வியாழன், மார்ச் 03, 2011

பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்!

தமிழ்ஸ்டுடியோ.காம் -இல் நூல் அறிமுகம்




அரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.

வாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள்? யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..?

பத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.

கொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.

சில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்?

வெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.

குல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

நேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார்? என இதில் ஒரு பகுதி வருகிறது.

தாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.

நேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.

அடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)

குல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.

இதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.

மறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.

சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அவரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.

ஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.

செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:

நேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.

அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.

குல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கும் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.

பதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.

ஸ்கூப்
குல்தீப் நய்யார்,

மதுரை பிரஸ்,
60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 33.
மின்னஞ்சல்: maduraipress@gmail.com

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin