செவ்வாய், டிசம்பர் 30, 2008

புரூஸ் லீ தாத்தா

கடந்த முறை வந்து போன பிறகு கிராமத்தில் ஏற்பட்டிருந்த மகத்தான மாற்றம் என்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த டீக்கடை சாராயக் கடையாக மாறியிருந்ததுதான்.
அந்த நிறுத்தத்தில் அதிகபட்சமாக பஸ்ஸில் இருந்து இறங்கியது நாம்தானோ என்று சங்கரன் திடீரென நினைத்தான். ஏனென்றால் அவன் பஸ்ûஸவிட்டு இறங்கும்போதெல்லாம் அவனைத் தவிர வேறுயாரும் அதில் இருந்து இறங்கியதில்லை. ஒருவேளை நாம் மட்டும்தான் இங்கு பஸ்ஸில் இருந்து இறங்குகிறோமோ என்றும் நினைத்தான். எப்பவுமே இப்படி கடைசி பஸ்ûஸப்பிடித்துத்தான் ஊருக்கு வருவது என்று வழக்கமாகிவிட்டது. இந்த நேரத்தில் ஊர்க்காரர்களுக்கு வெளியே போய் வருவதற்கு என்ன வேலை இருக்கப் போகிறது?

"பட்ணத்தில இருந்தா வர்றே?'' என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டுவிடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ் படியில் உட்கார்ந்திருந்த தனுசு ரெட்டி ஆயத்தமானார். அவர் மெல்ல எழுந்து நின்று விசாரிப்பதற்கு முன்னர் ஒரு பத்து ரூபாயை அவர் கையில் திணிப்பதற்காக பாக்கெட்டைத் துழாவ ஆரம்பித்தான் சங்கரன். இது சங்கரன் படிக்கிற காலத்திலிருந்து ஏற்பட்ட பழக்கம். அப்போதெல்லாம் ஒரு ரூபாய்.

"உம் பையன்தாம்பா எனக்கு இப்ப தோஸ்த்து'' என்றார்.

"லீவு முடியுது கூட்டிக்கிட்டுப் போகத்தான் வந்தேன்''

"அதுக்குள்ளேயேவா?''

"ஆமா. இது அரை பரீட்சைதானே?''

கூடவே இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு பிறகு பஞ்சாயத்து ஆபிஸ் பக்கமே போய் உட்கார்ந்துவிட்டார். ""காலைல வர்றேம்பா''
இன்றைக்கு நேற்றா வருகிறார்? நினைவு தெரிந்த நாளாக காலையில் வந்து திண்ணையில் அப்பாவிடம் அமர்ந்து ஒரு மூச்சு பயிர் பச்சை பற்றி பேசிவிட்டு, கூழோ, மோரோ ஒரு வாய் குடித்துவிட்டுப் போனால்தான் அது அவருக்கு நாள் கணக்கில் வரும்.
பையன்கள் இரண்டுபேர் வேலைக்குப் போகிறேன் பேர்வழி என்று போய்விட்டார்கள். இருக்கிற இரண்டு காணி நிலத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்து விற்றுவிட்டுப் போக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலம் தனுசு ரெட்டி பெயரில் இருப்பதால் எப்போது மண்டையைப் போடுவார் என்பது எதிர்பார்ப்பு.
விடுமுறைக்கு வசந்தாவையும் முகிலனையும் கூட்டிவந்தபோது தனுசு ரெட்டி ரொம்பவும் குறைபட்டுக் கொண்டார்.

"பொண்டாட்டி செத்த அஞ்சாவது நிமிஷம் புருஷன் செத்துப் போயிடணும். இல்லாட்டி அவன் வாழ்க்கை நரகம்தாம்பா.''

சொன்னது போலவும் வழக்கம்போலவும் தனுசு ரெட்டியார் காலை பத்துமணிக்கெல்லாம் வந்தார்.
அப்பா முன்பு போல உழவு, உரம் என்று பெரிதாகப் பேசுவதில்லை.

"என்னய்யா அரிசி இது? எட்டு மணிக்கு சாப்பிட்டா பத்துக்கெல்லாம் பசியெடுக்குது? சிறுமணி, கார் அரிசி, நீருட் சம்பா... இதெல்லாம் காலைல சாப்பிட்டா அதோட ஏர் முடிஞ்சி வீட்டுக்கு வந்தாதான் லேசா பசிக்கும்... என்னமோப்பா தோசைங்கிறானுங்க, இட்லிங்கிறானுங்க.. எனுக்கு எதுவும் ஒத்துக்கிறதில்ல''

"இல்ல ரெட்டியாரே ... உலகமே மாறிப்போச்சு இப்ப. எல்லாம் இப்பவே நாத்து நட்டு அடுத்த நாளே அறுப்புக்கு வரணும்னு பாக்றான். நீ சொல்ற நெல்லெல்லாம் ஆறுமாசத்துக்கு பயிராவும்... அவசர யுகம்யா இது.''
-கொஞ்சநாள் முன்புவரை இந்த ரீதியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அப்பாவுக்கு அதுவும் போரடித்துப் போய் இன்னும் எவ்வளவு நாளைக்கு இதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது என தனுசு ரெட்டியாரின் பேச்சுக்கு "உம்' கொட்டுவதோடு சரி.
முகிலன் ஓடிவந்து "அப்பா, அப்பா இந்தத் தாத்தா புருஸ் லீயை அடுச்சிடுவாராம்பா'' மாபெரும் தவறைத் தகுந்த ஆதாரத்தோடு தவிடுபொடியாக்குகிற தொனி. மூன்றாம் வகுப்பிலேயே கராத்தே வகுப்பு. புருஸ் லீயை பீரங்கி கொண்டோ, வாளால் வெட்டியோ வீழ்த்த முடியாது என்பது அவனது தீர்மானம்.

சங்கரன் தனுசு ரெட்டியாரைப் பார்த்துச் சிரித்தான். "அம்மாவும் ஆமாங்கிறாங்கப்பா'' என்று வசந்தாவைப் பார்த்தான் முகிலன்.
பையனின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.

நிலைமையை யூகித்த தனுசு ரெட்டி "முகிலா இங்க வாடா எப்படின்னு சொல்றேன். உங்க பூசினி எப்படி செத்தான்?... சிரிக்காத.. அவன் பேரு எனக்கு வாயில வர்ல. விஷம் வெச்சுக் கொன்னுட்டாங்கன்னு சொன்னே இல்ல?'' என்றார்.

"ஆமா..''

"என்னை எத்தினிவாட்டி பாம்பு கடிச்சிருக்குது தெரியுமா? என்னைக் கடிச்ச பாம்புதான் செத்துப் போகும். எனக்கு ஒர்ரொரு பாம்பு கடிக்கும்போதும் பலம் கூடிக்கிட்டே போகும்'' அவர் தன் முழங்கைக்கு மேலே சட்டையை மடித்துக் காண்பித்தார். தோல் பை என தொங்கிக் கொண்டிருந்தது அவர் காட்டிய பலம்.

"நிஜமாவாப்பா?''

"உங்கப்பனைக் கேட்டுப் பாரு... ''

சங்கரன் தலையசைத்தது முகிலனுக்குப் பிரமிப்பாகிவிட்டது.

தன் முன் தொள தொள சட்டையுடன் உட்கார்ந்திருந்த தாத்தாவைப் பார்த்தான்.

"விஷம் ஏறிச் செத்தவன் பெரிய ஆளா? நா பெரிய ஆளா சொல்லு?''
முகிலன் இந்தத் தாத்தாவிடம் வேறு என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறதோ என யூகிக்க முடியாமல் திணறினான். நாம் அவர் உருவம் பொறித்த பனியனைப் போடாமல் புரூஸ் லீ படத்தைப் போட்டிருப்பது ஏன் என்ற இயல்பான சந்தேகம் வந்தது.

"ஒரு தடவை சமுத்திரத்தில எறங்கி நடந்தேன். நடக்கிறேன்.. நடக்கிறேன்.. நடந்துக்னே இருக்கேன். முட்டிக்காலுக்கு மேல தண்ணி ஏறவே இல்ல. ஒரு ராத்திரி ஒரு பகல் நடந்துட்டேன்னா பாத்துக்கியேன். நடுக்கடல். இந்தப் பக்கம் ஒரு கப்பல் போவுது. அந்தப் பக்கம் ஒரு கப்பல் போவுது. சில்லுனு காத்து. அண்ணான்டை கரையே வந்துடும்போல இருக்குது. அப்பவும் முழங்கால் ஆழம்கூட இல்ல. வெறுத்துப் போய் திரும்பி வந்துட்டேன். சாவு வரணும்னு இருந்தா டம்ளர்ல தண்ணி குடிக்கும்போது புரையேறி செத்துப் போறான். நடுக்கடல்ல போய் நாலு நாள் நின்னாலும் எனக்கு சாவு வரலே''

முகிலன் திகைப்பும் திகிலுமாக தாத்தாவைப் பார்த்துவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ள அப்பாவைப் பார்த்தான்.

"குழந்தைகிட்ட அதையெல்லாம் ஏன் தாத்தா சொல்றீங்க?'' என்றாள் வசந்தா.
தாத்தா தன் சொந்தக் கதையோடு சோகக் கதையையும் கலந்து அடிப்பது வழக்கம்தான். சாவு பற்றி குழந்தைகளுக்குச் சொல்வது ஒருபுறம் என்றாலும் கடல் முழங்கால் அளவுதான் ஆழம் என்று ஏதாவது விஷப்பரீட்சையில் இறங்கிவிட்டானானால்?

``தப்பும்மா.. தப்பும்மா'' என்று தன் கன்னத்தில் தானே மெல்ல தட்டிக் கொண்டார். என்றாலும் முகிலனுக்குத் தாத்தாவிடம் ஈர்ப்பு ஏற்பட்டது ஏற்பட்டதுதான். அவன் தாத்தாவையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். சற்றைக்கெல்லாம் தாத்தாவும் வேறொரு சம்பவத்தைச் சொல்லுவதற்குத் தயாரானார்.

"கராத்துன்றீயே அப்படினா என்னது?''

முகிலன் புரிந்து கொண்டு "வெறும்கை'' என்றான்.

"வொரும் கைல சண்ட போட்றதா?''

"ஆமா''

"விளாம்பாளையத்தான் தெரியுமா? தோள் செக்கட்டைல பனைமரத்தையே சாச்சிடுவான்''

"எப்படி?''

"தோள்ல இடிச்சே பனை மரத்தை விழ வெச்சுடுவான். அப்பேர்பட்ட சாமார்த்தியக்காரன்''

முகிலின் மனதில் புருஸ்லீ கழன்று, தாத்தா வந்து பரவினார்.

"அவனுக்குக் கோவம் வந்தா பனை மரத்தையெல்லாம் புடுங்கி கிடாசிடுவான். அடப்பாவி.. இப்பேர்பட்ட சமாசாரத்தைக் கையில வெச்சுக்கிட்டு சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்றியேனு நான்தான் அவனுக்கு ஒரு வழி சொன்னேன். பனைமரம் சாய்க்கிற வித்தைனு ஊர் ஊரா போய் சாகஸம் செய்ய ஆரம்பிச்சான். அப்புறம் அவனை அமெரிக்காகாரன் கூட்டிக்கினு போய்ட்டான். அமெரிக்காவுல பனை மரம் ஜாஸ்தியாச்சே... அதையெல்லாம் புடுங்கிக் கிடாசரத்துக்கு.. காரூ.. பங்களால்லாம் கொடுத்து ராஜா மாதிரி வெச்சிருக்காங்க அங்க..''
தாத்தா கோணி உதற ஆரம்பித்தால் இப்படித்தான் இப்படி அரிசியும் வந்து விழும் அதைவிட அதிகமாக தூசும் பறக்கும். நாம்தான் உண்மை எது பொய் எது என்று அன்னப்பட்சியாகப் பரித்துக் கொள்ள வேண்டும். எல்லோருமே கூடத்தைவிட்டு உள் அறைகளுக்குச் சென்றுவிட்டனர். அவருடைய சாதனைகளுக்கு செவி மடுக்க முகிலன் மட்டுமே மிச்சமிருந்தான். தவிர சங்கரின் அப்பா. அவர் கூடத்தின் ஒரு முலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அரை நிஷ்டையில் கனவும் நிஜமும் கலப்படப்பட்டுக் கிடந்தது அவருக்கு. முகிலன் கேட்பது கனவில் மாதிரிதான் கேட்டுக் கொண்டிருந்தது.

"ஸீ லாம் ஆழமா இருக்காதா?""

"ஸீன்னா?''

"கடல் தாத்தா''

ஞாபகமில்லாமல் "அய்யோ... ரொம்ப ஆழமாச்சே?'' என்றார்.

"உங்களுக்கு கால் அளவுக்குத்தான் வந்துதுன்னு சொன்னீங்க''

"அதுவா? நான் தாயத்துகட்டியிருக்கன்ல?'' அரைஞான் கொடியில் அழுக்கேறிப் போயிருந்த தாயத்தை இழுத்துக் காண்பித்தார். அது அவர் சற்று புஷ்டியாக இருந்த நேரத்தில் கட்டியதாக இருக்க வேண்டும். அது நழுவி கீழே விழாமல் இருக்க அதன் மேல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டார். அவருடைய இவ்வளவு சாகஸத்தையும் நம்பும்படி செய்வதற்கு அவரிடம் எஞ்சியிருந்தது மீசை மட்டுமே.

"ஏம்மா வசந்தா'' என்று குரல் கொடுத்தார் சங்கரின் அப்பா. "ரெட்டியாருக்கு கூழ் இருந்த ஒரு சொம்பு குடுக்கக்கூடாது?''

"இதோ தர்றேன் மாமா.'' வசந்தா கூழும் ஊறுகாய் மிளகாயும் கொண்டு வந்தாள். தனுசு ரெட்டி ஒரே மூச்சில் கூழை வாயில் சாய்த்துக் கொண்டார்.அவர் குடித்த கூழின் மீது மீசைக்கும் ஆசைதான்போலும். கூழோடு சேர்த்து மீசையை தடவிக் கொண்டபோது அது மேலும் விரைப்பாக நின்றது. "குடுக்கு வண்டி செஞ்சித்தர்றேன் வர்றீயா?'' என்று முகிலனை அழைத்துக் கொண்டு பின்கட்டுக்குப் போனார். நேற்று வெட்டிப் போட்ட பனங்காயில் இரண்டை பொறுக்கி எடுத்து பையன் ஓட்டி விளையாட வண்டி செய்ய ஆரம்பித்தார்.
சங்கரனின் அப்பா வசந்தாவை அழைத்து "நான் சொல்லித்தான் தெரியணுமா? அவன் ஒரு வா கூழுக்காகத்தான் இங்க வந்து இவ்வளவு பேச்சு பேசறான்.''

"இல்ல மாமா....வந்து..''

"ஒரு பானை கூழு குடிப்பான். பொண்டாட்டி செத்தபிறவு செஞ்சி குடுக்க ஆள் இல்ல... வந்தான்னா ஒரு சொம்பு குடுத்துடுங்க. அவனும் எவ்வளவு நாழி பேசுவான்?'' என்றார்.

LinkWithin

Blog Widget by LinkWithin