வியாழன், அக்டோபர் 09, 2008

திரைக்குப் பின்னே - 2

அந்திமத்தில் அணையும் விளக்குகள்





நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் 'முதல்குரல்' என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். ('பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்' டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.


நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக 'ஒன்ஸ்மோர்', 'என் ஆச ராசாவே', 'பூப்பறிக்க வருகிறோம்', 'மன்னவரு சின்னவரு,' 'படையப்பா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் 'அலை ஓசை' மணி, 'குமுதம்' செல்லப்பா, 'தேவி' மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்...? பதில்: "தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?'') கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.


இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. "சாப்பிட்டோம் சார்'' என்றால் "ஆமா. அதை முடிக்கணும் முதல்ல'' என்பதில் கிண்டல்.


ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே "நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?'' என்றார். "உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்'' என்றேன். "அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.'' என்றபடி கமலம் அம்மாவை அழைத்து "பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்'' என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து "இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு'' என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை "நல்லா சூடா இருக்கா?'' என்று வம்பு செய்தார்.


பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.

ஸ்ரீவித்யாவின் பிடிவாதம்

'சங்கமம்' படத்தின் படப்பிடிப்பில் விந்தியாவைப் பேட்டி காண வாசன் ஹவுஸுக்குப் போயிருந்தேன். பெரிய நட்சத்திரப் பட்டாளம். ரகுமான், 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, டெல்லி கணேஷ், விஜயகுமார், ஸ்ரீவித்யா இன்னும் சில உப நடிகர்கள் சூழ்ந்திருந்தனர். சுரேஷ்கிருஷ்ணா இயக்கம். விஜயகுமார் ஏதோ கோபமாகச் சொல்ல எல்லாக் கலைஞர்களும் நாதஸ்வரம், தவில் போன்ற தம் இசைக் கருவிகளையும் மூட்டை முடிச்சுகளையும் எடுத்துக் கொண்டு கிளம்புவதாகக் காட்சி.


ஒத்திகைக் காட்சியின்போது எல்லோரும் இயக்குநர் சொன்னது மாதிரி நடித்துக் காண்பித்தனர்.அடுத்து டேக்.. 'வெண்ணிற ஆடை' மூர்த்தி அவராக ஒரு வசனம் பேசினார்.
"என்ன எல்லாரும் அவங்கவங்க சாமான்களைக் கையில புடிச்சிக்கிட்டுக் கிளம்பிட்டீங்க?'' என்றார். இது அவருடைய டிரேட் மார்க் வசனம்.


எல்லோரும் சிரித்து ரசித்தனர். சுரேஷ்கிருஷ்ணாவும் நகைச்சுவையாக இருக்கும் என்று சம்மதம் போல விட்டுவிட்டார்.


ஸ்ரீவித்யா மட்டும் சம்மதிக்கவே இல்லை. "வேண்டாம்ணே... இந்த வசனம் இந்தக் காட்சிக்கு இருக்கிற சீரியஸ்னஸையே கெடுத்திடும்'' என்றார் வெ.ஆ. மூர்த்தியிடம். கடைசியில் அந்த வசனத்தை நீக்கிவிடுவதாக சுரேஷ்கிருஷ்ணா உறுதியளித்தார்.படத்திலும் அக் காட்சி இடம்பெறவில்லை.


ஆய்த எழுத்து

சூர்யா - ஜோதிகா காதல் விவகாரம் பற்றி பத்திரிகைகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்த நேரம். சூர்யாவின் அப்பா சிவகுமார் இப்படி அவர்களின் காதலைப் பற்றி எழுதிய ஒரு வார இதழுக்கு போன் செய்து கெட்ட வார்த்தையில் அரைமணி நேரம் திட்டியதாகவும் செய்திகள் பத்திரிகையாளர்கள் மத்தியில். இந்த நேரத்தில் என்னை சூர்யாவைச் சந்தித்து அவர்களின் காதலைப் பற்றிக் கேட்கச் சொல்லியிருந்தார்கள்.


வேறு எந்தப் பத்திரிகையாளருக்குமே சந்திக்க நேரம் கொடுக்காதவர் எனக்கு மட்டும் நேரம் கொடுத்திருந்தார். அவருக்குப் பிடிக்காத இந்தக் கேள்வியைக் கேட்டு அவர் நம் மீது வைத்திருக்கும் மரியாதையைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்று யோசனையாக இருந்தது.


அவருடைய வீட்டில் அவருடைய அம்மா தயாரிப்பில் அருமையான காபி ஒன்றைக் குடித்துவிட்டு பேச அமர்ந்தோம். சூர்யாவுக்கு ஒரு போன் வந்தது. "சரி காரில் போய்க்கிட்டே பேசுவோமா?'' என்றார்.




காரில் கிளம்பினோம். அபிராமபுரம் கடந்து கார் போய்க் கொண்டிருந்தது. நான் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அலுவலகம் எதிர்பார்க்கிற கேள்வியை இன்னும் கேட்காமலேயே வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஜோ பற்றியெல்லாம் கேட்க வேண்டாம் என்ற ஒப்புதலோடுதான் பேசுவதற்கே சம்மதித்திருந்தார். ஒரு வீட்டின் முன்பு கார் நின்றது. "இதோ வந்திட்றேன். இது யார் வீடு தெரியுமில்லே..?'' என்றார்.


"தெரியவில்லை'' என்றேன்.


"இது மணிரத்னம் வீடு. 'ஆய்த எழுத்து' சம்பந்தமா பேசணும்னு வரச் சொன்னார் அதான் அவசரம்'' என்றபடி காரிலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கார் சீட்டில் அவருடைய பர்ஸ். கத்தையாகப் பணம். துருத்திக் கொண்டு தெரிகிறது. கார் ஏசி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையாகப் பழகுகிறார் என்று பெருமையாக இருக்கிறது.


ஆனால் இனி நேரமில்லை அவர் வந்ததும் மெல்ல கொக்கி போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். வந்தார். தி. நகர் நோக்கி கார் போய்க் கொண்டிருந்தது.


"நீங்க தப்பா நினைக்கலனா'' என்று என் கேள்வியை ஆரம்பித்தேன். அவர் புரிந்து கொண்டு திரும்பிப் பார்த்தார். நானும் அதைப் பற்றித்தான் என்பதுபோலப் பார்த்தேன்.


கொஞ்ச நேரம் கார் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சங்கடப்படுத்துகிற வேலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. "உங்களுக்கு விருப்பமில்லையென்றால் வேண்டாம்'' என்றேன்.


அவர் முகத்தில் ஒரு வினாடி வாட்டம். பின் சுதாரித்து "இந்த மாதிரி கேட்பதுதான் உங்க வேலை... ஆனா எனக்கும் கல்யாண வயசில் தங்கை இருக்கிறா. ஆனா என்னவெல்லாமோ எழுதறாங்க. நிறைய பொய் எழுதிடறாங்க. விஷயம் என்னோட முடிஞ்சுடில. வீட்ல எவ்வளவு பிரச்சினை ஏற்படுது தெரியுமா?'' என்றார்.


அலுவலக எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக 'காதல் பற்றி சூர்யா' என்று தலைப்பிட்டு அவர் கடைசியாகச் சொன்னதையே பதிலாக எழுதினேன்.


பேட்டி நன்றாக இருந்ததாக சூர்யா சொன்னார். அலுவலகத்திலும் 'சூப்பர்' என்றார்கள்.

தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin