செவ்வாய், ஜூலை 25, 2006

missed the bus... சிவாஜியின் ஏக்கம்

missed the bus... சிவாஜியின் ஏக்கம்
ஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால். ஓயாத அலைகளைப் போலான மனக் குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின் போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேர விடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது....

ஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கீகாரம் எனறு எதை நினைக்கிறீர்கள்? விருது மட்டும் திறமைக்கான முழு அங்கீகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே...உங்கள் விஷயத்தில் எப்படி?

ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். ...எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?
அங்கீகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டுக் கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருமா அதற்குத் தகுதியானவர்கள்? 'லாபி' செய்து விருது வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.
ஒரு கலைஞனுக்கு விருது என்பது, அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.
ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனத்தின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன்தானே......இதை மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.

பால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? விருது வழங்குவதில் அரசியல் தலையீடு, பாரபட்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பாரட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன். அப்படிச் சொன்னால் அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது. அது ஏன் இத்தனை நாள் எனக்குக் கிடைக்கவில்லையென்று யோசித்துப் பார்த்தபோது.....எனக்குக் கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசாபாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவருக்குக் கிடைக்கும். இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரைக்கும் இப்படித்தான் நடந்தது என்று - எனக்குத் தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்யோகஸ்தர்கள் சொல்கிறார்கள் எனக்கு இந்த வருடம் விருது கிடைத்ததே... அதுவும் சாதாரணமாகக் கிடைக்கவில்லை... வேறு ஒருவருக்ககுப் போய்விட்டுத்தான் என்னிடம் திரும்பி வந்திருக்கிறது. இதையும் அந்த சர்க்கார் உத்யோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.

உங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே... உண்மையா?

ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டதட்ட எனது படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான் ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.
அதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை. புதுவையை ஒருகாலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்சுக்காரன் நம்மை ஆட்டிப் படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு.! பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம் விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ் நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.
எனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதைக் கழிச்சுக் கட்டிட்டாங்க. அது யாருன்னு, எனக்குத் தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.
செவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. அதிலேயே 1,2,3 என மூன்று வகையான விருதுகள் உண்டு. எனக்குக் கிடைத்தது முதல்தர விருது உண்மையச் சொன்னால் அந்த விருது எவ்வளவு மதிப்ப மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை. தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது.
சகோதரி நடிகை ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே.. அது வந்த பிறகும் சிவாஜியை இன்னும் நீங்க யாரும் கண்டு கொள்ளவில்லையே... என்று கேட்டிருக்கிறார். ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களிடம் பேச அதற்குப் பிறகுதான் அந்த விருதின் மதிப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.

இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது? உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது?
கப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே.......அங்கீகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்கமுடியும். எனக்கு முழுத் திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.
கிட்டத்தட்ட 300 படங்களில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக உங்களை மாற்றிக் கொள்வது typical mental exercise இருந்திருக்குமே.....அதை நிங்கள் சமாளித்தது எப்படி?

அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில் வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும்? கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் யாரும் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்தச் சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கெண்டிருக்கும்போது.... மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்த்து இருக்கும் போது... இது மாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று இருக்கலாமா? நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். கிடைக்கிற அரை மணிநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க? அதைவிட தீவட்டின்னு சொல்லுங்க.... என்னைப் பொருத்தவரையில், ஆஸ்திக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்குக் கிடைத்தது - நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.

உங்கள் குரு யார்?

நடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கே தான் எனது குரு பொன்னுசாமி படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால். முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருஷங்கள் எனக்குப் பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா, நான் ஒரு பெண் வேஷக்காரன் என்பதை. தலைமைப் பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் பெண் வேஷக்காரர்தான் பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாகப் பரிமளிக்க முடியும்.

நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் நல்ல பாத்திரங்களிலேயே நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லையா?

இல்லை. நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நான் நினைத்தேன். ஆனால் சம்பந்தம் உண்டு என மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றிபெற்றார். He did it. I missed the bus, எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான் நான் குடிகாரனாக பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.
அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய்விடுவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு? செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதாகக்கூட வைத்துக் கொள்ளுங்களேன்...
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்... அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.

இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே?

கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க...நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்கப் போகிறது.!

ஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே.... இப்போது அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது என்று எழுதியதும் அவர்தான். திராவிடப் பாரம்பரியம் பற்றி தப்புத் தப்பாக எழுதியவர்களில் முக்கியமானவர் மணியன். அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டுவிழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்ததே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாரம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்குப் பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்தே அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது போகட்டும்.
Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளைப் பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நான்றாக நடிப்பவனை ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் யாருமே தான் நல்லவன்னு சொல்லமாட்டானே..அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.

உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமை வெளிப்படுத்தியவர் யார்?

நிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம், what not? எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப்படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.

காமெடி, குணச்சித்திரம் வில்லன் - இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது?

காமெடிதான். காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அழகா இருந்து. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு டான்ஸ் ஆடி, இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்கிறார்கள். காமெடி அப்படியில்லை, அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும் ஆனால் கொடுக்கமாட்டாங்க.. வசனம் பேசுவது, 'எமோஷன்' எல்லாம் என்னாவது? வைத்திருக்கும் கிளிசரீன் என்னாவது? இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்... (சிரிக்கிறார்)
-தமிழ்மகன்
(1998)

1 கருத்து:

ஜோ / Joe சொன்னது…

நடிகர் திலகம் பற்றிய இப்பதிவுக்கு மிக்க நன்றி!

LinkWithin

Blog Widget by LinkWithin