மைக்ரோ கதை: மன்னரும் மாம்பழமும்!
அவன் ஒரு சாப்பாட்டு ராமன். மன்னரின் விருந்துக்கு அவனையும் அழைத்திருந்தனர். கூச்ச நாச்சமில்லாமல் சாப்பிட்டான். மூன்று பந்தி காலியாகும் வரை முதல் பந்தியில் அமர்ந்த அவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். மன்னர் அவனுடைய சாப்பாட்டுப் பிரியத்தைத் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க முடியாமல் எழுந்தான் அவன். மன்னர் கிண்டலாக, ""இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே?'' என்றார்.
""ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது'' என்றான் அவன்.
அந்த நேரம் பார்த்து ஒரு தட்டு நிறைய மாம்பழத் துண்டுகளை எடுத்துச் சென்றான் ஒருவன். சாப்பாட்டு ராமனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. உடனே அவனுக்கு மாம்பழத்துண்டுகளைப் பரிமாறச் சொன்னார் மன்னர். அவனும் ஏழெட்டுத் துண்டுகளை உள்ளே தள்ளினான்.
""இப்போதுதான் ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது என்றாய். பிறகு எப்படிச் சாப்பிட முடிந்தது?'' } மன்னர் கேட்டார்.
""மன்னரே... உங்கள் சந்தேகம் நியாயம்தான். ஆனால் நெரிசலான சாலையில் திடீரென்று மன்னர் வருகிறார் என்றால் மக்கள் எல்லோரும் ஒதுங்கி நின்று மன்னருக்கு வழிவிடுவதில்லையா? அப்படித்தான் இதுவும்'' என்றான் சாப்பாட்டு ராமன்.
துணிச்சல் மிக்கவன்!
ஒரு கிராமத்தானும் அவனுடைய மனைவியும் பொருட்காட்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு ஹெலிகாப்டரில் பறப்பதற்கு க்யூ நிற்பதைப் பார்த்தனர். விவசாயி, ""பறப்பதற்கு எவ்வளவு?'' என்றான். ""ஒரு ரவுண்ட் சென்றுவர பத்தாயிரம் ரூபாய்'' என்றான் விமானி. ""ரொம்ப அதிகம்'' என்று விலகிச் சென்ற விவசாயியிடம், ""சரி.. உங்கள் இருவரையும் இலவசமாகவே அழைத்துச் செல்கிறேன். ஆனால் உங்கள் இருவரில் யாராவது ஒருவர் பயந்து அலறினாலும் பத்தாயிரம் ரூபாய் தந்துவிட வேண்டும்'' என்றான்.
இந்த டீலுக்கு சம்மதித்தான் விவசாயி. எப்படியாவது பணத்தைக் கறந்துவிட வேண்டும் என்ற வெறியில் ஏடாகூடமாக ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றான் விமானி. எவ்வளவு பயமுறுத்தியும் ஒரு சத்தமும் இல்லை. வெறுத்துப் போய் தரையிறக்கினான்.
""சத்தமே போடவில்லையே... உண்மையிலேயே உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்'' என்றான் விமானி.
விவசாயி, ""என் மனைவி கீழே விழுந்த நேரத்தில் உண்மையிலேயே கத்திவிடலாம் என்றுதான் நினைத்தேன். பிறகு அடக்கிக் கொண்டேன்'' என்றான் பெருமிதமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக