செவ்வாய், டிசம்பர் 21, 2010

சொர்க்கத்தின் பாதை





என் கதைகளை ஆர்வத்துடன் மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் சைலஜா ரவீந்திரன். இவர் விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மாதவன் நாயரின் தங்கை மகள். பழகுவதிலும் அன்பு செலுத்துவதிலும் அத்தனை இனிமை. தமிழ்ச் சங்கத்தினர் அறை ஏற்பாடு செய்வதில் சற்றே காலம் தாழ்த்தியதை அறிந்ததும் தனது வீட்டுக்கே வந்து தங்கும்படியும் அல்லது தானே ஹோட்டலில் அறை எடுத்துத்தருவதாகவும் பேச ஆரம்பித்துவிட்டார்.
புத்தகத் தயாரிப்பு அவருக்குப் பிடித்திருந்தது. எழுத்தாளர் மாநாடு என்று அறிவித்திருந்தும் 100 பேர்தான் அரங்கத்தில் இருந்தனர். நான் பேசும்போது, தில்லி தமிழ்ச் சங்கத்தினர் போல இவர்களும் குடும்ப விழாவாக செயல்படுத்தி குழந்தைகள், மனைவயரோடு விழா எடுத்தால் கலகலப்பாக இருக்கும் என்றேன்.
பேசிவிட்டு இறங்கி வந்ததும் நீல.பத்மநாபன், சங்கத்தின் வேறு செயல்பாடுகளை வாழ்த்திப் பேசியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார்.
சங்க நிர்வாகி வானமாமலை சங்க விழாவுக்கு 50 பேர் கூடினாலே அது மகத்தான விழாதான் எங்களுக்கு என்றார்.
கேரள தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு என்று அரங்கின் முன்னால் பலகை போட்டுவிட்டு இப்படி திருப்தி அடைந்துவிடுகிறார்களே என்று இருந்தது.
திட்டமிட்டால் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று தோன்றியது.
தமிழிலிருந்து மலையாளத்துக்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் புத்தகங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது பரஸ்பர இலக்கிய பரிமாற்றமாக இருக்கும் என்று மேடையில் சொன்னேன். ஆண்டுக்கு பத்துப் புத்தகங்களை அப்படி வெளியிட்டால் அது தமிழுக்கு ஆற்றும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். ஆரம்பத்தில் தமிழ் சங்கத்துக்கென இணையதளம் ஒன்று ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் வைத்தேன்.
நீல.பத்மநாபன், ஆ.மாதவன், ஜெயமோகன், சுகுமாரன் போன்ற எழுத்தாளர்களும் காலச்சுவடு போன்ற இலக்கிய இதழும் சங்கத்தின் அருகில் இருக்கும்போது இன்னும் சிறப்பாக செயல்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
சனிக்கிழமை இரவு கூட்டம் முடிந்து அறைக்குச் சென்று தங்கினோம். மறுநாள் காலை சென்னையை நோக்கி பயணம்.

திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வழியாக மதுரையை அடைந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். திருவனந்தபுரமத்திலிருந்து செங்கோட்டை வரும்போது சாலையின் ஓரத்திலேயே ஒரு சிறிய மலையாறு நமக்கு வழிகாட்டியபடி வருகிறது. சாலைமமட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருந்தால் அதற்கு சொர்க்கப்பாதை என்று பெயர் வைக்கலாம். காரைவிட்டு இறங்கி அங்கேயே தங்கிவிடலாம் என்று கணப்பித்து ஏற்படுகிறது.
மொழிவாரி மாநிலமாக பிரிக்காமல் இனவாரி மாநிலமாக பிரித்திருந்தால் சேரநாடும் இப்போது நம்மோடு இருந்திருக்கும். "கடவுளின் சொந்த தேசம்' தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.


படங்கள்
ஷைலஜாவுடன்
நீல.பத்மனபானுடன்

திங்கள், டிசம்பர் 20, 2010

எழுத்தாளர் ஜெயமோகனோடு...




நாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச விரும்புகிறேன், நேரமமிருக்குமா என்றேன். மாலை ஏழு மணிக்கு கோவை கிளம்புகிறேன். அதுவரை வீட்டில்தான் இருப்பேன் என்றார். பார்வதி புரத்தில் அமைதியான பகுதியில் இருந்தது அவருடைய வீடு. அவருடைய துணைவியாரிடம் அறிமுகப்படுத்தும்போது வெட்டுப்புலி எழுதியவர் இவர்தான் என்றார்.
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் என்னுடைய சிறுகதை தொகுதி ஒன்று மொழிபெயர்க்கப்பட்டு சனிக்கிழமை மாலை வெளியிடப்பட இருப்பதைச் சொல்லிவிட்டு, காலபிம்பம் என்ற அந்தத் தொகுதியை அவரிடம் கொடுத்தேன்.
அவர் திருவனந்தபுரத்துக்கும் தமிழுக்குமான தற்கால உறவுநிலைபற்றி சொல்ல ஆரம்பித்தார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, வையாபுரி பிள்ளை, ஷண்முக சுப்பையா, காசியபன், நகுலன், ஆ.மாதவன், நீலபத்மநாபன் என பலரையும் பற்றி பேச்சு ஓடியது. கிட்டத்தட்ட நானும் அவரும் முதன் முதலாக சந்தித்து மாதிரிதான். இதற்கு முன்னால் புத்தக சந்தையிலும் கவிஞர் ராஜமார்த்தாண்டன் மகன் திருமணத்திலும் ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு சரி. ஒருமனிதரைச் சந்தித்ததும் பேச நேரம் ஒதுக்கி, இவ்வளவு தகவல்களைச் சொல்லுவது ஆச்சர்யமாக இருந்தது. சிலர் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லுகிற மாதிரிதான் பேசுவார்கள். ஜெயமோகனிடம் அப்படி தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருக்க நேரவில்லை.
திருவனந்தபுரத்தில் நகுலன், ஆ.மாதவன், நீல.பத்மநாபன் மூவருக்குமான நட்பை அவர் விவரித்தது நன்றாக இருந்தது. நகுலன் ஒரு நேரத்தில் மற்ற இருவரில் ஒருவருடன்தான் நட்பு பாராட்டுவார் என்றார். அதாவது நீல.பத்மநாபனிடம் பழகி வரும்போது ஆ.மாதவனிடம் பழக மாட்டார்.
சுவாரஸ்மான சுபாவங்கள்.
சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு உருவான ஏறுமாறான விமர்சனங்கள் பற்றி கேட்டேன். அவர் விஷ்ணுபுரம் நாவல் வெளியான நேரத்தில் இருந்து பல்வேறு சம்பவங்களைச் சொன்னார். விமர்சனங்கள் புத்தகத்தின் ஆதார சுவையை அலசுவதை விட்டுவிட்டு எழுதிய நபர், அவரோடு சம்பந்தபட்ட வேறு சம்பவங்களையும் சேர்த்துக் கொண்டு காழ்ப்புணர்வுடன் வெளியாவதாக வருத்தப்பட்டார்.
மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கலாம்போல இருந்தது. என்னுடன் என்னுடைய மைத்துனர் விவேகானந்தன் வந்திருந்தார். அறையில் மற்ற நண்பர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அடுத்தகட்ட திட்டங்களை உத்தேசிக்க வேண்டியிருந்தது. மீன் முட்டி, பொன்முடி போன்ற இயற்கைச் சூழலுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் வரும் வழியில் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
விடைபெறுவதற்கு முன்பு அவர் சொன்னார்.
எழுத்தாளர்களுக்கு திடீரென்று சில கதைகள் பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வாசகன் எழுத்தாளனைப் பற்றி முன்முடிவை எடுத்துவிட்டால் அதை மாற்றுவது சிரமம் என்றார். வெட்டுப்புலி எனக்கு அத்தகைய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்னார். தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

அவசரத்துக்கு அவருடைய தளத்தில் இருந்து ...


தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.

ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.


நாஞ்சில் நாடன் இணையத் தளம்

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

மலையாளத்தில் என் சிறுகதை தொகுதி




கேரளத் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தில்லி பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராசிரியர் நாச்சிமுத்து, கேரள பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலமோகன் தம்பி, திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முனைவர் நயினார், செயலர் வானமாமலை, கேரள தமிழ்ப் பேரவையின் இணைச் செயலர் வீராணம் முருகன், எழுத்தாளர் நீல.பத்மமநாபன், ச.தமிழ்ச் செல்வன், கவிஞர் அ.வெண்ணிலா... பேசியவர்களில் சிலர்.
என்னுடைய எட்டாயிரம் தலைமுறை, மீன் மலர் சிறுகதை தொகுதிகளில் இருந்து பதினோறு சிறுகதைகள் தேர்வு செய்து சைலஜா ரவீந்திரன் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். அவை காலபிம்பம் என்ற தலைப்பில் சிறுகதை தொகுதியாக வெளியிடப்பட்டது.
மொழிபெயர்க்கப்பட்ட விதம் தமிழுக்கு நெருக்கமாக இருப்பதாக கவிஞர் யூமாவாசுகி அபிப்ராயம் சொன்னார். என்னுடன் அவரும் திருவனந்தபுரம் வந்திருந்தார். என் மைத்துனர் விவேகானந்தன், நண்பர்கள் கோவர்தன், விஜய்தீபன் ஆகியோரும் சென்னையிலிருந்து என்னுடன் வந்திருந்து எனக்குக் கிடைத்த பெருமையால் மகிழ்ந்தனர்.


விழாவுக்குச் செல்வதற்கு முன் நாகர்கோவிலில் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தது இனிமையான அனுபவம். அதைப் பற்றி நாளை...

திங்கள், டிசம்பர் 13, 2010

அது இது



ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை போர்டு வைத்திருந்தார்கள். கல்லூரியின் முகப்பு பிரம்மாண்டமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளை இங்கே படிப்பதை விரும்பத் தூண்டுவதாக இருந்தது அது. சில பெற்றோர்களும்கூட தாங்கள் மாணவர்களாக மாறிவிடுவதற்கு ஆசைப்படுமாறு இருந்தது. கந்தசாமிக்கு நிச்சயமாக இல்லை. பையனைப் படிக்க வைக்கவே பணம் போதுமானதாக இல்லை. அந்த ஆசையை யோசிக்கக் கூட வசதியில்லை.

"அப்ளிகேஷன் எவ்வளவு சார்?'' என்றார் கந்தசாமி. கவுன்டர் வழியாக பணம் வாங்குபவரின் வழுக்கைத் தலை மட்டும்தான் தெரிந்தது.

"போர்ட்ல எழுதியிருக்கு பாருங்க. ஆயிரம் ரூபா''

கையில் அவ்வளவு பணம் இல்லாமல் போய் அவமானம் ஏற்பட்டுவிடுமோ என ஒரு கணம் பயந்து போனார். கையில் என்னமோ ஆயிரத்து இருநூறு ரூபாய் இருக்கத்தான் செய்தது. அவசரமாக எடுத்துக் கொடுத்தார்.

"அப்ளிகேஷனுக்கா ஆயிரம் ரூபா?'' பதில் வேண்டிய கேள்வியாக ஆரம்பித்து தனக்குத்தானே முனகிக் கொண்டார். தவறாக எதையாவது வாங்கிவிடப் போகிறோம் என்ற தடுமாற்றம் கந்தசாமிக்கு.

"எலக்ட்ரானிக்ஸýக்குத்தானே?'' என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

"எல்லா சப்ஜெக்டுக்கும் ஒரே அப்ளிகேஷன்தான்''

எங்கே மாற்றி வாங்கிச் சென்று வீணாகிவிடுமோ என்று கடைசி நிமிடத்தில் சுதாரித்துக் கேட்டுவிட்டதில் அவரை அவரே மெச்சிக் கொண்டார்.

அப்ளிகேஷன் இந்த விலையா? அந்தக் காலத்தில் என் மொத்த கல்லூரி படிப்புக்குமே இவ்வளவு ஆகவில்லையே என்று அவர் யாரிடமும் சொல்லுவதில்லை. அந்த மாதிரி பேச்சுக்களை இக்காலப் பிள்ளைகளோ, மனைவிகளோகூட ரசிப்பதில்லை. சொல்லப் போனால் எரிச்சல் ஏற்பட்டு சீறிவிழுகிறார்கள்.

"சார்.. அப்ளிகேஷன் வாங்கிறது பெரிசில்ல. இப்பவே சீட்டு புக் பண்ணி வைக்கணும். எலக்ட்ரானிக்ஸ் சீட்டு ரொம்ப கம்மி. ஏற்கெனவே 36 பேரு புக் பண்ணிட்டாங்க. உங்களுக்கு கவர்மன்ட் கோட்டாவுல கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா விட்டுடுங்க.''

"புக் பண்றதுக்கு எவ்ளோங்க?''

"ஃபிப்டி''

இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

அந்த ஐம்பது ரூபாயை கவுன்டரில் இருந்தவர் கள்ள நோட்டுபோல இப்படியும் அப்படியும் பார்த்துவிட்டு, "அம்பதாயிரம் சார்..'' எனப் பட்டென சப்தம் எழுப்பி வெளிப்பக்கமாக வைத்தார்.

எரிச்சலடைந்துவிட்டார் கவுன்டரில் இருந்தவர். கந்தசாமிக்கு ஐம்பது ஆயிரமா என்று இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு அது மேலும் எரிச்சல் ஏற்படுத்திவிடும் என்று தோன்றியதால் சற்று தள்ளி வந்து தயங்கி நின்றார். "என்னைக்குள்ள புக் பண்ணனுங்க?'' என்றார். விருப்பமிருந்தால் பதில் சொல்லுங்கள் என்ற தொனியில்தான் கேட்டார்.

"36 பேர் பண்ணிட்டாங்கன்னு சொன்னனே?''

அவர் சொல்கிற ஒவ்வொரு தகவலும் மிக முக்கியமானவையாகவும் இரண்டாவது முறை சொல்ல முடியாத தங்க வார்த்தையாகவும் ஒரு கர்வம் இருந்தது.பையன் சேர்ந்தால் இந்தக் கல்லூரியில்தான் சேருவேன் என்று கூறியிருந்தான். மூன்றாவது ஆண்டு முடிப்பதற்குள்ளாகவே வேலை நிச்சயம் என்றான். அவனுடைய நண்பன் ஒருவனின் அண்ணன் இந்தக் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் வேலையில் சேர்ந்து அங்கு அவன் செலவு போக மீதி ஒரு லட்ச ரூபாயை மாதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறானாம்.

பேங்க்கில் கடைசி கடைசியாக ஒரு 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஆனால் இங்கிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பேங்குக்குப் போய் வருவதற்குள் சீட் காலியாகிவிடுமே? அதுவும் இல்லாமல் இனிமேல் போய் வருவதென்றால் பேங்க் மூடிவிடுவானே? அட இந்த யோசனை இவ்வளவு நேரமாக வராமல் போய்விட்டதே... ஆத்திர அவசரத்துக்குப் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டு வாங்கி வைத்திருந்தார் கந்தசாமி. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான ஆத்திர அவசரம் எதுவும் அவருக்கு ஏற்படதில்லை.

"சார் இத வெச்சி கட்ட முடியுமா?'' காசாளர் கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, ""அம்பதாயிரம் இருக்கா பாங்க்ல?'' என்றார்.

"பீஸ் கட்றதுக்குத்தான் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.''

"சரி. உங்களுக்கு கவர்ன்மென்ட் கோட்டாவுல இங்க இடம் கிடைச்சுட்டா ஃபீஸ்ல அட்ஜஸ்ட் பண்ணிடுவோம். போதுமா?''

இங்கேயே இடம் கிடைத்துவிட்டால் எல்லாமே திருப்திகரமாக அமைந்துவிடும். சரக்கென்று ரசீதைக் கிழித்துக் கையில் கொடுத்தான்.

கல்லூரி பொட்டல்காட்டில் அமைந்திருந்தது. எப்பாடுபட்டாவது கல்லூரிக்குள் வந்து விழுந்துவிட்டால் அங்கே சகல வசதியும் அனுபவிக்கலாம். மினி தியேட்டர், ஹாஸ்பிடல், ஹோட்டல், நீச்சல்குளம், இன்டெர்நெட் எல்லாம் வைத்திருந்தார்கள். கல்லூரியில் சேருகிற வரை இப்படி இரண்டு பஸ் பிடித்து இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் கல்லூரியை அடைய வேண்டியிருக்கும். அதன் பிறகு பிரமாதமான பஸ் உண்டு. வீட்டருகே வந்து கூட்டிச் செல்வார்கள். பஸ்ஸýக்கு தனி சார்ஜ். கொள்ளைதான். ஆனால் பணம் இருக்கிறவர்களுக்கு சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற வசந்தகால தூண்டில் விளையாட்டு.

"என்ஜினீயர் மாப்பிள்ளை. என்னமோ நம்ம சுந்தரும் அப்படியொரு என்ஜினீயர் மாப்பிள்ளை ஆகிவிட்டால் போதும். ஏன் என்ஜீனியர் ஆகிவிட்டாலே போதும்.'

ஒரு தகப்பனாக தனக்கான பொறுப்பை மிகச் சரியான நேரத்தில் மிக கவனமாக நிலைநாட்டிய பெருமை இருந்தது. பையனுக்கு கல்லூரியில் விண்ணப்பம்தான் வாங்குவதற்கு கிளம்பினார். ஆனால் கல்லூரியில் இடமே கிடைக்க எல்லா ஏற்பாடும் முடித்துவிட்டோம் என்ற திருப்தி. "பையன் வந்தா சீட் கிடைச்சுடுச்சுன்னு சொல்லு. இங்க அங்க அல்லாடிக்கிட்டு இருந்தான்'' என்று மீனாட்சியிடம் பெருமிதமாகவும் திருப்தியாகவும் கூறினார். "என்னமோ இவ்வளவு செலவு செய்றோம். நல்லா படிச்சா சரி'' இது மீனாட்சியின் எதிர்வினை.

மத்தியானம் மூன்று மணிக்கு மேல் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே கண்ணயர்ந்த நேரத்தில் சுந்தரின் குரல் கேட்டது.

"யாரு வெங்கடேஷ்வரா'ல அப்ளிகேஷன் வாங்கச் சொன்னது?''

ஏதோ பெரிய தவறு நடந்திருப்பது உறைத்து கண்ணைக் கசக்கிக் கொண்டு, ""வெங்கடேஷ்வரா காலேஜ்ல தாம்பா வாங்கினேன்'' என்றார் கந்தசாமி.

"அதான் ஏன் அங்க வாங்கினீங்கனுதான் கேக்றேன்.''

"ஏன் பையன் காலையில் ஒரு மாதிரியும் மாலையில் ஒரு மாதிரியும் பேசுகிறான்' என்று சந்தேகமாகிவிட்டது.

"நீதானே ராஜா அங்க வாங்கிட்டு வரச் சொன்னே?''

"நான் சொன்னது ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ். வெங்கடேஸ்வரா காலேஜைத் தாண்டி உள்ள போகணும். இது வேஸ்ட் காலேஜ். நான் போகமாட்டேன்''

"சீட் புக் பண்ணணும்னு அம்பதாயிரம் வேற கட்டிட்டம்பா''

அலட்சியமும் திகைப்பும் என்ன அவசரம் என்பதுமாக ஒரு பார்வைப் பார்த்தான் சுந்தர். ""அங்க சேர்றதுக்கு நாலு எருமை மாடு வாங்கி மேய்க்கலாம். போன வருஷம் முழுசும் ஸ்ட்ரைக். மேனேஜ்மண்ட்ல ஏகப்பட்ட ஊழல். இடம் ஆக்ரமிச்சு பில்டிங் கட்டினதுக்காக பின்னாடி நாலு பில்டிங்கை இடிச்சுத் தள்ளிட்டாங்க. லேப் வசதியெல்லாம் அதில போச்சு. என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்றதுக்கு என்னப்பா?''

"அங்க ஒரே பேர்ல ரெண்டு காலேஜ் இருக்கும்னு எவனுக்குத் தெரியும்பா?'' அப்பாவைப் பார்க்க சுந்தரத்துக்கே பாவமாக இருந்தது. "எல்லா காலேஜும் ஒண்ணுதான். அதே புக்குதான். அதே நோட்டுதான். படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிச்சுடுவான்'' என்று அம்மா இரண்டு பேருக்கும் பொதுவாக ஒரு தீர்வு சொன்னாள்.

"காலேஜே இடிச்சுப் போட்டுட்டு ஸ்ட்ரைக்ல கிடக்குதுங்கிறான். என்னமோ புரியாம பேசறியே... '' காரணமில்லாமல் அம்மாவைச் சமையல் கட்டுக்குத் துரத்தினார் அப்பா.

"திருப்பிக் கேட்டா தந்துடுவானா?'' நம்பிக்கையே இல்லாமல் பையனிடம் கேட்டார் கந்தசாமி.

"யானை வாய்ல போன கரும்புதான்.'' சுந்தருக்கு தன் வேறு வாசல்களை அப்பா அடைத்துவிட்டாரே என்ற இயலாமையும் இனி கேம்ப்ஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து வெளிநாட்டுக்குப் போவதென்பது முடியாது என்றும் கவலை ஆக்கிரமித்துக் கொண்டது. சட்டையை மறுபடி மாட்டிக் கொண்டு நண்பர்களைப் பார்க்கப் புறப்பட்டான்.

கந்தசாமி கண்ணை மூடித் தியானித்து அருட்பெருஞ்சோதி தனிப் பெரும் கருணை என்று மனதுக்குள் பிரார்த்தித்தார். லூகாஸில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அன்று நண்பர்கள் டாக்ஸியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுவிட்டுச் சென்ற போது இதே மாதிரி ஒரு வெறுமையும் ஆறுதல் தேவையும் கந்தசாமிக்கு ஏற்பட்டது.

பயமெனுமோர் கொடும்பாவிப் பயலேநீ யிதுகேள்

பற்றறவென் றனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்

காலையிலேயே போய் காசாளர் கவுன்டரில் நின்றுவிட்டார் கந்தசாமி. பத்தே காலுக்கு கவுன்டரைத் திறந்த காசாளர், சந்துவழியாகப் பார்த்து நட்பு புன்னகைப் புரிந்தார்.

"பையன் வேற காலேஜில சேரணும்னு நினைக்கிறான். புக்கிங்கு கட்டின பணத்தைத் திருப்பித் தந்துட்டீங்கன்னா புண்ணியமா போய்டும்''

அவன் கம்ப்யூட்டர் கடையில் ஆட்டுக் கறி அரை கிலோ கேட்டதுமாதிரி ஒன்றும் புரியாமல் பார்த்தான். "அதெல்லாம் தரமாட்டாங்க. காலைல வந்து வம்பு பண்ணாதீங்க''

"அப்ளிகேஷனுக்குக் கொடுத்த ஆயிரம் ரூபாகூட வேண்டாங்க. எனக்கு வெளியூருக்கு மாத்தலாயிடுச்சுன்னு வெச்சுக்கங்க... நான் எப்படி இங்க சேர்க்கறது''

"தரமாட்டாங்க. உங்கக்கிட்ட கொடுத்த பில்லுலயே போட்டிருக்குப் பாருங்க. வாங்கியே தீரணும்னு நினைச்சா ஆபிஸ் ரூம்ல போய் கேட்டுப்பாருங்க'' அது தலைவலியைத் திருப்பிவிடும் பாணி.

காரணமில்லாமல் ஏ.டி.எம். கார்டை எடுத்துப் பார்த்தார். நேற்று ஒரு மிஷினில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டது ஞாபகம் வந்தது. அதே மாதிரி ஒரு இழுப்பு இழுத்து கொடுத்த பணத்தை நம்மிடமே இழுத்துக் கொள்ள முடியுமா என்று யோசித்தார். பேங்கில் அதற்கு வசதி இருக்குமா என்று நம்பிக்கையில்லாத எதிர்பார்ப்பு ஏற்பட்டு அடங்கியது.

அலுவலக அறையில் ஐந்து பெண்களும் மூன்று ஆண்களும் தீவிரமாக கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தனர். கேட்டால் பதில் சொல்கிற மாதிரி இருந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து விஷயத்தைச் சொன்னார் கந்தசாமி. இந்தமாதிரி விஷயத்தை முதன்முதலாக வாழ்க்கையில் எதிர் கொள்கிற தோரணையில் "நீங்க எங்க போய் முறையிட்டாலும் பணத்தைத் திருப்பித் தரமாட்டாங்க. மேனேஜ்மண்ட் ரூல் ஸôர்'' என்றாள்.

மற்ற ஏழு பேரும் கந்தசாமியை அதிசயமாகப் பார்த்தனர். அதில் ஒருவர், "சீட் புக்கிங் பொறுத்துதான் நாங்க எவ்ளோ வேகன்ஸி இருக்குனு முடிவு செய்றோம். இப்படி ஒவ்வொருத்தரும் புக் பண்ணிக்கிட்டும் கேன்சல் பண்ணிக்கிட்டும் இருந்தா காலேஜ் ரன் பண்ண முடியுமா? நியாயத்தைச் சொல்லுங்க.''

"என் நியாயத்தையும் பாருங்க.''

"என்ன நியாயம்? சொல்லுங்க''

"பையன் வேற காலேஜில சேரணும்னு சொல்றான்.''

"பசங்களுக்கு நாமதான் எடுத்துச் சொல்லணும்''

"இல்ல சார். அவன் வேற கோர்ஸ் சேரணும்னு நினைக்கிறான். அதான்''

"அதுக்கப்புறம் உங்க இஷ்டம். நேத்து வந்து சீட்டு கேட்பீங்க. இன்னைக்கு மனசு மாறுவீங்க. இது என்ன காலேஜா?.. கட்பீஸ் கடையா வேற கலர் மாத்திக்குடுங்கன்னு கேட்கறதுக்கு... அதுகூட சரிதான். வேற டிபார்ட்மெண்ட் மாத்திக்கணும்னாகூட சொல்லுங்க. மேலிடத்தில பேசி மாத்தித் தர்றதுக்கு ஏற்பாடு பண்றேன்.''

"ரூபாயைத் திருப்பி தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சிடுங்க சார்''

"வயசுல பெரியவரா இருக்கீங்க. ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே?''

"ஓனர் எங்க இருப்பார்னு சொல்லுங்க? அவர் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்''

பொறுமை இழந்தவன் மாதிரி ஒருவன் ஆவேசமாக எழுந்தான். ""ஓனர் தானே வேணும்? மெல்போர்ன் போங்க. அங்கதான் இன்னும் பத்துநாளுக்கு இருப்பாரு'' என்றான்.

"எங்க இருக்கு மெல்போர்ன்' என்று கேட்க நினைத்தவர், அது பக்கத்து ஊர் பெயர் மாதிரி தெரியாததால் "பத்து நாள் கழிச்சுத்தான் வருவாரா?'' என்றார் தன் அடக்க உணர்வை வெளிப்படுத்தும்விதமாக. தன்னைச் சண்டை போட வந்தவராக நினைக்க வேண்டாம் என்பதை தன் உடற்பணிவு மூலமாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பணத்தோடு வீட்டுக்குப் போய் இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். மனரீதியாகவும் அது பெரிய சுதந்திரத்தைத் தரும் என்று நினைத்தார். அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லாதபோதும் ""சரிங்க. பத்து நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன்''.. யாரும் இதற்கும் செவி சாய்க்கவில்லை.

பதில் சொல்லுவான் போல தெரிந்தவன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டி மட்டும்தான்.

"இந்த காலேஜ் ஓனர் யார்னு தெரியுமா உங்களுக்கு?''

செக்யூரிட்டி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்துவிட்டு "மின்னாடி மினிஸ்டரா இருந்தாரே உமாபதி... அவரோட காலேஜுங்க இது.''

"அவருடைய வீடு எங்க இருக்குனு சொல்லமுடியுமா?'' என்ற போது அதெல்லாம் தெரியாதுப்பா போ.. போ என்றவனிடம் கந்தசாமி வலிந்து தன்னுடைய பிரச்சினையைச் சொல்லி முடித்தார். ஐம்பதாயிரம் ரூபாய் என்பதன் அர்த்தமும் வலியும் தெரிந்தவனாயிருந்தான் அவன். முகவரியைச் சொன்னான். "பெசாம கால்ல விழுந்திடுங்க. அவனுக்கின்னா அம்பதாயிரம் பிஸ்கோத்து மாரி.. நம்ம கஷ்டத்துக்கு மேல ஒரு அம்பதாயிரம் போட்டுகூட தர்லாம். அவ்ளோ ரூபா இருக்கு. மனசு இருக்கணுமே?'' என்று ஆறுதலும் உபாயமும் சொன்னான்.

வெயில் உருக்கியது. தார் சாலை, மனிதர்கள், மனசுகள் எல்லாம்தான் உச்சி வெயில் நேரத்தில் உருகின. இரண்டு பஸ் பிடித்து ஜன நெருக்கடியில் கசகசப்பாகி தி.நகர். வந்து சேர்ந்தார். சோர்வாகவும் சற்று தள்ளாட்டமாகவும் இருந்தது. எப்படியும் பணத்தைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் மட்டும் அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.

தி. நகரில் வீட்டைக் கண்டுபிடித்து அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் மாரடித்து விஷயத்தைச் சொன்னபோது, ஒருவழியாக அங்கிருக்கும் அலுவலகத்தில் ஒருவனைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் காலிலும் ஒரு முறை விழுந்து வைத்தார் கந்தசாமி. "படாத பாடுபட்டு சம்பாரிச்ச பணம்யா. குருவி சேர்க்கிறமாரி சேர்த்து கட்டிட்டன்யா.'' }உணர்ச்சிபூர்வமாக நடித்து பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றுதான் அப்படிப் பேசினார். ஆனால் தொடர்ந்து அவரால் நடிக்க முடியவில்லை. நிஜமாகவே அழ ஆரம்பித்துவிட்டார். படபடப்பாக இருந்தது. உட்கார வைத்துக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான்.

""பெரியவரே பணம் திருப்பித் தரணும்னா போர்டு மீட்டிங்ல வெச்சுதான் முடிவு பண்ணுவாங்க. இவர் மட்டுமே ஓனர் கிடையாது. மொத்தம் எட்டு டைரக்டர்ஸ் இருக்காங்க. அத்தனை பேரும் ஒத்துக்கிட்டாதான் பணத்தைத் தரமுடியும் புரிஞ்சுதா'' சட்டத்தையும் நியாயத்தையும் கலந்து அவருக்குப் பதில் சொன்னான் அவன்.

"நீங்க மனசு வெச்சா வாங்கித் தந்துடுவீங்க. ஒரு பத்தாயிரம் எடுத்துக்கிட்டு மீதிய குடுத்தாகூட போதுங்க.''

"பெரியவரே.. அதான் சொல்லிட்டன் இல்ல. லஞ்சம் குடுக்கிறியா எனக்கு?''

"லஞ்சம் இல்லீங்க. டொனேஷனா எடுத்துக்கங்க, காலேஜிக்கு''

"சரி. லெட்டர் எழுதிக் குடுங்க. பில் ஜெராக்ஸ் எடுத்து அட்டாச் பண்ணிடுங்க. ஐயா வெளியூர் போயிருக்காரு வந்தா சொல்றேன்''

பையனை இந்தக் கல்லூரியிலேயே படிடா என்று கட்டாயப்படுத்திச் சொல்லிவிட்டால் என்ன? எதற்கு இந்த ரோதனை? மீனாட்சி சொன்னது மாதிரி படிக்கிற பையன் எந்தக் காலேஜில் படிச்சாலும் மார்க் எடுத்தா வேலைக் கிடைத்துவிடப் போகுது என்று யோசித்துப் பார்த்தார். இப்படிப் பணத்துக்காக அலைகிறவர்களிடம் சரஸ்வதி எப்படி இருப்பாள் என்றும் மறுபடி மனதை மாற்றிக் கொண்டார். தெரு முனையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மறுபடி அமைச்சர் வீட்டுக்கு வந்தபோது செக்யூரிட்டி நான் கொடுத்துவிடுகிறேன் என்று வாங்கி வைத்துக் கொண்டான்.

மறுபடி எப்ப வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாமல் வந்துவிட்டோமே என்று இருந்தது. உள்ளே போய் மறுபடி கேட்க முடியாது என அவரும் தீர்மானமாகத் தெரிந்து வைத்திருந்ததால், அந்தக் கேள்வியை செக்யூரிட்டியிடமே கேட்டுக் கொண்டார்.

வீட்டருகே இருக்கும் மந்திரியின் கட்சியைச் சேர்ந்த வட்டச் செயலாளரிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றி நினைத்தார். ஐந்தாயிரம் கொடுக்கிறேன் என்றால் ஒருவேளை முடித்துத் தருவான். பாதி பணம் திருப்பி வந்தால்கூட மீதி நகை நட்டை விற்று அவன் விரும்புகிற காலேஜில் சேர்த்துவிடலாம். பாதி பணத்தைத் திருப்பித் தந்தால் போதும் என்று சொல்லிவிடலாம்.

"அப்பா அப்ளிகேஷன் வாங்கின காலேஜிலதான் சேர்ந்திடேம்பா' என்று சுந்தருக்கு நிறையபேர் அறிவுரை சொன்னார்கள். "அவன் தலைல எந்த காலேஜ்னு எழுதியிருக்கோ அதுதான் கிடைக்கும்' என்றும் விளக்கங்கள் கிடைத்தன."பெரியவங்க உனக்குக் கெட்டது செஞ்சுட மாட்டாங்கப்பா. எது செஞ்சாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும். இவ்வளவு நாள் வளர்த்தவங்களுக்கு உன்னை எந்த காலேஜில சேர்க்கணும்னு தெரியாதா?''என்றார் சுந்தரிடம் மீனாட்சியின் அண்ணன்.

தவறு செய்துவிட்ட மாதிரி அவர் முன்னால் சுந்தர் தலை கவிழ்ந்து அமைதியாக இருந்ததைப் பார்த்தபோது கந்தசாமிக்கு குற்ற உணர்வாக இருந்தது.

(வார்த்தை 2008)

செவ்வாய், நவம்பர் 16, 2010

கனடாகாரரின் அமெரிக்கக்காரி!

அ.முத்துலிங்கம் பயில்வது சுவாரஸ்யமான அனுபவம். ஏற்கெனவே இவரைப்பற்றி ஒரு தரம் சொன்னதுபோல இவருடைய எழுத்துகளில் அறிவியல், புவியியல், அரசியல், கணிதவியல், மொழியியல்.. இப்படி இன்னும் சில இயல்கள் கலந்து கட்டி இருக்கும். தமிழில் சிந்தித்து எழுதக் கூடிய ஒரு ஆங்கிலேய இலக்கியவாதியைப் போல இருப்பது இவருடைய நடை. சிறுகதை தொகுதி என்ற பொது அடையாளத்தோடு வெளிவந்திருக்கும் அ.மு.வின் அமெரிக்கக்காரி, அப்படித் தன் அடையாளத்தைச் சுருக்கிக் கொள்ள முடியாத நூலாகவே இருக்கிறது. இதில் சில கதைகள் "உண்மை கலந்த நாட்குறிப்பி'ல் இடம்பிடிக்க வேண்டியவை.

குறிப்பாக "உடனே திரும்ப வேண்டும்', "சுவருடன் பேசும் மனிதர்', "தாழ்ப்பாள்கனின் அவசியம்' ஆகிய கதைகள் கற்பனைகலக்காத நாட்குறிப்புகளாகவே தோன்றுகின்றன. மேலும் அந்தக் கதைகளில் உள்ள தன்மை முன்னிலை தொனியும் நம்மை அப்படி எண்ண வைக்கிறது. அதையும் மீறி அவை அவருடைய கற்பனையில் மட்டுமே உதித்ததாக இருந்தால் அது அவருடைய மிகப் பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதுவதைவிட தான் அனுபவிக்காததை சுவாரஸ்யமாக எழுதுவது பெரும் சாதனைதானே?

முத்துலிங்கத்துக்கு சோதனையான ஒரு சிறுகதை ஒன்று இதிலே இடம் பெற்றிருக்கிறது. அதன் தலைப்பு "பத்தாவது கட்டளை'.

லெற்றீஸியா என்ற தன் காதலிக்குக் காதலன் எழுதும் கடிதம் அது. அவளுடைய வயதை இரண்டால் பெருக்கினாலும் அதில் அடங்காத வயது காதலனுக்கு.

லெற்றீஸியா என்ற பெயரையே அப்படி நேசிக்கிறார் காதலன். அது ஒரு பெண்ணின் பெயர் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. "14 வயதிலிருந்தே அந்தப் பெயரில் எனக்குக் காதல் இருந்தது; அந்தப் பெயர் நான் பிறப்பதற்கு முன்னரே என் மரபணுவில் கலந்திருக்க வேண்டும். இத்தனை வயதுக்குப் பிறகு அப்படியொரு பெயர் தரித்த பெண்ணை காண்பேன், பேசுவேன், தொடுவேன் என்றெல்லாம் நான் நினைக்கேவேயில்லை' என்று தொடங்குகிறார்.

முத்துலிங்கத்தின் "உண்மை கலந்த நாட்குறிப்பி'ல் "பூங்கொத்து கொடுத்த பெண்' தலைப்பிட்ட அத்தியாயத்தைப் படித்தீர்களானால் அதில் ûஸராவை வர்ணிப்பதின் மிச்சத்தை இங்கே லெற்றீஸியாவுக்குத் தந்திருக்கிறார் என்பது புரியும்.

ûஸரா பாதிக்கால் தெரியும் செருப்பை அணிந்திருந்ததாகவும் பாதம் ஒளிவீசுவதை அன்றுதான் பார்த்ததாகவும் கண்டதாகவும் அவள் பேரழகி.. அதிலே துயரம் என்னவென்றால் அவளுக்கு அது தெரியாது என்றும் எழுதியிருப்பார்.

லெற்றீஸியாவுக்கு வருவோம்...

"நீ ஒரு தூக்கவியல் நிபுணி. சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவர்கள் மூச்சு சில நிமிடங்கள் நின்றுவிடுவதுண்டு. அதுபற்றிய ஆராய்ச்சியில் இருப்பதாகச் சொன்னாய். உன்னைப் பார்க்கும் கணங்களில் என் மூச்சு பல நிமிடங்கள் நின்று போனதை நான் சொல்லலாம், நீ நம்பவா போகிறாய்?'

அவளோ குழந்தைத்தனமானவளாக இருக்கிறாள். ஒருநாள் அவளை எச்சரிக்கை செய்வதற்காக "உடனே திரும்பிப் பார்க்காதே. உனக்குப் பின்னால் பத்துமணி கோணத்தில் ஒருவன் உட்கார்ந்து உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்கிறார். அவளோ காலை பத்துமணியா, இரவு பத்துமணியா? என்கிறாள்.

"திடீரென்று ஆப்பிள் குவியலின் மணம் எழுந்தது. நீ எலுமிச்சை பச்சை ஆடையில் நின்று கொண்டிருந்தாய். நான் திரும்பிய வேகத்தைப் பார்த்தோ என்னவோ நீ சிரித்தாய். கதவைத் திறந்துவிட்ட கிழவருக்கு கொடுத்த அதே சிரிப்பு. டொரான்டோ மாநகரத்தில் அதுவே ஆகச்சிறந்த சிரிப்பு. (கிழவருக்காக அந்தச் சிரிப்பை வீணாக்கிவிட்டதற்காக வருத்தம் வேறு.)அப்போதுதான் உன்னுடைய பெயர் லெற்றீஸியா என்றாய். நான் ஏற்கெனவே தெரியும் என்று சொன்னதை நீ நம்பவில்லை. உன்னுடைய உடல் உருவத்துக்கு வேறு என்ன பெயர் பொருத்தமுடியும், அதை யோசித்துப் பார்.' காதல் பித்து மூச்சு முட்டுகிறது.

பிறகு அவர் செய்த நல்லூழ் அவரை அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க வைக்கிறது. வீட்டுக்கு அழைக்கிறாள். அவளுடைய ஒரே மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்கிறாள். தனிமை. சந்தோஷமாக இருக்கிறார்கள். தினத்தந்தி பாஷையில் உல்லாசமாக இருக்கிறார்கள்.

உன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதாக அந்தக் கடிதம் முடிகிறது.

கடிதம் முடிந்துவிட்ட அடுத்த பாராவில் கதை முடிகிறது.

"இந்தக் கடிதம் டொராண்டோ நூலகம் ஒன்றின் பைபிள் பிரிவில் ஒரு பைபிளின் பத்துக்கட்டளைகள் பகுதியில் இருக்கிறது. "காதலனோ, காதலியோ கைமறதியாக வைத்திருக்க வேண்டும். கடிதத்தைப் படித்துவிட்டு காதலி வைத்தாளோ, கடிதத்தைக் கொடுக்கும் முன்னர் அதை காதலன் வைத்து கொடுக்க மறந்தானோ என்ற புதிர் விடுபடவில்லை...' என்று முடிகிறது கதை.

அ.மு. இந்தக் கடிதத்தை பைபிளில் இருந்து எடுத்தவர் மாதிரி தெரியவில்லை, வைத்தவர் மாதிரி தெரிகிறார்.

இதைத்தான் அவருக்கான சோதனை என்றேன். ஒரு சிறுகதையை இத்தனை நம்பகத் தன்மையோடு எழுதினால் இப்படித்தான் சந்தேகப்படுவார்கள்.

'மயான பராமரிப்பாளர்' என்றொரு சிறுகதை. உலகத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றியபடி வந்து ஆஸ்திரேலியாவில் இறங்கும் பயணத்தையும் பயணிகளையும் விவரிக்கும் கதை. கிரீன்விச்சைக் கடக்கும்போது ஒரு முழுநாள் எப்படி காணாமல் போகிறது என்பதையும் அதனூடே ஒரு சிறுமியின் ஏக்கத்தையும் சொல்லும் அற்புதமான கதை.

'49வது எல்லைக் கோடு'ம் இதே போல புவியியல் சம்பந்தப்பட்டது. இப்படியெல்லாம் யோசிக்க செயல்பட அவருடைய பரந்துபட்ட பட்டறிவு துணை நிற்கிறது. வேறு கதையும் களமும் தமிழுக்கு இதனால் அறிமுகமாகிறது. உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து இப்போது கனடாவில் வசிப்பவர் அ.மு. பல நாடுகளையும் பலநாட்டு மனிதர்களையும் வாழ்க்கையையும் நுணுக்கமாகப் பார்ப்பவர். உலகத்தை இவரைவிட அதிகதரம் வலம் வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் படைப்பாளியின் பார்வையில் கிடைக்கும் பலனை இந்த நூலில் தரிசிக்க முடிகிறது.

"சுவருடன் பேசும் மனிதன்' கதையில் மனிதன் தன் மொழிக்குத் தரும் முக்கியத்துவம் அலசப்படுகிறது. தனக்கென தனியே தேசமில்லாத மொழிகள் அழிந்துபோவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் அராமிக் மொழியாளன் ஒருவன். டொராண்டாவில் அந்த மொழி பேசிக் கொண்டிருந்தவர் இருவர். ஒருவன் அவன். இன்னொருத்தி அவன் மனைவி. மனைவி கொஞ்ச நாளுக்குமுன் இறந்து போய்விட்டாள். இப்போது அந்த மொழி தெரிந்தவன் அவன் ஒருத்தன்தான். அதனால் அவன் சுவருடன் தினமும் அராமிக் மொழியில் பேசுகிறான். இந்த மொழி அழிந்து போய்விடாதா என்று தன் அச்சத்தைத் தெரிவிக்கிறார். அவன் நம்பிக்கையோடு சொல்கிறான். யேசு பேசிய மொழி ஆயிற்றே என்கிறான்.

"பத்துநாட்கள்' கதையில் இந்த உலகில் அஞ்சி நடுங்கிக் கூழைகும்பிடு போட்டு வாழும் லட்சோப லட்சம் மக்களில் ஒருவனைப் பற்றி விவரித்திருக்கிறார். ஊசியை பல்லால் கடித்தபடி பேசும் தையல்காரனைப் போல பற்கள் பிரியாமல் பேசினார் என்று அந்த அதிகாரியை வர்ணித்திருப்பார்.

"மன்மதன்' கதையில் சாணை பிடிப்பவன் மாதிரி வேறு பக்கம் திரும்பிக் கொண்டு பேசினாள் என்று ஒரு உவமானம் வரும். மிகவும் ஆச்சர்யப்படவைக்கும் இத்தகைய உவமைகளுக்கு பஞ்சமே இல்லை இவருடைய படைப்பில்.

"மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள்', "புவியீர்ப்பு கட்டணம்' ஆகியவை மனிதன் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டிய வேடிக்கையான சுவையைத் தரும் கதைகள். இதில் மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள் இப்போதைய சூழலில் நடக்கும் கதை, புவியீர்ப்பு கட்டணம் இனிமேல் நடக்கப் போகிற கதை.

"தாழ்ப்பாள்களின் அவசியம்', "லூஸியா', "பொற்கொடியும் பார்ப்பாள்', "அமெரிக்ககாரி' ஆகிய கதைகள் இலங்கை பின்னணியை நெருப்புபோல உரசிச் செல்கின்றன. ஏதோ ஒரு வரியில் உள்ளத்தை உலுக்கிப் போட்டுவிடும் தன்மை கொண்டவை. குறிப்பாக "பொற்கொடியும் பார்ப்பாள்' கதை. அதில் இறந்து போன ஈழத்துப் போராளி பெண்ணின் கையில் சிங்கள ராணுவத்தினர் கிரேனெட் இருந்ததைச் சொல்லி முடித்திருப்பார். அது எப்படி அவள் கைக்கு வந்தது என்பது நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நமக்குள் வேறு ஒரு கதையைத் திறக்கிறது.

புகைக்கண்ணர்களின் தேசமும் லூஸியாவும் தரும் சரித்தர புனைவும் மெல்ல திறந்து காட்டும் ரகஸ்யங்களும் அலாதியும் அதிர்ச்சியும் மனத்துக்குள் நிகழ்த்தவல்லன.

இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லா கதையிலும் ஏதாவது ஓரிடத்தில் அவர் ஒளித்து வைத்திருக்கும் அங்கதச் செறிவு வாய்விட்டுச் சிரிக்கும்படி செய்யும். "உடனே திரும்ப வேண்டும்' மற்றும் 'வேட்டை நாய்' போன்ற கதைகள் பதற்றமும் நகைப்பும் கலந்தவை. ஒவ்வொரு வரிக்கும் உரை எழுதி சிலாகிக்கலாம். அப்படி எழுதினால் அமெரிக்ககாரி புத்தகத்தைப் போல இரண்டு பங்கு நூலாகிவிடும் இந்த விமர்சனம்.

அமெரிக்ககாரி,
அ.முத்துலிங்கம்,
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை,
நாகர்கோவில்-1.
போன்: 4652- 278525
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.இன்


முத்துலிங்கம் எழுதிய பிற நூல்கள் பற்றி :

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

வியத்தலும் இலமே



ஞாயிறு, நவம்பர் 07, 2010

கடவுளோடு ஒரு கண்ணாமூச்சி! சுஜாதா நினைவாக


அமெரிக்காவில்
கிரெய்க் வெண்டர் புதிதாக- செயற்கையாக ஒரு செல்லை உருவாக்கியிருக்கிறார்.

-இந்தவரி அத்தனை சுவாரஸியமாக இருக்காது.
இதுநாள் வரை இறைவனின் படைப்பு என்றும் இயற்கையின் படைப்பு என்றும் சொல்லி வந்த உயிரை, மனிதர்கள் உருவாக்கிவிட்டார்கள்.

-இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்பட்டிருக்கும்.
உயிரை உருவாக்குவது என்றால் என்ன என்பதற்கு முன்னால் இதற்கு முன்னர் எப்படி உயிர் உருவானது என்பதைப் பார்க்கலாம்.

இதுவரை 99 சதவீத உண்மையாக நம்பிப் போற்றப்பட்டுவரும் உயிர் உருவானது பற்றிய யூகம் இதுதான்... சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் நீர், சில கார்பன் மூலக்கூறுகள் போன்றவையே -இப்போது செவ்வாய், வியாழன் போன்ற கிரகங்களில் இருப்பவை போல. இந்த மூலக்கூறுக்கள் மீது சக்தி வாய்ந்த மின்சாரம் பாய்ந்தபோது -அதாவது மின்னல் - அமினோ அமிலங்களாக மாறின. அமினோ அமிலங்கள் என்பவை புரதத்தின் அடிப்படை. அவை உயிராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது ஏன் எனில் அவை தங்களைத் தாங்களே பிரதி எடுத்துக் கொள்கிறது. மேற்கொண்டு புரதம் தயாரித்துக் கொள்கிறது என்பதால்தான். இதை ரெப்ளிகேஷன் என்றும் ட்ரான்ஸ்லேஷன் என்றும் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் உருவான இந்த ஒரு செல் உயிரி, காலப் போக்கில் மீனாக, முயலாக ஆலமரமாக, மனிதனாக என்று பல்வேறு பிரிவாகப் பிரிந்தாலும் இதன் அடிப்படை ஒன்றுதான். அதனுடைய ஜீன்களில் இருப்பவை அடினைன், தயோமைன், சைட்டோசைன், குவானின் என்ற நான்கு வேதிப் பொருள்கள். இந்த நான்கும் "ஏடிஸிஜி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன.
மனிதனுக்கு இப்போது இந்த நான்கு வேதிப் பொருள்களும் தனித்தனி தனிமமாக கையில் கிடைக்கின்றன. நாமும் ஏன் ஒரு உயிரினத்தை உருவாக்கக் கூடாது என்ற ஆசை துளிர்க்கிறது. போன நூற்றாண்டிலேயே இந்த ஆசை துளிர்த்தாலும் இப்போதுதான் அதன் முதற்படியில் கால் வைத்திருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த நான்கு அடிப்படைப் பொருள்களை நாம் நம் லெபாரட்ரியில் வைத்திருந்தாலும் அவற்றை வைத்து ஒரு உயிரை உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது.
ஏடிஸிஜி என்ற நான்கு எழுத்துக்களில் இருந்துதான் இன்று உலகில் உள்ள அத்தனை ஜீவராஸிகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அது எப்படியென்றால் அந்த நான்கு எழுத்துகளில் இருந்து மூன்று மூன்று எழுத்துக்களாக வெவ்வேறு வரிசையில் இணைந்து வினோத வார்த்தைகளாக அடுக்கப்படுகின்றன. இப்படியாக கோடிக்கணக்கான வார்த்தைகள் இணைந்தால்தான் அவை ஒரு செல்லாக மாறுகின்றன. அவை எந்த வரிசையில் அடுக்கப்பட்டால் என்ன பாக்டீரியாவாக மாறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இத்தனை ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு பாக்டீரியாவைப் படிப்பதற்கே இத்தனை ஆண்டுகள் என்றால் கடற்பஞ்சுகள், மெல்லுடலிகள், கணுக்காலிகள், முதுகெலும்புள்ளவை, பாலூட்டிகள் என்று உயிரினத்தின் இந்த அடுக்குகளைப் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

க்ரெய்க் வெண்டர் செய்திருப்பது முதல் செல்லை என்றாலும் இது ஒரு மகத்தான சாதனை. படைப்பது என்பது கடவுளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை (!) என்பதை உணர்த்துகிறது. அதனால்தான் வாடிகன் அலறுகிறது, கடவுளோடு விளையாடுவதை நிறுத்துங்கள் என்று. புதிய புதிய கிருமிகளைத்தான் மனிதன் உருவாக்குவான், நாம் தீர்மானிக்க முடியாத புதிய ஆபத்துகளை உருவாக்கிவிட்டுத் தத்தளிக்கப் போகிறோம் என்று குலைநடுங்குகிறார்கள்.
முதன் முதலாக கல்லை எடுத்து நிலத்தைக் கீறி நானே எனக்குத் தேவையான பயிரைச் செய்யப் போகிறேன் என்று சொன்ன ஆதி விவசாயிக்கு ஏற்பட்ட எதிர்ப்பைப் போலத்தான் இதுவும். மரத்தைவிட்டு சமவெளிக்கு வருவதற்கு அஞ்சி நின்ற குரங்குகளை இவர்களுக்கு ஒப்பிடலாம்.
மனிதன் பகுத்தறியும் விலங்காக இருப்பதால் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின்போதும் புதிய சவால்களைச் சந்திக்கிறான். அதனோடு போராடுகிறான். இறுதியில் வெற்றியும் பெறுகிறான்.
ஏறத்தாழ 15 ஆண்டுகள் போராடி 40 மில்லியன் டாலர் செலவிட்டு இந்த ஒரு செல் பாக்டீரியாவைத்தானே உருவாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இது தன்னைத்தானே பிரதியெடுக்கவும் செயல்திட்ட ஆணைகளை நிறைவேற்றவும் செய்கிறது (புரதம் உருவாக்கவும் செய்கிறது). இனி அடுத்த கட்டங்களுக்குப் போவதற்கு சுலபம். ஜீன்களில் இருக்கும் தகவல் அடுக்குகளைப் படிக்க சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதும் அச்செய்திகளை உள்ளிடுவதற்கு சாஃப்ட்வேர் எழுதுவதும் ஒரு பக்கம் வேகமாக நடைபெறும்.
600 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் தோன்றியது. ஆனால் உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் ஒரு செல் உயிரினம் உருவானது. மனிதன் 15 ஆணடு ஆராய்ச்சியிலேயே அதை உருவாக்கியிருக்கிறான். அந்த விதத்தில் பிரம்மனைவிட பிரில்லியண்ட்!

கிரெய்க் வெண்டர் புதிதாக- செயற்கையாக ஒரு செல்லை இன்னும் பத்தாண்டுகளில் உருவாக்க இருக்கிறார் என்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் வெளியான ஜினோம் என்ற விஞ்ஞானத் தொடரில் எழுதியிருந்தார். ஏறத்தாழ பத்தாண்டுகளில் அந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது. சுஜாதாவை நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.தமிழ் நாட்டில் இப்படி முன்னரே இதைத் தெரிவித்த விஞ்ஞான பேராசிரியர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் எழுத்தாளர்களில் யாராவது இருப்பார்களா என்று தெரியவில்லை. அவரால் முடிந்த விஞ்ஞான சேவையை அவர் செய்தார் என்பது இதனால் விளங்கும்.
மனிதனுக்கும் ஆமைக்கும் குரங்குக்கும் எறுமைக்கும் எல்லாவற்றுக்கும் இந்த ஜீன்கள் அடிப்படை. அந்த ஜீன் ஏணிகள் மனிதனுக்கு 23 ஜோடி குரோமசோம்களாக இருக்கின்றன. சிம்பன்ஜி குரங்குகளுக்கு 24 ஜோடி. எந்தெந்த உயிரினத்துக்கு எத்தனை ஜோடி குரோமசோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. சொன்னால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான ஒற்றுமைகள் போக .01 சதவீத வேற்றுமைதான் ஒருத்தரை அரிஸ்டாடிலாகவும் இன்னொருத்தரை அம்பானியாகவும் வேறுபடுத்துகிறது.
சில நோய்களை முளையிலேயே கிள்ளி எறியலாம் என்கிறது இந்த சிந்தடிக் பயோ டெக்னாலஜி. நோயில்லாத மனிதனை உருவாக்குவது சாத்தியம். அதே சமயத்தில் புதிதாக நோய்களை உருவாக்கி அதற்கு மருந்து செய்து லாபம் சம்பாதிப்பதும் நடக்க வாய்ப்பிருக்கிறது. லாபத்துக்காக- பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்று மனிதன் பலமுறை நிரூபித்திருக்கிறான். இவ்வளவு நோய்களை அழிக்கத் தெரிந்தவன் பணம் எனும் கிருமியை அழிக்க மாட்டானா என்ன?

துன்பம் நேர்கையில்...



" சுவாமி ஜி,
மொத்தம் 25 சிம் கார்டுகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சிம் கார்டைப் பயன்படுத்தவும். மேலும் ஒரு சிம்கார்டை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். தொடர்ந்து ஒரே ஊரில் இருக்க வேண்டாம். குறைந்த பட்சம் 50 கிலோ மீட்டர் நகர்ந்துவிடவும்.. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலத்து போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்கவும்.''
அந்தத் துண்டுச் சீட்டில் இவ்வளவுதான் எழுதியிருந்தது. அதற்குக் கீழே சிவப்பு மையில் "யாரையும் நம்ப வேண்டாம்.' என்று அடிக் குறிப்பு. அதை மட்டும் சிவப்பு மையில் எழுதியிருந்த விதம் அச்சுறுத்தும்படி இருந்தது. அந்தக் குறிப்புக் காகிதத்தைக் கிழித்து குப்பையில் எறிந்தேன்.
"எழுத மறந்து போய் கடைசி நிமிடத்தில் கையில் கிடைத்த வேறு பேனாவில் எழுதியிருக்கலாம். அது சிவப்பு பேனாவாக அமைந்து போனது எதேச்சையானது.' மனதைத் தேற்றிக் கொள்வதற்காக அப்படி நினைத்தாலும் யாரையும் நம்ப வேண்டாம் என்பது முக்கியமான ஒன்றுதான். நிதானமாக மடித்து வைத்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பெயர் தெரியாத மலையொன்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. காலை வெயில் எங்கேயோ பதுங்கியிருந்தது. விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் தயக்கமான சூழல்.
உலகம் முழுதும் 142 மடங்கள் ஸ்தாபித்து 15 ஆயிரம் பிரசங்கங்களுக்கு மேல் செய்து உலகத்தை ஏழு முறை பிரயாணித்து, கடவுளின் அவதாரமாகப் போற்றப்பட்டு லட்சக்கணக்கானோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி... இன்று "யாரையும் நம்ப வேண்டாம்' நிலைக்கு ஆளாகி... வார்த்தைகள் கொடூரமானவை. சுலபத்தில் காயப்படுத்தக் கூடியவை.
"அச்சம் அறிவின் சத்ரு. வானக்கூரையின் கீழே யாரும் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை." திருப்பூர் கூட்டத்தில் போனவாரம் பேசியது நினைவு வந்தது. இப்போது அச்சம் என்பது ஒரு வார்த்தையாக இல்லாமல் ஒரு உருவமாகவும் உணர்வாகவும் கண் முன்னாலும் மனத்திலும் திரண்டு நின்றபடி கிலி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அச்சப்பட வேண்டியதில்லை என்று சொல்வது சுலபமாக இருந்தது.
எனக்கு உண்மையிலேயே மக்களின் அச்சம் வேடிக்கையாக இருந்தது அப்போது. வீணாக மக்கள் அச்சத்திலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதாக நினைத்தேன். பிரசங்கத்தில் வலியுறுத்தினேன். இப்போது அச்சத்திலிருந்து வெளியே வருவது கடினமாக இருந்தது.
சொல்லுதல் யாருக்கும் எளிய}அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
எத்தனை சுலபமாகச் சொல்ல முடிந்தது? வார்த்தையில் ஏதும் இல்லை என்று.
""வார்த்தை என்பது சில எழுத்துக்களின் சேர்க்கை. உங்களை ஒருவன் முட்டாள் என்று திட்டினால் உடனே நீங்கள் கோபப்படுகிறீர்கள், கவலைப்படுகிறீர்கள். அந்த நான்கு எழுத்துக்களின் சேர்க்கை உங்களை அந்த நிலைக்கு ஆளாக்குகிறது. வெறுமனே மு என்றோ, ள் என்றோ, ட் என்றோ, டா என்றோ சொல்லும்போது உங்களுக்குக் கோபம் ஏற்படுவதில்லை. முட் என்றாலுமோ, டாள் என்றாலுமோ கோபம் வருவதில்லை. டாள்முட் என்றாலும் அதற்கு ஒரு பொருளும் கொள்ள முடிவதில்லை. அந்த நான்கு எழுத்துக்களை அந்த வரிசையில் அடுக்கினால் மட்டுமே கோபம் ஏற்படுகிறது.
இதில் உள்ள வினோதத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வரிசை மட்டும் உங்களை ஏன் பாதிக்க வேண்டும். "ஒண்ணு இண்ட்டு ரெண்டு இண்ட்டு மூணு இண்ட்டு நாலு." இதுதான் அந்த நான்கு எழுத்துக்களைக் கொண்டு உருவாக்க முடிகிற அதிகபட்ச வாய்ப்பு. 32 வகையாக எழுதலாம். அதில் ஒன்றைத் தவிர மீதி 31 வகை உங்களைக் கோபம் ஏற்படுத்தாதவை. அதே எழுத்துக்களின் மற்ற சேர்க்கைகள் ஏற்படுத்தாத வலியை இந்த காம்பினேஷன் மட்டும் ஏற்படுத்துவதற்கு அனுமதிப்பது நம்முடைய பலவீனம் மட்டுமே. ஒவ்வொரு ஓசைக்கும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துகிறோம். அவ்வளவுதான். வெரிகுட் என்றால் சந்தோஷப்படுகிறோம். மடையன் என்றால் கோபப்படுகிறோம். வார்த்தைகளிலிருந்து விடுபடுங்கள்.
அந்த நிலையை நீங்கள் எய்த வேண்டும். அதற்காகத்தான் இந்த "முக்தி ஜீவ மோக்ஷா' பயிற்சி முகாமை நடத்துகிறோம். எந்த எழுத்தும், எந்த செயலும் உங்களைப் பாதிக்காது. எதுவும் உங்களைத் தீண்டாது. சலனமற்ற மனம் உங்களுக்கு வாய்க்கும்.''
நேற்றுதான் பேசியது போல இருந்தது.
டி.வி.யில் காட்டுகிறார்கள். "சத்தியானந்தாவைச் செருப்பால் அடிக்க வேண்டும். நேரில் கிடைக்காததால் போட்டோவை அடிக்கிறோம்.' மக்கள் ஆசிரம வாசலில் செருப்பாலும் உருட்டுக்கட்டையாலும் போஸ்டர்களை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் திட்டுவதும் அடிப்பதும் வலித்தது.
"அவர்களின் வார்த்தைகளுக்குப் பொருளில்லை; அவர்கள் விளாசும் உடல் எனக்கானதல்லை. குடுவையை உடைத்தாலும் அதற்குள் இருக்கும் காற்றும் ஆகாயமும் உடைந்து போவதில்லை...' நான் போதித்தவை என்னையே ஏளனமாகத் திரும்பிப் பார்க்கின்றன. புத்திக்கு எட்டியது உணர்வுகளுக்கு எட்டவில்லை. அல்லது உணர்வுகளுக்கு எட்டியது புத்திக்குப் புரியவில்யோ?
"புத்தியும் உணர்வும் உடலுக்கானது. குளிரென்று உணர்வதும் குழப்பமென்று உழல்வதும் உடம்புதான்.... உடம்போடு ஒட்டிப் பிறந்த புத்திதான். ஆன்மாவுக்கு சலனமில்லை. அதற்கு அனலும் ஒன்றுதான் புனலும் ஒன்றுதான்.' பக்தர்கள் உறைந்துபோய் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"உடல் சட்டை போல. ஆத்மா அடிக்கடி சட்டையை மாற்றிக் கொண்டிருக்கிறது. நாம் சட்டையைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ஆத்மா பற்றி யோசிப்பதில்லை' எத்தனை பேர் எத்தனைவிதமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நானும்தானே மாறாத புன்னகையோடும் கருணை வழியச் சொன்னேன்? கீதையின் கண்ணனோடு உருவகப்படுத்தி காலண்டர் போட்டார்களே?
என்னை அடிப்பதே என் சட்டையை அடிப்பதாக இருக்கும்போது என் போஸ்டரை அடிப்பது எதில் சேர்த்தி? என் சட்டையின் உருவத்தைத்தான் செருப்பால் அடிக்கிறார்கள்... சொல்லப்போனால் செருப்பால் என்பதுகூட பொருளற்றது. நானோ, செருப்போ, அடிப்பவரோ எல்லாமே ஒன்றுதான். பரமாத்மாவின் பல்வேறு வடிவங்கள். அடிப்பவனும், அடிவாங்குபவனும் அடிக்கும் பொருளும் எல்லாமே பரம்பொருள். நான் ஏன் கலங்க வேண்டும்?
என்னிடம் இருக்கும் சிம் கார்டை செல் போனுக்குள் பொருத்தினேன். "பரம்பொருளுக்குள் பரம் பொருளைப் பொருத்தினேன்.' யாரிடம் பேசுவதென்று தெரியவில்லை.
ஆசிரமத்தின் மேலாளர்தான் இப்போது முதுகில் குத்தியவர். தொலைக்காட்சியில் ஆசிரமத்தின் அடாவடி செயல்பாடுகள் என்று வீடியோவைப் போட்டு நாசப்படுத்தியவர். எனக்கு வலதுகரமாக இருந்து அத்தனை நிர்வாகத்த்தையும் பார்த்தவர். அவரே விலை போய்விட்டார். யாரை நம்புவது என்று முடிவெடுக்க முடியவில்லை.
பத்மாஷினிக்கு போன் போடலாமா? வேண்டாம். பெண்களிடம் பேசினால் விஷயம் விபரீதமாகிவிடும்.
"ஆணென்ன, பெண்ணென்ன? அல்லாது அலியுமென்ன? எல்லாமே அவன் சொரூபம்தான். உருவங்கள் தற்காலிகமானவை. உருவங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உணர்வுகளும் தற்காலிகமானவை. ஓர் ஆத்மா ஆண் உடம்பில் இருக்கும்போது, மீசை வைத்த ஆம்பளை என்று கர்வம் கொள்கிறது. பெண் உடம்பில் இருக்கும்போது கற்பில் சிறந்தவள் என்று நிரூபிக்க நினைக்கிறது. சட்டைக்குள் இருக்கும் ஆத்மாக்களை உணர்வுகள் என்றைக்கும் பாதிப்பதில்லை.'
மக்கள் ஆரவாரமாக கேட்டார்கள். பூரித்துக் கைதட்டினார்கள். என் பேச்சுகள் அடங்கிய சி.டி. பல லட்சம் விற்பனையானது. நான் எழுதிய புத்தகங்கள் பல லட்சம் விற்பனையானது. ஒரே நாளில் மூன்று லட்சம் பிரதிகள் விற்றதாக சாதனை சொன்னார்கள்.
இப்போது நடிகையைத் தழுவியது குற்றம். அகலிகைக்கு இந்திரனைத் தழுவும்போது, இந்திரனையே வீழ்த்திவிட்ட தன் அழகின் மீது கர்வம் இருந்தது. அப்படி ஒரு கர்வத்தைத்தான் அந்த நடிகை என்னைத் தழுவியபோது அடைந்தாள். உலக ஆன்மீக பைத்தியங்கள் எல்லாம் டி.வி.யில் பார்ப்பதற்கே பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறவனை சட்டையை உரிக்க வைத்துவிட்டேனே என்ற கர்வம். எனக்கும் பதில் கர்வம். அவளையும் டி.வி.யில் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது ஜனத்திரள்? ஒருவேளை அது ஆன்மீக பைத்தியத்தைவிட அதிக எண்ணிக்கை கொண்டதாக இருக்கும். அகலிகை கர்வத்துக்கு முனிவன் சாபமிட்டான். என்னுடைய கர்வத்துக்கு மக்கள் இடுகிறார்கள். ஆரவாரமாக கைதட்டியவர்கள், புத்தகம் வாங்கியவர்கள், கட்டுரைகளை பிரசுரித்த பத்திரிகைகள் எல்லாமே எழுதுகின்றன. பரமஹம்சர், ஜகத்தேவோ, சுவாமிஜி.. எல்லா பட்டங்களும் பதுங்கிக் கொண்டன.
செக்ஸ் சாமியார் தலைமறைவு.
இப்போது யார் எடுத்துச் சொல்வது? பிரம்மச்சரிய பயிற்சியின் ஒரு அங்கம்தான் அந்தச் சம்பவம். காந்தி ஜியும் இளம்பெண்களோடு படுத்திருந்து பரீட்சை செய்து பார்த்த பயிற்சிதான்.... இப்படி சமாதானம் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? எங்கும் நீக்கம் அற நிறைந்திருக்கிற உனக்கு அந்த டி.வி. ஒளிபரப்பை நிறுத்த வக்கில்லையா என்பார்களோ? எனது சக்தி சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. நான் சக்தியற்றவன். நான் சக்தியற்றவன் என்பதை மக்கள் மறப்பதற்கு கொஞ்ச காலமாகலாம். அப்போது மீண்டும் சக்திமானாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடுவேன்.
என் மீது நீங்கள் வைத்திருக்கும் பக்தியையும் சிரத்தையையும் சோதிக்கவே அப்படியான ஒளிபரப்பை நிகழ்த்தினேன் என்று அப்போது சொல்லிப் பார்க்கலாம். ஆன்மிகம் வேறு.. சித்துவேலைகள் வேறு. அந்த டி.வி. ஒளிபரப்பை நிறுத்த நினைத்திருந்தால் எனக்கு ஒரு நொடி போதும். இப்போதே சொல்லிப் பார்க்கலாம்.
கோர்ட் கேட்குமா? போலீஸ், அரசியல்வாதிகள், அறிஞர்கள்.. இத்தனை நாளாய் நம்பிக் கொண்டு பின்னால் வந்த பக்தர்கள், சீடர்கள்? யாரும் ஏற்கப் போவதில்லை. தத்துவங்கள் வேறாக... சட்டங்கள் வேறாக.. நம்பிக்கைகள் வேறாக இருக்கின்றன. பத்மாஷினி இப்போது என்னை நம்பிக் கொண்டிருக்கிறாளா, எதிரணியில் இருக்கிறாளா, அரசாங்கத்துக்குக் காட்டிக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறாளா? போன் செய்தால் அதை ரெக்கார்ட் செய்து போலீஸில் ஒப்படைப்பாளா? உதவுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறாளா?
செல்போன் அடித்தது.
பேசியது, திருவண்ணாமலையிலிருந்து ஒரு பக்தர்.
""நேபாளத்துக்குச் சென்றுவிட எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கிற இடத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஷிவ் கன்ச் என்றொரு இடம் இருக்கிறது. அங்கு சென்றுவிடுங்கள். அங்கு உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் மூவருக்கும் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ''
"நடந்தா?''
"இல்லை, கார் வரும். டிராவல் ஏஜென்ஸி கார். உங்கள் பெயரை அருணாச்சலமா? என்று கேட்பான். ஆமாம் என்று சொன்னால் போதும்.''
பூர்வாசிரமத்தில் ஒரு பெயர். சன்னியாசி ஆனதும் இன்னொன்று. இப்போது ஊருக்கு ஒரு பெயர். ""சரி''
"இந்த சிம் கார்டை இத்துடன் அகற்றிவிடுங்கள். அடுத்த கார்டை போட்டு வையுங்கள். அடுத்த போன் வரும். நீங்கள் யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம்.''
பேசியவர் யாரென்று கூட தெரியவில்லை. அசரீரி. குரல் மட்டும். பேச்சில் பக்தி இருந்ததாகவும் தெரியவில்லை. புத்திசாலித்தனமாக வேறு இடத்தில் சேர்க்க வேண்டிய பொறுப்பு மட்டும் இருந்தது. பேச்சில் சுவாமிஜி இல்லை, அறிமுகம் இல்லை, மரியாதைகூட இல்லை. அதற்கெல்லாம் நேரமில்லை என்று விட்டுவிட்டிருக்கலாம். யாருடைய நேரம் யாருக்கு இல்லாமல் போய்விட்டது? யாரோ எங்கிருந்தோ சொன்னபடி செய்ய வேண்டியிருந்தது. சொன்னபடி என்பதுகூட நாகரிகம் கருதித்தான். யாரோ இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
சட்டம், ஒழுக்கம், தத்துவம், தர்க்கம் எல்லாமும் சிதைந்துவிட்டன. நடைமுறை என்ற ஒன்றுதான் சாஸ்வதம்.
எல்லாம் சுமுகமாக இருக்கும்போது அவை ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்ட மாயத்தோற்றம் தெரிகிறது. அசாதாரண நிலைகளில் அவை சுலபமாகப் பிரிந்துவிடுகின்றன.
நிலநடுக்கம், போர், நம்பிக்கை மறைதல் போன்ற நிலைகுலைவான நேரங்கள் மனிதத் தன்மையை உப்புக் கல்லை மழை நீர் போல கரைத்துத் தள்ளிவிடுகின்றன. எஞ்சுவது மிருக குணம் மட்டும்தான். வறுமையும் வறட்சியும் நிலவும்போது யார் நாகரிகமாக ஹலோ சொல்லி கண் சிமிட்டி சிரிக்க முடியும்? ஒருவர் வாய்க்குப் போகும் உணவை இன்னொருவர் பிடுங்கித் தின்னும் நேரத்தில் தத்துவம் யாருக்கு வேண்டும்?
வெளியில் ஹார்ன் சத்தம் கேட்டது. "துமாரா நாம் அருணாச்சல்?''
என்னையும் அறியாமல் "அச்சா'' என்றேன்.
ஆளுக்கு ஒரு பெட்டி வீதம் மூவரும் எடுத்துக் கொண்டோம்.
எண்ணிறந்த ரூபமாய் கண்ண பரமாத்மா கோபியரோடு விளையாடி மகிழ்ந்தது பக்தியென்றால் நான் ஒரு பெண்ணோடு இணைந்திருந்தது மட்டும் எப்படி குற்றமாகும்? நான் ஒரே நேரத்தில் இந்தியாவிலும் நியூஜெர்ஸியிலும் காட்சி தந்ததாக எழுதினார்களே? நியூஜெர்ஸி ஆசரமத்தில் இருந்தபோது, ஆந்திராவில் ஒரு பெண்மணி கேன்சரால் அவதிப்பட்டதாகவும் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாஸ்பிடலில் திடீரென்று நான் தோன்று அவளைக் குணமாக்கிவிட்டதாகவும் ஆசரமத்தின் சஞ்சிகையில் போட்டிருந்தார்கள். சஞ்சிகையைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே நேரத்தில் நியூஜெர்ஸியில் அந்த நகர மேயரோடு உரையாடிக் கொண்டிருப்பதாக பக்கத்தில் ஒரு போட்டோ. சரி ஜனங்களுக்கு இந்த மாதிரி சித்து வேலைகளில் எல்லாம் தேவையாகத்தான் இருக்கிறது. அதாவது சித்துவேலை செய்வதாகப் பிரசாரம் செய்வது... எல்லாம் பொய். அவர்கள் சிலாகித்த நேரத்தில் நான் பாட்டுக்கு மலச்சிக்கலில் அவதியுற்றிருந்தேன். சளிபிடித்திருந்ததால் ஆவிபிடித்துக் கொண்டிருந்தேன். நியூஜெர்ஸியிலும் ஆந்திராவிலும் தோன்றினேனாம். ஜெராக்ஸ் காப்பியா எடுக்க முடியும் ஒருத்தனை? ஃபேக்ஸில் அனுப்பி வைக்க முடியுமா? ஹா.. ஹா. அபூர்வ ஆற்றல் என்றார்கள்.. பிள்ளை வரம் கேட்டு காலில் விழுந்த பெண்ணுக்கு ஆசிர்வதித்தேன். குழந்தை பிறக்கும் என்றேன். அவளோ மீண்டும் சுற்றி வந்து காலில் விழுந்தாள். மீண்டும் ஆசிர்வதித்தேன். காரில் ஏறப் போகும்போது மீண்டும் வந்து காலில் விழுந்தாள். மீண்டும் ஆசிர்வதித்தேன். அவளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று ஆசிர்வதிப்புக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததாக சிலாகித்தார்கள். நல்லவேளை அவள் நூறு முறை ஆசிர்வாதம் வாங்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இன்னொரு குந்தி ஆகியிருப்பாள். அவையத்து குந்தியிருப்பச் செயல்! ஹா.. ஹா.. ஹா!
"எதுக்குச் சிரிக்கிறீங்க சாமி?''
"உலகத்தை நினைச்சேன், சிரிச்சேன்'. மெüனமாக இருந்தேன். உடல்வேறு ஆத்மா வேறு. உடலின் இச்சைகளுக்கு ஆன்மா பொறுப்பாகுமா? ஆன்மாவின் தூண்டல் இல்லாமலேயே உடல் தன்னிச்சையாக "இச்சை' கொள்ளுவதுதான் சாத்தியமா?
கார், ஈரச் சாலையில் மெல்லிய சரசரப்புச் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. இருபக்கமும் அடர்த்தியான மரங்கள். வனம் தீவிர அமைதியாக இருந்தது.
"ஆப்ரிக்காவில் இருந்து பிரிந்த நிலத்துண்டு ஆசிய பிராந்தியத்தில் மோதித் தள்ளியதால்தான் இமயம் உருவானது. அமைதியான மலைக்குக் கீழே கொந்தளித்துக் கொண்டிருக்கும் பாறைக்குழம்பு. எந்த நேரத்திலும் இமயம் தரை மட்டமாகலாம். கடலாக இருந்த இடம் உலக்தின் உயரமான மலைச்சிகரமாக ஆகும்போது, மீண்டும் அது தரை மட்டமாவதுதானா பெரிய விஷயம்? என்ன ஒவ்வொரு நிகழ்வுக்கும் இடையே ஒரு லட்சம் வருஷம் இடைவெளி. மனிதனுக்கு ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மலைப்பாக இருக்கிறது. ஆன்மாவுக்கு... யுகங்களெல்லாம் ஒரு நொடியாம்' } கடந்த மாதம் இங்கிலாந்தில் பேசியபோது மக்கள் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"கார் கண்ணாடியை இறக்கிடட்டுமா?''
"வேணாம் சுவாமிஜி. யார் கண்ணுலயாவது பட்டா ஆபத்து. மூணு ஸ்டேட் போலீஸ் தேடுது. டி.வி.யில வேற தொடர்ந்து போட்டுக் காட்டிக்கிட்டே இருக்காங்க. யார் கண்ணுல பட்டாலும் ஆபத்து. நீங்ககூட காவிய கழட்டிட்டு பேண்ட், சர்ட் போட்டுக்கிட்டா நல்லது.''
தீர்மானமாக முறைத்தேன்.
"எப்படியாவது இந்தியாவை விட்டு தப்பிச்சுட்டா அப்புறம் மாத்திக்கலாம்னு சொல்ல வந்தேன்.''
"தப்பிக்கணுமா? யாரு?, யார் கிட்ட இருந்து?''
அனந்தானந்தாவுக்கு இருக்கிற சூழ்நிலைக்கு நான் இப்படி கேட்டது, விதண்டாவாதம்போல இருந்திருக்கலாம். கண்ணாடிவழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தார்.
ராட்சஷ விருட்சங்கள் நிழலால் சாலையை மூடியிருந்தன. மழைமேகம் வேறு. மழை வலுக்க ஆரம்பித்தது. அப்படியே காரைவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்றுவிடலாம் போல இருந்தது. ஒரு மின்னல் காருக்கு முன்னால் நெடுக்க வானத்தில் ஒளிர்ந்து மறைந்தது. சாலையில் ஒரு நீண்ட நாகம் நெளிந்தோடி மறைவதைக் கண்டேன்.
காரே சிறை போலத்தான் இருந்தது. ஒரு சரிவில் நீண்ட புல்வெளியும் அதன் முடிவில் அழகான குளமும் இருப்பதைப் பார்த்தேன். காரை நிறுத்தச் சொன்னேன்.
இயற்கை உபாதை தணிப்பதற்காக நிறுத்தச் சொல்வதாக அவதானித்து நிறுத்தினர். அங்கியைக் கழற்றிவிட்டு, வேட்டியுடன் வெளியே இறங்கி நின்றேன். மழை, பாவங்களைக் கரைக்க வந்தாற்போல பெய்தது. குளிப்பதும் மழையில் நனைவதும் ஒன்றா? இல்லவே இல்லை. மழை கங்கை. புனித நீர். ஆகாச கங்கா. அது மண்ணுக்குள் புகுந்து ஊறி, அடிபம்பில் வெளியேற்றி, பிளாஸ்டிக் பக்கெட்டில் பிடித்து வைத்து, சோப்பும் ஷாம்பூவும் போட்டு குளித்துவிட்டு வருவதும் கொட்டும் மழையில் பத்துநிமிஷம் கலந்து கரைவதும் எப்படி ஒன்றாக முடியும்? மழையின் சில துளிகள் பட்டதுமே உடல் நடுங்க ஆரம்பித்தது. மழை ஊசிகள். காரில் இருந்தவர்கள், சுவாமி உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தனர். எதிர்காலத்தில் இப்படியொரு அத்துவானக் காட்டில் மீண்டும் ஒரு தரம் இறங்கி நிற்க முடியுமா என்று திடீரென்று ஓர் எண்ணம் கவ்வியது. குளத்தை நோக்கி ஓடினேன். இத்தனைக் கோடி பண வரவு இல்லாமல் ஆசிரமம் சிறியதாக தஞ்சையில் ஒரு குடிசையில் இருந்த நினைவும் கூடவே சேர்ந்து கொண்டது. எத்தனை ஆனந்தமான கால கட்டம். காவிரி ஆறு ஓரத்தில் ஆசிரம குடிசை. இரண்டு மாமரங்கள், நான்கு கொய்யா மரங்கள் இவ்வளவுதான் மொத்த சொத்து. எப்போது பணம் சேர ஆரம்பித்தது?
சென்னையிலும் ராஞ்சியிலும் நெல்லூரிலும் கிளைகள் துவங்க பக்தர்கள் வந்தனர். கல்யாணம் ஆகவில்லையா, குழந்தை பிறக்கவில்லையா, வேலை கிடைக்கவில்லையா, நோய் தீரவில்லையா, பணம் தேவையா எல்லாவற்றுக்கும் நான்தான் தீர்வு.

மன அமைதியும் சில உணவு முறையும் சில உடற்பயிற்சியும் செய்யுங்கள் என்றேன். எல்லாவற்றுக்கும் பலன் இருந்தது. ஒன்றைப் பத்தாக பிரசாரம் செய்தார்கள். விளைந்த பலனும் என் அமானுஷ்ய சக்தியின் விளைவு என்று பிரசாரம் தேவைப்பட்டது. பிரசாரம் பணமாகியது. பணம் பிரசாரத்துக்கு செலவானது... மீண்டும் அது பெரும் பணமானது.. பணம்.. மேலும் பணம். கட்டுப்படுத்த முடியாத பணம். விரைவிலேயே இங்கிலாந்திலும், கனடாவிலும்... கோடி, கோடியாக நன்கொடைகள், பைத்தியம் போல பக்தர் கூட்டம். சாமியாராக இருந்தால் என்ன? சமுதாயத்தில் மரியாதை கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது? முதல் சறுக்கல் அங்குதான். பற்றிக் கொண்டு எழுந்து நிற்க முடியாத சறுக்கல்.
அழுது கொண்டே குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். பளிங்கு போல இருந்தது நீர். கூழாங்கற்கள் தெரிந்தன. நீரில் இறங்கினேன். நீர் மேலும் சில்லென்று இருந்தது. நடுக்கம் கூடியது. பற்கள் அடித்துக் கொண்டன. சிறிது தூரம் நீந்தி மீண்டும் கரைக்கு வந்தேன். அதற்குள் அனந்தானந்தாவும் மற்ற இருவரும் ஓடிவந்து ""என்ன இது விளையாட்டு? இரவுக்குள் நேபாளம் போய்விட வேண்டும் இல்லையென்றால் ஆபத்து'' என்று அச்சுறுத்தினர்.
ஒருவர் குடையை விரித்து தலைதுவட்ட துவாலை கொடுத்தார். மற்றவர் புதிய ஆடையைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
""வாஸôம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருங்ணாதி நரோபராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி.'' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.
ஸôங்கிய யோகத்தில் கண்ணன் எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறான்? பழைய ஆடைகளைக் களைந்துவிட்டு புதிய ஆடையை அணிவது போன்று ஆத்மா பழைய உடலை விட்டு புதிய உடலுக்கு மாறுகிறது.
பைத்தியம் முற்றிவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கக் கூடும். கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் காரில் ஏற்றினர். புதிய ஆடைக்குப் போய்விடுவது கீதையில் சொன்னதுபோல நிஜமா? அப்படியானல் இப்போதே புதிய உடைக்கு நம் ஆன்மாவை மாற்றிவிட்டால்?ஐயோ... ஒருவேளை மாறாமல் போய்விட்டால்?
மாறாமலேயே போய்விட்டால்தான் என்ன என்றும் இருந்தது. எந்த ஆடையும் வேண்டியதில்லை. 120 ஆண்டுகள் வாழ்ந்து மறைவேன் என்று ஆஸ்திரேலிய தமிழர்கள் மத்தியில் பேசியது நினைவு வந்தது. இன்னும் 90 ஆண்டுகள் வாழ்ந்து அதை நிரூபித்தாக வேண்டும். அடக் கொடுமையே இன்னும் 90 ஆண்டுகளா? அப்படியானால் எத்தனை நாள்கள்... 90ஐ 365 ஆல் பெருக்கி... செல்போனில்தான் கால்குலேட்டர் இருக்கிறதே... கணக்குப் போட ஆரம்பித்தேன்.
புதிய சிம்கார்டு போட்டு ஒரு போனும் வரவில்லை.
நேபாளம் வழியாக எந்த நாட்டுக்குப் போக வேண்டியிருக்கும் என்று தெரியவில்லை. ஒரு திருப்பத்தில் டீக்கடை ஒன்று இருந்தது. "நடுக்கமாக இருக்கிறது டீ சாப்பிட வேண்டும்' என்றேன்.
அனந்தானந்தா என் மீது மிச்சமிருந்த கடைசி மரியாதையை பிரயோகித்துக் காரை நிறுத்த சம்மதித்தார்.
காரிலேயே இருக்குமாறு கூறிவிட்டு கண்ணாடி டம்ளரில் டீ வாங்கிக் கொண்டு வந்தார். தேவாமிர்தமாக இருந்தது.
செல்போன் ஒலித்தது.
மூவருக்கும் பாஸ்போர்ட் தயாராகிவிட்டதாகவும் நார்வேயில் ஒரு வாரம் தங்கிவிட்டால் பிறகு கனடா போய்விடலாம் என்றும் சொன்னார்கள். பூமியைவிட்டு வேறெங்கும் போய்விட முடியாதல்லவா? பூமியின் ஒழுக்க விதிகள் ஏறத்தாழ எல்லா நாட்டிலும் ஒன்றுதானே?
அடுத்த சிம்கார்டு மாற்றப்பட்டது. யாரும் பேசிக் கொள்ளவில்லை. டிரைவர் மட்டும் ஏதோ இந்தி பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"போனில் பேசியது யாரென்று தெரியவில்லையே'' என்றேன்.
"நார்வே போய் சேருகிற வரை இப்படியான குரல்களைத்தான் நம்ப வேண்டியிருக்கும். வேறு வழியில்லை'' அனந்தானந்தா விரக்தியோடு சிரித்தார்.
நாங்கள் நினைத்திருந்ததைவிட பெரிய வீடாக இருந்தது அது. காம்பவுண்டு சுவரிலிருந்து நன்கு உள்வாங்கிய வீடு. தரை, சுவர் பகுதிகள் மரச்சட்டங்களால் உருவாக்கப்பட்டு குளிர் பெருமளவு கட்டுப்பட்டிருந்தது. வீட்டில் இருந்தவர் வீட்டுப் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருப்பவர்.ஏற்கெனவே போதுமான அளவுக்கு அவருக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும். கார் வருவதைப் பார்த்ததும் வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டதோடு, பெட்டிகளையும் உள்ளே கொண்டு செல்வதற்கும் உதவினார்.
"ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் உணவு தயாரிக்கிறேன்'' என்பதைத்தான் அவர் ஹிந்தியில் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. காரை ஓட்டி வந்தவர் நெற்றி வரைக்கும் கையை உயர்த்தி மரியாதை செலுத்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
இங்கிருந்து வேறு காரில் பயணிக்க வேண்டியிருக்கும்.
புதிய ஆட்கள், புதிய மொழி, புதிய இடம், புதிய உணவு... நாங்கள் மூவரும் முடிவெடுக்க முடியாதென்று முடிவாகத் தெரிந்தது. எங்கிருந்தோ, யாரோ ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்மைகள்.
ஜன்னல் வழியாக பார்த்தபோது வலது பக்கத்தில் திடீரென்று தோன்றி மற்றொரு வளைவில் மறைந்து கொண்ட கருப்புத் தார்சாலையின் துண்டு மட்டும் தெரிந்தது. அது நாங்கள் வந்த சாலையா, போக வேண்டிய சாலையா என்று தெரியவில்லை. ரம்மியமாக இருந்தது.
குறை காலத்தையும் இங்கேயே கழித்துவிட்டால்கூட போதும் என்று இருந்தது. அந்தத் துண்டுச் சாலையில் இரண்டு ஜீப்புகள் சர்ரென்று விரைந்ததைக் கவனித்தேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தால் அது போலீஸ் ஜீப். வனச் சரக ஜீப்பாகவும் இருக்கலாம். வீண் அச்சம். வீண் அச்சம் என்றாலும் அதுதான் வேகமாக பரவியது. உடலும் ஆத்மாவும் ஒன்றேயாகி தவித்தன. மாயத்தோற்றம். கயிறுதான் பாம்பாகத் தோற்றம் காட்டுகிறதோ?
தலைமறைவாகி ஓட ஆரம்பித்ததில் இருந்து யாரை நம்புவதென்றும் குழப்பம் மிகுந்து வருகிறது. கடவுளை நம்பியிருக்கலாம் என்று திடீரென்று ஒரு எண்ணம் மனதின் குறுக்கே வெட்டிச் சென்றது.

குற்றமே தண்டனையாக...

உலக இலக்கியங்களில் 150 ஆண்டுகளுக்குப் பின்னும் மனதின் தீர்க்க முடியாத வலிகளைச் சொல்லும் காவியங்களாக இருப்பவை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள். குற்றமும் தண்டனையும், சூதாடி, இடியட், வெண்ணிற இரவுகள், மரணவீட்டின் குறிப்புகள்.. என தனிமையும் ஏக்கமும் மனச்சிக்கலும் உள்ளடக்கிய கதைகள் அவருடைய சிறம்பம்சங்களாக இருக்கின்றன. மனப் போராட்டங்கள் தனியே ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தானாகத் தோன்றுபவை இல்லை. அவற்றுக்குப் புறக்காரணிகள் எப்படியெல்லாம் தூண்டல்களாக இருக்கின்றன என்பதும் அவருடைய எழுத்தின் சிறப்பம்சத்தின் உச்சமாக இருக்கின்றன.
அவருடைய காலம், 150 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவருடைய எழுத்தோ மொழி, இனம், நாடு, பண்பாடு என பல வகையிலும் அது நம் தமிழுக்கு 10 ஆயிரம் மைல்தூரம் விலகியிருக்கிறது. நம்மைப் போலவே உலகின் பல நாடுகளுக்கும் ருஷ்யாவுக்குமான ஆரக்கால்கள் ஆயிரமாயிரம் மைல்தூரம்தான். ஆனாலும் அவை மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அவருடைய வெண்ணிற இரவுகள் குறுநாவலையும் இன்னும் சில சிறுகதைகளையும் சோவியத் யூனியன் ஒன்றுபட்டிருந்த நேரத்தில் ருஷ்யாவில் செயல்பட்ட ராதுகா பதிப்பகம் தமிழில் வெளியிட்டது. ஆனால் அவருடைய பல இலக்கியப் பொக்கிஷங்களை சோவியத் நமக்கு வழங்கும் வரை அங்கு சோஷலிஷம் தாக்குப் பிடிக்கமுடியாமல் போனது தமிழ் வாசகர்களுக்குப் பேரிழப்புதான்.
ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட அவர் எழுதிய நாவல் தமிழில் "குற்றமும் தண்டனையும்' என்ற பெயரில் மிகுந்த தாகத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த பெரும் சாதனைகளுக்குப் பின்னால் துரைப்பாண்டியன் என்ற பதிப்பாளரும் எம்.ஏ. சுசீலா என்ற பேராசிரியரும் மட்டுமே இருக்கிறார்கள். நூறாண்டு பழமை கொண்ட இந்த நாவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. சுமார் 560 பக்கங்களில் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.
பியோதர் தஸ்தயேவ்ஸ்கியை நாம் ஏன் பாராட்டுகிறோம்? அவருடைய உயிர்ப்புள்ள நடைக்காக. சிக்கலான அக சிந்தனை ஓட்டத்தை எழுத்துகளாக வடிப்பது சவால்மிக்க வேலை. எழுத்தை ஆளுகிறவர்கள் மட்டுமே அதில் வெற்றி பெறுகிறார்கள். மொழி பெயர்ப்பிலும் அது சாத்தியமாகும்போதுதான் முதல்நூலின் ஆசிரியனும் மொழி பெயர்ப்பாளனும் வெற்றியை பகிர்ந்து கொள்ள முடியும். எம்.ஏ.சுசீலாவுக்கு மொழிபெயர்ப்பு நூலின் வெற்றியில் நிச்சயம் பெரும் பங்கு உண்டு.

ரஸ்கோல்னிகோவ் நல்லவன். இரக்க குணம் நிறைந்தவன். அவன் இரண்டு கொலைகளை அடுத்தடுத்து செய்ய நேர்கிறது. அதிலும் இரண்டாவது கொலை அவசியமற்றது; ஒரு நியாயமும் இல்லாத கொலை. அதன் பிறகு அவன் மனநிலை எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பது நாவல் முழுக்க விவரிக்கப்படுகிறது. கொலை செய்வதற்கு முன்பே அவன் காய்ச்சல் கண்டவனாக இருக்கிறான். ஏறத்தாழ நாவல் முடியும் வரை அந்தக் காய்ச்சல் குறையவே இல்லை. அவன் குளித்தானா, சாப்பிட்டானா, உறங்கினானா? போன்ற பரிதவிப்புகளோடு நாவலில் வரும் அவனுடைய சகோதரி துனியா, தாய் பல்கேரியா, நண்பன் ரஸýமிகின், காதலி சோனியா போலவே நாமும் தவிக்கிறோம்.
ரஸ்கோல்னிகோவின் சகோதரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் சகோதரி வேலை பார்த்த இடத்தில் அவளுடைய எஜமானன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அன்னை பல்கேரியா தெரிவிக்கிறாள். தங்கைக்குப் பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் அல்ல. செல்வத்தின் திமிர் இருக்கிறது அவனிடம். போதாததற்கு ரஸ்கோல்னிகோவின் காதலி சோனியாவை விருந்து நடக்கும் இடத்தில் திருட்டுப்பட்டம் கட்டி அசிங்கப்படுத்துகிறான். இதுபோன்ற காரணங்களால் தன் நண்பன் ரஸýமிகினுக்குத் தங்கையை மணமுடிப்பது சரியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறான்... அல்லது ஏற்கெனவே எடுத்த முடிவில் தீர்மானமாகிறான்.
இதற்கிடையில் இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யாரென்று காவல்துறை விசாரணையில் இறங்குகிறது. ரஸ்கோல்னிகோவும் அப்படி விசாரிக்கப்படுபவர்களில் ஒருவனாகிறான். அவன் பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை குற்றம் என்றால் என்ன என்பது பற்றி தீவிரமாக அலசுகிறது. அதையே ஆதாரமாக்கி விசாரணை முடுக்கி விடப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால் கொலையும்கூட குற்றமே இல்லை என்றெல்லாம் அந்த விசாரணையின்போது ரஸ்கோல்னிகோவ் வாதிடுகிறான். இதே சமயத்தில் இன்னொருவனையும் விசாரிக்கிறார்கள். விசாரணை முடிவுகளின்படி அவனே குற்றவாளி என்று முடிவு செய்யப்படும் நிலையில் ரஸ்கோல்னிகோவ் தான்தான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொள்ள விழைகிறான். காதலி சோனியாவிடமும் தன் முடிவைப் பற்றி சொல்கிறான்.
சோனியா பரிதாபத்துக்குரியவள். குடிகார தந்தையினால் நெருக்கடியில் தவிக்கும் குடும்பத்தைத் தாங்குவதற்காக மஞ்சள் அட்டை வாங்கியவள். மஞ்சள் அட்டை என்பது விபசாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை. தந்தையின் இரண்டாம் தாரத்தின் குழந்தைகளை கரையேற்றுவதற்காக அவள் அந்த முடிவை எடுக்கிறாள்.
ரஸ்கோல்னிகோவும் சோனியாவும் இணைவது நிராதரவான இரண்டு ஆத்மாக்களின் சங்கமமாக இருக்கிறது.
சோனியாவின் தியாகத்தை உணர்ந்து கையறு நிலையில் போராடும் காதரீனா நாவலின் முக்கிய பாத்திரம். மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி, கணவனையும் விபத்தில் பறிகொடுத்துவிட்டு அடுத்த வேலை உணவுக்கே போராடும் அபலை பாத்திரம்.
துனியாவிடம் தவறாக நடக்க முற்படும் எஜமானன், தன் மனைவியின் சாவுக்கும் காரணமாக இருந்து, திருந்தாத மனநிலையில் சுற்றியலைந்து தனிமைத் தீவில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறக்கிறான்.
குற்றத்தை ஒப்புக் கொண்டு சைபீரியா சிறைக்குச் செல்லும் ரஸ்கோல்னிகோவுடன் சோனியாவும் செல்கிறாள். ஏழாண்டு சிறை தண்டனை. அதன் பிறகு அவர்கள் புதிய வாழ்வைத் தொடங்குகிறார்கள் என்பதாக கதை முடிகிறது.
ஒருவன் குற்றம் செய்வதே அவனுக்கு அவனே கொடுத்துகொள்ளும் தண்டனைதான் என்பதே நாவல் சொல்லும் கருத்து. குற்றம் இழைத்த பிறகு ரஷ்கோல்னிகோவ் அடையும் மனக்குழப்பங்களைவிட பெரிய தண்டனை உலகில் இருந்துவிடுமா என்று தெரியவில்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் உருவாக்கிச் செப்பனிட்டு வைத்திருக்கும் மனம் ஒரு மகத்தான நீதிபதியாக உட்கார்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. எத்தகைய குற்றவாளிக்கும் மனம் விழித்துக் கொள்ளும் தருணம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதையே தஸ்தயேவ்ஸ்கி இந்த நாவலில் வலிமையாக சொல்லியிருக்கிறார்.
நல்லவன் ஒருவன் கொலை செய்யும் மன நிலைக்குத் தள்ளப்படுவதும் தான் செய்த குற்றத்தை அவன் நியாயப்படுத்துவதும் குற்றத்தை மறைப்பதும் இறுதியில் ஒப்புதல் வாக்கு மூலம் தருவதும் கதையின் அடிநாதம்.
அநியாய வட்டி வாங்கும் சீமாட்டியை அவன் கொலை செய்கிறான். அந்த நேரத்தில் அதைப் பார்த்துவிடும் அவளுடைய சகோதரியும் ரஸ்கோல்னிகோவின் ஆயுதத்துக்குப் பலியாகிறாள். இந்த இரண்டு கொலைகளும் அவனுக்கு அவனே கொடுத்துக் கொண்ட தண்டனைகளாக தெரிகின்றன. தன் ஆன்மாவை தானே பலியிடுவதாக நினைக்கிறான். சமூகத்தின் அவலம், வறுமை எல்லாவற்றுக்கும் இந்தச் சமூகத்தில் இருப்பதன் காரணமாக தானும் உடந்தையாக இருப்பதாக கலங்குகிறான்.
இவ்வளவு சிக்கல்கள் கொண்ட 560 பக்க நாவலைத்தான் எம்.ஏ. சுசீலா நமக்குத் தமிழில் தந்திருக்கிறார்.
நாவலில் மிகவும் கடினமான விவாதங்கள் உள்ள இடத்தில் எல்லாம் சுசீலாவின் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
சோனியாவின் குடிகார தந்தையும் ரஸ்கோல்னிகோவும் உரையாடும் பகுதி முழுவதுமே என்னை மிகவும் கவர்ந்த பகுதி. குடும்பத்தைக் காப்பாற்ற வக்கில்லாத தந்தையின் பேச்சு. ஆனால் அவனுடைய கையறுநிலையை மிகப் பிரமாதமாக விவரிக்கும் பகுதி அது. காப்பாற்ற முடியாத தம் குடும்பத்தைப் பற்றிய அவனுடைய கவலைகள், அவர்கள் மீது அவன் வைத்திருக்கும் பாசம், இரண்டாவது மனைவி மீது அவன் காட்டும் மரியாதை, தன் முதல் தாரத்தின் குழந்தை விபசாரத்தில் ஈடுபட்டு குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்கு கலங்குவது என்று அவன் மீது கோபம் ஏற்படுவதற்கு பதில் பரிதாபம் ஏற்படும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஒரு கேடுகெட்ட சமூக அமைப்பில் கேடுகெட்ட மனிதர்கள் மட்டுமே சுகமாக வாழ முடிகிறது என்கிற நிலை விளங்குகிறது.
காவல்துறையில் ரஸ்கோல்னிகோவை விசாரிக்கும் இடமும் தத்துவார்த்தமானது.
சமூகத்தின் கண்ணோட்டமும் சட்டத்தின் கண்ணோட்டமும் எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் அற்புதமான விவாத மேடை அது.
சகோதரியை மணக்க இருந்தவன் பணத் திமிரில் சொல்கிறான்:
சாக்கடையை அள்ளுவதும்கூட ஒரு கெüரவமான வேலைதான் அதில் என்ன இருக்கிறது என்கிறான்.
ரஸ்கோல்னிகோவ் சொல்கிறான்..""கெüரவமானது என்ற வார்த்தைக்கு அர்த்தம்தான் என்ன? மனிதர்களின் செயல்பாடுகளை இப்படிப்பட்ட சொற்களால் வரையறுப்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் "கெüரவமான', "சிறப்பான' இப்படியெல்லாம் சொல்வது எல்லாமே அபத்தமானவைதான். அவை எல்லாமே அபத்தமானவைதான். எல்லாமே வழக்கொழிந்து போய்விட்ட தப்பான எண்ணங்கள். இவற்றை நான் நிராகரிக்கவே விரும்புகிறேன். எதுவெல்லாம் மனித குலத்துக்குப் பயன்படுகிறதோ அது எல்லாமே கெüரவமானது. எனக்குத் தெரிந்திருக்கிற ஒரே வார்த்தை "பயன்பாடு' என்பது மட்டும்தான்.''
சுசீலாவின் மொழி பெயர்ப்புக்கு ஏதாவது திருத்தம் சொல்ல வேண்டுமானால் இந்த ஒன்றைச் சொல்லலாம். "ஜுரவேகத்தில்' என்ற வார்த்தையை அவர் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவை "ஜுரத்தில்' என்ற அர்த்தப் பிரயோகத்திலேயே வருகின்றன. பொதுவாக ஜுரவேகம் என்பது வேகத்தைக் குறிப்பதற்கான வார்த்தைதான். அவனால் ஜுரவேகத்தினால் கண்ணைக்கூட திறக்க முடியவில்லை என்றோ, ஜுரவேகத்தில் தடுமாறினான் என்றோ வருகின்றன.
ருஷ்ய இலக்கியம் பெரும்பாலும் மொழி பெயர்ப்புகள் மூலமாகவே இந்தியாவை அடைந்தது; தமிழரும் அவற்றை மொழி பெயர்ப்பின் வாயிலாகத்தான் படித்தனர். ரா.கிருஷ்ணையா, நா.தர்மராசன், பூ. சோமசுந்தரம், ரகுநாதன், அ.கிருஷ்ணமூர்த்தி போன்ற பல சிறந்த மொழி பெயர்ப்பாளர்களால் ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள். அந்த வரிசையில் எம்.ஏ. சுசீலாவுக்கு ஓர் இடம் நிச்சயம் உண்டு.

குற்றமும் தண்டனையும் ரஷ்யாவில் திரைப்படமாக வெளியானது. அதிலிருந்து முக்கியமான காட்சிகளை வெளியிட்டிருப்பது திரைசித்திரமாக பார்த்த திருப்தியை தருகிறது. அடுத்ததாக அவர் அவர் தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலை மொழி பெயர்த்து வருகிறார். அசடன் என்ற பெயரில் வெளிவர இருக்கும் அந்த நாவலை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். சுமார் ஆயிரத்துச் சொச்சம் பக்கம் வரும் என்று அவர் சொன்னார். மொழி பெயர்க்கும் அந்தக் கரங்களுக்கு என் கோடி நன்றிகளை இப்போதே தெரிவிக்கிறேன்.



குற்றமும் தண்டனையும்
எம்.. சுசீலா

பாரதி புக் ஹவுஸ்,
டி- 28 மாநகராட்சி பேருந்து நிலையம்,
மதுரை- 625001. போன்: 97893 36277

திங்கள், நவம்பர் 01, 2010

அமில தேவதைகள் அத்தியாயம்-4


அறிவியல் குறுந்தொடர்

சந்திரசேகரின் கையில் உள்ள துப்பாக்கியை ஒரு குபீர் பாய்ச்சலில் தட்டிவிட முடியும் என்று நினைத்தார் கருப்பசாமி. அப்படி எதுவும் முயற்சி பண்ண முடியாதபடி அவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு முரட்டு மருத்துவர்கள் நின்று கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது.

இவரையும் யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான் என்ற வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்? ஆஷா போலவா?

பின்பக்கம் இருந்த இருவரும் ஆளுக்கொரு கையைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிறுத்தினர். கருப்பசாமி பலியாடு போல அவர்களுடன் நடந்தார்.

சந்திரசேகர் ஒருவித அலட்சியப் பெருமிதத்தோடு துப்பாக்கியை மேஜை அறைக்குள் போட்டுவிட்டுப் புன்னகைத்தார்.

அதே நேரம் அறைக்கதவை உடைத்துக் கொண்டு பாயாத குறையாக உள்ளே வந்தார் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி. கையில் துப்பாக்கி.

"ஹாண்ட்ஸ் அப்''

மூவரும் அவ்வளவு எளிதில் கையைத் தூக்கவில்லை. என்றாலும் பயந்து போய் நின்றார்கள்.

மறுநாள் பதினாறு கொலைகளைத் தாம்தான் செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் டாக்டர் சந்திரசேகர் அவருடைய மருத்துவமனையில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் வைத்து விசாரித்ததற்குக் காரணமிருந்தது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவமனையின் ரகசிய கேந்திரத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார் சந்திரசேகர்.

கொஞ்சம் குழப்பமாக காவல் அதிகாரிகள் அவர் அழைத்துச் சென்ற இடத்துக்கு நடந்தனர். மருத்துவமனையின் பாதாள அறை அது.

முன்னேறிய இயற்பியல் கூடமும் மருத்துவக்கூடமும் கலந்த இடம். கம்ப்யூட்டர் நெட்வொர்க் போல சில இடமும் மைக்ராஸ்கோப் கண்ணாடி சீசாவில் திரவங்கள், அமிலங்கள் அடங்கிய இடமும் கலந்து தெரிந்தது.

சட்டென்று ஒரு இடத்தில் நின்று, "இதோ இருக்காங்க பாருங்க'' என்றார்.

அனைவரும் ஒருகணம் திடுக்கிட்டு அவர் சுட்டிய இடத்தில் பார்க்க... வரிசையாக நீண்ட, நீண்ட கண்ணாடி சீசாவில் தண்டுவடத்தோடு கூடிய மூளைகள் மிதந்து கொண்டிருந்தன.



"இது ஹாஸ்பிடல்ல நர்ஸா இருந்த மேரி..'' என்றார்.

எல்லோரும் அறையப்பட்டவர்கள் மாதிரி நின்று கொண்டிருந்தனர்.


"ஆனா, இவ இப்ப மேரியில்ல, மகாலட்சுமி.''

எல்லோரும் டாக்டர் சந்திரசேகரைக் குத்துமதிப்பாகத்தான் பார்த்தனர். மரைகழன்றுவிட்டதோ என்று உடனடியாக உறுதி செய்யமுடியாத தடுமாற்றத்துடனும் ஏதோ வினோதமாக நிகழ்ந்திருப்பதை எதிர்பார்த்தும் இருந்தனர்.

"இங்க பாருங்க..'' மகாலட்சுமி என்று விளிக்கப்பட்ட சீசாவோடு பிணைக்கப்பட்ட கம்ப்யூட்டரைத் தொடங்கி வைத்து "உன் பெயர் என்ன?'' என்றார்.

திரையில் சின்தûஸஸர் அலை அசைவுகள்.. கூடவே ""ஹலோ என் பெயர் மகாலட்சுமி'' என்ற குரல்.


"பார்த்தீங்களா? நான் சொன்னேன் இல்ல?'' என்று சிரித்தார் சந்திரசேகர்.

"ஓ.கே. டார்லிங்.''

திரையைவிட்டுத் திரும்பி, "புரியல இல்ல? இது மேரியோட ப்ரைன். ஆனா அவளோட ப்ரைன்ல இருந்த அத்தனை செய்தியையும் அழித்துவிட்டு அதில மகாலட்சுமியோட மூளையில் இருந்த தகவலை ஏத்தியிருக்கேன்... அதனால இப்ப இவ மகாலட்சுமியாயிட்டா..'' பெருமிதமாகச் சொன்னார் சந்திரசேகர்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தைரியப்படுத்திக் கொண்டனர்.


"பயந்துடாதீங்க... உங்களுக்கு சிம்பிளா விளக்கிட்றேன். அப்புறம் ஆச்சர்யப்பட்டுப் போயிடுவீங்க. மனிதனுக்கு மரணமே இல்லாம இருந்தா உங்களுக்கெல்லாம் சந்தோஷம்தானே? அதுக்காகத்தான் கொஞ்சம் பேரை மரணமடையச் செய்ய வேண்டியதா போச்சு.''

"இப்ப இதோ கருப்பசாமி இருக்காரு... இவரோட உடம்புல கருப்பசாமிங்கிறது யாரு? இவரோட கையா? காலா? இந்தத் தொப்பையா? இது எதுவுமில்ல. இவரோட மூளைதான் கருப்பசாமி. இன்னும் ஷார்ட்டா சொல்லணும்னா அவருடைய மூளையில் இருக்கிற ஞாபகங்கள்தான் கருப்பசாமி. இப்ப அந்த ஞாபகங்கள் அப்படியே இன்னொரு மூளைக்கு டீகோட் பண்ண முடிஞ்சா கருப்பசாமியும் அந்த மூளைக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுவார். இப்ப மேரிய மகாலட்சுமி ஆக்கினது அப்படித்தான்...''

....'' -சந்திரசேகரைத் தவிர எல்லோரும்.



"இந்த மூளையெல்லாம் மிதக்கறதுக்கு ஒரு திரவம் பயன்படுத்தியிருக்கேன் பாருங்க. அதுக்குப் பேரு, செரிபுரோ ஸ்பைனல் ஃளூயெட். இது நம்ம எல்லார் மூளையைச் சுத்தியும் இருக்கு. இந்த ஆராய்ச்சிக்காக இந்தத் திரவம் நிறைய தேவையா இருந்தது. அதுக்காகத்தான் இந்த காலேஜ் பொண்ணு மண்டையையெல்லாம் உடைக்க வேண்டியதா போச்சு.''

கொலைகள் பற்றி உலகத்தில் உள்ள சட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் அறிந்தே இராத ஞான சூன்யமாக இருந்தார் சந்திரசேகர். ஆராய்ச்சித் தேவைக்காகக் கொஞ்சம் மண்டைகளை உடைத்துவிட்டேன் என்கிறார்.

சந்திரசேகர் தொடர்ந்தார்..

"இதில பாருங்க. டெம்ரோல் லோப்தான் இந்த டீ கோடீங்க்ல ரொம்ப இம்பார்ட்டன்ட். ஆனா ப்ரைன்ல மத்த பகுதியவிட அதுதான் ரொம்ப காம்பிளிகேட்டட். இப்ப உங்ககிட்ட ஸ்ரீபெரும்புதூர்னு ஒரு வார்த்தைய சொல்றேன்னு வெச்சுக்கங்க. ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு ராஜீவ் காந்தி மர்டர், ஒத்தக்கண் சிவராசன், டைகர்ஸ், ராமானுஜர், நாமம் எல்லாம் வரிசையா விரியும். நம்ம ஞாபகத்தில ஸ்ரீபெரும்புதூர் என்பது வெறும் எழுத்துக்களால் மட்டும் ஆனது அல்ல. அது ஒரு கலவை. உங்களுக்கு அங்க ஒரு ஃப்ரண்ட் இருந்தா அவரும் அதில வந்துடுவார். அவரோட போன் நம்பர், அவரோட வழுக்கத்தலை... எல்லாமே ஸ்ரீபெரும்புதூரோட ஞாபகச் சிக்குல இருக்கு. மேரியோட ஞாபகப் பகுதிய எவ்வளவுதான் அழிச்சும்கூட சில நேரங்கள்ல மேரி இருந்துக்கிட்டுதான் இருந்தா. மேரிக்கு ஜான்சன் குடுத்த முத்தம் மகாலட்சுமியின் ஞாபக இடுக்குல சிக்கிடுச்சி. சில நேரங்கள்ல மகாலட்சுமி கர்த்தரேனு அழுவுறா. ஆனா இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம். தாழ்த்தப்பட்ட பெண்ணான மேரி, பிராமின் பொண்ணு மகாலட்சுமியா மாறியிருக்கிறதால் ஏற்பட்டிருக்கிற சிக்கல் பல நேரங்கள்ல இடிக்குது. என்ன செய்றது? ஆயிரம் ஆயிரம் வருஷமா ஊறிப்போன சங்கதிங்க இல்லையா? இன்டர்னல் காம்ப்ளெக்ஸ்.''

க்ரைம் டி.ஸி.க்கு ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாளவில்லை.

"நான்சென்ஸ்.. 16 பெண்களைக் கொன்னுட்டு நீங்க என்ன புதுவகை பூசணிக்காய் கண்டுபிடிச்ச மாதிரி வியாக்யானம் கொடுக்கறீங்க?'' என்றார்.

"என்ன... ஆஃப்ட்ரால் 16 யூஸ்லெஸ் பொண்ணுகளைக் கொன்னுட்டேன். ஆனா.. இந்த ஆராய்ச்சி சக்ஸஸ் ஆகிட்டா யாருக்குமே மரணமில்ல, புரிஞ்சுக்கங்க. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி இவங்கல்லாம் இறக்கறதுக்கு முந்தி இதைக் கண்டுபிடிச்சிருந்தா, இப்ப அவங்களும் நம்மகூட இருந்து உலகத் தமிழ் மாநாடு பத்தியெல்லாம் கருத்து சொல்லியிருப்பாங்க.''

"போதும் நிறுத்துங்க... இந்த ஹாஸ்பிடலுக்கு சீல் வெச்சுட்டு.. இவரை கோர்ட்டுக்குக் கொண்டு போங்க'' துணை கமிஷனர் கொதித்துப் போனார்.


"'நோ.. நோ அப்படியெல்லாம் பண்ணாதீங்க.. ஹாஸ்பிடலுக்கு சீல் வெச்சுட்டா அப்புறம் ஆக்ஸிஜன் கண்ட்ரோல் இல்லாம மகாலட்சுமி செத்துப் போயிடுவா... எஸ்.பி.எஸ். புளூயட் டயாலிசிஸ் பண்ணனும்..'' அவர் புலம்புவதை யாரும் சட்டை செய்யவில்லை.

சந்திரசேகரைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போயினர்.


கருப்பசாமி ஜீப்பில் ஏறுவதற்கு முன் ராமசாமியை அருகில் அழைத்தார்.

"அதுசரி.. நீங்க எப்படி நேத்து சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினீங்க?'' என்றார்.

"என்ன சார், எவ்வளவு நாளா உங்களுக்குக்கீழ வேல பாக்கறேன். உங்க தாட் என்னன்னு புரியாதா? நேத்து உங்க ஆபிஸுக்குப் போயிருந்தேன். மர்மமா செத்துப் போன 16 பேரோட தகவல் உங்க டேபிள் மேல இருந்தது. அதில ஒண்ணு மேரியோட தகவல். மேரி, மந்தாகினி ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணின நர்ஸுனு இருந்தது....

அப்புறம் சுரேஷ் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்குப் போனேன். அங்க நீங்க ஜீப்ல ஏறி உக்காந்து பாலவாக்கம் போப்பா'ன்னு நம்ம சென்ட்ரி காதுல விழுற மாதிரி சொல்லிட்டுப் போயிருக்கீங்க. உங்க ஐடியா புரிஞ்சு போச்சு. மந்தாகினிக்கு வந்ததும், நீங்க சந்தரசேகரைப் பார்க்கறதுக்காக பியூனை அடிச்சுத் தள்ளிட்டு உள்ள போனதா சொன்னாங்க. விஷயம் சீரியஸாயிடுச்சுன்னு நானும் துப்பாக்கியோட உள்ள பாஞ்சுட்டேன்'.' ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் ராமசாமி.

கருப்பசாமி சிரித்தார். "பேசாம ஆராய்ச்சிக்கு உன் மூளைய பயன்படுத்தியிருக்கலாம்.''



ஜீப் பறந்தது.

(முற்றும்)

திங்கள், அக்டோபர் 25, 2010

அமில தேவதைகள்


அத்தியாயம்-3


அறிவியல் குறுந்தொடர்

மகேஸ்வரி சொன்னதைத்தான் அங்கும் சொன்னார்கள். அபார்ஷன் பண்ணிக் கொள்வதற்காக வந்தாள். ஆனால் திடுதிப்பென்று சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டாள்.

கைனகாலஜி துறையின் தலைமை மருத்துவர் என அறிமுகப்படுத்தப்பட்ட கிழவி அனாவசியத்துக்கு எரிச்சலுற்றாள்.

"சரியான போதை கேஸ்.. இப்ப நாங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். ஹாஸ்பிடல் பேரைக் கெடுத்துட்டா.''

""போதை கேஸ்னு எப்படி சொல்றீங்க?''

"அவ ரூம்ல சிரிஞ் ஒண்ணு கிடந்தது.. அதையெல்லாம் பத்திரப்படுத்தி எடுத்து வெச்சு வர்றவங்களுக்கெல்லாம் நிரூபிச்சிக்கிட்டு இருக்க முடியுமா?''

"சரி கடைசியா ஆஷாவைப் பார்த்தது யாருன்னு சொல்லமுடியுமா?''

"நான்தான் பார்த்தேன்.. ரூம்ல போய் இருக்கச் சொன்னேன்.''

ஹாஸ்பிடலில் இருந்து இன்ஸ்பெக்டரை அனுப்புவதில்தான் அவளுடைய கவனம் முழுவதும் இருந்தது.தங்கள் மருத்துவமனை சந்தேகத்திற்கான இடமாக மாறுவது அவளை சிரமப்படுத்திக் கொண்டிருந்தது. துல்லியமும் சுத்தமுமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. தேவையே இல்லாமல் தன் மேஜையை டிஸ்யூ பேப்பர் மூலமாக நான்காவது முறையாக சுத்தப்படுத்தினாள்.

"சிரிஞ் இருந்ததை யார் பார்த்தது?''

"நீங்க வீணா இங்க டயம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க''

"பரவாயில்ல'' என்றார் பெருந்தன்மையாக.

"நான் சொன்னது, எங்க டயத்தை.''

கருப்பசாமி "இவ்வளவு நேரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தராததற்கு ரொம்ப நன்றி'' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே வந்தார்.

"ஆஷா இதுவரைக்கும் வந்திருக்கிறாள். இங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் காணாமல் போயிருக்கிறாள். சுமார் இருபது கி.மீட்டர் தூரம் வந்து ரகசியமாக அபார்ஷன் செய்து கொள்ள நினைத்தவள், திடீரென்று என்ன தீர்மானத்துக்கு வந்திருப்பாள்? வேறு யாராவது வந்து அழைத்துப் போயிருப்பார்களா? சுரேஷ்...? நிர்ப்பந்தித்திருப்பார்களா? சுரேஷைத் தவிர வேறுயாரையும் சந்தேகப்படுவதற்குத் தோன்றவில்லை.... அல்லது தெரியவில்லை.

சுரேஷ் தேறுகிற வரை காத்திருக்காமல் வீணாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோமா? ராமசாமி சந்தேகித்ததுதான் சரியா?

லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். கதவு திறக்கும் நேரத்தில் ஒரு வெள்ளுடை பணியாள் ட்ராலி ஒன்றைத் தள்ளிக் கொண்டு அவசரமாக நுழைந்தான்.

கதவு மூடிக் கொண்டது.

"சார், உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்... அந்த சிரிஞ்சை எடுத்தது நான்தான்'' மீண்டும் கதவு திறப்பதற்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது அவனிடம்.

கருப்பசாமிக்குத் திகைப்பாகவும் மிகை ஆர்வமாகவும் இருந்தது. பயமுறுத்தாமல் தகவல் பெற வேண்டும் என்ற நிதானத்தோடு, "அது இப்ப உன்கிட்ட இருக்கா?'' என்றார்.

"இல்ல சார்.. அப்பவே குப்பைக் கூடைல போட்டுட்டேன்.''

"...''

"ஆனா.. கொஞ்ச நேரத்திலேயே அதைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்தாரு..''

"அதைத் தேடிக்கிட்டா?''

"ஆர் அண்ட் டி'ல வேல பார்க்கிற டாக்டர் சந்திரசேகர்.''

"ரிஸர்ச் டாக்டரா?'' மேற்கொண்டு ஆச்சர்யப்படுவதற்குள் லிப்ட் தரைத்தளத்துக்கு வந்துவிட்டது. "அவ்வளவுதான் சார் தெரியும். நான் வர்றேன் சார்'' என்று ஏதும் நடவாததுபோல முகத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தான்.

ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர் ஆஷா பயன்படுத்திய சிரிஞ்சைத் தேட வேண்டிய அவசியம் என்ன? அது முக்கிய தடயமா? ஆஷா காணாமல் போனது இங்கிருந்து புறப்பட்டபோதா? அல்லது இங்கிருந்தபோதா?

லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த பித்தளைப் பலகையைப் பார்த்தார். தாம் போய் வந்த மாடியிலேயேதான் ஆர் அண்டு டி பிரிவு செயல்படுவது தெரிந்தது.

மறுபடி லிஃப்டைப் பிடித்து மேலே விரைந்தார்.

"சார்... சார்.. பேஷண்டெல்லாம் இந்தப் பக்கம் வரக் கூடாது'' ப்யூன் ஒருவன் தடுப்பதற்காக அவசரப்பட்டான்.

"நான் பேஷண்ட் இல்லை. போலீஸ்.. டாக்டர் சந்திரசேகரைப் பார்க்க வேண்டும்.''

பியூன், முதல் கட்டமாக எப்படி அனுமதி மறுப்பது என்று யோசித்துவிட்டு, காரணம் போதாமல் ""கொஞ்ச நேரம் இருங்க. கேட்டுட்டு வந்து சொல்றேன்'' என தயங்கியபடி போனான்.

சில நிமிடங்களில் திரும்பி வந்து ஒரு விண்ணப்பப் படிவத்தை நீட்டி, " இதை ஃபில் அப் பண்ணுங்க சார்" என்றான்.

வந்திருப்பவரின் பெயர், பார்க்க விரும்பும் நபரின் பெயர், பார்க்க விரும்பும் காரணம், பணியாற்றும் மருத்துவமனை, நோயாளி பற்றிய குறிப்பு, நோய் சம்பந்தமான விவரம் என்று விண்ணப்பம் கருப்பசாமிக்குப் பொருத்தமில்லாமல் இருந்தது.

பெயரை குறிப்பிட்டுவிட்டு, அருகிலேயே இன்ஸ்பெக்டர் என்று இடுக்கி இடுக்கி எழுதினார். பிறகு, பார்க்க விரும்பும் நபர் என்ற இடத்தில்.. ‘டாக்டர் சந்திரசேகர். நோயாளி பற்றிய குறிப்பு என்ற இடத்தில்... ‘ஆஷா காணாமல் போனது சம்பந்தமாக என்று எழுதினார்.

வாங்கிச் சென்ற ப்யூன் பந்து போல திரும்பி வந்து எரிச்சலாக சொன்னான்.. ""ஏன் சார் உயிர் எடுக்கிறீங்க.. ஆஷான்னா யாருனு தெரியாதுனு கத்தறார் சார். அவரு பெரிய டாக்டர் சார்.. தேவையில்லாம தொந்தரவு பண்ணா கோச்சுப்பாரு''

கருப்பசாமி நிதானமிழந்தார்.

"நீ டிஸ்டர்ப் பண்ணாத்தானே கோச்சுப்பாரு.. விடு நானே பண்ணிக்கிறேன்.'' ப்யூனை ஓரமாகத் தள்ளிவிட்டு உயரமான கண்ணாடிக் கதவை உதைத்துத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே சென்றவர் அதிர்ந்தார். எப்பேர்ப்பட்டவர்களையும் அந்த இடம் பணியச் செய்துவிடும்போல இருந்தது. பளிங்கு சுத்தமும் குபீரென்ற அமைதியும் அவரது ஆவேசத்தை சட்டென தணித்துவிட்டது. ஒரு அரை வட்டம் போல இடம். அதில் மூன்று கதவுகள் இருந்தன.

சந்திரசேகர் என்று குறிப்பிட்டிருந்த அறைக்கதவை நோக்கி நடந்தார். வெளியே தள்ளிவிட்டு வந்த ப்யூன் மீண்டும் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டு "சொன்னா கேளுங்க சார்.. இதுக்குள்ள யாரும் வரக் கூடாதுனு சொல்லியிருக்காரு சார்'' முகத்தில் மிரட்டலும் குரலில் கெஞ்சலுமாக கருப்பசாமியைப் பிடித்து இழுத்தான்.

கருப்பசாமி அவனை இழுத்தபடியே சந்திரசேகர் என்ற எழுத்திட்ட அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த டாக்டர் ஒருவர் "வாட் நான்ஸென்ஸ்'' என்றார்.

"ஆஷாவோட கொலை சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்'' கருப்பசாமி தீர்மானமாக கொலை என்றே சொன்னார்.

"ஆஷான்னா யாருன்னு தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சேனே.. உங்களுக்கின்னா மூளை கெட்டுப் போச்சா? நான் கமிஷனர் கிட்ட பேசறேன்..''

"ஆஷா உங்களுக்குத் தெரியலைன்னா பரவாயில்லை.. அவ ரூம்ல இருந்த சிரிஞ்சை ரொம்ப பத்திரமா எடுத்து வெச்சிருக்கீங்க.. அது ஏன்னு தெரிஞ்சுக்கணும்''

சந்திரசேகர் வினாடியில் மெல்லிய இழை திடுக்கிட்டதை கருப்பசாமி கவனித்தார். விரலைச் சுண்டி, ப்யூனை வெளியே போகச் சொல்லி சமிக்ஞை செய்தார்.

"சொல்லுங்க.. அந்த சிரிஞ்சை வெச்சு என்ன பண்ண போறீங்க'' அலட்சியமாகக் கேட்டார்.

"என்ன சிரிஞ்? எனக்கு ஒண்ணுமே புரியலை''

"நீங்களே உண்மையச் சொல்லிட்டா நல்லது.'' கருப்பசாமி தோராயமாகத் தன் விசாரணையை ஆரம்பித்தாலும் இடியாப்பச் சிக்கலில் கிடைத்த ஏதோ ஒரு நுனியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சந்திரசேகர் கண்ணை மூடிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார். இண்டர்காமை அழுத்தி, "வேகமாக வா'' என்றார்.

சில வினாடிகளில்..

அதே அறையின் ஒரு சுவர் சட்டென்று விரிய, உடம்பெல்லாம் பச்சைப் பசேலென்ற அங்கி அணிந்திருந்த இருவர் வெளிப்பட்டு கருப்பசாமியைக் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.

சந்திரசேகர், "ஆஷா மர்டர் விஷயமா வந்திருக்காரு... இவரையும் பயன்படுத்திக்கிறதைத் தவிர வேறு வழியில்லை'' என அபிப்ராயம் தெரிவிப்பது போல சொன்னார்.

இரண்டு பசுமைக்காரர்களும் தீர்மானமாக கருப்பசாமியை நெருங்க, ஏதோ வில்லங்கமாக நடக்கப் போவதை உணர்ந்து வேகமாக எழுந்தார்.

சந்திரசேகர் "ரொம்ப அலட்டிக்காதீங்க.. அப்புறம் கஷ்டமாகிடும்.'' ஊசி போட்டுக் கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைக்கு அறிவுரை போல சொன்னார்.

கருப்பசாமி திரும்பிப் பார்க்க... சந்திரசேகர் கைகளில் துப்பாக்கியோடு தீட்சண்யமாக நின்று கொண்டிருந்தார்.

( தொடரும்)


LinkWithin

Blog Widget by LinkWithin