புதன், பிப்ரவரி 01, 2012

அஞ்சலி ஆசையாகக் கேட்டது எதை?

அஞ்சலிக்கு வயது ஐந்து. இரவு படுத்திருந்த தன் அப்பாவின் மீது ஏறி அமர்ந்தபடி ‘‘நான் ஒன்று கேட்பேன் வாங்கித் தருவாயா அப்பா?’’ என ஆசையாகக் கேட்டாள். அவள் அப்படி என்ன ஆசைப்படுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள அப்பாவுக்குமட்டுமின்றி அவளுடைய அம்மாவுக்கும் அண்ணனுக்கும்கூட ஆசையாகத்தான் இருந்தது.
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.

நன்றி: சுட்டி விகடன் feb 1-15

வியாழன், ஜனவரி 26, 2012

இலங்கையில் மாற்றம் புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!




ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசம் இருப்பதும். தொடர்ச்சியான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகுதூரம் விலகி வசித்துவரும் விருட்சங்களாகிப் போன அவர்களில் ஒருவர் கவிஞர் சேரன். அவர் தன் ‘காடாற்று’, மற்றும் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பலகலைக் கழகத்தில் சமூகவியல்& மானிடவியல் துறை பேராசிரியராக இருக்கும் அவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினோம்.


உங்களின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘காடற்று’ எத்தகைய பிரச்னைகளை முன் வைத்து எழுதப்பட்டவை?

இந்தத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த 2009 மே 16 போர் ஏற்படுத்திய இனப்படுகொலையின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் ‘காடாற்று‘ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இறந்து போனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆக வேண்டிய வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது. ஆனால் இலங்கையில் நடந்த படுகொலைக்கு அப்படி காடற்று செய்ய முடியாது. ‘போர்முடிந்துவிட்டது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது.. ஆனால் அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்.


இலங்கை பிரச்னையில் இந்தியா அரசு எடுத்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள?
போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும்வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவியில்லாமல் போரில் அவர்கள் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றும் இதை உறுதிபடுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையும் இதை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், ‘கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அதை ‘கூண்டு’ என்ற தலைப்பிலே தமிழில் வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டிருப்பது விளங்கும். எத்தனை அப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிலவேளைகளில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.
அதேபோல், வடகிழக்கு மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருவது தமிழர்களுக்குப் பெரும்பாலும் பயனளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் குறைவுதான்.

வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?
அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகமில்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமெர்த்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டியெடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாதல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுமக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.
இலங்கை வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தி திட்டங்களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையும் பொருளாதார பயன்கள் அதிகம். அங்கு அமைக்கப்படும் காற்றாலைகள் மலேசியாவில் இருக்கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும் அமெரிக்கவும், சீனாவும் அங்கு நடப்பதாகச் சொல்லும் பல நலத்திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக்கிறது.

லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதமிருப்போர் முள்வேலியில் அடைபட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.
1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்த காய்தல்,. உவத்தல் இல்லாத சுயவிமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.
2. இனிவரும் போராட்டம் பன்முகப்பட்ட& பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங்கை தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்..
3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் ‘உணர்வுத் தோழமை‘ என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல் பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.
4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப்போனதால் அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.
5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசியகீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவை இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

நாடுகடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்?
கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் ‘நடந்த நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஒரு ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.

எலக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
செல்போன், இணையதளம் மூலம் ஓட்டளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஒரு இடத்தில் பரீட்சார்த்தமாக செய்து பார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்திலிருந்து பத்தாண்டுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலக்ட்ரானிக் ஓட்டுரிமையை துரிதப்படுத்தும். அதனால் வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த ‘நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறாம்.

உங்கள் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்திருப்பது குறித்து?
கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் ‘யூ கெனாட் டர்ன் அவே’ என்ற தொகுப்பும் லஷ்மி ஹோம்ஸ்டரம்& சாஷா எபெல்லிங் மொழிபெயர்ப்பில் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ என்ற தொகுப்பும் வந்துள்ளன. இப்போது கவிஞர் ஆனந்த் என்னுடைய ஒரு கவிதைத் தொகுதியை மொழிபெயர்த்து வருகிறார்.

புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?

தமிழகச் சூழலில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு.. இருபது வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிட தமிழர்களின் இலக்கிய பங்களிப்புகள் வேறு. அந்தவிதத்தில் இது புதிய படைப்பனுபவத்தை முன்வைக்கிறது.
பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவில்லாத நிலை இருக்கிறதே?
பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு ‘மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாக பதில் சொல்ல விரும்புகிறேன்.
பிரபாகரன் இருக்கிறார். திரும்பிவருவார்.
இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
கனத்த மௌனம்.
மேற்கூறிய யாவையும் சரி.
- இந்த ஐந்து பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்.

நன்றி: விகடன்

வெள்ளி, ஜனவரி 20, 2012

எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!

சனிக்கிழமை (21.01.12) இரவு எட்டுமணிக்கு ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் எழுத்தாள்ர்கள் சுற்று இடம்பெறுகிறது. சாருநிவேதிதா, அஜயன்பாலா, அராத்து ஆகியோருடன் நான் பங்கேற்று இருக்கிறேன்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.

திங்கள், ஜனவரி 16, 2012

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.

இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.

இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.

’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

திறமைக்கு மரியாதை



சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக ஆண்பால் பெண்பால் நாவலை விகடன் ஆசிரியர் குழு தேர்வு செய்திருக்கிறது. திறமைக்கு மரியாதை என்று தலைப்பிட்டு கெள்ரவித்திருப்பது பெரு மகிழ்ச்சி தந்தது.

நன்றி விகடன்.

சனி, டிசம்பர் 31, 2011

சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்

சொல்வனம் இதழில் இது வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம். அருணகிரி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பாக இடம்பெற்ற விமர்சனம் என்றும் நினைக்கிறேன். ஒவ்வொரு பத்தாண்டின் ஆரம்பத்திலும் அந்தப் பத்தாண்டை ஒருகழுகுப் பார்வையில் வேகமாக ஓட்டிப் பார்ப்பது துருத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.


லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?


சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.

பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:

- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.

லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.

- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.

ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.

- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.

பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.

சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.

தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.



முழுவதும் படிக்க...

திங்கள், டிசம்பர் 26, 2011

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..




திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி பொறியியல் படித்த ஓர் இலக்கிய இளைஞர்.
படைப்பிலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் நல்ல படிப்பாளி. நவீன பிசிராந்தையார் நட்பு போல கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல் போனில் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெட்டுப்புலி நாவலின் தீவிரமான வாசகர் அவர். ஆண்பால் பெண்பால் வெளியீட்டுவிழா மேடையில்தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அவரை நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டு போனில்தான் அழைப்பு விடுத்தேன். மிகச் சரியாக விழாவுக்கு வந்துவிட்டார். விழாவைப் பற்றி அவருடைய வலைதளத்தில் எழுதியது இது:


ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.
அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.
எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.
சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.
ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.
அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள்.

எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன்.
அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

வெள்ளி, டிசம்பர் 23, 2011

ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்

வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.



ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்

வியாழன், டிசம்பர் 22, 2011

வாழ்த்து

2011-ம் ஆண்டு எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரு சேர அங்கீகரித்திருக்கிறது.
கௌரவிக்கப்பட வேண்டிய பலரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பூமணி - விஷ்ணுபுரம் விருது
சு.வெங்கடேசன் - சாகித்ய அகாதமி விருது
தேவதச்சன்- விளக்கு விருது
வண்ணநிலவன், வண்ணதாசன்- சாரல் விருது
சு.வேணுகோபால் - பாஷா பரிஷத் விருது
ஜெயமோகன் - முகம் விருது
அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்




தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.

‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.

‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.

இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.

இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.

பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).

முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.

நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com

ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்

திங்கள், டிசம்பர் 05, 2011

ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்


ஆண்பால் பெண்பால் நாவல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டு விழாவின் போதே அறுபத்தைந்து எழுபது பிரதிகள் வரை விற்றுவிட்டதாக மனுஷ்யபுத்திரன் மறுநாள் காலை சொன்னதில் இருந்து விழாவின் வெற்றியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டில் மைக் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது என்ற விதத்தில் இந்த விழா மறக்க முடியாத விழாவாக மாறிவிட்டது.
புக் பாயிண்ட் அரங்கத்துக்கான மைக் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் கூட்டம் ஆரம்பிக்கும்போது தலைமறைவாகிவிட, செல்போன், ஈ மெயில் போன்ற எந்த தொழில்நுட்பத்துக்கும் அகப்படாமல் போகவே, உரத்தகுரலில் பேசி எல்லோரும் அரங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
வரவேற்புரை நிகழ்த்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகம் தெரியாத அந்த மைக் ஆசாமி மீதும் புக் பாயிண்ட் நிர்வாகத்தின் மீதும் மிகுந்த கோபமடைந்தார்.
வெட்டுப்புலி நாவல் வெளியான ஆண்டிலேயே மறுபதிப்புக்கு போனது வலைப்பூக்களினால்தான் என்று பாராட்டினார்.
தலைமைதாங்கி நடத்திய எழுத்தாளர் சா.கந்தசாமி, நாம் மைக் பற்றி பேசுவதற்கா வந்தோம், நாவல் பற்றி பேசுவோம் என்று ஆரம்பித்து விழாவின் இறுக்கத்தைத் தளர்த்தினார். பத்திரிகையாளர்கள் கதைகளின் அருமைபற்றித் தெரியாதவர்களாக இருப்பதில் ஆரம்பித்து பத்திரிகையில் இருப்பவர்களின் எழுத்தில் தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததை தமிழ்மகன் தகர்த்திருக்கிறார் என்றார்.
பாரதி, புதுமைப்பித்தன், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு செல்லப்பா, கு. அழகிரிசாமி, கல்கி, பிரபஞ்சன், வண்ணநிலவன், விந்தன், ஜி.முருகன் போன்ற பலரும் பத்திரிகையாளர்கள்தான். கடந்த நூறாண்டு பத்திரிகை வரலாற்றில் இரண்டு டஜன் பேர்கூட தேறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம்.
நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் நாவலின் எளிமை, உத்தி என அவர் அரை மணிநேரம் வரை பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
வெறும் 500 சொற்களை வைத்தே இத்தனை அழுத்தமான அடர்த்தியான நாவலை படைத்திருப்பதற்காகப் பாராட்டினார்.
ஞாநி முன்னுரையை மட்டுமே படித்ததாகச் சொன்னார். இந்த நாவலை நான் எழுதவில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆதாரபூர்வமாக நான் விவாதித்திருப்பதை ஞாநி சிலாகித்தார். அந்த முன்னுரையும் சேர்த்து நாவலின் ஒரு பகுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
நூலை வெளியிட்ட திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர்கு.கருணாநிதியின் பேச்சு மிகமிக எதார்த்தமாக இருந்தது. சிறுவயதில் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த நேரம். பெரிய கூட்டம் அவருக்கு மாலை போட காத்திருக்கிறது. அவருக்கு மாலை போடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். இவரை எடுத்துக் கொஞ்சியபடி, உன் பெயர் என்ன என்று கேட்கிறார். இவர் கருணாநிதி என்கிறார். எம்.ஜி.ஆர் முகத்தில் சிறிய அதிர்ச்சி... அல்லது வியப்பு.ஒரு முத்தம் தந்து கீழே இறக்கிவிடுகிறார். எம்.ஜி.ஆரின் கரங்கள் என் மீது பட்ட காரணத்தினாலேயே மக்கள் அவரை எப்படிக் கொண்டாடினார்கள் என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் வாயில் சர்க்கரை போட்ட பாட்டியை நினைவுகூர்ந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் இதை நாவலில் சேர்த்திருப்பேன். நாவலுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான் எனக்குத் தேவையாக இருந்தது. நாவலில் நான் எந்த மாதிரி விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.
நூலை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜனநாதன், விழாவுக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அன்று காலையில்தான் அவருடைய பால்ய சினேகிதர் இறந்து போய்விட்டதாகவும் நெடுநாளாக அவனைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். பலமுறை அவன் போன் செய்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மத்தியானம் என்னிடம் தெரிவித்தார். அவரை வற்புறுத்தி அழைப்பதற்கு சங்கடமாக இருந்தது. அந்த மனநிலையிலும் அவர் வந்திருந்தது என்னை நிலைகுலைய வைத்தது.
எந்த விஷயமும் மைக் மூலமாக வெளி உலகுக்குச் சென்றடைவதில்லை. இங்கு இந்தக் கூட்டத்தைக் கேட்டவர்கள் அடுத்து இருப்பவர்களுக்குச் சொல்வதன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நல்ல நாவல் அப்படித்தான் வெளியே பிரபலமாகும் என்றார்.



கரு.பழனியப்பன் பேச்சு அரங்கத்தைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் எம்.ஜி.ஆரைப் பற்றி இந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை விவகாரத்தையும் தீவிரமாக எடுத்து வைத்தவர். அவர் சொன்ன டிராகுலா உதாரணம் ரசிக்கும்படி இருந்தது.
நாவலில் மொத்தம் ஐந்தே காட்சிகள்தான் என்று அவர் சினிமா போல விவரித்தார். அதையே ஆண் ஒரு முறை சொல்லி முடிக்கிறான். பிறகு பெண் ஒரு முறை சொல்லி முடிக்கிறாள்... ஆனால் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்தது இவரால்? எனக் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பதை என் நாவல் மூலமாகவே நிரூபிக்க நினைத்தார். அதற்காகத்தான் இந்த நாவலுக்கு அப்படியொரு முன்னுரையையே நான் எழுத வேண்டியதாக இருந்தது. எம்.ஜி.ஆரை நாவலின் ஒரு பாத்திரமாக அமைத்திருப்பதின் வெற்றியை அவர் பெரிதும் பாராட்டினார். நிறைய தெரிந்தவர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்களா என்பதை நாவலில் வரும் ரகு கதாபாத்திரத்தோடும் எழுத்தாளர் சுஜாதாவோடும் ஒப்பிட்டது அவருடைய நுண்ணிய வாசிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல்ரீதியான சிக்கலைப் பற்றி பேச ஆரம்பித்தார் கவிதா முரளிதரன். கோர்வையாக அவருடைய கருத்துகளை எழுதியே எடுத்துவந்திருந்தார். கதையின் க்ளைமாக்ஸில் இருந்து நாவலை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார். நாவலின் க்ளைமாக்ûஸ சொல்லிவிடுவதால் இந்த நாவலின் சுவாரஸ்யம் குறைந்துவிடாது என்று அவர் நம்பிக்கையாக கூறியது எனக்குப் பிடித்திருந்தார். கணவன் அருண், மனைவி பிரியா இருவருக்குமான பிரச்சினை என்பது நாவலின் கடைசி அத்தியாயத்தில் அடியோடு மாறிப்போய்விடுவதாக அவர் சொன்னது அவருடைய கவனமான வாசிப்பைக் காட்டியது.
நாவலில் சொல்லப்பட்ட உளவியல் சிக்கல்களை அவற்றின் பெயர்களோடு சொன்னார் பெரியார்தாசன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இருக்கும் உளவியல் நோய்க்கூறு எத்தகையது என்று அவர் விவரித்தார். மிக நீண்ட உரை. அழமானது. நாவலில் நான் ஒரு பத்தியில் மிகக் கடுமையான வாக்கிய அமைப்பை எழுதியிருந்தேன். அதைக் குறிப்பு எதுவும் இல்லாமல் அப்படியே சொன்னார். இத்தனைக்கும் நாவலை அவருக்கு விழா நாளுக்கு முதல்நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்த்தேன். இரவே நாவலை படித்து முடித்துவிட்டு கதாபாத்திரங்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
ஏறத்தாழ எல்லாருமே வெட்டுப் புலி நாவல் பற்றி ஒருவரியாவது பேசினார்கள். எல்லா புகழும் மனுஷ்யபுத்திரனுக்கே.
அந்த நாவலின் கரு என்ன என்பதை நான்கு வரியில் சொன்னேன். உடனே எழுதித்தாருங்கள் என்று அவர் என்னை ஊக்குவித்தார். வெட்டுப்புலியை எழுதியது அப்படித்தான். ஆண்பால் பெண்பால் பற்றி இரண்டுவரிதான் சொன்னேன். இதோ இப்படியொரு விழா நடத்தி பெருமைபடுத்திவிட்டார்.
என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.
விழாவில் பேசிய எல்லோரும் ஒருவர் சொன்னது போல இன்றி இன்னொருவிதமான கோணத்தில் அலசியிருந்தனர். அரசியல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக, பெண்ணிய நோக்கில், இலக்கிய நோக்கில், சினிமா பார்வையில் என விதவிதமாக இருந்தது.
ஆண்பால் பெண்பால் பற்றிய என்னுடைய கோணம் என்னுடைய நாவலாக வந்திருக்கிறது என்று என் ஏற்புரையில் சொன்னேன்.

புதன், நவம்பர் 30, 2011

ஆண்பால் பெண்பால்


மூன்றாண்டு உழைப்புக்குப் பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன். ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும் இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.
கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு, பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா? இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.
ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன். எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.
இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன.
அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.
கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஏன் ஆரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.
கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.
இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.வரும் டிசம்பர் மூன்றாம் தேதி ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு மணிக்கு ஆண்பால் பெண்பால் வெளியாகிறது. நண்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வியாழன், நவம்பர் 17, 2011

சமகால சரித்திரத்தை எழுதும்போது எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால்கள்!

என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தன் எழுதிய 'புதிய நந்தன்' சமகால சரித்திரத்தை முன்வைத்து எழுதப்பட்ட சிறப்பான சிறுகதை. இது 1934- ல் மணிக்கொடியில் வெளியானதாக ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் கதையில் வரும் பாவாடை, தாழ்த்தப்பட்ட இனத்தவன். கிருஸ்தவ பாதிரியார் ஒருவரால் மனமாற்றம் அடைந்து மதமாற்றமாகிறான். அவனுக்கு டேனியல் ஜான் என்று பெயரும் மாறுகிறது. கிருஸ்தவ மதத்தில் இந்து மதத்தின் கொடுமைகள் இல்லை என்று நம்புகிறான். பாதிரியாருடைய மகளைக் காதலிக்கிறான். பாதிரியார் கொதித்துப் போகிறார். 'பறக்கழுதையே வீட்டைவிட்டு வெளியே போ' என்று துரத்தி அடிக்கிறார். மதங்களின் போலித்தனத்தால் கசப்படைந்து திரு.ராமசாமி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து தோழர் நரசிங்கம் என்ற பெயருடன் தனக்கு தோன்றிய உண்மைகளை தீவிரமாகப் பிரசாரம் செய்கிறான்.
நந்தனை வதைத்தெடுத்த வேதியரின் வழி தோன்றலாக வந்த 1000 வேலி நிலம் கொண்ட பிராமண பண்ணையார் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் அடிமையாகக் கிடக்கும் கருப்பனின் மகன்தான் நாம் மேலே சொன்ன பாவாடை என்கிற டேனியல் என்கிற நரசிங்கம்.
பண்ணையாருக்கு ராமநாதன் என்கிற மகன். காந்தியாரின் 1930-ல் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கலெக்டர் பதவியைத் துறந்து, நரசிங்கத்தின் தங்கை மீது மையல் கொள்கிறான். சாதி அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இயற்கை அவர்களை வென்றுவிடுகிறது. கருப்பனிடம் விஷயத்தைச் சொல்ல அது மகா பாவம் என்று பதறுகிறான்.
அந்த நேரத்தில் மகாத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்துக்காகப் பிரசாரம் செய்ய வருகிறார். இவர்களின் ஆதனூரில் ஐந்து நிமிடம் தங்கப் போவதாகவும் ஏற்பாடாகிறது.
காந்தியைச் சந்திக்க முக்கியமாக மூன்று பேர் தயாராகிறார்கள்.
பார்ப்பன பண்ணையார் காந்தியாரைச் சந்தித்து புராண ஆதாரங்களுடன் காந்தியின் ஹரிஜனக் கொள்கையைத் தகர்க்கக் காத்திருக்கிறார்.
தோழர் நரசிங்கம் காந்தியின் சாதீயக் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பக் காத்திருக்கிறான்.
கண்ணில்லாக கருப்பனும் "மவாத்துமா' கிழவரைப் "பார்க்க' கிளம்புகிறான்.
நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு கோஷித்துக் கொண்டு வருகிறது மதாராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.
ரயிலுக்கு எதிரில் குருடன் தண்டவாளத்தில் நடந்து வருகிறான்.
தூரத்தில் இருவர் கருப்பன் ரயில் எதிரில் நடந்து போவதைக் கண்டுவிட்டனர். மகனும், மருமகனும். இயற்கை சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.
மூவரும் சேரும் சமயம்... ரயில் அவர்கள் மீது மோதிவிட்டுப் போய்விடுகிறது.. ஹதம். ரத்தக்களரி.
மூவரின் ரத்தங்கள் ஒன்றாகக் கலந்தன. ஒன்றாய்த்தான் இருந்தன. இதில் யாரை நந்தன் என்பது? என்பதாக முடிகிறது கதை.
சமகால அரசியலைக் கதைக்களமாக்கிய சிறுகதை என்ற விதத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறுகதை.
தமிழ் மக்களின் பேச்சோடும் மூச்சோடும் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியலை பெரும்பாலான எழுத்தாளர்கள் கதைகளில் விவாதிக்கவோ, போகிற போக்கில் சுட்டிக் காட்டியோ எழுதுவதையும் தவிர்க்கிறார்கள். தனியாக ஓர் ஆணும் பெண்ணும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதுபோல பல கதைகளில் எந்தவித சமூக பாதிப்பும் இல்லாத கதாபாத்திரங்கள் அதனால் உருவாகின. சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவான பல கதைகளில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் காரணமாக வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டிருந்தார்கள்... போன்ற குறிப்புகளைக்கூட பல கதைகளில் குறிப்பிடத் தவறினர். பிராந்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தினால் கதைகளின் சர்வதேசத் தரம் கெட்டுவிடும் என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
ஜே ஜே சில குறிப்புகளில் "சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற கேள்வியில் காலத்தின் அடையாளம் வந்துவிடக் காண்கிறோம்.
சுஜாதாவின் ஜன்னல் மலர்கள் நாவலில் 'பிராமணர்கள் போஜனப் பிரியர்கள்.. சாப்பிட்டுவிட்டு வாயு பாணம் விட்டுக் கொண்டிருப்பார்கள்' என்று ஒரு திராவிடர் கழக தோழர் சொல்லுவார்.
சொல்லிவிட்டு 'இதைச் சொன்னது யார் என்று தெரியுமா?' என்று கேட்பார்.
'யார்... அண்ணாங்களா?' என்பார் எதிரில் இருப்பவர்.
'பாரதியார்யா.. பாரதியார்' என்று தோழர் உற்சாகமாகச் சொல்லுவார்.
எந்த பாத்திரம் என்ன பேசும் என்பதில் இருக்கும் நம்பகத் தன்மை படைப்பைப் பலப்படுத்தும். வாசகனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும். பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை, பாவைச்சந்திரனின் நல்லநிலம் போன்றவை தமிழில் அந்த முயற்சியை செய்தன. பி.ஏ. கிருஷ்ணன் நெல்லையையும் பாவைசந்திரன் கீழை தஞ்சை பகுதியையும் களமாக்கி சுமார் ஒரு நூற்றாண்டு சரித்திரத்தைச் சொல்லியிருந்தார்கள். 20-ம் நூற்றாண்டின் பல தலைவர்கள் நாவலில் இடம்பெற்றார்கள். சில வேளைகளில் கதாபாத்திரங்களாகவும் அவர்கள் இடம்பெற்றார்கள்.

சமகால சரித்திரத்தை எழுதும்போது எதிர்கொள்ளும் பிரதான நெருக்கடிகள் என்று பார்த்தால் ஆதாரங்கள்தான்.
1940 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நம் கதாநாயகன் ரயிலுக்காகக் காத்திருப்பதாக எழுத முடியாது. ஏனென்றால் அப்போது நுங்கம்பாக்கத்தில் ஸ்டேஷனே இல்லை. அந்தக் கதாநாயகன் பேண்ட் போட்டிருந்தான் என்று எழுதினாலும் தவறுதான். ஏனென்றால் அப்போது பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்றுதான் சொல்ல வேண்டும். பேண்ட் என்பது அமெரிக்க பிரயோகம். 1960-களில்தான் பேண்ட் என்ற வார்த்தை இங்கு புழக்கத்துக்கு வந்தது.
எழுத்தாளர் எஸ்.வி.வி. ஒரு சிறுகதையில் 'மாலை ஐந்து மணியிருக்கும். ஆளரவமற்ற மாம்பலம் ரங்கநாதன் தெரு. நம் கதாநாயகன் கையில் வைத்திருந்த ஓரணாவை ஏதேச்சையாக கீழே தவறவிட்டான். அது டன் டனாங் டங் என்று சப்தமெழுப்பியபடி உருண்டோடியது' என்று எழுதியிருப்பார். 40களின் ரங்கநாதன் தெரு அது. மாலை ஐந்து மணிக்கு ஆளரவமில்லாமல் இருந்த ரங்கநாதன் தெருவை அந்தக் காலப் பின்னணியோடு பார்க்க வேண்டும்.
இதில் சமகால அரசியலையும் சொல்லும்போது வேண்டாத தலைவலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்னைப் பற்றி ஏன் இப்படி எழுதினாய் என்று ஆட்டோவில் ஆசிட் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது மோசமான அரசியல்வாதிகளைப் பற்றி மிகமிக மோசமாகத்தான் எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. லட்சக்கணக்கில் விற்கும் அந்தப் பத்திரிகைகளையே கண்டு கொள்ளாதவர்கள், ஆயிரம் பிரதி பதிப்புகளுக்கெல்லாம் அசரமாட்டார்கள். அப்படியே அவர்கள் வெகுண்டெழுந்து வந்தாலும் இலக்கிய உலகில் இருக்கும் அரசியலில் உதைபட்டு உரமேறியவர்களாக இருப்பவர்களுக்கு அதைச் சமாளிக்கிற பக்குவம் கை வந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.
அதே சமயத்தில் பாண்டியன் வரலாறு, சோழர் வரலாறுகளை பின்னணியாக வைத்து கதை எழுதுவதைவிட சமகால சரித்திரத்தை மையப்படுத்தி எழுதும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் சமகால அரசியல் பற்றி ஏறத்தாழ எல்லா வாசகருக்குமே ஒரு பார்வை இருக்கும். அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிறிய தவறும் சீக்கிரத்திலேயே பரவி கேலிக்குரியதாகிவிடும் ஆபத்து இருக்கிறது.
என்னுடைய வெட்டுப் புலி நாவலில் முப்பதுகளில் மோரிஸ் மைனர் கார் வாங்க ஆறுமுக முதலி திட்டமிடுவார். ஆனால் அப்போது மோரிஸ் கார் இருந்தது... மோரிஸ் மைனர் வரவில்லை என்று காலஞ்சென்ற எஸ்.வி. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். பேண்ட், டரவுசர் வித்தியாசத்தைக் குறிப்பிட்டவரும் அவர்தான்.
மேலும், சமகால அரசியலை நாவலாக்கும்போது அது புலனாய்வு பத்திரிகைபோல மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் எழுத்தாளன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.

திங்கள், நவம்பர் 07, 2011

புகைப்படங்களின் தொகுப்பு...


வெட்டுப் புலி நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையான உரையொன்றை நிகழ்த்தினார். சென்னை டில்கவரி புக் போலஸ் வளாகத்தின் மாடியில் அமைந்துள்ள தியேட்டர் லேப் அரங்கத்தில் விழா இனிதாக நடைபெற்றது.
தமிழ் ஸ்டூடியோ டாட் காம் அமைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு எழுத்தாளர்கள் பாரதிமணி, இராம.குருநாதன், மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபாநந்தன், தியேட்டர் லேப் இயக்குநர் ஜெயராவ், வெளிரங்கராஜன் உள்ளிட்ட சிலரும் ஏராளானமான இளைஞர்கள் வந்திருந்தனர். நிறைய பேர் நாவலைப் படித்தவர்கள். கேள்வி நேரத்தின்போது அவர்கள் கேட்ட கேள்வியில் இருந்து அதை அறிய முடிந்தது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

LinkWithin

Blog Widget by LinkWithin