சனி, டிசம்பர் 31, 2011

சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்

சொல்வனம் இதழில் இது வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம். அருணகிரி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பாக இடம்பெற்ற விமர்சனம் என்றும் நினைக்கிறேன். ஒவ்வொரு பத்தாண்டின் ஆரம்பத்திலும் அந்தப் பத்தாண்டை ஒருகழுகுப் பார்வையில் வேகமாக ஓட்டிப் பார்ப்பது துருத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.


லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?


சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.

பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:

- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.

லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.

- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.

ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.

- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.

பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.

சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.

தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.



முழுவதும் படிக்க...

திங்கள், டிசம்பர் 26, 2011

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..




திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி பொறியியல் படித்த ஓர் இலக்கிய இளைஞர்.
படைப்பிலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் நல்ல படிப்பாளி. நவீன பிசிராந்தையார் நட்பு போல கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல் போனில் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெட்டுப்புலி நாவலின் தீவிரமான வாசகர் அவர். ஆண்பால் பெண்பால் வெளியீட்டுவிழா மேடையில்தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அவரை நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டு போனில்தான் அழைப்பு விடுத்தேன். மிகச் சரியாக விழாவுக்கு வந்துவிட்டார். விழாவைப் பற்றி அவருடைய வலைதளத்தில் எழுதியது இது:


ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.
அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.
எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.
சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.
ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.
அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள்.

எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன்.
அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

வெள்ளி, டிசம்பர் 23, 2011

ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்

வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.



ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்

வியாழன், டிசம்பர் 22, 2011

வாழ்த்து

2011-ம் ஆண்டு எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரு சேர அங்கீகரித்திருக்கிறது.
கௌரவிக்கப்பட வேண்டிய பலரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பூமணி - விஷ்ணுபுரம் விருது
சு.வெங்கடேசன் - சாகித்ய அகாதமி விருது
தேவதச்சன்- விளக்கு விருது
வண்ணநிலவன், வண்ணதாசன்- சாரல் விருது
சு.வேணுகோபால் - பாஷா பரிஷத் விருது
ஜெயமோகன் - முகம் விருது
அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்




தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.

‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.

‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.

இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.

இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.

பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).

முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.

நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com

ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்

திங்கள், டிசம்பர் 05, 2011

ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்


ஆண்பால் பெண்பால் நாவல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டு விழாவின் போதே அறுபத்தைந்து எழுபது பிரதிகள் வரை விற்றுவிட்டதாக மனுஷ்யபுத்திரன் மறுநாள் காலை சொன்னதில் இருந்து விழாவின் வெற்றியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டில் மைக் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது என்ற விதத்தில் இந்த விழா மறக்க முடியாத விழாவாக மாறிவிட்டது.
புக் பாயிண்ட் அரங்கத்துக்கான மைக் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் கூட்டம் ஆரம்பிக்கும்போது தலைமறைவாகிவிட, செல்போன், ஈ மெயில் போன்ற எந்த தொழில்நுட்பத்துக்கும் அகப்படாமல் போகவே, உரத்தகுரலில் பேசி எல்லோரும் அரங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
வரவேற்புரை நிகழ்த்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகம் தெரியாத அந்த மைக் ஆசாமி மீதும் புக் பாயிண்ட் நிர்வாகத்தின் மீதும் மிகுந்த கோபமடைந்தார்.
வெட்டுப்புலி நாவல் வெளியான ஆண்டிலேயே மறுபதிப்புக்கு போனது வலைப்பூக்களினால்தான் என்று பாராட்டினார்.
தலைமைதாங்கி நடத்திய எழுத்தாளர் சா.கந்தசாமி, நாம் மைக் பற்றி பேசுவதற்கா வந்தோம், நாவல் பற்றி பேசுவோம் என்று ஆரம்பித்து விழாவின் இறுக்கத்தைத் தளர்த்தினார். பத்திரிகையாளர்கள் கதைகளின் அருமைபற்றித் தெரியாதவர்களாக இருப்பதில் ஆரம்பித்து பத்திரிகையில் இருப்பவர்களின் எழுத்தில் தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததை தமிழ்மகன் தகர்த்திருக்கிறார் என்றார்.
பாரதி, புதுமைப்பித்தன், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு செல்லப்பா, கு. அழகிரிசாமி, கல்கி, பிரபஞ்சன், வண்ணநிலவன், விந்தன், ஜி.முருகன் போன்ற பலரும் பத்திரிகையாளர்கள்தான். கடந்த நூறாண்டு பத்திரிகை வரலாற்றில் இரண்டு டஜன் பேர்கூட தேறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம்.
நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் நாவலின் எளிமை, உத்தி என அவர் அரை மணிநேரம் வரை பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
வெறும் 500 சொற்களை வைத்தே இத்தனை அழுத்தமான அடர்த்தியான நாவலை படைத்திருப்பதற்காகப் பாராட்டினார்.
ஞாநி முன்னுரையை மட்டுமே படித்ததாகச் சொன்னார். இந்த நாவலை நான் எழுதவில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆதாரபூர்வமாக நான் விவாதித்திருப்பதை ஞாநி சிலாகித்தார். அந்த முன்னுரையும் சேர்த்து நாவலின் ஒரு பகுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
நூலை வெளியிட்ட திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர்கு.கருணாநிதியின் பேச்சு மிகமிக எதார்த்தமாக இருந்தது. சிறுவயதில் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த நேரம். பெரிய கூட்டம் அவருக்கு மாலை போட காத்திருக்கிறது. அவருக்கு மாலை போடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். இவரை எடுத்துக் கொஞ்சியபடி, உன் பெயர் என்ன என்று கேட்கிறார். இவர் கருணாநிதி என்கிறார். எம்.ஜி.ஆர் முகத்தில் சிறிய அதிர்ச்சி... அல்லது வியப்பு.ஒரு முத்தம் தந்து கீழே இறக்கிவிடுகிறார். எம்.ஜி.ஆரின் கரங்கள் என் மீது பட்ட காரணத்தினாலேயே மக்கள் அவரை எப்படிக் கொண்டாடினார்கள் என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் வாயில் சர்க்கரை போட்ட பாட்டியை நினைவுகூர்ந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் இதை நாவலில் சேர்த்திருப்பேன். நாவலுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான் எனக்குத் தேவையாக இருந்தது. நாவலில் நான் எந்த மாதிரி விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.
நூலை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜனநாதன், விழாவுக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அன்று காலையில்தான் அவருடைய பால்ய சினேகிதர் இறந்து போய்விட்டதாகவும் நெடுநாளாக அவனைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். பலமுறை அவன் போன் செய்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மத்தியானம் என்னிடம் தெரிவித்தார். அவரை வற்புறுத்தி அழைப்பதற்கு சங்கடமாக இருந்தது. அந்த மனநிலையிலும் அவர் வந்திருந்தது என்னை நிலைகுலைய வைத்தது.
எந்த விஷயமும் மைக் மூலமாக வெளி உலகுக்குச் சென்றடைவதில்லை. இங்கு இந்தக் கூட்டத்தைக் கேட்டவர்கள் அடுத்து இருப்பவர்களுக்குச் சொல்வதன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நல்ல நாவல் அப்படித்தான் வெளியே பிரபலமாகும் என்றார்.



கரு.பழனியப்பன் பேச்சு அரங்கத்தைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் எம்.ஜி.ஆரைப் பற்றி இந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை விவகாரத்தையும் தீவிரமாக எடுத்து வைத்தவர். அவர் சொன்ன டிராகுலா உதாரணம் ரசிக்கும்படி இருந்தது.
நாவலில் மொத்தம் ஐந்தே காட்சிகள்தான் என்று அவர் சினிமா போல விவரித்தார். அதையே ஆண் ஒரு முறை சொல்லி முடிக்கிறான். பிறகு பெண் ஒரு முறை சொல்லி முடிக்கிறாள்... ஆனால் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்தது இவரால்? எனக் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பதை என் நாவல் மூலமாகவே நிரூபிக்க நினைத்தார். அதற்காகத்தான் இந்த நாவலுக்கு அப்படியொரு முன்னுரையையே நான் எழுத வேண்டியதாக இருந்தது. எம்.ஜி.ஆரை நாவலின் ஒரு பாத்திரமாக அமைத்திருப்பதின் வெற்றியை அவர் பெரிதும் பாராட்டினார். நிறைய தெரிந்தவர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்களா என்பதை நாவலில் வரும் ரகு கதாபாத்திரத்தோடும் எழுத்தாளர் சுஜாதாவோடும் ஒப்பிட்டது அவருடைய நுண்ணிய வாசிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல்ரீதியான சிக்கலைப் பற்றி பேச ஆரம்பித்தார் கவிதா முரளிதரன். கோர்வையாக அவருடைய கருத்துகளை எழுதியே எடுத்துவந்திருந்தார். கதையின் க்ளைமாக்ஸில் இருந்து நாவலை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார். நாவலின் க்ளைமாக்ûஸ சொல்லிவிடுவதால் இந்த நாவலின் சுவாரஸ்யம் குறைந்துவிடாது என்று அவர் நம்பிக்கையாக கூறியது எனக்குப் பிடித்திருந்தார். கணவன் அருண், மனைவி பிரியா இருவருக்குமான பிரச்சினை என்பது நாவலின் கடைசி அத்தியாயத்தில் அடியோடு மாறிப்போய்விடுவதாக அவர் சொன்னது அவருடைய கவனமான வாசிப்பைக் காட்டியது.
நாவலில் சொல்லப்பட்ட உளவியல் சிக்கல்களை அவற்றின் பெயர்களோடு சொன்னார் பெரியார்தாசன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இருக்கும் உளவியல் நோய்க்கூறு எத்தகையது என்று அவர் விவரித்தார். மிக நீண்ட உரை. அழமானது. நாவலில் நான் ஒரு பத்தியில் மிகக் கடுமையான வாக்கிய அமைப்பை எழுதியிருந்தேன். அதைக் குறிப்பு எதுவும் இல்லாமல் அப்படியே சொன்னார். இத்தனைக்கும் நாவலை அவருக்கு விழா நாளுக்கு முதல்நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்த்தேன். இரவே நாவலை படித்து முடித்துவிட்டு கதாபாத்திரங்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
ஏறத்தாழ எல்லாருமே வெட்டுப் புலி நாவல் பற்றி ஒருவரியாவது பேசினார்கள். எல்லா புகழும் மனுஷ்யபுத்திரனுக்கே.
அந்த நாவலின் கரு என்ன என்பதை நான்கு வரியில் சொன்னேன். உடனே எழுதித்தாருங்கள் என்று அவர் என்னை ஊக்குவித்தார். வெட்டுப்புலியை எழுதியது அப்படித்தான். ஆண்பால் பெண்பால் பற்றி இரண்டுவரிதான் சொன்னேன். இதோ இப்படியொரு விழா நடத்தி பெருமைபடுத்திவிட்டார்.
என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.
விழாவில் பேசிய எல்லோரும் ஒருவர் சொன்னது போல இன்றி இன்னொருவிதமான கோணத்தில் அலசியிருந்தனர். அரசியல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக, பெண்ணிய நோக்கில், இலக்கிய நோக்கில், சினிமா பார்வையில் என விதவிதமாக இருந்தது.
ஆண்பால் பெண்பால் பற்றிய என்னுடைய கோணம் என்னுடைய நாவலாக வந்திருக்கிறது என்று என் ஏற்புரையில் சொன்னேன்.

புதன், நவம்பர் 30, 2011

ஆண்பால் பெண்பால்


மூன்றாண்டு உழைப்புக்குப் பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன். ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும் இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.
கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு, பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா? இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.
ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன். எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.
இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன.
அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.
கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஏன் ஆரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.
கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.
இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.வரும் டிசம்பர் மூன்றாம் தேதி ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு மணிக்கு ஆண்பால் பெண்பால் வெளியாகிறது. நண்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வியாழன், நவம்பர் 17, 2011

சமகால சரித்திரத்தை எழுதும்போது எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால்கள்!

என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தன் எழுதிய 'புதிய நந்தன்' சமகால சரித்திரத்தை முன்வைத்து எழுதப்பட்ட சிறப்பான சிறுகதை. இது 1934- ல் மணிக்கொடியில் வெளியானதாக ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் கதையில் வரும் பாவாடை, தாழ்த்தப்பட்ட இனத்தவன். கிருஸ்தவ பாதிரியார் ஒருவரால் மனமாற்றம் அடைந்து மதமாற்றமாகிறான். அவனுக்கு டேனியல் ஜான் என்று பெயரும் மாறுகிறது. கிருஸ்தவ மதத்தில் இந்து மதத்தின் கொடுமைகள் இல்லை என்று நம்புகிறான். பாதிரியாருடைய மகளைக் காதலிக்கிறான். பாதிரியார் கொதித்துப் போகிறார். 'பறக்கழுதையே வீட்டைவிட்டு வெளியே போ' என்று துரத்தி அடிக்கிறார். மதங்களின் போலித்தனத்தால் கசப்படைந்து திரு.ராமசாமி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து தோழர் நரசிங்கம் என்ற பெயருடன் தனக்கு தோன்றிய உண்மைகளை தீவிரமாகப் பிரசாரம் செய்கிறான்.
நந்தனை வதைத்தெடுத்த வேதியரின் வழி தோன்றலாக வந்த 1000 வேலி நிலம் கொண்ட பிராமண பண்ணையார் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் அடிமையாகக் கிடக்கும் கருப்பனின் மகன்தான் நாம் மேலே சொன்ன பாவாடை என்கிற டேனியல் என்கிற நரசிங்கம்.
பண்ணையாருக்கு ராமநாதன் என்கிற மகன். காந்தியாரின் 1930-ல் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கலெக்டர் பதவியைத் துறந்து, நரசிங்கத்தின் தங்கை மீது மையல் கொள்கிறான். சாதி அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இயற்கை அவர்களை வென்றுவிடுகிறது. கருப்பனிடம் விஷயத்தைச் சொல்ல அது மகா பாவம் என்று பதறுகிறான்.
அந்த நேரத்தில் மகாத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்துக்காகப் பிரசாரம் செய்ய வருகிறார். இவர்களின் ஆதனூரில் ஐந்து நிமிடம் தங்கப் போவதாகவும் ஏற்பாடாகிறது.
காந்தியைச் சந்திக்க முக்கியமாக மூன்று பேர் தயாராகிறார்கள்.
பார்ப்பன பண்ணையார் காந்தியாரைச் சந்தித்து புராண ஆதாரங்களுடன் காந்தியின் ஹரிஜனக் கொள்கையைத் தகர்க்கக் காத்திருக்கிறார்.
தோழர் நரசிங்கம் காந்தியின் சாதீயக் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பக் காத்திருக்கிறான்.
கண்ணில்லாக கருப்பனும் "மவாத்துமா' கிழவரைப் "பார்க்க' கிளம்புகிறான்.
நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு கோஷித்துக் கொண்டு வருகிறது மதாராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.
ரயிலுக்கு எதிரில் குருடன் தண்டவாளத்தில் நடந்து வருகிறான்.
தூரத்தில் இருவர் கருப்பன் ரயில் எதிரில் நடந்து போவதைக் கண்டுவிட்டனர். மகனும், மருமகனும். இயற்கை சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.
மூவரும் சேரும் சமயம்... ரயில் அவர்கள் மீது மோதிவிட்டுப் போய்விடுகிறது.. ஹதம். ரத்தக்களரி.
மூவரின் ரத்தங்கள் ஒன்றாகக் கலந்தன. ஒன்றாய்த்தான் இருந்தன. இதில் யாரை நந்தன் என்பது? என்பதாக முடிகிறது கதை.
சமகால அரசியலைக் கதைக்களமாக்கிய சிறுகதை என்ற விதத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறுகதை.
தமிழ் மக்களின் பேச்சோடும் மூச்சோடும் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியலை பெரும்பாலான எழுத்தாளர்கள் கதைகளில் விவாதிக்கவோ, போகிற போக்கில் சுட்டிக் காட்டியோ எழுதுவதையும் தவிர்க்கிறார்கள். தனியாக ஓர் ஆணும் பெண்ணும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல பல கதைகளில் எந்தவித சமூக பாதிப்பும் இல்லாத கதாபாத்திரங்கள் அதனால் உருவாகின. சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவான பல கதைகளில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டிருந்தார்கள்... போன்ற குறிப்புகளைக்கூட பல கதைகளில் குறிப்பிடத் தவறினர். பிராந்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தினால் கதைகளின் சர்வதேசத் தரம் கெட்டுவிடும் என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
ஜே ஜே சில குறிப்புகளில் "சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற கேள்வியில் காலத்தின் அடையாளம் வந்துவிடக் காண்கிறோம்.
சுஜாதாவின் ஜன்னல் மலர்கள் நாவலில் 'பிராமணர்கள் போஜனப் பிரியர்கள்.. சாப்பிட்டுவிட்டு வாயு பாணம் விட்டுக் கொண்டிருப்பார்கள்' என்று ஒரு திராவிடர் கழக தோழர் சொல்லுவார்.
சொல்லிவிட்டு 'இதைச் சொன்னது யார் என்று தெரியுமா?' என்று கேட்பார்.
'யார்... அண்ணாங்களா?' என்பார் எதிரில் இருப்பவர்.
'பாரதியார்யா.. பாரதியார்' என்று தோழர் உற்சாகமாகச் சொல்லுவார்.
எந்த பாத்திரம் என்ன பேசும் என்பதில் இருக்கும் நம்பகத் தன்மை படைப்பைப் பலப்படுத்தும். வாசகனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும். பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, பாவைச்சந்திரனின் நல்லநிலம் போன்றவை தமிழில் அந்த முயற்சியை செய்தன. பி.ஏ. கிருஷ்ணன் நெல்லையையும் பாவைசந்திரன் கீழை தஞ்சை பகுதியையும் களமாக்கி சுமார் ஒரு நூற்றாண்டு சரித்திரத்தைச் சொல்லியிருந்தார்கள். 20-ம் நூற்றாண்டின் பல தலைவர்கள் நாவலில் இடம்பெற்றார்கள். சில வேளைகளில் கதாபாத்திரங்களாகவும் அவர்கள் இடம்பெற்றார்கள்.

சமகால சரித்திரத்தை எழுதும்போது எதிர்கொள்ளும் பிரதான நெருக்கடிகள் என்று பார்த்தால் ஆதாரங்கள்தான்.
1940 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நம் கதாநாயகன் ரயிலுக்காகக் காத்திருப்பதாக எழுத முடியாது. ஏனென்றால் அப்போது நுங்கம்பாக்கத்தில் ஸ்டேஷனே இல்லை. அந்தக் கதாநாயகன் பேண்ட் போட்டிருந்தான் என்று எழுதினாலும் தவறுதான். ஏனென்றால் அப்போது பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்றுதான் சொல்ல வேண்டும். பேண்ட் என்பது அமெரிக்க பிரயோகம். 1960-களில்தான் பேண்ட் என்ற வார்த்தை இங்கு புழக்கத்துக்கு வந்தது.
எழுத்தாளர் எஸ்.வி.வி. ஒரு சிறுகதையில் 'மாலை ஐந்து மணியிருக்கும். ஆளரவமற்ற மாம்பலம் ரங்கநாதன் தெரு. நம் கதாநாயகன் கையில் வைத்திருந்த ஓரணாவை ஏதேச்சையாக கீழே தவறவிட்டான். அது டன் டனாங் டங் என்று சப்தமெழுப்பியபடி உருண்டோடியது' என்று எழுதியிருப்பார். 40களின் ரங்கநாதன் தெரு அது. மாலை ஐந்து மணிக்கு ஆளரவமில்லாமல் இருந்த ரங்கநாதன் தெருவை அந்தக் காலப் பின்னணியோடு பார்க்க வேண்டும்.
இதில் சமகால அரசியலையும் சொல்லும்போது வேண்டாத தலைவலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்னைப் பற்றி ஏன் இப்படி எழுதினாய் என்று ஆட்டோவில் ஆசிட் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது மோசமான அரசியல்வாதிகளைப் பற்றி மிகமிக மோசமாகத்தான் எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. லட்சக்கணக்கில் விற்கும் அந்தப் பத்திரிகைகளையே கண்டு கொள்ளாதவர்கள், ஆயிரம் பிரதி பதிப்புகளுக்கெல்லாம் அசரமாட்டார்கள். அப்படியே அவர்கள் வெகுண்டெழுந்து வந்தாலும் இலக்கிய உலகில் இருக்கும் அரசியலில் உதைபட்டு உரமேறியவர்களாக இருப்பவர்களுக்கு அதைச் சமாளிக்கிற பக்குவம் கை வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.
அதே சமயத்தில் பாண்டியன் வரலாறு, சோழர் வரலாறுகளை பின்னணியாக வைத்து கதை எழுதுவதைவிட சமகால சரித்திரத்தை மையப்படுத்தி எழுதும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் சமகால அரசியல் பற்றி ஏறத்தாழ எல்லா வாசகருக்குமே ஒரு பார்வை இருக்கும். அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிறிய தவறும் சீக்கிரத்திலேயே பரவி கேலிக்குரியதாகிவிடும் ஆபத்து இருக்கிறது.
என்னுடைய வெட்டுப் புலி நாவலில் முப்பதுகளில் மோரிஸ் மைனர் கார் வாங்க ஆறுமுக முதலி திட்டமிடுவார். ஆனால் அப்போது மோரிஸ் கார் இருந்தது... மோரிஸ் மைனர் வரவில்லை என்று காலஞ்சென்ற எஸ்.வி. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். பேண்ட், டரவுசர் வித்தியாசத்தைக் குறிப்பிட்டவரும் அவர்தான்.
மேலும், சமகால அரசியலை நாவலாக்கும்போது அது புலனாய்வு பத்திரிகைபோல மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் எழுத்தாளன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.

திங்கள், நவம்பர் 07, 2011

புகைப்படங்களின் தொகுப்பு...


வெட்டுப் புலி நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையான உரையொன்றை நிகழ்த்தினார். சென்னை டில்கவரி புக் போலஸ் வளாகத்தின் மாடியில் அமைந்துள்ள தியேட்டர் லேப் அரங்கத்தில் விழா இனிதாக நடைபெற்றது.
தமிழ் ஸ்டூடியோ டாட் காம் அமைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு எழுத்தாளர்கள் பாரதிமணி, இராம.குருநாதன், மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபாநந்தன், தியேட்டர் லேப் இயக்குநர் ஜெயராவ், வெளிரங்கராஜன் உள்ளிட்ட சிலரும் ஏராளானமான இளைஞர்கள் வந்திருந்தனர். நிறைய பேர் நாவலைப் படித்தவர்கள். கேள்வி நேரத்தின்போது அவர்கள் கேட்ட கேள்வியில் இருந்து அதை அறிய முடிந்தது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

வியாழன், நவம்பர் 03, 2011

எழுத்தாளர் பிரபஞ்சன் அறிமுகப்படுத்தப்படும் வெட்டுப்புலி




யாவும் உள - உலக இலக்கிய நூல்கள் அறிமுக நிகழ்வு



பங்கேற்பு: எழுத்தாளர் பிரபஞ்சன்

அறிமுகப்படுத்தப்படும் நூல்: வெட்டுப்புலி

நாள்: நவம்பர், 6, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 4 மணிக்கு.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.
தொடர்புக்கு: 9840698236


வணக்கம் நண்பர்களே,
இதுவரை குறும்பட நிகழ்வுகளை மட்டுமே தமிழகம் முழுவதும் நடத்தி வந்த தமிழ் ஸ்டுடியோ முதல் முறையாக ஒரு தொடர் இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. உலக இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். தமிழ் / இந்திய இலக்கியமும் இதில் அடங்கும். அந்த வகையில் இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு "யாவும் உள" என்கிற தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய நிகழ்வு தொடங்கும்.
முதல் யாவும் உள இலக்கிய நிகழ்வில் தமிழ்மகன் அவர்கள் எழுதிய வெட்டுப்புலி நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அறிமுகப் படுத்தி பேசுகிறார்.
வெறும் நூல் அறிமுகக் கூட்டமாக இல்லாமல், இலக்கியத்தின் முழு சுவையையும் நீங்கள் ரசித்து, அனுபவிக்கும் விதமாக இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.

சனி, அக்டோபர் 22, 2011

தயாராகிவிட்டது அசடன்


நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆண்டின் முக்கியமான வரவான 'அசடன்' நாவல் தயாராகிவிட்டது. எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா ஏற்கெனவே தஸ்தயேவஸ்கியின் 'குற்றமும் தண்டனை'யும் நாவலை மொழிபெயர்த்து தமிழுலகுக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர். தஸ்தயேவஸ்க்கியின் இடியட் நாவலை இப்போது அசடன் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புதமான உணர்வுக்குவியலும் உளவியல் முடிச்சுகளும் அடங்கிய நாவல் இது.
மதுரை பாரதி புக் ஹவுஸ் சிறப்பாக தயாரித்திருக்கிறது.

Bharathi Book House,F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,(Shopping Complex Bus Stand,)Periyar Bus Stand,Madurai-625001.

வாங்கிப் பயனடைய வேண்டுகிறேன்.

திங்கள், அக்டோபர் 17, 2011

நியாயச் சங்கிலி


ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென வித்தியாசம் காண இயலாத மங்கோலிய பெண் தரத்தில்தான் வைத்திருந்தேன்.
அவளுடைய பல்வரிசை அலாதியானது. அவளை அருகே அழைத்து கொஞ்ச நேரம் சிரிக்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்போல இருந்தது. அடுத்தகட்டமாக அந்தச் சிறிய நாசிக்குள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எப்படி சென்று உருமாறித் திரும்புகிறது என்ற ஆச்சர்யமும் உடன் சேர்ந்து கொள்ளும்.
சிரிக்க எத்தனிக்கும்போது முன் இரண்டு செவ்வக பற்கள் மட்டும் கார்ட்டூன் முயலுக்கானது போல வெளியே தெரியும். அவளைப் பிடித்துப் போக அதுவே போதுமானது. முழு அழகையும் தரிசிக்க வேண்டுமானால் அவளுக்குப்பிடித்தமாதிரியான நல்ல ஜோக்கைச் சொல்ல வேண்டும். ஜோக்கைவிட அவளுக்குப் பிடித்தமானதாக அது இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
"பழனிச்சாமி இன்னும் வரவில்லையா?'' என்று நான் ஒரு தரம் அவளைக் கேட்டபோது சிரித்தாள். இது ஒரு ஜோக்கா என்று கேட்கக்கூடாது. அவளுக்குப் பிடிக்க வேண்டும் என்று அதனால்தான் முதலிலேயே சொன்னேன். அப்படிச் சிரிக்கும்போது அவள் முகம் சட்டென தேவதையின் முகமாக மாறிவிடும். வடகிழக்கு தேவதை.
பழனிச்சாமி அந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டராண்ட் மேனேஜர். எம்.பி.ஏ. படித்தவன் என்பது அவனுடைய நடவடிக்கையில் சுத்தமாகத் தெரியாது. அவன் வந்துவிட்டால் ஓட்டல் ஊழியர்கள்அவனுடைய கட்டுப் பாட்டுக்குள் இயங்குவார்கள். அவனுக்கு அடிமை போல நடிப்பார்கள். நான் ஜூலியாவிடம் கேட்டபோது அவன் வந்திருக்கவில்லை.
இந்த ஓட்டலில் நடக்கும் ஊழலை வேவு பார்க்க அனுப்பியிருப்பதால் முதலில் என் கவனம் அவன் மீதுதான் இருந்தது. அவன் பெண்களைப் பணிய வைப்பதில் கவனமாக இருந்தான். என்னைப் பணித்திருப்பது இந்த மாதிரி செக்ஸ் ஊழல்களைக் கண்காணிக்க அல்ல. ஓட்டலின் லாபம் அதனாலும் குறைந்திருந்தது வேறுவிஷயம்.
ஓட்டலின் லாபம் பலவிதங்களில் கணிசமாக குறைந்திருந்தது. அதற்கான காரணத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்கு அங்கேயே ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்து கேட்கும்போதெல்லாம் காளான் சூப், இறால் பிரியாணி... எனக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து நிறைய பெண்கள் அங்கே ஹவுஸ் கீப்பிங், சமையல் எடுபிடி வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். நாளெல்லாம் பாத்திரங்கள் கழுவிக் கொண்டும் காய்கறிகளை நறுக்கிக் கொண்டும் அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் இருந்தார்கள். எப்போதும் ஈரத்தில் அவர்கள் எப்படித் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பது புதிராக இருந்தது. அவர்கள் யாருக்கும் ஐந்தாயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை. அங்கு வேலை பார்க்கிற பெண்கள் எல்லோரும் கொட்டி வாக்கத்தில் ஒரு வீடு எடுத்துக் குழுவாக தங்கியிருக்கிறார்கள் என்றார்கள். சாப்பாடு ஓட்டலில். சம்பளத்தில் பெரும்பகுதியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்றலர்ந்த மலர்கள் போல எப்போதும் கலகலப்பாகவும் இருந்தார்கள்.
அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் அட்மின் மேனேஜர் தரப்பில் சிறிய அளவுக்கு ஊழல் நடப்பதை அறிந்தேன்.
இணக்கமானவர்களுக்கு சில சலுகைகள் இருந்தன. அதிகார துஷ்பிரயோகம்தான். அதற்கு ஊழல் என்ற பெரிய வார்த்தையை பிரயோகிக்காமல் தவிர்த்தேன். பழனிச்சாமி அதற்கு ஒரு படி அதிகம். சிலரை பயன்படுத்திக் கொள்வதும் தெரிந்தது.
பாலுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல செக்யூரிட்டி மேனேஜர் அலெக்ஸôண்டர். ஸ்டோர்ஸ் அவனுடைய கண்ட்ரோலில் இருந்தது.
இந்த மூன்று பிரிவும் தனித்தனி ராஜாங்கமாக இருந்தது. ஒருவர் தயவு இல்லாமல் ஒருவர் தவறு செய்ய முடிந்தது. அல்லது ஒருத்தர் தவறை மற்றவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இதைக் கண்காணிக்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது தெரிந்ததும் என் முப்பதுக்கும் குறைந்த வயதைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மூவருமே இறங்கி வந்து வழிந்தனர்.
காபி ஆர்டர் செய்வதற்கே யோசனையாக இருந்த என்னை "வொய் டோன்ட் யு பிரஃபர் மஸ்ரூம் சூப்?' என பழனிச்சாமி விசாரித்ததில் கொஞ்சம் ஐஸýம் பெருந்தன்மையும் இருந்தது.
"வீட்டுக்கு பிரியாணி பார்ஸல் பண்ணி வெச்சிருக்கேன்' என்கிறார் அலெக்ஸôண்டர்.
இந்த சூப்புக்கும் பிரிஆணிக்கும் பணியாத மனம் ஜூலியாவின் புன்னகைக்குப் பணிந்தது. தினமும் என்னுடைய டேபிளைத் துடைத்து தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குடுவையில் அழகான மலர் ஒன்றை சொருகி வைத்துவிட்டுப் போவாள். நான் பேசவில்லை என்றால் அவளும் பேச மாட்டாள். அதனால் நான் எப்படியும் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவளுடன் பேசுவதற்கு விஷயமே இல்லாததால் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அதற்காக யோசித்து வைக்க வேண்டியிருந்தது.
"மஞ்சள் நிறம்தான் உனக்கு பிடிக்குமா? நீயும் மஞ்சள்.. உன் உடையும் மஞ்சள்'
நான்கைந்து நாட்களாக இதை யோசித்து வைத்திருந்து இன்றுதான் அவள் மஞ்சள் உடையில் வந்திருந்ததால் சொன்னேன். சிரித்தாள். ஜென்ம சாபல்யம்.
அவள் ஜீன்ஸ் பேண்டும் களங்கம் இல்லாத மனதோடு கை வைக்காத பனியனும் அணிந்து வந்தாள்.
ஒருமுறை அவள் கம்ப்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக என்னுடைய விரல்கள் அவளுடைய விரல்களோடு பட்டபோது மின்தாக்குதல்போல உணர்ந்தேன்.
அன்று நான் சாரி என்று சொன்னதற்காகச் சிரித்தாள்.
பரவாயில்லை என்றது அந்தச் சிரிப்பு.
"உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்?''
அவள் மூன்று விரலைக் காட்டிவிட்டு ஒருவிரலை உடனே மடித்துவிட்டாள். ""அண்ணனை மிலிட்டரிக்காரர்கள் சுட்டுவிட்டார்கள். இரண்டு தங்கைகள்.. திரிபுராவில் படிக்கிறார்கள். நான்தான் வேலைசெய்து பணம் அனுப்புகிறேன்'' என்றாள் ஆங்கிலத்தில். அவளுடைய தமிழ் உச்சரிப்பில் இருந்த பிழைகளும்கூட அழகாகத்தான் இருந்தன.
"எதற்காக சுட்டார்கள்?''
அவள்கண்கள் அதற்குள் சிவந்து போயிருந்தது. ""என் அண்ணன் நல்லவன். நியாயம் பேசுபவன்'' அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி உள்ளே வரவே எதுவுமே பேசிக் கொள்ளவில்லைபோல துரிதமாக மாற்றிக் கொண்டாள். நான்தான் சுதாரித்துக் கொள்ளமுடியாமல் தடுமாறினேன்.
எம்.டி. அழைப்பதாகச் சொன்னான் பழனிச்சாமி.

ட்டலின் டைரக்டர் கிருஷ்ணதாஸ் உடுப்பிக்காரர். ரோஸ் திரவத்தால் நிரப்பப்பட்ட பலூன் மாதிரி இருந்தது அவருடைய முகம்.
வந்த ஒரு மாதம் கழித்துத்தான் இப்போதுதான் அவரைப் பார்த்துப் பேச முடிந்தது. அவருக்கு பெங்களூரில், மும்பையில், டெல்லியில் என்று ஓட்டல்கள் இருந்தன. பறந்து கொண்டே இருப்பவர்.
"ஏதாவது தெரிந்ததா?'' என்றார்.
கே.ஓ.டி. யில் நடக்கும் ஊழலைச் சொன்னேன்.
கிச்சன் ஆர்டர் டோக்கன். சாப்பிட வருபவர்களிடம் ஆர்டர் எடுப்பவர்கள் இரண்டு கார்பன் காப்பி வைத்து மொத்தம் மூன்று ரசீது தயாரிப்பார்கள். ஒன்று கிச்சனுக்குப் போகும். இன்னொன்று அக்கவுண்ட் டிபார்ட்மெண்டுக்கு இன்னொன்று கஸ்டமருக்கு. பெரும்பாலும் கார்பன் வைக்காமல்தான் ஆர்டர்கள் எடுக்கப்படுகிறது என்றேன். சாப்பிட வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவு பரிமாறப்பட்டுவிடும். அதற்கான பில்லும் கொடுக்கப்படும். ஆனால் சமையல் கூடத்தில் இருக்கும் பில்லும் அக்கவுண்டுக்கு வரும் பில்லும் அதைக்காட்டாது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அதில் இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னேன்.
கிருஷ்ணதாஸ் உஷ்ணமாவது தெரிந்தது. அமைதியாக தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் டை கட்டி ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்த பத்து பதினைந்து பையன்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பையன்கள் டை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். எல்லாம் ஒரே நாளில். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரப்பட்டுவிட்டோமோ, அவசரப்பட்டுவிட்டாரா என்று குழம்பினேன். அடுத்து அவரைச் சந்தித்து வேலையைவிட்டு அவர்களை நீக்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முயன்றேன். எம்.டி. டெல்லி போய்விட்டார் என்றார்கள்.
முதன் முறையாக எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சியதைப் பார்த்தேன். மானேஜர்களின் அச்சம்கூட பாதிக்கவில்லை. ஜூலியா மழையில் நனைந்த பூனைபோல ஒடுங்கிப் போய் என் அறைக்குள் வந்தாள். என்னை நேர் கொண்டு பார்க்கவும்கூட பயந்தாள். அதிகார வர்கத்து ஆசாமிபோல பார்த்தாள். அவளுடைய புன்னகையை கொலை செய்த குற்றம் என்னை உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அதே நாளில் தொழிலாளர் கணக்கெடுப்பு அதிகாரிகள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஓட்டலுக்குப் பெரிய சிக்கல்தான். நிறைய பேர் கணக்கில் வராத தொழிலாளர்கள்தான். பலரும் தினக்கூலி போலத்தான் இருந்தார்கள். நிர்வாக மேலாலாளரைப் பார்த்துவிட்டு, மத்தியான சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டுக் கிளம்ப இருந்த அவர்கள் தொழிலாளர்கள் விஷயத்தில் நியாயமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அன்று இரவே அவர்களுக்கு ஐந்தாவது மாடியில் ரூம் போட்டு கவனித்ததையும் அறிந்தபோது எரிச்சலும் வருத்தமும் அதிகமானது. அன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டவள்... வேண்டாம் அது உண்மையாக இருக்கக் கூடாது.
போதாதா? தொழிலாளர் நலன்கள் மிகச் சிறப்பாகப் பேணப்படுவதாக சான்றிதழ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
நான் என்னுடைய பாûஸ சந்தித்து ஓட்டலில் இப்படியெல்லாம் நடப்பதைச் சொன்னேன். என்னுடைய முதலாளி சென்னையின் முக்கியமான ஆடிட்டர். அவர் பார்வைக்கு பல நிறுவனங்களின் வரவு செலவுகள் வரும். கேரட் வில்லைகளை சுவைத்துக் கொண்டே பதற்றமில்லாமல் ராட்சஷத்தனமாக வேலை பார்ப்பார்.
நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, சிறிய ஏப்பத்தோடு ""நம்ம வேலையே எல்லா ஊழலையும் நேர்மையாக செய்ய வைப்பதுதான்'' என்றார்.
"மிகக் குறைந்த சம்பளத்துக்குப் பெண்களை வேலை வாங்குவதோடு எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறார்கள். பாவம் அந்த வெளியூர் பெண்கள்.. நம்மால் எதுவுமே செய்ய முடியாதா?''
ஆடிட்டர் செல்போனில் யாருக்கோ போன் போடுவதில் தீவிரமாக இருந்தார். அவருடைய அலட்சியம் என்னை மேலும் குரலை உயர்த்த வைத்துவிட்டது.
"கோடி கோடியாக ஊழல் செய்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் ஊழல் செய்கிறவர்களை வேலையைவிட்டு அனுப்புவது என்ன நியாயம் சார்?''
"உன் வேலையை மட்டும் பார்''ஆடிட்டர் கோபமாக செல்போனை டேபிளின் மீது வீசினார். அது மூடி தனியாக பேட்டரி தனியாக கழன்று தொடர்ந்து வேலைசெய்யுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"ஒரு ஓட்டல் நடத்தணும்னா எவ்வளவு பேருக்குக் கப்பம் கட்டணும் தெரியுமா? எத்தனை அரசியல்வாதி, எத்தனை அதிகாரி, எத்தனை போலீஸ்காரன்... நேர்மையா இருந்தா சைக்கிள்ல ட்ரம் டீ கூட விக்க முடியாது தெரியுமா?.. உன்னை அங்க எதுக்கு அனுப்பினேன்?... முதலாளிக்கு யாரெல்லாம் துரோகம் பண்றான்னு பாக்கச் சொன்னேன்... முதலாளி என்ன துரோகம் பண்றான்னா பாக்கச் சொன்னேன்? நீ என்ன பெரியண்ணாவா... நாட்டையே கண்காணிக்கிறதுக்கு?''
எதிர்பாரா தாக்குதலால் நிலைகுலைந்து போனேன்.
"ஒவ்வொரு மட்டத்தில ஒவ்வொருவிதமா ஊழல் நடந்துகிட்டு இருக்கு. நம்ம எல்லையோட நாம நின்னுடணும்.. தொடர்ந்து போய்க்கிட்டே இருந்தா அது அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் போகும்.. முடியுமா?'' அறிவுரை போல சொன்னார்.
நான் பொறுமையாக டேபிளில் கிடந்தவற்றை ஒன்று சேர்த்து அவரிடம் கொடுத்துவிட்டு மெத்தென்று அடியெடுத்து வைத்து வெளியேறினேன். "செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என சம்பந்தமில்லாமல் திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்தது.
ஒரு ஓட்டல் நிர்வாகம் உலகையே புரிய வைத்துவிட்ட ஞானோதயம். அவரவர் தரப்பில் குற்றங்களும் அதற்கான நியாயங்களும் கற்பிக்கப்பட்டன.
கன்னிமரா நூலகத்துக்கு எதிரே பைக்கை நிறுத்தி இரண்டு "வில்ûஸ' ஒரே நடையில் புகைத்துவிட்டுக் கிளம்ப இருந்த நேரத்தில் ஜூலியா அவர்கள் ஊர் பையனோடு வருவதைப் பார்த்தேன்.
"அண்ணனை எதற்காகக் கொன்றார்கள்' கேள்வி அப்படியே உறைந்துபோய் இருந்தது மனத்தில்.
பையன் தன் ஒல்லியான கால்களுக்குக் கச்சிதமாக ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தான். ஜூலியா என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அதைத் தவறவிடவில்லை. அவனைக்காட்டி, "நான் மணக்க இருப்பவர்.. என் அண்ணனோட நண்பர்' என்றாள்.
இருவர் மீதும் ஒரே நேரத்தில் பரிதாபம் ஏற்பட்டு, வேகமாக அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அவன் என்னோடு கைகுலுக்க தயாராகியிருந்தான்.

தினமணி தீபாவளி மலர்-2011- இதழில் வெளியான சிறுகதை

வயசு

சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு
வினோதமாக இருந்தது.
விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு செருப்பு போடாமல் இருந்தான். பீட்டர் எங்கள் வங்கியின் அட்டண்டர். குழந்தைக்கு ஜுரம் வந்தால் தர்காவுக்குப் போய் தண்ணீர் தெளித்துக் கொண்டு வருகிற பழக்கமும் அவனுக்கு இருந்தது. அவனுடைய சர்வமத நல்லிணக்கத்தைக் கண்டு பூரிக்க முடியாதபடி அவனுடைய செருப்பு போடாத கால் என் கவனம் பற்றிக் கொண்டது.
எனக்கு மாணிக்கம் ஞாபகத்துக்கு வந்துவிட்டான். வாழ்நாள் முழுதும் ஒரு கேள்விக்குறியாக மனதில் தங்கிவிட்டவன். திருமணத்தன்று காசியாத்திரை செல்லும் சடங்கின்போதும்கூட மாணிக்கம் நினைவுக்கு வந்துவிட்டுப் போனதுகூட கல்யாணமாகி இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனபின்பும் மறக்கவில்லை. சரண்யாவின் தம்பி என் கால்களைக் கழுவி மஞ்சள், குங்குமமிட்டு புதுச் செருப்பை மாட்டிவிட்டு கையில் குடையைக் கொடுத்தான். செருப்பை மாட்டிய தருணத்தில் மூளையில் ஏதோ ஒரு பகுதியில் மின்னல் போல மின்னிவிட்டுப் போனான். இப்போது பீட்டரைப் பார்த்தபோது மின்னியது போல.
மாணிக்கத்துக்குப் பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு. ஆனால் அவன் என்னுடன்
பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த என் வீட்டுக்கு வருவான். என்னை வந்து அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்துக்குச் செல்வான். மாலையிலும் என்னை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போவான். அவ்வளவு பிரியமா என்ற கேள்வி இன்னேரம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். என் மீது அவனுக்குப் பிரியம் இருந்தது உண்மைதான். அவனுடைய இந்தச் சுற்றுப் பயணத்துக்கு வேறொரு முக்கியமான காரணம் இருந்தது, என் செருப்பு.
முதல் முறை வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தபோதே செருப்பு போட்டு நடப்பவர்கள் பாதங்கள் மெத்தென்று இருக்கும் என்று பேசிக் கொண்டு வந்தான். தனக்கும் செருப்பு போட்டுக் கொண்டு நடந்து செல்வதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகச் சொன்னான். அவனுடைய அபிப்ராயத்தை அவன் சொல்லிக் கொண்டுவருகிறான் என்பதாகத்தான் என் பிஞ்சு மனம் அப்போது நினைத்திருக்கக் கூடும். அன்றைய தினம் என் காலில் இருந்த செருப்பையும் அவனுடைய வெறும்காலையும் திரும்பத் திரும்ப ஒப்பிட்டுவிட்டு வேறொன்றும் சொல்லாமல் போய்விட்டான்.
அது அவனுடைய ஆசையோ அபிப்ராயமோ இல்லை; விண்ணப்பம். இரண்டாவது நாளில்
மாணிக்கம் நன்றாகப் புரிகிறமாதிரியே சொன்னான்: "உன் செருப்பைத் தாடா. எனக்கு செருப்பு போட்டு நடக்கணும்னு ரொம்ப ஆசைடா''
அதுவரை என்னிடம் யாரும் செருப்பை கடனாகக் கேட்டதில்லை. ஒரு நான்காம் வகுப்பு மாணவனிடம் வேறு எந்தக் கடனைத்தான் கேட்டிருக்கப் போகிறார்கள்?
ஞாபகத்தில் அது ஒருவேளை முதல் கடனாகவும் இருக்கலாம். யாராவது கடன் கேட்டால் இப்போதும் தவிர்க்க முடியாமல் தவிப்பதுபோலவே அப்போதும் தவித்துப் போனேன். மாணிக்கத்தின் கண்களில் நான் ஒரு பரிதாபத்தை உணர்ந்திருக்க வேண்டும். நட்ட நடு மார்க்கெட் சாலையில் செருப்பைக் கழற்றிவிட்டு தரையில் நின்றேன். அது சொத சொதவென ஈரமான தரையாக இருந்தது.
ஆரம்பத்தில் காலை வைக்கக் கூச்சமாக இருந்தது. மாணிக்கம் கொஞ்ச தூரம் செருப்பு போட்டு நடந்துவிட்டு செருப்பைத் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன்.


பள்ளிக்கு அருகே வந்த பிறகு தந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அவன் தரவில்லை. உள்ளே நுழைந்ததும் பிரேயருக்கு கிரவுண்டுக்குப் போக வேண்டும். அப்போதும் தரவில்லை. மீண்டும் வகுப்பில் வந்து அமர்ந்தபோதும் தரவில்லை.
எப்போது தரப்போகிறான் என்ற யோசனை படிப்பில் சிந்தனையைச் செலுத்தவிடாமல் இம்சிக்க ஆரம்பித்துவிட்டது.
இடையில் ரீஸஸ் பெல் அடித்தபோதும் மத்தியானம் சாப்பாட்டு மணி அடித்தபோதும் அவன் செருப்பு சரசரக்க என் முன்னால் நடந்து கொண்டே இருந்தான்.
என்றுமில்லாத அளவுக்கு நடப்பது மாதிரி இருந்தது. எனக்கு செருப்பைத் திருப்பிக் கேட்பதில் அப்படி என்ன தயக்கமோ.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய திருப்பிக் கேட்கவில்லை. எப்போதாவது நான் அவனையே கவனிக்கிற எண்ணம் மோலோங்கிவிட்டால் ஒருதரம் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்துவான். செருப்பு உன்னுடையதுதான்.. எனக்கு ஞாபகம் இருக்கிறது என்ற அர்த்தம் அதில் புதைந்திருக்கும்.
மாலை வீட்டுக்குப் போவதற்கான நீண்ட மணியும் அடித்தாகிவிட்டது. அப்போது அவன் நிச்சயம் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. செருப்பை அணிந்து கொண்டிருப்பதில் அவனுக்கு இருக்கும் ஆசையெல்லாம் தீரும் வரை அவன் அதைத் தரமாட்டானோ என்ற பயம் கவ்வியது நினைவிருக்கிறது.
வீட்டுக்குப் போய் செருப்புக்கு என்ன பதில் சொல்வது என்ற அச்சமும் இப்படி ஏமாந்துவிட்டோமே என்ற தன்னிரக்கமும் உலுக்க ஆரம்பித்துவிட்டது.
மாணிக்கம் என்னுடன் என் செருப்பைப் போட்டுக் கொண்டு என் வீடு வரை வந்தான். வீட்டுக்குப் பத்தடி தூரம் இருக்கும்போது தெரு ஓரத்தில் செருப்பைக் கழற்றிவிட்டு அதை என்னை அணிந்து கொள்ளுமாறு சைகையில் சொன்னான். இப்படி ஒருவர் செருப்பை இன்னொருவர் மாற்றிக் கொள்வது வெட்கப்படும்படியாக இருந்தது. நான் அவசரமாக செருப்பைப் போட்டுக் கொண்டேன்.
ஒருவித நிம்மதி மனதில் குடியேறியது. செருப்பு மிகவும் சூடாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. கைக்கு கிடைத்த திருப்தியில் வீட்டை நோக்கி ஓடினேன்.
மறுநாள் காலை பள்ளிக்குப் புறப்படும்போது மாணிக்கம் வந்தபோதே தயக்கம், பயம், லீவு போட்டுவிடலாம் போன்ற மன உணர்வு எல்லாம் சேர்ந்து கொண்டது.
மாணிக்கம் வழக்கத்துக்கு மாறாக உற்சாகமாக இருந்தான். அவன் பார்வை சுவர் ஒரம் கிடந்த செருப்பின் மீதே இருந்தது.
தினமும் மாணிக்கம் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வர ஆரம்பித்தான். தினமும் என் செருப்பின் மீதுதான் அவன் சவாரி செய்தான். எதற்காகவோ அவனுக்குத் தரமறுப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. மறுக்க இயலாதவாறு அவன் என்னைக் கேட்டிருப்பான் என்று நினைக்கிறேன்.
மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை வாங்கிக் கொள்வான். அன்று முழுதும் அவனே போட்டிருப்பான். மாலையில் திருப்பித் தந்துவிடுவான். தெருவில் பிள்ளையார் கோவிலைப் பார்த்தால் நடந்தபடியே புத்தி போட்டுக் கொள்வதுமாதிரி மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை கழற்றிவிடுவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறை செருப்பை அணியும்போதும் "ரொம்ப ஆசைடா'' என்பான். பக்கத்துவீட்டு மாமா நெய் தோசையும் துவையலும் சாப்பிடும்போது கண்களில் வெளிப்படுத்தும் பிறவிப் பயனை மாணிக்கத்தின் ஆர்வத்தில் கண்டதை இப்போது ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
வீட்டில் அடம்பிடித்து வாங்கிய செருப்பை இப்படி ஒருவன் அனுபவித்துக் கொண்டிருப்பதை என் பிஞ்சு நெஞ்சம் எப்படித்தான் தாங்கிக் கொண்டதோ?
கார்த்திகேயன் "உன் செருப்பைக் கேட்டு வாங்குடா' என்று ஆவேசப்பட்டான். அவனுக்கு நான் படும்பாடு நன்றாகத் தெரிந்திருந்தது.
"எப்படி கேக்கறதுன்னு தெரியலை''
"நான் கேட்டு வாங்கித் தரட்டா?''
"வேணாம்.. வேணாம்.. இருக்கட்டும்''
கார்த்திகேயன் ஒரு லூஸýபையனா இவன் என்பதாக என்னைப் பார்த்தான்.
இப்படியாக இது தினசரி நிகழ்ச்சியாகிவிட்டது.
ஒருவாரம் போனதும் நான் துணிச்சலாக "நீ ஏன் உனக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொள்ளக்கூடாது?'' எனக் கேட்டேன்.
"நானா?'' இப்படி கேட்டுவிட்டு, கொஞ்ச தூரம் மெüனமாக வந்தான். என் கேள்வியில் ஏதோ பிழை இருந்துவிட்டது போல நானும் பேசாமல் நடந்துவந்தேன்.
"எனக்கு அப்பா இல்லைடா. அம்மாதான் வீட்டு வேலை செஞ்சி காப்பாத்தறாங்க. இதையெல்லாம் வாங்கித் தரமாட்டாங்க'' தெரு முடிவுக்கு வந்ததும் இப்படி முடித்தான்.
நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லா பையன்களுக்குமே அப்பா இருந்தார்கள்.
அம்மா மட்டும் உள்ள வீட்டை நான் அறியாதவனாக இருந்தேன். மாணிக்கம் இதைச் சொன்னபோது வருத்தப்படவும்கூட தெரியவில்லை. செருப்பை அவனே அணிந்து வரட்டும் என்று விட்டுவிட்டேன்.
அதன் பிறகு அந்தச் செருப்பு, என் பாத அழுத்தத்துக்குப் பொருந்தாத இடத்தில் குழியாகி யாருடைய டவுசரையோ போட்டுக் கொண்டிருப்பது மாதிரி ஆகிவிட்ட நேரத்தில் அவன் வேறு வீட்டுக்கு மாறிப் போய்விட்டான்.
பள்ளிக்கூடமும் மாறிவிட்டான். இருந்தாலும் செருப்புப் பள்ளம் ஆறாத வடுவாக எனக்குள் தங்கிவிட்டது.
பரதன் பாதரட்சையைக் காட்டுக்கு வந்து பெற்றுச் சென்றுவிட்டான் என்ற போது ராமன் காட்டில் செருப்பில்லாமல் எப்படி அவதிப்பட்டிருப்பான் என ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் மாணிக்கம் உருவில் பரதன் தோன்றி மறைந்தான்.
மாணிக்கம் ஏறத்தாழ இரண்டு வருஷம் என் செருப்பின் மீது இருந்தான் என்பதோடு அவன் நினைவு செருப்போடு சேர்ந்து போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

அதன் பிறகு அவனைப் பல வருடங்களுக்குப் பார்க்கவேயில்லை. குடும்பத்தோடு படம் பார்க்கப் போயிருந்தபோது தியேட்டரில் அவனைப் பார்க்க முடிந்தது. அவனும் அவனுடைய மனைவி, குழந்தையுடன் வந்திருந்தான்.
அவனுடைய குழந்தை செருப்பு போட்டிருக்கிறதா என்று அவசரமாகப் பார்த்தேன். என் வன்மத்தை அவன் உணர்ந்து கொள்வானோவென சட்டென்று சுதாரித்ததை அவன்
பார்த்துவிட்டான்.
"எப்படி போகுது லைஃப்?'' இயல்பாக பேச்சைத் துவங்கினேன். ஆனால் அது செயற்கையாக இருந்தது.
"செருப்பு கம்பெனில சூப்பர்வைஸரா வேலை பாக்கறேன். ஜெயிலுக்குப் போய் வந்ததில அந்தத் தொழிலையாவது ஒழுங்கா கத்துக்குனு வந்தேன்''
"ஜெயிலுக்கா?'' பதறியபடி கேட்டேன். அவன் மெதுவாக தெரிவித்ததை என்னையும் அறியாமல் போட்டு உடைத்துவிட்டேன். என்னுடைய நண்பர்களில் உறவினர்களில்
யாருமே ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் இல்லை. ஜெயிலை பஸ்ஸில் போகும் போது
பார்த்ததோடு சரி. அவனை புதிய ஜீவராசி போல எதிர் கொள்ளும் பிரமிப்பு என்னிடம் இருந்தது.
"நிஜமாவே தெரியாதா?'' என்னை ஊடுருவிப் பார்த்தான். எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்டான்.
"சரி நம்பர் குடு. போன்ல சொல்றேன்''

அவன் சொன்னது எனக்கு ஒரு காட்சியாக பதிவாகியிருந்தது.
துணைப்பாடப் புத்தகத்தை மறந்து வைத்துவிட்டிருந்ததால் அன்றைக்கு மத்தியானம் புத்தகத்தை எடுத்துச் செல்ல வீட்டுக்கு வந்திருக்கிறான் மாணிக்கம்.
வீட்டு வாசலில் ஒரு ஜோடி செருப்பு இருந்திருக்கிறது. அது ஆண்கள் அணியும் செருப்பு. கதவு தாழிடப்பட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான் மாணிக்கம். கொஞ்ச நேரத்தில் கதவு திறந்து கொண்டு கணேச மேஸ்திரி வெளியே வந்தார். பையனைப் பார்த்ததும் தடுமாற்றம். அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் வேகமாகப் போய்விட்டார்.
மாணிக்கம் வீட்டுக்குள் போனான். அங்கே அவன் அம்மா.. அவளும் இவனை எதிர்பார்க்காமல் தடுமாறினாள். ஆறாம் வகுப்பு படிக்கும் பையனாக இருந்தாலும் அவனுக்கு இதில் இருக்கும் தவறு புரிந்திருக்கும் என்பதை உணர்ந்திருந்தாள்.எதுவும் பேசாமல் டி.வி.க்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையைமுட்டிக்காலுக்கு மேல் சாய்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்திருக்கிறாள். மாணிக்கம் வேறு எதுவும் விசாரிக்க
வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அடுப்புக்கு மேலே பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டில் காய்கறி நறுக்கும் கத்தி பளபளத்துக்கொண்டிருந்தது. அதை உறுதியாகப் பிடித்துக் கொண்டான்.
அம்மா தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள். கத்தியை கழுத்துக்குக் கீழே சொருகி தீவிரமாக ஒரு இழுப்பு இழுத்தான். குபுக்கென ரத்தம் பீச்சியடித்தது. தலை மட்டும் முட்டிக்காலில் இருந்து நழுவி தொங்கியது.
அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வலியைவிட அதிர்ச்சிதான் அதிகமாகத் தெரிந்ததாக மாணிக்கம் சொன்னான்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் செருப்பு தைக்கக் கற்றுக் கொண்டு வெளியே வந்ததும் ஜெயிலரின் ஆதரவில் செருப்பு கம்பெனி வேலையில் சேர்ந்ததாகவும் சொன்னான்.
அதே கம்பெனியில் வேலை பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்.
எல்லோரிடமும் சொல்வது போல உடனே "ஃபேமலியோட ஒரு தரம் வீட்டுக்கு வாடா' என்று அழைக்க யோசனையாக இருந்தது. அவன் எதை எதிர்பார்க்காமல் மேற்கொண்டு பேசிக் கொண்டு போனான்.
கடைசியாக அவன் சொன்னான்: "ஜெயில்ல இருந்து வந்ததும் கணேச மேஸ்திரி என்னை பார்க்கறதுக்கு வந்தாரு. "உங்க அம்மாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம். பையன் என்ன சொல்வானோன்னு பூங்காவனத்துக்கு யோசனை. நானே கூப்புட்டுப் பேசிப் பாக்கறேன்னு சொல்லியிருந்தேன்... அன்னைக்குத்தான் இந்தமாரி ஆய்டுச்சி'ன்னு சொன்னாரு.'' மாணிக்கம் அதற்கு மேல் பேச முடியாமல் அழுதான்.
நான் ரிஸீவரை காதில் வைத்துக் கொண்டு அவன் மீண்டும் பேசும் வரை பொறுமையாக
இருந்தேன்.
"அம்மாவுக்கு ஒரு ஒடம்பும் மனசும் இருந்தது தெரியாம போச்சுடா.. அந்த வயசுல தெரியல. இந்த வயசுல தெரியுது.''
"ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு பாடம். பத்தாங்கிளாஸ் பாடத்தை ரெண்டாங்கிளாஸ்ல படிக்க முடியுமா? கவலைப்படாதே மனச சந்தோஷமா வெச்சிக்கோ'' என்றேன்.
"இந்தமாதிரி அவசரப்பட்டு எவ்வளவு தப்பு பண்ணிட்டமோன்னு இருக்குடா... நீ ரொம்ப பொறுமைசாலிடா'' சிறிய கனைப்புக்குப் பிறகு பெருமையாகச் சொன்னான்.

கல்கி தீபாவளி மலர் 2011

சனி, அக்டோபர் 08, 2011

விகடன் செய்தித்துளி!

அடுத்து வெளிவர இருக்கும் ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து விகடன் வார இதழில் வெளிவந்திருக்கும் செய்திக்குறிப்பு.




வியாழன், அக்டோபர் 06, 2011

வேலைவெட்டி இல்லாத ஹீரோக்கள்!


"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா. "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

என்ன ஆனார்கள் இவர்கள்?


தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்களைத் தந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள், காதல் சித்திரங்களைப் படைத்திருக்கிறார்கள்... ஆனால் அப்படிப் படம் எடுத்த பெரும்பாலோரின் சொந்த வாழ்க்கைகள் என்னவோ கண்ணீர் காவியங்களாகத்தான் முடிந்திருக்கின்றன.
1916 -ஆம் ஆண்டு "கீசகவதம்' என்ற படத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்ற தமிழர். அவருடைய ஸ்டூடியோ எரிந்து போனதால் மகத்தான நஷ்டத்துக்கு ஆளானவர். முதல் படத்திலிருந்தே நஷ்டம் ஆரம்பித்திருந்தாலும் கடந்த 90 ஆண்டுகளில் சுமார் ஆறாயிரம் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கின்றன என்பதுதான் இந்த மாய உலகின் சுவாரஸ்யமான சூதாட்டத்தின் வெற்றி.
இதில் ஐந்தாயிரம் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் இந்தக் கட்டுரை அந்தப் படங்களைத் தயாரித்தவர்கள் பற்றியதல்ல. சுமார் ஆயிரம் மகத்தான வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பற்றியது. சூப்பர் ஹிட் படங்கள் தந்த பலரின் இறுதி வாழ்க்கையும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை என்பதுதான் சினிமா தரும் வரலாறு.
அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளிவபரத்தை இந்தத் தலைமுறையினரின் நினைவுக்கு எட்டிய சில தயாரிப்பாளர்களை வைத்தே கணித்துவிடமுடியும்.
தமிழ் சினிமாவின் புதிய அலையாகக் கொண்டாடப்படும் பாரதிராஜா காலத்திலிருந்தே இதைப் பார்க்கலாம்.
"பதினாறு வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "கன்னிப் பருவத்திலே' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. அவர் படங்களில் நடித்த ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் இன்றும் பிரபலமாக இருக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜாவை சினிமா சரித்திரம் பொன்னேட்டில் குறித்துவைத்திருக்கிறது... ஆனால், இவர்களுக்கெல்லாம் திருப்புமுனை தந்த எஸ்.ஏ. ராஜ்கண்ணு?


நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடிப்பில் "மகாநதி' படத்தைத் தயாரித்தார். நதி அவரை கரையேறும் வழியைக் காட்டவில்லை. அதற்குப் பிறகு கடைசியாக சூர்யாவை வைத்து பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்குப் பூஜை போட்டார். ஸ்டூடியோ வாசலில் ஒரு யானை நின்றிருந்தது. விழாவுக்கு வரும் விருந்தினர் ஒவ்வொருவரையும் யானை மீது ஏற்றி வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரைக்கும் சுமந்து சென்று இறக்கிவிட்டனர். அந்தப் படம் பூஜையோடு நின்று போனது. கடைசி காசையும் ஆனைக்கே செலவழித்துவிட்டு அமைதியாகிவிட்டார். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதைத்தானோ?
தம்மை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற அக்கறையில் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவுக்கு சில காலம் ராடன் டி.வி.யில் ஒரு பொறுப்பு கொடுத்து சம்பளமும் கொடுத்தார் ராதிகா. வயோதிகம்.. தம் மகள்களின் வாழ்க்கை என காலம் அவரைச் சுழற்றியடித்தது.
அமைதியை மட்டுமே அவசரத் தேவையாக ஆகிப் போனது. பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேஷ் போன்ற சில அவருடைய அறிமுகங்கள் உதவியோடு செங்கல்பட்டுக்குத் தெற்கே தற்போது ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராஜ்கண்ணு.


விஜயகாந்துக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கும் வெளிச்சம் தந்த படம் "சட்டம் ஒரு இருட்டறை'. தயாரித்தவர் வடலூரான் கம்பைன்ஸ் சிதம்பரம். "சாதிக்கொரு நீதி', "நீறு பூத்த நெருப்பு' என்று சமூகநீதி பேசிய அவருடைய படங்கள் சமுதாயத்தில் வாழ நிதி தரவில்லை. தொழிற்சங்கத் தலைவராக இருந்த அவர், தாம் தலைவராக இருந்த தொழிலாளிகளின் நலனுக்காக ஒரு திரைப்படம் எடுக்க விரும்பினார். நிறைய பேரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் படம் எடுப்பதற்கு அவர்கள் தயவுமட்டும் போதாதே... பணம் வேண்டுமே.. கடைசி வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை.

"பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் தந்த படம். நடிகர் மோகன் தன் கையில் மைக் வைத்திருந்தாலே போதும் படம் நூறுநாட்கள் ஓடும் என்று பேச வைத்தது. கோவைத் தம்பி தயாரித்த அந்தப் படம் அதுவரை இசையமைப்பாளர்கள் என்றால் போஸ்டரின் கடைசியில் டைரக்டர் பெயருக்குக் கீழே இடம் பெற்றுவந்த சிஸ்டத்தை மாற்றி போஸ்டரே இசையமைப்பாளர்தான் என இளையராஜாவை முன்னிலைப்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தியது. "இளமைக் காலங்கள்', "நான்பாடும் பாடல்', "இதயக்கோயில்' போன்றவை ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் போன்றவர்களோடு மணிரத்னத்தையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.
"ஆயிரம் பூக்கள் மலரட்டும்', "மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களுக்குப் பிறகு திரைப்படங்கள் அவருக்கு லாபத்தைத் தரவில்லை. மீண்டும் அவருடைய பழைய அரசியல் வாழ்க்கைதான் அவருக்கு ஆதரவாக அமைந்தது.
தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னீஷியன்கள் பிரபலமாக இருப்பதும் படத்தைத் தயாரித்த அவர்கள் காணாமல் போவதும் சினிமா சரித்திரத்தில் தொன்று தொட்டு இருக்கும் சாபக்கேடுதான்.


"சூரியன்', "ஜென்டில்மேன்', "காதலன்' போன்ற படங்களுக்குப் பிறகு ஸ்டார் தயாரிப்பாளராக மாறினார் கே.டி. குஞ்சுமோன். தியேட்டர் வாசலில் தயாரிப்பாளருக்கு பேனர் வைக்கப்பட்டது இவருடைய படங்களுக்காகத்தான் இருக்கும். வெள்ளை பேண்ட, வெள்ளை ஷூ அணிந்து கும்பிட்டு வரவேற்கும் இவருடைய படம் அப்போது பிரபலம். பவித்ரன், ஷங்கர் போன்ற நட்சத்திர இயக்குநர்கள் இவருடைய அறிமுகங்கள்தான். "சூரியன்' திரைப்படம் சரத்குமாருக்கு நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்திய முக்கியமான திரைப்படமாக இருந்தது. அதே போல் அர்ஜுனுக்கு "ஜென்டில்மேன்'. பிரபுதேவா, நக்மா, ஒளிப்பதிவாளர் ஜீவா போன்றவர்கள் இவருடைய அறிமுகங்களில் முக்கியமானவர்கள்.
"ரட்சகன்' இவருடைய அத்தனை சம்பாத்தியத்தையும் பதம் பார்த்தது. மனம் தளராமல் தன் மகன் எபி குஞ்சுமோனை கதாநாயகனாக்கி "கோடீஸ்வரன்' என்ற படத்தைத் தயாரித்தார். பத்து வருடமாகியும் படம் வெளியாகவே இல்லை. மீண்டும் தன் மகனை வைத்து மூன்றுவருடமாக ஒரு படத்தை முயன்றுவருகிறார். இதுதான் இன்றைய குஞ்சுமோனின் நிலைமை.
"சின்னத்தம்பி' என்ற சூப்பர் ஹிட் படத்தை யாரும் மறக்க முடியாது. பிரபு, குஷ்பு, இயக்குநர் வாசு ஆகியோரின் சினிமா வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட படம். தயாரித்தவர் கே.பி. பிலிம்ஸ் பாலு. அதன் பிறகு அவர் தயாரித்த பல படங்களும் ஏராளமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தன.
1991-ல் வெளியான இந்தத் திரைப்படம் பத்துகோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்ததாகக் கூறப்பட்டது. பி.வாசுவும், பிரபுவும், குஷ்புவும் அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளுக்குச் சின்னத்தம்பி காரணமாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்? அவர் படத் தயாரிப்பில் இறங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

திரைப்படக் கல்லூரியில் இருந்து வருபவர்கள் எல்லாம் ஆர்ட் ஃபிலிம் எடுக்கத்தான் லாயக்கு என்ற பெயரை மாற்றியவர் ஆபாவாணன். "ஊமைவிழிகள்', "செந்தூரப் பூவே', "இணைந்த கைகள்' போன்ற இவருடைய தயாரிப்புகள் மிகுந்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தின. எழுத்தாளர் இந்துமதியுடன் சேர்ந்து "கருப்பு ரோஜாக்கள்' என்ற படத்தைத் தயாரித்தார். பல கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவர் வேறு படம் எதையும் தயாரித்ததாகத் தெரியவில்லை.


"கேப்டன் பிரபாகரன்' என்ற படம் விஜயகாந்த் மறந்தாலும் அவருடைய சினிமா அரசியல் தொண்டர்களாலும் மக்களாலும் மறக்கவே முடியாத படம். நூறு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இன்னமும் அவரை கேப்டன் என்றுதான் எல்லோரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைத் தயாரித்தவர் அவருடைய நண்பர் ராவுத்தர். ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்றால் திரையுலகில் அத்தனை மரியாதை. புலன் விசாரணை என்ற திரைப்படம் மூலம் ஆர்.கே.செல்வமணியை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர். நடிகர் மன்சூரலிகானும் இவருடைய அறிமுகமே.
விஜயகாந்திடம் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரே நாளில் அதிரடியாக ஐந்து படங்களுக்குப் பூஜை போட்டார். அவற்றில் ஒன்றோ, இரண்டோ வந்ததும் தெரியாமல் போயின. சில பாதியில் நின்றன. அடுத்து "புலன்விசாரணை-2' என்ற தலைப்பில் பிரசாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பித்தார். அதுவும் பாதியில் நின்றது. தயாரித்த படங்களைவிட தயாரித்துப் பாதியில் நின்ற படங்களின் பட்டியல் அதிகமானதுதான் மிச்சம். கடந்த பத்தாண்டுகளாக இவர் படத் தயாரிப்பு எதிலும் ஈடுபடவில்லை.

எண்பதுகளில் "பாலைவன ரோஜாக்கள்' படம் நட்பையும் காதலையும் சரிவிகிதத்தில் தந்தபடம். ஆண்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணும் நட்போடு பழகும்பாணி கதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது இது. சந்திரசேகர், சுகாசினி திரைவாழ்க்கையில் நட்சத்திர புள்ளிகளை உயர்த்திய படம். தயாரித்தவர் ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு. "ராஜாங்கம்' படத்தில் சந்திரசேகரை கதாநாயகனாக்கி சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருப்பது போல அண்ணாசாலையில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட்-அவுட்டை யாரும் மறந்திருக்க முடியாது.
அதன் பிறகு 'லாட்டரி டிக்கெட்' போன்ற சில படங்களை எடுத்தார். இறுதியில் தன் மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கினார். அந்தப் படம் ரிலீஸ் ஆனதாகத் தெரியவில்லை.

விஜயசாந்தியின் மேக்-அப் மேன் பதவியில் இருந்து அவருக்கு மேனேஜரானவர் ஏ.எம்.ரத்னம். பணத்தைத் தண்ணீராக செலவு செய்வதில் இவர் குஞ்சுமோனுக்கு நேர் மூத்தவர். "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' விஜயசாந்தியை ஆக்ஷன் கதாநாயகியாக்கி ஹீரோக்களுக்கு நிகரான மகத்துவத்தை ஏற்படுத்தியது. "இந்தியன்', "தூள்', "கில்லி', "குஷி', "ரன்' போன்ற இவருடைய திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் உற்சாகத்தைப் பாய்ச்சியவை. ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, தரணி, லிங்குசாமி ஆகியோரின் இயக்குநர் கனவுகளை நூறு சதவீதம் நிறைவேற்றித் தருகிற தயாரிப்பாளராக இருந்தார். இவருக்கும் குஞ்சுமோனுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. இவரும் தம் மகனை ஹீரோவாக்க நினைத்ததோடு, இன்னொரு மகனை இயக்குநராக்கவும் முடிவு செய்தார். ஒவ்வொரு மகனுக்கும் தலா ஒரு கோடி முதலீட்டில் படம் எடுத்தார். எத்தனையோ ஹீரோக்களையும் இயக்குநர்களையும் உருவாக்கிய இவர், தம் மகன்களை ஜெயிக்க வைக்க முடியாமல் போனது காலத்தின் கோலம்தான்.




பாலாவுக்கு பெயர் வாங்கித் தந்த "சேது', "நந்தா', "பிதாமகன்' படங்களைத் தயாரித்தவர்கள் இப்போது என்ன ஆனார்கள்? அத்தனை பெரிய வெற்றிப் படங்களுக்குப் பின் அவர்கள் ஏன் காணாமல் போனார்கள்?
மேற்படி பட்டியலில் சொல்லப்பட்டவர்கள் சில சோற்றுப் பதங்கள்தான்.
நினைவில் நிற்கும் இந்தப் படங்களைத் தந்த இவர்களில் பலர் எங்கே இருக்கிறார்கள் என்றே யாருக்கும் தெரியாது. சிலரோ சினிமாவே வேண்டாம் என்று ஊரைப் பார்க்கப் போய்விட்டார்கள். அந்தப் படங்களில் பணியாற்றிய ஹீரோக்களும் இயக்குநர்களும்தான் ரத்த சாட்சியாக இப்போதும் இருக்கிறார்கள்.

பெரிய வெற்றிப்படங்கள் தந்தவர்களின் நிலைமையே இப்படியிருப்பின், தோல்விப்படங்களைக் கொடுத்து அறிமுகமான தயாரிப்பாளர்களின் நிலைமை? ஊரில் நிலபுலன்களை விற்று செல்லுலாய்ட் பிலிம் சுருள்களாகச் சுருட்டி வைத்திருக்கும் அவர்களில் சிலர் பரிதாபத்துக்குரிய பெரியவராக உங்கள் கண்களில் சிக்கலாம். சினிமாவுக்குப் போகிற அவசரத்தில் அவர்களை "ஓரமா போ பெருசு' என்றும் நீங்கள் சொல்லியிருக்கக் கூடும்.
- தமிழ்மகன்
படங்கள் உதவி: ஞானம்

16-30 செப்டம்பர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

புதன், அக்டோபர் 05, 2011

உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு!


தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒருவரின் பெயர் உண்டென்றால் அது கே.பி. சினிமா அடைமொழியோடு சொல்வதென்றால் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்.
நூறு அசாதாரணமான திரைப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நையாண்டி, நகைச்சுவை, சமூக சித்திரம், அரசியல், பெண்ணியம் என எல்லா கதைகளையும் தொட்டு எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர். அவருக்குப் "பால்கே விருது' வழங்கி கௌரவித்திருப்பதன் மூலம் தமிழையும் தமிழனையும் தமிழர்களையும் இந்திய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. தமிழகத் திரையுலகின் தரத்தை முன்னகர்த்திக் காட்டியிருக்கும் அவரைச் சந்திப்பது என்பது அரை நூற்றாண்டு சினிமா சரித்திரத்தைச் சந்திப்பதற்குச் சமம்.


உங்கள் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "அரங்கேற்றம்'. திடீரென்று அப்படியொரு புரட்சிகரமான படத்தை எடுக்க வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைத்தது எது?
அந்தக் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று ஓடிக் கொண்டிருந்தேன். விளைவு ஹார்ட் அட்டாக். ஆறு மாதம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள்.
அந்த ஓய்வில் யோசனை பண்ணியதில் இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கோம்.. இனி என்ன பண்ணப் போகிறோம் என்ற மனத்தின் அலசலில் விளைந்ததுதான் "அரங்கேற்றம்'. கிருஸ்துவுக்கு முன்.. கிருஸ்துவுக்குப் பின் என்பதுபோல ஹார்ட் அட்டாக்குக்கு முன் ஹார்ட் அட்டாக்குக்குப் பின் என என் படங்களைப் பிரித்துவிடலாம்.
அதற்கு முன்னாடி 15, 20 படங்கள் எடுத்திருந்தேன். ஹார்ட் அட்டாக் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது. என்ன மாதிரியான படங்களை எடுக்கப் போகிறோம் என்பதற்கும் கூட "அரங்கேற்றம்' முன் மாதிரியாக அமைந்துவிட்டது.
இப்போது அரங்கேற்றம் திரைப்படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
"அரங்கேற்றம்' உங்களுக்குத் தெரியும். அது பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு சின்ன வயது. இப்போது கேட்டால் அப்படியொரு படத்தை எடுப்பேனா என்பது சந்தேகம்தான். பிராமண சமுகத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சிரமப்படுவதுதான் கதையின் மையம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை கரையேற்ற முடியாமல் அவதிப்படுவதைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
என் மகள் புஷ்பா ஒரு பேட்டியில் சொல்லும்போது அந்தக் கதை அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஓர் உண்மைச் சம்பவமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.... இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். உண்மைச் சம்பவம் என்று சொல்லவில்லை. இப்போதும் அது உண்மையில் நடந்த சம்பவமா? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.
"அரங்கேற்றம்' திரைப்படத்தை நீங்கள் ஏன் பிராமண சமூகத்தின் பின்புலத்தில் அமைத்திருந்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?
அதைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் தெரிந்த பழக்கமான சமூகத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதானே சரியாக இருக்கும்?
அந்தச் சமூகத்தைப் பற்றித்தான் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, நடை, உடை, பாவனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. 15 -20 ஆண்டுகள் அதிலேயே ஊறி வளர்ந்தவன். என்னுடைய கதையைச் சொல்லுவதற்கு அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எளிமையாக இருந்தன. அதுவுமில்லாமல் எனக்குத் தெரியாத இன்னொரு சமூகத்தைக் கையில் எடுத்து விமர்சிப்பதும் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அந்தக் கதையில் நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதை ஆணித்தரமாகச் சொன்னேன் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு மட்டுமல்ல, அது யாருக்குப் புரிய வேண்டுமோ? அவர்களுக்கும் புரிந்தது. தமிழக அரசும் கூட குடும்பக் கட்டுப்பாட்டை இதைவிட அழுத்தமாக யாரும் சொல்லிவிடமுடியாது என்று பாராட்டி, கெüரவித்தது.
உங்கள் திரைப்படங்கள் அனைத்துமே பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை நெறியையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மைதானா?
'அரங்கேற்றம்' படத்துக்குப் பிறகு "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்' என என் படங்கள் அணிவகுத்தன. ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் பிராமண சமுதாயத்தை மட்டுமே வைத்துப் படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். நான் பிராமண சமுதாயத்தை வைத்து "அரங்கேற்றம்' என்கிற ஒரே ஒரு படம்தான் எடுத்தேன். நான் எடுத்தவை எல்லாமே நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்திய படங்கள்தான். ஆனால் பிராமண சமூகத்தை நடுத்தர வர்க்கத்துடனேயே அடையாளப்படுத்திப் பார்க்கிறார்கள். அதில் நியாயமே இல்லை. "அரங்கேற்றம்' தவிர வேறு எந்தப் படத்திலுமே ஜாதியைப் பற்றிச் சொன்னதே இல்லை.
"அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ஒரு ஜாதிக் கலவரம் நடப்பதாகச் சொல்ல நேர்ந்தபோதுகூட அவர்கள் என்ன ஜாதி என்பதைச் சொல்லவே இல்லை.
"எதிர் நீச்சல்' என்றால் உடனே அது பிராமணக் கதை என்று நினைக்கிறார்கள். அதில் ஒரு குடும்பம்தான் பிராமணக் குடும்பம். ஒரு நாயர் குடும்பம், ஒரு முஸ்லிம் குடும்பம் என்று எட்டுக் குடும்பங்களை அதில் காட்டினேன். பட்டுமாமி கேரக்டர் பேசப்பட்டதால் உடனே அது பிராமணக் கதை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படியில்லை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாகேஷ், முத்துராமன், ஜெமினி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற அடுத்தகட்ட நடிகர்களை வைத்தே படங்களை இயக்கினீர்கள். கதையின் பலத்தில் மட்டுமே மக்களைக் கவர வேண்டிய நெருக்கடி இருந்ததே?
நெருக்கடி என்று சொல்ல முடியாது. அதை என் குறிக்கோளாக வைத்திருந்தேன். நாகேஷ் என் நண்பன். நானும் அவனும் ஒன்றாக வந்தோம். அவனைக் கதாநாயகனாக வைத்து சக்ஸஸ் செய்தவன் நான். ஒரு காமெடியனைக் கதாநாயகனாக வைத்து எந்தப் படமும் வெற்றி பெற்றதில்லை. என்.எஸ்.கே.வை கதாநாயகனாக வைத்து அண்ணா ஒரு படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன் பிறகு யாரும் அப்படி முயற்சி பண்ணதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் நாகேஷைக் கதாநாயகனாக்கினேன்.
நாகேஷைக் கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காகவே "சர்வர் சுந்தரம்' கதை எடுக்கப்பட்டதா, இல்லை அது இயல்பாக அமைந்ததா?
இயல்பாக வந்தது என்று சொல்ல முடியாது. நாகேஷை மனதில் வைத்துத்தான் "சர்வர் சுந்தரம்' நாடகம் எடுக்கப்பட்டது.
அவருடைய உடல் அமைப்புக்கு... அவருடைய உடல் மொழிக்கு ஏற்ப சர்வர் பாத்திரத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அதே போல ஜெமினி என்னை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படங்கள் எடுத்தேன்.
பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் எடுப்பதில்லை என்று நீங்கள் தீர்மானித்திருந்தீர்களா?
அப்படியெல்லாம் இல்லை. தேதி பிரச்னைகள் தராத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதில் கவனமாக இருந்தேன். இந்தக் காட்சிக்குப் பத்து பேர் தேவை என்றால் நான் செட்டுக்குள் போகும்போது அந்தப் பத்துபேரும் இருக்க வேண்டும். இருக்கிற நடிகர்களை வைத்து காட்சிகளை எடுத்துக் கொள்ள எனக்கு முடியாது. இந்த நடிகரை இந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டு இன்னொரு நாள் இன்னொரு நடிகரை அந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுக்கிற சிந்தனைக்கெல்லாம் நான் போகவே இல்லை. இதற்கு சின்ன ஆர்ட்டிஸ்டுகளோ, புது முகங்களோதான் எனக்குச் சரியாக இருந்தார்கள்.
"புன்னகை' படம் தோல்வி அடைந்தது என்பதும், தாங்கள் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை எடுத்தீர்கள் என்பதும் தங்களைத் தளர வைத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நேர் மாறாக அதற்குப் பிறகுதான் நீங்கள் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி "ரிஸ்க்' எடுத்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?
ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு நான் எடுத்த முடிவுகளில் ஒன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது... "அவள் ஒரு தொடர்கதை' படத்துக்கு நடிகர்களை தேர்வு செய்த போது ஒரு படத்தில் தலை காட்டியிருந்தாலும் அவர்களைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். அந்தப் படத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு கமல்ஹாசன். அந்த விகடகவி வேடத்துக்கு எனக்குச் சரியான ஆள் கிடைக்கவில்லை. அந்த வேடத்தை கமலைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் சரியாக இருக்காது என்றும் தோன்றியது. யாரை நம்பி அந்த வேடத்தை நான் ஒப்படைக்க முடியும்? அதனால் அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் புதுமுகங்களாக தேர்வு செய்தேன்.
அந்தப் படத்தில் நடித்த சுஜாதா, ஜெய்கணேஷ், ஸ்ரீப்ரியா எல்லாருமே பின்னாளில் பிரபலமானார்கள்.
நான் தியேட்டரில் இருந்து வந்தவன். தியேட்டரில் ஒழுக்கம் முக்கியம். அதில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஆரம்பித்திலிருந்தே எனக்கு செüகர்யமான நடிகர்களை வைத்து படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். போகப் போக அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது வேறு விஷயம்.
சொல்லப் போனால் அது ஸ்ரீதர் பாணி. அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார். அதைத் தொடர்ந்து நானும் புதுமுகங்களைத் தேட ஆரம்பித்து, பாலசந்தர் படம் என்றால் புதுமுகங்கள் இருப்பார்கள் என்று பேசும் அளவுக்குப் போனது. பாலசந்தர் படம் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்புக்கும் அதுவே காரணமானது. இல்லையென்றால் சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படமாகத்தான் பேசியிருப்பார்கள்.
புது முகங்கள் என்ற போது அவர்களுக்குச் சொல்லித் தர மிகவும் அவகாசம் இருந்தது. முழுமையாகத் தயார் செய்ய முடிந்தது. நூறு சதவீதம் அவர்களைத் தயார் செய்தேன். வெற்றியும் நூற்றுக்கு நூறாக அமைந்தது. அதனால்தான் "அவர்கள்' படத்தில் சுஜாதாவை அனுவாகவும் ரஜினியை ராமநாதனாகவும் மக்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
சிவாஜியை வைத்து "எதிரொலி' படத்தை இயக்கினீர்கள். உங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்?
எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்தை வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை. ரஜினியைக்கூட எஸ்.பி.முத்துராமனையும் கே.எஸ். ரவிகுமாரையும் வைத்துத்தான் இயக்க வைத்தேன்.
ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை முத்துராமன் செய்வதுதான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும். அது படத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
"எதிரொலி'யைப் பொறுத்த வரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது. திரைக்கதையை ரொம்ப ரசித்தார்.
கதையில் சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் முழுக்க தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லை பட்டுக் கொண்டே இருப்பார். அப்ப சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. அவர் போய் தவறு பண்ணிட்டதாக காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா காட்டிட்டாரேன்னு என்னைக் குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது பாலசந்தர் படமாகியிருக்கும். அது சிவாஜி படமாகிவிட்டது. அதிலிருந்து இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன்.
அதனால்தான் எம்.ஜி.ஆரை வைத்துப் படமே இயக்கவில்லையா?
எம்.ஜி.ஆர். என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினார். ஆர்.எம். வீரப்பன் அது பற்றி பேசினார். அவர் கொடுத்த தேதியை நாம் மீறவே முடியாது. அவருக்கான பாடல்கள், காட்சிகள் எல்லாம் வேறு மாதிரி இருக்க வேண்டும். என் பாணி வேறாக இருந்தது. அதுவுமில்லாமல் நான் அப்போதுதான் நாடகத்தில் இருந்து வந்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று படங்கள் கையில் இருந்தன. அவர் கொடுத்த தேதி எனக்குச் சரியாக வரவில்லை. நான் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து கையெடுத்துக் கும்பிட்டு அதைத் தவிர்த்துவிட்டேன். (சிரிக்கிறார்)
அவர் உங்களை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தார். அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனது எப்படி?
என் நாடகத்தைப் பார்த்துத்தான். என்னுடைய "சர்வர் சுந்தரம்', "நாணல்', "மெழுகுவர்த்தி' என என் எல்லா நாடகத்துக்கும் அவர் வந்திருக்கிறார். "மெழுகுவர்த்தி'யைப் படமாக்க வேண்டும் என்று உரிமை வாங்கினார். என்ன காரணத்தினாலோ அது நடக்காமல் போய்விட்டது. இந்தியில் ப்ரான் நடித்த ஒரு படத்தின் உரிமையை வாங்கி அதைத்தான் "தெய்வத்தாய்' என்று படமாக்கினார்கள். அதற்கு என்னைத் திரைக்கதை வசனம் எழுதுவதற்கு எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அது குறித்து ஆர்.எம்.வீரப்பன்தான் என்னிடம் பேசினார்.


நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களுக்கு நீங்கள் கதை தயாரிக்கவில்லை. ஆனால் நீங்கள் இயக்கிய படங்களின் மூலமாகவே நட்சத்திர அந்துஸ்துள்ள நடிகர்கள் உருவானார்கள். கமல், ரஜினி இருவரும் உங்கள் தயாரிப்புகள். அவர்களின் நட்சத்திர பலத்துக்கு ஏற்ப கதையை உருவாக்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டதா?
ஒரு கட்டத்துக்கு மேல அவர்களுக்குப் பண்ணமுடியலைதான். அப்கோர்ஸ்.. கமல் எனக்கு பிரச்னை இல்லை. "தப்புத்தாளங்கள்' படத்தில் பார்த்தீர்கள் என்றால் ஒரே ஒரு காட்சியில் அவர் தாசி வீட்டுக்கு வந்துவிட்டுப் போவதுபோல ஒரு காட்சி. கமல் அதை மகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார். அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினியை வைத்துப் பண்ண முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆக்ஷன் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த ரஜினியை வைத்து "தில்லு முல்லு' என்ற காமெடி படத்தை எடுக்க முடிந்ததே?
ஆமாம். ரஜினிக்கும்கூட அதில் நடிப்பதற்கு யோசனை இருந்தது. "தைரியமா பண்ணுப்பா. நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன். ரசித்து ரசித்துப் பண்ணிய படம். சந்தோஷமாக நடித்தார். அதற்கப்புறம்தான் அவர் படங்களில் முன்பகுதியில் காமெடியாகவும் பின் பாதியில் சீரியஸôகவும் இருப்பது மாதிரி ஒரு ட்ரெண்ட் உருவானது. அண்ணாமலை, முத்து எல்லாம் அந்த டைப் படங்கள்தான். காமெடியில் அவரை ரசிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அது ஒரு பார்முலாவாகவே மாறிவிட்டது.
வித்தியாசமான முயற்சியாக நீங்கள் எடுத்த புன்னகை, நான் அவனில்லை ஆகியவை பெரிய வரவேற்பைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
நான் மிகவும் முன்னாடி செய்துவிட்ட படங்கள் அவை. மக்கள் தயாராவதற்கு முன்னால் வந்துவிட்டதுதான் அவை வரவேற்பைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம். "நான் அவனில்லை' இப்போது ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. இருந்தாலும் நான் அப்போது செய்த ஸ்கிரீன் ப்ளே இல்லை இது. அது வேறு. வெற்றி பெற்றுவிட்டது என்பது வரை சந்தோஷம்தான்.
கல்கி எடுத்தேன். அதில் கணவனால் புறக்கணிக்கப் பட்ட பெண்ணுக்கு ஒரு புதுமைப் பெண் ஒருத்தி ஒரு முடிவெடுக்கிறாள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அன்புக்காக அவள் தன்னைத் தியாகம் செய்கிறாள். அந்தக் கணவனிடமிருந்து ஒரு குழந்தையைப் பெற்று புறக்கணிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணுக்கு அந்தக் குழந்தையைத் தருகிறாள். இப்போது எடுத்தால் அந்தப் படம் பிரமாதமாகப் போகும் என்பது என் நம்பிக்கை. அது ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எடுத்துவிட்ட படம். ஒரு பெண் அப்படி செய்வாளா என்ற பதறினார்கள். சிலர் ஆவேசப்பட்டார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. பலருடைய சிந்தனைகளை மாற்றியிருக்கிறது. வாடகைத் தாய் என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.
ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம்.. என உங்களுக்கு முன்னும் உங்கள் சமகாலத்திலும் பணியாற்றிய பல முக்கியமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவின் தரத்தை முன்னெடுத்துச் சென்ற படங்களாக நீங்கள் கருதுவது எவற்றை?
ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. பாரதிராஜாவின் முதல் படமே பிரமிக்க வைத்த படம்தான். கிழக்குச் சீமையிலே எனக்கு மிகவும் பிடித்தபடம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள், மணிரத்னத்தின் இதயக்கோயில் எந்திரன் என நிறைய சொல்லலாம்.
கறுப்பு வெள்ளைப் படங்களில் இருந்து வண்ணப்படங்களுக்கு மாறிய முக்கியமான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த மாற்றம் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா?
கறுப்பு வெள்ளையில் எடுத்ததுமாதிரி எமோஷனல் காட்சிகள் கலரில் வராது. வண்ணப் படங்களின் காலம் வந்த பின்பும் நான் கறுப்பு வெள்ளையில்தான் பிடிவாதமாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது பிளாக் அண்டு ஒயிட் காலம் என்று பேச ஆரம்பித்த பின்பு வேறு வழியில்லாமல் நானும் கலரில் எடுக்க ஆரம்பித்தேன். நான் முதலில் எடுத்த படம் நான்கு சுவர்கள். அது சரியாகப் போகவில்லை. நல்ல படம் அது.
முதல் கலர் படம் என்பதால் கலர்படம்.. கலர் படம் என்று அதிலேயே நிறைய யோசனை செலவானது. சொல்லப் போனால் வண்ணத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினால் என்னையே நான் இழக்க வேண்டியதாக இருந்தது. இப்பவும் மறுபடி எடுக்கலாம். அப்படிப்பட்ட கதை அது. என்னால் என் சிந்தனையை அதில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது. வண்ணம் வந்த போது ஏற்பட்ட பாதிப்பு என்றால் இதுதான்.
ஆனால் இப்போது மக்கள் கலரில் எடுக்கும் படங்களை விரும்பத் தொடங்கி நிறைய மாற்றங்கள் வந்தாகிவிட்டது. இனிமேல் மறுபடி கறுப்பு வெள்ளைக்குத் திரும்ப முடியாது.
நூற்றுக்கு நூறு எடுத்துக் கொண்டால் அதில் கறுப்பு வெள்ளையிலேயே அத்தனை எமோஷனையும் காட்ட முடிந்தது. கலரில் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அதில் இடம் பெறும் ஐந்து பெண்களுக்கும் ஐந்து பாடல் வைத்திருப்பேன். சிந்தனை அப்படித்தான் போயிருக்கும்.
மேடை நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்... மூன்றிலும் சாதனை படைத்திருந்தாலும் உங்கள் படைப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக இதில் எதைக் கருதுகிறீர்கள்?
நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர் மூன்றுமே மூன்று தனித்தனி கம்பார்ட்மெண்டுகள். நாடக பயிற்சி சினிமாவுக்கு பயன்படும். ஆனால் சினிமாவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். எனக்கே அப்படி வேறு மீடியத்துக்கு மாறும்போது அவகாசம் தேவைப்பட்டது. நாடகத்தின் தாக்கம் என்னிடம் அதிகம் இருந்தது. நாடகம் என்றால் உயிரை விடுவேன். பத்து ஆண்டுகள் நாடகமே உலகம் என்று இருந்தேன். அதனால் அதிலிருந்து சினிமாவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்குள் ஐந்தாறு சினிமாக்களைக் கடந்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னுடைய நாடககங்களையேதான் நான் சினிமாவாக எடுத்தேன். அதனால் எந்த இடத்தில் கைதட்டல் விழும் எந்த இடத்தில் மக்கள் கண்கலங்குவார் என்பது தெரியும். அந்தந்த காட்சிகளை அப்படி அப்படியே வைத்தேன். சினிமாவை ஒத்திகைப் பார்த்துவிட்டு படம் எடுப்பதுமாதிரியான அனுபவம் அது. சினிமாவுக்காக சிந்திக்கும்போது அதை எதிர்பார்க்க முடியாது. அதுதான் வித்தியாசம்.
ஏ.ஜி.எஸ்ஸில் பணியாற்றிய காலங்களிலேயே நாடகம் போட ஆரம்பித்தீர்கள் அல்லவா?
1950-ல் ஏ.ஜி.எஸ்.ஸில் சேர்ந்தேன். 59-லிருந்து நாடகம் போட ஆரம்பித்தேன். 63, 64-ல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஏ.ஜி.எஸ்.ஸில் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த அனந்து என் நாடகங்களைப் பார்த்துவிட்டு என்னுடன் பழக ஆரம்பித்தார். சினிமாவிலும் அந்த நட்பும் பங்களிப்பும் தொடர ஆரம்பித்தது.
வி.குமார், எம்.எஸ். விஸ்வநாதன்... பிறகு இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் என உங்கள் படங்களில் இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் தனித்துவமான அடையாளம் என்று நீங்கள் உணர்ந்தது எதை?
ஒவ்வொருத்தருமே இசை மேதைகள். அவர்களுக்குத் தீனிபோடுவது சாதாரண விஷயமில்லை. என்னுடைய படங்களில் மொத்த டூயட் என்று பார்த்தால் நான்கைந்து பாடல்கள்தான் இருக்கும். மற்றதெல்லாம் சிச்சுவேஷன் பாடல்கள்தான். எல்.ஆர். ஈஸ்வரி ஹைபிட்சில் பாடக்கூடியவர். அவரை காதோடுதான் நான் பாடுவேன் என்று பாட வைத்தது வி.குமார் இசையில்தான். அதே படத்தில் மென்மையான குரலில் பாடக்கூடிய பி.சுசிலாவை நான் சத்தம்போட்டுத்தான் பாடுவேன் என்று ஹை பிட்சில் பாடவைத்தோம். இசையில் அற்புதமான பல முயற்சிகளை நாங்கள் செய்தோம்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் நானும் பணியாற்றிய படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்தனைப் பாடல்களும் காலம்கடந்து நிற்பவை. எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் எனக்குக் கொடுத்த விதவிமான மெட்டுக்களுக்கும் பாடல்களுக்கும் கணக்கே இல்லை. அத்தனை அற்புதமான பாடல்கள். தெய்வம்தந்த வீடு வீதியிருக்கு..., காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி.. என்ன அற்புதமான பாடல்கள்..?
அதுவரை எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் படங்களை இயக்கிய நீங்கள் பிறகு ஏன் திடீரென்று இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தீர்கள்?
"சிந்து பைரவி' படம் வொர்க் பண்ணும்போது இந்தப் படத்தை இளையராஜாவை வைத்து பண்ணப் போகிறேன் என்று எம்.எஸ்.வி.யிடம் சொன்னேன். படத்தில் கர்னாடிக்கோடு ஃபோக் சாங்கும் இருப்பதால் அதற்கு இளையராஜா பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். அவருடைய சம்மதத்தோடுதான் இளையராஜாவிடம் சென்றேன். ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். வைரமுத்துவின் வரிகளில் பாடறியேன் படிப்பறியேன் கிடைத்தது. எல்லாமே சிட்சுவேஷன்தான். குமாரிடம் பணியாற்றியபோதே எம்.எஸ்.வியிடம் போனேன். எம்.எஸ்.வியிடம் இருக்கும்போதே ராஜாவிடம் போனேன். அப்படித்தான் ரஹ்மானிடம் வந்தேன். அதற்கு எந்த விருப்பு வெறுப்பும் காரணமில்லை. கதையைச் செழுமைபடுத்த என்ன தேவையோ அதை நாடிப் போனேன். கதைதான் அதற்கு யார் தேவை என்பதைத் தீர்மானிக்கிறது.
தெலுங்கில் மரோசரித்ரா, இந்தியில் ஏக் துஜே கேலியே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தும் அந்த மொழிப் படங்களில் நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்கவில்லேயே?
ஒரு மனுஷன்தானே? எவ்வளவு பண்ண முடியும்? அதுவுமில்லாமல் பணம் சேர்க்கிற ஆசை என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ் எனக்கு வசதியாக இருந்தது அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.
உங்கள் படங்களில் பல மொழியினரை நடிகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் அவர்கள் எல்லோரும் சொந்தக் குரலில்தான் படத்தில் பேச வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தீர்கள். ரஜினி, சரிதா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அவர்களின் உச்சரிப்புக்காகவே சிலாகிக்கப்பட்டார்கள். இப்போது நடிக்கும் நடிகைகள் பலருக்கும் டப்பிங் கலைஞர்களே குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பெரும்பாலும் என் படத்தில் அதைப் பிடிவாதமாகக் கடைபிடித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்தவர்களுக்கு மட்டும் டப்பிங் வைத்துக் கொண்டேன்.
ரஜினி, கமலிடம் கண்டு வியந்த பல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குருவாக அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?
நூற்றுக்கு நூறு படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லஷ்மியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லஷ்மி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன். அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்.
தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?ஆகாயத்தில் மூன்று குட்டிக்கர்ணம் அடிப்பதற்கும் திரையில் நூறு ரஜினியைக் காட்டுவதற்கும்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போதே யதார்த்தம் போய்விடுகிறது. கிராபிக்ûஸப் பயன்படுத்தி வியக்க வைப்பதற்கான கதைகள் வேறு. அவதார் மாதிரியான விஞ்ஞான புனைகதைகளுக்கும் மாயாஜால படங்களுக்கும் குழந்தைகளுக்கான அனிமேஷன்களுக்கும் அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். யதார்த்த படங்களுக்குத் தேவையில்லை. யதார்த்த கதைகள் என்பவை கேமிரா சொல்லும் கதையாக இருக்க வேண்டுமே தவிர, கம்ப்யூட்டர் சொல்லும் கதையாக இருக்கக் கூடாது. நான் சொல்வதை இன்றைக்கு நிறைய பேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அப்படியானால் நல்ல திரைப்படம் உருவாவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எல்லாம் தேவையில்லை என்கிறீர்களா?
எடிட்டிங், கேமரா தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகள் காலத்தின் கட்டாயம். அவை நிச்சயம் தேவை.
உலகத் தரமான சினிமா என்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்கள் பார்வையில் உலக சினிமா என்றால் என்ன?உலக சினிமா எல்லாமே நல்ல சினிமா இல்லை. நல்ல சினிமாதான் உலக சினிமாவாக இருக்க முடியும். நுணுக்கமாகச் சொல்ல வேண்டியதை நுணுக்கமாகவும் விரிவாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் சொல்வதே நல்ல சினிமாவாக இருக்கமுடியும். ரேவும் அடூர் கோபாலகிருஷ்ணனும் எடுத்தவை உலகத்தரமானவை. ஆனால் அது எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிற படமாக இருக்க வாய்ப்பில்லை.
உலகத்தரம் வாய்ந்த ஜனரஞ்சக சினிமா என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.. அதுதான் என் கருத்தும்.
உங்கள் யூனிட் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கென கேமிராமேன், கதைவிவாதக் குழுவினர் செயல்பட்டனர். குறிப்பாக அனந்து உள்ளிட்டவர்களைப் பற்றி?
வெவ்வேறு காலகட்டங்களில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். முன்னரே சொன்னது மாதிரி இசையமைப்பாளர்கள், கவிஞர்கள்...
ஒளிப்பதிவாளர்களில் லோகநாத் 55 படங்களுக்கு மேல் பணியாற்றினார். அதன் பிறகு அவருடைய அஸிஸ்டெண்ட் ரகுநாதரெட்டி 25 படங்களுக்குப் பணியாற்றினார். சீரியலுக்கும்கூட அவர்தான் செய்கிறார். எடிட்டிங்கில் பார்த்தால் ஆரம்பகாலத்தில் நடராஜ முதலியார் செய்தார். அதற்கப்புறம் என்.ஆர். கிட்டு... அவரால் முடிகிற வரை எனக்கு எடிட்டிங் செய்தார். அவர் என்னைத் தவிர வேறு யாருக்கும் பணியாற்றியதில்லை. அனந்து நாடக உலகத்திலிருந்தே உடன் இருந்தவர். ஆரம்பத்தில் 10-15 படம் தவிர என் எல்லா படத்திலும் இருந்தவர். வசந்த் எடுத்துக் கொண்டால் பதிமூன்று வருஷம் வொர்க் பண்ணியிருக்கிறார். சுரேஷ்கிருஷ்ணா ஒன்பது வருஷம்.. சரண் ஏழெட்டு வருஷம்.. இடையில் வந்துவிட்டுப் போனவர்கள் மிகவும் குறைவு.
கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்திய அரசின் மிக உயர்ந்த திரைத்துறை சாதனையாளர் விருதான பால்கே விருது பெற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் திரைத்துறையினருக்கு உங்கள் அறிவுரை?அறிவுரை எல்லாம் பெரிய வார்த்தை... ஒரே ஒரு விஷயம்தான்.. அர்ப்பணிப்புதான் முக்கியம். செட்டுக்கு வந்துவிட்டால் சினிமாவைத் தவிர எந்த சிந்தனையும் இருக்காது. அர்ப்பணிப்புதான் அடிப்படை.. அப்புறம் உழைப்பு.. அப்புறம் திறமை... திறமையில்லாம அர்ப்பணிப்பு மட்டும் இருந்து பிரயோஜனமில்லையே..
-தமிழ்மகன்
படம்: ப.ராதாகிருஷ்ணன்

சினிமா எக்ஸிபிரஸ் இதழில் செப்.16-31 இதழில் வெளியான பேட்டி

LinkWithin

Blog Widget by LinkWithin