சனி, அக்டோபர் 24, 2009

சின்ன.. சின்ன ஊசிகள்!



பத்திரிகையாளர்களின் பீஷ்மராகப் போற்றப்படுபவர் சின்னக்குத்தூசி. இன்டர்நெட் உலகம் தழைத்தோங்கும் முன்னர் அவர்தான் இணைக்கும் தளமாக இருந்தார். எந்தத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைத்தார்கள். யார் எத்தனை இடங்களில் ஜெயித்தார்கள்... என்று ஒரு போன் காலில் தெரிந்து கொள்ளலாம். புதிய கல்விக் கொள்கை குறித்து கட்டுரை எழுத வேண்டுமா, திராவிட இயக்க வரலாறு குறித்துத் தகவல் தெரியவேண்டுமா, நேரில் போய் அமர்ந்தால் அத்தனை தகவல்களும் சரமாரியாக வந்துவிழும். திருமணம் செய்து கொள்ளாமல் தன்னையே தகவலாகத் தந்து கொண்டிருக்கிறார் அவர்.
ஒரு பத்திரிகையில் வேலை போய்விட்டதா, அடுத்த பத்திரிகையில் சேர வேண்டுமா.. அவரிடம் சிபாரிசு கேட்டு வந்துநிற்பார்கள். தமிழகத்தின் எல்லா பத்திரிகை ஆசிரியரிடமும் அவருக்கு நல்ல நெருக்கம் உண்டு. ஆனால் அந்த அத்தனை நெருக்கத்தையும் முரசொலி நிறுவனருக்காக உதறித் தள்ளக்கூடிய அளவுக்கு அவருக்கு அந்த நிறுவனரிடத்தில் அத்தனை ஈடுபாடு.
இதயம் பேசுகிறது வார இதழ் நடத்திய இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் எனது தொடர்கதை முதல் பரிசு தேர்வான அறிவிப்பை ஒரு நபரை வீட்டுக்கு அனுப்பித் தெரிவிக்கச் சொன்னார் ஆசிரியர் மணியன்.
நான் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டேரியில் இருந்து என் நண்பனுடன் கிண்டியில் இருந்த இதயம் அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தேன். மணியனின் மருமகன் ஸ்ரீராம், இவர்தான் உங்கள் நாவலைத் தேர்வு செய்தார். மொத்தம் இருநூறு நாவல்கள் போட்டிக்கு வந்தன என்றெல்லாம் சொன்னார். என் நாவலைத் தேர்வு செய்தவர் வெள்ளைக் கதர் வேட்டி, சட்டையில் ஒல்லியாக இருந்தார். அவர் பெயரை தியாகராசன் என்று அறிமுகப்படுத்தினார்.
ஆறு ஆண்டுகள் கழித்து கலாநிதி மாறன் முழுக்க வண்ணத்தில் வெளியிட்ட தமிழன் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தபோது முரசொலியில் இருந்து சின்னக்குத்தூசி அழைப்பதாகத் தெரிவித்தார்கள். (இரண்டு நாளிதழும் அடுத்தடுத்த மாடியில் இயங்கின) சந்தித்தபோது என்னைத் தெரிகிறதா என்றார். தெரியவில்லை என்று சொன்னேன்.
"நான்தான் உங்கள் நாவலை இதயம் பேசுகிறது இதழில் தேர்வு செய்தவன்'' என்றார்.
"அது தியாகராசன் என்பவர் என்று அறிமுகப்படுத்தினார்களே?''
வேகமாக ஆறு ஆண்டுகளுக்கு முன் சில நிமிடங்கள் பார்த்த அந்த முகத்தை நினைவுபடுத்த முயன்றேன்.
"வெங்கடேசன் என்று உங்களுக்கு இயற்பெயர் இல்லையா? அப்படி எனக்கு தியாகராசன் என்பது இயற் பெயர்''
"மன்னிக்கணும் சார்.. எனக்கு இந்தப் பெயர் குழப்பத்தால தெரியாம போயிடுச்சி'' என்றேன். சொல்லி முடிப்பதற்குள் கூச்சமும் அவமானமும் போட்டி போட்டுக் கொண்டு பிடுங்கித் தின்றன. சின்னக்குத்தூசி என்றால் முரசொலி என்றுதான் யாருக்குமே நினைவு வரும். அவர் எப்படி மணியன் இதழில் நாவல் போட்டி நடுவராக இருக்க முடியும் என்பதால்கூட அவரையும் இவரையும் சேர்த்துப் பார்க்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதுவும் இல்லாமல் நாவல் போட்டி தேர்வான சமயத்தில் எனக்கு இருபத்தோரு வயது. மணியனையே சென்று சந்திக்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. பரிசாக டி.வி.எஸ். 50 பெற்றுக் கொண்டதைக்கூட அவரிடம் தெரிவிக்கவே இல்லை. கையில் ஏழு ரூபாய் இருந்தால் போதும் பெட்ரோல் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு முரசொலியில் இருந்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் சின்னக்குத்தூசியை எதிர் கொள்ளும் நேரங்களில் குற்ற உணர்வு பொங்க ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பல முறை வேலை வாய்ப்புகளை இழந்த சமயங்களிலும் அவரிடமிருந்து ஒரே ஒரு சிபாரிசையும் பெற்றதில்லை. எந்தக் கட்டுரைக்கும் அவரிடமிருந்து தகவல்கள் கோரியதில்லை. அவருடைய மேன்ஷன் எங்கிருக்கிறது என்பதைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் இதயம் பேசுகிறது நாவல் போட்டியில் என் நாவலைத் தேர்வு செய்ததன் மூலம் அவர் எல்லா சிபாரிசையும் செய்து முடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இன்னமும் அதுதான் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin