வெள்ளி, ஜூலை 28, 2006

தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?


தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?

தமிழ் சினிமா பாடல்களில் ஒரு வித நவீனத் தன்மை பெருகி வருகிறது. நவீனத் தன்மையென்றால் பழைய சிந்தனைகளுக்கு மெருகேற்றுவதல்ல.
நீலமலர்கள்' என்ற தமிழ்ப்படத்தில் பார்வை தெரியாத நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கிறாள்:
இது இரவா பகலா?
நாயகன் பதில் -ன்னொரு கேள்வியாக அமைகிறது... ''நீ நிலவா, கதிரா?''
அடுத்து பாடல் இப்படி தொடர்கிறது...
இது வனமா மாளிகையா?
''நீ மலரா ஓவியமா?''
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
''உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா?''
இதே பாடல் இப்போது ''உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா?'' என்று நவீனப்பட்டிருக்கிறது.
நாம் சொல்ல முனைந்தது இத்தகைய நவீனத்துவத்தைப் பற்றியல்ல.
தமிழ் சினிமா பாடல்களில் இப்போது அதிகரித்து வரும் அறிவியல் செய்திகளும் புள்ளிவிவரங்களும்தான் நாம் சொல்லும் நவீனம்.
வைரமுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புள்ளிவிவரங்கள் கொடுப்பார்... 'காதலன்' படத்தில் வரும் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் ''உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் அதில் காதல் நரம்பு எந்த பக்கம்?'' என்கிறார். அதே பாடலில் ''தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இரண்டு சொல்லடி அதிகபட்சம் என்று காதலன் காதலியிடம் ஏங்குவான். ''தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து'' என்பார் -ன்னொரு பாடலில். ''அட பூகம்ப வேலையிலும் வான்கோழி களவி கொல்லும்'' என்கிறது 'தாஜ்மகால்' படத்தில் இடம்பெறும் அவருடைய பாடல்வரி ஒன்று. உன் விழி ஈர்ப்பு விசையினிலே நான் வந்து விழுந்துவிட்டேன் என்பது போன்ற அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் ஏராளம், ஏராளம்.
வாலி நுனிப்புல் மேய்வது போல் சில விஞ்ஞான விஷயங்களைச் சொல்லுவார். விஞ்ஞானத்தைவிட விரசம் சற்று தூக்கலாகவே இருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ''ராஜா கைய வெச்சா'' பாடலில் காரையும் பெண்ணையும் ஒப்பிடுவார். ''கட்டியவன் விரல்தான் மேலே படணும், கண்டவன் கைபட்டா கெட்டுப் போயிடும்'' என்றும் ''காரும் பெண்போல வேகம் உண்டாக தேகம் சூடேறுமே'' என்றும் ஒப்பிட்டார்.
''காதல் வெப் சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும்'' பாடலில் ''ஹார்ட்வேர் உள்ளம் கெட்டுப் போனதென்ன? சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன?'' என்ற பாடல் வரிகள் இடம் பெருகின்றன. 'காதலர் தினம்' படத்தில் வரும் பாடலில் ''மனசை விட்டு மவுசை தட்டு மாட்டிடும் பதினெட்டு'' என்று எழுதியிருக்கிறார்.
பழனிபாரதி தன் பாடல்களில் நிறைய ஆங்கிலப் பிரயோகம் செய்தாலும் அவை விஞ்ஞான குறிப்புகள், விஞ்ஞான ஒப்புமைகள் தன்மையில் இடம்பெறுமா என்பது சந்தேகமே. 'பூக்கள் அவளிடம் ஆட்டோ கிராப் கேட்டன' பாணியில் அவருடைய ஆங்கிலப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.
இப்போது வந்திருப்பவர்களில் பா.விஜய் அறிவியலோடு பாடல் எழுதிவருகிறார். 'தெனாலி' படத்தில் இடம்பெற்ற ''சுவாசமே சுவாசமே'' பாடல் பல அறிவியல் செய்திகளை அடுக்கடுக்காகச் சொல்கிறது. ''அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்...'', ''இயற்கையின் கோளாய் இயங்கிய என்னை செயற்கை கோளாய் உன்னை சுற்ற வைத்தாய்..'', ''இசைத்தட்டாக இருந்த என்னை பறக்கும் தட்டாக மாற்றினாய்'',''நிலவு இல்லாத புதன் கிரகம் நானே முழு நிலவாக எனக்காக வந்தாய்...'' என்று சொல்லிக் கொண்டே போகிறார்.
இதற்கெல்லாம் முன்னோடி என்.எஸ்.கே. இதற்கெல்லாம் வெகு காலங்களுக்கு முன்பே ''விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி'' பாடல் மூலம் பார்முலா போட்டுக் கொடுத்தார் என்பது சாலப் பொருந்தும். ''பட்டனைத் தட்டிவிட்டா தட்டுல இட்டிலியும் காபியும் பக்கத்தில் வந்துடனும்'' என்றார்.
அதற்கும் மிகவும் முன்னால் சங்க இலக்கியப் பாடலில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த தலைவியின் காதுகளில் இருந்த தொங்கட்டான் ஊஞ்சலைவிட வேகமாக ஆடிக் கொண்டிருந்ததாகக் கவிஞன் வியந்திருக்கிறான்.
ஆரம் குறையக் குறைய அலைவு அதிகரிக்கும் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் அறிவித்திருக்கிறார்கள். என்ன செய்வது நம் தமிழ்க் கவிஞன் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டு பிடித்துவிட்டு அதை மேற்கொண்டு இட்டுச் செல்லாமல் அதற்கடுத்து மூக்குத்தி எப்படி ஜொலித்தது என்று வியக்கப் போய்விட்டான். பூமி சுழல்கிறது என்று கலிலியோ வந்த பிறகுதான் தெரிந்தது. சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்றார் வள்ளுவர்.
நம் கவிஞர்கள் இலக்கியத்தோடு அறிவியலையும் வளர்த்து வருகிறார்கள், அது சினிமா பாடல்களிலும் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. சினிமா கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பவர்களும் இதைக் கணக்கில் கொள்ளலாம்.
-தமிழ்மகன்

வியாழன், ஜூலை 27, 2006

சின்னத்திரை சித்திகளின் கையில்...


சின்னத்திரை சித்திகளின் கையில்

''அகநானூறு, புறநானூறு போல சித்தி நானூறு'' என்று 'சித்தி' தொலைக்காட்சி தொடரை வாயாரப் புகழ்ந்திருக்கிறார் (முன்னால்) முதல்வர் கலைஞர்.
'சித்தி' தொடர் நானூறு நாட்களாக - விறுவிறுப்பாகத் தமிழர்களின் -ல்லங்களில் வெளியானதை அகநானூறுடன் ஒப்பிட்டது அவருடைய சமயோசித புத்திக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் ஏறத்தாழ எல்லா தொடர்களுமே சித்திக்கு அடுத்தபடியாகத் தமிழர்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. தொடர்களுக்கு இல்லங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து பல ரிடையர்ட் நடிகைகள் களமிறங்கியிருக்கின்றனர்.
குட்டி பத்மினி, கே.ஆர். விஜயா, ஸ்ரீ ப்ரியா, ராதிகா, ரேவதி, நளினி, யுவராணி, ரூபஸ்ரீ, தாரணி, அனுஷா, ராகசுதா உள்ளிட்டோர் பட்டியலின் சமீப வரவு, குஷ்பு. மருமகள், கோடீஸ்வரி தொடர்கள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சராசரியாக இவர்கள் நடிக்கும் எந்தத் தொடருக்கும் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டதாகத் தகவல் -ல்லை. ஆரம்பத்தில் எல்லா மெகா தொடரையும் 52 வாரம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு ஏற்படும் விளம்பரமும் பரபரப்பும் 40 வாரங்களுக்குப் பின்புதான் சூடு பிடிக்கிறது. ஆகவே மேற்கொண்டு 50 வாரங்களாவது தொடராவிட்டால் டிவி தயாரிப்பாளர்களின் ஆத்மா சாந்தியடையும் வாய்ப்பு இல்லை.

ஆகவே எல்லா தொடருமே நூற்றுக்கணக்கான வாரங்களுக்குத் தொடர்கிறது.
'மங்கை', 'அண்ணி', 'சொந்தம்', 'வாழ்க்கை', 'குடும்பம்', 'கோகிலா எங்கே போகிறாள்?', 'கிருஷ்ணதாசி', 'தோழிகள்' உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்கள் எல்லாவற்றையும் ஒரு பொதுத் தன்மையில் அடைக்கலாம்.
எல்லாவற்றுக்கும் ஏறத்தாழ ஒரு குடும்பப் பாடல் உண்டு. பெரும்பாலும் அத் தொடரின் தலைப்பை பலமுறை வலியுறுத்துவதாக இருக்கும். (மக்கள் மனத்தில் பதிய வேண்டாமா?)

எல்லா தொடரிலும் துன்பங்களைச் சுமக்கும் ஒரு இளம்பெண்ணோ, அல்லது தனக்கு இழைக்கும் அநீதிக்குப் பழிவாங்கும் இளம்பெண்ணோ அவசியம். சில நேரங்களில் இரண்டு பெண்களும் ஒரே தொடரில் இருப்பார்கள்.
தன்னால் தட்டிக் கேட்க முடியாத அநீதிகளையெல்லாம் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு கதாநாயகன் தட்டிக் கேட்கும்போது இளவட்டங்கள் எப்படி ஆர்ப்பரித்தனரோ அதே நிலை இப்போது வீட்டில் உள்ள பெண்களுக்கு. மாமியாரைத் தட்டிக் கேட்கும் தொடர்கள், காதலித்து ஏமாற்றியவனைப் பழிவாங்கும் தொடர்கள், பெண்குழந்தையை வெறுக்கும் ஆண்களைத் தோலுரிக்கும் தொடர்கள் உள்ளிட்ட பெண்களுக்கான பிரச்சனைகளின் மாயத் தீர்வாக -ன்றைய தொடர்கள் உள்ளன. பெண்களுக்கு உளவியல் ரீதியான மன நிறைவையும் சில நேரங்களில் பழிவாங்கிய திருப்தியையும்கூட இத்தகைய தொடர்கள் தருகின்றன.

ஆண்கள் ஸ்டார் மூவிஸையும் பெண்கள் 'சித்தி' தொடரையும் ஒரே நேரத்தில் ஒரே டிவியில் பார்க்கப் போட்டி போட்டு பல வீடுகளில் உள்வீட்டுக் குழப்பங்கள். இறுதியில் தொடரைப் பார்ப்பதில் பெண்களே வெற்றி பெற்று ஆண்களைப் பழிதீர்க்கிறார்கள் என்பது என் அக்கம்பக்கத்து விசாரணையில் தெரியவந்த உண்மை. (என்னுடைய சொந்த அனுபவமும்தான்.)
இத்தகைய தொடர்களால் பெண்களின் மன உணர்வுகளில் சற்றே போராட்ட உணர்வுகள் ஊட்டப்பட்டு, பின்னர் அதற்கு ஒரு மானசீகமான தீர்வும் வழங்கப்பட்டுவிடுகின்றன. சின்ன வயசிலேயே காணமல் போய் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் கோடீஸ்வர சித்தப்பா மூலமாக எல்லா பிரச்சனையும் தீர்ந்ததாகவோ, அவளுடைய நல்ல மனதைப் புரிந்து கொண்டு குடும்பமே அவளிடம் மன்னிப்பு கேட்பது போலவோ காட்டி சீரியலை முடிக்கிறார்கள்.

சினிமா ஆண்கள் கையில் என்றால் சின்னத்திரை பெண்கள் கையில்... அது ஆண்களால் தயாரிக்கப்பட்டலும்.
சினிமாவில் கதாநாயகனுக்குக் கிடைக்கிற வெற்றி போல, சின்னத்திரையில் பெண்களுக்கு வெற்றி நிச்சயம்.
-தமிழ்மகன்
(2001)

செவ்வாய், ஜூலை 25, 2006

missed the bus... சிவாஜியின் ஏக்கம்

missed the bus... சிவாஜியின் ஏக்கம்
ஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால். ஓயாத அலைகளைப் போலான மனக் குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின் போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேர விடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது....

ஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கீகாரம் எனறு எதை நினைக்கிறீர்கள்? விருது மட்டும் திறமைக்கான முழு அங்கீகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே...உங்கள் விஷயத்தில் எப்படி?

ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். ...எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?
அங்கீகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டுக் கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருமா அதற்குத் தகுதியானவர்கள்? 'லாபி' செய்து விருது வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.
ஒரு கலைஞனுக்கு விருது என்பது, அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.
ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனத்தின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன்தானே......இதை மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.

பால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? விருது வழங்குவதில் அரசியல் தலையீடு, பாரபட்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பாரட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன். அப்படிச் சொன்னால் அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது. அது ஏன் இத்தனை நாள் எனக்குக் கிடைக்கவில்லையென்று யோசித்துப் பார்த்தபோது.....எனக்குக் கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசாபாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவருக்குக் கிடைக்கும். இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரைக்கும் இப்படித்தான் நடந்தது என்று - எனக்குத் தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்யோகஸ்தர்கள் சொல்கிறார்கள் எனக்கு இந்த வருடம் விருது கிடைத்ததே... அதுவும் சாதாரணமாகக் கிடைக்கவில்லை... வேறு ஒருவருக்ககுப் போய்விட்டுத்தான் என்னிடம் திரும்பி வந்திருக்கிறது. இதையும் அந்த சர்க்கார் உத்யோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.

உங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே... உண்மையா?

ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டதட்ட எனது படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான் ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.
அதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை. புதுவையை ஒருகாலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்சுக்காரன் நம்மை ஆட்டிப் படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு.! பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம் விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ் நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.
எனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதைக் கழிச்சுக் கட்டிட்டாங்க. அது யாருன்னு, எனக்குத் தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.
செவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. அதிலேயே 1,2,3 என மூன்று வகையான விருதுகள் உண்டு. எனக்குக் கிடைத்தது முதல்தர விருது உண்மையச் சொன்னால் அந்த விருது எவ்வளவு மதிப்ப மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை. தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது.
சகோதரி நடிகை ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே.. அது வந்த பிறகும் சிவாஜியை இன்னும் நீங்க யாரும் கண்டு கொள்ளவில்லையே... என்று கேட்டிருக்கிறார். ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களிடம் பேச அதற்குப் பிறகுதான் அந்த விருதின் மதிப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.

இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது? உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது?
கப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே.......அங்கீகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்கமுடியும். எனக்கு முழுத் திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.
கிட்டத்தட்ட 300 படங்களில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக உங்களை மாற்றிக் கொள்வது typical mental exercise இருந்திருக்குமே.....அதை நிங்கள் சமாளித்தது எப்படி?

அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில் வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும்? கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் யாரும் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்தச் சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கெண்டிருக்கும்போது.... மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்த்து இருக்கும் போது... இது மாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று இருக்கலாமா? நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். கிடைக்கிற அரை மணிநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க? அதைவிட தீவட்டின்னு சொல்லுங்க.... என்னைப் பொருத்தவரையில், ஆஸ்திக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்குக் கிடைத்தது - நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.

உங்கள் குரு யார்?

நடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கே தான் எனது குரு பொன்னுசாமி படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால். முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருஷங்கள் எனக்குப் பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா, நான் ஒரு பெண் வேஷக்காரன் என்பதை. தலைமைப் பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் பெண் வேஷக்காரர்தான் பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாகப் பரிமளிக்க முடியும்.

நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் நல்ல பாத்திரங்களிலேயே நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லையா?

இல்லை. நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நான் நினைத்தேன். ஆனால் சம்பந்தம் உண்டு என மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றிபெற்றார். He did it. I missed the bus, எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான் நான் குடிகாரனாக பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.
அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய்விடுவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு? செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதாகக்கூட வைத்துக் கொள்ளுங்களேன்...
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்... அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.

இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே?

கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க...நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்கப் போகிறது.!

ஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே.... இப்போது அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது என்று எழுதியதும் அவர்தான். திராவிடப் பாரம்பரியம் பற்றி தப்புத் தப்பாக எழுதியவர்களில் முக்கியமானவர் மணியன். அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டுவிழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்ததே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாரம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்குப் பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்தே அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது போகட்டும்.
Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளைப் பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நான்றாக நடிப்பவனை ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் யாருமே தான் நல்லவன்னு சொல்லமாட்டானே..அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.

உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமை வெளிப்படுத்தியவர் யார்?

நிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம், what not? எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப்படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.

காமெடி, குணச்சித்திரம் வில்லன் - இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது?

காமெடிதான். காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அழகா இருந்து. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு டான்ஸ் ஆடி, இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்கிறார்கள். காமெடி அப்படியில்லை, அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும் ஆனால் கொடுக்கமாட்டாங்க.. வசனம் பேசுவது, 'எமோஷன்' எல்லாம் என்னாவது? வைத்திருக்கும் கிளிசரீன் என்னாவது? இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்... (சிரிக்கிறார்)
-தமிழ்மகன்
(1998)

திங்கள், ஜூலை 24, 2006

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

நாகரிகமான ரெக்கார்ட் டான்ஸ் ?




இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியச் சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள் தினமும் காட்சிகள் போல நடைபெறத் துவங்கிவிட்டன. தமிழ்நாட்டில் கமல், ரஜினி, சரத்குமார், விஜய், பிரசாந்த், குஷ்பு, தேவயானி, ரம்யா கிருஷ்ணன், நக்மா, ரோஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் என அனைத்துத் தரப்புக் கலைஞர்களும் வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்று பார்த்தால், அபஸ்வரம் ராம்ஜி, எஸ்.வி. ரமணன், தியாகராஜன் (பிரசாந்த்), கங்கை அமரன், இசையமைப்பாளர்கள் தேவா, சின்னி ஜெயந்த் ஆகியோரைச் சொல்லலாம். கடந்த ஆண்டில் இந்தியாவில் ஷாரூக்கான், சல்மான்கான், தபு, அனில் கபூர் உள்ளிட்ட பலர் ஐரோப்பிய நாடுகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

கேரளத்திலிருந்து பாசில் தலைமையில் ஒரு குழு துபாய்க்குப் படையெடுத்தது. ஆந்திர நடிகர்களும் கலை நிகழ்ச்சிகள் மூலம் காசு கொழிக்கிறார்கள். ''இந்தக் கலைநிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் பணமும் புகழும்தான்.... நடிகர்களின் இந்த ஆர்வத்துக்குக் காரணம்'' என்கிறார் அபஸ்வரம் ராம்ஜி. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து : ''இந்தி நடிகர்கள்தான் இதைப் பிரமாதமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஷாரூக்கான் இப்போது நம்பர் ஒன் நடிகர். பிஸியாக -ருக்கிறார். ஆனால் அவர் கலந்து கொள்ளாத கலை நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. (வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சியில் பல கோடிகள் சம்பாதித்திருப்பதாக அவர் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது.) விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். இங்கிருப்பவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கெளரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். பிரபுதேவா 'பீக்'கில் இருந்தபோது உலகத் தமிழர்கள் பலரும் அவருடைய கலை நிகழ்ச்சிக்காகப் போட்டி போட்டார்கள். ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இப்போது அஜீத்தின் நேரம். அவரும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனா 'பீக்' ல இருக்கிற நடிகர்களைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் பிரசாந்த் இதை நல்லா பயன்படுத்திக்கிறார். அவர் செய்வதுதான் சரி. நான் முதன்முதலாக 77'ல ஸ்டார் நைட் நடத்த ஆரம்பிச்சேன். அப்ப ஜெய்சங்கர்தான் எங்க நிகழ்ச்சியின் சென்டர் பிகர். அதுக்கப்புறம் 60-70 வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன். நடிகர்-நடிகைகளை மையமா வெச்சு நிகழ்ச்சிகளை நடத்தறது இன்னொரு வகை. நாங்க நடத்தினதிலேயே அதிக கேட் கலெக்ஷன்னு சொன்னா அது சிங்கப்பூர்ல கமல் தலைமையில் நடந்த நிகழ்ச்சிதான். ஒரு கோடியே 14 லட்சம் கலெக்ஷன் ஆச்சு. இதே மாதிரி ரஜினியை வெச்சு என் அண்ணன் எஸ்.வி. ரமணன் லண்டன்ல நடத்தின நிகழ்ச்சியும் மிகப் பெரிய கலெக்ஷனைத் தந்தது. வெளிநாட்டு ஜனங்க கடந்த 10 வருஷமா கேட்டுக்கிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்னா அது கவுண்டமணி, செந்தில். ரெண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்த சம்மதிச்சா அதுக்குப் பெரிய வரவேற்பு இருக்கும்!'' என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு 'க்ளு' கொடுக்கிறார் ராம்ஜி.

'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள நினைக்காதது ஏன்?' அஜீத்திடம் கேட்டோ ம். ''என்னுடைய லட்சியமெல்லாம் சினிமா, சினிமா, சினிமாதான். விளம்பரப் படங்களில் நடிப்பது, வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி என்று கவனத்தைத் திருப்ப விரும்பவில்லை. மற்றவர்களுக்கு நேரம் எப்படியோ. எனக்கு அடுத்த ஆண்டு வரை எந்த நிகழ்ச்சிக்கும் தேதி தர முடியாத அளவுக்கு 'டைட்' ஆக இருக்கிறது. நான் கூச்ச சுபாவம் உள்ளவன். மேடையில் தோன்றி நடிப்பதோ, நடனம் ஆடுவதோ என்னால் ஒருபோதும் முடியவே முடியாது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்'' என்று காரணங்களை அடுக்கினார் அஜீத். ''வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவது பணம், புகழுக்காக மட்டுமல்ல. கடல் கடந்து பரவியிருக்கும் தமிழர்களுக்கு கலைஞர்கள் தரும் மன திருப்தி'' என்கிறார் தொடர்ந்து வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் தியாகராஜன். ''வடநாட்டில் இருந்து செல்லும் நடிகர்களாகட்டும், தென்னிந்தியாவில் இருந்து கலை நிகழ்ச்சி நடத்தச் செல்லும் நடிகர்களாகட்டும் யாரும் இந்தியக் கலையை அங்கு அறிமுகப்படுத்தியதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி என்பது ஃப்ளைட் ஏறிப் போய் நடத்தப்படும் நாகரிகமான ரெக்கார்ட் டான்ஸ்'' என்கிறார் கலைநிகழ்ச்சிகளில் விருப்பமில்லாத ஒரு நடிகர்.

-தமிழ்மகன்

படிக்காவிட்டால் போதுமா?


சினிமாவில் சில விஷயங்கள் தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. 'உச்' கொட்டினால் நாய்கள் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கிக் கொண்டு நிற்பதைப் போன்றோ, குரங்குகள் 'ஆட்றா ராமா' என்று பிரம்பைக் காட்டினால் ஆடுவது போலவும் ரசிகர்களை ஒருவகைப் பழக்கத்துக்கு ஆட்படுத்தி வைத்திருக்கிறார்கள், சினிமா துறையினர்.
பல சமயங்களில் சமூகம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகளுக்கும் (அல்லது சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கங்களுக்கும்) இதற்கும் இமாலய வித்தியாசமிருக்கும். குறிப்பாகக் கல்வி என்பது குறித்து சினிமாவில் சித்திரித்து வரும் வேடிக்கைகள் வேதனையானவை. படித்தவனை அயோக்கியனாகச் சித்தரிப்பது தமிழ் சினிமாவின் வாடிக்கை. 'படிக்காத மேதை' என்று பெயர் வைப்பார்கள். படிக்காதவன் கள்ளம் கபடமற்றவன் என்பது அவர்களின் தீர்மானம்.

கர்மவீரர் காமராஜர் படிக்காத மேதையாக இருந்ததற்காக படிக்காமல் இருப்பதை ஒரு தகுதியாக்கிவிட முடியுமா? அதை காமராஜர்தான் விரும்புவாரா? அப்படி விரும்பியிருந்தால் 14 ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்திருப்பாரா? படித்தால் மட்டும் போதுமா? என்ற சந்தேகமும் சினிமாகாரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. படிக்காதவன் வெகுளியாக எல்லா துன்பங்களையும் ஏற்றுக் கொள்வான், தியாகத் திருவுறுவாக இருப்பான். படித்த அவனுடைய அண்ணனோ இல்லாத தில்லுமுல்லு வேலைகளையும் செய்வான். தன் சுயநலத்துக்காகச் சுற்றயிருப்பவர்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வஞ்சிப்பான்.

மேலை நாடுகளில் படித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பும் 'ரத்தக் கண்ணீர்' எம்.ஆர். ராதா பெற்ற தாயை எட்டி உதைப்பார். காமுகனாக கண்டவளோடு சுற்றுவார். சிகரெட் பிடிப்பார். பெரும்பாலும் வில்லன்கள் எல்லோரும் படித்தவர்களாக இருப்பது சினிமாவில் வலியுறுத்தப்பட்டு வரும் நடைமுறை. நம்பியாரும் அசோகனும் எம்.ஆர். ராதாவும் கோட்டு சூட்டு போட்டபடி சதிவேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பதை உணரமுடியும். படித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று வாதிடுவதல்ல நமது நோக்கம். எழுத்தறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் நமது நாட்டில் கல்வியின் மேன்மையை வலியுறுத்தும்படியான படங்களைவிட இத்தகைய படங்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இந்தக் கட்டுரை.

பாரதிராஜா வந்தார். கிராமத்துப் பெண்ணை ஏமாற்றும் காமுகனாக ஒரு மருத்துவரைச் சித்திரித்தார். சமீபத்தில் வெளியான 'கடல்பூக்கள்' படத்திலும் ஒரு மீன் ஆராய்ச்சி மாணவனால் ஒரு குப்பத்துப் பெண் ஏமாற்றப்படுகிறாள். பாரதிராஜாவுக்குப் படித்தவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட வேண்டும் என்கிற நோக்கமில்லை. ஆனால் சினிமாவை சினிமா பார்த்ததன் மூலமாகவே உருவாக்குவதால் நிகழ்ந்த விபத்து இது.

-- தமிழ்மகன்

சனி, ஜூலை 22, 2006

மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...


மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...

'சினிமா நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் இல்லையென்றால் இனிமேல் எங்களால் படமெடுக்க முடியாது' என்று ஒற்றைக்காலில் நிற்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். 'ஓடுகின்ற குதிரையின் மீதுதானே பணம் கட்டுகிறீர்கள். தரமில்லாத சரக்கு என்றால் எதற்காக அதற்குப் போட்டி போடுகிறீர்கள்?' என்கிறது நடிகர் சங்கம். ஒரு படம் கருவாகி, உருவாகி, வெளியாகி ஓடுவதற்கு எத்தனை பிரிவினரின் உழைப்பு தேவைப்படுகிறது? பட்டியல் இடுவோம். கதாசிரியர், இயக்குநர், வசனகர்த்தா, உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவாளரின் உதவியாளர்கள், லைட்மேன்ஸ், ஆர்ட் டைரக்டர், அவருடைய உதவியாளர்கள், ஸ்டன்ட், நடனக் கலைஞர்கள், துணை நடிகர்கள், புரொடக்ஷன் ஆட்கள், புரொடக்ஷன் மேனேஜர், வாகனம் ஓட்டுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள், பரிமாறுகிறவர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடுபவர்கள், பேசுபவர்கள், ஆடை வடிவமைப்பவர்கள், பத்திரிகைத் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஷ¥ட்டிங் ஸ்பாட் ஏஜெண்டுகள்... இன்னும் சொல்ல மறந்த எத்தனையோ பேரின் உழைப்பு சினிமா வெற்றிக்குத் துணை நிற்கிறது.

இவ்வளவு உழைப்புக்கும் பணம் செலவிடுகிற தயாரிப்பாளர், அவருக்குத் துணை நிற்கிற விநியோகஸ்தர்கள், சினிமா தியேட்டர் அதிபர்களின் திரையீடு உத்திகளும், திறமைகளும், பணம் புரட்டப் படும் பாடுகளும் உழைப்பின்றி வேறென்ன? மேலே குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினரின் உழைப்பு, நடிகர்களின் உழைப்புக்குச் சற்றும் சளைத்ததில்லை. அப்படியென்றால் இத்தனை குதிரைகள் இழுத்துக் கரை சேர்க்கும் சினிமா தேரை, நடிகர்கள் மட்டும் இழுத்துக் கரை சேர்த்ததாகச் சித்திரிப்பது, எந்த வகையில் நியாயம்?

லைட்மேன் 'குதிரை'யின் மீதோ, வட இந்திய நடிகர்களுக்குக் குரல் கொடுத்து அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டும் பின்னணிக்குரல் தரும் 'குதிரை'யின் மீதோ யாரும் பணம் கட்டாதது ஏன்? அஜீத்தும், விஜய்யும், ரஜினிகாந்தும், ஜோதிகாவும் மட்டுமே முழுப் படத்தின் வெற்றியைச் சுவைப்பது எப்படி நியாயம்? இது தமிழ் நடிகர்களுக்கு மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்களுக்குமான நியாயமாகவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு, பழக்கத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டது.
ஆம்! வெறும் பழக்கம்தான். வாழ்க்கையே சில பழக்கங்களின் தொகுப்பு எனும்போது இது மட்டும் பழக்கமாக இருக்கக்கூடாதா? நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் பழக்கமும், அவர்களுக்கு விதம்விதமான பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்தி விருதுகள் வழங்கும் பழக்கமும், நடிகர்களின் காதல்களையும் கல்யாணங்களையும், விவாகரத்து விவகாரங்களையும் தலைப்புச் செய்திகளாக்கிய பத்திரிகைகளின் பழக்கமும், குழந்தைகளுக்குக் கடவுள், தேசத் தலைவர், மகான்களின் பெயர்களை விட நடிகர்களின் பெயர்களைச் சூட்டி மகிழும் பழக்கமும், அவர்களைப் போலவே ஆடையும், அலங்காரமும் செய்து கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதுதான் நடிகர்களை முன்னுதாரணப் பிரதிநிதிகளாக்கியிருக்கிறது. அவர்கள் பேசும் சினிமா வசனங்கள் பொன்மொழிகளாக - ஆட்டோ வாசகங்களாக - மனக் கல்வெட்டாக மாறும்போது அந்த உயர்ந்த மனிதர்களுக்கு உயர்ந்த ஊதியமும் வழங்குவதில் தவறு இல்லைதானே? எந்தக் கலெக்டருக்கு, காவல் துறை அதிகாரிக்கு மக்கள் ரசிகர் மன்றம் அமைத்தனர். நல்லவர்கள் போற்றப்படுவதில்லை. ஊழல் செய்யும் ஒன்றிரண்டு அதிகாரிகளைக் கிழிகிழி என்று மீடியாக்கள், லஞ்சமே வாங்காதவர்களுக்குக் 'காலமானார்' பகுதியில் கூட இடம் தருவதில்லையே... நடிகர்கள் சிறந்த நடிகர் விருது வழங்கும் அமைப்புகள்தான் எத்தனை? மத்திய அரசும், மாநில அரசும் மட்டும் இதில் விதிவிலக்கா? சிறந்த விவசாயியையோ, சிறந்த விஞ்ஞானியையோ, சிறந்த எழுத்தாளரையோ இப்படி போட்டி போட்டுக் கொண்டு அமைப்புகள் கெளரவிக்கின்றனவா? நடிகர்களின் வீட்டில் மட்டும் கேடயங்கள் அணிவகுப்பு ஏன்? சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நகரின் மிகப் பெரிய அரங்கில் விழா. அனைத்துப் பிரபலங்களும் விழாவுக்கு வந்து போக விமான ஏற்பாடுகள், கார் ஏற்பாடுகள்,

''நடிகர்களை இத்தனைச் சிறப்பாகக் கெளரவிப்பதில் இந்த விழாவை நடத்தும் சினிமா பத்திரிகைக்கு என்ன லாபம்?'' என்று என்னிடம் கேட்டார் விழாவில் விருது பெற்ற ஒரு நடிகை.
''பத்திரிகைக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும்'' என்றேன். ''அதற்காக எவ்வளவு செய்கிறார்கள்?''
''ஏறத்தாழ ஒன்னரை கோடி ரூபாய்" ''அவ்வளவு பணம் திரும்பக் கிடைக்குமா?''
''கிடைத்து விட்டது''
''எப்படி?''
''ஒரு இரண்டு சக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனி ஸ்பான்சர் செய்திருக்கிறது"
''அவர்கள் அந்தப் பணத்தைப் திரும்ப எடுத்து விடுவார்களா?''
''இந்நேரம் எடுத்திருப்பார்கள்'' நடிகையின் புருவம் உயர்ந்தது
''எப்படி?''
''ஒன்னரை கோடி என்பது அந்த நிறுவனத்தின் 100 வண்டிகளின் விலை. இந்த விழா விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு 500 வண்டிகளாவது விற்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செலவு செய்தது மாதிரி ஐந்து மடங்காகப் பணம் திரும்பும்...''
''அப்படியானால் இவ்வளவு செலவையும் எற்றுக் கொள்பவர்கள்?...''
''வேறு யார்? மக்கள்'' என்றேன்.
பக்கத்தில் இருந்த என் நண்பர் திருத்தினார் : ''வழக்கம் போல...''
-தமிழ்மகன்

வைரமுத்துவின் சுவாசப் பிரச்சனை...!


தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளுக்கு ஓயாமல் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற பணியில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவர், கவிஞர் வைரமுத்து. 'பொன்மாலைப் பொழுது' என்றும், 'பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ' என்றும் 'வானம் எனக்கொரு போதி மரம்' என்றும் முதல் பாடலிலேயே பல சொற்கோவைகளை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியவர். 'அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது', 'உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்', 'விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே... நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே' எனக் காதல் பாடல்களில் நம்மைக் கனிந்துருக வைத்தவர். 'மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை', 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்' என நம் பார்வையில் பட்டு மனதுக்குள் பதியாமல் போன உலகின் ரசனைக்குரிய பகுதிகளின் இனிய பட்டியலை இவர் தொகுத்தளித்திருக்கிறார். நம்பிக்கையளிக்கும் பாடல்களும் இவரிடம் பொங்கி வழியும். 'பூலோகம் ஆனந்தத்தின் எல்லை... பூமிக்குக் கண்ணீர் சொந்தமில்லை', 'வாழச் சொல்வது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா' என்று மகிழ்ச்சியான விஷயங்களைப் பட்டியலிடுவார். 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' போன்ற புரட்சி வரிகளும் இவருடைய திரைப் பாடல்களில்...
சந்தங்களுக்குள் சங்கதிகளை அடக்குவது சாதாரணமில்லை. புதிய வீச்சுள்ள பாடல் வரிகளால் அதிசயக்க வைத்தவர். கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் வடுகபட்டியில் இருந்து ஒரு புதிய கவிஞன் புறப்பட்டு வந்து பாடலாசிரியர் பதவியைப் பறிப்பதென்பதே சாதனைதானே? ஆனால், வார்த்தைகளை வசப்படுத்தும் இவரையே வசப்படுத்திச் செல்லும் கடமை பத்திரிகைகளுக்கு இருந்திருப்பதை அவரே ஒப்புக் கொள்ளுவார். வந்த புதிதில் தேவ வார்த்தை, தேவ புன்னகை போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் செல்லமாகக் கண்டிக்கப்பட்டவர் இவர்.

பிறகு அவர் சிக்கிக் கொண்ட இன்னொரு வார்த்தை 'ராஜ'. ராஜ பூவே, ராஜ தேனே, ராஜ ராகம் என்று தொடர்ந்த அவருடைய பிரயோகத்தை மீண்டும் திசை திருப்பி விட்டனர்.
இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வார்த்தைச் சிக்கல், 'சுவாசம்'. ஒருவேளை இந்தப் பிரச்சினை 'என் சுவாசக் காற்றே...' படம் முதல் ஆரம்பித்திருக்கலாம். "என் சுவாசக் காற்றே...சுவாசக் காற்றே.... நீயடி...'' என்று ஆரம்பித்து வைத்தார். சுவாசம், மூச்சு பற்றி அவர் சமீபத்தில் எழுதிய பாடல்கள் இவை: 'அப்பு'- விட்டுச் சென்ற உன் மூச்சு காற்றினில் இருக்கு... அந்த மூச்சை வாங்கி... வாங்கி... வாங்கி... வாழ்வேனா? 'உயிரே'- பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன். 'கண்ணெதிரெ தோன்றினாள்'- உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா? 'ரிதம்'- நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்... சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்... - சுவாசம் பற்றி அவர் எழுதியிருக்கும் பாடல் வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
திரையிசைப் பாடல்கள் மூலம் அறிவியல் செய்திகளை அதிகமாகச் சொன்னவர் வைரமுத்து. 'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தினந்தோறும் விஞ்ஞானம் கவலை கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்' என்பார். உடம்பில் நரம்புகள் எத்தனை லட்சம் இருக்கிறது என்பதைக் காதல் பாடலில் சொல்லுவார். ஆனால் சுவாசக் காற்று நச்சுத் தன்மை உடையது. அது கார்பன் டை ஆக்சைடு என்பதைத்தான் வைரமுத்து போன்றவர்கள் கூற வேண்டும். ஏனென்றால் வைரமுத்து ஒரு விஞ்ஞானக் கவிஞர். அதற்கு அவர் எழுதிய 'தண்ணீர் தேசம்' ஒரு நல்ல உதாரணம். அவருடைய கவிதைகளைச் 'சுவாசி'க்கிற வாசகர்கள் சார்பாக வைக்கப்படுகிற விண்ணப்பம் இது
- தமிழ்மகன்

சனி, ஜூலை 08, 2006

சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்

சிறுகதை

தமிழ்மகன்

"ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி?' புத்தகத்தின் கவர்ச்சியான தலைப்பில் ஒரு கணம் மலைத்துப் போனான் அருண்.

அனிச்சையாய் பாக்கெட்டைப் பார்க்க, அக்கா செலவுக்குக் கொடுத்து விட்டுப் போன பணத்தில் இரண்டு ரூபாய் மீதமிருந்தது."தெர் ஃபோர் டூ குரோர்ஸ்' அருண் நூலகத்துக்கு வந்தால், வழக்கமாய் "உடலுறவுச் சிக்கல், குழந்தை பிறக்கவில்லையா?' போன்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரகசியமாய் படிப்பான். அல்லது ஆங்கிலப் பத்திரிகையில் வேலை தேடுவான். நூலகம் பலருக்கும் இந்த விதத்தில் பயனாக இருந்தது. சிலர் வெகு நேரமாய் எதாவதொரு பத்திரிகையை வைத்துக் கொண்டு குனிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் விடும் மெல்லிய குறட்டையை நூலகர் மட்டுமே இனம் கண்டு, "தூங்காதீங்க சார்...'' என்று எழுப்புவார்.

முதன் முறையாக ஒரு ரூபாயில் வாழ்வில் உயர்வடையும் ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்த பிரமிப்பில் அருண் வேகமாகப் படித்துக் கொண்டிருந்தான். லட்சாதிபதியாகவாவது ஆகிட முடியாதா என்ற ஆசை!

அருண் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் நூலகர் ஜன்னலை அடைத்து, லைட்டையும், பேனையும் நிறுத்தி தடுத்தார்.

காலை 8.00 முதல் 11.00 வேலை நேரம் என்று போர்டில் இருந்தாலும் வழக்கத்தில் 10.30-க்கு கதவடைப்புப் பணிகள் தொடங்கிவிடும்.

புத்தகத்தை அப்படியே டேபிளின் மீது போட்டுவிட்டு வந்தால் இரண்டு அபாயங்கள் உண்டு. ஒன்று, மாலையில் முதலில் வந்த வேறு ஒரு வாசகர் கையில் அந்தப் புத்தகம் கிடைக்கப் பெற்று, அவர் கோடீஸ்வரனாகிவிடுவார். அல்லது லைப்ரரியன் புத்தகத்தை எதோ ஒரு புத்தக இடுக்கில் சொருகி வைத்துவிட்டார் என்றால் பிறகு இந்தப் புத்தகத்தைத் தேடி எடுக்க முடியாமல் போகலாம்.

அருண், அதை மறுபடி மாலையில் வந்து படிக்கும் ஆசையில், "என்சைக்ளோபீடியா'வில் ஒளித்து வைத்துவிட்டு வெளியே வந்தான்.

முன்பெல்லாம் ஆப்படி நூலகத்தை மூடிவிடும்போது மாலை வரை நேரத்தைக் கழிப்பதில் பெரிய அவஸ்தை இருந்தது. நித்தியானந்தன் சைக்கிள் கடை வைத்ததிலிருந்து அந்தப் பிரச்சனை இல்லை.

"அதோ போறது யார் தெர்தா?'' என்பான் நித்தி.

"சுருட்டு புடிக்றானே அந்த ஆளா?''

"அட... பச்சப் புடவ..''"

"ஆங்... அமா..''"

"அது யார் தெரிதா?''"

நினவுக்கெட்டியவரை அந்தப் பெண்ணைத் தேடிவிட்டு, "யாரு?'' என்றான் அருண்.

"நம்ப சம்பத் இல்ல..? ஒருவாட்டி கோலி முழுங்கிட்டானே.''"

"ஆமா..."

"என்னா ஆமா.. அவன் தங்கச்சிடா... இப்ப கல்யாணம் ஆயிட்ச்சி.''

"எப்ப?''

"அதாயி ரெண்டு வருஷமாச்சி.''

"குட்டி யானை மாரி இருக்குது?''

"மாக்கெட்டுக்கு போவுது... இப்ப வரும் பாரு...''சம்பத்தின் தங்கச்சி வருவதை எதிர்பார்த்திருப்பது ஒரு வேலை. அடுத்து, அருண், "சம்பத் இப்ப என்ன பண்றான்?'' என்று கேட்டான்.

பேச்சின் நடுவே சூடாக டீ. அதுவும் இன்றைக்கு யார் கணக்கில் டீ என்பதற்கு பெயர் எழுதி சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அருண் பெயர் வந்தாலும் நித்தியானந்தம்தான் கொடுப்பான். அப்புறம் தந்துவிடுவதாகப் பேச்சு!

அதன்பிறகு மதிய சாப்பாட்டுக்காக நித்தியானந்த வீட்டுக்குப் போவான். அவன் சாப்பிட்டுவிட்டு வரும்வரை கடையை அருண் பார்த்துக் கொள்வான். தெருவில் சளைக்காமல் பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிர்த்த வீட்டில் ஒரு பெண் ஜன்னலோரமாய் அடிக்கடி வந்து விட்டுப் போவாள். இடையே வாடகை சைக்கிள் கேட்டு வருபவனின் பெயரையும், நேரத்தையும் குறித்துக்கொண்டு, சைக்கிள் விட்டவனிடம் காசை வசூலிப்பதும், காற்றடிக்கச் சொன்னால் "ஆளில்லை' என்பதுமாக நேரம் கழிய நித்தியானந்தன் வந்து விடுவான்.

இன்று மணி இரண்டாகியும் வரவில்லை.

டீக்கடை குமார், "நித்தி, இன்னுமா வரலை?'' என்றார்.

"வரலை.''

"நீங்க வேணும்னா சாப்பிட்டு வாங்க. நான் பாத்துக்றேன்.''

"பரவால்ல... பசி எடுக்கலை..''

"இண்டர்வியூக்கு போனீங்களே, என்ன ஆச்சி?'' என்றார் குமார்."

"எந்த இண்டர்வியூ?''"

"போன வாரம் டைப் அடிச்சு எடுத்துப் போனீங்களே?''"

"அதுவா? மூவாயிரம் ரூபா டெபாசிட் பண்ணணுமாம்.''"

"எவ்ளோ தரேன்றான்?''

"முன்னூர் ரூபா தர்றேன்றானுங்க. பஸ் செலவுக்கே சரியா பூடும் போலருக்குது. அதுவும் எங்கே? திருவான்மியூர்ல, தண்டையார் பேட்டைலதான் எனக்கு வர்ற வேலைலாம். பக்கத்திலனாக்கூட பரவால்ல...''

"ப்ச்'' என்றார் குமார்.

"ஒண்ணு செய்றியா சொல்லு.''

"ம்..''

"ஒரு மூவாயிரம் ரூபா தோது பண்ணிக்கோ. என்னை மாதிரி ஒரு டீக்கடை போட்டுக்கோ... என்னா சொல்றே?''

அருண் யோசித்தான்.

மூவாயிரம் இருந்தால் மூவாயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்று சொல்ல நினைத்தான்.

"பார்க்கலாம்'' என்றான்.

"வேணும்னா சொல்லு... "பாலாஜி லக்கி சென்டர்' இருக்குதில்ல...''

"பஸ் ஸ்டாண்டிலயா?''

"நல்ல இடம்.''ஒருவன் `கிளிங்' என்று சைக்கிள் பெல்லை அடித்து அழைத்தான்.

"சைக்கிள் வேணும்'' என்றான். அருணுக்கு ஆள் தெரியவில்லை என்பதுகூட பிரச்சினையாய் இல்லை. இவ்வளவு அலட்சியமாய் சைக்கிள் கேட்டதுதான் எரிச்சலாய் இருந்தது.

"ஆள் தெரியாது.''

"எதிர் வீடு'' என்றான் அவன்.

"எதிர் வீடா? உன்னை பாத்ததே இல்லையே?''

"ஊர்ல இருந்து வந்திருக்கேன். எங்க மாமா வீடு இது...''

"யாரையாவது சொல்லச் சொல்லு.''

அவன் ஜன்னலருகே போய், "மாமி, மாமி'' என்று குரல் கொடுக்க, அவன் மாமியும், அதன் பின்னால் அந்தப் பெண்ணும் ஜன்னலில் தோன்றினர். மாமி, அருணை, "எம்பா சைக்கிள்'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். அருண், அவனிடம் பெயரை விசாரித்துக் கொண்டு, "ரெண்டாம் நம்பர் சைக்கிள் எடுத்துக்க. நல்லா போவும்'' என்று சிபாரிசு பண்ணினான்.

ஜன்னல் பெண், சண்முகநாதன் சைக்கிளில் எறிப் போகிற அழகைப் பார்த்துவிட்டுத்தான் மறைந்தாள். நித்தியானந்தம் உண்ட மயக்கத்தில் அப்படியே தூங்கி விட்டதாகச் சொல்லி
"சாரி'' என்றான். என்ன சாரி? அருண் பொறுமையாகக் கிளம்பி வீட்டுக்குப் போனான். வீட்டுக்குப் போவதில் அம்மா மட்டுமே சற்று ஆறுதலான விஷயம். அருணின் அம்மா, "வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டா தானே?'' என்று வருந்தினாள்."பெரிய ஷிப்ட்டு வேலைக்குப் போய் கழட்டிட்டு வர்றானே.. சோத்த போட்றி..'' என்றார் அருண் அப்பா வஞ்சப் புகழ்ச்சியாய்.

தினம், தினம்தான் என்றாலும் சற்றே மனஸ்தாபம் அதிகரித்து உடனடியாய் சாப்பிட உட்காராமல், காலையில் துவைத்துப் போட்டு விட்டுப் போன சர்ட்டையும், பேண்ட்டையும் மடித்து வைக்க ஆரம்பித்தான். "சைக்கிள் கடைல வேலை செய்யறதுக்கா படிக்க வெச்சேன்? உன்னாட்டம் புள்ளைல்லாம் இப்பிடியா இருக்குது? சுரணை இருக்கறவன்தான்டா சுயமா சம்பாதிச்சு வாழணும்னு நினைப்பான்.''அருணின் அம்மா இடையில் குறுக்கிட்டு, "வேலைதான் கிடைக்கலையே, சும்மா திட்டிக்கினு இருந்தா என்னா பண்ணுவான்'' என்று ஆதரவு காட்டினார். மறுபடி சைக்கிள் கடை.

"லைப்ரரிக்கு கிளம்பறோம்டா.. ஐரு ரூபாய் இருந்தா ஒரு கோடி சம்பாதிக்கலாம்னு ஒரு புக் படிச்சுக் கிட்டிருக்கேன்.. என்னதான் சொல்றான்னு பார்த்துட்டு வந்திடறேன்... கொஞ்சம் சைக்கிள் தர்றியா?'' என்றான் அருண்.

"உனக்கு கோடீஸ்வரன் ஆகணும் அவ்ளோதானே?''தனுஷ் படத்துக்கு டிக்கெட் கேட்ட மாதிரி சாதாரணமா சொன்னான் நித்தியானந்தன். "என்கூட ஐரு தபா திருப்பதி வரைக்கும் வர்றியா பொட்டலம் வாங்கித் தர்றேன். சும்மா இந்தக் கைக்கு அந்தக் கை... ஒரு மாசத்தில லட்சாதிபதி ஆகிடலாம். சாமர்த்தியம் இருந்தா தீபாவளிக்குள்ள கோடீஸ்வரனாய்டுவே..''

"பொட்டலம்னா?''

"கஞ்சா..."

"எவ்ளோ செலவாகும்?'' என்றான் அருண்குமார்.

சிரிப்பொலி

"சோடா உடைத்துக் கொண்டு வாடா'' என்றால் சோடா பாட்டிலை உடைத்துக் கொண்டு வந்து
கொடுக்கும் வேலைக்காரன். "சபாபதி' படத்தின் வேலைக்காரன் காளி என். ரத்தினம் நம்மை
இப்படித்தான் சிரிக்க வைத்தார். "எதையுமே தட்டில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்'
என்றால் அவர் செருப்பைத் தட்டில் கொண்டு வந்து கொடுப்பார். மக்கள் ஒவ்வொரு தரம்
பார்க்கும்போதும் அவருடைய மூடத்தனம் குறித்துச் சிரித்தார்கள். அவனுக்கு ஒன்றுமே
தெரியவில்லையே என்பதில் அப்படியொரு குஷி. இப்படிப்பட்ட ஒருவன் எந்தத் தைரியத்தில்
வேலைக்கு வந்தான் என்றோ, அவனை எதற்காக வேலையில் வைத்திருக்கிறார்கள் என்றோ
யாரும் கேட்பதில்லை. மிகைப்படுத்திக் காட்டப்படுவதனால்தான் ஒரு இயல்பான சம்பவம்
நகைச்சுவையாகிறது.

பேசும் சினிமா காலத்திலோ, அதற்கு முன்பிருந்த நாடகங்களிலோ இப்படிச் சிரிக்க
வைப்பதற்காக நகைச்சுவைப் பாத்திரங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒருவன்
சராசரிக்கும் கீழே இருப்பது, உலகம் புரியாதவனாக இருப்பது நகைச்சுவையின் அடிப்படை.
தங்கள் அப்பாவித்தனத்தால் எல்லோரும் பார்க்கும் விதமாக இல்லாமல் புதுவிதமான
கோணத்தில் உலகத்தை அவர்கள் பார்ப்பதும் வேடிக்கைக்கு வழி வகுத்தது. "ஞானப்
பழத்துக்குக் கொட்டை இருக்குமா?'' என்ற செந்திலின் சந்தேகமும் அதற்கு கவுண்டமணியின்
ரியாக்ஷனும் இந்த வகைப்பட்டதுதான்.

மாறாக புத்திசாலித்தனமான பேச்சால், சாதுர்யத்தால் பிரமிக்க வைப்பதாலும் சிரிக்க வைக்க
முடியும் என்றவர் என்.எஸ்.கிருஷ்ணன்.

40 களில் இவருக்கு கதாநாயக மவுசு. தனியாக இவர் உருவாக்கி வைத்திருந்த காமெடி
ட்ராக்குகளைத் திரைத்துறையினர் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொண்டனர். "நவீன
விக்கிரமாதித்தன்' போன்ற இவருடைய ட்ராக்குகளுக்கு மெயின் கதையைவிட கிராக்கி
இருந்தது. பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று அந்தக் காலத்தில் பிரிவினை இருந்தது. அந்த
இடத்துக்கு வரும் என்.எஸ்.கே. பலகையில் எழுதியிருப்பதைப் படிப்பார். எப்படி?
"பிராமணர் "கள்' சாப்பிடும் இடம். ஓஹோ இது அவங்க "கள்' சாப்பிட்ற இடமா?' என்பார்.
பட்டனைத் தட்டினால் இட்லியும் காபியும் பக்கத்தில் வருகிற விஞ்ஞானத்தை வளர்ப்பதைப்
பற்றிப் பாடுவார். நாட்டைச் சீர்திருத்தும் "நல்ல தம்பி'யாக அவதாரம் எடுப்பார்.

எம்.ஆர்.ராதாவுடையது துணிச்சல் காமெடி என்றும் சொல்லலாம். எம்.ஜி.ஆர். டாக்டராக நடித்த
படம். ஒரு கிராமத்துக்கு வந்து வழக்கம்போல் சேவை செய்வார். மக்கள் எல்லாம் அவரைப் பு
கழ்வார்கள். "போனவாரம் ஆற்றுவெள்ளத்தில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றியவர்
இவர்தான். கள்ளக் கடத்தல் காரர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தவர் இவர்தான்''
என்ற ரேன்ஜுக்குப் பாராட்டுவார்கள். எம்.ஆர்.ராதா கேட்பார் : "டாக்டர் வேலையையும்
செய்றார் இல்ல?'' "பாகப் பிரிவினை' படத்தில் இவரை நம்பி பேங்கில் பணம் எடுத்துச் சிக்கிக்
கொள்ளும் நம்பியாரை "ஏண்டா பயப்பட்றே? ஜெயில்ல ஏ கிளாஸ் வாங்கித்தரேன். ஜாலியா
இரு போ'' என்பார். பிரச்னையை புதிய கோணத்தில் பார்க்கிற பாங்கு அது. ஜெயிலுக்குப்
போவதால் ஏற்படும் அவமானம், குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற புலம்பல்
எல்லாம் போய் ஜெயிலில் வசதியாக இருப்பதைப் பற்றி யோசிப்பதில் ஒரு அதிர்ச்சியும் நி
யாயமும் கலந்த நகைச்சுவையை எதிர் கொள்கிறோம். தன்னைச் சாடிக் கொள்வதன் மூலம்
சமூகத்தைச் சாடும் வேடிக்கை அது.

மிடுக்குத்தனம் மிக்க கோமாளித்தனம் என்றால் பாலையா ஞாபகத்துக்கு வருவார். "எல்லோரும்
சென்று ஓய்வெடுங்கள் .. நானும் எடுக்க வேண்டும்'' என்பது பாலையா பன்ச். என்னுடைய
யூகத்தில் "திருவிளையாடல்' வசனப் பக்கத்தில் எல்லோரும் சென்று ஓய்வெடுங்கள் என்றுதான்
இருந்திருக்க வேண்டும். நானும் எடுக்க வேண்டும் என்பது பாலையாவின்
கைங்கர்யமாகத்தான் இருக்கும். "தில்லானா மோகனாம்பாள்' ரயில் காட்சியில் சிவாஜியின்
சைகையைப் புரிந்து கொண்டு, பாலையா செய்யும் சேட்டைகள்.. உலகில் ரயில்கள்
இருக்கும்வரை மறக்க முடியாவை. பொய் மிடுக்கு இவருடைய ஸ்பெஷாலிட்டி. "காதலிக்க
நேரமில்லை'யில் "அசோக் உங்க பையனா என்று கேட்பதற்கு பதிலாக அசோகர் உங்க
மகர்ரா?'' என்பது அதற்கு நல்ல உதாரணம்.

உச்சரிப்பின் மூலம் தமிழ் விளையாட்டுகள் மூலம் சிரிக்க வைத்தவர் டணால் தங்கவேலு.
அலுங்காமல் குலுங்காமல் காமெடி செய்வதில் சமர்த்தர். கானா.முனா. கட்சி என்று நடத்துவார்.
என்னடாவென்றால் காதலர்கள் முன்னேற்ற கட்சி என்று விளக்குவார். அவருடைய மன்னார்
அண்ட் கம்பெனி} எழுத்தாளர் பைரவன் காமெடி சாகாவரம் பெற்றவவை. அங்க சேட்டைகள்
இல்லாமல் முகபாவம் மற்றும் உச்சரிப்பின் மூலமாகவே அந்த வரத்தைப் பெற்றதுதான்
அவருடைய சிறப்பு.

உடல் சேட்டைகளும் குரலில் ஏற்ற இறக்கங்களும் கொண்டு நகைச்சுவை செய்பவர்களில் சந்
திரபாபு, நாகேஷ் ஆகியோர் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களின் உடல்வாகும் அதற்கு
ஒத்துழைத்தது. இவர்களிடம் இருந்த இன்னொரு முக்கிய அம்சம் தத்துவார்த்தமான
அணுகுமுறை. சந்திரபாபுவின் "ஏழை படும் பாடு', கவலை இல்லாத மனிதன் , நாகேஷின் "நீ
ர்க்குமிழி' போன்றவை நகைச்சுவையைத் தத்துவார்த்தமாகப் பயன்படுத்தியது எதிர்பாராத
முரண். இந்த இருவரிடமும் இருந்த இன்னொரு ஒற்றுமை உடம்பை வில்லாக வளைத்து ஆடும்
நடனத்திறமை.

இரட்டை அர்த்த வசனங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டது சுருளிராஜன். பாத்திரங்கள்
பழுது பார்ப்பவராகத் தோன்றும்போது "எவ்வளோ பெரிய ஓட்டை. இதை அடைக்கறதுக்கு
நம்மமாள முடியாதும்மா'' என்பார் சுருளி. இந்தப் பாணியை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்
"வெண்ணிற ஆடை' மூர்த்தி. "பாப்பா... பர்ர்ர்... வாழைப்பழம்னா உனக்கு ரொம்ப புடிக்குமா?,
எம்மா.. வெத்தலை கொஞ்சம் கொடேன்.. சுண்ணாம்பத் தடவி சுவைச்சுப் பாக்கிறேன்''-
இதுதான் மூர்த்தி பிராண்ட்.

கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை லார்ல்- அண்ட் ஹார்டியை நினைவு படுத்தினாலும்
இறங்கி வந்து காமெடி செய்தவர்கள் என்பதால் அடித்தட்டு மக்கள் வரை இடம்
இடம்பிடித்தவர்கள். பிணம் எரிப்பவன், சாவு மேளம் அடிப்பவன், சாக்கடை அள்ளுபவன்,
சவரம் செய்பவன், சாணை பிடிப்பவன், சாராயம் காய்ச்சுபவன், திருடன், பிக்பாக்கெட்,
சமையல்காரன் என்று இவர்களுக்கு காமெடியோடு இணைந்து ஒரு தொழில் இருந்தது. விளிம்பு
நிலை மனிதர்களின் பிரச்சனையைச் சொல்லுவதையும் இதில் அடிசரடாகப் பார்க்கமுடியும். ஒரு
படத்தில் பிராமணர் வேடமணிந்த ஒருவர் "சாவுக்கு மேளம் அடிப்பதெல்லாம் ஒரு வேலையா?''
என்பார். கவுண்டமணி, "அவ்வளவு ஈஸியான வேலையை நீங்க கொஞ்ச நாள் செய்யுங்களேன்
சாமீ'' என்பார். தொழிலில் உள்ள சாதீய அடையாளத்தைச் சுட்டும் வேலையை
நகைச்சுவையால் வெளிப்படுத்த முடிந்தது. பழமொழிகளை கிண்டல் அடிப்பது, சடங்குகளைக்
கேலிக்குள்ளாக்குவது போன்றவை இவர்களின் நகைச்சுவையில் அதிகம் வெளிப்பட்டது.

இதன் உடன் விளைவாக ஒருவர் அவமானப்படுத்தப்படுவதும் தன்னைத்தானே அவமான
ப்படுத்திக் கொள்வதும் அதிகரித்ததையும் குறிப்பிட வேண்டும். "இருட்டல பார்க்கறதுக்கு
பன்னி மாதிரியே இருந்தாம்பா அதான் சுட்டுட்டேன்'' என செந்திலைச் சுட்டதற்கு காரணம்
சொல்லப்பட்டது ஒரு உதாரணம்.

வடிவேலு, விவேக் காலகட்டம் இது. வடிவேலுவுக்கு மதுரை வட்டார வழக்கு தமிழ் நடையும்
வெற்றுச் சவடால் போக்கும் கைவந்த கலையாக இருக்கிறது.
சொல்லப் போனால் தமிழ் நகைச்சுவை பாரம்பர்யத்தின் அனைத்து பாணிகளும் இவர்கள்
இருவரிடத்திலும் பங்கிடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, சிவாஜி
ஆகியோரின் இமிட்டேஷன் இவருடைய நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கிறது. இருநூறாவது
படத்துக்குப் பிறகு சிவாஜி பல படங்களில் மூக்கடைப்பாகப் பேசியதும் `பட்டாக்கத்தி
பைரவ'னாகச் சிறுத்தையோடு ஊர் சுற்றுவதும் `லாரி டிரைவர் ராஜா கண்ணு'வாக கோட்
அணிந்து லாரி ஓட்டுவதும் இவருடைய "பாராடப்பிங்' வகை. சடங்கு சம்பிரதாயங்கள், அந்த
வார டி.வி. நிகழ்ச்சிகள், நாட்டு நடப்புகள் எதையும் விட்டு வைப்பதில்லை இவர்.

எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடுவதும் கதாநாயகர்களுக்கு நிகராக பாடுவதும் ஆடுவதும்
வடிவேலுவின் சிறப்பு. கதாநாயகர்கள் சீரியஸôக செய்வதை கேலியாக செய்வது இவருடைய
பாணி. சொல்லப்போனால் எல்லா ஹீரோக்களின் அடிதடிகளையும் கேள்விக் குறியாக்கிவிடுகி
றார் ஒரு கைப்பிள்ளை. `நாடோடி மன்னன்', `உத்தமபுத்திர'னின் அங்கதச் சித்திரமாக இம்சை
அரசன் இருந்தான். உலக ஹீரோயிஸத்தையே பகடி செய்யும் வடிவேலுவின் பாணி அவர்
ரத்தத்தில் ஊறிய வெளிப்பாடாக இருக்கிறது. அதனால்தான் அப்படி நாம் செய்கிறோம்
என்பதைக்கூட அறியாமலேயே அவரால் புகுந்து விளையாட முடிகிறது.

இதுதவிர டி.ஆர்.ராமசந்திரன், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ், ஒய்.ஜி.மகேந்திரா, கர்ணாஸ், மதன்பாப்,
சார்லி, தாமு, வையாபுரி என விடுபடமுடியாதவர்களைத் தனியாக ஒரு பட்டியல் போடலாம்.


இவர்கள் தவிர பெண்களில் டி.ஏ. மதுரம், சரோஜா, மனோரமா, கோவை சரளா என காமெடியில்
சிகரம் தொட்டவர்கள் உள்ளனர். பெண்களுக்கு நகைச்சுவை முக்கியத்துவம் உள்ள வேடங்கள்
பல இருந்தன. இருந்தாலும் இதில் பலர் ஆண் காமெடியனுக்கு மனைவியாகவோ,
காதலியாகவோ நடிப்பதற்காகத் தேவைப்பட்டவர்கள்தான்.

கதாநாயகர்களாக இருந்தவர்கள் பலரும் காமெடி செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள். எம்.
ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், விஜய் என பலருக்கும் காமெடி படங்கள் வாய்த்தன.

"இது காமெடி படம்' என்று அறிவித்தும் சில வேளையில் சீரியஸ் படம் என்ற
போர்வையிலும்கூட அது நடந்தது.

இந்த நீண்ட காமெடி பாரம்பர்யத்தின் விளைவுதான் தமிழ் நாட்டில் இத்தனை காமெடி சான
ல்களும் காமெடி நிகழ்ச்சிகளும் இருப்பதற்குக் காரணம். எழுபத்தைந்து ஆண்டுகாலமாக
சற்றுமே தோய்வில்லாத நகைச்சுவை வாரிசுகள் இங்கே இருந்தார்கள். சோகத்தை மறக்கவோ,
சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவோ காமெடி தேவைபட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

வெள்ளி, ஜூலை 07, 2006

தமிழ்மகன் என்பது என் பெயர். அவ்வப்போது எழுதுவதும் உண்டு. சில நேரங்களில் சற்றும் எதிர்பாராதவிதமாக அதைச் சிலர் பாராட்டிவிடுவதும் உண்டு.
முதலில் நான் எழுதிய நாவல் 1984 ஆம் ஆண்டில் (இளைஞர் ஆண்டு) இதயம் பேசுகிறது வார இதழில் தேர்வாகி 85-ல் வெளியானது. எனக்கு அப்போது வயது 21. தலைப்பு: (1) வெள்ளை நிறத்தில் ஒரு காதல்.
தொடர்ந்து (2) மானுடப் பண்ணை என்ற நாவலை எழுதினேன். அது தமிழக அரசு பரிசு பெற்றது.
பிற படைப்புகள்
3. சொல்லித்தந்த பூமி (நாவல்)
4. ஏவி.எம். ஏழாவது தளம் (நாவல்)
5. மிஸ். மாயா (நாவல்)
6. கடவுள் II (நாவல்)
7. மொத்தத்தில் சுமாரான வாரம் (குறு நாவல்)
8. முன்னால் தெய்வம் (சிறுகதை தொகுதி)
9. சாலை ஓரத்திலே வேலையற்றதுகள் (சிறுகதை தொகுதி)
10. வாக்குமூலம் (நடிகர் சத்யராஜ் வாழ்க்கைப் பதிவு)
11. சங்கர் முதல் ஷங்கர் வரை (இயக்குநர் ஷங்கர் வரை)
12. விமானங்களை விழுங்கும் மர்மக் கடல் (விஞ்ஞானக் கட்டுரை தொகுதி)
13. பூமிக்குப் புரிய வைப்போம் (கவிதைத் தொகுதி)
14. ஆறறிவுமரங்கள் (கவிதைத் தொகுதி)
15. (þÉ¢ ±Ø¾ þÕôÀ¨Å)

LinkWithin

Blog Widget by LinkWithin