திங்கள், ஜனவரி 26, 2009

திரைக்குப் பின்னே- 17

சவுந்தர்யாவின் திருமணம்!

மைசூரை ஒட்டியுள்ள ஒரு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு. வெள்ளை நாகம் (மதுமதி என்று பெயர் மாற்றினார்கள்) என்று படத்துக்குப் பெயர். சவுந்தர்யா கதாநாயகி. வெள்ளை நாகம் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியான வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிக் கொண்டிருந்த படம். அவரைத் தவிர அங்கு கர்ணாஸ் இருந்தார். கர்ணாஸ் பஸ் கண்டக்டர் போலவும் சவுந்தர்யா அங்கு பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்காக வரும் மாணவியாகவும் நடித்தனர். என் ஞாபகத்தில் அவர் விஜயகாந்துடன் இணைந்து "தவசி' படத்தில் நடித்ததோடு சரி. "வெள்ளை நாகம்', ரீ எண்ட்ரி. அதுவுமில்லாமல் சவுந்தர்யாவின் நூறாவது படமாகவும் அதை அறிவித்தார்கள்.

பஸ் நிறுத்தத்தை ஒட்டிய சிறிய ஒட்டு வீட்டின் திண்ணையில் செüந்தர்யாவும் அவருடைய அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். பேட்டி என்றில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம்.
வெள்ளை நாகம் நாவலை தாம் படித்திருப்பதாகவும் அதன் விறுவிறுப்புக்காகவே நடிக்க சம்மதித்ததாகவும் சொன்னார். திருமணமாகி குழந்தை பிறந்திருப்பதனால் இடையில் சில காலம் நடிக்காமல் இருந்ததாகவும் இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார். பிறகு பொதுவாக நாட்டு நடப்புகள், பொதுவாக சினிமாத் துறையின் சிக்கல்கள் என்று பேச்சு தொடர்ந்தது.

திருமணமாகி குழந்தை பிறந்தபின்னும் நடிகைகள் தங்களின் புகழ் உச்சி காலகட்ட கனவுகளோடு மிதப்பது அல்லது அதை விட்டு இறங்குவதில் தயக்கம் காட்டுவது உளவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயம். நடிகர்கள் தங்கள் மகன்கள் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும்போதும் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பதும் நடிகைகள் மட்டும் திருமணமான அடுத்த நாளில் இருந்து அக்கா வேடத்துக்கும் அண்ணி வேடத்துக்கும் தள்ளப்படுவதும் கலாசார ரீதியானதாகவும் தெரிகிறது. ரசிகன், தன் கனவுக் கன்னியை சகோதரியாக, தாயாக, அண்ணியாகத்தான் பார்க்க விரும்புகிறானோ என்னவோ?

ஆனால் அவர் மீண்டும் கதாநாயகியாக அவர் பெரிதும் விரும்பினார். தனக்கு மவுசு குறையவேயில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். தமிழில் சரியான மேனேஜர் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.

சில நாள்களில் சவுந்தர்யா பி.ஜே.பி.யில் இணைந்ததாக அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்குச் சென்ற போது விபத்தில் மரணமடைந்ததாகவும் செய்திகள் வந்தன.

அவர் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பு அதிகமாக வந்திருந்தால் அவர் ஒருவேளை அரசியலில் இறங்காமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு மதுமதி (வெள்ளைநாகம்) அவருடைய கடைசி படம் என்ற பிரசாரத்தோடு வெளியானது.




யானைக்கே இந்த கதி!

முதன்முதலில் பாண்டியராஜனை திருநீர் மலை கோவிலின் அடிவாரத்தில் பார்த்தேன். அவருடைய படங்களின் தலைப்புகளிலேயே இருக்கும் ஜனரஞ்சகத்தை வெகுவாகப் புகழ்ந்தேன். நெத்தியடி, காக்கா கடி, வாய்க் கொழுப்பு என்ற தலைப்புகளில் இருக்கிற மக்களுக்கு நெருக்கமான தன்மையைச் சொல்லி விட்டு ஆனால் போக,போக அந்த வலையில் நீங்களே சிக்கிக் கொண்டீர்கள் போல இருக்கிறது. உங்களையே கேலி செய்வதுபோல காட்சிகள் வைக்கிறீர்கள். இது திரும்பத் திரும்ப வருகிறதே என்றேன்.

"நம்ம முகம் ஹீரோவுக்கான முகம் இல்லைனு நல்லா தெரியும். ஆனா ஹீரோவா நடிச்சாகணும். ஹீரோனா நாலு பேரை அடிச்சு வீழ்த்த வேண்டியிருக்கு. அதுவும் இல்லாம நமக்கு ஜோடியா நடிக்கிற நடிகை நம்மைவிட உயரமா இருக்காங்க. தியேட்டர்ல ஆடியன்ஸ் பார்த்துட்டு இவனுக்கெல்லாம் ஹீரோ ஆசைய பாருப்பானு சொல்றதுக்கு முன்னாடி நாமளே படத்தில அப்பப்ப ஞாபகப்படுத்திட்டா பிரச்சினை இல்ல பாருங்க'' என்று எதார்த்தமாக பதில் சொன்னார்.
கூடவே இன்னொரு தகவலைச் சொன்னார்.

இந்தியில் "ஆத்தி மேரா சாத்தி' என்றொரு படம் வந்தது. பிறகு அது தமிழில் "நல்ல நேரம்' என்று வந்தது. பிறகு அதை இந்தியில் "மா' என்ற பெயரில் உல்டா செய்தார்கள். அது நன்றாக இருப்பதாக தமிழில் "அன்னை ஓர் ஆலயம்' என்று எடுத்தார்கள். ஆனானப்பட்ட யானைக்கே இந்த கதின்னா நாமல்லாம் எம்மாத்திரம்? ஒரே மாதிரி கதைல நடிக்கக் கூடாதா?

லாஜிக் சரிதான். எந்த வேலையும் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால்தான் அந்த வேலையைத் தொடர முடியும்.



ஒரு 'இந்தியன்' கனவு!


"இந்தியன்' திரைப்படம் வெளியான மறுநாள் என்று ஞாபகம் கமல்ஹாசனை அவருடைய அலுவகத்தில் பேட்டிக்காகச் சந்தித்தேன்.

50 ரூபாய், 100 ரூபாய் ஊழல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு எத்தனை பெரிய தடையாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். உலக அரசியல், பல நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் என தொட்டு ஒரு ரவுண்டு வந்தோம்.

"இத்தகைய சினிமாக்கள் வந்தால் நாட்டில் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது. மனித மனங்களில் இந்தச் சிறிய ஊழல்களால் பிரச்சினை இல்லை என்ற எண்ணம் வளரும் இல்லையா?'' என்று கேட்டேன்.

"இருக்கலாம். ஆனால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சத்யம் தியேட்டர் வாசலில் இந்தியன் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டுதான் பாதி பேர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

ஒரு ஜனரஞ்சகப்படம் அதன் விஸ்தாரமான எல்லைக்குள் இருக்கும் கோடி பேரில் எத்தனை பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் அவர் "ஹேராம்', "குணா', "குருதிப் புனல்' போன்ற பரீட்சார்த்தங்களையும் செய்கிறார்.

LinkWithin

Blog Widget by LinkWithin