வியாழன், நவம்பர் 29, 2007

இம்போர்ட்டட் சரக்கு: 3,4,5



யுத்தம்


""அப்பா யுத்தங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன'' என்றான் ஆதம்.

""அதுவா? வந்து... இப்போ ரெண்டு நாடு இருக்கிறது. இரண்டுக்கும் இடையே முன் விரோதமே கிடையாது. திடீர்னு ஒரு நாட்டுக்கு இன்னொரு நாட்டைப் பிடிக்கணும்னு...''

""சின்னப் பையன் புரியாமக் கேட்டா இப்படியா சொல்றது?'' என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் அம்மா.

""சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா...'' என்றார் அப்பா.

""பேச்சுக்குச் சொல்ற லட்சணமா இது? என்ன உளர்றீங்க?'' என்றார் அம்மா.

""வாயை மூடு. நானா உளர்றேன்? அறிவுக் கெட்டவளே''

""யாருக்கு அறிவில்லைன்னு ஊருக்கே தெரியுமே! அன்னைக்கு நூறு ரூபாய் நோட்டை யார் கோட்டை விட்டது?''

""அதிகமா பேசினால் என்ன நடக்கும்னு தெரியாது''

தட்டு முட்டு சாமான்கள் பறந்தன. பையன் கத்தினான்: ""நிறுத்துங்க... நிறுத்துங்க... யுத்தம் எப்படி ஆரம்பமாகும்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு.''

இம்போர்ட்டட் சரக்கு

ரிச்சர்ட் அவனுடைய நண்பனிடம் குறைபட்டுக் கொண்டிருந்தான்: ""என் மனைவி கத்த ஆரம்பித்துவிட்டால் எங்கள் வீட்டில் எல்லோருமே "கப் சிப்'தான். என்னுடைய குழந்தைகள்... ஏன் எங்கள் நாய்கூட அமைதியாகிவிடும்.''

நண்பன் கேட்டான்: ""நீ கத்த ஆரம்பித்தால்?''

""அதே கதைதான். ஆனால் நான் எங்கள் வீட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றின் முன்னால் கத்துவேன். அவையும் பதிலுக்கு என்னிடம் கத்துவதில்லை.''


எதிரி!

மரணப்படுக்கையில் இருந்த வில்லியம் தன் மனைவியை அருகே அழைத்தான். கனிந்த குரலில் ""நான் இறந்த பிறகு நீ ஜானை திருமணம் செய்து கொள்'' என்றான்.

""ஐயோ அவர் உங்கள் எதிரி ஆயிற்றே?'' என்றாள் ரீட்டா.

""ஆமாம். இத்தனை ஆண்டுகள் நான் பட்ட அவஸ்தைகளை அவனும் படட்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்'' என்றான் வில்லியம் தெளிவாக.

இம்போர்ட்டட் சரக்கு!: இதுவும் அப்படித்தான்!

மேரி சாவகாசமாக ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தாள். சரேலென உள்ள நுழைந்தான் ஜிம். ""பெப்பர் போடு... பெப்பர் பெப்பர்'' என்றான் பதட்டமாக. மேரி பெப்பர் போட்டாள்.

""உப்பு... உப்பு போடு... சீக்கிரம்'' என்றான் மீண்டும் பதட்டமாக. அவள் உப்பைத் தூவிவிட்டுப் பார்த்தாள்.

""திருப்பிப் போடு... ஐயோ திருப்பிப் போடு'' என்றான் அவசரமாக. அவள் திருப்பிப் போடுவதற்குள் ""என்ன ஆச்சு உனக்கு. சீக்கிரமாகத் திருப்பிப் போடு'' என்றான்.

""எண்ணெய் ஊற்றவில்லையே... அடச்சே... மறந்துவிட்டாயா?'' என்றான் ஆவேசமாக.

மேரிக்கு அதற்கு மேல் தாளவில்லை. ""உங்களுக்கு என்ன ஆச்சு என்று புரியவில்லை. எதற்காக இப்படிப் பதட்டப்படுகிறீர்கள். ஒரு ஆம்லெட் போடுவதற்குக் கூட எனக்குத் தெரியாதா?'' என்றாள்.

""எனக்கு மட்டும் கார் ஓட்டுவதற்குத் தெரியாதா? நான் கார் ஓட்டும்போது இப்படித்தானே நீயும் கூப்பாடு போடுகிறாய்?'' என்றான் ஜிம்.

இம்போர்ட்டட் சரக்கு:1,2

கனவு!


அன்று வாலன்டைன்ஸ் டே. பரபரப்பாகக் கண் விழித்தாள் ஸ்டெல்லா. தன் காதல் கணவன் மார்ட்டினை உசுப்பி எழுப்பி, ""காதலர் தினத்துக்கு நீங்கள் எனக்கு வைர நெக்லஸ் பரிசளிப்பதாகக் கனவு கண்டேன். இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்'' என்றாள் பரவசத்தோடு.

மார்ட்டின் ""சாயங்காலம் சொல்கிறேன்'' என்றான்.

மாலை வீடு திரும்பும்போது மார்ட்டினின் கையில் அழகிய சிறிய பார்சல். பூரித்துப் போனாள், ஸ்டெல்லா. ""காலையில் கேட்டாயே'' என்பதற்குள் அவசர, அவசரமாக வாங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

உள்ளே "கனவுகளும் அதற்கான பலன்களும்' என்ற புத்தகம் இருந்தது.



இம்போர்ட்டட் சரக்கு: கெட்ட செய்தி!

டாக்டரிடம் ஓடோடி வந்தான் சில்வெஸ்டர். ""சார், என் மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?''

""ஒரு கெட்ட செய்தியும் ஒரு ரொம்ப கெட்ட செய்தியும் இருக்கிறது'' என்றார் டாக்டர்.

""முதலில் கெட்ட செய்தியைச் சொல்லுங்கள்''

""இன்னும் நீங்கள் 24 மணிநேரம்தான் உயிர்வாழ்வீர்கள் என்கிறது மெடிக்கல் ரிப்போர்ட்''

""ஐயோ... அப்படியானால் ரொம்ப கெட்ட செய்தி என்ன?''

""இதைச் சொல்வதற்காக நான் உங்களை நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்றார் டாக்டர்.

அலசல்: இதுதான்டா படம்!

கடந்த வார தினசரிகளில் இப்படியான சில விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம்.

"மிரட்டும் திகில்', "எரிமலைகள்', "மீளமுடியாத மிரட்டல் உலகம்', "அமேசான் காட்டு அழகி', "ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும்...' இவை எல்லாம் தமிழ் சாயம் பூசப்பட்ட ஆங்கிலப் படங்களின் தலைப்புகள்.

ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் தலைப்புகளுக்கும் இவற்றுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமிருப்பதில்லை. உதாரணத்துக்கு "எரிமலைகள்' படத்தின் ஆங்கிலத் தலைப்பு ஊஹய்ற்ஹள்ற்ண்ஸ்ரீ ச்ர்ன்ழ். "அமேசான் காட்டு அழகி'க்கோ ஆங்கிலத் தலைப்பு அச்ழ்ண்ஸ்ரீஹய் ற்ட்ழ்ண்ப்ப்ள் என்று போட்டிருக்கிறார்கள். அமேசான் எங்கே இருக்கிறது, ஆப்ரிக்கா எங்கிருக்கிறது என்ற பூகோளக் குழப்பமெல்லாம் கூடவே கூடாது.



இராம. நாராயணன்


தலைப்புதான் இப்படி என்றால் படத்தில் இடம் பெறும் வசனங்கள் அதைவிட அதிர வைக்கின்றன. ஒரு சீனப் படத்தின் தமிழ் வடிவத்தில் ""இன்ன மாரீ... கண்டுக்காம போறீயே... சும்மா ஒரு தபா வந்துட்டுப் போப்பா'' என்று வசனம். கேரக்டர்களின் பெயர்களையும் தமிழ்ப்படுத்தி, அவர்களின் பேச்சையும் மெட்ராஸ் வட்டார வழக்குக்கு மாற்றி அமர்க்களம் பண்ணயிருந்தார்கள்.

""அசல் தமிழ்ப்படம் பார்க்கிற மாதிரி இருக்கில்ல?'' என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். ""இவ்வளவு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியையெல்லாம் தமிழில் யாரும் எடுக்கப் போவதில்லை. நடிகர்கள்தான் நமக்குத் தெரியாத ஆசாமிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற தமிழாவது நம்ம ஸ்டைலில் இருப்பதால்தான் தமிழ்ப் படத்தைப் பார்த்து ரசிப்பதுபோல் இப்படங்களைப் பார்த்து ரசித்துப் பார்க்க முடிகிறது'' என்கிறார் சண்டைப் படங்களாகத் தேடிப் பார்க்கும் ரசிகர் ஒருவர்.

இவருடைய கருத்தை ஆமோதிப்பதுபோல இருக்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணனின் குரலும். ""இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் ஆங்கிலப் படங்களையும் தமிழ்ப்படங்கள் அளவுக்கு ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஆங்கிலப் படங்களை நேரடியாக மொழி மாற்றம் செய்தால் இந்த அளவுக்கு ரிலீஸ் செய்ய முடியாது. ஒரு சில பிரிண்டுகள் மட்டும் எடுத்து ஒவ்வொரு நகரத்திலும் ரிலீஸ் செய்வோம். இப்போது 50, 60 பிரிண்டுகள் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. சுமாரான தமிழ்ப் படத்தைவிட இவை அதிக அளவுக்கு லாபம் ஈட்டுகின்றன.







ஆங்கிலப் படத்தை ஆங்கிலத்திலேயே ரிலீஸ் செய்யும்போது அவை சென்னை, போன்ற பெரு நகரங்களில் மட்டும்தான் ரசிக்கப்படுகிறது. ஆனால் இவற்றையோ குக்கிராமங்களில்கூட ரசிக்கிறார்கள். அப்படி ரசிக்கப்படுவதற்குக் காரணம், மாடுலேஷன். அதைப் பலரும் ரசிக்கும் வண்ணம் கலோக்கியலாக செய்வது பலருக்கும் சுலபமாகப் புரிவதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. இங்கு சென்னையிலும் மும்பையிலும் இப்படி டப்பிங் செய்வதற்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன'' என்கிறார் அவர்.

மொழி மாற்றம் செய்யும் வசனகர்த்தாவாக இருக்கும் கவிஞர் பிறைசூடன், ""மொழி மாற்று படம் என்பது, அவர்களின் வசனத்தை நம் மொழியில் மாற்றுவதுதான். சிலர் ஆங்கில படத்தின் ஹீரோ "நான் ஒரு தடவை சொன்னா ஐநூறு தடவை சொன்ன மாதிரி' என்றெல்லாம் வசனம் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வசனம் எழுதும் படங்களுக்கு ஒரிஜினல் வசனத்தை வாங்கி அதை திரையில் அவர்களின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனங்களை தமிழில் எழுதுகிறேன்'' என்கிறார்.






நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்களின் இந்திய உரிமைகளை வாங்கி விநியோகித்தவரும் பிரபல பட அதிபருமான ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது,""நான் ஆங்கிலப் படங்களைத் தமிழில் டப்பிங் செய்வதில்லை. அது படத்தின் ஜீவனையே குலைத்துவிடும். நல்ல படத்துக்கு மொழி ஒரு தடையே இல்லை. பல நல்ல படங்கள் இங்கு பல நாட்கள் ஓடியுள்ளன. "பென்ஹெர்', "டென் கமான்மென்ட்ஸ்', "சாம்ஸன் அண்ட் டிலைலா', "எண்டர் தி ட்ராகன்', ஜாக்கிசான் படங்கள் போன்றவை ஆங்கிலத்திலேயே சக்கை போடு போட்டன. ஆங்கிலத்தில் "டைட்டானிக்' படம் ஏவிஎம். ராஜேஸ்வரி தியேட்டரில் 7 லட்ச ரூபாய் ஷேர் கலெக்ட் செய்தது. அது ரெக்கார்ட். இப்படி தமிழில் டப் செய்வதற்கு விருப்பமில்லாததாலேயே இப்போது ஆங்கிலப் படங்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டேன்.

எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ பேசிய வசனத்தை சீனாவில் ஒருவன் சியாங்கோ பியாங்கோ என்று அவனுடைய மாடுலேஷனில் அடித்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும்தான் இப்படி மொழி மாற்றம் செய்கிறார்கள். மற்ற பிராந்தியங்களில் இப்படிச் செய்வதில்லை. இதனால் தரமான படங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் குறைந்து கொண்டு வருகிறது'' என்றார் அவர்.

டப்பிங் படங்கள் "டப்'புக்காக எடுக்கும் படங்களாக இல்லாமல் இருந்தால் சரிதான்.

தமிழ்மகன்

சில்லுன்னு ஒரு 'வெயில்'!






பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது "வெயில்' படம். "சில்' தேசத்தில் "சூடான' படத்தைத் திரையிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நாயகர்களில் ஒருவரான பசுபதியும் விழாவுக்குச் சென்றுவந்தவர்களில் ஒருவர். "தூள்'- "விருமாண்டி' படங்களில் முரட்டுத்தனமான வில்லன், "மஜா'- "மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களில் அப்பாவித்தனமான காமெடியன், "ஈ' படத்தில்

சமூகப் பொறுப்புள்ள தீவிரவாதி என்று

குறுகிய காலத்தில் பன்முகம் காட்டியவர் பசுபதி. "வெயில்' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்நாள் முழுதும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட மனிதனாக மிகச் சிறப்பாகத் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்தச் சிரத்தைதான் அவரை கேன்ஸ் விழாவரை இட்டுச் சென்றது

என்றால் மிகையில்லை. ஒரு கத்திரி வெயில் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

படவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

பிரான்ஸில் உள்ள ஒரு சின்ன நகரம்தான் கேன்ஸ். சினிமாவுக்கான விருது என்றால் ஆஸ்கர் விருதுதான் முக்கியமானது என்று மக்கள் நினைக்கிறார்கள். அது ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்கான விருது. ஆனால் கேன்ஸ் படவிழா உலகப் படங்களுக்கான கெüரவம். இது அறுபதாவது ஆண்டு விழா. நாம் சுதந்திரம் அடைந்த ஆண்டில் இருந்து அந்த படவிழாவும் ஆரம்பமானது. இரு நாடுகளுக்குமான 60-ம் ஆண்டு விழாவாக இந்தியப் படங்களின் திரையீடு கொண்டாடப்பட்டது. அறுபது ஆண்டுகளில் முதன் முதலாகத் திரையிடப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமை "வெயிலு'க்குக் கிடைத்தது.

இந்தியாவில் இருந்து மொத்தம் எத்தனை படங்கள் இந்த ஆண்டு கலந்து கொண்டன?

மொத்தம் 8 படங்கள் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஒரு மலையாளப் படம், ஒரு வங்காளம், 3 இந்தி, ஒரு தமிழ், ஒரு ஆங்கில மொழிப்படம், இது தவிர இன்னொரு படமும் திரையிடப்பட்டது. எனக்குச் சரியாக நினைவில்லை. மணிரத்னத்தின் "குரு' படம் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. "வெயிலு'க்காக நான், ஷங்கர், டைரக்டர் வசந்தபாலன் ஆகியோர் கலந்து கொண்டோம். பிரகாஷ்ராஜ் அவருடைய படத்தின் புரமோஷன் பணிகளுக்காக வந்திருந்தார். "குரு'வுக்காக மணிரத்னம் வந்திருந்தார். மற்றும் பிஜு, ரித்து பர்னேஷ் போன்றவர்கள் வந்திருந்தனர்.




சர்வதேச படங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். நம்முடைய படங்களை அவற்றோடு ஒப்பிட முடிகிறதா?

சர்வதேச படங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய படங்கள் சவால்விடும்படியாகத்தான் இருக்கின்றன. நான் சொல்வது தொழில்நுட்பத் துறையில். இந்தப் படவிழாவுக்கு வந்த 8 படங்களில் 7 படங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றிய படங்கள்தான். படத்தின் கதைகளை நாம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இது போன்ற படவிழாக்களுக்காகத் தயாரிக்கப்பட்டால் நாம் இன்னும் சிறப்பாகவே படங்களை உருவாக்க முடியும்.

வெயிலுக்குப் பிறகு படங்களைத் தேர்வு செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறீர்கள்... அடுத்து நடிக்கும் படத்தைப் பற்றி அறிவிப்பு வரவில்லையே?

"மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்குப் பிறகே நான் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன். "மஜா', "ஈ', "வெயில்' மூன்று படங்கள்தான் நடித்தேன்.

இனிமேல் தேர்வு செய்யப்படும் வேடங்கள் ஹீரோ, அல்லது ஹீரோவுக்கு நிகரான வேடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அப்படியில்லை. வெயிலுக்குப் பிறகு 16 பேர் கதாநாயக வேடத்துக்குக் கேட்டார்கள். நான் எதையுமே சம்மதிக்கவில்லை. நல்ல ரோல்தான் தேவை, கதாநாயக அந்தஸ்து இல்லை. என் கதாபாத்திரத்தைக் கேட்டு முதலில் நான் இன்ஸ்பயர் ஆனால்தான் மக்கள் இன்ஸ்பயர் ஆவார்கள். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?

சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழ்தான் எனக்கு வசதியாக இருக்கிறது. வேறு மொழிகளில் எனக்காக மற்றவர்கள் குரல் கொடுப்பதும் எனக்குச் சரிபட்டு வரவில்லை.




தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வந்தது உங்களுடைய பலம். சினிமாவுக்கும் நாடகத்துக்கும் நீங்கள் உணரும் வித்தியாசம்?

நடிப்பு எல்லா இடத்திலும் ஒன்றுதான். சினிமாவில் மிஷினுக்கு முன்னால் நடிக்கிறோம். நாடகத்தில் மக்களுக்கு முன்னால் நடிக்கிறோம். சினிமாவில் டேக் வாங்கலாம். மக்களுக்கு முன்னால் ரெண்டாவது டேக் வாங்க முடியாது. மற்றபடி நடிப்புக்கு எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் ஒன்றுதான்.

படவிழாவில் வெயிலுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

அது ஒரு சுவாரஸ்யமான கதை. தமிழக அல்லது இந்திய சூழல் பற்றித் தெரியாத பன்னாட்டு திரைக்கலைஞர்களின் கூட்டம் அது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் படத்தால் ஈர்க்கப்பட்டுப் போனார்கள். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பலர் கண்ணீரை கர்ச்சீப்பில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

படம் முடிந்ததும் பலர் அப்படியே சிலையாக இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு பெண்மணி கண்ணீரோடு வந்து கையைப்பிடித்துக் கொண்டு, "இப்படியெல்லாம் இருக்கிறதா உங்கள் நாட்டில்' என்று பரிதாபம் பொங்க கேட்டார். "எங்கள் நாடு கலவையான பிரச்சினைகள் கொண்ட நாடு. அதில் இப்படியான பிரச்சினைகளும் ஒன்று' என்று விளக்கினேன். பிரச்சினைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மனதின் அலைவரிசை உலகம் முழுதும் ஒன்றுதானே?

-தமிழ்மகன்

புதன், நவம்பர் 28, 2007

காலம்தோறும் அதிசயங்கள்!




நயாகரா நீர் வீழ்ச்சியை உலக அதிசயம் என்கிறார்கள். நீர் விழுவதா அதிசயம்? நீர் விழாமல் இருப்பதுதானே அதிசயம்?

-ஆஸ்கார் ஒயில்ட்

உலகத்தைக் கண்டு காலந்தோறும் மனிதன் வியந்து வந்திருக்கிறான். சரித்திரக் காலத்தில் மனிதன் வியந்த அதியசங்களிலிருந்துதான் பட்டியல்கள் ஏற்படுத்தப்பட்டும் போற்றப்பட்டும் வருகின்றன. கி.மு. காலத்தில் "உலக அதிசயங்கள் ஏழு' என முதன் முதலாகப் பட்டியலிட்டு உலகத்தை வியந்தவர்கள் எகிப்து தேசத்தவர்கள் என்கிறது வரலாற்றுப் புள்ளிவிவரம். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்ஸôண்ட்ரியா மியூஸியத்தில் அமர்ந்து இந்தப் புராதன அதிசயங்களைப் பட்டியலிட்டவர்கள் அன்றைய வரலாற்று அறிஞர்கள் ஹீரோடோடஸ் மற்றும் காலிமாச்சூஸ் ஆகியோர். அவர்களின் பட்டியல் பிரதிகள் கிடைக்கப் பெறாவிட்டாலும் அதை மேற்கோள்காட்டி எழுதப்பட்ட பல புராதன ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.



அந்தப் புராதன ஏழு அதிசயங்கள் இவை:

1. பிரமிட்- (கி.மு.2650- 2500) எகிப்து மன்னர்களுக்காகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கல்லறை. இன்னமும் இருக்கிறது.

2. பாபிலோன் தொங்கும் தோட்டம்- (கி.மு.600) 56 மைல் நீளம், 80 அடி அகலம் 320 அடி உயரத்தில் இத் தோட்டம் அமைக்கப்பட்டது. நில நடுக்கத்தால் முதலாம் நூற்றாண்டில் சிதிலமாகிவிட்டது.

3. கிரேக்கத்தில் உள்ள ஆர்டிமிஸ் கோயில்- (கி.மு.550) 120 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இது, கி.மு. 356}ல் நடந்த போரின்போது அழிந்தது.

4. ஒலிம்பியாவின் ஜீயஸ் சிலை- (கி.மு.435) 12 மீட்டர் உயரமிருந்த இச் சிலை கி.பி. 5-ம் நூற்றாண்டில் தீ விபத்தால் சிதைந்து போனது.

5. மாஸþலீயம் ஆஃப் மாஸþலோஸ் கட்டடம்- (கி.மு.351) 45 மீட்டர் உயரம். இக் கட்டடத்தின் நான்கு சுவர்களும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.



6. கொலோஸஸ் ஆஃப் ரோட்ஸ்- (கி.மு.292-280) ஹீலியஸ் கடவுள் சிலை. கிட்டத்தட்ட இப்போது நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி சிலையின் உயரம் இருந்தது. கி.மு. 224-ல் நிலநடுக்கத்தால் அழிந்தது.

7. அலெக்ஸôண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம்- (மூன்றாம் நூற்றாண்டு) 135 மீட்டர் உயரம் இருந்த இது, கி.பி. 1303-ல் நிலநடுக்கத்தால் அழிந்தது.

-அதாவது புராதன உலக அதிசயத்தில் எஞ்சியிருப்பது பிரமிடு மட்டும்தான்.

அதன் பிறகு உலக அதிசயங்களைப் பட்டியலிட்டவர்களும் ஏழு ஏழாகவே பட்டியலிட ஆரம்பித்தார்கள். இடைக்காலத்தின் ஏழு அதிசயங்களாவன: 1. ஸ்டோன்ஹென்ஜ் (இங்கிலாந்தில் உள்ள கல் கோயில்), கோலோஸியம் (ரோமாபுரியில் உள்ள பழங்கால ஸ்டேடியம்), காடாகோம்ப்ஸ் ஆஃப் கோம் எல் úஸôகாஃபா (அலக்ஸôண்ட்ரியாவில் உள்ள அரசக் கல்லறைகள்), சீனப் பெருஞ்சுவர், நான்ஜிங் கோபுரம் (சீனாவில் உள்ள பளிங்கு கோபுரம்), ஹாகியா சோபியா (துருக்கி- இஸ்தான்புல்லில் உள்ள பிரம்மாண்ட மசூதி), பிசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்.





அட, நமது தாஜ்மகால் இந்தப்பட்டியலில் எங்கே என்கிறீர்களா?

சுற்றுலா பயண ஏழு அதிசயங்கள் பட்டியலில்தான் அது இடம் பெற்றிருக்கிறது.

அதில் பிரமிட், சீனப் பெருஞ்சுவர், தாஜ்மகால், செரங்கட்டி மைக்ரேஷன், காலாபாகோஸ் தீவுகள், கிரான்ட் கன்யான், மாச்சு பிக்சு (பெரு நாட்டில் உள்ள சிகரம்) ஆகிய சுற்றுலாத் தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.




இதே போல் ஏழு இயற்கை அதிசயங்களில் எவரெஸ்ட் சிகரம், நயாகரா போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. அண்டர் வாட்டர் அதிசயங்கள், சிகாகோவின் ஏழு அதிசயங்கள் என்று நிறைய ஏழு அதிசயங்கள் சுற்றுலா வளர்ச்சிக்காக வர்த்தக நோக்கத்தில் பட்டியலிட்டபடி இருக்கிறார்கள்.

நவீன ஏழு அதிசயங்களில் இண்டெர் நெட் இடம் பிடித்துள்ளது. நவீன ஏழில் மற்றவை சீனாவில் உள்ள பொடாலா அரண்மனை, ஜெருசலேமின் பழைய நகரம், துருவப் பகுதியில் உள்ள ஐஸ் தொப்பிகள், ஹவாய் தீவுகள், மெக்ஸிகோவில் உள்ள சிதிலமாகிப்போன மாயன் கட்டடங்கள், ஆப்ரிக்காவில் ஆண்டுதோறும் காட்டுவிலங்குகள், நாடுவிட்டு நாடு பயணிக்கும் நீண்ட பயணமான "கிரேட் மைக்ரேஷன் ஆஃப் செரங்கட்டி' ஆகியவை நவீன உலகில் கண்டெடுத்துத் தொகுப்பட்ட அதிசயங்கள்.

யோசித்துப் பார்த்தால் பிரபஞ்சப் பெருவெளியில் பூமியே ஒரு அதிசய தூசுதானே?

தமிழ்மகன்

சனி, நவம்பர் 24, 2007

விளையாட்டான விஷயமல்ல...!





காரை எடுத்துக் கொண்டு சீறிப் பாயலாம். சாலையில் எதிர் வருகிறவர்களை எல்லாம் ஏற்றிக் கொல்லலாம். சாலை ஓரங்களில் செல்பவர்களையும் காரை ஏற்றிக் கொல்லலாம். எவ்வளவு பேரை கொன்று குவிக்கிறீர்களோ அவ்வளவு வெகுமதி உண்டு. பிடிக்க வரும் போலீசாரையும் போலீஸ் ஜீப்புகளையும் துவம்சம் செய்தால் கூடுதல் மதிப்பு.... இது குழந்தைகளுக்கான ஒரு விடியோ விளையாட்டு. என்ன கொடுமை சார் இது? என்று தலையில் அடித்துக் கொள்பவர்கள். அடுத்த விளையாட்டைப் பாருங்கள்.


சாதாரண ரோட் சைட் ரெüடியாக இருந்து படிப்படியாகக் கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், என படிநிலைகளைக் கடந்து "அவுட் சைடர்', "பைட்டர்', "அண்டர் பாஸ்', "பாஸ்' "டான்' என உயர்ந்து மாஃபியாவின் "பிக் டான்' பதவியைப் பிடிப்பது எப்படி என்பதுதான் இந்த விளையாட்டு. இன்னொரு டானை ஒழித்துக் கட்டுவது எப்படி.. அரசியல் தலைவர்களை அடித்து நொறுக்குவது எப்படி... இதையெல்லாம் "இன்டராக்டீவ்' முறையில் கற்பிக்கும் இந்த விளையாட்டுக்குப் பெயர் "காட்ஃபாதர்'.மார்லன் பிராண்டோ நடித்த "காட்பாதரை' தழுவிய விளையாட்டு இது.


"என் குழந்தை கம்ப்யூட்டர் கேம் விளையாடுகிறான்' என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது இந்த விளையாட்டுகளுக்காகத்தான்.

"இயற்கை', "ஈ' படங்களை இயக்கியவரும் இப் படங்களுக்கு முன்னால் "தேள்' என்ற 3டி படத்தை உருவாக்கியவருமான இயக்குநர் ஜனநாதனிடம் இது குறித்துக் கேட்டோம்.

""விடியோ கேம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இப்படியான கொடூர விளையாட்டுகள் சரித்திரத்தில் ஏராளம் இருந்திருக்கின்றன. கொடுங்கோல் அரசர்கள் மனிதர்களையும் சிங்கத்தையும் மோதவிட்டு ரசித்ததாகப் படிக்கிறோம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் ஆட்சியின் பாடத்திட்டத்தில் உதாரணத்துக்கு இப்படி ஒரு கணக்கு... உன் துப்பாக்கியில் ஆறு தோட்டாக்கள் இருக்கின்றன. நான்கு யூதர்களை சுட்டு வீழ்த்திவிட்டாய். இப்போது உன்னிடம் எத்தனை குண்டுகள் பாக்கியிருக்கும்? இது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்குக் கணக்குப் பாடம்.

குழந்தைகள் மனதில் வன்முறையை- வெறியை வளர்க்க வேண்டுமென்றே விளையாட்டுகள் ஆரம்பித்தன. அது எல்லாமே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்கள் அந்த வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டன. எங்கோ அமேசான் காட்டில் கிடக்கும் முதலையை ஹெலிகாப்டர், துப்பாக்கிகள் போன்ற தொழில்நுட்பங்களோடு சென்று கொன்றுவிட்டு வருவதைத் திரைப்படங்களாக எடுப்பார்கள். பாம்புகளை வேட்டை ஆடுவதைப் படமாக்குவார்கள். இயற்கையை நேசிக்க விடாத, காட்டை அழிக்கிற படங்கள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன. ஹிட்லர் செய்த வேலையை ஹாலிவுட் படங்கள் செய்ய ஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தப் படங்களின் பெயர்களிலேயே விடியோ கேம்கள் உருவாக ஆரம்பித்தன. திரைப்படங்களுக்கு இருந்த சென்சார்கூட இந்த கேம்களுக்குக் கிடையாது. குழந்தைகள் பார்க்கக் கூடாத காட்சிகள் என்று திரைப்படங்களில் வெட்டுவார்கள். ஆனால் இவற்றில் காட்டப்படும் வன்முறைக்கு எல்லையே கிடையாது. தலை துண்டித்துக் கிடக்கும் காட்சிகள், வெட்டப்பட்டு வீசி எறியப்படும் கால்கள்- கைகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் விடியோவில் தாராளம். என்ன படத்தில் ஹீரோ செய்வதை இங்கே குழந்தைகள் தாங்களே செய்கின்றன.

பல நேரங்களில் ஹாலிவுட் படங்களைவிட அதைச் சார்ந்து தயாரிக்கப்பட்ட விடியோ கேம் சி.டி.கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. அவற்றுக்கு உலகமெங்கும் அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. உதாரணத்துக்கு "ஹாரிபாட்டர்' பட சி.டி.க்கும் புத்தகத்துக்கும் கடை திறப்பதற்கு முன்னரே கடை வாசலில் காத்திருந்த கூட்டத்தைப் பார்த்தோமே... படத்தைவிட அதிக லாபம் சம்பாதித்த சி.டிகளுக்கு இது ஓர் உதாரணம். இது போல நூற்றுக்கணக்கான சி.டி.கள் நிழல் உலகில் நடமாடுகின்றன. அந்த சி.டி.யில் காட்டப்படும் தாதாக்களைப் போல இந்த சி.டி. வியாபாரத்திலும் பைரேட்டட் தாதாக்கள் இருக்கிறார்கள். விளையாட்டு, விபரீதமாகிக் கொண்டிருப்பது உண்மைதான்'' என்கிறார் ஜனநாதன்.

யோகா கிளாஸ், தியான வகுப்புகள் என்று அமைதியை தேடிப் போய்க் கொண்டிருக்கும் பெற்றோர்கள் கவனிக்க...!

தமிழ்மகன்

திங்கள், நவம்பர் 19, 2007

ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!







இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு சினிமாவில் சுவாரஸ்யமாகச் சொன்னார்கள். தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது "பேசாமொழி' ஆவணப்படம்.






இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட "பகீர்' கருத்துகள் இவை.

தமிழ்த் திரைப்பட வரலாறு 1931-ல் வெளியான "காளிதாஸ்' படத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் மெüன மொழிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் எத்தனை மெüன மொழிப் படங்கள் தயாரானது என்று தெரியவந்துள்ளதா? வேறு பகுதியில் தயாரான படங்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகச் செய்தி உண்டா?

1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே "லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்' என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

அப்போது திரைப்படங்கள் வெளியிட திரையரங்குகள் இருந்தனவா?





இல்லை. நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தித்தான் ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கப்பட்டன. மெüனப் படம் அதன் கதையை விளக்குவதற்காகக் கையில் குச்சியுடன் திரையருகே நின்றிருப்பார். 1928-ல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். நிரந்தர திரையரங்குகளைக் கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு 18 திரையரங்குகள் இருந்தன. கோயம்புத்தூரில் இருந்த வெரைட்டி ஹால் திரையரங்கு அவருடையதுதான். இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டரின் பெயரே எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கட்டடம் இப்போது சென்னை அண்ணா சாலை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தாதா சாகிப் பால்கேதான் இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் பால்கேவுக்குத் திரைப்பட ஆர்வம் வருவதற்கே காரணமாக இருந்தது சாமிக் கண்ணு காண்பித்தத் திரைப்படங்கள்தான்.

அவரைப் போல வேறு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் "கீசகவதம்' என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.

ஏன் இந்த நிலை? உங்கள் கருத்து என்ன?

பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.

இந்தப் படத்தின் விளைவுகள் ஏதேனும் உண்டா?

கோவையில் உள்ள சாமிக் கண்ணு வின்சென்டின் வாரிசுதாரர்கள் படத்தைப் பார்த்துவிட்டுப் பேசினார்கள். அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆவணங்களையும் அளித்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். அவர், சாமிக்கண்ணுவிடம் பணியாற்றியவரின் மகள். அவரும் பல தகவல்களைப் பகிரிந்து கொண்டார். விவரங்கள் எங்கோ கொட்டிக் கிடக்கின்றன. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்தான் அவை நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும். அந்த ஓர் அடிதான் இந்தப் பேசா மொழி.

தமிழ்மகன்

அன்புடன் கெளதமி..!


கமல்ஹாசனுடனான புரிதல், மார்பக புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்த அனுபவம் ஆகியவற்றை மனம் திறக்கிறார் நடிகை கெளதமி.



"நம்மவர்' படத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் இருப்பது போலவும் அவருக்குக் கெளதமி துணையாக இருப்பது போலவும் காட்சிகள் இருக்கும். அது அவர்களின் நிஜவாழ்க்கையின் ஒத்திகையாக அமைந்துபோனது காலத்தின் விளையாட்டு. நிஜத்தில் கெளதமிக்கு கேன்சர். கமல் உடனிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் கெளதமியைக் கமலின் அலுவலகத்தில் சந்தித்தோம்.






எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை? என்ற எளிமையான கேள்வியோடு (பதில் அத்தனை எளிமையானது அல்ல!) பேட்டியை ஆரம்பித்தோம்.

நல்லதாக நடந்தாலும் அவ்வளவு நல்லதாக நடக்கவில்லை என்றாலும் வாழ்க்கை இனிமையானது. அழகானது. அதை அப்படியே எதிர்கொள்வதில்தான் எல்லா ஆனந்தமும் ஒளிந்திருக்கிறது. தத்துவமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பொதுவாக எந்தத் தத்துவத்தையும் படிப்பதில்லை. படித்து தெரிந்து கொள்வது என்னை மேலும் குழப்பிவிடுகிறது. என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், அம்மா- அப்பாவின் அடுத்தடுத்த மரணம்.

கேன்சர்... எதுவும் நிரந்தரமல்ல என்ற பளீரென்ற நிதர்சனம் தந்த பாடம். என் குழந்தையைத் தாங்க வேண்டிய பொறுப்பு... சொல்லப் போனால் அது பொறுப்பு மட்டுமல்ல; அடுத்த தலைமுறையை வழிநடத்துகிற மிக அன்பான கடமை. எல்லாச் சோகமும் சோகமும் அல்ல, எல்லா மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அல்ல. இந்த எல்லா அனுபவங்களையும் என் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கற்றேன்.

இந்த மாற்றத்துக்கான விதை சிறுவயதிலேயே உங்களுக்கு இருந்ததாகச் சொல்ல முடியுமா?


என் தந்தை சேஷகிரி ராவ் ஒரு மருத்துவர். ரேடியாலஜிஸ்ட். இந்திய ராணுவத்தில் போர்க்காலங்களில் பணியாற்றியவர். போரின் கோரத்தாண்டவம் அப்பாவுக்கு வாழ்க்கையின் கேள்விக்குப் பதில் தேட வைத்திருக்கிறது. ரமணருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தபோது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரில் அப்பாவும் ஒருவர். அப்பாவுக்கு ரமணர் மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஜெ. கிருஷ்ணமூர்த்தி, யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களிடம் அப்பாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஆன்மீக ரீதியான தேடலுடனும் கடவுள் மறுப்பாளராகவும் அப்பா இருந்தார். இந்தச் சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது... ஒருநாள் என்னுடைய ஆசிரியை "நீ கோவிலுக்குப் போவாயா, சர்ச்சுக்குப் போவாயா' என்று கேட்டார். எனக்கு நிஜமாகவே அதைப் பற்றித் தெரியவில்லை. நான் அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று அவருக்கு போன் செய்தேன். ""உன்னைத்தானே கேட்டார்கள். உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் சொல்லு'' என்று கூறிவிட்டார்.

நான் என் குழந்தையையும் அப்படித்தான் வளர்க்கிறேன்... (உதவியாளரை அழைத்து மூன்றாம் வகுப்பு படிக்கும் தம் மகள் சுபலஷ்மியை வரவழைக்கிறார். மகளிடம் where is God? என்கிறார். குழந்தை ஆள்காட்டி விரலால் நெற்றியைக் காட்டுகிறது. முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு, நம்மைப் பார்க்கிறார். தாம் சொன்னதை உறுதிபடுத்திய புன்னகை.)

இந்த ஒற்றுமைதான் உங்களையும் கமலையும் இணைத்ததாகச் சொல்லலாமா?

ஆமாம். அவரிடம் இதுபோல எந்த விஷயத்தையும் பேசலாம். மதம், சினிமா, பெண்கள், சமுதாயம், இலக்கியம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆரோக்கியமான விவாதங்கள் தினம் தொடரும். "அட நாம இப்படி யோசிக்கவில்லையே' என்ற ஆச்சர்யம் தினமும் கிடைக்கிறது.

கேன்சர் விழிப்புணர்வு, ரத்ததான முகாம், பெண்கள் கருத்தரங்கு என்று அடிக்கடி பார்க்க முடிகிறது. இது சம்பந்தமான வேறு எதிர்காலத் திட்டங்கள்...?

கமல் நற்பணி இயக்கத்தினர் இதோ இந்த மாதம் முழுக்கவே ரத்ததான முகாம் நடத்துகிறார்கள். பல இதய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவியிருக்கிறார்கள். மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். நூலகம் கட்டித் தருகிறார்கள். அவர்கள் பலத்தோடு எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகப் பாடுபடவேண்டும் என்று விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட முதியவர்கள்... இந்த இரண்டு தரப்பினரும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. பெண்களுக்கு கவுன்சிலிங் தர விருப்பம் இருக்கிறது. எங்கெல்லாம் ஆதரவு கேட்டு கைகள் நீளுகிறதோ, அத்தனையையும் கைதூக்கிவிட விருப்பம் இருக்கிறது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரியும். யாரையும் குற்றம் சாட்டாத, கருணையோடு அணுகுகிற பக்குவம் எனக்குப் பிடிபட்டிருக்கிறது. இதைச் சேவைக்கான முதல் கட்டமாக நினைக்கிறேன்.

மற்றபடி பொழுது எப்படிப் போகிறது..?

இன்னும் இரண்டு மணிநேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிற மாதிரிதான் வேலைகள் இருக்கிறது. கமல் சார் அலுவலகத்தைப் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதை முழுக்க கவனிக்கிறேன். நற்பணி இயக்க பணிகளுக்கு நேரம் ஒதுக்குகிறேன். என் குழந்தையை நானேதான் பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறேன், கூட்டி வருகிறேன். தசாவதாரம் படத்தில் கமலுக்கான பத்துவகையான காஸ்ட்யூம் தயாரிக்கும் முக்கிய வேலையும் செய்கிறேன். நான் நடிக்க விரும்புகிறேனா என்பது பலருக்குத் தெரியாது. அந்தத் தயக்கத்தின் காரணமாகவும் என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம். நல்ல கதையாக இருந்தால் நடிக்கவும் விருப்பமிருக்கிறது. என்னவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே வாழ்க்கையை அலங்கரிக்கத்தான். ஏனென்றால் வாழ்க்கை அழகானது.


-தமிழ்மகன்

17-11-2007

வியாழன், நவம்பர் 15, 2007

சிறுகதை எழுதுவது எப்படி?

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டு பேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல் புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும்போது நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம்; மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன் மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை.

கலைஞர் உணர்வு மயமாக ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம் உள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும். ஆனால் மெய் மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

-எழுத்தாளர் தி.ஜானகிராமன்

தள்ளாத கி.வா.ஜ.

ஒருமுறை எழுத்தாளர்கள் சிலர் வெளியூர் நிகழ்ச்சிக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். பாதி வழியில் கார் பழுதடைந்து விட்டது. காரில் இருந்தவர்கள் எல்லாம் கீழே இறங்கி காரைத் தள்ளும் முயற்சியில் இறங்கினர்.

காரில் இருந்த பெரியவர் கி.வா.ஜ. அவர்களும் காரில் இருந்து இறங்கி காரைத் தள்ளுவதாகச் சொன்னார். மற்ற எழுத்தாளர்கள் அவர் வயதில் மூத்தவர் என்பதால் இறங்க வேண்டாமென மறுத்துவிட்டனர். உடனே கி.வா.ஜ. ""நான் என்ன தள்ளாதவனா?'' என்று போட்டாரே ஒரு போடு.

திங்கள், நவம்பர் 12, 2007

சர்ச்சை: அட்வான்ஸ் நிகழ்ச்சிகள்... ஆட்டம் கண்ட திரைத்துறை!








விருதுகள் என்பவை சாதனை படைத்தவர்களைக் கெüரவிக்கவா, வேறு ஆதாயங்களை எதிர்பார்க்கவா என்பது காலம் காலமான கேள்வி.

ஃபைன் ஆர்ட்ஸ்- சபாக்கள் வழங்கும் விருதுகளில் இருந்து நோபல்- ஆஸ்கர் விருதுகள் வரை இந்த சர்ச்சை பொருந்தும்.

விருது அறிவிப்பு விஷயத்தில் சர்ச்சை என்ன தெரியுமா?

""ஒரு சமூக அவலத்தை எதிர்த்துப் போராடும் போராளியாக- நாயகனாக "ஈ' படத்தில் நடித்திருந்தார் பசுபதி. அந்தப் படத்தில் அவருக்கு எதற்கு வில்லன் விருது என்று விருது கமிட்டிக்கு எப்படிப் புரியாமல் போனதோ? அதே போல் ஒவ்வொரு தேர்விலும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதிலே இருப்பதால் விருது பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி விருதின் கெüரவத்தை நீர்த்துப் போகவைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆடல் பாடல் கச்சேரியாகவும் டி.வி. சானல்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் வணிகரீதியான போக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்து விட்டதால் பலருக்கு விருது வழங்குகிறார்கள் என்றால் ஒரு ஆயாசம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

சர்ச்சைக்குள் ஒரு சர்ச்சையான விஷயம் ஒன்று தமிழக திரைப்பட விருது சம்பந்தமாக நடந்தது. சர்ச்சை பற்றிய சிறுகுறிப்பு இதுதான்: கடந்த ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் வழங்கியபோது அதை ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் டி.வி. பெற்றிருந்தது. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாவதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி.யில் தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான போது பலருக்கு அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சி கலைஞர் டி.வி.யில். விஜய் நடித்த "கில்லி' படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது, தீபாவளிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்புவதாக இருந்தது.

சரியாக அரைமணி நேரத்துக்கு இந்தச் சானலில் வெளியாக வேண்டிய நிகழ்ச்சி அந்தச் சானலிலும் அந்தச் சானலில் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சி இந்தச் சானலிலும் ஓடிக் கொண்டிருக்க, "கில்லி' படத்தைத் தயாரித்த ஏ.எம். ரத்னம், தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சானலுக்கு ரைட்ஸ் கொடுத்திருக்க இன்னொரு சானலில் படம் ஓடிக் கொண்டிருந்தால்... ஓடமாட்டாரா பின்னே? பிறகு சட்டு புட்டென்று இரண்டு சானல் தரப்பும் சமரசமாகி, வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால் "அப்ரூட்டாக' அடுத்த நிகழ்ச்சிக்குத் தாவினர்.

சன்னில் பூவெல்லாம் உன் வாசம் படமும் கலைஞரில் பைரவி படமும் சடாரென்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. மக்களும் கண நேர குழப்பத்துக்குப் பிறகு அந்தப் படங்களைப் பார்க்கத் தொடங்கினர்.

இது குறித்துப் பேச இரண்டு தரப்புமே தயாரில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனிடம் ""கில்லி திரைப்படம் ஒளிபரப்பானது குறித்தும், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறித்தும் சங்கத்தின் நிலைப்பாடு என்ன, ஏ.எம். ரத்னம் தரப்பு புகார் குறித்து நடவடிக்கையில் இறங்குவீர்களா?'' என்றோம்.

""இது குறித்துக் கருத்து கூற வேண்டியது நானல்ல, சானல்களிடம் பேசுங்கள். நான் கருத்துகூற விரும்பவில்லை'' என்றார் சுருக்கமாக.

எது எப்படியோ தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருவாரம் முன்னதாகவே மக்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்.

தமிழ்மகன்

30 செகண்ட் சவால்!









ஒரு பழைய சம்பவம். லண்டன் சுரங்க ரயில் பாதையில் புகைப்பிடிப்பதற்குத் தடை. பல இடங்களில் சர் ள்ம்ர்ந்ண்ய்ஞ்பலகைகள் இருக்கும். டர்க்கி சிகரெட் கம்பெனி சுரங்கப் பாதையில் தங்கள் சிகரெட்டை யாரும் புகைக்க வேண்டாம் என்று விளம்பரப்படுத்த விரும்புவதாக அரசிடம் அனுமதி வாங்கியது. அவர்கள் செய்திருந்த விளம்பர வாசகம் என்ன தெரியும்? அரசாங்கம் வைத்திருந்த சர் ள்ம்ர்ந்ண்ய்ஞ் பலகைக்குக் கீழே உஸ்ங்ய் பன்ழ்ந்ண்ள்ட் என்று போட்டிருந்தார்கள். (புகைப்பிடிக்காதீர்கள்- டர்க்கீஸ் சிகரெட்டாக இருந்தாலும்)

உஸ்ங்ய் என்ற நான்கே எழுத்துக்கள்தான். இதை வைத்து எப்படி விளையாடி இருக்கிறார்கள் பாருங்கள்? டர்க்கீஸ் போன்ற சிறந்த சிகரெட்டாக இருந்தாலும் இந்த இடத்தில் புகைக்காதீர்கள் என்பதுதான் அதில் இருக்கும் விளம்பரம்.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்று ஓர் உதாரணத்துக்குச் சொல்லுவோம். இனிமேல் அந்த உதாரணம் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. பத்திரிகைகளிலும் இன்டர் நெட்டிலும் டி.வி.யிலும் பொக்கே ஷாப் விளம்பரங்கள் நிறைய வருகின்றன.

சினிமா மட்டுமன்றி விளம்பரப் படத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து வருபவரில் ஒருவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். "அந்நியன்', "வேட்டையாடு விளையாடு' படங்களுக்குப் பிறகு "தசாவதார'த்தில் பணியாற்றி வருகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம்.

இரவெல்லாம் "தசாவதாரம்' படப்பிடிப்பு. காலை வந்து படுத்தவர் பிற்பகல் 3 மணிக்குத்தான் எழுந்ததாகச் சொல்கிறார். படு சீக்ரெட்டாக நடைபெற்று வரும் "தசாவதாரம்' படம், நேற்று இரவெல்லாம் நடந்ததாகச் சொன்னதே அரிய தகவல்தான். அவரை அதற்கு மேல் சங்கடப்படுத்தாமல் விளம்பரப் படங்கள் பற்றி மட்டும் கேட்டோம். பேச ஆரம்பித்தார்.

""ரீஜினல் படங்கள், நேஷனல் படங்கள், இன்டெர் நேஷனல் படங்கள் என பல விளம்பரப் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். உதாரணத்துக்குப் பட்டுச் சேலை என்றால் ரீஜினல் வேல்யூதான். பைக் விளம்பரம், பவுடர், சோப்பு விளம்பரம் போன்றவை நேஷனல் வேல்யூ





உள்ளவை. வெளிநாட்டுக் கார், சாக்லெட் போன்றவை சர்வதேச விளம்பரங்கள். தமிழ்நாட்டில் ஏராளமான விளம்பர ஏஜென்ஸிகள் உள்ளன. இருப்பினும் வட இந்தியர்கள்தான் விளம்பரத்துறையில் சக்கைபோடு போடுகின்றனர். இப்போது நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் மும்பை தயாரிப்புகள்தான்.

ஆனால் அதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் முதல் பத்துபேரை எடுத்தால் அதில் ஆறுபேர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதுதான் மகிழ்ச்சியான விஷயம்.

பி.சி. ஸ்ரீராம், ரவி.கே. சந்திரன், ராஜீவ் மேனன், கே.வி. ஆனந்த், நட்ராஜ் சுப்ரமணியன் போன்ற பலரும் தமிழகத்தைச் சேர்ந்த கேமிரா மேன்கள்தான். விளம்பரப் படங்களில் இயக்குநருக்கு இணையாக ஒளிப்பதிவாளர்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

நேஷனல் விளம்பரங்கள் என்றால் இந்திய அளவில் தெரிந்த பிரமுகராகத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள். இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் அல்லது கிரிக்கெட் பிளேயர்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். அல்லது இந்திய முகமாகத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. லொகேஷன் தேர்வு செய்வதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

கான்செப்டைப் பொறுத்தவரை விளம்பர ஏஜன்ஸிகள் முடிவு செய்கிறார்கள். சிலர் இயக்குநர்களிடம் கலந்து கான்செப்ட் பிடிப்பார்கள். நான் எடுத்த ஒரு பவுடர் விளம்பரத்துக்கு "ரன் ரோலா ரன்' என்ற ஜெர்மன் படத்தில் வருவது போல விளம்பரமே ஓட்டமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

காலை பரபரப்பில் ஒரு பெண்ணின் கையில் பவுடர் டின் இருக்கிறது. பிறகு வேறொருவர் கையில். மதியம் வேறொருவர் கையில். மாலை ஒரு குழந்தையின் கையில்... என்று ஒருநாளில் பவுடர் கை மாறுவதை எடுத்துக் கொடுத்தேன்.

நேஷனல் லெவல் விளம்பரங்களில் சில ப்ராடக்ட் சில மாவட்டங்களில் எடுபடாமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சில ப்ராடக்டின் பெயர்களே பிற மொழிகளில் வேறு அர்த்தம் தருவதாக அமைந்துவிடும். அதே போல் இந்தியில் பேசும் வசன உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் வசனம் எழுத வேண்டியிருக்கும். தொலைக்காட்சியில் வெளிவந்த "ஜுனூன்' இந்தி தொடர், தமிழில் வெளியான போது அதைத் தமிழ்ப்படுத்தியபோது ஜுனூன் தமிழ் என்ற பிரயோகமே உருவானது. அதை மக்கள் ரசித்தார்கள். அப்படித்தான் சில தமிழ்ப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் ரசிக்கப்படுகின்றன.

இந்தி விளம்பரத்துறையில் அசோக் மேத்தா, வினோத் பிரதான், பரூன் முகர்ஜி ("ராஜபார்வை' பட ஒளிப்பதிவாளர்), கிரண் தியோன் போன்றவர்கள் தயாரிக்கும் விளம்பரப்படங்கள்தான் இந்திய அளவில் பேசப்படுகின்றன.

அதே போல் இந்தியில் பிரபலமான கான்ùஸப்ட் நிபுணர்கள் இருக்கிறார்கள். ப்ரூசூன் பாண்டே (டைரக்டர்), ப்யூஸ் பாண்டே (கான்செப்ட் ரைட்டர்) போன்றவர்கள் முக்கியமானவர்கள். உதாரணத்துக்கு ஃபெவிகால் டப்பாவில் கோழித் தீவனத்தைத் தின்ற கோழியின் முட்டை, உடைக்கவே முடியாத அளவுக்குக் கடினமாக மாறிவிட்டதாகச் சொன்னது அவருடைய விளம்பரம்தான். சில விளம்பரங்களில் உண்மையை மிகைப்படுத்திச் சொல்வதை மக்கள் ரசிக்கிறார்கள்.

முப்பது செகண்டுக்குள் ஒரு சிறுகதை போல சொல்லும் விளம்பரங்களும் உண்டு. ஒரு செல்போன் விளம்பரம். தாத்தா பாட்டியைப் பார்க்க மாட்டு வண்டிப் பிரயாணம் எல்லாம் செய்து பேரன் வருகிறான். தாத்தாவுக்குக் கோபம். "20 வருஷமா பேசாதவனோட பையன் இப்ப எதுக்கு வந்தான்?' என்கிறார். "அப்பாவைக் கூட்டிகிட்டு வந்திருக்கேன் தாத்தா' என்கிறான் பேரன். தாத்தா முகத்தில் சின்ன எதிர்பார்ப்பு. பேரன் செல் போனை நீட்டுகிறான். "என்னை மன்னிச்சுடுங்கப்பா' என்கிறது செல்போன் குரல். "அட அதனால என்னடா' என்று தாத்தா அவரது மகனிடம் செல்போனில் சமாதானமாகிறார்.

இதுதான் விளம்பத்தின் விந்தை. இரண்டரை மணிநேர சினிமாவை 30 செகண்டில் சொல்ல வேண்டிய சவால்.

விளம்பரப் படம் எடுத்தவர்கள் சினிமாவுக்கு வரும்போது ரொம்ப நுணுக்கமாகக் காட்சிகளை வைப்பதைப் பார்க்கலாம். தேவையில்லாமல் ஒரு ஷாட் கூட இருக்காது. ராஜீவ் மேனன், பி.சி. ஸ்ரீராம் படங்களில் இதை உணரலாம்.

டி.வி. வந்ததால் சினிமா பாதித்ததாகக் கருத்துகள் உண்டு. ஆனால் டி.வி. வந்தபிறகு விளம்பரப் படங்கள் எடுப்பவர்கள் அதிகரித்தார்கள்.

என் குழந்தை டி.வி.யில் வருகிற விளம்பரங்களைப் பார்த்துவிட்டுத்தான் என்ன ஐஸ் கிரீம் வேண்டும், எந்தக் கடையில் துணி எடுக்க வேண்டும் என்கிறாள். சமூகத்தின் மீது விளம்பரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பிரமிக்க வைக்கிறது. அது நல்லதா என்பது வேறு விஷயம்.

டி.வி.யில் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் விளம்பரப் படங்களின் ஆட்சிதானே?'' என்று முடித்தார் ரவிவர்மன்.

டி.வி.யை மட்டுமல்ல, வாழ்க்கையின் பாதியையும் விளம்பரம்தானே ஆக்கிரமித்திருக்கிறது?

தமிழ்மகன்

சனி, நவம்பர் 10, 2007

என் கணவர் எனக்கு ஜீனியர்..!







கணவனும் மனைவியும் ஒரே துறையில் இருப்பது பல நேரங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருக்கும். சில நேரங்களில் அதுவே இடையூறாக இருக்கும். அதுவும் படைப்பு சார்ந்த துறைகளாக இருந்தால் ஈகோ எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். புகழும் பணமும் செல்வாக்கும் நிறைந்த சினிமா துறையில் கேட்கவே வேண்டாம். இந்த எழுதப்படாத வரையறைகளை மீறி சில தம்பதிகள் இருக்கிறார்கள். இதோ "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியாவும் அவருடைய கணவர் பூஷணும் அதற்கான உதாரண தம்பதிகள்.

தீபாவளிக்கு தம் படத்தைத் திரையிட வேண்டிய மும்முர பணியில் இருந்த ப்ரியா அத்தனை வேலை அழுத்தத்திலும் கலகலப்பாகப் பேசுகிறார்.




எப்படி இத்தனை இறுக்கமான நேரத்திலும் அமைதியாக இருக்க முடிகிறது? என்று ஆரம்பித்தோம்.

குடும்பத்தின் பக்க பலம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. காலையில் 9 மணிக்கு உங்களை இங்கே வரச் சொல்லிவிட்டு நான் கணவருக்கு டிபன் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் நான் இங்கு வர முடியுமா? இன்று என் வேலையை என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். இங்கே என் வேலையைப் பகிர்ந்து கொள்கிற உதவியாளர்கள்... அப்புறம் அமைதியாகப் பணியாற்றுவதில் என்ன சிக்கல்?




நமக்குத் தொழில் சினிமா என்று நீங்கள் இந்த வேலையைத் தேர்வு செய்த சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?

எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணனுக்கும் எனக்கும் 14 ஆண்டு இடைவெளி. வீட்டில் எனக்குக் கடைக்குட்டிக்கான முக்கியத்துவம் இருந்தது. நானே முடிவெடுக்கிற சுதந்திரமும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. பள்ளிப்பருவத்தில் நாடகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, என்னை கிறித்துவக் கல்லூரிக்கும் அதன் பிறகு திரைப்படக் கல்லூரிக்கும் இட்டுச் சென்றது. கிறித்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சுகாசினி எனக்குப் பழக்கமாகி "பெண்' சீரியலில் நடிக்கவும் வைத்தார். ஆனால் எனக்கு இயக்குநர் ஆவதில்தான் விருப்பம் என்பதால் அவரிடமே உதவி இயக்குநராகி "இந்திரா'வில் பணியாற்றினேன். அதன் பிறகு "இருவர்' படத்தில் மணிரத்னத்தின் உதவியாளரானேன். அவரிடம் தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றினேன். தொடர்ந்து சிக்கல் இல்லாமல் என் பயணம் சென்று கொண்டிருந்ததால் எந்தக் கேள்வியும் எழவில்லை.

கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்பது போல "கல்யாணத்துக்குப் பிறகு படம் இயக்குவீர்களா?' என்ற கேள்வியை எதிர் கொண்டீர்களா?.

இல்லவே இல்லை. என் குடும்பத்தில் எனக்குச் சுதந்திரம் கொடுத்தது போலவே என் மாமியார் வீட்டிலும் எனக்கான சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறார்கள். என் கணவரும் சினிமா துறையைச் சார்ந்தவர் என்பதால் அதற்கான சிரமங்களைத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர் ஷியாம் பெனகலிடம் பணியாற்றிவிட்டு இப்போது தெலுங்கில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் நான் அவருக்கு சீனியர். "கண்டநாள் முதல்' படத்தைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' படத்தையும் இயக்கிவிட்டேன் (சிரிக்கிறார்).

இந்தப் படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் (ராதிகா), ஒளிப்பதிவாளர் (ப்ரீதா), பாடலாசிரியர் (தாமரை) எனப் பலரும் பெண்களாக இருந்தது உங்களுக்குப் பணியாற்ற வசதியாக இருந்ததா?

முதல் படத்தில் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆண்கள்தான். அதிலுமே எனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லையே... பெண் என்பதால் எனக்கு எந்தச் சலுகையும் இருந்ததில்லை. சங்கடங்களும் இருந்ததில்லை.


தமிழ்மகன்

படங்கள்:மீனம் மனோ

திருவாளர் 50%... திருமதி 50%...









ஸ்ரீதர் இயக்கிய "தென்றலே என்னைத் தொடு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. தொடர்ந்து "திருமதி ஒரு வெகுமதி', "தாலிதானம்' போன்ற குடும்பப்பாங்கான படங்களில் நடித்ததாலோ என்னவோ இப்போது குடும்பப் பாங்கான நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சன் டி.வி.யின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியை இவர் சமாளிப்பதே அலாதிதான். தம்பதியருக்கு அன்புச் சவால்விடுவதும் பின்பு அவர்களை கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவதும் இவருடைய ஸ்பெஷாலிட்டி.
இத்தனைக்கும் இவர் அமெரிக்காவில் இருந்து வந்து திருவாளர்- திருமதிகளைக் கலாய்த்துவிட்டுச் செல்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா?






26 -வது எபிசோட் நிகழ்ச்சியை நடத்தித் தருவதற்காகச் சென்னை வந்திருந்த அவரை மடக்கிக் கலாய்த்தோம்.

இங்கிருக்கும் தம்பதிகளைக் கலாய்ப்பதற்கு அமெரிக்காவில் இருக்கும் இருக்கும் உங்களைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம்?

நான் அமெரிக்கா போய் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக யாராவது வெளிநாட்டில் இருந்தால் இங்கே மறந்தே போயிருப்பார்கள். ஆனாலும் நான் இங்கேயே இருப்பதைப் போல ஒரு தோரணையை உருவாக்கி வந்திருக்கிறேன். அதுதான் இந்த நிகழ்ச்சி எனக்குக் கிடைப்பதற்குக் காரணம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் இங்கே மீடியாவுக்குத் தெரிகிறமாதிரி ஏதாவது செய்துவிட்டுச் செல்வதுதான் அதற்குக் காரணம். ஒருமுறை வந்தபோது கே.எஸ். ரவிகுமார் இயக்கிய "பிஸ்தா' படத்தில் நக்மாவின் அக்காவாக நடித்தேன். அடுத்தமுறை வந்தபோது ராமராஜன் இயக்கிய "விவசாயி மகன்' படத்தில் தேவயானியின் அக்காவாக நடித்துவிட்டுச் சென்றேன். இங்கேயே இருந்து கொண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறேன். ராதிகாதான் அதிரடியாக இந்த வேலையைக் கொடுத்து நிரந்தரமாக திரையில் தோன்ற வழி செய்தார்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதும் ராதிகா, சுஹாசினி போன்றவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். ராடான் டி.வி.க்காக ராதிகா தயாரித்த இந்த நிகழ்ச்சிக்கு நான் பொருத்தமானவளாக இருப்பேன் என்று முடிவெடுத்து என்னை அழைத்தார். ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் அடுத்த சில வாரங்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து விடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்தால் போதும், தேவையான நிகழ்ச்சிகள் ரெடி!.

என்னுடைய இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருந்தபோது அடிக்கடி வரமுடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். பெரியவனுக்கு 13 வயது ஆகிவிட்டது. (அட, அவ்வளவு பெரிய பையனா?) இனிமேல் அடிக்கடி வந்து போகமுடியும் என்பதால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது, இது நிகழ்ச்சி என்பதையும் மறந்து தம்பதிகளை எல்லைமீறிப் போகும்படி செய்கிறீர்களே நியாயமா?

நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே அதுதானே? அப்படி எல்லை மீறுகிறவர்கள் சுவாரஸ்யம் கருதி அதைப் புரிந்தே செய்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். நிகழ்ச்சி நன்றாக வருவதற்குக் கலந்து கொள்பவர்களின் "இன்வால்வ்மெண்ட்' முக்கியமாக இருக்கிறது.

கணவன் மனைவி பிரச்சினை என்பது பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடியதுதான் என்பதே இதன் அடிநாதமான அம்சம். பிரச்சினைகளைப் பேசாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பதால் அது தீர்ந்து விடப்போவதில்லை. பேசுங்கள்... சண்டையிடுங்கள்... இறுதியில் முடிவுக்கு வாருங்கள்... என்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்.

வெளியிடங்களில் உங்களைச் சந்திக்கிற தம்பதிகளிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் ஏதாவது உண்டா?

தம்பதியரைச் சிக்கலில் மாட்டிவிட்டு ரசிப்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அப்பாவும்- அம்மாவும் மாட்டிக் கொண்டு முழிப்பது குழந்தைகளுக்குத் தமாஷாக இருக்கிறதோ, என்னவோ? பாஸ்டன் நகரில் நாங்கள் ஒரு ஹோட்டலில் பிட்ஸô சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது எங்களுக்கு அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இந்தியக் குடும்பத்தில் இருந்து ஒரு சிறுமி என்னிடம் வந்து திருவாளர் நிகழ்ச்சியைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாள். எங்கள் வீட்டுக்கருகே எனக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அப்படி அவர்கள் புகழும்போது என்னுடைய பெரிய மகனின் ரியாக்ஷனைப் பார்க்க வேண்டுமே... "இதெல்லாம் ரொம்ப ஓவர்' என்பதுபோல கண்ணை மேலே உருட்டி பாவனை காட்டுவான். சின்னவனுக்கு அம்மாவை எல்லோரும் பாராட்டுவது ஆச்சர்யமாக இருக்கும். "எப்படிம்மா உன்னை எல்லாருக்கும் தெரியுது?' என்று ஆச்சரியமாகக் கேட்கிறான்.

அது சரி... இன்னும் "உங்கள்' திருவாளர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?






என் கணவர் பெயர் சந்திரசேகர். இப்படி நிகழ்ச்சியெல்லாம் நடத்த அனுமதித்திருப்பதிலிருந்தே அவர் எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் சிலிகான் வேலியில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நான் பொழுதுபோகாமல் இருப்பதைப் பார்த்து என்னை சாஃப்ட்வேர் படிக்க வைத்து அங்கு பணியாற்றவும் உதவினார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு படித்து வேலைக்குப் போனேன். எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார். குடும்பப் பிரச்சினைகளில் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்கிறோம். ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்வோம். அதற்குத் தடையில்லாதவாறு என்னுடைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ள சொல்வதுதான் அவருடைய ஒரே கண்டிஷன். குடும்பத்தில் திருவாளர், திருமதி இருவரும் 50% 50% ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் 100% மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தியத் தம்பதிகள் } அமெரிக்கத் தம்பதிகள் உங்கள் பார்வையில்?

குடும்பங்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அங்கேயும் மாமியார் சண்டை, நாத்தனார் சண்டை இருக்கிறது. ஒரே வித்தியாசம் அங்கே ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சமயங்களில் 'தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்' சண்டைக்கான ஒரு காரணமாக அமைந்துவிடும்.

அது என்ன தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்?

அமெரிக்கர்களுக்கு கிருஸ்துமஸ்ஸýம் தாங்க்ஸ் கிவ்விங்கும் முக்கியமான விழாக்கள். கிருஸ்துமஸ் டிசம்பரில் வரும் அதற்கு முந்தைய மாதத்தில் அதாவது நவம்பர் கடைசி வியாழக்கிழமை நன்றி தெரிவிக்கும் விழா.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குச் செவ்விந்தியர்கள் அளித்த விழா இது. சோளத்தையும் வான்கோழியையும் விருந்துக்குப் பயன்படுத்துவார்கள். யாருக்கு நன்றி சொல்லி கெüரவிக்க நினைக்கிறோமோ அவர்கள் வீட்டுக்குச் சென்று இப்படி விருந்தளிக்க வேண்டும். இப்போதும் அமெரிக்கப் பெண்மணிகள் இந்த வருஷம் தேங்க்ஸ் கிவ்விங் எங்கள் பெற்றோருக்குத்தான் என்பார்கள். ஆண்கள் தங்கள் பெற்றோர் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்பார்கள். நன்றி சொல்வதற்கு அவர்களுக்குள் போராட்டமே வெடிக்கும்.

திருமதி ஒரு வெகுமதி.... திருவாளர் திருமதி ஒப்பிட முடியுமா?

அது சினிமா.... இது டி.வி. அங்கு என்னை இயக்கினார்கள். இங்கு நான் இயக்குகிறேன். சினிமா கொஞ்சநாள் கழித்து டி.வி.க்கு வந்து விடுகிறது. டி.வி. நிகழ்ச்சிகள் சினிமாவில் வருவதற்கு வாய்ப்பில்லை.

தமிழ்மகன்

வீட்டில் இருந்தே விண்வெளி ஆய்வு!





விஞ்ஞானம் பல அறிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானம் படித்த அறிஞர்களால் இன்றியும் நிகழ்த்தியிருக்கிறது. டைனமோ கண்டுபிடித்த மைக்கேல் ஃபேரடே, மரபியல் சோதனைகளை நிகழ்த்திய கிரிகெர் மென்டல் தங்கள் கல்லூரிகளில் அதற்கான விஞ்ஞானப் படிப்புகளைப் படிக்காமல் விஞ்ஞானிகள் என்று போற்றப்படுகிறவர்கள். சென்னை பாடியில் ஆதம் ஆரம்பப் பள்ளிக் கூடம் நடத்திவரும் ஜெகநாதன் பெனலன் அப்படிப்பட்ட ஒருவர்தான்.

""நான் ஒரு விசித்திரப் பிறவி. பகலெல்லாம் தூங்கி இரவில் கண்விழித்துக் கிடப்பேன். மண்ணுலகைவிட விண்ணுலகம்தான் எனக்கு அதிக பரிச்சயம்.

இருபது ஆண்டுகளாக என் அறையைப் பகிர்ந்து கொள்வது புத்தகங்கள்தான்'' என்று அவர் படுக்கையில் இறைந்து கிடக்கும் புத்தகங்களைக் காட்டுகிறார். விண்வெளி சம்பந்தமான ஆய்வறிக்கைகள், சஞ்சிகைகள், கார்ல்சேகன் புத்தகங்கள் என்று பாதியிடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. இயல்பாக நமக்குள் கேள்வி பிறக்கிறது.

எப்படி உங்களுக்கு விண்வெளி ஆய்வில் ஈடுபாடு ஏற்பட்டது?

நான் பிறந்து ஒன்றரை வயதில் என் தாயார் இறந்து விட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். அம்மாவைக் கேட்டு அழும்போதெல்லாம் பாட்டி நிலாவைக் காட்டி "உங்க அம்மா அங்கதான் இருக்கா வந்துடுவா' என்பார். எனக்கு நிலாமீது மெல்ல மெல்ல ஈர்ப்பு ஏற்பட்டது. வானம் என்னுள் எல்லையற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

யாருமற்ற நான், என் சொந்த அக்கா வீட்டில் தங்கிப் படித்தேன். பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு என் மைத்துனர் காமாட்ஷி, புலவர் குழந்தை, மன்னை நாராயணசாமி ஆகியோர் பழக்கத்தில் கலைஞரின் "பரப்பிரம்மம்' நாடகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பள்ளிப்பருவம் முடித்த இளைஞனாக இருந்தேன். அந்த நாடகத்தை 40 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறேன். சிவாஜி, கலைஞர் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். அது ஒரு கட்டம். பின்னர் வாழ்க்கை என்னைத் துரத்தியது. என் பாலிடெக்னிக் படிப்பை ஒட்டி பாடியில் தொழில்துறையில் இறங்கினேன். நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் என் மனம் தொடர்ந்து அமைதியையும் விண்வெளியையும் நாடிக் கொண்டிருந்தது. பள்ளிக் கூடம் ஒன்று துவங்கி அதை என் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு முழுநேர விண்வெளி ஆய்வில் இறங்கினேன்.

வீட்டில் இருந்தபடியே ஆய்வு செய்கிறீர்களா? இது எந்த வகையில் பயனளிக்கிறது?

வீட்டில் இருந்தே விண்வெளியைப் பார்ப்பதற்கான சகல வசதிகளையும் வைத்திருக்கிறேன். இவற்றைப் பாடியில் இன்டஸ்ட்ரி வைத்திருக்கும் பலர் எனக்கு ஸ்பான்ஸர் செய்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்கள் சேர்ந்து "டேன் அஸ்ட்ரானமி அúஸôசியேசன்' நடத்தி வருகிறோம். அப்துல் கலாம், மு. அனந்தகிருஷ்ணன், முன்னாள் தமிழக அரசு செயலர் டி.வி. வெங்கடராமன் போன்ற பலர் எங்களுக்குப் பெரிய ஆதரவளித்துப் போற்றியிருக்கிறார்கள். நான் அந்த அமைப்பின் ஃபவுண்டர்

செகரட்டரி.

இதனால் இந்தியா முழுக்க இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரியிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. வடமூலையில் இருக்கும் ஒருவரின் பார்வைக்குக் கிட்டாத ஒரு நட்சத்திரத்தைத் தென்பகுதியில் பார்க்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் ஆராய விரும்பும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ எங்களை அப்ஸர்வ் செய்யச் சொல்லுவார்கள். எங்களுக்குத் தேவையானபோது அவர்களிடம் செல்வோம்.

உங்கள் அமைப்பின் வேறு செயல்பாடுகள் என்ன?

அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலில் இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி, பிர்லா கோளரங்கம் போன்ற இடங்களிலும் ஆய்வுக்குக் குழுவாகச் செல்வோம். என்னுடைய கட்டுரைகள் பல பிர்லா கோளரங்கத்தின் பிரைவேட் சர்குலேஷன் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உதகையில் மலைச் சிகரங்களில் கூடாரம் அமைத்தும் ஆய்வுகள் மேற்கொள்வோம்.

லண்டனில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் எங்கள் அமைப்பைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் கட்டுரைகள் தான். "தீஸிஸ்' வகையைச் சார்ந்தவை அல்ல. விஞ்ஞானிகளின் கட்டுரைகள் தீஸிஸ் எனப்படும். எங்களைப் போன்றோர் ஆய்வுகளை "ஹைபாதீஸிஸ்' வகை கட்டுரைகள் என்பார்கள்.

உங்களுடைய கட்டுரை களுக்குக் கிடைத்த வரவேற்பு ஏதாவது?

சூரியனிலிருந்து ஏராளமான நியூட்ரினோக்கள் வெளியாகின்றன. ஆனால் அவை பூமியை வந்தடைவதில்லை. என்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அவை பூமிக்கு நியூட்ரினோக்களாக வருவதில்லையே தவிர, அவை வேறு வடிவங்களாக இங்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன என்று எழுதியிருந்தேன். பென்சில்வேனியாவைச் சேர்ந்த டாக்டர் ராம்னட் டேவிஸ் என்ற விஞ்ஞானி அதே ஆய்வைச் செய்து, நியூட்ரினோக்கள், தாவோ நியூட்ரினோவாகவும் மூவி நியூட்ரினோவாகவும் உருமாறி பூமிக்கு வருவதாகச் சொன்னார். அவருக்கு 2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது. இது என்னுடைய ஆய்வுக்குக் கிடைத்தப் பெருமையாக நினைக்கிறேன்.

இத் துறையில் நீங்கள் வியக்கும் இந்திய விஞ்ஞானிகள்...?

நிறைய இருக்கிறார்கள். ஆனால் மறக்கப்பட்டுவிட்ட விஞ்ஞானிகளைப் பற்றித்தான். என்னுடைய கவலை. 1921- ஆம் ஆண்டில் கொடைக்கானல் அப்ஸர்வேட்டரியில் தன் ஐந்தாண்டுகால ஆய்வுக்குப் பின் ஏ.ஏ.நாராயண ஐயர் என்ற விஞ்ஞானி வீனஸ் கிரகம் எதிர் கடிகாரச் சுற்றாகச் சுழல்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்.

அது வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்களால் சிலாகிக்கப்பட்டு அவர்களின் பதிவேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இதுவரை யாராலும் எடுத்துச் சொல்லப்படவில்லை. "அஸ்ட்ரானமி இன் இந்தியா' என்ற நூலிலும் விடுபட்டுள்ளது. இந்நூல் புதுதில்லியில் உள்ள "இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி' வெளியிட்ட ஆவணநூலாகும்.வீனஸ் கிரகம் இடப்பக்கம் சுழல்வதை 1963-க்குப் பிறகு அங்குச் செயற்கைகோள்கள் அனுப்பிய பிறகுதான் அறிவித்தார்கள். இந்தப் பேட்டியின் மூலம் மறந்துபோன அந்த சாதனை வெளி உலகத்துக்குத் தெரிந்தால் அதுவே போதும்.

உங்கள் ஆய்வு மையத்தில் பொது மக்களை அனுமதிக்கிறீர்களா?

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு எட்டுமணியிலிருந்து பத்துமணிவரை மக்களை அனுமதிக்கிறேன். இது தவிர "அஸ்ட்ரானமி ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் எனது ஆய்வுச் சாலையை தமிழகம் முழுதும் கொண்டு செல்ல இருக்கிறேன். அதை செப்டம்பரில் அப்துல்கலாம் துவங்கி வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

தமிழ்மகன்

வெள்ளி, நவம்பர் 09, 2007

மெட்ராஸ் டூ அயோவா!








ஆசியாவிலேயே சினிமா ஸ்டூடியோக்கள் மிக அதிக அளவில் இருந்த இடம் சென்னை என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஏறத்தாழ 20 ஸ்டூடியோக்கள் சின்னதும் பெரிதுமாக சென்னையில் இருந்தன. இப்போது இரண்டு, மூன்று ஸ்டூடியோக்கள் தவிர மற்றவை எல்லாம் அப்பார்ட்மென்டுகளாகவும் கொடோவுன்களாகவும் மாறிவிட்டன. சினிமாவில் பிரமாண்டங் களைக் காண்பித்துவிட்டு நிஜத்தில் காணாமல் போன அந்த ஸ்டூடியோக்களைப் பற்றி ஆய்வு செய்துவருகிறார் அமெரிக்கப் பேராசிரியர் சொர்ணவேல். ஒருமாத பயணமாகச் சென்னை வந்திருக்கும் அவரைச் சந்தித்தோம்.

உங்களைப் பற்றியும் உங்கள் ஆய்வைப் பற்றியும் சில வார்த்தைகள்...?

நான் "அயோவா பல்கலை'யில் ஃபிலிம் ஸ்டடீஸ் டிப்பார்ட்மென்டில் பேராசிரியர். சிகாகோவிலிருந்து 3 மணி நேர தூரத்தில் எங்கள் பல்கலை அமைந்திருக்கிறது. நான் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவன். பூனாவில் டி.எஃப்.டி. முடித்தேன். சிலகாலம் டைரக்டர் சேகர்கபூரிடம் பணியாற்றினேன். கடந்த ஆறு ஆண்டுகளாக அயோவா பல்கலையில் பணியாற்றுகிறேன்.

நீங்கள் இப்போது செய்துவரும் ஆய்வு எத்தகையது? அதற்கு என்ன அவசியம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

"தி மெட்ராஸ் ஸ்டூடியோ சிஸ்டம்' என்பது என் ஆய்வின் தலைப்பு. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் இங்கு ஸ்டூடியோக்கள் இயங்கின. ஆனால் அவை இருந்ததற்கான தடயங்களைக்கூட இப்போது பெற முடியாத நிலை. அவை பற்றிய சரியான புத்தகங்களும் இல்லை. அப்போது கோல்டன் ஸ்டூடியோ மிகப் பெரிய ஸ்டூடியோவாக இயங்கி வந்தது. ஆனால் அந்த இடத்தில் இப்போது அந்த ஸ்டூடியோ ஃப்ளோர்கள் கொடவுன்களாக இருக்கின்றன. அங்கு விசாரிக்கச் சென்றால் "இங்கே ஸ்டூடியோ இருந்ததா' என்று நம்மையே ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். உலக சினிமாவோடு போட்டி போட்டு வியாபாரம் செய்யும் நிலைக்கு தமிழ் சினிமா உயர்ந்திருந்தாலும் நம் சினிமாவுக்கான சரித்திரம் ஆதாரம் போதுமானதாக இல்லை. அதேசமயம் இந்தி பட உலகுக்கு சரித்திர சான்றுகள் உள்ளன. எங்கள் பல்கலையிலேயே இந்தி திரையுலகம் சம்பந்தமான புத்தகங்களை எங்கள் பல்கலையே பிரசுரித்திருக்கிறது. தமிழில் அத்தகைய நிலை உருவாக வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த ஆய்வு.

இந்த ஸ்டூடியோக்களின் அரிய சாதனைகள் என்று நீங்கள் கருதும் சில அம்சங்கள்?

ஏவி.எம்.ஸ்டூடியோ புத்தகங்களாக சில சம்பவங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ட்ராலி இல்லாத நேரத்தில் ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தி மெய்யப்பச் செட்டியார் படப்பிடிப்பில் புதுமைச் செய்திருக்கிறார். எஸ்.எஸ். வாசன் பிரம்மாண்டமான செட்டுகளால் பிரமிக்க வைத்தார். "சந்திரலேகா' ஆங்கிலப் படங்களுக்கு நிகராக தயாரான படம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் ஆங்கிலப் படங்களைத் தழுவி பல படங்களை உருவாக்கினார். வாகினி, பிரசாத் ஸ்டூடியோக்கள் பிரம்மாண்டமான ஃப்ளோர்களை வைத்திருந்தார்கள். இந்தி படக்குழுவினர் எல்லாம் இந்த பெரிய தளங்களுக்காகவே இங்கு வந்து படம் எடுத்திருக்கிறார்கள். பட்ஷிராஜாவின் "மலைக்கள்ளன்' தமிழிலும் பிறகு இந்தியிலும் தயாரான படம். திலிப் குமார், மீனா குமாரி போன்ற அந்நாளைய பெரிய நட்சத்திரங்களை வைத்து சென்னையில் உருவாக்கப்பட்ட படம். அரங்குகள் அதை வடிவமைத்த விதம், அங்கு படமாக்கப்பட்ட விதம் என்று என் ஆய்வில் முக்கிய பகுதிகள் உண்டு.

தமிழ் திரையுலகம் குறித்து ஆங்கிலத்தில் பெரிய அளவில் புத்தகங்கள் வெளிவராதது முக்கிய குறையாக இருக்கிறதா?

பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு அதை வெளியே தெரிவிக்காமல் இருக்கிறோம். அதுதான் குறை. நம்மைவிட குறைவாகச் சாதனை செய்தவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு. தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் நூல் எழுதியிருக்கிறார். வெங்கட் சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றோர் விமர்சன கட்டுரை வடிவில் சில நூல்கள் தந்திருக்கிறார்கள். அறந்தை நாராயணன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார்கை போன்றோர் தகவல் திரட்டு வடிவத்தில் நூல்கள் தந்திருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஹரிகரன் போன்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் முக்கியமானவை. "பராசக்தி' படத்தைப் பற்றி மட்டுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இன்னும் சில நூல்களும் கிடைத்திருக்கின்றன. ஆயினும் இவை போதாது. முழு தமிழ் சினிமாவையும் பற்றிய போதுமான திரட்டாக இவற்றை மட்டும் சொல்ல முடியாது.

உங்கள் ஆய்வில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் காலகட்டம்?

1947-லிருந்து 1975 வரை. ஸ்டூடியோக்களின் பிரம்மாண்டமும் இந்தக் காலகட்டத்தில்தான் முழுவீச்சில் இருந்தது. அதன் பிறகு ஸ்டியோவிலிருந்து காமிராக்கள் வெளியே பிரயாணிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு முக்கிய காரணம், சினிமா வண்ணத்தில் வெளியாக ஆரம்பித்தது. இன்னொரு காரணம் அதிக எடையுள்ள மிட்ச்சில் காமிராவிலிருந்து எடை குறைந்த ஹாரி காமிராக்கள் உருவானது. இது வெளியே கொண்டு செல்ல ஏதுவானது. பிறகு ஹாண்டி கேமிராக்கள் உருவாகின. இது மேலும் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு உதவியது. இதையெல்லாம்விட முக்கிய காரணம், சினிமாவில் உருவான புதிய அலை, புதிய கருத்தோட்டம், எதார்த்தவாதம், புதிய தொழில்நுட்பம் ஆகியவை. அதன்பிறகு அரங்குகள் என்பவை கனவுக் காட்சிகளுக்கானது என்று மாறிப்போனது.

உங்களுடைய பார்வையில் தமிழ்சினிமா பற்றி?

தொழில்நுட்ப ரீதியாக அதி முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். வி.சி. கணேசன் (சிவாஜி) அறிமுகமான "பராசக்தி' படத்தையும் அவர் பெயரில் ரஜினி நடித்திருக்கும் படத்தையும் ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதிலும் ஹீரோ வெளிநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். இதிலும் ரஜினி வெளிநாட்டிலிருந்து வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். அதிலும் கல்யாணி என்ற கதாபாத்திரம் அப்பாவியாக இருக்கிறார். ஸ்ரேயாவும் ஜாதகப்படி திருமணம் செய்தால் கணவர் இறந்துவிடுவார் என்று நம்புபவராக, முடிவெடுக்க முடியாதவராக அழுகைப் பாத்திரமாக இருக்கிறார். அது திராவிடக் கொள்கை பேசியது. இது குளோபலைசேஷன் பேசுகிறது. சம்பவங்கள் வேறு, தொழில்நுட்பம் வேறு. யோசித்துப் பார்த்தால் அடிநாதமாக ஒரு ஃபார்முலா இதில் ஒளிந்திருப்பதைப் பார்க்கலாம். தமிழ் சினிமாவுக்கு தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பர்யம் இருப்பதைப் பார்க்கிறேன்.

தமிழ்மகன்

பச்சைத் தமிழனும் வெள்ளைத் தமிழனும்!




தமிழ்ப் படத்தில் நடிக்கும் தமிழ் நடிகைகள் யார் யார் என்று கேட்டால்... ரசிகர்கள் ரொம்பத்தான் குழம்பிப் போவார்கள். அசின், நமீதா, நயன்தாரா, ஸ்ரேயா, மாளவிகா, மீரா ஜாஸ்மின், ஜோதிகா, சிம்ரன்.... அட யாருமே தமிழ் நடிகை இல்லையே?

""மிக அதிக நாட்களாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை மனோரமாதான்'' என்று ஒருமுறை நடிகர் சத்யராஜ் நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால் இது நகைச்சுவையான விஷயம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். மீனா, த்ரிஷா, சங்கீதா... என பத்து விரல்களுக்குள் அடங்கிவிடுவார்கள்.



""தமிழ் ரசிகர்களுக்கு நடிகைகள் என்பவர்கள் வெள்ளை வேளேர் என்று இருக்க வேண்டும். கறுப்பாகவோ, மாநிறமாகவோ ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கற்பனைகூட செய்து பார்ப்பதில்லை. கறுப்பு- வெள்ளை பட காலத்தில்தான் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லை நன்றாக நடித்தால் போதும் என்று நினைத்தார்கள். கலர் படங்கள் வெளிவர ஆரம்பித்ததுமே வண்ணம் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டது'' என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

""நடிகைகள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாராவது ஊர்வலம் போனார்களா...? தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவர்களாகவே இப்படி முடிவெடுக்கிறார்கள். அதை ரசிகர்களின் முடிவாகத் தெரிவிக்கிறார்கள். கதாநாயகி வேடத்தை விடுங்கள். நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒரு படத்தின் கல்யாண காட்சி. நிறைய துணை நடிகைகள் தேவைப்பட்டார்கள். வந்திருந்த துணை நடிகைகளில் பாதி பேர் கறுப்பாக இருப்பதனால் நிராகரிக்கப்பட்டதைப் பார்த்தேன். கேட்டதற்கு "சிவப்பாக இருந்தால்தான் ஸீன் நன்றாக இருக்கும்' என்றார்கள். நிஜ வாழ்க்கையில் தமிழ் நாட்டில் எந்தக் கல்யாண ஆல்பத்தைப் பார்த்தாலும் பலர் கறுப்பாகத்தானே தெரிகிறார்கள்? அப்புறம் எப்படி இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை'' என்கிறார் தங்கர்பச்சான். கறுப்பாக இருந்தாலும் நந்திதா தாஸ்தானே இவருடைய "அழகி'?

ஒரு சந்திப்பின் போது தன்னுடைய படங்களில் எல்லாம் தொடர்ந்து வட இந்திய நடிகைகளாக இறக்குமதி செய்வதாக டைரக்டர் ஷங்கர் மீது ஒரு கேள்விக் கணையைப் பாய்ச்சியபோது அவர் சொன்ன பதில் இது:

""என்னுடைய முதல் படத்தின்போது கதையைப் பற்றி மட்டும்தான் யோசித்து வைத்திருந்தேன். "ஜென்டில்மேன்' படக் கதையை கமல்ஹாசன், சரத்குமார் என்று பலரிடம் சொன்னேன். கடைசியில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தரப்பு பிரச்சினையால் அவர் நடிக்க முடியாமல் போனது. படத்துக்கு பூஜை தேதியெல்லாம் குறித்துவிட்டதால் உடனே வேறு ஒருவரை அவசரமாக முடிவு செய்ய வேண்டியிருந்தது.



சினிமா டைரக்டரியை எடுத்து ஹீரோ பெயர்களைப் பார்த்தபோது அகர வரிசைப்படி முதலில் அர்ஜுன் பெயர் இருந்தது. அவரையை பேசலாம் என்றேன். அதே போலத்தான் நாயகிகள் விஷயத்திலும் அப்போது பிரபலமாக இருந்த ரோஜா, மீனா ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது கால்ஷீட் கிடைக்கவில்லை. கதைக்குப் பொறுத்தமாக யார் கிடைக்கிறார்களோ அவர்களை வைத்து எடுப்பது என்று போனைச் சுழற்றினோம். மதுபாலா கிடைத்தார்.

அடுத்து "காதலன்' படத்தில் கவர்னரின் பெண் என்பதால் வட இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து நக்மாவைப் பிடித்தோம். தமிழக கவர்னர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களாக இருப்பதனால் அந்த முடிவு. அப்புறம் "இந்தியனி'ல் சுகன்யாவும் கஸ்தூரியும் நடித்தார்கள். அவர்கள் தமிழ் நடிகைகள்தானே?'' என்றார் ஷங்கர். "சிவாஜி'யில் ரஜினியே வெள்ளையாக இல்லை என்று ஸ்ரேயா சொல்கிறார். ரஜினியும் வெள்ளைக்காரன் போல வேடமிட்டுக் கொண்டு "இதுவரை நான் பச்சைத் தமிழன் இனிமேல் வெள்ளைத் தமிழன்' என்று பாடியிருக்கிறார்.

இதில் பாடல் காட்சியில் மட்டுமே தேவைப்படுகிற நாயகிகளின் நிலை?

கதையும் பிரம்மாண்டமும் கதாநாயகனும் அமைந்துவிட்டால் போதும். கதாநாயகி பாடல்காட்சியில் டான்ஸ் ஆடுவதற்கு மட்டும்தான் என்ற நிலை இருக்கிறது. அதற்கு கொழுக் மொழுக் என்று சிவப்பான ஒரு கிளாமர் டால் இருந்தால் போதும் என்பதுதான் இன்றைய தமிழ்சினிமாவின் நிலை. என்ன சொல்கிறார்கள் தமிழ் படஉலகினர்?

""தமிழ்சினிமா என்று பிரித்துப் பார்ப்பது சரியாக இருக்காது. தமிழ்ப்படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஓவர் சீஸ் எனப்படும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகிறது. நடிகையின் முகம் இந்திய லட்சணத்தோடு இந்திய அளவில் பிரபலமாக இருந்தால் அது பிசினஸýக்கு நல்லது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் ஒரு மீரான் சாஹிப் விநியோகஸ்தர்.

வளர்ந்து வரும் ஒரு தமிழ் நடிகையின் தாய்க்குலம் சொன்ன விஷயம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.



""வேறு மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் நாம் நடிப்பது நம்ம ஊரு மக்களுக்குத் தெரியப் போவதில்லை என்ற தைரியத்திலேயே அளவுக்கு அதிகமாகக் கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள். இங்கே பிறந்தவர்களுக்கு அப்படி நடித்துவிட்டு மீண்டும் இங்கே நடமாடுவதில் கூச்சம் இருக்கிறது'' என்கிறார்.

குஜராத்தில் இருந்து வந்த தேஜாஸ்ரீயிடம் இதற்கு பதில் கேட்டபோது, ""ஏன் இங்கே கூச்சமாக இருந்தால் இவர்கள் எல்லாம் ஹிந்தி படத்தில் போய் கலக்க வேண்டியதுதானே?'' என்கிறார்.

மணமகள் தேவை பகுதியில் பெண்களுக்கு வயது.சிவப்பு நிறம் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. மனைவியாக வரப் போகிறவள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது எல்லா நிறத் தமிழனின் ஆசையாகவும் இருக்கும் போது கதாநாயகிகள் மட்டும் சிவப்பாக இருக்கக் கூடாதா என்ன?

குஷ்பு, தேவயானி என முன்னணி நடிகைகள் எல்லாம் நம்ம ஊரு மருமகள்களாகிவிட்டார்கள். நம்ம ஊரு ஹேமமாலினி, ஸ்ரீதேவி எல்லாம் வட இந்திய மருமகள்களாகிவிட்டார்கள். அப்புறம் எதுக்குசார் சண்டை? யார் கண்டது அடுத்த தமிழக மருமகள் தேஜாஸ்ரீயாகக்கூட இருக்கலாம்.

-தமிழ்மகன்

செவ்வாய், நவம்பர் 06, 2007

கிளியின் கழுத்து வளையல் வேண்டும்!





""உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'' என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ""ஆலங்குயில் கூவும் ரயில்'' பாடலில் ஆராதிக்கப்பட்டு ""எகிறி குதித்தேன் வானம் இடித்தது'' பாடலுக்குப் பிறகு உச்சம் தொட்டவர் கவிஞர் கபிலன். "தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசனோடு கடந்த ஆறுமாதமாக நடித்து வருகிறார் கவிஞர் கபிலன். அதுவும் கவிஞர் கபிலனாகவே.

"கமல் உங்களை நடிகராக்கியதற்குக் காரணம் இருக்க வேண்டுமே?' என்று ஆரம்பித்தோம் கபிலனிடம்.

""என்னைப் பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்த ஆசைபட்டவர் அவர்தான். என்னுடைய "தெருவோவியம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்காக "தெனாலி' படப்பிடிப்பில் இருந்து வந்து போகும் போது விமானம் கிடைக்காமல் ரயிலில் சென்றார். எனக்காக இப்படி ஒரு தியாகம். அந்தப் படத்தில் பாடல் வாய்ப்புக்காகவும் சொன்னார். ரஹ்மானிடம் என்னுடைய ""உன் சமையல் அறையில்'' பாடலைக் கொடுத்தேன். ஆனால் அதற்குள் பாடல் கம்போஸிங் வேலைகள் எல்லாமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் அந்தப் படத்தில் அப் பாடலைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அந்தப் பாடலை விக்ரம் நடித்த தில் படத்தில் பயன்படுத்தினார் இயக்குநர் தரணி.

இப்போது நடிப்பு அறிமுகம். திடீரென்று அழைத்து அவருடைய காரிலேயே மாமண்டூர் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். ""படத்தில் பாட்டெழுதும் வாய்ப்புக்காக கூப்பிடவில்லை. நடிப்பதற்காக'' என்றார். ""நான் நடிப்பதா?'' என்று தயக்கத்தைத் தெரிவித்தேன். கவியரங்கத்தில் கவிதை வாசிப்பது போல சில கவிதைகளை வாசித்தால் போதும் என்றார். மைக்குக்குப் பதில் கேமிரா இருக்கும்; அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் நீங்களாகவே வந்தால் போதும்'' என்று காட்சிகளையும் சொன்னார்.

மகா கலைஞனோடு நடிக்க வேண்டிய பயமும் ஆர்வமும் சேர்ந்து ஆட்டிப் படைத்தது. அவருடைய நட்பு தந்த தைரியத்தில் சம்மதித்தேன். ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வேலை, அக்டோபர் வரை என்னை ஆட் கொண்டுவிட்டது. நடித்ததில் ஒரு சுவாரஸ்யம். கவியரசர் வைரமுத்துவின் "பூமரங்களின் சாமரங்க'ளையும் "பனிவிழும் மலர் வன'த்தையும் தியேட்டரில் முன் வரிசையில் உட்கார்ந்து கைதட்டி ரசித்தவன் நான், இப் படத்தில் இடம் பெறும் நடன அரங்கேற்றத்துக்காக அவர் எழுதிய பாடலுக்கான காட்சி ஒன்றை படம் பிடித்தார்கள். நான், கமல், கே.ஆர்.விஜயா, நாகேஷ் எல்லோரும் உட்கார்ந்து ரசிப்பதாகக் காட்சி. நடிப்புக்காக ரசித்தது வித்தியாசமான அனுபவம். ஓய்வு கிடைத்தால் எல்லோரும் குடும்பத்தோடு கோவிலுக்குப் போவார்கள். அல்லது சுற்றுலாவோ, சும்மாவோ இருந்து பொழுதைக் கழிப்பார்கள். கமல்ஹாசனுக்கு ஓய்வு என்றால் சுஜாதா, மதன், புவியரசு, ஞானக்கூத்தன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுவது. அந்த வரிசையின் கடைசி உறுப்பினராக நானும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார் கபிலன்.

நடிப்பு வேலை முடிந்தது. ""கிளியின் கழுத்தில் இருக்கும் வளையல் வாங்கி அணிய வேண்டும்'' என்று விஜி இயக்கும் "வெள்ளித்திரை' படத்துக்கான பல்லவியோடு கம்போஸிங் ஸ்பாட்டுக்குப் புறப்பட்டார் அவர். கமல் படத்தில் கபிலனாகவே நடிப்பது அப்படியான ஒரு மகிழ்ச்சிதான் அவருக்கு.

-தமிழ்மகன்

வெள்ளி, நவம்பர் 02, 2007

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!





சென்னைக்கு இது 368- வது வயது.

ஏறத்தாழ 368 ஆண்டுகளுக்கு முன் தமிழகக் கடற்கரை ஓரம் இருந்த ஒரு சிறு மீனவக் குப்பத்தில் இருந்துதான் சென்னையின் சரித்திரம் துவங்குகிறது. விறுவிறுப்பான சினிமா போல அமைந்த சென்னையின் கதை:

வாணிபம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்த இடம் நிசாம் பட்டினம் மற்றும் பெத்தபள்ளி.

அங்கு நிலவிய தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அங்கிருந்து சிறு சிறு படகுகளில் தங்கள் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு பழவேற்காட்டுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தில் ஆறுமுகப் பட்டனத்தை ( அழ்ம்ஹஞ்ர்ய்)1626 -ல் அடைந்தனர். அங்கும் துறைமுக வசதி சரியாக இல்லை.

கண்டேன் சென்னையை!

ஆறுமுகப் பட்டனத்தில் கிடங்கின் தலைவனாகப் பணியாற்றி வந்த பிரான்சிஸ் டே என்பவன் 1637-ல் இடம் தேடி பாண்டிச்சேரி வரை கடற்கரையோரமாகப் பயணித்தபோது, பழவேற்காட்டுக்குத் தெற்கே இருந்த இடம் நெசவுப் பொருள்களை மலிவாக வாங்கவும் கிடங்கு அமைப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதைக் கண்டான்.

அந்த இடம் கிழக்கே கடலாலும், தெற்கே கூவம் ஆற்றாலும், மேற்கே பின்னாளில் எழும்பூர் ஆறு என அழைக்கப்பட்ட ஆற்றாலும் சூழப்பட்டிருந்தது. மூன்று பக்கத்திலும் இயற்கை அரண்கள் இருந்ததால் இந்த இடம் பிரான்சிஸ் டேக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. டே தேர்ந்தெடுத்த அந்த இடம்தான் "சென்னைப் பட்டினம்'. தேர்ந்தெடுத்த ஆண்டு 1637.

இங்குத் தொழில் தொடங்க அனுமதி பெற அப்போது தொண்டை மண்டலத்தை ஆண்ட நாயக்கர்களை அணுகினார்கள். அவர்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த நிலப்பகுதியைச் சொன்னதும் வேங்கடபதி சந்தோஷமாகச் சம்மதித்தார். ஆங்கிலேயர் மூலமாகப் பாதுகாப்பையும் அதே சமயத்தில் வருவாயையும் ஈட்ட முடியும் என்ற திருப்திதான் வேங்கடபதி நாயக்கரின் மகிழ்ச்சியான ஒப்புதலுக்குக் காரணம்.

ஒப்பந்தம்

1639 -ல் ஆகஸ்ட் 22- தேதி பாளையக்காரர்கள் -டே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆண்டுக்கு 1,200 வராகன் கிஸ்தி கட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புக் கொண்டனர். இதைத்தான் சென்னை பிறந்த ஆண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

வாழைத் தோட்டத்தில் கோட்டை

கடற்கரையோரமெங்கும் சிறு சிறு மீனவக் குப்பங்கள் திருவொற்றியூர் முதல் திருவல்லிக்கேணி வரை இருந்தன. இப்பொழுது "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை' இருக்கும் இடம் அப்போது மதுரசேனன் என்ற மீனவனின் வாழைத் தோட்டமாக இருந்தது. அதனருகே நரிமேடு எனும் குன்று இருந்தது. அதனருகே சிறு தீவு (இப்போது தீவுத் திடல்). கடற்கரை ஓரமாக நின்று பார்த்தால் நகிரி மலையின் உச்சி தெரியும். கப்பல் மாலுமிக்கு அதுதான் கலங்கரை விளக்கம்.

பிராட்வே சாலை இருக்கும் இடத்தில் சிறு கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. கால்வாய்க்கு மேற்கே விளை நிலங்கள். அவற்றின் பாசனத்துக்கு உதவியாக ஏரிகள் இருந்தன.

"பூவிருந்தவல்லியிலிருந்து சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சந்திரகிரி அரசன் கீழ் வேங்கடபதி நாயக்கர் ஆண்டுவந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு நான்கு சிற்றூர்களைத் தந்தார்' என்று மெக்கன்சியின் கைப்பிரதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே மதறாஸ் குப்பம், சென்னைக் குப்பம், ஆர் குப்பம், மேலுப்பட்டு.

பண்டகச் சாலைக் கட்டட வேலை 1640 மார்ச் முதல் தேதி தொடங்கப்பட்டது. இக் கட்டடத்தின் ஒரு பகுதி "செயின்ட் ஜார்ஜ் தின'த்தில் கட்டி முடிக்கப்பட்டதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயரிட்டனர். பணப்பற்றாக்குறை காரணமாக மெதுவாகவே வளர்ந்தது கோட்டை. 14 ஆண்டுகள் கழித்து 1653 -ல் கோட்டை முழுமையடைந்தது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும் தெற்குப் பகுதி மதறாஸ் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மெட்றாஸ் என்றனர். தமிழர்கள் சென்னப்பட்டனம் என்று அழைத்தனர். 1653-ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும் 1741-ல் மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு ஆளானது. 1746-ல் பிரெஞ்சு ஆட்சியர்களின் கைக்கு மாறியது.

மீண்டும் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பிறகு 1758-ல் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி. ஆனால் இரண்டே மாதத்தில் ஆங்கிலேயர்கள் மீட்டனர். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடையும் வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வசமாகவே இருந்தது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1968-ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. அதே போல் மெட்றாஸ் என்ற பெயரும் 1997-ல் சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரம், இன்று 60 லட்சம் பேர்களோடு மகத்தான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை மட்டுமின்றி மக்களின் கண்ணோட்டத்திலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் மறுக்க முடியாது.

"சென்னை' என்று பெயர் பெற்றதற்கும் இருவேறு கருத்துகள் உள்ளன. வேங்கடபதி நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக சென்னப் பட்டனம் என்று பெயர் வந்ததென்றும் இங்கிருந்த "சென்ன கேசவபுரம்' என்ற இடம்தான் சென்னை என்று மாறிப்போனதென்றும் பெயர்க் காரணங்கள் நிலவுகின்றன. எது எப்படியோ சென்னையை இப்போது நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறதல்லவா?

-தமிழ்மகன்
august 22nd 2007

LinkWithin

Blog Widget by LinkWithin