சிறுகதை
தமிழ்மகன்
"ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி?' புத்தகத்தின் கவர்ச்சியான தலைப்பில் ஒரு கணம் மலைத்துப் போனான் அருண்.
அனிச்சையாய் பாக்கெட்டைப் பார்க்க, அக்கா செலவுக்குக் கொடுத்து விட்டுப் போன பணத்தில் இரண்டு ரூபாய் மீதமிருந்தது."தெர் ஃபோர் டூ குரோர்ஸ்' அருண் நூலகத்துக்கு வந்தால், வழக்கமாய் "உடலுறவுச் சிக்கல், குழந்தை பிறக்கவில்லையா?' போன்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரகசியமாய் படிப்பான். அல்லது ஆங்கிலப் பத்திரிகையில் வேலை தேடுவான். நூலகம் பலருக்கும் இந்த விதத்தில் பயனாக இருந்தது. சிலர் வெகு நேரமாய் எதாவதொரு பத்திரிகையை வைத்துக் கொண்டு குனிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் விடும் மெல்லிய குறட்டையை நூலகர் மட்டுமே இனம் கண்டு, "தூங்காதீங்க சார்...'' என்று எழுப்புவார்.
முதன் முறையாக ஒரு ரூபாயில் வாழ்வில் உயர்வடையும் ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்த பிரமிப்பில் அருண் வேகமாகப் படித்துக் கொண்டிருந்தான். லட்சாதிபதியாகவாவது ஆகிட முடியாதா என்ற ஆசை!
அருண் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் நூலகர் ஜன்னலை அடைத்து, லைட்டையும், பேனையும் நிறுத்தி தடுத்தார்.
காலை 8.00 முதல் 11.00 வேலை நேரம் என்று போர்டில் இருந்தாலும் வழக்கத்தில் 10.30-க்கு கதவடைப்புப் பணிகள் தொடங்கிவிடும்.
புத்தகத்தை அப்படியே டேபிளின் மீது போட்டுவிட்டு வந்தால் இரண்டு அபாயங்கள் உண்டு. ஒன்று, மாலையில் முதலில் வந்த வேறு ஒரு வாசகர் கையில் அந்தப் புத்தகம் கிடைக்கப் பெற்று, அவர் கோடீஸ்வரனாகிவிடுவார். அல்லது லைப்ரரியன் புத்தகத்தை எதோ ஒரு புத்தக இடுக்கில் சொருகி வைத்துவிட்டார் என்றால் பிறகு இந்தப் புத்தகத்தைத் தேடி எடுக்க முடியாமல் போகலாம்.
அருண், அதை மறுபடி மாலையில் வந்து படிக்கும் ஆசையில், "என்சைக்ளோபீடியா'வில் ஒளித்து வைத்துவிட்டு வெளியே வந்தான்.
முன்பெல்லாம் ஆப்படி நூலகத்தை மூடிவிடும்போது மாலை வரை நேரத்தைக் கழிப்பதில் பெரிய அவஸ்தை இருந்தது. நித்தியானந்தன் சைக்கிள் கடை வைத்ததிலிருந்து அந்தப் பிரச்சனை இல்லை.
"அதோ போறது யார் தெர்தா?'' என்பான் நித்தி.
"சுருட்டு புடிக்றானே அந்த ஆளா?''
"அட... பச்சப் புடவ..''"
"ஆங்... அமா..''"
"அது யார் தெரிதா?''"
நினவுக்கெட்டியவரை அந்தப் பெண்ணைத் தேடிவிட்டு, "யாரு?'' என்றான் அருண்.
"நம்ப சம்பத் இல்ல..? ஒருவாட்டி கோலி முழுங்கிட்டானே.''"
"ஆமா..."
"என்னா ஆமா.. அவன் தங்கச்சிடா... இப்ப கல்யாணம் ஆயிட்ச்சி.''
"எப்ப?''
"அதாயி ரெண்டு வருஷமாச்சி.''
"குட்டி யானை மாரி இருக்குது?''
"மாக்கெட்டுக்கு போவுது... இப்ப வரும் பாரு...''சம்பத்தின் தங்கச்சி வருவதை எதிர்பார்த்திருப்பது ஒரு வேலை. அடுத்து, அருண், "சம்பத் இப்ப என்ன பண்றான்?'' என்று கேட்டான்.
பேச்சின் நடுவே சூடாக டீ. அதுவும் இன்றைக்கு யார் கணக்கில் டீ என்பதற்கு பெயர் எழுதி சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அருண் பெயர் வந்தாலும் நித்தியானந்தம்தான் கொடுப்பான். அப்புறம் தந்துவிடுவதாகப் பேச்சு!
அதன்பிறகு மதிய சாப்பாட்டுக்காக நித்தியானந்த வீட்டுக்குப் போவான். அவன் சாப்பிட்டுவிட்டு வரும்வரை கடையை அருண் பார்த்துக் கொள்வான். தெருவில் சளைக்காமல் பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிர்த்த வீட்டில் ஒரு பெண் ஜன்னலோரமாய் அடிக்கடி வந்து விட்டுப் போவாள். இடையே வாடகை சைக்கிள் கேட்டு வருபவனின் பெயரையும், நேரத்தையும் குறித்துக்கொண்டு, சைக்கிள் விட்டவனிடம் காசை வசூலிப்பதும், காற்றடிக்கச் சொன்னால் "ஆளில்லை' என்பதுமாக நேரம் கழிய நித்தியானந்தன் வந்து விடுவான்.
இன்று மணி இரண்டாகியும் வரவில்லை.
டீக்கடை குமார், "நித்தி, இன்னுமா வரலை?'' என்றார்.
"வரலை.''
"நீங்க வேணும்னா சாப்பிட்டு வாங்க. நான் பாத்துக்றேன்.''
"பரவால்ல... பசி எடுக்கலை..''
"இண்டர்வியூக்கு போனீங்களே, என்ன ஆச்சி?'' என்றார் குமார்."
"எந்த இண்டர்வியூ?''"
"போன வாரம் டைப் அடிச்சு எடுத்துப் போனீங்களே?''"
"அதுவா? மூவாயிரம் ரூபா டெபாசிட் பண்ணணுமாம்.''"
"எவ்ளோ தரேன்றான்?''
"முன்னூர் ரூபா தர்றேன்றானுங்க. பஸ் செலவுக்கே சரியா பூடும் போலருக்குது. அதுவும் எங்கே? திருவான்மியூர்ல, தண்டையார் பேட்டைலதான் எனக்கு வர்ற வேலைலாம். பக்கத்திலனாக்கூட பரவால்ல...''
"ப்ச்'' என்றார் குமார்.
"ஒண்ணு செய்றியா சொல்லு.''
"ம்..''
"ஒரு மூவாயிரம் ரூபா தோது பண்ணிக்கோ. என்னை மாதிரி ஒரு டீக்கடை போட்டுக்கோ... என்னா சொல்றே?''
அருண் யோசித்தான்.
மூவாயிரம் இருந்தால் மூவாயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்று சொல்ல நினைத்தான்.
"பார்க்கலாம்'' என்றான்.
"வேணும்னா சொல்லு... "பாலாஜி லக்கி சென்டர்' இருக்குதில்ல...''
"பஸ் ஸ்டாண்டிலயா?''
"நல்ல இடம்.''ஒருவன் `கிளிங்' என்று சைக்கிள் பெல்லை அடித்து அழைத்தான்.
"சைக்கிள் வேணும்'' என்றான். அருணுக்கு ஆள் தெரியவில்லை என்பதுகூட பிரச்சினையாய் இல்லை. இவ்வளவு அலட்சியமாய் சைக்கிள் கேட்டதுதான் எரிச்சலாய் இருந்தது.
"ஆள் தெரியாது.''
"எதிர் வீடு'' என்றான் அவன்.
"எதிர் வீடா? உன்னை பாத்ததே இல்லையே?''
"ஊர்ல இருந்து வந்திருக்கேன். எங்க மாமா வீடு இது...''
"யாரையாவது சொல்லச் சொல்லு.''
அவன் ஜன்னலருகே போய், "மாமி, மாமி'' என்று குரல் கொடுக்க, அவன் மாமியும், அதன் பின்னால் அந்தப் பெண்ணும் ஜன்னலில் தோன்றினர். மாமி, அருணை, "எம்பா சைக்கிள்'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். அருண், அவனிடம் பெயரை விசாரித்துக் கொண்டு, "ரெண்டாம் நம்பர் சைக்கிள் எடுத்துக்க. நல்லா போவும்'' என்று சிபாரிசு பண்ணினான்.
ஜன்னல் பெண், சண்முகநாதன் சைக்கிளில் எறிப் போகிற அழகைப் பார்த்துவிட்டுத்தான் மறைந்தாள். நித்தியானந்தம் உண்ட மயக்கத்தில் அப்படியே தூங்கி விட்டதாகச் சொல்லி
"சாரி'' என்றான். என்ன சாரி? அருண் பொறுமையாகக் கிளம்பி வீட்டுக்குப் போனான். வீட்டுக்குப் போவதில் அம்மா மட்டுமே சற்று ஆறுதலான விஷயம். அருணின் அம்மா, "வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டா தானே?'' என்று வருந்தினாள்."பெரிய ஷிப்ட்டு வேலைக்குப் போய் கழட்டிட்டு வர்றானே.. சோத்த போட்றி..'' என்றார் அருண் அப்பா வஞ்சப் புகழ்ச்சியாய்.
தினம், தினம்தான் என்றாலும் சற்றே மனஸ்தாபம் அதிகரித்து உடனடியாய் சாப்பிட உட்காராமல், காலையில் துவைத்துப் போட்டு விட்டுப் போன சர்ட்டையும், பேண்ட்டையும் மடித்து வைக்க ஆரம்பித்தான். "சைக்கிள் கடைல வேலை செய்யறதுக்கா படிக்க வெச்சேன்? உன்னாட்டம் புள்ளைல்லாம் இப்பிடியா இருக்குது? சுரணை இருக்கறவன்தான்டா சுயமா சம்பாதிச்சு வாழணும்னு நினைப்பான்.''அருணின் அம்மா இடையில் குறுக்கிட்டு, "வேலைதான் கிடைக்கலையே, சும்மா திட்டிக்கினு இருந்தா என்னா பண்ணுவான்'' என்று ஆதரவு காட்டினார். மறுபடி சைக்கிள் கடை.
"லைப்ரரிக்கு கிளம்பறோம்டா.. ஐரு ரூபாய் இருந்தா ஒரு கோடி சம்பாதிக்கலாம்னு ஒரு புக் படிச்சுக் கிட்டிருக்கேன்.. என்னதான் சொல்றான்னு பார்த்துட்டு வந்திடறேன்... கொஞ்சம் சைக்கிள் தர்றியா?'' என்றான் அருண்.
"உனக்கு கோடீஸ்வரன் ஆகணும் அவ்ளோதானே?''தனுஷ் படத்துக்கு டிக்கெட் கேட்ட மாதிரி சாதாரணமா சொன்னான் நித்தியானந்தன். "என்கூட ஐரு தபா திருப்பதி வரைக்கும் வர்றியா பொட்டலம் வாங்கித் தர்றேன். சும்மா இந்தக் கைக்கு அந்தக் கை... ஒரு மாசத்தில லட்சாதிபதி ஆகிடலாம். சாமர்த்தியம் இருந்தா தீபாவளிக்குள்ள கோடீஸ்வரனாய்டுவே..''
"பொட்டலம்னா?''
"கஞ்சா..."
"எவ்ளோ செலவாகும்?'' என்றான் அருண்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக