திங்கள், டிசம்பர் 10, 2007
ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!
தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.
இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.
தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. ""1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "மேனகா', "திகம்பர சாமியா'ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன. அகிலனின் "குலமகள் ராதை', "பாவை விளக்கு', "கயல்விழி' (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன. கல்கியின் "தியாக பூமி', "கள்வனின் காதலி', "பார்த்திபன் கனவு' போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.
கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்', நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன்' ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை'' என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.
""மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க "அன்னா கரீனி'னாவையும் "மோகமுள்'ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது'' என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.
சுஜாதாவின் "காயத்ரி', "கரையெல்லாம் செண்பகப் பூ', "இது எப்படி இருக்கு' நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் "புவனா ஒரு கேள்விக்குறி', "பத்ரகாளி' படங்களுக்குக் கிடைத்தது. வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.
மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம். உமா சந்திரனின் "முள்ளும் மலரும்', புதுமைப்பித்தனின் "சிற்றன்னை'யைத் தழுவி எடுத்த "உதிரிப் பூக்கள்', பொன்னீலனின் "பூட்டாத பூட்டுகள்', சிவசங்கரியின் "நண்டு' போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.
""இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது'' என்கிறார் பழனிவேல்.
சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக