடத்தில் இல்லாத இடத்தில் அமைந்த அடுக்குமாடி குடியிருப்பில் பைத்தியக்காரியைப் போல இருக்கிறாள்.

எதுவுமே நிரந்தரமில்லை. எதையும் நீங்கள் இழக்கக் கூடும். அப்படியே நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருந்தாலும் இறப்பதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கத்தான் செய்கிறீர்கள். சில பொருளையோ, சில மனிதர்களையோ இழக்கும்போது எய்மியின்கவலை தோய்ந்த அடிபட்ட மனம் அவளை விஷமூட்டி பயமுறுத்தி இருட்டில் அடைத்துவிடும்.

16.

எய்மி நிறைய படித்தாள், இந்த முரண்பாடுகள் பற்றி அவள் நிறையவே தெரிந்து வைத்திருந்தாள்.

கூண்டுகளில் எதற்கும் பூட்டுகள் இல்லை. குரங்குகள் அதை படுக்கை அறையாகப் பயன்படுத்தி வந்தன. ஏதாவது தனிப்பட்ட வசதி தேவைப்படும்போது அவை அங்கிருந்து வெளியேறிக் கொண்டன. அதாவது பெரும்பாலும் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், சுற்றி புல்வெளியாக இருப்பின் அவை அப்படி நடந்து கொண்டன.

தற்போது மூன்று குரங்குகள் படுக்கை மீது அமர்ந்து வண்ணப் பந்துகளைப் பொருத்தி விளையாடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தன. சில கம்பள நூல் உருண்டைகளோடு விளையாடிக் கொண்டிருந்தன, திருப்புளியை வைத்து தரையைக் குத்திக் கொண்டிருந்தன. சில எய்மி மீதும் கியோஃப் மீதும் பழுதான சோபாமீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. சில திருட்டுத்தனமான கேபிள் லைனில் வந்த குழந்தைகள் விளையாட்டை கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன.

கருப்பு கோலுபஸ் குரங்கு மர சட்டங்களை வைத்து சமையல் டேபிளின் மீது விளையாடிக் கொண்டிருந்தது. அதை வைத்து கடந்த வாரத்தில் வளைவை உருவாக்கியிருந்தது, அதை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எய்மி அதற்கு சில முறை கற்பிக்க முயற்சித்தும்கூட அதற்கு அது கூடி வரவில்லை. பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.

கியோஃப் பேங்கோவுக்கு நாவல் ஒன்றைப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான். அதுவும் அதைத் கூடவே வாசிக்கிற தொனியிலேயே அந்தப் பக்கத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. சில சமயங்களில் ஒரு வார்த்தையை தன் பிரகாசிக்கும் விழிகளோடு அது சுட்டிக் காட்டும். கியோஃப் மீண்டும் அந்த வார்த்தையைச் சிரித்துக் கொண்டே படித்துக் காட்டிவிட்டு நாவலைத் தொடருவான்.

ஜெப் அதன் கூண்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது: தன் போர்வையையும் பொம்மையையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கும். சமீப காலமாக அது அப்படித்தான் செய்கிறது.

17

ஜெப்பை இழந்தபின் எய்மிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மற்ற குரங்குகளுக்கு என்ன ஆகும்? 26 குரங்குகள் என்பது பெரிய எண்ணிக்கை, ஆனால் அவை ஒன்றை ஒன்று நேசித்தன. மிருகக் காட்சிச்சாலை அல்லது சர்க்கஸ் நடத்துபவர் யாராவது கிடைத்தால்தான் இவற்றை பராமரிக்க முடியும். தனிப்பட்ட யாரும் சரிபட்டு வராது. அதுவுமில்லாமல் இவற்றை அவை விரும்புகிற இடத்தில் உறங்குவதற்கு அனுமதிப்பார்களா என்றும் விடியோவில் குழந்தைகள் சானலைப் பார்ப்பதற்கு விடுவார்களா என்றும் அவளுக்கு யோசனையாக இருந்தது. ஜெப் இல்லாமல் போனால் இவை எங்கே போகும்.. பாத் டப்புக்குள் சென்ற பின்பு அந்தப் புதிரான பயணம் எப்படி நடக்கும்? அவளுக்கு இன்னமும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை, இது எல்லாமே ஜெப் இருப்பதால்தான் நடைபெறுகிறதா?

அப்புறம் எய்மி? இந்த செயற்கையான உலகில் அவளுடைய பாதுகாப்பு: அந்த பஸ், அவளை அடையாளம் கண்டு கொண்ட காட்சிகள், அர்த்தம் புரிபடாத அந்த பாய்ஃப்ரண்ட். இந்தக் குரங்குகள்... அப்புறம் என்ன?

18

இந்தக் காட்சியை எடுத்து நடத்த ஆரம்பித்த சில மாதங்களில் அவளுக்கு வாழ்வோ, சாவோ ஒரு பொருட்டாக இல்லை. அப்போது நடந்த சம்பவம் இது. நிகழ்ச்சியின் கடைசி அம்சம். குரங்குகள் ஏணியில் ஏறிக் கொண்டிருந்தன. ஜெப் ஏணியில் ஏறி பாத் டப்பில் குதித்தது, நுரையீரலில் காற்றை நிரப்பி சப்தம் எழுப்பியது. இவள் ஓடிச் சென்று பாத் டப்புக்குள் பார்த்தாள். குரங்குகள் கசப்பான ஒரு சிரிப்பை உதிர்ந்தன. இவள் என்ன செய்யப் போகிறாள் என்று அவற்றால் யூகிக்க முடிந்தது. இவளும் அந்த பாத் டப்புக்குள் இறங்கி பாத் டப்பின் வளைந்த பகுதியைப் பிடித்து இறுகப் பிடித்துக் கொண்டாள்.

சட்டென அது நடந்தது. செயின் ஒளி வெள்ளத்தினிடையே பாத் டப்பைக் கீழே கவிழ்ந்தது.

அவள் பத்தடி உயரத்தில் இருந்து பொத் என்று கீழே விழுந்தாள். அவளுடைய கால் எலும்பு முறிந்தது. மேடையில் அவள் விழுந்தாலும் சட்டென சுதாரித்து எழுந்தாள்.

குரங்குகள் மட்டும் காணாமல் போயிருந்தன.


அரங்கில் மயான அமைதி. அது அவள் சொதப்பிய நிகழ்ச்சிகளில் ஒன்று.

19

எய்மியும் கியோஃப்பும் சாலினா கண்காட்சியினூடே நடந்து கொண்டிருந்தனர். அவளுக்குப் பசியெடுத்தது, சமைக்க விருப்பமில்லாததால் நாலரை டாலரில் ஹோல்டாக்ஸýம் மூன்றேகால் டாலரில் கோக்கும் விற்கும் கடையைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது எய்மமியை நோக்கி கோயிஃப் கேட்டான்: "இதென்ன கொடுமை? நாம் ஏன் நகரத்துக்குச் சென்று வசிக்கக் கூடாது? நிஜமான உணவு உண்டு சராசரி மனிதர்கள் போய் வாழலாமே?''


"ஐரினாவின் வில்லா' என்ற உணவகத்துக்குச் சென்று "பாஸ்தா'வும் "ஒயினு'ம் உட்கொண்டார்கள். ""நீ எப்போதுமே ஏன் எல்லோரும் இங்கே வருகிறார்கள் என்கிறாய்'' என்றான் கியோஃப். பாட்டிலில் பாதி அவனுள்ளே போயிருந்தது. நீலமா, சாம்பலா என்று தீர்மானிக்க முடியாத வண்ணத்தில் அவன் கண்கள் மாறியிருந்தாலும் விளக்கு வெளிச்சத்தில் கறுப்பாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் தெரிந்தன.

"இதோ பார் என்ன நடக்கிறது என்பதை நம்மால் ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுவல்ல கேள்வி. எனது கேள்வியெல்லாம் அவை ஏன் ஒழுங்காகத் திரும்பி வருகின்றன என்பதுதான்''

எய்மி வெளிநாட்டு நாணயங்களையும் மரச் சட்டகம் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாள். சட்டென நினைவுக்குத் திரும்பியவளாக ""எனக்கும் தெரியாது... எதற்காகத் திரும்ப வரவேண்டும்?'' என்றாள்.

