சனி, ஜூலை 22, 2006
வைரமுத்துவின் சுவாசப் பிரச்சனை...!
தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளுக்கு ஓயாமல் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற பணியில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவர், கவிஞர் வைரமுத்து. 'பொன்மாலைப் பொழுது' என்றும், 'பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ' என்றும் 'வானம் எனக்கொரு போதி மரம்' என்றும் முதல் பாடலிலேயே பல சொற்கோவைகளை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியவர். 'அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது', 'உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்', 'விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே... நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே' எனக் காதல் பாடல்களில் நம்மைக் கனிந்துருக வைத்தவர். 'மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை', 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்' என நம் பார்வையில் பட்டு மனதுக்குள் பதியாமல் போன உலகின் ரசனைக்குரிய பகுதிகளின் இனிய பட்டியலை இவர் தொகுத்தளித்திருக்கிறார். நம்பிக்கையளிக்கும் பாடல்களும் இவரிடம் பொங்கி வழியும். 'பூலோகம் ஆனந்தத்தின் எல்லை... பூமிக்குக் கண்ணீர் சொந்தமில்லை', 'வாழச் சொல்வது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா' என்று மகிழ்ச்சியான விஷயங்களைப் பட்டியலிடுவார். 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' போன்ற புரட்சி வரிகளும் இவருடைய திரைப் பாடல்களில்...
சந்தங்களுக்குள் சங்கதிகளை அடக்குவது சாதாரணமில்லை. புதிய வீச்சுள்ள பாடல் வரிகளால் அதிசயக்க வைத்தவர். கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் வடுகபட்டியில் இருந்து ஒரு புதிய கவிஞன் புறப்பட்டு வந்து பாடலாசிரியர் பதவியைப் பறிப்பதென்பதே சாதனைதானே? ஆனால், வார்த்தைகளை வசப்படுத்தும் இவரையே வசப்படுத்திச் செல்லும் கடமை பத்திரிகைகளுக்கு இருந்திருப்பதை அவரே ஒப்புக் கொள்ளுவார். வந்த புதிதில் தேவ வார்த்தை, தேவ புன்னகை போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் செல்லமாகக் கண்டிக்கப்பட்டவர் இவர்.
பிறகு அவர் சிக்கிக் கொண்ட இன்னொரு வார்த்தை 'ராஜ'. ராஜ பூவே, ராஜ தேனே, ராஜ ராகம் என்று தொடர்ந்த அவருடைய பிரயோகத்தை மீண்டும் திசை திருப்பி விட்டனர்.
இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வார்த்தைச் சிக்கல், 'சுவாசம்'. ஒருவேளை இந்தப் பிரச்சினை 'என் சுவாசக் காற்றே...' படம் முதல் ஆரம்பித்திருக்கலாம். "என் சுவாசக் காற்றே...சுவாசக் காற்றே.... நீயடி...'' என்று ஆரம்பித்து வைத்தார். சுவாசம், மூச்சு பற்றி அவர் சமீபத்தில் எழுதிய பாடல்கள் இவை: 'அப்பு'- விட்டுச் சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு... அந்த மூச்சை வாங்கி... வாங்கி... வாங்கி... வாழ்வேனா? 'உயிரே'- பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன். 'கண்ணெதிரெ தோன்றினாள்'- உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா? 'ரிதம்'- நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்... சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்... - சுவாசம் பற்றி அவர் எழுதியிருக்கும் பாடல் வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
திரையிசைப் பாடல்கள் மூலம் அறிவியல் செய்திகளை அதிகமாகச் சொன்னவர் வைரமுத்து. 'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தினந்தோறும் விஞ்ஞானம் கவலை கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்' என்பார். உடம்பில் நரம்புகள் எத்தனை லட்சம் இருக்கிறது என்பதைக் காதல் பாடலில் சொல்லுவார். ஆனால் சுவாசக் காற்று நச்சுத் தன்மை உடையது. அது கார்பன் டை ஆக்சைடு என்பதைத்தான் வைரமுத்து போன்றவர்கள் கூற வேண்டும். ஏனென்றால் வைரமுத்து ஒரு விஞ்ஞானக் கவிஞர். அதற்கு அவர் எழுதிய 'தண்ணீர் தேசம்' ஒரு நல்ல உதாரணம். அவருடைய கவிதைகளைச் 'சுவாசி'க்கிற வாசகர்கள் சார்பாக வைக்கப்படுகிற விண்ணப்பம் இது
- தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக