திங்கள், மார்ச் 14, 2011

யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!





பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம்.

இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்... இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.

நாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. ""கரீமே... சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.''

எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையில் நாவல் நகர்கிறது. மானிடர் என்ற மாபெரும் கூட்டத்தின் நறுக்குகளாக சிலபிரதிநிதிகளை நாவலின் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்து நாவல்கûளை எடுத்துக் கொண்டு, முதல் நாவலில் இருந்து ஒரு முதல் அத்தியாயம், இரண்டாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், மூன்றாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், நான்காவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், ஐந்தாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம் என்று அடுக்க வேண்டும். அப்படியே அந்த நாவல்களின் இரண்டாவது அத்தியாயங்கள். அப்படியே மூன்றாவது நான்காவது அத்தியாயங்கள்... இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அது நடந்ததாகத் தெரியவில்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு... யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.

கதை ஒன்று...

பனி பொழியும் குளிர். இரவு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அது பதினேழாம் நூற்றாண்டின் மையம். கம்பெனியார் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்சிஸ் டே இந்தியாவில் தம் கோட்டையை அமைக்க இடம் தேடுகிறான். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. கிளாரிந்தா என்ற வேசை அவனுக்குப் பரிச்சயமாகிறாள். இது வரலாறும் கற்பனையும் கைகோர்க்கும் இடமாக இருக்கலாம்.

கிளாரிந்தா நோய்வாய்ப்படுகிறாள். அவளைக்காக்க இந்திய மருத்துவமுறையை நாடுகிறார்கள். வைத்தியமும் நோயின் தீவிரமும் போட்டி போடுகின்றன. இது சென்னையில் பிரிட்டீஷார் காலூன்ற கதையை ஆரம்பித்து வைக்கிறது.

இன்னொரு கதை...

அப்துல் கரீம் அத்தர் யாமம் என்ற சென்ட் தயாரித்து விற்பவர். ஆண் வாரிசு இருந்தால்தான் அதைத் தொடர்ந்து தயாரித்து அளிக்க முடியும் என்பது பக்கீரின் வாக்கு. அவருக்கு மூன்று மனைவிகள். ரஹ்மானி, ஹபீசா, சுரையா. இரவும் பகலும் அவருக்கு காமம் சாத்தியப்படுகிறது. வாசனை திரவியத்தோடு சம்போகிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே ஆண் வாரிசு வாய்க்கவில்லை. அவர் குதிரை ரேஸ் பிரியாகி சொத்து சுகத்தையெல்லாம் இழந்து திடீரென்று காணாமல் போகிறார். மனைவிமார்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார்கள். சென்னையில் காலரா காலத்தில் அவதியுறுகிறார்கள்.

கதை மூன்று...

கிருஷ்ணப்ப கரையாளர் பெரும் தனவந்தர். கூடவே சொத்து பிரச்சனை. சென்னை இம்பாலா ஹோட்டலில் தங்கியிருந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எலிசபெத் என்ற வேசையுடன் தன் தனிமைக்குத் தீர்வு காண்கிறார். தமக்குச் சொந்தமான மேல்மலைக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அடர் காடு. விதம்விதமான தாவரங்கள். இயற்கை. விலங்குகள்... அவர் இயற்கையால் வசீகரிக்கப்பட்டு, தன் சொத்துக்கள் அனைத்தையும் எலிசபெத்துக்கே எழுதி வைத்துவிடுகிறார். அவள் பிரிட்டனுக்குப் போய் வருவதாகக் கிளம்பிச் செல்கிறாள். பின்னாளில் அந்த மலைப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறப்போவதை அவள் அப்போது யோசித்து வைத்திருக்கவில்லை.

நான்காம் கதை...

பத்ரகிரி விசாலா, திருச்சிற்றம்பலம் தையல் கதையிது. பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் சகோதரர்கள். திருச்சிற்றம்பலம் கணித மேதை. லண்டனுக்குச் சென்று ஆய்வுப்படிப்பைத் தொடர்கிறான். அவனுடைய மனைவி பத்ரகிரியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். பத்ரகிரிக்கும் தையலுக்கும் காமம் பற்றிக் கொள்கிறது. குடும்பம் சிதைகிறது. தம்பி படிப்பை முடித்துவிட்டு வரும்போது தையல் மனச்சிதைவுக்கு ஆளாகி இருக்கிறாள்.

ஐந்தாம் கதை...

சதாசிவ பண்டாரம் ஒரே மகனாகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் வீழ்ந்தவன். அவனை ஒரு நாய் வழி நடத்துகிறது. அது செல்லும் இடம் தோறும் செல்கிறான். அது தங்குகிற இடத்தில் தங்குகிறான். அது மலையோர கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் கனகாவின் வீட்டின் முன் தங்குகிறது. எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அங்கே தங்கியிருக்கிறான் பண்டாரம். ஒருநாள் இரவு கனகா அவனருகில் வந்து படுத்துக் கொள்கிறாள். உறவு கொள்கிறார்கள். அவளிடம் மரிக் கொழுந்து வாசனை வீசுவதை அறிகிறான். கர்ப்பம் தரிக்கிறாள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நாய் அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறது. வள்ளலார் போல ஒரு அறைக்குள் பூட்டிக் கொள்கிறான். அவன் காற்றில் கரைந்து போய்விட்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த ஐந்து கதைகளும் காமமெனும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.

இந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பல நேரத்தில் காமத்தை ஒரு வாசனையின் அடையாளமாக சொல்லியிருப்பதும்கூட ஐந்தையும் இணைக்கும் ஆதாரமாக கருத வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணன் இப்படி உத்தேசிக்காமலேயேகூட இதை எழுதியிருக்கலாம். அதை வாசகன் வியாக்யானத்தால் கண்டெடுக்கிற சுவை அம்சமாக இருந்தாலும் மகிழ்ச்சிதானே?

மீ புனைவைப்போல அப்துல் ஹகிமின் கனவில் பக்கிர் பேசுவதாக ஆரம்பமாகும் நாவல், அடுத்து லண்டன் மாநகரில் இந்தியாவில் வர்த்தக உரிமை வேண்டி மகாராணியின் அரண்மனையின் முன் நிற்கும் இங்கிலாந்து வணிகர்களின் கோரிக்கையோடு வரலாற்றுச் சூட்டை ஏற்றிக் கொள்கிறது.

நாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. இங்கிலாந்தின் 17 ஆம் குளிர் இரவையும் தெருக்களையும் கற்பனை செய்வது அபாரம். அது முழுக்கவே கற்பனையால் மட்டுமே சாத்தியமாக்க வேண்டிய கட்டாயம். அதற்கு இதே போன்ற காலகட்டத்தை காட்டும் ஒவியங்களும் சினிமாக்களும் நூல்களும் பக்கபலமாக இருந்தாலும் ராமகிருஷ்ணன் தீட்டும் காலச் சித்திரம் மலைக்கவைக்கிறது.

தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் சென்னையில் நடைபெறுவது அதில் தையல் காணால் போய் பத்ரிகரி தேடிக் கண்டுபிடிப்பது, பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகையெடுத்துதான் சர்க்கஸ் நடைபெற்றதாக கூறுவது போன்ற பல்வேறு தகவல்கள் நாவலின் சம்பவங்களுக்கும் சரித்திரத்தைப் பின்னணியை விளக்குவதற்கும் பொருந்தி வந்திருக்கிறது. பத்ரகிரி நிலவியல் வரைபடம் தயாரிக்கும் பணியாளனாக இருப்பதால் பரங்கி மலையிலிருந்த ஆரம்பமாகும் பணியின் ஆரம்பக்கட்ட வேலைகளை அழகாக விவரிக்கிறார். சூரத்தில் வந்து இறங்கும் நில அளவீடு செய்வதற்கான தியோலைட் கருவி... அதை ஏற்று நடத்தும் லாம்டன் துரை. இம்பாலா ஓட்டலில் இருந்த இரண்டு பûனைமரங்கள், பாப்பாத்தி கிணறு, மதராச பட்டணம் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமாக பிரிந்து கிடந்த வரலாறு, காலரா வியாதி, சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் என நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன சென்னையின் வளர்ச்சியைச் சொல்லும் தகவல்கள்.

ஓவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்துவது ரசனையின் உச்சம். சாப்பாட்டு பித்துப் பித்துப் பிடித்த சுரையா, எதைக் கொடுத்தாகிலும் மகிழ்ச்சியை அடையத் துடிக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஆடம்பரப் பிரியனாக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சற்குணம், வெளிநாட்டில் இருக்கும் கணவனைப் பிரிந்து வாழும் தையல், தன்னைவிட்டுப் பிரிந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்தில் பொஸஸிவாக இருந்து பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் விசாலா.. என ஒவ்வொரு பாத்திரத்தின் பல்வேறு உளவியலின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது.

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் திருப்திக்காக ஒவ்வொரு அம்சங்களை பணயம் வைக்கிறார்கள். தையல் கற்பை பணயமாக்குகிறாள். கிருஷ்ணப்ப காரையாளர் சொத்தை, சதாசிவ பண்டாரம் பந்தத்தை, திருச்சிற்றம்பலம் தன் சுகத்தை என ஒன்றை அடைய ஒன்றை இழந்து.. அந்தச் சுழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவல் முடிந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வாக அது நம்மிடம் தங்கிவிடுகிறது.

எல்லோருடைய கணக்கிலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ ஒரு பிழை ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தை அழகான பின்னலாக வெளிப்படுத்தும் நாவல்.

யாமம்
எஸ்.ராமகிருஷ்ணன்,
உயிர்மை வெளியீடு,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை}18
தொ.பே: 24993448.
மின்னஞ்ஞல்:: uyirmmai@gmail.com

கிடைக்குமிடம் -

டிஸ்கவரி புக் பேலஸ்
முனுசாமி ரோடு,
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கலைஞர் நகர், சென்னை.

Ph: 9940446650

சனி, மார்ச் 12, 2011

சுஜாதா சிருஷ்டி -3

"சுஜாதாவை ஜெயமோகன் அளவுக்குப் பெருமையாக அலசி ஆராய்ந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய பிளாகில் சுஜாதா என்று தட்டினால் பத்துமணிநேரத்துக்கு படிப்பதற்கு விஷயம் இருக்கிறது. நமக்கு எங்கே இடிக்கிறது என்றால் அவர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளை அப்படியே புறக்கணித்துவிடலாம் என்று ஒரு பிரயோகத்தில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக அவருடைய தமிழாசிரியர் கதையை...'' கணேஷ் சுருக்கமாக விவரித்தான்.
"எல்லாத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கு பாஸ்'' வசந்த் இப்படி சொன்னதும் பிரியா தன் இரண்டு பக்கங்களை அவசரமாக சரிபார்த்துக் கொண்டாள். வசந்துக்கே தான் சிலேடையாக சொல்லிவிட்டோம் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்தது.
"அந்தக் கதையில் அவர் விஞ்ஞானம் என்று என்னதான் சொல்ல வருகிறார்?''
"இந்த மாதிரி மொட்டையாகக் கேட்காதே''
"ஹிப்பியாவே கேட்கிறேன். சயின்ஸ் கதையென்றால் இன்றிலிருந்து ஒரு ஐநூறு வருஷம் தள்ளி நடக்க வேண்டும். வேற மாதிரி பேச வேண்டும்... வேற மாதிரி சாப்பாடு சாப்பிட வேண்டும்... வேறு கிரகங்களுக்குப் போக வேண்டும்.. அவ்வளவுதானா?''
"நீ சொன்னதெல்லாம் சப்போர்ட்டுக்கு. உண்மையில் ஒரு எதிர்காலம் அதில் தெரிந்தால் கதைக்கு வலு சேர்க்கும். வருங்காலத்தை நம்பகமான முறையில் யூகிக்கிற திறமையிருக்க வேண்டும். தமிழாசிரியர் கதைக்கே வருவோம். அது எதிர்காலத்தில் இருக்கிறது. அப்போது தமிழ் டெலிகிராம்போல போயிருக்கிறது...''
"இது நம்பிக்கை வறட்சிதானே?''
"கடந்த இரண்டாயிரம் வருஷத்தில் மொழி இந்தளவுக்கு மாறியிருக்கும்போது அது அப்படி மாறிவிடும் என்ற அபாயத்தைச் சொல்வது நம்பிக்கை வறட்சியில்லை... எச்சரிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது இப்போதே இன்னா டமாலா? புட்டுக்சா? லவ் யு டா டைப்பில்தான் பேசுகிறார்கள்.. அவர் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லும்போதுதான் அது கதையாக ரசிக்கத் தூண்டுகிறது. நீங்கள் சயின்ஸ் பிக்ஸன் ஏதாவது படிச்சிருக்கீங்களா?''
பிரியா இல்லை என்பதாக தலையாட்டிவிட்டு, "ஈ.டி., ஸ்டார் வார்ஸ், டெர்மினேட்டர், அவதார் எல்லாம் பார்த்திருக்கிறேன்'' என்றாள்.
"ரைட்... அதில் எல்லாம்கூட பாசம், காதல், அநீதியை எதிர்த்தல் எல்லாம்தான் மையம். மனிதன் அவனுடைய தர்மத்தையும் நியாயத்தையும் காலம் கடந்தும் எதிர்பார்க்கிறான். எதிர்காலத்தில் எதை நியாயம் என்பது? திருமணம் என்பது தடைசெய்யப்பட்ட முறையாக மாறிப்போய்விடலாம். வனவிலங்குகளை ஜூ என்ற சிறைச்சாலையில் அடைத்துவைக்கக் கூடாது என்று சட்டமாகலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை வரலாம். தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆள்கள் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்வது அத்தகைய ஒன்றுதான்.''
"நான் அந்தக் கதையைப் படிக்கவில்லை'' இந்த நேரத்திலாவது உண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற குற்ற உணர்வு தெரிந்தது பிரியாவின் தொனியில்.
கணேஷ் பிரியாவுக்காக தமிழாசிரியர் கதையைச் சொன்னான். ""வெரி இன்ட்ரஸ்டிங்'' என்றாள்.
கணேஷ் பிரசங்கம் போல தொடர்ந்து கொண்டிருந்தான். "பிரெய்ன் கண்ட்ரோல் பற்றி "நில்லுங்கள் ராஜாவே'னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். காலமானார், பதிமூன்றாம் கதை என்று நிறைய முயற்சி செய்தார்.... தொடர்ந்து முயற்சி செய்தார்.
"அவர் எழுதப் புகுந்த காலம் பொன்னியின் செல்வன், கல்லோ காவியமோ, பொன்விலங்கு என்று சரித்திரமும் பேராசிரியத் தமிழும் பின்னிப் பிணைந்திருந்த காலம். இவர் எழுதிய "இடது ஓரத்தில்..' என்ற சிறுகதை இப்படியும் எழுதலாமா என்று யோசிக்க வைத்தது. நைலான் கயிறு பழிவாங்கலை... புதுமாதிரி சொல்லியது.
கொலையுதிர் காலம் பேய் இருக்கிறதா, இல்லையா என்று பேசியது. அவர் எதிலும் தீர்மானமாக இல்லை. புதுமைப்பித்தன் பேய் நம்பிக்கையில்லாமல் பேய் என்றால் பயமாக இருக்கிறது என்று சொன்னது மாதிரி, எனக்குப் பெருமாள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் பக்தி இருக்கிறது என்று சொல்ல முடிந்தது.''
வசந்த் இடைமறிக்க எண்ணி குறும்பாகச் சிரித்தான். ""ஏதாவது தீர்மானமா இருந்திருக்க வேண்டும். எல்லாத்தையும் கிண்டலாகப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போவது வாசகனை சொறிந்துவிடும் வேலை என்றுதான் பலர் திட்டியிருக்கிறார்கள்.''
"நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது என்றாய்?'' வசந்த் பிரியாவைப் பார்த்துவிட்டு.. "அது வேற பாஸ்''..
"சுஜாதாவா நல்லா காமெடியா எழுதுவாரு.... தமிழ் நடையையே நீர்த்துப் போக வைத்தவர் அவர்தான்னு ஒருத்தர் சொன்னார்...''
"என்கிட்டயும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள்'' வசந்த் பின் பாட்டு பாடினான்.
"இந்தக் குற்றச்சாட்டு மேலோட்டமானது... தமிழாசிரியர் கதையிலேயே மாணவர்கள் யாரும் தமிழ் படிக்க வராததால் அந்த ஆசிரியரை அசதி பிரிவில் பணியாற்றச் சொல்லுவார்கள். அடைப்புக் குறியில் சதி- அசதி என்று போட்டிருப்பார். இந்த அடைப்புக்குறிக்குள் ஒரு நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. ஆனால் வலிந்து எட்டிய துணுக்குத் தோரணமல்ல. கதையில் அந்த நாளைய தமிழ் எப்படி இருந்தது என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டு வருவார். மொழி என்பது சுருக்கமான பரிவர்த்தனையாக மாறிவிடும் என்பது அவருடைய கணிப்பு. அதை அவர் சொர்க்கத் தீவிலிருந்தே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். ஆத்மா, நித்யா விஞ்ஞான சிறுகதைகள் தொடங்கி என் இனிய இயந்திரா வரைக்கும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.. நமக்கு அதை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்கிறது''
பிரியா டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று பிரிட்ஜை திறக்கப் போய்விட்டாள்.
"ஏன் மொழி இன்னும் சிறப்பாக செழித்தோங்கி வளர்ந்ததாக கற்பனை செய்யக்கூடாதா?'' என்றான் வசந்த்.
"ஒன்று கேட்கிறேன். புறநானூற்று காலத்திலிருந்து இப்போது மொழி வளர்ந்திருக்கிறதா தேய்ந்து கொண்டிருக்கிறதா?''
நெற்றி நரம்பை தேய்த்துவிட்டுக் கொண்டான்... "தேய்ந்த மாதிரிதான் இருக்கிறது... முன்னாள் அமைச்சர் காளிமுத்து ஒரு மீட்டிங்கில் பேசும்போது கேட்டேன்... ஒருவிஷயத்தை சொல்லுவதை தமிழர்கள் முப்பத்தி மூன்றுவிதமாக தெரிவித்தார்கள் என்று... சொல்லுதல், நவில்தல், செப்புதல், கூறுதல், அறிவித்தல், இயம்புதல் என்று சொல்லப்பட்ட விதத்தைப் பொறுத்து அது முப்பதுத்து மூன்று வகைப்படும் என்றார். இப்போது எல்லாமே சொன்னான் என்று ஆகிவிட்டது. இது தேய்மானம்தானே?''
வசந்த் எதற்காக காளிமுத்து கூட்டத்துக்குப் போனான் என்பதில் ஆச்சர்யப்பட்டு அதை அடக்கிக் கொண்டான். "இப்போது எல்லாமே சொன்னான்தான். ஆனால் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் புரிந்து கொள்கிறோம். மேனேஜர் ஃபைலை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். இது அறிவித்தல். அவன் அவளிடம் ஐ ல்வ் யூ சொன்னான்... ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய் என்று சொன்னான்... இந்த சொன்னான்களில் உள்ள வகைகளை நான் மனதில் வாங்கிக் கொள்கிறோம்... மலரை முகர்ந்துவிட்டு என்னே அருமையான நாற்றம் என இனிமேல் நாம் சொல்ல முடியுமா? நாஷ்டா துன்ட்யா வரைக்கும் வந்துவிட்டது.''
"அப்படியாயானால் செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ யறியும் பூவே - என்றெல்லாம் தமிழை வளர்க்க முடியாதா?''
"வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... தமிழ் எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டும் மூவாயிரம் ஆண்டுகளாக யாரும் கிட்டே நெருங்க முடியாதபடிக்கு செய்யுள் எழுதியும் வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருவதனாலேயே பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் பெரிதும் வித்தியாசப்பட்டு இருக்கிறது. மற்ற மொழிகளில் பெரிதாக வட்டார வழக்குகள் இல்லை. பிரிட்டன் இங்கிலீஷ் அமெரிக்கன் இங்கிலீஷ் அளவுக்குத்தான் பிரிவினை. இங்கே ஒவ்வொரு நூறு கிலோ மீட்டரிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்படி? அவ்வளவு தொன்மை. குறைந்தபட்சம் இரண்டாயிரம் வயசாவது இருந்தால்தான் பேச்சும் எழுத்தும் வித்தியாசப்படும்... பக்கத்தில் இருக்கிற கேரளத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவுக வந்துட்டாகளா? என்று பேசுகிறவர்களும் அவர்கள் வந்துவிட்டார்களா என்றுதான் உரைநடைத் தமிழில் எழுதுவார்கள். குஸ்டு அஸ்ட்டாம்பா என்பாரும் குடித்துவிட்டு அடித்துவிட்டான் என்பதுதான் உரைநடைத் தமிழ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவசரத்துக்குப் பேசினாலும் எழுதும்போது எல்லாம் சரியாக வந்துவிடும். இது மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு.''
பாஸ், பேசுகிறாரா, எழுது வைத்து வாசிக்கிறாரா என்று சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு.
அழைப்பு மணி அடித்தது.
"நான் திறக்கிறேன்'' பிரியா கதவைத் திறந்தாள்.
நான்கு முழம் வேட்டி, வெள்ளை கதர் சட்டை. கையில் சற்றுமுன் மடக்கி வைத்த குடை. பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. வெயிலில் நடந்து வந்த சூடு அவர் மீதிருந்து தாக்கியது.
"நான் தமிழாசிரியர்'' என்றார் அவர்.
"நீங்க தானா அது?''

(அடுத்த வாரம்)

வியாழன், மார்ச் 10, 2011

நாஞ்சில் நாடன் குறிப்பு

நாஞ்சில் நாடன் தன் வலை தளத்தில் வெட்டுப்புலி நாவல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஒரே வரி குறிப்பென்றாலும் மகிழ்ச்சியாக இருந்தது. இது இங்கே... முழு கட்டுரைக்கு சொடுக்கவும்.

செவ்வாய், மார்ச் 08, 2011

மானுடப் பண்ணையும் எட்டாயிரம் தலைமுறையும்


மானுடப் பண்ணை நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்ற படம் சமீபத்தில் கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் (இப்போது இந்த அரங்கம் புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டுவிட்டது)நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் அமைச்சர் காளிமுத்துவும் அமைச்சர் பொன்னுசாமியும் விருதை வழங்கினர். செல்வி ஜெயலலிதா ஆட்சி.


எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்புக்காக தமிழக அரசு விருது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் அமைச்சர் அன்பழகனும் வழங்கினர்.அருகே நக்கீரன் கோபால். (2009- திருவள்ளுவர் தினம். வள்ளுவர் கோட்டம்.)

வெள்ளி, மார்ச் 04, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-2

எதிர்பார்த்தது மாதிரியே ஏகப்பட்ட குறிப்புகளும் பழைய சிற்றிதழ் கட்டுகளுமாக வந்தான் வசந்த்.
"கன்னிமராவுல சுட்டியா?''
"ஒரு ஏழை எழுத்தாளர் கிட்ட அப்படியே கிரயம் பேசிட்டேன். போறவன் வர்றவன் எல்லாம் திட்டியிருக்காங்க பாஸ்... திட்டினவன் எல்லாம் என்ன ஆனானுங்கன்னே தெரியல. மகளிர் அமைப்பு, மத அமைப்பு, சாதி அமைப்பு, சிற்றிதழ் எழுத்தாளர்கள், பெரிய இதழ் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள்.. ஒருத்தர் பாக்கியில்லை. எப்படித்தான் மனுஷன் இவ்வளவையும் தாங்கிக்கிட்டாரோ தெரியவில்லை... அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேயில்லை என்று தெரிகிறது. நான் அவர் சார்பாக வாதாடுகிறேன். நீங்கள் அவருக்கு எதிராக வாதாடினால் நன்றாக இருக்கும்.''
கணேஷ் சற்றே சீரியஸôக "உம்ம்!'' என்றான்.
வசந்த் தோளை குலுக்கிக் கொண்டு தயார் என்பதுபோல சிறிய பாக்கெட் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.
"முதல் விஷயம் இவர் எழுத்தில் அழுத்தமில்லை.. எல்லாம் நுனிப்புல் மேய்ந்தவை...''
கணேஷ், மானுக்கருகில் வந்து பாய்வதற்கு ஆயத்தமாகியிருக்கும் சிறுத்தையென பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்படி பார்க்காதீங்க பாஸ்... என் முதல் கேள்விக்கு பதில்...?''
"உன்னுடைய முதல் கேள்வியில் ஏராளமான துணைக்கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது... முதலில் எழுத்து என்றால் என்ன? இரண்டாவது அழுத்தம் என்றால் என்ன? மூன்றாவது நுனிப்புல் என்பது எத்தனை செ.மீ.வரை?''
வசந்த் ஒரு மைக்ரோ செகண்ட் பிரயத்தனத்திலேயே எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்து "நீங்களே சொல்லிவிடுங்கள் பாஸ்'' என்றான்.
"முதலில் எழுத்தை எடுத்துக் கொள்வோம்'' வாணலியை எடுத்துக் கொள்வோம் மாதிரி ஆரம்பித்தான். "உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பிடித்த எழுத்தை ஆண்டவனால்கூட உருவாக்க முடியாது. எங்களுடைய கடவுள் சொன்னதுதான் சரி என்பதை நிலை நாட்டுவதற்காக துப்பாக்கியும் வெடி குண்டும் உருட்டுக்கட்டையும் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதிலிருந்தே இது நிரூபணம் ஆகிவிட்டது. ஒரு குழுவுக்கு ஆண்டவன் சொன்னது இன்னொரு குழுவால் புறம் தள்ளப்படுகிறது. அடுத்து மனிதனுக்கு வருவோம். ஷேக்ஸ்பியர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்வதற்கெல்லாம் கழகங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் எழுதி அவருக்கே மிகவும் பிடித்த புத்துயிர்ப்பு நாவல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கம்பரை எதிர்த்துக் கலவரமே வெடித்தது. கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றார்கள். ஆக, எல்லோருக்குமான எழுத்து என்று உலகில் ஒன்று இல்லை.''
அடுத்த கேள்வியைக் கேட்கும் அவசரத்தில் பாக்கெட் நோட்டை நோட்டம்விட்ட வசந்தை அடக்கி, "இன்னும் உன் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிக்கவில்லை'' என ஞாபகப்படுத்தினான்.
"நாம் எழுதியது நல்ல எழுத்தா என்பதை அதை எழுதிய ஆசிரியரே தீர்மானிக்க முடியாது என்பது நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்''
வசந்து முந்திக் கொண்டு "டால்ஸ்டாய்... புத்துயிர்ப்பு''


"ரைட்.. சொந்த எழுத்தையே தீர்மானிக்க முடியாமல் போவது பக்கத்துவீட்டு எழுத்தாளனின் எழுத்துக்கும் பொருந்தும்... எழுத்தை எழுத்தாளர்களைவிட மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.. சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்ன விமர்சனம் எழுதினார் என்று தெரியுமில்லையா?''
"தெரியும். ஆயிரம் பக்க அபத்தம் என்றும் யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம் என்றும் இரண்டு அத்தியாயமாக கிழிகிழி என்று கிழித்தார்.. படிக்கும்போது எனக்கே கிழிகிற சத்தம் கேட்டது பாஸ்''
"ஜெயமோகன் எழுதியதையும் படித்தாயல்லாவா?''
"பின்னே?.. தமிழில் வெளியான முதல் வரலாற்று நாவல் என்றார்... விறுவிறுப்பான மொழியின் சிறப்பையும் பாராட்டியிருந்தார்.. இறுதிப் பகுதியை டால்ஸ்டாயின் இலக்கியத்துக்கு ஈடாக ஒப்பிட்டிருந்தார்''
"இவர் எத்தனை அத்தியாயம் எழுதியிருந்தார்?''
"நான்கு அத்தியாயம்..'' வசந்த் கூடவே விரல்களையும் காட்டினான்.

"குட்... இப்போது யார் எழுதியது சரி என்பது கோர்ட் விடுமுறைக்குப் பிறகு வாய்தாவுக்கு ஓட வேண்டிய நமக்குத் தேவையில்லாத வேலை... இரண்டு பக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். "ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்ததும் நல்லவேளை நான் தப்பித்தேன். அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை' என்றார் சாருநிவேதிதா. வந்த வேகத்தில் மூன்று முறை படித்துவிட்டேன் என்றார் தமிழ்ச் செல்வன்... ஒருநூலை வாசிப்பதில் அரசியல், புவியியல், சமூக விஞ்ஞானம், அவரவர் ரசனை.. எல்லாம் இருக்கிறது. அடுத்தது அழுத்தம்.. எதையும் எளிமையாக ஜாலியாக சொன்னால் அது அழுத்தமானது இல்லை என்று நினைக்கிறார்கள்..''

"பாஸ் ஒன்று சொல்லவா? ப்ரியாவில் "இவன் செய்கிற ஒரே எக்ஸர்சைஸ் வாட்சுக்கு சாவி கொடுப்பதுதான்' என்று சொல்லியிருந்தார். இதையே.. அவன் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. தண்டால் எடுப்பதோ, ஜாக்கிங் போவதோகூட இல்லை. உடற்பயிற்சிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை.... இப்படியெல்லாம் விவரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... நான் சொல்வது சரியா பாஸ்?''
கணேஷ் எதற்கு வாயை விடுகிறாய் என்பதாக "உன்னிடம் வந்து சொன்னார்களா?'' என்றான். "இப்படி ஏதாவது உதாரணம் சொன்னால் நாம் மாட்டிக் கொள்வோம்.. எளிமையாக சொல்ல முடிவது வாசகனுக்கு நெருக்கமானது. அதை அவர் செய்தார். ஆறு லட்சம் பிரதி போய்க் கொண்டிருந்த குமுதத்தில் ஐந்து லட்சம் பேர் அவருடைய எழுத்தை இதழ் வந்ததும் படித்தார்கள். அதுவும் ஒரே நேரத்தில் அவர் ஆறு பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார், அலுவலகத்திலும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டே. அது அவருடைய சாமர்த்தியம். அவருடை வாசகனை அவர் அப்படியொன்றும் ஏமாற்றிவிடவில்லை. ஜனரஞ்சக பத்திரிகை தாங்கும் அழுத்தத்துக்கு அதிகமாகவே அழுத்தியிருக்கிறார்...''
"எரிகா ஜங், எரிக் பிராம், சிக்மண்ட் பிராய்ட், ராபர்ட் பிராட் பரி, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்று போகிற போக்கில் நிறைய அறிமுகங்களைத் தட்டிவிட்டுப் போவோர். அவர்களில் இருந்து ஒரு நறுக்கை மட்டும் எடுத்துப் போடுவார். மீதியைக் கண்டெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்புபோல.. அடுத்தது நுனிப்புல்லுக்கு வந்துடுங்க பாஸ்..''
கணேஷ் சிரித்தான். உதடுகள் அதை முடிப்பதற்குள் காலிங் பெல் சப்தம் கேட்டது. வசந்த் எழுந்து சென்று வாசலில் பார்த்தான். "ஓ... பிரியா... வாட் எ சர்பிரைஸ்... இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக் கொண்டிருந்தோம்...'' வசந்த், நடிகை பிரியாவைப் பார்த்த பரவசத்தில் வழிவிட்டு வரவேற்பறைக்கு அழைத்தான்.
"நீங்க என்னைப் பற்றி என்ன பேசினீர்கள் என்று நான் சொல்லவா?''
"உங்கள் யூகம் சரியா என்று பார்க்கிறேன், சொல்லுங்கள்.."'
"லண்டனில் நான் ஓடிவந்து கணேஷிடம் "இங்கே யாரும் பிரா அணிவதில்லை' என்று சொன்னேனே அதைத்தானே?''
"அதற்கு கணேஷ், "தெரியும்' என்றார். நீங்கள் "நானும்தான்' என்றீர்கள். கணேஷ் உடனே "தெரிகிறது' என்றார்''
"சரியாக யூகித்தேன் பார்த்தீர்களா?'' என்றாள் பிரியா.
"நாங்கள் இதைப் பற்றிப் பேசவில்லை"
"பின்பு விலாவரியாக சொல்கிறீர்கள்..?'' அவளுடைய கேள்விக் குலுங்களில் இப்போதும் அணியவில்லை என்று தெரிந்தது.
"மறக்க முடியுங்களா?''
கணேஷ் உள்ளேயிருந்து "யாரது?'' என்றபடி வெளியே வந்தான்.
பிரியா பவ்யமாக எழுந்து "போனவாரம் சுஜாதா சிருஷ்டி படிச்சேன்... உடனே புறப்பட்டு வந்துட்டேன். நானும் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்றேனே?'' என்றாள்.
"ஆமாம் பாஸ். இருக்கட்டும்''- வசந்த் அனுமதி கேட்டானா, அறிவித்தானா என்பது தெரியவில்லை.
(அடுத்த வாரம்)

வியாழன், மார்ச் 03, 2011

பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்!

தமிழ்ஸ்டுடியோ.காம் -இல் நூல் அறிமுகம்




அரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.

வாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள்? யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..?

பத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.

கொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.

சில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்?

வெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.

குல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

நேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார்? என இதில் ஒரு பகுதி வருகிறது.

தாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.

நேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.

அடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)

குல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.

இதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.

மறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.

சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அவரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.

ஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.

செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:

நேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.

அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.

குல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கும் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.

பதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.

ஸ்கூப்
குல்தீப் நய்யார்,

மதுரை பிரஸ்,
60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 33.
மின்னஞ்சல்: maduraipress@gmail.com

செவ்வாய், மார்ச் 01, 2011

ஒரு கலால் ஆணையரின் கடைசி நிமிடங்கள்!





எஸ்.வி.ராமகிருஷ்ணனை நான் நேரில் பார்த்ததில்லை. இனியும் அது முடியாது.

அது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் என்ற அவருடைய நூல்கள் மூலமாக அவரை அறிந்திருந்தேன். கல்லூரியில் இயற்பியலை படித்திருந்தாலும் அனுபவரீதியான சரித்திரத் தகவல்களின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தின் மூலமாக இந்த நூல்கள் எனக்குப் பிடித்திருந்தன. வெட்டுப்புலி நாவல் எழுதிய போது அதில் சுதந்திரத்துக்கு முந்தைய இருபது, முப்பது ஆண்டுகள் குறித்து அதில் சில தகவல்களைப் பெற்றேன். இப்போது ஞாபகம் இருப்பது நாற்பதுகளின் மையம் வரை சென்னை லயோலா கல்லூரிக்கு அருகே எலக்ட்ரிக் ரயில்கள் நிற்பதில்லை என்ற தகவல்.

மற்றபடி தினமணியில் ஏதாவது சரித்திரப் பிழைகள் வந்தால் அதை தொலைபேசியில் தெரிவிப்பார். உரிய நபரிடம் அதை தெரிவிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசுவார். செல்போன் சுவிட்ச் ஆஃப் என்பதாலோ யாரும் போனை எடுக்கவில்லை யென்றாலோ விட்டுவிடமாட்டார்.

மறுமுறையும் தொடர்பு கொண்டு, ""நான் நேற்று மாலை 3.38க்கு போன் செய்தேன். நீங்கள் எடுக்கவில்லை. ஒருவேளை வண்டியில் சென்று கொண்டிருந்திருக்கலாம்'' என்பார். அதில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே உரிய புள்ளிவிவரத் துல்லியம் இருக்கும்.

வெட்டுப்புலியை இவருக்கு அனுப்பி வைத்தேன். அதன் ஒவ்வொரு பத்தாண்டுகள் படித்து முடித்ததும் எனக்குப் பேசினார். உங்கள் வயசு என்ன என்று ஆர்வமாகக் கேட்டார். 45 என்றேன்.

"இந்த வயசுக்கு இந்த நாவல் சவாலான வேலைதான். உங்களுக்கு வரலாற்றை கற்பனையில் பார்க்கும் பார்வை இருக்கிறது'' என்றார்.

இரண்டு முக்கியமான பிழைகளை நாவலில் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்திவிடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.

"நாற்பதுகளில் சென்னையில் நிறைய பேர் குழாய் பேண்ட் அணிந்திருந்தார்கள் என்று ஒருபதம் வருகிறது. எனக்குத் தெரிந்து அப்போதெல்லாம் பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்று சொல்லுவார்கள். பேண்ட் என்பது அமெரிக்கப்பதம். ட்ரவுசர் இங்கிலாந்து பிரயோகம்'' என்றார்.

இரண்டாவது பிழை அதே நாற்பதுகளில்.. "ஆறுமுக முதலியாருக்கு மோரீஸ் மைனர் கார் வாங்க வேண்டும் என்று ஆசையிருந்தது என்று எழுதியிருக்கிறீர்கள். அப்போது மோரிஸ் என்ற மாடல் இருந்தது. அதில் மைனர் மாடல் வந்தது 50 களில்தான் வந்தது'' என்றார்.

"உங்கள் நாவலுக்கு நூறுவயது மதிப்பிடலாம். அதாவது நூறுவருஷம் நிற்கும்'' என்று பாராட்டினார்.

அவரைப் பற்றி எனக்கு இந்த அளவுக்குத்தான் அறிமுகம். அது என்னை நானே பாராட்டிக் கொள்வது போல அமைந்து போனதற்கு நான் பொறுப்பு இல்லை. அவர் என்னிடம் பேசியது அவ்வளவுதான். இதில் அவர் என் நாவலில் சொன்ன குறைகளையும்தான் சொல்லியிருக்கிறேன்.

எஸ்.வி. ராமகிருஷ்ணன் கோவை தாராபுரத்தில் 1936 ல் பிறந்து, ஐ.சி.எஸ். படித்து (இன்றைய ஐ.ஏ.எஸ்.) கலால் துறையில் ஆணையராக இந்தியாவின் பல இடங்களில் பணியாற்றியவர். இப்போது ஐதராபாதில் இருக்கிறார் என்பது உயிர்மையில் வெளியான அவருடைய புத்தகத்தில் உள்ள தகவல்கள்.

அவர் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி (2011) காலை கேன்சர் காரணமாக உயிரிழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்னால் அவரிடம் உதவி ஆணையராகப் பணியாற்றிய சுந்தரம் என்பவர் (அவசரத்தில் அவருடைய பெயரை குறித்து வைக்கத் தவறிவிட்டேன். ஞாபகத்தில் இந்த பெயர்தான் இருக்கிறது.) எனக்கு போன் செய்தார். "ஐதராபாதில் உங்கள் நண்பர் எஸ்.வி. ராமகிருஷ்ணனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உங்களுக்கு அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

நான் உடனே எஸ்.வி.ஆரின் செல்போனுக்குப் பேசினேன். அது ஆஃப் செய்திருந்தது. அவருடைய வீட்டு எண்ணுக்குப் பேசினேன். அதை யாரும் எடுக்கவில்லை. அதோடுவிட்டுவிட்டேன். என்னுடைய முயற்சி அவ்வளவுதான். ஆனால் அவர் அத்தனை சுலபமாக விட்டுவிடக் கூடியவர் அல்ல.

தமிழ் ஸ்டுடியோ டாட் காமில்

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

இன்று சுஜாதாவின் மூன்றாம் நினைவுநாள். அதன் பொருட்டு இந்தத் தொடர்கதை!




சுஜாதாவின் சிருஷ்டி

"என்ன பாஸ்.. ஹெள ஈஸ் லைப்?''
வாழ்க்கை பற்றியெல்லாம் விசாரிக்கும் வசந்தை பெருந்தன்மையுடன் பேராசிரியர் போல பார்த்தான் கணேஷ்.
"வயசாயுடுச்சி வசந்த் உனக்கு..''
"யாருக்காவது ரேகை பார்க்கலாம் என்றால்... வேண்டாம் அங்கிள் என்று அலறுகிறார்கள்''
கணேஷ் சிரித்தான். "வேறு முயற்சிகள் தேவைப்படுகிறது..''
"சுஜாதா சார் இல்லாமல் போனதால் நாம் அப்டேட் ஆகாமல் போயிட்டோம். இருப்பதை வைத்து வண்டி ஓட்டினால் இப்படித்தான்.''
கணேஷ் ஆமோதிப்பதுபோல சிரித்தான்.
தம்முடைய நல்லது, கெட்டது, சவால், வெற்றி, சாதனை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவரை சற்றே ஆகாயத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டான்.
"நாம் யார் யாருக்கோ வாதாடினோம். அவருக்காக வாதாட நமக்கு வழியில்லாமல் போய்விட்டது.. பச்''
"ஏன் பாஸ் அப்படி சொல்கிறீர்கள்?''
"ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் பார்த்தியா?''
"இலக்கியத்தில் அவருடைய இடம் அவருடைய சயின்ஸ் பிக்ஸன் கதைகள், புறநானுறு.. அகநானுறு உரைகள் போன்ற பலவற்றையும் கறராக விமர்சனம் செய்திருக்கிறார். வாசகரை அதன் ஆழத்துக்குக்குக் கொண்டு செல்லாமல் திசை திருப்புபவை என்றும் வணிகரீதியான எழுத்துக்கு ஆட்பட்டவர் என்றும் எழுதியிருந்தாரே.''
கணேஷ் "ஏதாவது பதிலடியாக செய்ய வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது. உனக்குத் தோன்றவில்லையா?''
"பாஸ் உங்களை இவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்லை.''
"பட்டிருக்கிறேன். வெளியில் காட்டிக் கொள்வதில்லை. லண்டனில் ப்ரியா இறந்து போனதாக நம்ப வைக்கப்பட்டபோது.. பிரிவோம் சந்திப்போம் மதுமிதா ஆக்ஸிடண்டில் இறந்தபோது.. இப்படி நிறைய ஆனால் இது வருத்தமில்லை.. ஆதங்கம்''
"என்ன செய்யலாம் சொல்லுங்கள் பாஸ்?''
"இலக்கிய சர்ச்சைகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.... ஏற்கெனவே தலைவருக்கும் ஜெயமோகனுக்கும் சண்டையில்தான் நட்பே ஏற்பட்டது தெரியுமா? ரப்பர் நாவலுக்காக அவர் அகிலன் விருது பெற்ற போது தமிழில் நாவல்களே வரவில்லை என்பதாகப் பேசினார். நம்ம தலைவருக்கு கோபம். "விருது வாங்கும்போது நம் எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸய்யா மனப்பான்மை வந்துவிடுகிறது. தமிழலக்கியம் பற்றி எதையாவது குறிப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு எதையாவது சொல்கிறார்கள்.'. என்று ஆரம்பித்து ஒரு கட்டு கட்டினார். அதன் பிறகு ஜெயமோகனும் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று மறுத்துக் கூறிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. அதற்கப்புறம் இரண்டு பேரும் ஆழ்வார்கள் பற்றியெல்லாம் மிகவும் சிலாகித்துப் பேச ஆரம்பித்து நன்றாகவே பழகிவிட்டார்கள்.''
"இப்போது?'' வசந்த் அலுப்புடன் கேட்டான்.
"சுஜாதா இறந்த அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவருடைய நினைவைப் போற்றியவர் ஜெயமோகன். இருக்கட்டும். ஜெயமோகன் சொன்னது இலக்கிய உலகம் சார்பான கேள்வி. அவர் பிரதிநிதி. எல்லோர் சார்பாகவும் அந்தக் கேள்விகளைப் பார்க்கிறேன். இன்னும் சிலரோ காமெடியாக எழுதுவாரே அவரா என்கிறார்கள். வேறு சிலரோ அவரை செக்ஸியாக எழுதுபவர் என்கிறார்கள். விவாதம் என்று வந்துவிட்டால் அதற்குப் பொருத்தமாக பதில் சொல்லியாகவேண்டும். இதுபோன்ற கேள்விக்கெல்லாம் தலைவர் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.''
"75-ல் சொர்க்கத் தீவு எழுதியபோதே அவர் ஆங்கிலக் கதைகளைக் காப்பியடித்து எழுதுகிறார் என்று பிரச்சினை வந்தது.. அந்த நாவலுக்கான முன்னுரையில் அவர் யாரையெல்லாம் காப்பியடித்து அந்த நாவலை எழுதினார் என்று பட்டியலிட்டவர்களுக்கு மேற்கொண்டு அவரே வேறு சில எழுத்தாளர்களின் நூல்களையும் சொன்னார்.''
"வசந்த் நீ எனக்குக் கிடைத்தது வரம். இருக்கட்டும். அதில் அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் "1984'-ஐயும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "பிரேவ் நியூ வேர்ல்டை'யும், ஐரா லெவினின் "திஸ் பர்பெக்ட் டே'வையும் காப்பியடித்து எழுதினார் என்று சொன்ன குற்றச்சாட்டுகளை சுஜாதாவே வழிமொழிவார்... ஆர்தர் கிளார்க், பே பிராட்பரி, ஹென்ரி ஸ்லெஸர், தியோடர் ஸ்டர்ஜென், ஆன்டனி பர்கெஸ் என அதைப் போல எழுதிய எல்லாரையும் சொல்லுவார். நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே காப்பியடிக்க வேண்டும் என்பார்.''
"காப்பியடிப்பதற்கும் ஒரு ஐடியாவை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது என்பது வேறு. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க அந்த அய்யங்கார் என்ஜினியர் படுகிறபாடு.. ரொம்ப காமெடி... அந்தத் தீவில் சிறுநீர் கழிப்பதை உடலில் இருந்து நீர் அகற்றுவது என்பார்கள்... செக்ஸ் உணர்வுகள் அற்ற பெண்கள்... பெண்களும் ஆண்களைப் போலவே பொது இடத்தில் பனியனைக் கழற்றுவார்கள்... அந்த அய்யங்கார் குறுகுறுவென குற்றம்புரிய தயாராகிற இடம்.. ''
"போதும் நிறுத்து''
"சாப்பிட பால் வேண்டுமா என்று கேட்கும்போது... "இங்கே பாலே இல்லை என்று நினைத்தேன் என்றேன், சிலேடையாக' என்பான்''
"போதும் வசந்த்... இப்போது சுஜாதாவை பாராட்டிக் கொண்டிருப்பதற்காகவா உன்னை வரச் சொன்னேன்?''
"இரண்டு பேரும் மாறி மாறி பாராட்டிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. விவாதிக்க வேண்டும்.''
"அவருடைய இலக்கிய பங்களிப்பு, சினிமா பங்களிப்பு.. அறிவியல் பங்களிப்பு எல்லாவற்றையும் அலச வேண்டும்''
வசந்த் தன் பாஸ் ஏதோ புதிதாக சொல்ல வருவதை உத்தேசித்து காத்திருந்தான்.
"இன்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு நீதான் சுஜாதாவின் பரம விரோதி... சுஜாதா பற்றி என்னென்ன புகார்கள் உண்டோ அத்தனையும் சொல். நான் பதில் சொல்கிறேன்.''
"ஐயோ பாஸ்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கிற 17 மாடி கட்டிடத்தில் இருந்து கீழ குதிக்கச் சொல்லுங்க குதிக்கறேன். மெட்ராஸில் எல்.ஐ.சி.க்கு அப்புறம் உயரம் அதுதானே பாஸ்?''
"கடிக்காதடா.. சீக்கிரம் சுஜாதாவின் விரோதியாக மாறு...''
"எப்பிடி பாஸ் அவருக்கு பரமவிரோதியா...?''
"நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?''
"என்ன ஆச்சு பாஸ்... இது "கௌரவம்' படத்தில் சிவாஜி பேசுகிற டயலாக்''
"தெரியும்.. இதுதான் சுஜாதா கோர்ட். நீதான் பப்ளிக் பிராஸிக்யூட்டர்.. சுஜாதாவின் பரமவிரோதி. ஆரம்பி.''
(அடுத்த வாரம்)

புதன், பிப்ரவரி 23, 2011

தனிமையின் இசையில் அய்யனார்

தனிமையின் இசையில் அய்யனார்
எழுதியிருக்கும் விமர்சனத்தின் ஒரு பகுதி. முழுதும் படிக்க மேலே சொடுக்கவும்.


எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. நன்றி தமிழ்மகன்

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்

வெட்டுப்புலி குறித்து... சுரேஷ் என்பவர் எழுதிய விமர்சனம்... மேலும் படிக்க கீழே சொடுக்கவும்....

தமிழகத்தில் 1930 முதல் இப்போ வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் நடக்குது. பல தருணங்களில் உண்மை சம்பவங்களுக்கு நடுவில் கதை நடப்பது, சுவாரஸ்யமானது. எனக்கு புடிச்சிருந்த்து. என்னுடைய கதைகளும் அந்த மாதிரி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைவதால், எனது கருத்துக்கு ஒத்து வந்த மாதிரி இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி முதல் கொள்ளைக்காரன் ஆட்சி வரை கதை சொல்லப்படுகிறது. நடுவில் அரசியல், சாதி, சாமி, மருத்துவம், சினிமா, மேல்படிப்பு, இந்திய பிரிவினை, காந்தியின் தொடக்கமும் கொலையும், சுதந்திர இந்தியாவின் தலைவர்களும், நேரு குடும்பமும், இந்திராவின் கொலையும், சஞ்சய் காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையும், அவரது விசித்திரமான மரணமும், ராஜிவ்காந்தி மரணமும், அண்ணா பெரியாரும், எம்.ஜி.ஆர். கருணாநிதியும், கூடவே ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர். சிவாஜியும், எம்.ஜி.ஆர். ரஜினியும், ரஜினி கமலும், ஸ்டாலின் அரசியலும், ஸ்டாலின் பெண் கடத்தலும், வைகோ மதிமுகவும் என எல்லாமே வரும்.

படிச்சு முடிச்ச போது ஏதோ வரலாறு புத்தகம் படிச்சு முடிச்ச மாதிரி இருந்திச்சு.

கதைக்கு நடுவில் வந்து இவ்வளவையும் அவங்க கதையோட சேத்து சொல்லறாங்க, இந்த கதையின் நாயக, நாயகியர். நாப்பது அம்பது வருடங்களாக ரெண்டு குடும்ப கிளைகளில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

ஒருத்தர் ஒரு ராத்திரிலே ஒரு சிறுத்தையை தனியா கொன்னுடுறார். அது பெரிய விஷயம். அதுக்காக ஒரு புதிய தீப்பட்டி கம்பெனி, அதை அவங்க கம்பெனி அடையாளமா உபயோகம் பண்ணிகுறாங்க. அதுதான் வெட்டுப்புலியின் துவக்கம்.





வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்

புது எழுத்துக்கு விருது

தஞ்சை தமிழ் பல்கலை கழகம் சிறந்த சிற்றிதழுக்காக வழங்கும் விருது ” புது எழுத்து” சிற்றிதழுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ 150000 /லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு. இதை தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து மனோன்மணி தனிப்பட்ட முயற்சியால் நடத்தி வருகிறார். மொழியாக்கங்கள் இலக்கிய விவாதங்களை அதிகமாக வெளியிடுகிறது புது எழுத்து.
நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு புது எழுத்து வெளியிட்ட சிறப்பு வெளியீடு மகத்தானது. முன் சொல்லப்பட்ட சாவின் சரித்திரம் என்ற மார்க்வெஸ்ஸின் குறுநாவலொன்று அசதாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்தது. மிக அற்புதமான மொழி பெயர்ப்பு.

மனோன்மணி தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர் மனோன்மணிக்கும் புதுஎழுத்துக்கும் வாழ்த்துகள்

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

ஒரு பழைய செய்தி

மணிக்கொடி இதழை நடத்திய ஸ்டாலின் சீனிவாசன்தான் பராசக்திக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிய தணிக்கை அதிகாரி என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆகவே அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
``பராசக்திக்கு தடை போடும் முயற்சி தோல்வி!- படம் நன்றாக இருப்பதாக தணிக்கை அதிகாரி பாராட்டு!
"பராசக்தி"க்கு தடை விதிக்க, பலமுனைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. படத்தைப் பார்த்த தலைமை தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்!
``பராசக்தி" படத்துக்கு கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் வலுத்தது. படத்தில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பத்திரிகை வாயிலாக உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார், கருணாநிதி.
"பராசக்தி"க்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக சிலர் நடத்திக் கொண்டிருந்தனர். தடை விதிக்கக்கோரி, தலைமை தணிக்கை அதிகாரிக்கு தந்திகள் குவிந்தன. அப்போது தணிக்கை குழுவின் தலைமை அதிகாரியாக `ஸ்டாலின்' சீனிவாசன் இருந்தார். இவர், ``மணிக்கொடி" என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி, புதுமைப்பித்தன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், புகழ்பெறக் காரணமாக இருந்தவர். அவர் ஸ்டாலினைப் போன்ற மீசை வைத்திருந்ததால் `ஸ்டாலின்' சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அவர் ``பராசக்தி" படத்தைப் பார்த்தார். சாதாரணமாகப் பார்க்கவில்லை. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அந்த மாதிரி பார்த்தார். கடைசியாக அவர் வழங்கிய தீர்ப்பு: ``பராசக்தியில் ஆட்சேபகரமான காட்சி எதுவும் இல்லை. எனவே, படத்துக்கு தடை விதிக்கவோ, காட்சிகளை வெட்டவோ வேண்டிய அவசியம் இல்லை".இப்படி அறிவித்த தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்!
``பராசக்தி" பற்றி பத்திரிகைகளில் நடந்த விவாதமும், அதற்கு தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பும், ``பராசக்தி"க்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. எனவே, தியேட்டர்களில் முன்னிலும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. தினமும் ``ஹவுஸ்புல்" தான்.
படத்தின் ``கிளைமாக்ஸ்", பராசக்தி கோவிலிலேயே சிவாஜியின் தங்கையாக நடிக்கும் ஸ்ரீரஞ்சனியை பூசாரி கற்பழிக்க முயலும் காட்சியாகும். நடந்ததை அறிந்த சிவாஜி, பூசாரியை பழிவாங்க பராசக்தி சிலைக்கு பின்னால் பதுங்கியிருப்பார்.
``நீ தீர்க்காயுசா இருப்பே" என்று ஒரு பக்தனிடம் பூசாரி கூறும்போது, ``ஏய், பூசாரி! முதலில் உன் ஜாதகத்தை கணித்துக்கொள்" என்ற குரல் அசரீரி மாதிரி கேட்கும்! சிவாஜியின் குரல்தான் அது!
பூசாரி: யார் அம்பாளா பேசுவது?
சிவாஜியின் குரல்: அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?
பூசாரி: தாயே! பராசக்தி!
சிவாஜி (வெளியே வந்து): இந்த பராசக்தி உனக்குத் தாய். என் தங்கை கல்யாணி உனக்கு தாசி! அப்படித்தானே! மானங்கெட்டவனே!
பூசாரி: அப்பனே! இது என்ன விபரீதம்?
சிவாஜி: விபரீதம் வராது என்று எண்ணித்தானே என் தங்கையோடு விளையாடி இருக்கிறாய்?
பூசாரி (பராசக்தி சிலையைப் பார்த்து): தாயே, பராசக்தி!
சிவாஜி: அது பேசாது. பேசமுடியும் என்றால், நீ என் தங்கையின் கற்பை சூறையாடத்துணிந்தபோது, ``அடே பூசாரி! அறிவு கெட்ட அற்பனே! நில்" என்று தடுத்திருக்கும். உன்னிடம் சிக்கிய போது, இந்தப் பராசக்தியை என் தங்கை ஆயிரம் முறை அழைத்தாளாமே! ஓடி வந்து அபயம் அளித்தாளா?

பூசாரி (கூட்டத்தினரைப் பார்த்து): பக்த கோடிகளே! பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே!
சிவாஜி: தேவி பக்தனே! மனித உதவியை ஏன் நாடுகிறாய்? உன் தேவியின் கையில் சூலம் இருக்க, சுழலும் வாள் இருக்க ஏன் பயந்து சாகிறாய்? (இந்த சமயத்தில், சிவாஜியை வெட்டுவதற்கு அரிவாளை பூசாரி ஓங்க, சிவாஜி அதைப்பிடுங்கி பூசாரியை வெட்டுவார்.)
சிவாஜி மீதான வழக்கு விசாரணை படத்தில் ஏறத்தாழ கால்மணி நேரம் இடம்பெறும். குற்றச்சாட்டுகளை மறுக்காமல் சிவாஜி சொல்வார்:
`கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக! பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி, பகல் வேஷமாக ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக!"
இவ்வாறு சிவாஜி கூறும்போது, ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் தியேட்டரை குலுங்கச் செய்யும். ``பராசக்தி"யின் வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகியது. வசனம் முழுவதும் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டது.
``காலத்தை கணிக்க, கி.மு., கி.பி. என்று கூறுவது போல, தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுத வேண்டுமானால் பராசக்திக்கு முன், பராசக்திக்குப்பின் என்று பிரிக்கலாம்" என்று சில விமர்சகர்கள் எழுதினர்.
``பராசக்தி" படத்தில் நடிக்க, சிவாஜி கணேசனுக்கு மாதம் ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டது. இதை சிவாஜியே குறிப்பிட்டிருப்பதுடன், ``பராசக்தியில் இலவசமாக நடிப்பதற்குக் கூட தயாராக இருந்தேன்" என்றும் கூறியுள்ளார்.
``பராசக்தி" படத்துக்குப்பின் சிவாஜியின் ஊதியம் பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க அவர் வீட்டு முன் பட அதிபர்கள் குவிந்தனர்.

LinkWithin

Blog Widget by LinkWithin