அன்று பின் இரவு பஸ்ஸýக்குத் திரும்பியதும் கியோஃப் "எங்கேயாவது போகட்டும். என் தத்துவம் இதுதான். எங்காவது போகட்டும். ஆனால் இதுதான் அவர்கள் வீடு. எங்கு சென்று சுற்றிப் பார்த்தாலும் தாமதமாகவோ, சீக்கிரமாகவோ வீடு வந்து சேருவதைத்தான் விரும்புகிறார்கள்'' என்றான்.

"ஆனால் அவர்களுக்கெல்லாம் வீடு என்று ஒன்று இருக்கிறது.'' என்றாள் எய்மி.

"எல்லோருக்கும் வீடு என்று ஒன்று இருக்கிறது. அதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ'' என்றான் கியோஃப்.

20

அன்று இரவு, கியோஃப் ஒரு மக்காக்கைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். எய்மி ஜெப்பின் கூண்டுக்குள் போய் "நீ போவதற்குள் பாத்டப்புக்குள் எப்படி மறைந்து போகிறாய் என்பதைக் காட்டுவாயா?'' என்றாள்.

ஜெப் தன் நீல நிற போர்வைக்குள் இருந்து நிச்சயமற்ற பார்வை பார்த்தது, காட்சி நடந்துவரும் அரங்கு நோக்கி நடந்தது.
ஏராளமான ட்ரெய்லர்களும் பஸ்ஸýம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலரது குரல் மட்டும் திரைச்சீலைகளுக்குப் பின்னே மெல்ல கேட்டுக் கொண்டிருந்தது. வானம் கருநீல வண்ணத்தோடு நட்சத்திரங்களின் மினுக்கலோடு இருந்தது. நிலவு அவர்களை நோக்கி நேரடியாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஜெப்பின் முகத்தில் நிழல் படிந்திருந்தது.

பாத் டப் அரங்கத்துக்குப் பின்னே இருந்தது. அடுத்து காட்சி நடப்பதற்கு தயார் நிலையில் இருந்தது. இருண்டு இருந்த அரங்கில் "வெளியே' என்ற பலகை மட்டும் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு மங்கிய சோடியம் வேப்பர் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. பாத் டப்பின் மேலே ஏறி வளைந்த அதன் விளிம்புகளில் அவளுடைய கையைத் தடவி அழைத்துச் சென்றது. உள்ளே இருந்த மங்கிய பகுதியை அவளுக்குக் காட்டியது.

கயிறைப் பிடித்து இழுத்து டப்பை மேலே இழுத்தது. அதனுடைய பிரத்யேக ஓசையை எழுப்பிக் கத்தியது. பாத் டப் கீழ்புறமாகக் கவிழ்த்துக் காட்டியது, அது காலியாக இருந்தது.

அது இல்லாமல் போனதை அவள் பார்த்தாள். அது இருந்தது, மறைந்தது. வேறு எதுவும் இல்லை. கதவு இல்லை இல்லை, எந்த ஒளிர்வும் இல்லை, சிறிய வெடிச்சத்தம் இல்லை, காற்று பலமாக வீசவில்லை. அதில் ஒரு அர்த்தமும் தோன்றவில்லை. அதற்கான பதில் ஜெப்புக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது.

அவள் பஸ்ஸýக்குள் நுழைந்தபோது ஜெப் ஏற்கெனவே தன் போர்வைக்குள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்ததது.

21

பிறகு ஒரு நாள்.

எல்லோரும் அரங்கத்தின் பின் புறம் இருந்தனர். எய்மி தன் மேக்கப்பை முடித்துக் கொண்டிருந்தாள். கியோஃப் எல்லாவற்றையும் இரண்டாவது முறையாக பரிசோதித்துக் கொண்டிருந்தான். ஒப்பனை அறையில் குரங்குகள் வட்டவடிவில் ஆடை அணிந்து அமர்ந்திருந்தன. ஜெப் நடுவில் அமர்ந்திருந்தது. பக்கத்தில் பேங்கோ தன் சிறிய பச்சை நிற உடுப்பில் அமர்ந்திருந்தது. எல்லா குரங்குகளும் வரிசையாக வந்து ஜெப்பிடம் கைகுலுக்கின. மலர் கண்காட்சியின் நடுவில் அமர்ந்திருக்கும் இளவரசி போல அது எய்மிக்குத் தோன்றியது.

அன்று இரவு காட்சியில் ஜெப் ஏணியில் ஏறவே இல்லை. நாற்காலியிலேயே அமர்ந்துவிட்டது. பேங்கோ கடைசி குரங்காக மேலே ஏறியது. குரலெழுப்பியது. எய்மிக்கு ஜெப் இல்லாமல் நிகழ்ச்சி நடக்குமா என சந்தேகமாகத்தான் இருந்தது. கியோஃப் தைரியமாக இருந்தான். பேங்கோ கத்தி முடித்ததும் கியோஃப் பாத்டப்பின் மீது ஒளிவெள்ளத்தைத் திருப்பினான். பாத் டப் காலியாக இருந்தது.

ஜெப் நாற்காலியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனைப் போல அமர்ந்து காட்சி தந்தது. அரங்கச் சீலை கீழே இறக்கப்பட்டதும் எய்மமி அதைக் கட்டி அணைத்துக் கொண்டாள். கியோஃபின் கைகள் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டிருந்தது.

ஜெப் இவர்கள் இருவருக்கும் இடையில் மெத்தையில் படுத்து உறங்கியது. காலையில் எழுந்தபோது ஜெப் தன் கூண்டுக்குள் தனக்குப் பிடித்தமான பொம்மையை அணைத்தபடி படுத்திருந்தது. அதன் பிறகு அது எழுந்திருக்கவில்லை. சுற்றிலும் குரங்குகள் சூழ்ந்திருந்தன.

அன்று முழுதும் எய்மமி அழுது கொண்டே இருந்தாள்.

கியோஃப் அவளைத் தேற்றினான். "நிகழ்ச்சி நடந்து ஜெப்பினால் இல்லை'' என்றாள்.

"எனக்குத் தெரியும்'' என்றான் அவன்.

22

பாத் டப் சாகஸம் என்று எதுவும் இல்லை. குரங்குகள் ஏணியில் ஏறி பாத் டப்புக்குள் குதிக்கின்றன, காணாமல் போகின்றன. உலகமே இப்படியான பிரமிப்பானவற்றால் நிகழ்ந்ததுதான். இதற்கு ஒரு பொருளும் இல்லை. அதில் இதுவும் ஒன்று. ஒருவேளை குரங்குகளுக்கு இது தெரிந்திருக்கும், பகிர்ந்து கொள்ள அவற்றுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். அவற்றை அதற்காகக் கடிந்து கொள்ளவா முடியும்?

ஒருவேளை இது குரங்குகளின் புதிராக இருக்கலாம். மற்ற குரங்குகளிடம் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருக்கலாம். எய்மியும் கியோஃப்பும் அவற்றுக்கு வந்து போகும் விருந்தாளிகளாகத் தோன்றலாம். நிகழ்ச்சியின் போது மட்டும் தேவைப்படும் நபர்களாக இருந்திருக்கக் கூடும்.

23

ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஒருவன் எய்மியை நோக்கி வந்தான், நிகழ்ச்சி முடிந்து எய்மியும் கியோஃப்பும் முத்தமிட்டு முடிந்த நேரத்தில். குள்ளமாகவும் வெளிறிய தோற்றத்தோடும் வழுக்கையாகவும் இருந்தான். உள்ளே இருந்து உறிஞ்சப்பட்டுவிட்ட மனிதனைப் போல இருந்தான். அவளுக்கு அவனுடைய பார்வையைத் தெரிந்தது.

"நான் இந்த நிகழ்ச்சியை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றான்.

எய்மி சொன்னாள்: "நீங்கள் வாங்கிக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும்''

அவள் அவற்றை ஒரு டாலருக்கு விற்றாள்.

24

மூன்று மாதங்களுக்குப் பிறகு, எய்மியும் கியோஃப்பும் பெல்லிங்காம் அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் முறையாக விடெடுத்துத் தங்கினர். சமையலறையில் ரெபிஜிரேட்டர் திறந்து மூடப்படும் சப்தம் கேட்டது, பேங்கோ அதிலிருந்து ஆரஞ்சு பழச்சாறை எடுத்து டம்பளரில் நிரப்பிக் கொண்டிருந்தது.

அதை அவர்கள் ஒரு சீட்டுக் கட்டு கேமைக் கொடுத்து அதனுடைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

LinkWithin

Blog Widget by LinkWithin