வீட்டுக்குப் புதிதாகக் குடித்தனம் வந்தார் ஒரு பேச்சலர். வயது இருபத்தொன்று முடிந்து சில நாள்களாவதாகச் சொன்னார். வேலை பார்த்தபடியே படிக்க வேண்டியிருப்பதால் தனிமை தேவைப்படுவதாகச் சொல்லி வீடு கேட்டு வந்தார். என்ஜினியரிங் முடித்திருந்த அவருக்குக் கல்லூரியில் படிக்கும்போதே நல்ல வேலைக்குத் தேர்வாகிவிட்டார். படித்தாகிவிட்டது, வேலையும் கிடைத்துவிட்டது, பிறகு என்ன படிக்கிறீர்கள் என்றேன்.
என்ஜினியரிங் படிப்பைவிட இப்போது கேட் படிப்புக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஐஐஎம் படிப்புக்கு மொத்தம் மூன்று லட்சம் பேர் எழுதுகிறார்கள்... தேர்ந்தெடுக்கப்போவது மூவாயிரம் பேர்கள்தான் என்றெல்லாம் சொன்னார். எனக்கு கேட் பற்றியெல்லாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. படித்து முடித்த பின் என்ன டிகிரி தருவார்கள் என்றேன். எம்.பி.ஏ. என்றார். அஞ்சல் வழிக் கல்லூரியிலேயே இப்போது எம்பிஏ படிக்கும் வசதி வந்துவிட்டதே என்று என் புத்திசாலித்தனத்தைக் காட்டினேன். அவருடைய முகக் குறிப்பில் எனக்கு விளக்குவது தேவையற்றது என்பது அவருடைய முகக் குறிப்பில் கொட்டை எழுத்தில் தெரிந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன்னியல்பாக என்னுடைய 21 வயது நினைவுக்கு வந்தது.
என்னுடைய இருபத்தொன்றாம் வயதில் கடைசி ஆண்டு பி.எஸ்ஸி. தேர்வுக்கு ஒன்றுக்கும் போகாமல் கன்னிமரா நூலகத்துக்குப் போய் நாவல் எழுதும் வேலையில் தீவிரமாக இருந்தேன். ஏனென்றால் நாவல் போட்டி இருபத்தோரு வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
கல்லூரிப் பாடம் பாக்கியிருந்ததால் காலையில் எழுந்ததும் எங்கே போவதென்ற பிரச்சினை. லைப்ரரி.. லைப்ரரி என்று போய் வந்து கொண்டிருந்ததால் சும்மாதானே இருக்கிறான் என்று அடுத்த சில மாதங்களிலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். ஆண்களுக்கான திருமணத்துக்கான வயது 21 என்ற விளம்பர அறிவிப்பு மட்டுமே என் திருமணத்துக்குத் தகுதியாக இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருக்கும்போதே திருமண நாள் நெருங்கிவிட்டது. சொல்லச் சொல்ல கேட்காமல் கல்யாணம் செய்ததற்காகப் பழி வாங்கும் நோக்கமிருந்தது.
திருமணமான புதிது. வேலைக்குப் போகிற ஆசையெல்லாம் வரவேயில்லை. என்ன மாதிரி அலுவலகத்தில் என்னமாதிரி வேலை செய்யத் தெரியும் என்ற அவதானிப்பும் இருக்கவில்லை. அப்போது பேச்சாளர்களை அழைத்துச் சென்று என் மாமனார் ஊரில் கூட்டங்கள் போடுவதுதான் முழு நேரப் பணியாக இருந்தது. மாதத்துக்கு ஒரு தரம் பெரியார் தாசன், சுப.வீரபாண்டின் போன்றவர்களை ஊருக்கு அழைத்துச் சென்று சீர்திருத்தக் கூட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். வருகிறவர்களுக்கு வீட்டில் அசைவ விருந்து நடக்கும். இத்தனைக்கும் என் மாமனார் வள்ளலார், ராமகிருஷ்ணர் ஆகியோரின் தீவிர பக்தர்.
வருகிறவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் வேறு. திண்ணையில் அமர்ந்து கடவுளைக் கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தனர். சமயத்தில் என் மாமனாரும் அவர்களுடன் கடவுள் பற்றிய கிண்டல்களுக்குச் சிரித்துக் கொண்டிருந்தார். என்னால் அவரைப் பழிவாங்கவே முடியவில்லை. சகிப்புத் தன்மையும் பொறுமையும் கடைசியில் எனக்குத் தொற்றிக் கொண்டதுதான் மிச்சம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக