சனி, மார்ச் 12, 2011
சுஜாதா சிருஷ்டி -3
"எல்லாத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கு பாஸ்'' வசந்த் இப்படி சொன்னதும் பிரியா தன் இரண்டு பக்கங்களை அவசரமாக சரிபார்த்துக் கொண்டாள். வசந்துக்கே தான் சிலேடையாக சொல்லிவிட்டோம் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்தது.
"அந்தக் கதையில் அவர் விஞ்ஞானம் என்று என்னதான் சொல்ல வருகிறார்?''
"இந்த மாதிரி மொட்டையாகக் கேட்காதே''
"ஹிப்பியாவே கேட்கிறேன். சயின்ஸ் கதையென்றால் இன்றிலிருந்து ஒரு ஐநூறு வருஷம் தள்ளி நடக்க வேண்டும். வேற மாதிரி பேச வேண்டும்... வேற மாதிரி சாப்பாடு சாப்பிட வேண்டும்... வேறு கிரகங்களுக்குப் போக வேண்டும்.. அவ்வளவுதானா?''
"நீ சொன்னதெல்லாம் சப்போர்ட்டுக்கு. உண்மையில் ஒரு எதிர்காலம் அதில் தெரிந்தால் கதைக்கு வலு சேர்க்கும். வருங்காலத்தை நம்பகமான முறையில் யூகிக்கிற திறமையிருக்க வேண்டும். தமிழாசிரியர் கதைக்கே வருவோம். அது எதிர்காலத்தில் இருக்கிறது. அப்போது தமிழ் டெலிகிராம்போல போயிருக்கிறது...''
"இது நம்பிக்கை வறட்சிதானே?''
"கடந்த இரண்டாயிரம் வருஷத்தில் மொழி இந்தளவுக்கு மாறியிருக்கும்போது அது அப்படி மாறிவிடும் என்ற அபாயத்தைச் சொல்வது நம்பிக்கை வறட்சியில்லை... எச்சரிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது இப்போதே இன்னா டமாலா? புட்டுக்சா? லவ் யு டா டைப்பில்தான் பேசுகிறார்கள்.. அவர் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லும்போதுதான் அது கதையாக ரசிக்கத் தூண்டுகிறது. நீங்கள் சயின்ஸ் பிக்ஸன் ஏதாவது படிச்சிருக்கீங்களா?''
பிரியா இல்லை என்பதாக தலையாட்டிவிட்டு, "ஈ.டி., ஸ்டார் வார்ஸ், டெர்மினேட்டர், அவதார் எல்லாம் பார்த்திருக்கிறேன்'' என்றாள்.
"ரைட்... அதில் எல்லாம்கூட பாசம், காதல், அநீதியை எதிர்த்தல் எல்லாம்தான் மையம். மனிதன் அவனுடைய தர்மத்தையும் நியாயத்தையும் காலம் கடந்தும் எதிர்பார்க்கிறான். எதிர்காலத்தில் எதை நியாயம் என்பது? திருமணம் என்பது தடைசெய்யப்பட்ட முறையாக மாறிப்போய்விடலாம். வனவிலங்குகளை ஜூ என்ற சிறைச்சாலையில் அடைத்துவைக்கக் கூடாது என்று சட்டமாகலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை வரலாம். தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆள்கள் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்வது அத்தகைய ஒன்றுதான்.''
"நான் அந்தக் கதையைப் படிக்கவில்லை'' இந்த நேரத்திலாவது உண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற குற்ற உணர்வு தெரிந்தது பிரியாவின் தொனியில்.
கணேஷ் பிரியாவுக்காக தமிழாசிரியர் கதையைச் சொன்னான். ""வெரி இன்ட்ரஸ்டிங்'' என்றாள்.
கணேஷ் பிரசங்கம் போல தொடர்ந்து கொண்டிருந்தான். "பிரெய்ன் கண்ட்ரோல் பற்றி "நில்லுங்கள் ராஜாவே'னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். காலமானார், பதிமூன்றாம் கதை என்று நிறைய முயற்சி செய்தார்.... தொடர்ந்து முயற்சி செய்தார்.
"அவர் எழுதப் புகுந்த காலம் பொன்னியின் செல்வன், கல்லோ காவியமோ, பொன்விலங்கு என்று சரித்திரமும் பேராசிரியத் தமிழும் பின்னிப் பிணைந்திருந்த காலம். இவர் எழுதிய "இடது ஓரத்தில்..' என்ற சிறுகதை இப்படியும் எழுதலாமா என்று யோசிக்க வைத்தது. நைலான் கயிறு பழிவாங்கலை... புதுமாதிரி சொல்லியது.
கொலையுதிர் காலம் பேய் இருக்கிறதா, இல்லையா என்று பேசியது. அவர் எதிலும் தீர்மானமாக இல்லை. புதுமைப்பித்தன் பேய் நம்பிக்கையில்லாமல் பேய் என்றால் பயமாக இருக்கிறது என்று சொன்னது மாதிரி, எனக்குப் பெருமாள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் பக்தி இருக்கிறது என்று சொல்ல முடிந்தது.''
வசந்த் இடைமறிக்க எண்ணி குறும்பாகச் சிரித்தான். ""ஏதாவது தீர்மானமா இருந்திருக்க வேண்டும். எல்லாத்தையும் கிண்டலாகப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போவது வாசகனை சொறிந்துவிடும் வேலை என்றுதான் பலர் திட்டியிருக்கிறார்கள்.''
"நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது என்றாய்?'' வசந்த் பிரியாவைப் பார்த்துவிட்டு.. "அது வேற பாஸ்''..
"சுஜாதாவா நல்லா காமெடியா எழுதுவாரு.... தமிழ் நடையையே நீர்த்துப் போக வைத்தவர் அவர்தான்னு ஒருத்தர் சொன்னார்...''
"என்கிட்டயும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள்'' வசந்த் பின் பாட்டு பாடினான்.
"இந்தக் குற்றச்சாட்டு மேலோட்டமானது... தமிழாசிரியர் கதையிலேயே மாணவர்கள் யாரும் தமிழ் படிக்க வராததால் அந்த ஆசிரியரை அசதி பிரிவில் பணியாற்றச் சொல்லுவார்கள். அடைப்புக் குறியில் சதி- அசதி என்று போட்டிருப்பார். இந்த அடைப்புக்குறிக்குள் ஒரு நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. ஆனால் வலிந்து எட்டிய துணுக்குத் தோரணமல்ல. கதையில் அந்த நாளைய தமிழ் எப்படி இருந்தது என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டு வருவார். மொழி என்பது சுருக்கமான பரிவர்த்தனையாக மாறிவிடும் என்பது அவருடைய கணிப்பு. அதை அவர் சொர்க்கத் தீவிலிருந்தே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். ஆத்மா, நித்யா விஞ்ஞான சிறுகதைகள் தொடங்கி என் இனிய இயந்திரா வரைக்கும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.. நமக்கு அதை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்கிறது''
பிரியா டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று பிரிட்ஜை திறக்கப் போய்விட்டாள்.
"ஏன் மொழி இன்னும் சிறப்பாக செழித்தோங்கி வளர்ந்ததாக கற்பனை செய்யக்கூடாதா?'' என்றான் வசந்த்.
"ஒன்று கேட்கிறேன். புறநானூற்று காலத்திலிருந்து இப்போது மொழி வளர்ந்திருக்கிறதா தேய்ந்து கொண்டிருக்கிறதா?''
நெற்றி நரம்பை தேய்த்துவிட்டுக் கொண்டான்... "தேய்ந்த மாதிரிதான் இருக்கிறது... முன்னாள் அமைச்சர் காளிமுத்து ஒரு மீட்டிங்கில் பேசும்போது கேட்டேன்... ஒருவிஷயத்தை சொல்லுவதை தமிழர்கள் முப்பத்தி மூன்றுவிதமாக தெரிவித்தார்கள் என்று... சொல்லுதல், நவில்தல், செப்புதல், கூறுதல், அறிவித்தல், இயம்புதல் என்று சொல்லப்பட்ட விதத்தைப் பொறுத்து அது முப்பதுத்து மூன்று வகைப்படும் என்றார். இப்போது எல்லாமே சொன்னான் என்று ஆகிவிட்டது. இது தேய்மானம்தானே?''
வசந்த் எதற்காக காளிமுத்து கூட்டத்துக்குப் போனான் என்பதில் ஆச்சர்யப்பட்டு அதை அடக்கிக் கொண்டான். "இப்போது எல்லாமே சொன்னான்தான். ஆனால் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் புரிந்து கொள்கிறோம். மேனேஜர் ஃபைலை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். இது அறிவித்தல். அவன் அவளிடம் ஐ ல்வ் யூ சொன்னான்... ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய் என்று சொன்னான்... இந்த சொன்னான்களில் உள்ள வகைகளை நான் மனதில் வாங்கிக் கொள்கிறோம்... மலரை முகர்ந்துவிட்டு என்னே அருமையான நாற்றம் என இனிமேல் நாம் சொல்ல முடியுமா? நாஷ்டா துன்ட்யா வரைக்கும் வந்துவிட்டது.''
"அப்படியாயானால் செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ யறியும் பூவே - என்றெல்லாம் தமிழை வளர்க்க முடியாதா?''
"வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... தமிழ் எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டும் மூவாயிரம் ஆண்டுகளாக யாரும் கிட்டே நெருங்க முடியாதபடிக்கு செய்யுள் எழுதியும் வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருவதனாலேயே பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் பெரிதும் வித்தியாசப்பட்டு இருக்கிறது. மற்ற மொழிகளில் பெரிதாக வட்டார வழக்குகள் இல்லை. பிரிட்டன் இங்கிலீஷ் அமெரிக்கன் இங்கிலீஷ் அளவுக்குத்தான் பிரிவினை. இங்கே ஒவ்வொரு நூறு கிலோ மீட்டரிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்படி? அவ்வளவு தொன்மை. குறைந்தபட்சம் இரண்டாயிரம் வயசாவது இருந்தால்தான் பேச்சும் எழுத்தும் வித்தியாசப்படும்... பக்கத்தில் இருக்கிற கேரளத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவுக வந்துட்டாகளா? என்று பேசுகிறவர்களும் அவர்கள் வந்துவிட்டார்களா என்றுதான் உரைநடைத் தமிழில் எழுதுவார்கள். குஸ்டு அஸ்ட்டாம்பா என்பாரும் குடித்துவிட்டு அடித்துவிட்டான் என்பதுதான் உரைநடைத் தமிழ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவசரத்துக்குப் பேசினாலும் எழுதும்போது எல்லாம் சரியாக வந்துவிடும். இது மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு.''
பாஸ், பேசுகிறாரா, எழுது வைத்து வாசிக்கிறாரா என்று சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு.
அழைப்பு மணி அடித்தது.
"நான் திறக்கிறேன்'' பிரியா கதவைத் திறந்தாள்.
நான்கு முழம் வேட்டி, வெள்ளை கதர் சட்டை. கையில் சற்றுமுன் மடக்கி வைத்த குடை. பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. வெயிலில் நடந்து வந்த சூடு அவர் மீதிருந்து தாக்கியது.
"நான் தமிழாசிரியர்'' என்றார் அவர்.
"நீங்க தானா அது?''
(அடுத்த வாரம்)
வியாழன், மார்ச் 10, 2011
நாஞ்சில் நாடன் குறிப்பு

செவ்வாய், மார்ச் 08, 2011
மானுடப் பண்ணையும் எட்டாயிரம் தலைமுறையும்

மானுடப் பண்ணை நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்ற படம் சமீபத்தில் கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் (இப்போது இந்த அரங்கம் புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டுவிட்டது)நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் அமைச்சர் காளிமுத்துவும் அமைச்சர் பொன்னுசாமியும் விருதை வழங்கினர். செல்வி ஜெயலலிதா ஆட்சி.
எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்புக்காக தமிழக அரசு விருது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் அமைச்சர் அன்பழகனும் வழங்கினர்.அருகே நக்கீரன் கோபால். (2009- திருவள்ளுவர் தினம். வள்ளுவர் கோட்டம்.)
வெள்ளி, மார்ச் 04, 2011
சுஜாதாவின் சிருஷ்டி-2
"கன்னிமராவுல சுட்டியா?''
"ஒரு ஏழை எழுத்தாளர் கிட்ட அப்படியே கிரயம் பேசிட்டேன். போறவன் வர்றவன் எல்லாம் திட்டியிருக்காங்க பாஸ்... திட்டினவன் எல்லாம் என்ன ஆனானுங்கன்னே தெரியல. மகளிர் அமைப்பு, மத அமைப்பு, சாதி அமைப்பு, சிற்றிதழ் எழுத்தாளர்கள், பெரிய இதழ் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள்.. ஒருத்தர் பாக்கியில்லை. எப்படித்தான் மனுஷன் இவ்வளவையும் தாங்கிக்கிட்டாரோ தெரியவில்லை... அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேயில்லை என்று தெரிகிறது. நான் அவர் சார்பாக வாதாடுகிறேன். நீங்கள் அவருக்கு எதிராக வாதாடினால் நன்றாக இருக்கும்.''
கணேஷ் சற்றே சீரியஸôக "உம்ம்!'' என்றான்.
வசந்த் தோளை குலுக்கிக் கொண்டு தயார் என்பதுபோல சிறிய பாக்கெட் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.
"முதல் விஷயம் இவர் எழுத்தில் அழுத்தமில்லை.. எல்லாம் நுனிப்புல் மேய்ந்தவை...''
கணேஷ், மானுக்கருகில் வந்து பாய்வதற்கு ஆயத்தமாகியிருக்கும் சிறுத்தையென பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்படி பார்க்காதீங்க பாஸ்... என் முதல் கேள்விக்கு பதில்...?''
"உன்னுடைய முதல் கேள்வியில் ஏராளமான துணைக்கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது... முதலில் எழுத்து என்றால் என்ன? இரண்டாவது அழுத்தம் என்றால் என்ன? மூன்றாவது நுனிப்புல் என்பது எத்தனை செ.மீ.வரை?''
வசந்த் ஒரு மைக்ரோ செகண்ட் பிரயத்தனத்திலேயே எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்து "நீங்களே சொல்லிவிடுங்கள் பாஸ்'' என்றான்.
"முதலில் எழுத்தை எடுத்துக் கொள்வோம்'' வாணலியை எடுத்துக் கொள்வோம் மாதிரி ஆரம்பித்தான். "உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பிடித்த எழுத்தை ஆண்டவனால்கூட உருவாக்க முடியாது. எங்களுடைய கடவுள் சொன்னதுதான் சரி என்பதை நிலை நாட்டுவதற்காக துப்பாக்கியும் வெடி குண்டும் உருட்டுக்கட்டையும் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதிலிருந்தே இது நிரூபணம் ஆகிவிட்டது. ஒரு குழுவுக்கு ஆண்டவன் சொன்னது இன்னொரு குழுவால் புறம் தள்ளப்படுகிறது. அடுத்து மனிதனுக்கு வருவோம். ஷேக்ஸ்பியர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்வதற்கெல்லாம் கழகங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் எழுதி அவருக்கே மிகவும் பிடித்த புத்துயிர்ப்பு நாவல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கம்பரை எதிர்த்துக் கலவரமே வெடித்தது. கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றார்கள். ஆக, எல்லோருக்குமான எழுத்து என்று உலகில் ஒன்று இல்லை.''
அடுத்த கேள்வியைக் கேட்கும் அவசரத்தில் பாக்கெட் நோட்டை நோட்டம்விட்ட வசந்தை அடக்கி, "இன்னும் உன் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிக்கவில்லை'' என ஞாபகப்படுத்தினான்.
"நாம் எழுதியது நல்ல எழுத்தா என்பதை அதை எழுதிய ஆசிரியரே தீர்மானிக்க முடியாது என்பது நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்''
வசந்து முந்திக் கொண்டு "டால்ஸ்டாய்... புத்துயிர்ப்பு''

"ரைட்.. சொந்த எழுத்தையே தீர்மானிக்க முடியாமல் போவது பக்கத்துவீட்டு எழுத்தாளனின் எழுத்துக்கும் பொருந்தும்... எழுத்தை எழுத்தாளர்களைவிட மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.. சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்ன விமர்சனம் எழுதினார் என்று தெரியுமில்லையா?''
"தெரியும். ஆயிரம் பக்க அபத்தம் என்றும் யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம் என்றும் இரண்டு அத்தியாயமாக கிழிகிழி என்று கிழித்தார்.. படிக்கும்போது எனக்கே கிழிகிற சத்தம் கேட்டது பாஸ்''
"ஜெயமோகன் எழுதியதையும் படித்தாயல்லாவா?''
"பின்னே?.. தமிழில் வெளியான முதல் வரலாற்று நாவல் என்றார்... விறுவிறுப்பான மொழியின் சிறப்பையும் பாராட்டியிருந்தார்.. இறுதிப் பகுதியை டால்ஸ்டாயின் இலக்கியத்துக்கு ஈடாக ஒப்பிட்டிருந்தார்''
"இவர் எத்தனை அத்தியாயம் எழுதியிருந்தார்?''
"நான்கு அத்தியாயம்..'' வசந்த் கூடவே விரல்களையும் காட்டினான்.

"குட்... இப்போது யார் எழுதியது சரி என்பது கோர்ட் விடுமுறைக்குப் பிறகு வாய்தாவுக்கு ஓட வேண்டிய நமக்குத் தேவையில்லாத வேலை... இரண்டு பக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். "ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்ததும் நல்லவேளை நான் தப்பித்தேன். அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை' என்றார் சாருநிவேதிதா. வந்த வேகத்தில் மூன்று முறை படித்துவிட்டேன் என்றார் தமிழ்ச் செல்வன்... ஒருநூலை வாசிப்பதில் அரசியல், புவியியல், சமூக விஞ்ஞானம், அவரவர் ரசனை.. எல்லாம் இருக்கிறது. அடுத்தது அழுத்தம்.. எதையும் எளிமையாக ஜாலியாக சொன்னால் அது அழுத்தமானது இல்லை என்று நினைக்கிறார்கள்..''

"பாஸ் ஒன்று சொல்லவா? ப்ரியாவில் "இவன் செய்கிற ஒரே எக்ஸர்சைஸ் வாட்சுக்கு சாவி கொடுப்பதுதான்' என்று சொல்லியிருந்தார். இதையே.. அவன் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. தண்டால் எடுப்பதோ, ஜாக்கிங் போவதோகூட இல்லை. உடற்பயிற்சிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை.... இப்படியெல்லாம் விவரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... நான் சொல்வது சரியா பாஸ்?''
கணேஷ் எதற்கு வாயை விடுகிறாய் என்பதாக "உன்னிடம் வந்து சொன்னார்களா?'' என்றான். "இப்படி ஏதாவது உதாரணம் சொன்னால் நாம் மாட்டிக் கொள்வோம்.. எளிமையாக சொல்ல முடிவது வாசகனுக்கு நெருக்கமானது. அதை அவர் செய்தார். ஆறு லட்சம் பிரதி போய்க் கொண்டிருந்த குமுதத்தில் ஐந்து லட்சம் பேர் அவருடைய எழுத்தை இதழ் வந்ததும் படித்தார்கள். அதுவும் ஒரே நேரத்தில் அவர் ஆறு பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார், அலுவலகத்திலும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டே. அது அவருடைய சாமர்த்தியம். அவருடை வாசகனை அவர் அப்படியொன்றும் ஏமாற்றிவிடவில்லை. ஜனரஞ்சக பத்திரிகை தாங்கும் அழுத்தத்துக்கு அதிகமாகவே அழுத்தியிருக்கிறார்...''
"எரிகா ஜங், எரிக் பிராம், சிக்மண்ட் பிராய்ட், ராபர்ட் பிராட் பரி, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்று போகிற போக்கில் நிறைய அறிமுகங்களைத் தட்டிவிட்டுப் போவோர். அவர்களில் இருந்து ஒரு நறுக்கை மட்டும் எடுத்துப் போடுவார். மீதியைக் கண்டெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்புபோல.. அடுத்தது நுனிப்புல்லுக்கு வந்துடுங்க பாஸ்..''
கணேஷ் சிரித்தான். உதடுகள் அதை முடிப்பதற்குள் காலிங் பெல் சப்தம் கேட்டது. வசந்த் எழுந்து சென்று வாசலில் பார்த்தான். "ஓ... பிரியா... வாட் எ சர்பிரைஸ்... இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக் கொண்டிருந்தோம்...'' வசந்த், நடிகை பிரியாவைப் பார்த்த பரவசத்தில் வழிவிட்டு வரவேற்பறைக்கு அழைத்தான்.
"நீங்க என்னைப் பற்றி என்ன பேசினீர்கள் என்று நான் சொல்லவா?''
"உங்கள் யூகம் சரியா என்று பார்க்கிறேன், சொல்லுங்கள்.."'
"லண்டனில் நான் ஓடிவந்து கணேஷிடம் "இங்கே யாரும் பிரா அணிவதில்லை' என்று சொன்னேனே அதைத்தானே?''
"அதற்கு கணேஷ், "தெரியும்' என்றார். நீங்கள் "நானும்தான்' என்றீர்கள். கணேஷ் உடனே "தெரிகிறது' என்றார்''
"சரியாக யூகித்தேன் பார்த்தீர்களா?'' என்றாள் பிரியா.
"நாங்கள் இதைப் பற்றிப் பேசவில்லை"
"பின்பு விலாவரியாக சொல்கிறீர்கள்..?'' அவளுடைய கேள்விக் குலுங்களில் இப்போதும் அணியவில்லை என்று தெரிந்தது.
"மறக்க முடியுங்களா?''
கணேஷ் உள்ளேயிருந்து "யாரது?'' என்றபடி வெளியே வந்தான்.
பிரியா பவ்யமாக எழுந்து "போனவாரம் சுஜாதா சிருஷ்டி படிச்சேன்... உடனே புறப்பட்டு வந்துட்டேன். நானும் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்றேனே?'' என்றாள்.
"ஆமாம் பாஸ். இருக்கட்டும்''- வசந்த் அனுமதி கேட்டானா, அறிவித்தானா என்பது தெரியவில்லை.
(அடுத்த வாரம்)
வியாழன், மார்ச் 03, 2011
பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்!
| |
அரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.
வாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள்? யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..?
பத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.
கொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.
சில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்?
வெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.
குல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
நேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார்? என இதில் ஒரு பகுதி வருகிறது.
தாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.
நேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.
அடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)
குல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.
இதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.
மறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.
சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அவரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.
ஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.
செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:
நேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.
அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.
குல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கும் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.
பதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.
ஸ்கூப்
குல்தீப் நய்யார்,
மதுரை பிரஸ்,
60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 33.
மின்னஞ்சல்: maduraipress@gmail.com
புதன், மார்ச் 02, 2011
செவ்வாய், மார்ச் 01, 2011
ஒரு கலால் ஆணையரின் கடைசி நிமிடங்கள்!
எஸ்.வி.ராமகிருஷ்ணனை நான் நேரில் பார்த்ததில்லை. இனியும் அது முடியாது.
அது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் என்ற அவருடைய நூல்கள் மூலமாக அவரை அறிந்திருந்தேன். கல்லூரியில் இயற்பியலை படித்திருந்தாலும் அனுபவரீதியான சரித்திரத் தகவல்களின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தின் மூலமாக இந்த நூல்கள் எனக்குப் பிடித்திருந்தன. வெட்டுப்புலி நாவல் எழுதிய போது அதில் சுதந்திரத்துக்கு முந்தைய இருபது, முப்பது ஆண்டுகள் குறித்து அதில் சில தகவல்களைப் பெற்றேன். இப்போது ஞாபகம் இருப்பது நாற்பதுகளின் மையம் வரை சென்னை லயோலா கல்லூரிக்கு அருகே எலக்ட்ரிக் ரயில்கள் நிற்பதில்லை என்ற தகவல்.
மற்றபடி தினமணியில் ஏதாவது சரித்திரப் பிழைகள் வந்தால் அதை தொலைபேசியில் தெரிவிப்பார். உரிய நபரிடம் அதை தெரிவிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசுவார். செல்போன் சுவிட்ச் ஆஃப் என்பதாலோ யாரும் போனை எடுக்கவில்லை யென்றாலோ விட்டுவிடமாட்டார்.
மறுமுறையும் தொடர்பு கொண்டு, ""நான் நேற்று மாலை 3.38க்கு போன் செய்தேன். நீங்கள் எடுக்கவில்லை. ஒருவேளை வண்டியில் சென்று கொண்டிருந்திருக்கலாம்'' என்பார். அதில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே உரிய புள்ளிவிவரத் துல்லியம் இருக்கும்.
வெட்டுப்புலியை இவருக்கு அனுப்பி வைத்தேன். அதன் ஒவ்வொரு பத்தாண்டுகள் படித்து முடித்ததும் எனக்குப் பேசினார். உங்கள் வயசு என்ன என்று ஆர்வமாகக் கேட்டார். 45 என்றேன்.
"இந்த வயசுக்கு இந்த நாவல் சவாலான வேலைதான். உங்களுக்கு வரலாற்றை கற்பனையில் பார்க்கும் பார்வை இருக்கிறது'' என்றார்.
இரண்டு முக்கியமான பிழைகளை நாவலில் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்திவிடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.
"நாற்பதுகளில் சென்னையில் நிறைய பேர் குழாய் பேண்ட் அணிந்திருந்தார்கள் என்று ஒருபதம் வருகிறது. எனக்குத் தெரிந்து அப்போதெல்லாம் பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்று சொல்லுவார்கள். பேண்ட் என்பது அமெரிக்கப்பதம். ட்ரவுசர் இங்கிலாந்து பிரயோகம்'' என்றார்.
இரண்டாவது பிழை அதே நாற்பதுகளில்.. "ஆறுமுக முதலியாருக்கு மோரீஸ் மைனர் கார் வாங்க வேண்டும் என்று ஆசையிருந்தது என்று எழுதியிருக்கிறீர்கள். அப்போது மோரிஸ் என்ற மாடல் இருந்தது. அதில் மைனர் மாடல் வந்தது 50 களில்தான் வந்தது'' என்றார்.
"உங்கள் நாவலுக்கு நூறுவயது மதிப்பிடலாம். அதாவது நூறுவருஷம் நிற்கும்'' என்று பாராட்டினார்.
அவரைப் பற்றி எனக்கு இந்த அளவுக்குத்தான் அறிமுகம். அது என்னை நானே பாராட்டிக் கொள்வது போல அமைந்து போனதற்கு நான் பொறுப்பு இல்லை. அவர் என்னிடம் பேசியது அவ்வளவுதான். இதில் அவர் என் நாவலில் சொன்ன குறைகளையும்தான் சொல்லியிருக்கிறேன்.
எஸ்.வி. ராமகிருஷ்ணன் கோவை தாராபுரத்தில் 1936 ல் பிறந்து, ஐ.சி.எஸ். படித்து (இன்றைய ஐ.ஏ.எஸ்.) கலால் துறையில் ஆணையராக இந்தியாவின் பல இடங்களில் பணியாற்றியவர். இப்போது ஐதராபாதில் இருக்கிறார் என்பது உயிர்மையில் வெளியான அவருடைய புத்தகத்தில் உள்ள தகவல்கள்.
அவர் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி (2011) காலை கேன்சர் காரணமாக உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன்னால் அவரிடம் உதவி ஆணையராகப் பணியாற்றிய சுந்தரம் என்பவர் (அவசரத்தில் அவருடைய பெயரை குறித்து வைக்கத் தவறிவிட்டேன். ஞாபகத்தில் இந்த பெயர்தான் இருக்கிறது.) எனக்கு போன் செய்தார். "ஐதராபாதில் உங்கள் நண்பர் எஸ்.வி. ராமகிருஷ்ணனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உங்களுக்கு அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.
நான் உடனே எஸ்.வி.ஆரின் செல்போனுக்குப் பேசினேன். அது ஆஃப் செய்திருந்தது. அவருடைய வீட்டு எண்ணுக்குப் பேசினேன். அதை யாரும் எடுக்கவில்லை. அதோடுவிட்டுவிட்டேன். என்னுடைய முயற்சி அவ்வளவுதான். ஆனால் அவர் அத்தனை சுலபமாக விட்டுவிடக் கூடியவர் அல்ல.
ஞாயிறு, பிப்ரவரி 27, 2011
இன்று சுஜாதாவின் மூன்றாம் நினைவுநாள். அதன் பொருட்டு இந்தத் தொடர்கதை!

"என்ன பாஸ்.. ஹெள ஈஸ் லைப்?''
வாழ்க்கை பற்றியெல்லாம் விசாரிக்கும் வசந்தை பெருந்தன்மையுடன் பேராசிரியர் போல பார்த்தான் கணேஷ்.
"வயசாயுடுச்சி வசந்த் உனக்கு..''
"யாருக்காவது ரேகை பார்க்கலாம் என்றால்... வேண்டாம் அங்கிள் என்று அலறுகிறார்கள்''
கணேஷ் சிரித்தான். "வேறு முயற்சிகள் தேவைப்படுகிறது..''
"சுஜாதா சார் இல்லாமல் போனதால் நாம் அப்டேட் ஆகாமல் போயிட்டோம். இருப்பதை வைத்து வண்டி ஓட்டினால் இப்படித்தான்.''
கணேஷ் ஆமோதிப்பதுபோல சிரித்தான்.
தம்முடைய நல்லது, கெட்டது, சவால், வெற்றி, சாதனை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவரை சற்றே ஆகாயத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டான்.
"நாம் யார் யாருக்கோ வாதாடினோம். அவருக்காக வாதாட நமக்கு வழியில்லாமல் போய்விட்டது.. பச்''
"ஏன் பாஸ் அப்படி சொல்கிறீர்கள்?''
"ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் பார்த்தியா?''
"இலக்கியத்தில் அவருடைய இடம் அவருடைய சயின்ஸ் பிக்ஸன் கதைகள், புறநானுறு.. அகநானுறு உரைகள் போன்ற பலவற்றையும் கறராக விமர்சனம் செய்திருக்கிறார். வாசகரை அதன் ஆழத்துக்குக்குக் கொண்டு செல்லாமல் திசை திருப்புபவை என்றும் வணிகரீதியான எழுத்துக்கு ஆட்பட்டவர் என்றும் எழுதியிருந்தாரே.''
கணேஷ் "ஏதாவது பதிலடியாக செய்ய வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது. உனக்குத் தோன்றவில்லையா?''
"பாஸ் உங்களை இவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்லை.''
"பட்டிருக்கிறேன். வெளியில் காட்டிக் கொள்வதில்லை. லண்டனில் ப்ரியா இறந்து போனதாக நம்ப வைக்கப்பட்டபோது.. பிரிவோம் சந்திப்போம் மதுமிதா ஆக்ஸிடண்டில் இறந்தபோது.. இப்படி நிறைய ஆனால் இது வருத்தமில்லை.. ஆதங்கம்''
"என்ன செய்யலாம் சொல்லுங்கள் பாஸ்?''
"இலக்கிய சர்ச்சைகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.... ஏற்கெனவே தலைவருக்கும் ஜெயமோகனுக்கும் சண்டையில்தான் நட்பே ஏற்பட்டது தெரியுமா? ரப்பர் நாவலுக்காக அவர் அகிலன் விருது பெற்ற போது தமிழில் நாவல்களே வரவில்லை என்பதாகப் பேசினார். நம்ம தலைவருக்கு கோபம். "விருது வாங்கும்போது நம் எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸய்யா மனப்பான்மை வந்துவிடுகிறது. தமிழலக்கியம் பற்றி எதையாவது குறிப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு எதையாவது சொல்கிறார்கள்.'. என்று ஆரம்பித்து ஒரு கட்டு கட்டினார். அதன் பிறகு ஜெயமோகனும் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று மறுத்துக் கூறிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. அதற்கப்புறம் இரண்டு பேரும் ஆழ்வார்கள் பற்றியெல்லாம் மிகவும் சிலாகித்துப் பேச ஆரம்பித்து நன்றாகவே பழகிவிட்டார்கள்.''
"இப்போது?'' வசந்த் அலுப்புடன் கேட்டான்.
"சுஜாதா இறந்த அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவருடைய நினைவைப் போற்றியவர் ஜெயமோகன். இருக்கட்டும். ஜெயமோகன் சொன்னது இலக்கிய உலகம் சார்பான கேள்வி. அவர் பிரதிநிதி. எல்லோர் சார்பாகவும் அந்தக் கேள்விகளைப் பார்க்கிறேன். இன்னும் சிலரோ காமெடியாக எழுதுவாரே அவரா என்கிறார்கள். வேறு சிலரோ அவரை செக்ஸியாக எழுதுபவர் என்கிறார்கள். விவாதம் என்று வந்துவிட்டால் அதற்குப் பொருத்தமாக பதில் சொல்லியாகவேண்டும். இதுபோன்ற கேள்விக்கெல்லாம் தலைவர் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.''
"75-ல் சொர்க்கத் தீவு எழுதியபோதே அவர் ஆங்கிலக் கதைகளைக் காப்பியடித்து எழுதுகிறார் என்று பிரச்சினை வந்தது.. அந்த நாவலுக்கான முன்னுரையில் அவர் யாரையெல்லாம் காப்பியடித்து அந்த நாவலை எழுதினார் என்று பட்டியலிட்டவர்களுக்கு மேற்கொண்டு அவரே வேறு சில எழுத்தாளர்களின் நூல்களையும் சொன்னார்.''
"வசந்த் நீ எனக்குக் கிடைத்தது வரம். இருக்கட்டும். அதில் அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் "1984'-ஐயும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "பிரேவ் நியூ வேர்ல்டை'யும், ஐரா லெவினின் "திஸ் பர்பெக்ட் டே'வையும் காப்பியடித்து எழுதினார் என்று சொன்ன குற்றச்சாட்டுகளை சுஜாதாவே வழிமொழிவார்... ஆர்தர் கிளார்க், பே பிராட்பரி, ஹென்ரி ஸ்லெஸர், தியோடர் ஸ்டர்ஜென், ஆன்டனி பர்கெஸ் என அதைப் போல எழுதிய எல்லாரையும் சொல்லுவார். நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே காப்பியடிக்க வேண்டும் என்பார்.''
"காப்பியடிப்பதற்கும் ஒரு ஐடியாவை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது என்பது வேறு. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க அந்த அய்யங்கார் என்ஜினியர் படுகிறபாடு.. ரொம்ப காமெடி... அந்தத் தீவில் சிறுநீர் கழிப்பதை உடலில் இருந்து நீர் அகற்றுவது என்பார்கள்... செக்ஸ் உணர்வுகள் அற்ற பெண்கள்... பெண்களும் ஆண்களைப் போலவே பொது இடத்தில் பனியனைக் கழற்றுவார்கள்... அந்த அய்யங்கார் குறுகுறுவென குற்றம்புரிய தயாராகிற இடம்.. ''
"போதும் நிறுத்து''
"சாப்பிட பால் வேண்டுமா என்று கேட்கும்போது... "இங்கே பாலே இல்லை என்று நினைத்தேன் என்றேன், சிலேடையாக' என்பான்''
"போதும் வசந்த்... இப்போது சுஜாதாவை பாராட்டிக் கொண்டிருப்பதற்காகவா உன்னை வரச் சொன்னேன்?''
"இரண்டு பேரும் மாறி மாறி பாராட்டிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. விவாதிக்க வேண்டும்.''
"அவருடைய இலக்கிய பங்களிப்பு, சினிமா பங்களிப்பு.. அறிவியல் பங்களிப்பு எல்லாவற்றையும் அலச வேண்டும்''
வசந்த் தன் பாஸ் ஏதோ புதிதாக சொல்ல வருவதை உத்தேசித்து காத்திருந்தான்.
"இன்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு நீதான் சுஜாதாவின் பரம விரோதி... சுஜாதா பற்றி என்னென்ன புகார்கள் உண்டோ அத்தனையும் சொல். நான் பதில் சொல்கிறேன்.''
"ஐயோ பாஸ்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கிற 17 மாடி கட்டிடத்தில் இருந்து கீழ குதிக்கச் சொல்லுங்க குதிக்கறேன். மெட்ராஸில் எல்.ஐ.சி.க்கு அப்புறம் உயரம் அதுதானே பாஸ்?''
"கடிக்காதடா.. சீக்கிரம் சுஜாதாவின் விரோதியாக மாறு...''
"எப்பிடி பாஸ் அவருக்கு பரமவிரோதியா...?''
"நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?''
"என்ன ஆச்சு பாஸ்... இது "கௌரவம்' படத்தில் சிவாஜி பேசுகிற டயலாக்''
"தெரியும்.. இதுதான் சுஜாதா கோர்ட். நீதான் பப்ளிக் பிராஸிக்யூட்டர்.. சுஜாதாவின் பரமவிரோதி. ஆரம்பி.''
(அடுத்த வாரம்)
புதன், பிப்ரவரி 23, 2011
தனிமையின் இசையில் அய்யனார்
எழுதியிருக்கும் விமர்சனத்தின் ஒரு பகுதி. முழுதும் படிக்க மேலே சொடுக்கவும்.
எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. நன்றி தமிழ்மகன்
செவ்வாய், பிப்ரவரி 22, 2011
வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்
தமிழகத்தில் 1930 முதல் இப்போ வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் நடக்குது. பல தருணங்களில் உண்மை சம்பவங்களுக்கு நடுவில் கதை நடப்பது, சுவாரஸ்யமானது. எனக்கு புடிச்சிருந்த்து. என்னுடைய கதைகளும் அந்த மாதிரி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைவதால், எனது கருத்துக்கு ஒத்து வந்த மாதிரி இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி முதல் கொள்ளைக்காரன் ஆட்சி வரை கதை சொல்லப்படுகிறது. நடுவில் அரசியல், சாதி, சாமி, மருத்துவம், சினிமா, மேல்படிப்பு, இந்திய பிரிவினை, காந்தியின் தொடக்கமும் கொலையும், சுதந்திர இந்தியாவின் தலைவர்களும், நேரு குடும்பமும், இந்திராவின் கொலையும், சஞ்சய் காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையும், அவரது விசித்திரமான மரணமும், ராஜிவ்காந்தி மரணமும், அண்ணா பெரியாரும், எம்.ஜி.ஆர். கருணாநிதியும், கூடவே ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர். சிவாஜியும், எம்.ஜி.ஆர். ரஜினியும், ரஜினி கமலும், ஸ்டாலின் அரசியலும், ஸ்டாலின் பெண் கடத்தலும், வைகோ மதிமுகவும் என எல்லாமே வரும்.
படிச்சு முடிச்ச போது ஏதோ வரலாறு புத்தகம் படிச்சு முடிச்ச மாதிரி இருந்திச்சு.
கதைக்கு நடுவில் வந்து இவ்வளவையும் அவங்க கதையோட சேத்து சொல்லறாங்க, இந்த கதையின் நாயக, நாயகியர். நாப்பது அம்பது வருடங்களாக ரெண்டு குடும்ப கிளைகளில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.
ஒருத்தர் ஒரு ராத்திரிலே ஒரு சிறுத்தையை தனியா கொன்னுடுறார். அது பெரிய விஷயம். அதுக்காக ஒரு புதிய தீப்பட்டி கம்பெனி, அதை அவங்க கம்பெனி அடையாளமா உபயோகம் பண்ணிகுறாங்க. அதுதான் வெட்டுப்புலியின் துவக்கம்.
வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்
புது எழுத்துக்கு விருது
நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு புது எழுத்து வெளியிட்ட சிறப்பு வெளியீடு மகத்தானது. முன் சொல்லப்பட்ட சாவின் சரித்திரம் என்ற மார்க்வெஸ்ஸின் குறுநாவலொன்று அசதாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்தது. மிக அற்புதமான மொழி பெயர்ப்பு.
மனோன்மணி தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர் மனோன்மணிக்கும் புதுஎழுத்துக்கும் வாழ்த்துகள்
செவ்வாய், பிப்ரவரி 08, 2011
ஒரு பழைய செய்தி
பூசாரி (கூட்டத்தினரைப் பார்த்து): பக்த கோடிகளே! பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே!
திங்கள், ஜனவரி 31, 2011
மாதொரு பாகன்
குழந்தையில்லாமல் வருந்தும் தம்பதியினர். மலடி என்ற பட்டம்.. வாரிசு இல்லாத வருத்தம்.. தன் கணவன் தாதுவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் சுமக்க வைத்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் மனைவி. எண்பதுகளின் துவக்கத்தில் பெரிய வட்டமிட்டு அதில் ஏ குறியிட்டு போஸ்டர் ஓட்டப்பட்டபடம்.
பெருமாள் முருகனின் மாதொரு பாகன் அப்படியான விஞ்ஞான முறையெல்லாம் தெரியாத கணவன் மனைவி பற்றியது. சமூகம் அங்கீகரித்த ஒரு கலாசார அதிர்ச்சி வைத்தியம்தான் கதையின் மையம். தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் அது பெண்ணின் மாமியாரும் தாயாரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவகை தெய்வீக உத்தியாக அது இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு நடப்பை நமக்குத் தெரிவிக்கிறது.
கதையின் ஆரம்பத்தில் இருந்தே வருவதுதான் சரியாக இருக்கும். காளி- பொன்னா திருமணம் நடக்கிறது. காளி மாமனார் வீட்டின் வாசலில் தோதான இடம் பார்த்து பூவரசு மரக் கிளை ஒன்று நடுகிறான். அதுவும் கிளைவிரித்து, பூத்து நிழல் பரப்பி நிற்கிறது. ஆனால் பொன்னாவோ குழந்தை பாக்கியம் இல்லாமலேயே ஆண்டுகளைக் கடத்துகிறாள். அவளுக்கு முதல் மாசம் தீட்டுப் பட்டதுமே முகம் சுளிக்கிறாள் மாமியார். அறிவுரைகள் ஆரம்பமாகின்றன. தீட்டுப் பட்ட மூணாம் நாளு இந்த சாறைக் குடி.. இந்த மூலிகையைக் கரைத்துக் குடி என்று அவளுக்கு நாக்கையே மறக்கடிக்கிறார்கள். காலம் ஓடுகிறது.என்னத்த கண்டே இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டுட்டுப் போ என்கிறார்கள். உனக்கென்ன குழந்தையா குட்டியா என்கிறது ஊர். வேர்க்கடலை விதைக்கப் போனால், மலடியின் கை பட்ட விதை முளைக்க வில்லை என்று கதை சொல்கிறார்கள். ஊரும், உறவும், சொந்த தாயும்கூட மலடியாக இருப்பவளை மன்னிப்பதாக இல்லை. மருமகனை வேறு கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லுகிறாள். மறு கல்யாணம் செய்து கொள்வதில் காளிக்கும் விருப்பமில்லை. ஆம்பளையா பொறந்தா ஒழுங்கா தண்ணிப் பாய்ச்சணும்டா
என்பது போன்ற ஜாடை மாடையான எகத்தாளப் பேச்சுகள். காளியின் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு பொன்னாத்தாவை மடக்கப் பார்க்கும் இளசுகள் என்று காளியின் ஆண்மையை உரசிப் பார்க்கும் சங்கடங்கள் தொடருகின்றன.
ஒரு குழந்தை பிறந்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்ற நிலமை. குழந்தை என்பது ஒரு அங்கீகாரம். குலம் தழைக்க வந்த வம்ச விளக்கு. வாரிசு.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில் பதினாலாம் நாள் தேர் திருவிழாவில் அதற்கு ஒரு விடிவுகாலம் இருப்பதாக காளியின் தாயே வழி சொல்கிறாள்.
குழந்தை பிறப்பதற்கான உபாயத்தை தாயிடமிருந்தே மகன் கேட்பது கதையின் உலுக்கலான பக்கங்கள். மகனுக்குத் தெரியாமல் தாயும் தாய்க்குத் தெரியாமல் மகனும் கள் குடிப்பது இருவருக்கும் தெரிந்த விஷயம்தான். தன்னிடம் ஏதோ பேச வந்து தயங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கு கள் இருக்கு குடிக்கிறியா என்று காளி குடிக்கக் கொடுக்கிறான். மெல்ல மெல்ல பேச்சு வருகிறது. எல்லாம் குழந்தை பிறப்பது பற்றித்தான். யார் மேல குறையோ எதற்கும் திருவிழாவுக்குப் பொன்னாவை ஒரு நடை அழைத்துக் கொண்டு போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதாகச் சொல்கிறாள். இடிந்து போகிறான் காளி.
பதினாலாம் திருவிழாவில் குழந்தையில்லாத பெண்கள் அங்கே ஆண்களோடு கூடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த தினத்தில் அங்கு இருக்கும் எல்லா ஆண்களுமே சாமிகள்தான் என்பது ஐதீகம். காளியும் அவனுடைய மைத்துனனுமே திருமணத்துக்கு முன்பு இந்தத் திருவிழாவுக்கு வந்து பெண்களை வலம் வந்தவர்கள். இந்த ஐதீகம் ஆண்களுக்குத் தெரிந்திருப்பதுபோலவே பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதாவது மகனுக்குத் தெரிந்திருந்தது, அம்மா மூலம் தெரியவருகிறது.
சிக்கலான கதை.
முதல் சிக்கல் தமிழகத்தில் இப்படியொரு வழக்கம் இருந்ததாக எழுதுவது. அதை அம்மாவும் மகனும் பேசுவதாக எழுதுவது.. அதுவும் மாமியாரே தன் மருமகளை அதற்கு ஆட்படுத்துவது பற்றி பேசுவது.. எப்படிப்பட்ட சிக்கலான முடிச்சையும் நேர்மையான நடையின் மூலம் அவிழ்க்க முடியும் என்பதுதான் பெருமாள் முருகன் அவருடைய செறிவான நடையின் மூலம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. சவாலான கதையம்சம் பொதிந்திருக்கும் கரு. வலிந்து ஆபாசம் எழுதும் கதை போக்கு இருந்தும்கூட இயல்பான தொனியில் கதையைக் கொண்டு சொல்லியிருக்கிறார். நல்லுப் பையன் சித்தப்பா போன்ற ஏட்டிப் போட்டியான கதாபாத்திரங்கள், அவர்களுக்கான ஆபாச மொழிகளை பேசுகிறார்கள். அது முற்றிலும் கதையில் இருந்து விலகாத இயல்பான மொழியாகவும் இருக்கிறது.
காளி தன் மனைவியிடம் கருத்து கேட்கிறான். திருவிழாவுக்கு நீ போகப் போகிறாயா என. உனக்கு விரும் என்றால் போய் வருகிறேன் என்கிறாள். காளிக்கு இரண்டாவது இடி. நான் போக மாட்டேன் என்று சொல்லுவாள் என பெரிதும் நம்பிக்கையோடு அவளிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் அது.
உற்ற தோழனாக பழகிய மைத்துனன் பொன்னாவின் அண்ணன்- அவனும் தன் தங்கை போய்விட்டுவந்தால் குழந்தை பாக்கியம் கிட்டுமே என்கிறான்.
குழந்தை என்றால் குலம் தழைக்க வந்த வாரிசு. இதிலே குலம் எங்கே இருக்கிறது. பிறக்கப் போவது யாருடைய வாரிசு?... காளியின் ஆண்மைக்கு இதைவிட இழுக்கு இருக்க முடியாது. பொன்னாவை அனுப்பிவைக்க முடியாதென மறுக்கிறான். காளிக்கு விருப்பமில்லை என்ற செய்தியையே மறைத்து பொன்னாவை விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பொன்னாவும் காளியும் என்ன முடிவுகள் எடுத்தார்கள் என்பது கதையின் முடிவு... அல்லது கதையின் முடிச்சும்கூட.
தமிழகத்தில் இப்படியொரு முறை இருந்ததாக எங்கேனும் பதிவுகள் இருந்ததா என்று தெரியவில்லை. பெருமாள் முருகன் அப்படியான ஒரு ஆதாரச் செய்தியின் அடிப்படையில்தான் இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.
கதை வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் அந்தக் காலக்கட்டத்தைச் சொல்லும் சூழல்கள் கதையில் வலுவாக இடம் பெறவில்லை. குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கல் எறியும் போட்டி ஒன்றை ஒரு வெள்ளைக்கார துரை நடத்துகிறார். என் கவனத்தில் அந்தக் காலத்துக் காசுகள், நோட்டுகள், உடை போக்குவரத்துகள் விவரிக்கப்படவில்லை.
காலம் பற்றிய குறிப்புகள் நாவலை பெரும்பகுதி வாசித்த பின்னரே உணர வேண்டியிருக்கிறது. எல்லோரும் குடுமி வைத்திருந்தார்கள் என்பது அத்தகையதோர் குறிப்பு. ஆனால் இது நாவலின் மையத்தில்தான் கண்டெடுக்க முடிந்தது.
குழந்தையில்லாத ஒரு கணவன் மனைவியின் கதையாக மாதொரு பாகனைப் பார்க்க முடியவில்லை. பல நூறு கணவன்- மனைவிகள் அதில் தெரிகிறார்கள். ஒரு கதையின் பின்னால் பல கதைகள் இருந்திருக்கும் அதிர்வை ஏற்படுத்தும் நாவல்.
மாதொரு பாகன்,
பெருமாள் முருகன்,
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை
நாகர்கோவில் 629 001
விலை: 140
email: kalachuvadu@sancharnet.in