செவ்வாய், ஏப்ரல் 28, 2009

அன்பால் ஆனதொரு மருத்துவம்!

"வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ். பார்த்திருந்தால் அதில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்தை மறந்திருக்க மாட்டீர்கள். நோயாளிகள் மீது நாம் காட்டும் அக்கறைதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மருந்தைவிட முக்கியமானது என்பது கதையின் முடிச்சு. அது நகைச்சுவைப் படம். பாலியேடிவ் கேர் என்று அழைக்கப்படும் இதன் நிஜ வடிவத்தில் காமெடிக்கு இடமில்லை. அரவணைப்பும் ஆறுதலும் நிறைந்த இந்த வைத்திய உலகம் நெகிழ்ச்சியானது.



சென்னையில் தன் "லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக்' நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது.

"என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே. ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே'' என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர். "அடடா'' என்று அன்பாகக் கேட்கிறார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார்...

"ரொம்ப வலிக்குதும்மா...'' என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல். கேட்கும் நமக்கே வலிக்கிறது. நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார். "வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அவர்கள் cure என்பதில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் care என்பதில் கவனமாக இருக்கிறோம்'' என்று ஆரம்பித்தார். "பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள். பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை.

கேன்சர், நுரையீரல் நோய், இதய நோய், இளம்பிள்ளை வாதம், கிட்னி பாதிப்பு, அல்சைமர், கணையம் பழுதடைதல், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட, வலிநிவாரணமளிப்பதுதான் முக்கியம். இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது. பேராசிரியர் எம்.ஆர்.ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம். கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன. எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன. ஆர்.எம்.டி., டீன் பவுண்டேஷன், ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம். ஓபியம் வகைசார்ந்த இந்த மருந்தை, எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை. இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும். ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு நாள் தேர்வு இருக்கும். அவ்வளவுதான். இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நோயாளிகளின் உடல்நிலை, வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது. மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை. மாத்திரையாகத்தான் வழங்குகிறோம். நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் என்றதும், அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள். பலர் நிலம், வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். நகைகளை விற்கிறார்கள். குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட, ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.

வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள். சிகிச்சையால் கிடைக்காத பலன், சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது.

உள்ள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான, நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச் சிகிச்சை, எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்'' என்று அவர் சொல்லி முடித்ததும் நோயாளிகள் சார்பாக நிம்மதி பெருமூச்சுடன் விடைபெற்றோம்.

contact nos: 2532 2684, 2641 1597 (Laxmi paliyative care centre)

LinkWithin

Blog Widget by LinkWithin