வியாழன், ஜூலை 28, 2011

எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து

அன்பு தமிழ்மகன்


விருது பெற்றதற்கு வாழ்த்துகள்,


உங்கள் நாவலை இரண்டு மாதங்களுக்கு முன்பே வாசித்துவிட்டேன், சமகால தமிழக சூழலை மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்,
நாவலின் ஊடாக வெளிப்படும் பகடியும் உள்ளார்ந்த கோபமும் அசலானவை


எனக்கு நாவலை மிகவும் பிடித்திருந்தது,


மிக்க அன்புடன்
எஸ்ரா

புதன், ஜூலை 27, 2011

வெட்டுப்புலி' நாவலுக்கு ரங்கம்மாள் விருது



கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய "வெட்டுப்புலி' நாவல் தேர்வாகியுள்ளது.
÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி:
÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய "வெட்டுப்புலி' நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.
÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், இந்த நாவலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
÷தமிழ்மகனின் "வெட்டுப்புலி' நிகழ்கால சரித்திரத்தை பதிவு செய்யும் முறையில் அமைந்த நாவல். சமூக வரலாறை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 1910-2010-க்கு இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளைச் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது.

புதன், ஜூலை 06, 2011

வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு

காலை(6.7.11)யில் கவிஞர் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்தேன்.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் எழுதிய வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது என்றார்.

வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் ஒரு ஆண்டுக்குள் ஒரு நூல் இரண்டாம் பதிப்பு வெளியாவது இதுவே முதல்முறை என்றும் சொன்னார்.
ரொம்ப பெருமையாக இருந்தது.
பிளாகில் எழுதிவரும் இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பே இந்த நூலின் விற்பனைக்குப் பெரும் பங்கு வகித்தது.
யுவகிருஷ்ணா, ஆதிஷ, கிருஷ்ண பிரபு, கேபிள் சங்கர், தனிமையின் இசை அய்யனார், ரோமியோ, சுரேஷ், சிவராமன், கிழக்கு ஆர். முத்துக்குமார், சொல்வனத்தில் எழுதிய க.குணசேகரன், புத்தகம் பேசுது இதழில் எழுதிய ஆய்வு மாணவர் ஐ. சிவகுமார், தமிழ் ஸ்டூடியோ அருண் போன்ற பலர் வெட்டுப்புலி நாவல் குறித்து தங்கள் விமர்சனங்களை, பாராட்டுகளை பகிர்ந்து கொண்டார்கள்

யுகமாயினியில் கவிஞர் மதுமிதா எழுதிய நீண்ட ஆய்வும் வடக்கு வாசலில் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா ஆய்வும் பெருமை சேர்ப்பவை. புதுச்சேரி பேராசிரியர் ராஜ்ஜா, எழுத்தாளர் பாரதிவசந்தன், நாடகக் கலைஞர் பாரதி மணி, விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் போன்றோரும் நாவலைப் படித்துவிட்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர்.
எழுத்தாளர் ஜெயந்தன் நினைவுப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம் என் நன்றியைத் தெரிவித்தபோது இத்தனை அரிய நாவலைத் தந்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியது பெருமையிலும் பெருமை.
நாவலை வெளியிட்டுச் சிறப்பித்ததோடு நாவல் எழுதவதற்கு முன் பேசியிருந்தால் இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லியிருப்பேன் என நெகிழ வைத்த எங்கள் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அண்ணாவின் வாழ்க்கை வரலாறை பென்குவின் பதிப்பகத்துக்காக எழுதிய கண்ணன் என ஊக்கமளித்தவர்களை பட்டியல் இட்டால் பெரிய பெயர் பட்டியலாகிவிடும்.
பாதிநாவல் படித்தேன். அண்ணன் படிப்பதற்காக வாங்கிச் சென்றார்.. முழுதும் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று சொன்ன எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன், உங்கள் நாவல் பற்றி கேள்விப்பட்டேன்.. விரைவில் படிக்கிறேன் என்று சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தினத்தந்தி, இந்து, தினமணி, தினமலர், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளியான விமர்சனமங்கள் நாவலை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின.
காலச்சுவடு இதழில் கவிஞர் பெருந்தேவி விமர்சனம் எழுத இருக்கிறார்... பெரும்பாலும் அடுத்த இதழில் வெளியாகலாம் என்று சொன்னதற்காக அதன் பொறுப்பாசிரியர் தேவிபாரதிக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், ஜூலை 04, 2011

துமரியா

இந்த வார கல்கி(10.7.11)யில் என் சிறுகதை










இ‌ந்​த‌க் க‌தை எ‌ந்த ஆ‌ண்​டி‌ல் நட‌க்கிற‌து, எந்த நாட்டில் நடக்கிறது எ‌ன்​ப‌து என‌க்கு அ‌த்த‌னை ‌து‌ல்லியம‌ாக‌த் ‌தெரியவி‌ல்‌லை. இ‌ப்போதிரு‌க்கிற அரசிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் பலர் அ‌ப்போது சி‌லையாக‌வோ, பு‌கை‌ப்படமாகவோ ம‌ட்டு‌மே எ‌ஞ்சியிரு‌ந்தன‌ர்.

பாராளும‌ன்ற‌த்தி‌ன் ம‌ாடி அறையி‌ல் ஒரு ‌பொறு‌ப்ப‌ான பதவியி‌ல் இ‌த்த‌னை அவ ந‌ம்பி‌க்கையோடு நி‌ன்று ‌கொண்டிரு‌ப்பத‌ற்கு வரு‌த்தம‌ாக‌த்த‌ான் இரு‌ந்த‌து. அரசிய‌ல் ‌நெரு‌க்கடி. எ‌தை‌க் ‌கே‌ட்ட‌ாலு‌ம் என‌க்கு‌த் ‌தெரிய‌ாது எ‌ன்பதை‌யே பதில‌ாக‌ச் ‌சொல்ல ‌வே‌ண்டிய நி‌ர்ப‌ந்த‌ம். கூ‌ட்டணி‌க் க‌ட்சிகளி‌ன் ‌தொல்‌லை அதிகமாகிவி‌ட்ட‌து. எ‌ல்ல‌ாவ‌ற்று‌க்கு‌ம் பணி‌ந்‌து ‌போக ‌வே‌ண்டிய க‌ட்ட‌ாய‌ம். பிரதம‌ர் த‌ன் தொப்பியை‌க் கழ‌ற்றி ‌வை‌த்துவி‌ட்டு க‌ண்ண‌ாடி வழி‌யே பாராளும‌ன்ற ஜ‌ன்னலு‌க்கு ‌மே‌ல் இரு‌ந்த சூரியத் தடு‌ப்பை‌ப் பார்‌த்த‌ார். அ‌ந்த‌ப் புற‌ாக்க‌ள் இன‌ப் ‌பெரு‌க்க ‌வே‌ட்கையோடு ஒ‌ன்‌றை ‌நோக்கியெ‌ன்று மூ‌ச்‌சை இழு‌த்துவி‌ட்டபடி உ‌க்கு‌ம் ‌கொட்டி‌க் ‌கொண்டிரு‌ந்தன.
அறைக்குள் இருக்கும் குளிரைவிட வெளியே அதிகமாக இருக்கும் என்ற சிந்தனையை ஜன்னலோரத்திலேயே முடித்துவிட்டு இருக்கைக்கு வந்தார்.
குடியாட்சி பெற்று 12- வது பிரதமர் வரை நாடு ஓரளவுக்கு ‌ஸ்திரம‌ாக‌த்த‌ான் இரு‌ந்த‌து. குறிப்பாக 13-வது பிரதமர் எதிர்க் கட்சிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளுக்கும் பணத்தாலேயே பதில் சொன்னார். அது ஒரு விபரீத ருசியை ஏற்படுத்திவிட்டது. எதிர்க்கட்சிகள் தினம் குற்றம் கண்டு பிடித்தனர். அதுவுமின்றி அவர்களுக்கு சிரமம் வைக்காமல் நாட்டில் அத்தனைக் குற்றங்கள் இருந்தன. கமிஷன் வாங்காமல் எந்த ஒப்பந்தத்தையும் போட முடிவதில்லை. எவ்வளவு கமிஷன் வாங்கினாலும் எதிர் கட்சிகளுக்கு அதில் பாதிக்கு மேல் செலவிட வேண்டியிருக்கிறது. கமிஷன் வாங்கவில்லையென்றால் உடனே ஆட்சியைக் கலைத்துவிடுகிறார்கள். சரியானபடி கமிஷன் வாங்காததால்தான் கடந்த முறை ஆட்சியிலிருந்த கட்சி கலைக்கப்பட்டது என்பது கடைகோடி பிரஜைக்கும் தெரியும். இந்த சாதுர்யம்கூட இல்லாத இவனெல்லாம் எதற்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஹேலோகிராமில் கார்ட்டூன் போட்டார்கள்.
அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க வேண்டியிருந்தது. ​ ஆ‌ட்​சி‌க் க‌ôல‌ங்​க​ளி‌ல் பிர​த​ம​ரு‌க்​க‌ôன பிடி​ம‌ô​ன‌மே இ‌ல்​ல‌ô​ம‌ல் ‌பே‌ô‌ய்​வி‌ட்​ட‌து.​ பண‌ம் ‌பேசி​ய‌து.​ ல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் ‌பேசி​ய‌து.​ பிர​த​ம‌ர் ‌பேசு​வ​த‌ற்கு ஒ‌ன்​று​ஒன்​று​மில்​லா​மலா​கி​விட்​டது.​
தகா​ரி​லும் புரி​சா​வி​லும் நிலைமை கட்​டுப்​பாட்​டில் இல்லை.​ இன்னமும் அந்தப் பகுதிகளில் கம்யூனிஷ முழக்கங்கள் இருந்தன. மூன்று மணிக்கு ராணுவ அதி​கா​ரி​க​ளு​டன் முக்​கி​ய​மான கூட்​டம்.​ இது​வரை அங்கு மூன்று ரயில்​கள் கொளுத்​தப்​பட்​டு​விட்​டன.​ பாலங்​கள் பல தரை​மட்​ட​மா​கி​விட்​டன.​ ராணு​வத்தைக் கள​மி​றக்​கு​வதைத் தவிர வேறு வழி​யில்லை.​
நட​வ​டிக்கை​கள் எப்​படி அமைய வேண்​டும் என்று திட்ட வரையறை செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​ இரண்டு முப்​பது ஆகி​விட்​டது.​ உத​வி​யா​ளர் ராணுவ அதி​கா​ரி​கள் வந்து​விட்​டதை​யும் உள்துறை அமைச்​சர் இன்​னும் சில நிமி​டங்​க​ளில் வந்து​வி​டு​வார் என்று கூறி​விட்​டுச் சென்​றார்.​ தன்​னிறை​வைான கிரா​மங்​க​ளின் அவ​சி​யத்​தைப் பற்றிய புத்தகத்தின் பக்​கங்​களை மீண்​டும் படிக்க ஆரம்பித்தார் பிரதமர். நாட்டின் குடியாட்சிக்காகப் பாடுபட்ட மகத்தான தலைவர் எழுதிய நூல் அது. அவருடைய நிறைய கொள்கை​கள் நடை​முறை சாத்​தி​ய​மில்​லா​மல் போய்​விட்​டன.​ மனச் சோர்வான நேரத்தில் அதைப் படிக்கும்போது நகைச்சுவை ஊற்றெடுக்கும்.
உத​வி​யா​ளர் மீண்​டும் வந்​தார்..​ ​
"வந்​தாச்சா?'' பிர​த​ம​ரின் குரலைக்​காட்​டி​லும் சைகை​யால் கேட்​டதை வைத்துத்​தான் உதவியாளர் ஆமோ​தித்​தார்.​​ உள்ளே வரச்​சொல்​லுங்​கள் என்​பதை​யும் மெல்​லிய தலை​ய​சைப்​பில் உணர்த்​தி​விட்டு தொப்பியைத் தலை​யில் பொருத்​திக் கொண்​டார்.​
மொத்​தம் ஆறு​பேர் உள்ளே வந்து பிர​த​ம​ருக்கு வந்​த​னம் சொல்லி,​​ இருக்கையை நோக்கி அவர்​கை​காட்​டி​யதும் அமர்ந்​த​னர்.​ ஒரு துண்டு அமை​திக்​குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் தொண்டையைச் செறு​மி​னார்.​ அறை​யில் இருந்த மீதி அனை​வ​ரும் அவரை நோக்க ஆரம்​பித்​த​னர்.​ அவர் ஆரம்​பிக்​கட்​டும் என்ற வழி​வி​டல் அது.​
"மக்​கள் நிறைய பலி​யாவதைத் தவிர்க்க முடியாது.​ ஆனால் அதைப் பற்றி கவலைப்​ப​டாமல் தீவி​ர​வா​தி​களை ஒடுக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ மூன்று ரயில்​கள் இந்த இரண்டு மாதத்​தில் தட​ய​மில்​லா​மல் எரிந்து போயி​ருக்​கின்​றன.​ அதி​லி​ருந்த மக்​களோடு.​ காவல்​துறை​யி​னர் யாரும் அந்​தப் பிராந்​தி​யத்​தில் இனி இருக்க முடி​யாது.​ உயிர் பிழைத்து இருக்க வேண்​டு​மா​னால் காக்கி அணிந்த தாவ​ரம்​போல இருக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ மக்​க​ளின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​ மருத்து​வம் இல்லை,​​ கல்வி இல்லை,​​ நல்ல குடி​நீர் இல்லை,​​ உணவு இல்லை...​ மக்​கள் செத்துக்கொண்​டி​ருக்​கி​றார்​கள்...​ அல்​லது அலை அலை​யாக பஞ்​சம் பிழைக்க வெளியே தப்​பிச் செல்​கி​றார்​கள்.​ நம்​மு​டைய ஆபரே​ஷ​னில் சிலர் மடிய வேண்​டி​யி​ருப்​பது அவர்​க​ளின் நன்​மைக்​காக....​ அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.​''
பிர​த​மர் உள்​துறை அமைச்​சரை நோக்​கி​னார்.​ "என்ன செய்​ய​லாம்?'
"மக்​க​ளுக்​குப் பாதிப்பு ஏற்​ப​டா​மல் செய்ய முடி​யாதா...​ அதா​வது முடிந்த அள​வுக்கு...​'' அமைச்சரின் தொனி​யில்​ நம்​பிக்கை​யில்லை.​ ஒரு கடமைக்​கா​கத்​தான் கேட்​டார்.​
"முடிந்த அள​வுக்கு என்​பதை நீங்​கள் சொல்ல வேண்​டி​யதே இல்லை.​ தேவை​யில்​லா​மல் ஒரு உயி​ரும் பிரி​யாது.​''
பிர​த​மர் நாட்​டின் நிலையை விளக்க எதி​ரில் இருந்த குறிப்​புக் காகி​தங்​களை கையில் எடுத்து வைத்துக்கொண்டுபேச ஆரம்​பித்​தார்.​ "நாம் செய்து கொண்​டி​ருக்​கும் ஒப்​பந்​தப்​படி ஆண்​டுக்​குக் குறைந்​த​பட்​சம் எட்​டா​யி​ரம் டன் யுரே​னி​யத்தை துமரியாவுக்கு ஏற்​று​மதி செய்ய வேண்​டும்.​ இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பு நாம் மகத்​தான சாதனை​யைச் செய்​தோம்.​ ஆஸ்​திரே​லி​யாவே அதிர்ந்து​போ​னது.​ அவர்​க​ளுடைய யுரே​னிய சாம்​ராஜ்​ஜி​யம் பற்றி உங்​க​ளுக்​குத் தெரி​யும்.​ அந்த ஆண்​டில் மட்​டும் பனிரெண்​டா​யி​ரம் டன் அனுப்பி வைத்​தோம்.​ புரட்சியாளர்​கள் தீவி​ரம் அதி​க​மா​ன​தும் கடந்த ஆண்​டில் அது பாதி​யா​கக் குறைந்தது.​இந்த ஆண்டு சுத்​த​மாக வேலையே நடக்​க​வில்லை.​ யுரே​னி​யம் மொத்​த​மும் பிரச்னை​யாளர்​கள் இருக்​கும் அந்த இடத்​தில்​தான் இருக்​கி​றது.​ இனி ஒரு கிராம் யுரே​னி​யத்தை எடுக்க வேண்​டு​மா​னா​லும் எங்​கள் எல்​லோரை​யும் கொன்​று​விட்​டுத்​தான் எடுக்க முடி​யும் என்று சூளு​ரைக்​கி​றார்​கள்.​"
"அவர்கள் நமக்கு எவ்​வ​ளவு காலம் அவ​கா​சம் தரு​வார்​கள்?'' ஜென​ரல் கேட்​டார்.​
"சொல்​லப்போனால் அவர்​கள் கெடு முடிந்து​விட்​டது.​ அவ​கா​சமே கொடுக்​க​வில்லை.​ கொடுக்​க​வும் மாட்​டார்​கள். கேட்​க​வும் முடி​யாது'' அவ​கா​சத்தைப் பற்​றியபேச்​சுக்கே இட​மில்லை என்​பதைத்​தான் பிர​த​மர் அப்​படி உணர்த்து​வ​தற்கு முயற்சி செய்​தார்.​
"ஒப்​பந்​தத்தை முறித்துக்கொள்​வ​தற்கு ஏதா​வது வழி இருக்​கி​றதா?'' ஒப்​பந்த ஷரத்து​கள் பற்றி நன்​றா​கத் தெரிந்த அமைச்சரே இப்​ப​டியொரு கேள்​வியைக்கேட்​பது அனை​வ​ருக்​குமே ஆச்​சர்​ய​மா​கத்​தான் இருந்​தது.​ அமைச்சரே தொடர்ந்​தார்..​ "அணு ஒப்​பந்​தத்தோடு நம்​முடைய இரு​நாட்டு நல்​லு​ற​வும் சம்​பந்​தப்​பட்​டி​ருப்​பது தெரி​யும்.​ இரு​நôட்டு வர்த்​தக உற​வு​கள் பல​வும் பாதிக்​கும்.​ நம் சொந்த மக்​களேயே நாம் பலி​யாக்​கு​வதை​விட அந்த பதிப்பு குறை​வு​தானே?''
"இல்லை மினிஸ்​டர்.​ துமரியாவைப் பற்றி அப்​படி எடை​போ​ட​தீர்​கள்.​ அமெரிக்காவைவிட மோசமானவர்கள். பெட்ரோல் இருந்​தது வரை வளை​குடா நாடு​களுக்கு ராணு​வத்தை அனுப்பி வைக்க ஏதா​வது நொண்டி சாக்​கு​கள் சொன்னார்​கள் நினைவிருக்கிறதா? ஆப்​கா​னிஸ்​தான்,​​ ஈரான்,​​ ஈராக், எகிப்து...​ வரி​சை​யாக எல்லா நாட்​டி​லும் தள​வா​டங்​களைக் கொண்டு போய் நிறுத்​தி​யது போல இங்கும் நடக்கும்.​ அமைதி குலைந்து போய்​விட்ட நாடு​க​ளில் அவர்​கள்​தான் அமைதி ஏற்​ப​டுத்து​வார்​கள். புரிகிறதா? அவர்களின் அகராதியில் இருக்கும் அமைதி. நாடே ரண​க​ள​றி​யா​கும்.​ மறு​படி எழுந்​தி​ருக்க நூறு வரு​ஷம் ஆகும்.​ அல்​லது எழுந்​தி​ருக்​கா​மலே​யே​கூட போக​லாம்.​ சாம் மாமா மூக்கை நுழைக்க கார​ணங்​களே தேவைப்​ப​ட்டதில்லை. துமரியா அவர்களையே மிஞ்சிவிட்டார்கள்.​ அவர்​கள் ஏற்​ப​டுத்​தும் அமை​தியைத்​தான் எதிர்​பார்க்​கி​றீர்​களா?''
பிர​த​மர் கையை உயர்த்தி ஜென​ரலைக் கட்​டுப்​ப​டுத்தி,​​ "அவர்​கள் உள்ளே வந்து அமை​திப்​ப​டுத்து​கிறவரை நாம் சும்மா இருக்​கப் போவ​தில்லை.​ நம்முடைய போர் சாதனை​கள் எல்​லாம் எங்​க​ளுக்கு நினை​வி​ருக்​கின்​றன'' என்​றார்.​
அது​தான் பிர​த​ம​ரின் சாதுர்​யம்.​ ராணு​வத்​தின் பெருமையை ராணு​வத் தள​ப​தி​யி​டமே சொல்​லு​வது அவரை சட்டென கட்​டுப்​ப​டுத்த உத​வி​யது.​ "போர் என்​றால் தயங்​கு​ப​வர்​கள் இல்லை.​ ரிஸர்வ் ட்ரூப்பை​யும்சேர்த்து இரண்டு கோடிக்​கும் அதி​க​மான சிப்​பாய்​கள் எந்த நேர​மும் தயா​ரக இருக்​கி​றார்​கள்.​ ஆனால் அதற்​குத் தேவை​யி​ருக்​கு​மா​னல் அது நாம் இப்​போது திட்​ட​மிட்​டி​ருக்​கும் ஆபரே​ஷனை​விட அதிக பாதிப்​புடை​ய​தா​கத்​தான் இருக்​கும்.​ முதல்​கட்​ட​மாக நாம் தீவிரவாதி​களை சரிக்​கட்​டு​வது உத்​த​மம்'' உப தள​பதி முதல்​முறை​யா​கப் பேசி​னார்.​
"நிலைமை போருக்கு உகந்​த​தாக இல்லை.​ ஏற்கெனவே ஆயுதம் வாங்குவதில் கமிஷன் வாங்கி எதிர் கட்சியாளர்கள் அத்தனைப் பேருக்கும் பலமுறை கொடுத்தாகிவிட்டது. நம்பிக்கை தராத ஆயுதங்கள். நாம் கட்​டுப்படுத்தவேண்​டி​யது உள்​ளூர் பிரச்​னை​யா​ளர்​க​ளைத்​தான்.​ அவர்​க​ளுக்கு ஆரம்​பம் முதலே யுரே​னிய சுரங்​கங்​கள் அமைப்​ப​தில் எதிர்ப்பு இருந்​தது.​ பூமிக்​குள் இருக்​கும் மிகப் பெரிய பொக்​கி​ஷம்.​ நாட்​டின் வளமே அதில்​தான் புதைந்து கிடந்​தது.​ நாடு அதை வெளிக் கொண​ரு​வ​தில் உறு​தி​யாக இருந்​தது.​ மக்​க​ளுக்கு பெரும் வேலை வாய்ப்பை ஏற்​ப​டுத்​திக்கொடுத்தோம்.​ ஒட்​டு​மொத்த மாநி​லத்​தின் வறட்​சியை,​​ வறுமை​யைப் போக்க இரு​ப​தா​யி​ரம் பேருக்கு வேலை கொடுத்து​விட்​டால் மட்​டும் போதாது.​ விரை​விலேயே புதி​தாக வேலை​யில்​லா​த​வர்​கள் உற்​பத்​தி​யா​கி​விட்​டார்​கள்.​ சொற்​பம் பேர் வேலை​தேடி வெளி​மா​நி​லத்துக்​குச் சென்​றார்​கள்.​பெரும்​ப​குதி காட்​டுக்​குள் இருக்​கி​றார்​கள்,​​ ​ தலை​மறைவு பயிற்சி எடுத்துக்கொண்டு.​ நிலைமை கையை மீறிப்போய்​விட்​டது.​ அதன் பிறகு அங்கு வளர்ச்​சித் திட்​டங்​கள் அமைப்​பதும்​கூட இய​லா​த​தா​கி​விட்​டது.​ முக்​கி​ய​மாக "பசுமை தகார் திட்​டம்'.​ அதை அவர்​கள் நம்ப மறுத்து​விட்​டார்​கள்.​''
அவர்​களை நம்​பிக்கை இழக்​கச் செய்​ததுயர் குற்​றம் என்ற சந்தே​கம் பேசிக்கொண்​டி​ருந்த பிர​த​மர் உற்​பட ஏழு​பே​ருக்​கும் ஒரே நேரத்​தில் உதித்​தது.​
"முதல் கட்​ட​மாக ஐம்​பது பட்​டா​லி​யன் கள​மி​றங்கவேண்​டி​யி​ருக்​கும்..​ ஆரம்​பமே அவர்​களை கதி​க​லக்​கச் செய்ய வேண்​டும்.​ மிரட்​டலே போதும் பாதி உயி​ரி​ழப்​பைத் தவிர்க்க செய்​யும்.​ அவர்​கள கட்டை விட்டு வெளியே ஓட ஆரம்​பித்​து​வி​டு​வார்​கள்.​''
மார்​ஷல் தனது போர்​தந்​தி​ரங்​களை விவ​ரிக்க ஆரம்​பித்​தார்.​ ஜன்​ன​லுக்குவெளியே அமை​திக்​கான சின்​ன​மான புறாக்​கள் இரண்டு குதூ​க​ல​மா​கக் கொஞ்​சிக் கொண்​டி​ருப்​பதை​யும் பார்த்​தர்.​ இனிய முரண்​பாட்டை ரசித்​தா​லும் அவ​ருடைய இஸ்​தி​ரி​போட்ட முறுக்​கிய மீசைக்​குக் கீழே புன்​னகை தவ​ழ​வில்லை.​
​விளக்கு வெளிச்​சத்​தில் கூட்​ட​மாக உறங்​கிக் கொண்​டி​ருந்​த​னர்.​பெரிய குடி​லில் தோரா​ய​மாக இரு​பது முதல் நாற்​பது வய​தி​னர்.சிறிய கட்டி​லில் தலை​வர் அமர்ந்​த​படி பேசிக் கொண்​டி​ருந்​தார்.​ அவ​ருக்கு அருகே மூவர் மட்​டும் மரத் துண்​டின் மீது கூர்மை​யான கவ​னத்து​டன் செவி​ம​டுத்துக் கொண்​டி​ருந்​த​னர்.​ நடு​நிசி. வனப்பூச்​சி​க​ளின் ரீங்​கா​ரங்​கள் கேட்​டுக் கொண்​டி​ருந்​தன.
"நம்மை ஒடுக்க ராணு​வம் வரப்​போ​வ​தாக தகவல் வந்​தி​ருக்​கி​றது​.
பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடிதான் காரணம். அரசு எந்திரத்தின் மக்கள் விரோதபோக்குக்கு இன்னுமொரு அடையாளம்'' என்றார் தலைவர்.
"நாம் இங்கிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர வேண்டியிருக்குமா?'' ~ஒருதோழர் கேட்டார்.
"விலைமதிப்பில்லா தியாகத்துக்குத் தயாராகவேண்டிய கட்டாயம். போராட வேண்டிய களத்தில்தான் நிற்கப் போகிறோம். ஆனால் காட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை. நாட்டுக்குள் இருப்போம். மக்களோடு மக்களாக. அதிகபட்சம் மூன்று பேருக்கு மேல் ஓர் இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. காட்டுக்குள் நம்மைத் தேடிவரும் ராணுவத்துக்கு ஒரு தடயமும் கிடைக்கக் கூடாது. பிரிந்து இருப்போம். உணர்வுகள் இணைத்துவைத்திருக்கும். ஆயுதங்களைப் பதுக்கி வைக்க இடம் தேர்வு செய்தாகிவிட்டது.''
மொத்தம் 40 குழுக்களாக தகாரின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களுக்கும் தகவல்கள் அனுப்ப வேண்டும். பல இடங்களில் குழந்தைகளும் சிறுவர்களும் இருந்தனர். பெண்கள் பெரும் அவதியிலும் உடல் பிணியிலும் குழந்தை பராமரிப்பையும் ஆயுதப் பயிற்சியையும் மேற் கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போதிய மருத்துவ வசதியும் போஷாக்கும் இல்லாமல் பதினாறு குழந்தைகள் இறந்துபோய்விட்டன. நகருக்குள் சென்று வருவது ஒவ்வொரு முறையும் சில உயிரிழப்புகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
மூவரில் தலைவருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தவன் புரட்சிக் கூட்டத்தின் முக்கிய போராளி. கடந்த சில தினங்களாக அவனுக்குத் தொடர்ச்சியான இருமல். சளியோடு ரத்தமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
"நாம் நம் கோஷத்தைச் சற்று தளர்த்திக் கொண்டால் ராணுவ முற்றுகையை அவர்கள் ஒத்தி வைப்பார்ர்கள் அல்லவா?''​ இருமலின் ஊடே அவன் சொன்னான்.
"நம் அச்சம் அவர்களை மேலும் ஆவேசமாக ஒடுக்குவதற்குத்தான் உதவும். இது நாம் உறுதியாக நம் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டிய நேரம். செர்னோபிள், ஃபுகுஷிமா என்று எத்தனை ஆபத்துகள் வந்தாலும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனைப் பற்றி ஒருபோதும் அக்கறை இருப்பதில்லை. லாபத்தை மட்டும் குறிவைக்கும் கேவலமான தரகர்களுக்கு நிகராக மாறிவிட்டார்கள். தமிழ்நாடு என்ற பிராந்தியத்தில் இரண்டாவது முறையாக சுனாமி வந்தபோது என்ன பயங்கரம்? அந்த மாநிலத்தின் இரண்டு பக்கமும் அணுக்கரு உலை. இரண்டும் அந்த நேரத்தில் நொறுங்கிவிடப் போகிறது உலகமே பதறியது... அப்படியாகியிருந்தால் அங்கு யாராவது மிஞ்சியிருப்பார்களா? அதன் பிறகும் புத்தி வரவில்லை... அந்த மாநிலத்திலேயே மூன்றாவது அணுக்கரு உலை துவங்கப் போகிறார்களாம். லாபம், அதைக் கொண்டு மேலும் லாபம்.. மனிதர்கள் அத்தனை பேரையும் கொன்று முடித்தப் பின்னும் அந்த வெறி அடங்காது. லாபம் முக்கியமா மனிதர்கள் நலன் முக்கியமா என்பதை தீர்மானிப்பதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் தடுமாற்றம் இருக்கிறது. அவர்கள் செய்கிற முட்டாள்தனத்தால் சாவதைவிட நாமே தேர்ந்தெடுக்கும் இந்த மரணம் மகிழ்ச்சியானது?''
விளக்கம் கேட்டவன் அமைதியாக இருந்தான்.
"நாம் எந்த ரயிலையும் எரிக்கவில்லை. பழியை நம்மீது போட்டு போராளிகளைத் தீர்த்துக் கட்டும் பணியை முடுக்கிவிடுவதற்காகத்தான்... மக்களிடம் நமக்கான விரோதத்தை வளர்ப்பதற்கு. பத்திரிகைகளும் அதை பூதாகரமாக்குகின்றன. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அனுபவப் பாடங்கள் ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். இன்று நம் ராணுவம்.. ஆட்சிகள் மாறும், காட்சிகளும் மாறும். மக்கள் நலன்தான் முக்கியம். நாளை ஐ.நா. ராணுவம் வரும்... அப்போது நம்நாடும் சேர்ந்து புழுங்க வேண்டியதுதான்.. ஸ்திரத் தன்மையில்லாத நாடு. உலக அமைதிக்கே பங்கமாக இருக்கிறது என்பார்கள்... மக்களுக்கான உண்மையான ஊழியர்களாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உயிரிழப்பைக் குறைத்துக் கொள்ளத்தான் நாம் பிரிகிறோம்... உரிமைகளைக் குறைத்துக் கொள்வதற்காக அல்ல. உலக நாடுகளையெல்லாம் தம் காலடியில் போட்டுக் கொள்ள நினைப்பவர்களுக்கு அப்போது ஆளுவதற்கு மண் இருக்கும். மனிதர்கள் இருக்க மாட்டார்கள்'' தலைவரின் பேச்சு கிரீச் கிரீச் என்ற சுவர் கோழியின் சப்தத்துக்கு இடையே கேட்டுக் கொண்டே இருந்தது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன.


ஃபீல்ட் மார்ஷல் உறுதியாக இருந்தார். மலை முகட்டில் இருந்தது அந்த ராணுவ தலைமையகம். பெரிய சுருட்டை வாயில் வைத்திருந்தார். ஜன்னல் கண்ணாடியை இறக்கி சாம்பலைத் தட்டும்போது பரவசமாகப் பார்த்தார் மார்ஷல் . மக்காக் குரங்கு ஒன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தபோது பதிலுக்குச் சிரிப்பது போல இருந்தது. மிக அழகான குரங்கு. இத்தனை நாள் இந்தப் பிராந்தியத்தில் மக்காக் எதையும் பார்த்ததில்லை. மிக தூரத்தில் நுரையால் செய் மாலை போல அருவி தெரிந்தது. காட்டுத் தீ பூக்கள் கிழக்குப் பள்ளத்தாக்கு முழுதையும் செக்கச் சிவப்பாக்கியிருந்தன. இன்னும் இரண்டு மாதங்கள் சிவப்பாக இருக்கும் அந்தப் பகுதி, பின் பச்சைப் பசேலென மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு புத்தாடை.
ஜன்னலருகே இன்னஉம் ஐந்து நிமிடம் நின்றால் கவிஞனாகிவிடுவோமோ என்று அவருக்கு பயமாக இருந்தது.மீண்டும் அறைக்குள் நடந்து மறு எல்லைக்கு வந்தார்.
உள்ளூர் கலவரத்தை அடக்க உலக தாதா வந்துவிடாமல் அமர்க்களம் இல்லாமல் காரியமாற்ற வேண்டும். பிரச்னை கை மீறிப் போனால், போக வேண்டியதே இல்லை} அப்படிச் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் தந்தாலே போதும் உள்ளே நுழைந்துவிடுவார்கள். ஆற்றல் உற்பத்திக்கான ஒரே சாதனம் அணுக்கரு உலை என்று ஏற்றுக் கொண்டாகிவிட்டது. புரட்சியாளர்கள் இல்லை என்கிறார்கள். உலகில் பல நாடுகள் அணுக்கரு உலையை மூடிவிட்டன. துமரியாவிடம் குடுமியைக் கொடுத்தாகிவிட்டது. அப்படித்தான் ஆட்டுவான்.
பொறுப்பாக சமாளிக்க வேண்டியிருந்தது. முதல் கட்டமாக காட்டுக்குள்தான் வேட்டையை ஆரம்பிக்க வேண்டும்.
"பிரதமர் லைனில் இருக்கிறார்''
டெல் திரையில் செயற்கை குரல் அறிவிப்புடன் பிரதமர் அலுவலக எண் ஒளிர்ந்தது.
"சொல்லுங்கள் திரு. பிரதமர் ..''
"அங்கிருந்து கேட்கிறார்கள். ராணுவ உதவி வேண்டுமா என்று..''
"நாம் நடவடிக்கை எடுக்கப் போவது அவர்களுக்கு எப்படித் தெரியும்?''
"நம்முடைய நடவடிக்கை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.. யுரேனியம் கிடைப்பது தாமதமாவதால் உதவி வேண்டுமா என்கிறார்கள். ஆனால் உளவுத்துறையில் சில சந்தேகங்கள் தெரிவித்தார்கள். நாம் பேசும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகிறதாம். ''
"எதை வைத்துச் சொல்கிறார்கள்?''
"நாம் அன்று பேசியது ஒரு அட்சரம் பாக்கியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது''
"நம் ஆறு பேரில் ஒன்று கருப்பாடு?''
"எனக்கு யார் மீதும் சந்தேகமில்லை. யாரை நம்புவதென்றும் தெரியவில்லை... இந்த மாதிரி நேரத்தில் பிரதமராக இருப்பது தண்டனை போலத்தான்.. அடுத்த முறையாவது எதிர்கட்சி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை'' பிரதமரின் பேச்சில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.
மீண்டும் சாம்பலைத் தட்ட ஜன்னலுக்கு வந்த போது மக்காக் மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. மரக்கிளை ஒன்று முதுகில் கிழித்திருக்க வேண்டும். காயம் இரண்டு அங்குலத்துக்குக் கிழிந்து... பக்கு கட்டிப் போய் இருந்தது. இதுவரை ஒருமுறையும் அது சொறிந்து கொள்ளவில்... சட்டென்று தன் மேல் பாக்கெட்டில் இருந்த "பென்மென்' ரிவால்வரை எடுத்து குரங்கை நோக்கிச் சுட்டார். குரங்கின் மேல்பாகம் பஞ்சுபோல பறக்க, சொத்தொன்று ஓர் எலக்ட்ரானிக் டிவைஸ் கீழே விழுந்தது.
துமரியாவுக்கு அடுத்த நாட்டை நோட்டம் பார்ப்பதில் அத்தனை ஆர்வம்... பிரதமருக்குப் போன் செய்து அந்த ஜன்னல் புறாக்களைச் சுட்டுவிடும்படி சொன்னார் மார்ஷல்.


செவ்வாய், மே 31, 2011

அறிவியல் அறிவோம்

அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய இணைய தளம். அறிவியல் செய்திகளை அத்தனை எளிமையாக தருகிறார். அறிவியல் அறிவோம்.

ஞாயிறு, மே 29, 2011

என் விகடன் என் பேட்டி


கடந்த வார என் விகடனில் என் பேட்டி வெளியானது. என்னுடைய ஊரைப் பற்றிய சுருக்கமான நினைவுத் தொகுப்பு. என்னுடை எல்லா கதைகளுக்கும் ஏதோ கதாபாத்திரத்தையாவது இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமம் அது. சுருக்கமாக சொல்லியிருப்பினும் அதற்கு விகடன் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சி பிரமிப்பானது. என்னுடைய ஊருக்கு நிருபரும் போட்டோ கிராபரும் வந்திருந்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததையும் ஊரைப்பற்றி அக்கறையோடு விசாரித்தையும் பத்திரிகையாளனாக இருந்தும்கூட வியப்பாக எதிர் கொண்டேன்.

நடிகை ரேவதி முதன் முதலாக தன்னை திரையில் பார்த்தபோது அத்தனை பெரிய சைஸிஸ் தன்னைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டதாக அவர் ஆரம்பத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.
லே அவுட்டில் காட்டியிருக்கும் கவனத்தைப் பார்க்கும்போது அதற்கு சற்றே குறைவான ஓர் அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.






25.5.11 vikatan

வெள்ளி, மே 27, 2011

முகவரி மாறிவிட்டது

அ.முத்துலிங்கம் அவர்களின் வலைதள முகவரி மாறிவிட்டது. கீழ்கண்ட முகவரியை சொடுக்கவும்.

அ.முத்துலிங்கம்

ஞாயிறு, மே 01, 2011

கவர்னர் மாளிகையில் ஜெயந்தன் விருது!



எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செயல்படும் செந்தமிழ் அறக்கட்டளையின் முதலாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஜெயந்தனின் அனைத்து கதைகளையும் தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சியும் சென்னை ராஜ்பவனில் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
பாதுகாப்பு கருதி நிறைய கட்டுப்பாடுகள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அசைந்தாலும் ஆபத்துபோல அமர்ந்திருந்தனர் பலரும். செல் போனை ஆப் செய்துவிடுங்கள், கையில் டிஜிடல் கேமிரா வைத்திருந்தால் அதை பாட்டரியை கழற்றிவிட்டு பைக்குள் வைத்துவிடுங்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். தடவிப் பார்க்கும்போது என் பாக்கெட்டில் இருந்த ஹோமியோபதி மாத்திரை குப்பிகளைப் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசித்தார்கள். நான் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.
பொதுவாக இலக்கிய நிகழ்ச்சி என்றால் விழா தொடங்கிய அடுத்த வினாடி முதல் எல்லோரும் வெளியே செல்லத் தொடங்கி, உள்ளே அரங்கத்துக்குள் இருப்பவரைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் வெளியே புகைப் போக்கியபடி பேசிக் கொண்டிருப்பார்கள். இங்கே கவர்னர் எழுந்து போகும் வரை யாரும் எழுந்திருக்கவில்லை.
விழாவில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரது பேச்சுகள் சமூகமும் இலக்கியமும் என்பதைத் தொட்டுப் பார்த்துத் திரும்பின. தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன் ஜெயந்தனின் சிறுகதைகளையும் கவிதைகளையும் குறிப்பி்ட்டுப் பேசினார். இளம்பிறை தாம் தேர்வு செய்த கவிதைத் தொகுப்புகளை
உதயசந்திரன் தமிழர்கள் நிலைமை பற்றி குறிப்பிட்டார். நறுக்கென்று சுடுவதுபோன்ற பேச்சு அது. வெட்டுப்புலி நாவலை கடந்த ஆண்டே படித்ததாகக் குறிப்பிட்டு நாவலில் வரும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மக்களுக்கு நன்மை விளைவித்ததா, சீர்குலைத்ததா என்ற அடிப்படையான கேள்வி இருப்பதாகச் சொன்னார். 380 பக்க நாவலை ஒருவரியில் சொல்லச் சொன்னால் இதைச் சொல்லிவிடலாம். அவருடைய வாசிப்பு பிரமிக்க வைத்தது.
வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்கள். தோல்வியடைந்தவர்களின் வரலாற்றை இலக்கிய வாதிகள் எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னதுகூட என் நாவலுக்கு நெருக்கமாக இருந்தது.

பிரபஞ்சன்.. நாலரை நிமிடம்தான் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் நாவலைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். காலையில் கூட மீண்டும் ஒரு தரம் படித்துக் கொண்டிருந்தேன் என்றார்.
நாலரை நிமிட உரையில் என் நாவலைப் பற்றி மூன்றரை நிமிடம் பேசினார். நாவலில் வரும் பல பத்திகளை அப்படியே சொல்லிக் கொண்டு போனது ஆச்சர்யமாக இருந்தது.
கவர்னர் பர்னாலா தமிழின் தொன்மையை பல மொழிகளில் தமிழின் ஆதிக்கத்தைப் பற்றி கூறினார்.
நாடகத்துக்கு வேலு சரவணனும் மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் முனுசாமியும் கவிதைக்கு கடற்கரய், அ.வெண்ணிலா, பொன். இளவேனில், பா.சத்தியமோகன் ஆகியோரும் சிறுகதைக்கு விஜயமகேந்திரன், ஜனநேசன் உயிர்வேலி ஆலா ஆகியோரும் விருது பெற்றனர்.
வரவேற்புரையை கவிஞர் தமிழ்மணவாளனும் நன்றியுரையை ஜெயந்தன் சீராளனும் நிகழ்த்தினர்.
சிறுகதை விருதுகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசன் விழாவுக்கு வரவில்லை.

வியாழன், ஏப்ரல் 28, 2011

எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது




தகுதியான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

விருதுகுறித்த விவரம்:

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ். ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.



விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

•••

திங்கள், ஏப்ரல் 11, 2011

காதுகள் : காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.





எம்.வி. வெங்கட்ராம்



"என்ன வேலை செய்கிறீர்கள்?"

"எழுத்தாளரா இருக்கேன்.''

"அதுசரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?''

ராஜாஜி ஒரு எழுத்தாளரிடம் நடத்திய உரையாடலின் ஒரு பகுதியாக இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுத்தாளராக இருப்பது ஒரு வேலையல்ல. சொல்லப்போனால் எழுத்து எழுதுபவனைக் காப்பதைவிட அவனுடைய உயிரை வதைப்பதாகத்தான் இருக்கிறது. ஜெயகாந்தன் போன்ற வெகுசிலரே எழுத்தின் மூலமே போராடி வாழ்ந்து காட்டியவர்கள். எழுத்தாளனாக வாழலாம் என்று நினைத்த பலர் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டு மனத்தாக்குதலுக்கு ஆளானவர்கள்தான். குறிப்பாக தமிழில் இதற்கு தடுக்கி விழுந்தால் உதாரணங்கள் உண்டு.

புதுமைப்பித்தன் தொடங்கி ஜி.நாகராஜன், பிரமிள், நாரண. துரைக்கண்ணன், கோபி கிருஷ்ணன் என்று நிறையபேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தை நம்பியே ஜீவிதம் நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். எழுத்து ஒரு மனிதனை எப்படி விழுங்கும் என்பதற்கு ஒரு சாதனை உதாரணம் அவர்.

படைப்பிலக்கியத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் அறிஞர்களின் வாழ்க்கைக் கதை, சுயமுன்னேற்ற நூல்கள் என எழுதி வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. (இதை சமீபத்தில் அறம் என்ற சிறுகதையாகப் படைத்திருந்தார் ஜெயமோகன்.)

ஓயாத மன உளைச்சல். அவருக்குள்ளேயே வேறு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. காதுக்குள் எந்நேரமும் யார் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். உறங்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. எதிலும் கவனம் கொடுக்க முடியவில்லை. குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. எதையுமே கவனிக்க முடியவில்லை என்பதுதான் சரி.

இந்த அனுவபத்தை அவர் காதுகள் என்ற நாவலாக்கினார். எழுத்தாளன் தன்னை வருத்தி அந்த அனுவபத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகச் செய்யும் மாபெரும் தியாகம் அது. உன்னை யார் கேட்டார்கள் என்று வெளியிலிருந்து ஒரு நபர் சுலபமாகக் கேட்டுவிட முடியும். ஆனால் எழுத்தாளன் அப்படியொரு அனுபவத்தைத் தருவதற்காகத்தான் தவமிருக்கிறான். யாருடைய எதிர்பார்ப்பையும் பலனாக எதிர்பார்க்காமல் அதைச் செய்கிறான். அவனுக்காக எங்கோ, எப்போதோ கிடைக்கப் போகிற வாசகனுக்காக அதைச் செய்கிறான். இந்த தியாகத்துக்கு எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகாதமி கிடைத்தது.

காதுக்குள் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் சப்தம் தரும் ஹிம்சையை வாசகனுக்கு இறக்கி வைப்பதில்தான் வெங்கட்ராமின் முழு ஆளுமையும் வெளிப்பட்டிருக்கிறது. நாவலில் பார்வதியும் பரமசிவனும் சண்டை போட்டுக் கொள்ளுவார்கள். பச்சை பச்சையான வார்த்தைகள்.. கெட்ட வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சரமாறித் திட்டிக் கொள்வார்கள். பராசக்தி அந்த நாவலின் கதாநாயகன் மீது காம இச்சை கொண்டு புலம்புவாள். தன் காமத்துக்கு இணங்கும்படி ஏங்குவாள், மிரட்டுவாள், அழுவாள்...

திடீரென்று வேறுசில நபர்களும் குறுக்கிட்டுக் கத்துவார்கள். நாயகனால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. சொந்தமாகத் தொழில் செய்ய பணம் ஈட்ட கிளம்புவான் வழியிலேயே காதுக்குள் இருக்கும் நபர்கள் விவகாரம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

நாயகனுக்கு நிறைய குழந்தைகள். மனைவி கர்ப்பமாக இருப்பாள். அவளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க முடியாது. குழந்தைகள் பசியிலும் பட்டினியிலும் துவளும். குடும்பத்தைக் காக்க வேண்டிய நாயகனுக்கு இப்படியொரு பிரச்சினை. குழந்தைகள், மனைவியின் நிலைமை புரியும். ஆனால் அதை மாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாது.

மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள். மனைவி பலவீனமாக இருப்பாள். குழந்தையோ மனைவியோ இறந்து போய்விடுகிற நிலை. சைக்கிள் எடுத்துக் கொண்டு போவார். குழந்தை இறந்துபோய்விடும். அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய மருத்துவமனையில் காசு கேட்பார்கள். காசு இருக்காது. நாவலின் பரிதாபத்தின் உச்சம் இது.

குழந்தையைத்தானே அடக்கம் செய்து கொள்வதாக வாங்கி வருவார். சைக்கிளில் கேரியரில் குழந்தையை வைக்க முடியாது. முன் பக்க ஹாண்டில் பாரில் ஒரு பையில் போட்டு மாட்டிக் கொண்டு வீடு வந்து சேருவார். சைக்கிள் ஹாண்டில் பாரில் காய் காறி வாங்கிவருவதுபோல இறந்து போன தன் குழந்தையைத் தூக்கி வரும் அந்தக் காட்சி அதிர்ச்சியானது.

வறுமையின் கையாலாகத்தனத்தின் வறட்சியான சித்திரம். அங்கே குழந்தை, பாசம், நாகரிகம், பழக்க வழக்கம், மரபு, சடங்கு போன்ற அத்தனைச் சொற்களும் பொருளிழந்து தொங்கும்.

வீட்டுக்கு வந்து சேருவார். வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைப்பார். அப்போது பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு பெண் அதைப் பார்த்துவிடுவாள். எங்கள் வீட்டின் பக்கம் ஏன் புதைக்கிறாய் என்று கூப்பாடு போடுவாள். அவர் பால்மாறாமல் மீண்டும் தோண்டி எடுத்து தன் வீட்டுக்கு நெருக்கமாக இன்னொரு குழியைத் தோண்டி குழந்தையை மீண்டும் புதைப்பர். இந்தக் காட்சிகளின் போது நாம் பேசி வருகிற சமூக கோட்பாடுகள் அத்தனையும் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி எதிரில் வந்து நிற்கும்.

இறுதியில் அவர் காதுகளின் குரலில் இருந்து விடுபட்டு மீள்வதோடு கதை முடியும்.

இந்த நாவல் இப்போது என்னிடம் இல்லை. படித்த ஞாபகத்தில் இருந்துதான் எழுதியிருக்கிறேன். நாவலை மறுபடி புரட்டிப் பார்த்துவிட்டு எழுதுவதைவிட மனதில் வடுவாக பதிந்திருக்கும் காட்சியை எழுதுவது மேலும் உண்மையாக இருக்கும் என்றே நினைத்து இதை எழுதியிருக்கிறேன்.

பியூட்டிபுல் மைண்ட் என்றொரு உண்மைக் கதை நூல். ஒரு எகனாமிஸ்ட்டின் உண்மைக் கதை அது. அவருக்கும் காதுக்குள் குரல்கள் கேட்கும். பொருளாதார பெரிய மேதையான அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டு வருவதுதான் கதை. அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. எம்.வி.வெங்கட்ராமின் வாழ்க்கையேப் போலவே மிக லேசான ஒற்றுமை அந்த உண்மை மனிதனின் கதையிலும் காணக்கிடைத்தது. பியூட்டிபுல் மைண்ட் சினிமாவாகவும் வந்து ஏராளமான ஆஸ்கர் பரிசுகளையும் வென்றது.

உலுக்கி எடுக்கும் உண்மைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இது.

காதுகள்
எம்.வி. வெங்கட்ராம்
அன்னம் அகரம் பதிப்பகம்
பிளாட் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொ.பே.: 04362-279288


ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

இடம் மாறியது (2011-04-01)

பிரபஞ்சன் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவருடைய கனடா பயணம் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள அனுபவ குறிப்பு இது. படித்த போது இருவருமே என்னை நெகிழசெய்துவிட்டனர். அ.முத்துலிங்கத்துக்கு நன்றி.



பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை வர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான் வரும் வழியில் கவனம் செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.
பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார் ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’
பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும். John Steinbeck என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.
பிரபஞ்சனைப் பற்றி அந்தக்காலம் தொட்டு எனக்குள் பெரிய மதிப்பிருந்தது. ஆனால் புத்தக அட்டையில் காணப்படும் அவருடைய சதுரக் கண்ணாடி படத்தை பார்க்கும்போது ஓர் அச்சம். கடுமையானவராக இருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைச் சந்தித்தது கிடையாது. சமீபத்தில் உதயன் விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்க முடிந்தது. ஸ்டைலாக தொப்பி அணிந்து, கறுப்புத்தோல் அங்கி மாட்டி வந்த அவர் அப்படியே என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். இருபது வருடமாக பிரிந்திருந்த நண்பர்கள் சந்தித்ததுபோல அது இருந்தது. இரண்டு நிமிட நேரத்துக்கு பிறகு அவர் பேசப் பேச நானும் நண்பர்களும் நிறுத்தாமல் சிரித்தபடியே இருந்தோம். அவர் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வெளியேபோய் சிகரெட் பிடித்துவிட்டு வருவார். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுப்போம். மறுபடியும் உள்ளே வந்து அவர் பேசத் தொடங்கியதும் சிரிக்கத் தொடங்குவோம்.
பேச்சு ’வானம் வசப்படும்’ நாவலைப்பற்றி திரும்பியது. அது சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல். அதை எழுதுவதற்கு எப்படி தூண்டுதல் கிடைத்தது. சரித்திர நாவல் என்றால் வரலாறு படிப்பதில் நிறைய நேரம் போய்விடும். ஆராய்ச்சிக்குறிப்புகள் எழுதி வைக்கவேண்டும். எப்படி அந்த நாவலை எழுதி முடித்தார் எனக் கேட்டோம். அவர் ஆனந்தரங்கம்பிள்ளை நாட் குறிப்பை படித்திருக்கிறார். அப்போதே விதை விழுந்துவிட்டது. அந்த நாட்குறிப்பு வித்தியாசமானதாக இருக்கும். 18ம் நூற்றாண்டு பேச்சுத் தமிழுக்கு ஒரே உதாரணம் அந்த டைரிதான். பல இடங்களில் தமிழா அல்லது வேறு மொழியா என ஐயம் தோன்றிவிடும். அந்த டைரியை முழுக்கப் படித்து, புரிந்து அது சம்பந்தமான வரலாற்று நூல்களையும் ஆராய்ந்து முடித்த பின்னரே நாவல் சாத்தியமானது. பத்து வருடத்து உழைப்பு என்று கூறினார்.
அந்த நாவலில் பானு என்றொரு தாசி வருவாள். விருந்து ஒன்றில் அலாரிப்பு ஆடிய பின்னர் பதம் ஆடுவாள். ‘ஆறுதலாரடி? அந்த மாதொருபாகனைத் தவிர’ என்று தொடங்கும் அருமையான பாடல். இதை யார் எழுதினார்கள் என்று கேட்டதற்கு அவர் தானே அதை எழுதியதாகக் கூறினார். பல வருடங்களாக என் மனதில் கிடந்த சந்தேகத்தை அன்றுதான் என்னால் போக்க முடிந்தது.
பிரபஞ்சனிடம் எழுத்து துறைக்கு எப்படி வந்தீர்கள்? எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்? என்று கேட்டேன். நண்பர் ஜேசுதாசன் வீட்டு இரவு விருந்துக்கு அவர் வந்திருந்தார். அதே விருந்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். பிரபஞ்சன் வெளியே சென்று சிகரெட் பிடித்துவிட்டு திரும்பினார். பெரிய கதை பிறக்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது. விருந்துக்கு வந்திருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
பிரபஞ்சனிடம் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் அதுதான். அவர் ஓர் எழுத்தாளரைப் போலவே இல்லை. அந்த வீட்டு செல்ல நாய்களுடன் விளையாடினார். குழந்தைகளை இழுத்து வைத்து பேசினார். பெண்களுடன் சினிமா பற்றியும், புதுமுக நடிகைகள் பற்றியும் தொலைக்காட்சி தொடர்கள் பற்றியும் பேசினார். அவர்கள் எல்லோரும் ஒருவர் தவறாமல் அவர் பேச்சில் மயங்கியிருந்தது தெரிந்தது. என்னுடைய மனைவி அடுத்தநாள் காலை சொன்னார். ‘பிரபஞ்சன் பெரிய எழுத்தாளர். ஆனால் என்ன நல்ல மனுசன். அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சுவாரஸ்யமாக வேறு பேசுகிறார். பெரிய அறிவு ஜீவிபோல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பயமுறுத்தவில்லை. எல்லோரையும் சக மனுசராகப் பார்க்கிறார்.’ என் மனைவி தன் மனதில் தொகுத்து வைத்திருந்த எழுத்தாளர் பிம்பத்தை பிரபஞ்சன் போட்டு உடைத்துவிட்டார். என் மனைவியிடமிருந்து ஒரு நற்சான்றிதழ் லேசாகப் பெறக்கூடியது அல்ல. நாற்பது வருட காலமாக நான் அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை முடித்துவிட்டு பிரபஞ்சன் உள்ளே நுழைந்தார். அவருடைய மதுக் கோப்பையை யாரோ நிறைத்திருந்தார்கள். ‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்பொழுதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணை பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று. ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கோயிலை ஒருதரம் சுற்றிவிட்டு வீட்டுக்கு போவாள். இவளை எப்படியோ தவறவிட்டு விட்டேன். இவளிடம் கடிதம் கொடுப்பதற்கு சரியான இடம் கோயில்தான் என்று தீர்மானித்தேன். நோட்டுப் புத்தகத்தில் பக்கங்களை கிழித்து ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஐந்தே முக்கால் பக்கம் அவளை வர்ணித்தது. மீதியில் என் காதலைச் சொல்லியிருந்தேன்.
கோயிலில் அவள் சுற்றியபோது நானும் சுற்றினேன். முதல்நாள் கடிதம் கொடுப்பதற்கு போதிய தைரியம் வரவில்லை. இரண்டாவது நாள் அவள் பின்னாலேயே போய் பின்னுக்கு நின்றபடி கடிதத்தை நீட்டினேன். அவள் பெற்றுக்கொண்டாள். அதுவே பெரிய வெற்றி. வழக்கம்போல என்னுடைய முகத்தில் எறியவில்லை. துணிச்சலாக கடிதத்தை பெற்றுக் கொண்டவளுக்கு அதை ஒளித்து வைக்கும் சாமர்த்தியம் இல்லை. பிடிபட்டுப் போனாள். கடிதத்தை தூக்கிக்கொண்டு அவளுடைய அப்பா என் வீட்டுக்கு வேகமாக வந்ததை நான் பார்த்துவிட்டேன். நான் அதே வேகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி முதல் வந்த பஸ்ஸை பிடித்து காசு தீருமட்டும் பயணம் செய்து கடைசி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றேன். இருட்டிக்கொண்டு வந்தது, போக இடமில்லை. எப்படியோ சித்தப்பா தேடி அங்கே வந்து என்னை பிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போனார்.
என்னை நிற்கவைத்து ஆறுபக்க கடிதத்தையும் அப்பா வாசித்து முடித்தார். இந்த பூலோகத்தில் நான் அனுபவித்த அவமானத்தில் அதனிலும் கீழான ஒன்று என் வாழ்கையில் பின்னர் நடக்கவில்லை. கடிதத்தை வாசித்து முடித்த பிறகு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அவர் சொன்னார், ‘இவ்வளவு நல்லாய் எழுதுறாயே. இதுவெல்லாம் உனக்கு தேவையா?’ அவ்வளவுதான். என்னை தண்டிக்கவில்லை, என் எழுத்து திறமையை பாராட்டினார். எனக்குள் ஏதோ படைப்பாற்றல் இருக்கிறது என்று என்னை உணரவைத்த தருணம் அதுதான்.
’உங்களுடையது காதல் திருமணம்தானா?’ இது அடுத்த கேள்வி. ‘எனக்கு வீட்டிலேதான் பெண் பார்த்தார்கள். சொந்தத்துக்குள்ளே. அப்பா இதுதான் பெண் என்றார். நான் சரி என்றேன். உடனேயே மணமுடித்து வைத்துவிட்டார்கள். எனக்கு வேலை இல்லை. நானா கல்யாணம் வேணும் என்று கேட்டேன். திருமணம் ஆன பின்பு அப்பா என் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டார். நான் எழுத்து வேலையில் மும்முரமானேன்.’
கனடா வந்த பின்னர் அவருடைய மனைவியிடம் பேசினாரா என்று கேட்டேன். வந்த மறு நாளே தொலைபேசியில் அழைத்ததாகவும், மறுபடியும் அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) பேசப் போவதாகவும் சொன்னார். இரவு நடுநிசியாகிவிட்டது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். நானும் மனைவியும் விருந்துக்கு அழைத்த தம்பதியினரிடம் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். பிரபஞ்சனிடம் மூன்று நாட்கள்தான் பழகியிருந்தேன். ஆனால் நீண்ட வருடங்களாக அவரை தெரியும் என்பதுபோல ஓர் உணர்வு. அவரிடம் விடை பெற்றோம். இரண்டு கைகளையும் விடாமல் பற்றிக்கொண்டு விடை தந்தார்.
விருந்து நடந்தது வெள்ளிக்கிழமை இரவு. ஒரு நாள் கழித்து பிரபஞ்சனுக்கு ஒரு தொலைபேசி வந்தது. பிரபஞ்சனின் மனைவி பாண்டிச்சேரி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார். பிரபஞ்சன் அந்தச் செய்தியை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் செய்தியுடனே முழு இரவையும் கழித்தார். தன்னை ரொறொன்ரோவுக்கு அழைத்தவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அது அவருடைய பெருந்தன்மை. திங்கள் காலை ரொறொன்ரோவிலிருந்து புறப்படும் விமானத்தை பிடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தியை அழைத்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இடிபோல வந்திறங்கிய மரணச் செய்தியை கேட்டு அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். விமானத்தில் பயணம் செய்த அந்த நீண்ட தூரத்தை எப்படி அவர் தனிமையில் கழித்திருப்பார்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் பிரபஞ்சனை சுற்றியிருந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அவர் மனைவி என்ன செய்திருப்பார். அவர் உடல் நலமாக இருந்தாரா அல்லது அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதியாகிவிட்டாரா? தான் மனைவியிடம் சனிக்கிழமை காலை பேசப்போவதாக பிரபஞ்சன் சொன்னார். ஆனால் பேசினாரா என்பது தெரியவில்லை. நான் அவருக்கு என்ன ஆறுதல் கூறமுடியும். முதன்முதல் சந்தித்தபோது அவர் என்னை ஆரத் தழுவி கட்டிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன். அதையே அவருக்கு திருப்பி தருகிறேன்.
பிரபஞ்சனின் நாவலில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை சொன்னதுபோல உலகத்தில் நிச்சயமானது ஏழ்மைதான். அதை ஒழிக்க முடியாது, இடம் மாற்றி வைக்கலாம். மரணமும் அப்படித்தான், நிச்சயமானது. ஆனால் ஒரே இடத்தில் தங்காது. இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

ஞாயிறு, மார்ச் 27, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-5

"காந்தளூர் வசந்தகுமாரன் பற்றி பேச்சு வந்ததால் சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... அதில் சரித்திரக் கதைக்கான அத்தனை தரவுகளையும் பெற்றிருந்தார். சில வாக்கியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருந்தன. நிறைய பழைய தமிழ் வார்த்தைகளைச் சொல்லியிருந்தார்... உதாரணத்துக்கு குதிரை என்பதற்கு சுமார் பத்து தமிழ் வார்த்தைகள்.. இரவு என்பதற்கு.. என்ன மாதிரியான அளக்கும் முறைகள் இருந்தன என்பதற்கு...'' வசந்த் விளக்கிக் கொண்டிருப்பதைப் பாதியில் அறுத்து கணேஷ் தொடர்ந்தான்: "பொலிசை என்றால் கடன், தொய்யான் என்றால் துணி தைப்பவன், இவுளி என்றால் குதிரை, திருட்டு என்றால் கரவடம்... தவிர கழிஞ்சு, அரைக்காணி, நாழிகை என்று பழந்தமிழர்களின் அளவீட்டு முறைகளைச் சொல்லிக் கொண்டே போவார்... அதற்கென்ன இப்போது?''
"ஆசானே அவசரப்படாதீர்கள்... சரித்திரக் கதைக்காகத் திரட்டிய அத்தனை வார்த்தைகளையும் ஆவணங்களையும் படபடவென்று சொல்லிக் கொண்டே போவது சரியா? பக்கம் 156}ல் ஒரு உரையாடல்...
"கோயிலுக்கு மொத்த வருவாய் எத்தனை வேண்டுமாம் என்று கணக்கிட்டிருக்கிறீரா?'
"இறை கட்டின நிலம் முப்பத்தொன்றரையே மூன்று மாக்காணி. அரைக்காணிக் கீழ் முக்கால் நான்கு மா. முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மா, பொன் காணி...'
"விளங்கவில்லை'
"இத்தனை நுட்பமாகக் கணக்கிட்டிருக்கிறோம் என்ற சொல்ல வருகிறேன்'
இந்த விவரங்கள் பிரமிப்பானவை... ஆனால் இந்த விவரத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தின் காரணமாக உரையாடல் இயல்பாக இல்லாமல் போய்விடுகிறது...
இன்னொரு இடத்தில்,
"இரவு மிச்சமிருக்கிறது. கன்னியர் கொங்கைகளில் மச்சமிருக்கிறது. கால்களில் கெச்சமிருக்கிறது. கண்களில் அச்சம்.. கன்னங்களில் ஒச்சம்'
"ஒச்சம் என்றால்?'
"வெட்கம்'
இன்னொரு இடத்தில் பொய் என்பதற்கு என்னென்ன வார்த்தைகள் உள்ளன என்ற அவசப்பட்டியல்... கைதவம் பகர்ந்தான் என்கிறார், பொய் சொன்னான் என்பதற்கு...'' வசந்த் அடுக்கிக் கொண்டே போவதை கணேஷ் விரும்பவில்லை.
"வசந்தகுமாரன் சதி செய்தான் என்ற குற்றச்சாட்டு வரும்போது, கணேச பட்டர் சதி என்ற சொல்லுக்கு மனைவி என்ற பொருள் மட்டும்தான் தெரியும் இவனுக்கு' என்றாரே..''
"அதை நானும் ரசித்தேன். எத்தகைய அவசரத்திலும் அவரால் எழுத்தை ஆள முடிந்ததற்குச் சான்று அது. அதே நேரத்தில் சரித்திர நூலுக்கான உழைப்பை அவர் அவசர கோலத்தில் எழுதியிருக்கிறார்... காரணம் அவர் எல்லாவற்றையுமே வாரத் தொடர்களாக எழுதியதுதான். ஒரே நேரத்தில் ஆறேழு தொடர்கதைகள்... போதாதற்கு அலுவலகத்திலும் முக்கியப் பொறுப்பு.. ''
தமிழாசிரியர் கனைத்துக் கொண்டு, ""இவ்வளவு எழுதுவதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பது அவர் கையில்தானே இருக்கிறது?'' என்றார்.
"பத்திரிகை அதிபர்களின் வேண்டுகோள்கள்.. இவர் பணம் சம்பாதித்தார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அவரிடம் இருந்த திறமையை அவர் குறைந்த விலைக்கே விற்றார்.. கடைசியாக ஷங்கரிடம் சம்பளம் வாங்கியதுதான் ஓரளவுக்கு நியாயமான தொகை.. ஆகவே அவர் அன்புக்குக் கட்டுப்பட்டார். ஒரு பக்கம் சாவி, இன்னொரு பக்கம் எஸ்.ஏ.பி., இன்னொரு பக்கம் ஆனந்தவிகடன் பாலசுப்ரமணியன், கலைஞரின் குங்குமம், கல்கி... எந்தப் பத்திரிகையையும் நிராகரிக்க முடியவில்லை.. அவரைப் பிழித்தெடுத்துவிட்டார். இதற்கிடையில் கணையாழிக்கு இலவசமாகவும் எழுதிக் கொண்டிருந்தார்.'' கணேஷ் பட்டியலிட்டான்.
"ஒரு பத்திரிகை ஆசிரியர் சொன்னார்.. அக்கதையின் நாயகி ஒருத்தி காரில் கிளம்பினாள் என்று கதையை ஆரம்பித்திருந்தார். வீடு வந்துவிடவே ஆட்டோவைவிட்டு இறங்கினாள் என்று காரை நடுவே ஆட்டோ என்று மாற்றி எழுதிவிட்டார்... என்று. அதை சுஜாதாவுக்குச் சுட்டிக் காட்டியபோது, காரிலிருந்து இறங்கினாள் என்று மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே? இதற்கெல்லாம் போன் செய்ய வேண்டுமா என்றாராராம்....''
"அதானே?'' விழித்துக் கொண்டது போல குரல் கொடுத்த பிரியா, ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டாள்.
"கணேஷ் என்னை இப்போ மெகா சீரியல்ல நடிக்க கூப்பிடறாங்க. ஜெயிக்கப் பிறந்தவள்னு பேர் வெச்சிருக்காங்க.. நான்கு தலைமுறைக்கு முன்னால அவங்க கொள்ளுத்தாத்தாவின் மரணத்துக்கான காரணம் ராஜேஸ்வரியின் குடும்பம்தான்னு தெரிய வருது. அதனால பழிக்குப் பழி வாங்கறேன். அந்தக் குடும்பத்தையே தீர்த்துக் கட்டி, அதை நாகதோஷத்தால் அழிந்து போனதாக சாதிக்கிறேன்... ''
"இதை வைத்து நானூறு வாரங்கள் ஓட்டலாமே? சினிமா சான்ஸ் குறைஞ்சுட்டா டி.வி.யில் வந்து பழி வாங்கறாங்க. அல்லது குலுங்கிக் குலுங்கி அழறாங்க... நீங்க குலுங்கிக்கிட்டே சாதிக்க வாழ்த்துகள்''
வசந்தை செல்லமாக அடித்தாள் பிரியா.
"தேங்க்ஸ்'' என்றான் வசந்த்.
"சுஜாதா நாடகம்லாம் எழுதலையா?'' பிரியா அடுத்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தாள்.

(தொடரும்)

வியாழன், மார்ச் 24, 2011

காவியப் பாடம்!


அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் எழுத்தாளர் அமர்நாத் எழுதிய உறுதுணை தேடுமின் என்ற நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.



"திடீரென்று', "உறுதுணை தேடுமின்' என்கிற நாவல் இரண்டையும் அடுத்தடுத்து வாசிக்கக் கொடுத்தவர் எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன். இரண்டும் அமர்நாத் எழுதியவை.
எஸ். ஷங்கரநாராயணன் மூலமாகத்தான் அமர்நாத்தைப் பார்க்கிறேன். படிக்கிறேன். எழுத்தாளர்களை ஆராதிப்பதில் எஸ்.ஷ.வுக்கு நிகராக இன்னொருத்தரை நான் பார்த்ததில்லை. செல்போன், ஈ மெயில் இல்லாத காலத்தில் என்னை தொடர்பு கொள்ள அவரிடம் இருந்த ஒரே கருவி, சைக்கிள். என்னைப் பார்ப்பதற்காக அண்ணாநகரிலிருந்து ஓட்டேரிக்கு சைக்கிளில் தேடிவந்தார். என் மதிப்பு எனக்குள் உயர்ந்த தருணம்.
ஒரு எழுத்தாளர் தேடி வந்து பேசுவதெல்லாம் எனக்குப் புதிது. இதைப் படித்தீர்களா? அதைப் படித்திருக்கிறீர்களா? என்று நிறைய ஆர்வம் கிளறிவிட்டவர் அவர்தான். இப்போது அமர்நாத் எழுதிய கதைகளைக் கொடுத்ததும் அதே ஆர்வத்தோடு படித்து முடித்தேன்.
அமர்நாத்தை வியப்பதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அவர் அமெரிக்காவில் வாழ்கிறவர், விஞ்ஞானி.
இந்த இரண்டு அடிப்படைகள் போதும் ஒருவர் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு. ஆனால் அமர்நாத் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டு இருப்பதே அவரைப் பாராட்டுவதற்கு போதுமான காரணமாக இருக்கிறது.
எதிர் மறையான விஷயங்களையே தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். அவருடைய கதைக்களம் அமெரிக்கா. விஞ்ஞான பின்னணியில் கதைகள் எழுதுகிறார். தடையாக இருக்கும் என்று நினைத்த இரண்டு பிரச்னைகளும் தீர்ந்தன.
உறுதுணை தேடுமின்..
ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் கதையின் அடிநாதம். கண்ணகியைப் பிரிந்த கோவலன் மாதவியிடம் சிலகாலம் இருந்துவிட்டுத் திரும்பி வருவது போன்ற மெல்லிய ஒற்றுமை உறுதுணை தேடுமினுக்கும் இருப்பதால் இதில் இடம்பெறுகிற அத்தியாயங்களுக்குக் காதை தலைப்புகள் இட்டு பெருமைபடுத்துகிறார்.
செல்வகுமாரி அமெரிக்காவில் பணிபுரியும் பெரியசாமியை மணந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் கணவனின் போக்கை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவள். கணவன் நீக்ரோ பெண் சுகத்துக்காக வேதியியல் ஆய்வுக் கூடத்தில் எம்பிபிபி என்ற வேதிபொருளை உருவாக்குகிறான். அது ஒரு போதைப் பொருள்.
அந்த நீக்ரோ பெண்ணுக்கு அது தேவை. பெரியசாமிக்கு அந்த நீக்ரோ பெண் தேவை. செல்வகுமாரியும் பெரியசாமியும் இயல்பாக பிரிந்து போகிறார்கள். நீக்ரோ பெண்ணோ இன்னும் நிறைய எம்பிபிபி தயாரிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறாள். பெரியசாமி அதில் உருவாகும் ஆபத்தை உணர்ந்து விலக முடிவெடுக்கிறான். அம்பிகா என்ற அவனுடைய முன்னாள் தோழி உதவுகிறாள். பெரியசாமி அம்பிகாவோடு சில காலம் வாழ்கிறான். அவளுடைய பதவியும் வேலை மாற்றங்களும் பெரியசாமியை அவளைச் சார்ந்து பின் தொடர்ந்து செல்லுமாறு செய்கின்றன. அந்த வாழ்விலும் தயக்கங்கள் ஏற்பட்டு, அவளிடமிருந்தும் பிரிந்து வந்து கல்லூரி பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
தமிழகம் வந்து சேர்ந்த செல்வகுமாரி துணையாக இருந்த தந்தையை இழந்து, உடனிருந்த சகோதரியின் போக்கு பிடிக்காமல் தனியாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள். அவளை மணக்க விரும்பும் ராகவனின் நோக்கம் புரிந்து அவனைத் தவிர்க்கிறாள். காலம் அவளைத் தன்காலில் நிற்கும் தைரியத்தைக் கொடுக்கிறது. பிறகு அமெரிக்காவுக்கே திரும்புகிறாள். இந்த செல்வகுமாரிக்கு அமெரிக்க நாசூக்கும் நாகரிகமும் நன்றாகவே கைவந்துவிடுகிறது. வேலைக்குப் போகிறாள். மூத்த மகன் அமெரிக்கனின் சதி திட்டத்தால் செக்ஸ் வலையில் வீழ்கிறான். இதே நேரத்தில் கணவனும் எந்தவித குற்றமும் இல்லாமல் செக்ஸ் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறான். எல்லாம் ஒரு புள்ளியில் சரியாகி செல்வகுமாரியும் பெரியசாமியும் மீண்டும் இணைகிறார்கள்.
இந்தக் கதையை அமெரிக்கப் பின்னணி இல்லாமல் சொல்லுவதும் வேதியியல் பின்புலம் இல்லாமல் சொல்லுவதும் இயலாத காரியம்.
இதைத்தான் அமர்நாத்தின் பலமாக மாறியிருக்கிறது என்றேன்.
உரைநடையில் அமைந்த வேகமான நடை. பெரும்பாலும் பேச்சுகள் மூலமாகவே கதை நகர்கிறது. நறுக்குத் தெறிப்பதுபோல ஓரிருவரியில்தான் விவரணைகள்.
சிக்கனமான தந்தி வாக்கிய அமைப்பைப் போன்றது அமர்நாத்தின் வாக்கிய அமைப்பு. இது அமெரிக்க வாழ்க்கை முறையால் அவருக்கு ஏற்பட்டுவிட்ட ஓட்டமெடுக்கும் நடையமைப்பாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். எந்த அவசரத்தின் பாதிப்பு இல்லாமலும் அவர் அப்படி அவசர நடையில் எழுதுவதைத் தம் பாணியாகக் கருதியும் இப்படி எழுதியிருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடிந்தது. அவருடைய எல்லா கதைகளிலும் சரவணப்பிரியா, சாமிநாதன் என்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுவது போல அது அவருடைய எழுத்து பாணி.
கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வாசகனும் அதே ஓட்டம் ஓடவேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த பிரயத்தனப்படுவதும் சில இடங்களில் மிகுந்து காணப்படுகிறது. உதாரணத்துக்கு... "சனி காலை எட்டுமணி தாண்டியபோது சென்ட்ரல் அபார்ட்மென்ட் தொகுப்பிலிருந்து வெளியே வருமிடத்தில் ஆண்டர்சன் தெருவின் ஓரத்தில் சரவணப்பிரியா காத்திருந்தாள். சாமி பயன்படுத்தும் பழைய நிஸôன் காரின் கண்ணாடி ஜன்னல்கள் கறுப்பாக இருக்குமென்று அதை ஓட்டி வந்தாள்.'
இதில் கிழமை, நேரம், பொழுது, இடம், இடத்தில் அடையாளம், பயன்படுத்தும் வாகனம், அதைப் பயன்படுத்தியதற்கான காரணம் என்று எல்லாவற்றையும் ஓரே வரியில் சொல்லிச் செல்கிறார்.
"வெள்ளி மாலை. குமாரி ஹோம் டிப்போவுக்குச் சென்று லிசா குறிப்பிட்டபடி லேடெக்ஸ் பெயின்ட் இருபது காலன் வாங்கி வந்தாள். தோசைக்கு அரைத்துவைதாதாள். சனி காலை வாழைப்பழம் சேர்த்துத் தயாரித்த மாஃபின்கள் சாப்பிட்ட பிறகு பழைய உடையில் இருவரும் வேலையைத் தொடங்கினார்கள். சுவர்களைச் சுத்தம் செய்து அவை உலரும்போது மதிய உணவாக தோசை. தொட்டுக் கொள்ள காரக்குழம்பு.'
பிற்காலத்தில் புரட்டிப் பார்த்து ஆச்சர்யப்படும்படியான மெய்கீர்ததி ஆவணங்களைப் போலவும் டைரி குறிப்புகளைப் போலவும் கிழமை, நேரம், சாப்பிட்ட உணவு, வாங்கிய பெயின்ட்டின் பெயர், வாங்கிய அளவு, வாங்கிய கடையின் பெயர் என்று ஏராளமான தகவல்களைத் தருகிறார். இது நாவலின் பல இடத்திலும் தொடர்கிறது. கிட்டத்தட்ட எல்லா அத்தியாயத்திலும் கிழமை, நேரம், இடம், மாதம் என்று சொல்லிச் செல்கிறார்.
அமர்நாத்திடம் கவனிக்க வேண்டிய அம்சம் இது. அமர்நாத் கவனிக்க வேண்டிய அம்சமும்கூட.
இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோரை இழந்து கணவரைப் பிரிந்து போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கை. அவளைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்கள் கூட்டம். மகனுக்கு சர்க்கரைநோய் என்று குமாரிக்குப் போராட்டமான வாழ்க்கை. அவளுடைய வாழ்க்கை எத்தனை வலி நிறைந்தது, சுமையானது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை அவர் எங்கும் நிலைகுலைந்து அழுது புலம்ப வைக்கவில்லை. வாசகன் தானாகவே அதை உணர வேண்டும் என்று அமர்நாத் நினைத்திருக்கலாம். வாசகர்கள் கதைச் சித்தரிப்பில் எந்த அளவுக்கு ஆழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இதில் எழுத்தாளரின் வெற்றி அமையும்.
அமெரிக்க வாழ்க்கையில் இருக்கும் ஆடம்பரமும் கொஞ்சம் சபலப்பட்டால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்தும் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சென்றுவிட்டதால் பாலசந்தரின் 47 நாட்கள், அவர்கள் போன்ற திரைப்படங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பேச இப்போதைய படங்களுக்குத் தகுதி இல்லை என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
அவருடைய நாவல்களில் அவர் பயன்படுத்தும் நாவல்களின் பெயர்களும் பழையவை. இருபது வருடத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்லும்போது அந்தப் படங்களும் நாவல்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்ததாகத்தானே இருக்க முடியும் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் நிகழ்காலப் பதிவிலும் இன்றைய கதைகளும் சினிமாக்களும் இடம் பெற்றிருந்தால் அதை மேலும் சமன்செய்திருக்கும்.
நவீன கோவலன்}கண்ணகியின் காதை எப்படியிருக்கும் என்ற சுவையான கற்பனையை இது விவரிக்கிறது. இதில் மாதவி, கண்ணகி எல்லோருமே 21-ம் நூற்றாண்டு பெண்கள். யாரும் ஐந்து செகண்டுகளுக்கு மேல் அழுகிற சாதியில்லை. சொல்லப் போனால் ஆண்கள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. செக்ஸ் குற்றச் சாட்டுகள் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன. நாவலில் யாரும் நீதி கேட்டு சிலம்பை உடைக்கவில்லை. அவரவர் நியாயம் அவரவரிடம் அப்படியே இருக்கின்றன. அடுத்தவர் நியாயம் நம்மை பாதிப்பதாக இருந்தால் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
உறுதுணை எது என பிரிதல் நிமித்தம் உணர்வது காவிய மரபில் இருந்து இன்றுவரை மனித குலம் கண்டுணர்ந்த பாடம். அதை அமெரிக்க, விஞ்ஞான பின்னணியில் தந்திருக்கும் அமர்நாத்துக்கு வாழ்த்துகள்!

-தமிழ்மகன்,
சென்னை-50.
10.10.10

வெளியீடு
சொல்லங்காடி,
சென்னை-19.
cell : 96770533933

bookudaya@rediffmail.com

திங்கள், மார்ச் 21, 2011

கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...!






வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.

கொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.

இதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெரியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.

இதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.

கபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.

நிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற்கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.

நாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.

புயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.

இப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.

மகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புதுக்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.

வரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...

கடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...
அங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....

பரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...

இது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.
கொற்றவை
ஜெயமோகன்,
தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14.
ரூ. 280

ஞாயிறு, மார்ச் 20, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-4





"நீங்கதானா அது? தவறு.. நீங்கள்தானா அவர்?.. இதுதான் சரி.'' பிரியாவின் ஆச்சர்யத்தைத் திருத்திக் கொண்டிருந்தார் தமிழாசிரியர்.
அதற்குள் வசந்த் வெளிப்பட்டு "என்ன சார்.. வேற ஏதாவது மெடீரியல் வெச்சிருக்கீங்களா?'' என்றான். தமிழாசிரியர் மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். "நீங்க எந்த ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எனக்கும் சில ஐயங்கள் உண்டு... அதை முன் வைக்கலாம் என..''
தமிழாசிரியர் கதையில் உலகில் தமிழே பிரயோகத்தில் இருக்காது. இரண்டு பேர் ஆர்வமாக தமிழ் கற்றுக் கொள்ள வருவார்கள். பல்கலைக் கழகத்தில் அந்தத் தமிழ் பிரிவே அந்த இருவர் தமிழ் கற்க வந்ததால்தான் தப்பிப் பிழைத்து இருக்கும். நன்றாகக் கற்றுக் கொண்டு வருகிற வேளையில் இருவரும் வகுப்புக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். தமிழ்த்துறையை அதோடு நிறுத்துவதற்கு ஆணை பிறப்பிக்க விசாரணை நடத்துவார்கள். இந்த நேரத்தில் வேறு இடத்தில் வேறு இருவர் தமிழ் பேசுவதை தமிழாசிரியர் கேட்பார். அவர்களுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருக்கும். தன்னிடம் தமிழ் பயின்றவர்கள்தான் அவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்கள் என்பதை அறிவார். உலகில் அவர்களுக்கு மட்டுமே தமிழ் தெரியும் என்பதால் அதை சங்கேத மொழியாக புரட்சி இயக்கத்துக்காகப் பயன்படுத்துவார்கள்.... இப்படி முடியும் கதை.
தண்ணீர் கொடுத்து உபசரிக்கும்போது, பிரியா அவரை எதிர்காலத்தில் இருந்து வந்தவராகவே பார்த்துக் கொண்டிருந்தாள். "இது அந்தத் தமிழாசிரியர் இல்லை. எனக்குப் பழைய தமிழ் சிறுபத்திரிகைகளை விலைக்கு விற்ற தமிழாசிரியர்.'' வசந்த் விளக்கினான்.
"புறநானூறு, அகநானூறுக்கெல்லாம் சுஜாதா உரை எழுதினார். அதிலே விளக்கம் போதவில்லை. சுருக்கமாகத் தருகிறேன் என்று சில உவமைகளை தவிர்த்துவிட்டார்'' என்றார் தமிழாசிரியர்.
கணேஷ், "நீங்கள் வசந்த் கட்சியா? நல்லது. பொதுவாக தமிழறிஞர்களுக்குச் சுஜாதாவைப் பிடிக்காது'' என்றான்.

"அதண் ஏறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே' என்று ஒரு சங்கப் பாடல். இந்தச் செய்யுளுக்கு சுஜாதா என்ன உரை எழுதியிருக்கார்..?
"தோல் நிறமுள்ள
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான் போல
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது.'
-அதற்கு இதுவா அர்த்தம்?'' தமிழாசிரியர் ஒரு முடிவோடுதான் வந்திருந்தார்.
"இதிலிருக்கிற எறிந்தன்ன, நெடுவெண் களர், ஒருவன், ஒக்கல் போன்ற வார்த்தைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டார்.''

"இதுபற்றி ஜெயமோகன் எழுதியதை படித்தேன்'' கணேஷ் சாதாரணமாகத்தான் அறிவித்தான்.
"யாரோ எழுதியதைப் படித்துவிட்டுப் பேசுவதாக நினைக்கிறீர்களா? தமிழ்படித்த சாதாரண குழந்தைகூட இந்தத் தவறைச் சுட்டிக் காட்டும்..''
அவருடைய கோபத்தில் இருக்கிற நியாயத்தை ஏற்றுக் கொள்ளும்விதமாக தலையசைத்துச் செவி சாய்த்தான். "ரொம்ப விளக்கமாகச் சொல்வதால் பல மாணவர்கள் விலகிப் போய்விடுகிறார்கள். இதெல்லாம் ஒன்றுமில்லை சாதாரணமாக படிக்கக் கூடியதுதான் என்று தோள்மீது கைபோட்டுக்கூட்டிக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் 401 காதல் கவிதைகள், புறநானூறு ஓர் எளிய விளக்கம் போன்றவையெல்லாம்.... ''
"அதுக்காக?''
"அதுக்காகத்தான்'' கணேஷ் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
வந்தவர் சிரித்தார். "எளிமையாக புரிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை... பல தமிழறிஞர்கள் எழுதிய உரையைப் படித்து மகிழ வேண்டுமானால் நிறைய அவகாசம் தேவைப்பட்டது. இந்தக் காலத்தில் பொறுமையில்லை. அத்தகையவர்களை உணர்ந்து இது எழுதப்பட்டிருக்கலாம்''
"பின் தமிழறிஞர்களுக்காகவா அவர் இதை எழுதினார்? இதை ஆரம்பத்தில் படிக்கட்டும். பிறகு உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை, ச.வே.சுப்ரமணியம், தமிழண்ணலுக்குப் போகட்டும். ஒரு அபடைஸர் மாதிரிதான் இது. அகநானூறை அறிமுகப்படுத்தும்போதே "குறுந்தொகை சங்க காலத்தைச் சேர்ந்த நூல். இது ஒரு தொகை நூல். இப்போது கவிதைத் தொகுப்பு, கதைத் தொகுப்பு என்கிறார்களே அதுபோல்...' என்று எழுதியிருப்பதிலிருந்தே மிகவும் அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கானது என ஒதுங்கிக் கொள்வது தெரிகிறது.''
தலையசைத்து மறுத்தார் தமிழாசிரியர். வசந்த் தம் பாடு மிச்சம் என்று பிரியாவின் கண்களில் இன்னமும் இருக்கும் ஜீவனை ரசிப்பதில் இறங்கிவிட்டான்.
"குறுந்தொகை பாடல்களை செய்யுள்களாகப் பார்க்காமல் கவிதைகளாகப் பார்ப்பதற்கு சில சமயம் உரைக்காரர் தடையாக இருக்கிறார்.. என்று உ.வே.சா.வையே அல்லவா உரசுகிறார் உங்கள் சுஜாதா?'' தமிழாசிரியர் அண்ணாதுரைபோல சடுதி நேரத்தில் மூக்குப் பொடி போட்டதை கணேஷ் தவறவிடவில்லை.
"அடுத்த வரியிலேயே ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் பார்க்காமல் நவ கவிதைகளாக பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே.. இதில் ஆஸ்பத்திரி சுத்தத்தை எதிர்பார்க்காதீர்கள். இது தமிழ்க் குழந்தைகளுக்கானது. அரிச்சுவடி... மேலை நாட்டு மோகம் பிடித்து எரிகா ஜங் படிக்கப் போய்விட்டவர்களைக் கூட்டி வருவதற்கு..''
தமிழாசிரியர் ஆஸ்பத்திரி சுத்தத்தை ரசித்தார் போலத்தான் தெரிந்தது.
"குளிர்ந்த கடல் அலைகள் வெளிப்படுத்தும்
அயிரை மீன்களை
வெண் சிறகு நாரைகள் உண்ணும்
"மரந்தை' நல்ல ஊர்தான்.
தனியாக வாழும்போதுதான்
வருத்துகிறது-னு குறுந்தொகையில் ஒரு பாட்டுக்கு விளக்கம் எழுதியிருக்கார் பாஸ். நிறைய தனிமை... ஏக்கம்... தலைவன் எப்போது திரும்புவானோ என்ற தவிப்பு குறுந்தொகையில் நிறைய இருக்குது... அப்பவும் துபாய்க்கு வேலைக்குப் போயிட்டாங்களா பாஸ் எல்லாரும்?''
"காந்தளூர் வசந்த குமாரன் கதையில் நீ யவனன் விஷயத்தில் மாட்டிக் கொண்டதால் நான் பட்ட பாட்டை மறந்துவிட்டாயா? ஏதேன்ஸ் நகருக்கு வணிக நிமித்தம் போய் வந்திருப்பார்கள்.... இந்தியாவிலேயே வேறு நகரங்களுக்குச் சென்றிருப்பார்கள்.. போர்புரிய போயிருப்பார்கள்.. ஆ நிரை கவர வேண்டி போயிருக்கலாம்... தலைவன் எதற்காக பிறதேசம் போயிருக்கிறான் என்பதை மெல்லிசாகச் சொல்லியிருக்கிறார்கள்.''
"ஆனால் ஒரு விஷயம் பாஸ்'' வசந்த் தீவிரமாக ஏதோ ஒரு கேள்வியை சொந்தமாகக் கேட்க முற்படுகிறான் என்று தெரிந்தது.

(தொடரும்)

சனி, மார்ச் 19, 2011

வெங்கட் சாமிநாதன் கடிதம்


அன்புள்ள வெங்கடேசன்,

தமிழ்மகன் என்ற பெயர் அச்சுக்கே இருக்கட்டும். என்னவோ ஒரு மாதிரியாக இருக்கிறது.

உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அநியாயம் செய்கிறேன். உங்களுக்கும் மிக மன வருத்தம் இருக்கும். கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டியது தான். இது உங்களுக்கு மாத்திரம் செய்யும் அநியாயம். நீங்கள் இதில் புது வரவு. பத்து வருஷமாக என் அந்நியாயத்தை சகித்துக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு தோழமையோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

உங்கள் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் ஃநினைப்பில் கடந்த 70 வருட காலமாக திராவிட கழகம் அதன் கிளைக் கழகங்களும் தமிழ் வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டு நல்லதற்கோ கெடுதலுக்கோ விளைவுகளுக்கு தமிழ் நாட்டை இரையாக்கிக் கொண்டிருப்பதை உங்களைத் தவிர வேறு யாரும் பேசவில்லை தம் நாவல்களில்/சிறு கதைகளில் ஒரு வேளை பேசுகிறார்கள் தான். ஆனால் அவை பொருட்படுத்தத் தக்கதல்ல. நீங்கள் தான் முதல் தடவையாக ஒரு இலக்கிய கவன்ம் பெறவேண்டிய எழுத்தைத் தந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் இது பற்றிப் பேசும் போது இது ஒரு முக்கிய விஷயமாக இருக்கும்.

உங்கள் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிறைய. யார் எப்போது வருகிறார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன உறவு. அவர்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை மனதில் இருத்திக் கொள்வது மிகக் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் உங்களிடம் அந்த விவரங்கள் கேட்டேன். நீங்களும் கொடுத்தீர்கள். நான் மறுபடியும் அந்த விவரப் பட்டியலை உடன் வைத்துக்கொண்டு நாவலைப் படித்து, பட்டியல் உதவியில்லாமலே என்னுள் வாங்கிக்கொண்டு எழுத வேண்டும் என்று இருக்கி?றேன். கட்டாயம் எழுத வேண்டிய எழுத்து உங்களது. ஆனால் கொஞ்சம் எனக்காகக் காத்திருங்கள்.

உங்கள் எழுத்தோ நீங்களோ அலட்சியப்படுத்தப் படவில்லை என்பதைச் சொல்லவே இந்தக் கடிதம்.

அன்புடன்,

வெ.சா.

திங்கள், மார்ச் 14, 2011

யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!





பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம்.

இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்... இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.

நாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. ""கரீமே... சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.''

எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையில் நாவல் நகர்கிறது. மானிடர் என்ற மாபெரும் கூட்டத்தின் நறுக்குகளாக சிலபிரதிநிதிகளை நாவலின் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்து நாவல்கûளை எடுத்துக் கொண்டு, முதல் நாவலில் இருந்து ஒரு முதல் அத்தியாயம், இரண்டாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், மூன்றாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், நான்காவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், ஐந்தாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம் என்று அடுக்க வேண்டும். அப்படியே அந்த நாவல்களின் இரண்டாவது அத்தியாயங்கள். அப்படியே மூன்றாவது நான்காவது அத்தியாயங்கள்... இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அது நடந்ததாகத் தெரியவில்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு... யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.

கதை ஒன்று...

பனி பொழியும் குளிர். இரவு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அது பதினேழாம் நூற்றாண்டின் மையம். கம்பெனியார் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்சிஸ் டே இந்தியாவில் தம் கோட்டையை அமைக்க இடம் தேடுகிறான். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. கிளாரிந்தா என்ற வேசை அவனுக்குப் பரிச்சயமாகிறாள். இது வரலாறும் கற்பனையும் கைகோர்க்கும் இடமாக இருக்கலாம்.

கிளாரிந்தா நோய்வாய்ப்படுகிறாள். அவளைக்காக்க இந்திய மருத்துவமுறையை நாடுகிறார்கள். வைத்தியமும் நோயின் தீவிரமும் போட்டி போடுகின்றன. இது சென்னையில் பிரிட்டீஷார் காலூன்ற கதையை ஆரம்பித்து வைக்கிறது.

இன்னொரு கதை...

அப்துல் கரீம் அத்தர் யாமம் என்ற சென்ட் தயாரித்து விற்பவர். ஆண் வாரிசு இருந்தால்தான் அதைத் தொடர்ந்து தயாரித்து அளிக்க முடியும் என்பது பக்கீரின் வாக்கு. அவருக்கு மூன்று மனைவிகள். ரஹ்மானி, ஹபீசா, சுரையா. இரவும் பகலும் அவருக்கு காமம் சாத்தியப்படுகிறது. வாசனை திரவியத்தோடு சம்போகிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே ஆண் வாரிசு வாய்க்கவில்லை. அவர் குதிரை ரேஸ் பிரியாகி சொத்து சுகத்தையெல்லாம் இழந்து திடீரென்று காணாமல் போகிறார். மனைவிமார்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார்கள். சென்னையில் காலரா காலத்தில் அவதியுறுகிறார்கள்.

கதை மூன்று...

கிருஷ்ணப்ப கரையாளர் பெரும் தனவந்தர். கூடவே சொத்து பிரச்சனை. சென்னை இம்பாலா ஹோட்டலில் தங்கியிருந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எலிசபெத் என்ற வேசையுடன் தன் தனிமைக்குத் தீர்வு காண்கிறார். தமக்குச் சொந்தமான மேல்மலைக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அடர் காடு. விதம்விதமான தாவரங்கள். இயற்கை. விலங்குகள்... அவர் இயற்கையால் வசீகரிக்கப்பட்டு, தன் சொத்துக்கள் அனைத்தையும் எலிசபெத்துக்கே எழுதி வைத்துவிடுகிறார். அவள் பிரிட்டனுக்குப் போய் வருவதாகக் கிளம்பிச் செல்கிறாள். பின்னாளில் அந்த மலைப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறப்போவதை அவள் அப்போது யோசித்து வைத்திருக்கவில்லை.

நான்காம் கதை...

பத்ரகிரி விசாலா, திருச்சிற்றம்பலம் தையல் கதையிது. பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் சகோதரர்கள். திருச்சிற்றம்பலம் கணித மேதை. லண்டனுக்குச் சென்று ஆய்வுப்படிப்பைத் தொடர்கிறான். அவனுடைய மனைவி பத்ரகிரியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். பத்ரகிரிக்கும் தையலுக்கும் காமம் பற்றிக் கொள்கிறது. குடும்பம் சிதைகிறது. தம்பி படிப்பை முடித்துவிட்டு வரும்போது தையல் மனச்சிதைவுக்கு ஆளாகி இருக்கிறாள்.

ஐந்தாம் கதை...

சதாசிவ பண்டாரம் ஒரே மகனாகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் வீழ்ந்தவன். அவனை ஒரு நாய் வழி நடத்துகிறது. அது செல்லும் இடம் தோறும் செல்கிறான். அது தங்குகிற இடத்தில் தங்குகிறான். அது மலையோர கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் கனகாவின் வீட்டின் முன் தங்குகிறது. எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அங்கே தங்கியிருக்கிறான் பண்டாரம். ஒருநாள் இரவு கனகா அவனருகில் வந்து படுத்துக் கொள்கிறாள். உறவு கொள்கிறார்கள். அவளிடம் மரிக் கொழுந்து வாசனை வீசுவதை அறிகிறான். கர்ப்பம் தரிக்கிறாள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நாய் அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறது. வள்ளலார் போல ஒரு அறைக்குள் பூட்டிக் கொள்கிறான். அவன் காற்றில் கரைந்து போய்விட்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த ஐந்து கதைகளும் காமமெனும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.

இந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பல நேரத்தில் காமத்தை ஒரு வாசனையின் அடையாளமாக சொல்லியிருப்பதும்கூட ஐந்தையும் இணைக்கும் ஆதாரமாக கருத வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணன் இப்படி உத்தேசிக்காமலேயேகூட இதை எழுதியிருக்கலாம். அதை வாசகன் வியாக்யானத்தால் கண்டெடுக்கிற சுவை அம்சமாக இருந்தாலும் மகிழ்ச்சிதானே?

மீ புனைவைப்போல அப்துல் ஹகிமின் கனவில் பக்கிர் பேசுவதாக ஆரம்பமாகும் நாவல், அடுத்து லண்டன் மாநகரில் இந்தியாவில் வர்த்தக உரிமை வேண்டி மகாராணியின் அரண்மனையின் முன் நிற்கும் இங்கிலாந்து வணிகர்களின் கோரிக்கையோடு வரலாற்றுச் சூட்டை ஏற்றிக் கொள்கிறது.

நாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. இங்கிலாந்தின் 17 ஆம் குளிர் இரவையும் தெருக்களையும் கற்பனை செய்வது அபாரம். அது முழுக்கவே கற்பனையால் மட்டுமே சாத்தியமாக்க வேண்டிய கட்டாயம். அதற்கு இதே போன்ற காலகட்டத்தை காட்டும் ஒவியங்களும் சினிமாக்களும் நூல்களும் பக்கபலமாக இருந்தாலும் ராமகிருஷ்ணன் தீட்டும் காலச் சித்திரம் மலைக்கவைக்கிறது.

தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் சென்னையில் நடைபெறுவது அதில் தையல் காணால் போய் பத்ரிகரி தேடிக் கண்டுபிடிப்பது, பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகையெடுத்துதான் சர்க்கஸ் நடைபெற்றதாக கூறுவது போன்ற பல்வேறு தகவல்கள் நாவலின் சம்பவங்களுக்கும் சரித்திரத்தைப் பின்னணியை விளக்குவதற்கும் பொருந்தி வந்திருக்கிறது. பத்ரகிரி நிலவியல் வரைபடம் தயாரிக்கும் பணியாளனாக இருப்பதால் பரங்கி மலையிலிருந்த ஆரம்பமாகும் பணியின் ஆரம்பக்கட்ட வேலைகளை அழகாக விவரிக்கிறார். சூரத்தில் வந்து இறங்கும் நில அளவீடு செய்வதற்கான தியோலைட் கருவி... அதை ஏற்று நடத்தும் லாம்டன் துரை. இம்பாலா ஓட்டலில் இருந்த இரண்டு பûனைமரங்கள், பாப்பாத்தி கிணறு, மதராச பட்டணம் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமாக பிரிந்து கிடந்த வரலாறு, காலரா வியாதி, சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் என நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன சென்னையின் வளர்ச்சியைச் சொல்லும் தகவல்கள்.

ஓவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்துவது ரசனையின் உச்சம். சாப்பாட்டு பித்துப் பித்துப் பிடித்த சுரையா, எதைக் கொடுத்தாகிலும் மகிழ்ச்சியை அடையத் துடிக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஆடம்பரப் பிரியனாக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சற்குணம், வெளிநாட்டில் இருக்கும் கணவனைப் பிரிந்து வாழும் தையல், தன்னைவிட்டுப் பிரிந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்தில் பொஸஸிவாக இருந்து பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் விசாலா.. என ஒவ்வொரு பாத்திரத்தின் பல்வேறு உளவியலின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது.

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் திருப்திக்காக ஒவ்வொரு அம்சங்களை பணயம் வைக்கிறார்கள். தையல் கற்பை பணயமாக்குகிறாள். கிருஷ்ணப்ப காரையாளர் சொத்தை, சதாசிவ பண்டாரம் பந்தத்தை, திருச்சிற்றம்பலம் தன் சுகத்தை என ஒன்றை அடைய ஒன்றை இழந்து.. அந்தச் சுழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவல் முடிந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வாக அது நம்மிடம் தங்கிவிடுகிறது.

எல்லோருடைய கணக்கிலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ ஒரு பிழை ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தை அழகான பின்னலாக வெளிப்படுத்தும் நாவல்.

யாமம்
எஸ்.ராமகிருஷ்ணன்,
உயிர்மை வெளியீடு,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை}18
தொ.பே: 24993448.
மின்னஞ்ஞல்:: uyirmmai@gmail.com

கிடைக்குமிடம் -

டிஸ்கவரி புக் பேலஸ்
முனுசாமி ரோடு,
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கலைஞர் நகர், சென்னை.

Ph: 9940446650

LinkWithin

Blog Widget by LinkWithin