செவ்வாய், ஏப்ரல் 28, 2009

அன்பால் ஆனதொரு மருத்துவம்!

"வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ். பார்த்திருந்தால் அதில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்தை மறந்திருக்க மாட்டீர்கள். நோயாளிகள் மீது நாம் காட்டும் அக்கறைதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மருந்தைவிட முக்கியமானது என்பது கதையின் முடிச்சு. அது நகைச்சுவைப் படம். பாலியேடிவ் கேர் என்று அழைக்கப்படும் இதன் நிஜ வடிவத்தில் காமெடிக்கு இடமில்லை. அரவணைப்பும் ஆறுதலும் நிறைந்த இந்த வைத்திய உலகம் நெகிழ்ச்சியானது.



சென்னையில் தன் "லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக்' நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது.

"என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே. ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே'' என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர். "அடடா'' என்று அன்பாகக் கேட்கிறார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார்...

"ரொம்ப வலிக்குதும்மா...'' என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல். கேட்கும் நமக்கே வலிக்கிறது. நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார். "வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அவர்கள் cure என்பதில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் care என்பதில் கவனமாக இருக்கிறோம்'' என்று ஆரம்பித்தார். "பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள். பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை.

கேன்சர், நுரையீரல் நோய், இதய நோய், இளம்பிள்ளை வாதம், கிட்னி பாதிப்பு, அல்சைமர், கணையம் பழுதடைதல், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட, வலிநிவாரணமளிப்பதுதான் முக்கியம். இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது. பேராசிரியர் எம்.ஆர்.ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம். கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன. எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன. ஆர்.எம்.டி., டீன் பவுண்டேஷன், ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம். ஓபியம் வகைசார்ந்த இந்த மருந்தை, எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை. இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும். ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு நாள் தேர்வு இருக்கும். அவ்வளவுதான். இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நோயாளிகளின் உடல்நிலை, வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது. மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை. மாத்திரையாகத்தான் வழங்குகிறோம். நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் என்றதும், அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள். பலர் நிலம், வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். நகைகளை விற்கிறார்கள். குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட, ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.

வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள். சிகிச்சையால் கிடைக்காத பலன், சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது.

உள்ள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான, நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச் சிகிச்சை, எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்'' என்று அவர் சொல்லி முடித்ததும் நோயாளிகள் சார்பாக நிம்மதி பெருமூச்சுடன் விடைபெற்றோம்.

contact nos: 2532 2684, 2641 1597 (Laxmi paliyative care centre)

திரைக்குப் பின்னே- 30

டி.வி. சானல் நதியா!

‘சின்னமேடம்' முடிந்து அமெரிக்காவுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார் என்பது உறுதியானதும்தான் எனக்கு நதியா அறிமுகம். அவரைப் பார்க்காமலேயே அவரைப் பற்றிய செய்திகளை எழுத ஆரம்பித்தேன். நதியாவுக்குக் கிடைத்த ஒரு ரசிகர்தான் காரணம். சலபதி என்ற அந்த ரசிகர் தன் பெயரையே நதியா சலபதி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.

நதியாவை மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள். "அக்கா இப்போது முன்பைவிட அழகாக இருக்கிறார். சென்ற வாரம் மும்பை வந்த போது பார்த்தேன்'' என்றோ, "அங்கே டி.வி. சானலில் பணியாற்றி வருகிறார். அவரை அங்கே நாடகத்தில் நடிக்க அழைக்கிறார்கள்'' என்றோ நதியாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து என்னைச் சந்திக்க பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து இப்படி ஏதாவது ஒரு வரி தகவலையோ அவருடைய சமீபத்திய போட்டோவையோ கொடுத்துவிட்டுச் செல்ர். நதியா நாய் வளர்க்கிறார், பூனை வளர்க்கிறார், அமெரிக்க சானலைவிட்டு பிரிட்டன் சேனலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்... இப்படி வாசகர்களுக்கும் பிடித்தமான செய்தியாகத்தான் இருக்கும் அவர் சொல்லும் செய்தியெல்லாம்.

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு முக்கியமான வேடமும் சம்பளமும் வாங்கித் தருவதற்கு காரணமாக இருந்தார். அந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் நதியாவை நான் ஒரே ஒரு முறை சந்தித்தேன்.

"டி.வி. சானல் வேலையை விட்டு விட்டீர்களா?" என்றேன்.

"அதுதான் எனக்குப் புரியவில்லை. பார்க்கிற பலரும் இதையே கேட்கிறார்கள். நான் எந்த சேனலிலும் வேலை பார்த்ததில்லையே.. எப்படி இப்படியொரு செய்தி பரவிற்று என்றே தெரியவில்லை. ஆனால் நான் தமிழகம் வந்ததும் நூறு பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள்'' என்றார்.

நான் பக்கத்தில் இருந்த ’நதியா சலபதி'யைப் பார்த்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை மிகச் சாதாரணமாகப் பார்த்தார். "டீ சாப்பிட்றீங்களா?'' என்றார் அந்தச் செய்திக்குச் சம்பந்தமே இல்லாதவராக.



ஒரு புறக்கணிக்கப்பட்ட பாட்டு!



ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பாடல் ஒரு படத்தையே தூக்கி நிறுத்தியதோடு அதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்ட பலரின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ’திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற ’மன்மதராசா மன்மதராசா' சுமார் ஓராண்டுக்காலம் தமிழகத்தை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்த பாடல். ஆனால் அந்தப்பாடலை கவிஞர் யுகபாரதி வேறொரு படத்துக்காகத்தான் எழுதினார். அந்தப் படத்தில் பயன்படுத்த இயலாத இந்தப் பாடலை ’திருடா திருடி' படத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும் இசையமைப்பாளர் தினாவும் யுகபாரதியும் விரும்பினர்.

என்ன காரணத்தாலோ தயாரிப்பாளருக்கு இதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. எல்லாம் பொருளாதார நெருக்கடியால்தான். வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோகூட படப்பிடிப்பை நடத்த இயலாத நிலை. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் நிலக்கரி வெளியில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டியதாக இருந்தது. ஆடை அணிகலன்களிலும்கூட செலவு செய்ய முடியாமல் இருந்ததால் படத்தில் அப் பாடலில் பயன்படுத்திய கறுப்புத் துணியை மலிவுவிலைக் கடையான சரவணா ஸ்டோர்ஸில்தான் வாங்கினார்கள். உடன் ஆடுவதற்கு நடனக் கலைஞர்கள் அமர்த்தவும் யோசனை. சரி... தனுஷ், சாயாசிங் இருவர் மட்டுமே போதும் என்று முடிவாகியது. பாடகி? புதிய பாடகிதான். மாலதி அறிமுகப்படுத்தப்பட்டார். பாடகர் மாணிக்க விநாயகம். எல்லாவிதத்திலும் ஒரு மாத்து கம்மிதான் என்று தெரிந்தே உருவாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சிதான் தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. டி.வி. சேனல்களில் லட்சம் தடவைக்கு மேல் ஒளிபரப்பாகியது. படம் ஓடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாடகர், பாடல் எழுதியவர், இயக்குநர். நடிகர்- நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என எல்லோர் வாழ்க்கையையும் சில அடி உயர்த்தியது.

தமிழ் சினிமா எல்லார் கணிப்பையும் ஏமாற்றி கண்ணில் மண் தூவி கரகாட்டம் ஆடிவிடும் என்பதற்கு ஓர் எளிய உதாரணம்தான் ’மன்மதராசா'.


எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?



தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்குமுன்னர் இப்படி ஒரு பதவியும்கூட தமிழ்சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.

எம்.ஜி.ஆருக்கு ’ரிக்ஷாகாரன்' படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள்கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச் செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.

72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார். கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் "தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்'' என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.

வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் "அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்'' என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.

"ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?'' என்றனர் மற்றவர்கள்.

"அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே'' என்று புலம்பியிருக்கிறார்.

மீண்டும் உள்ளே சென்று "நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.'' என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.

இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்பட்ட கொடுமை இது?

LinkWithin

Blog Widget by LinkWithin