செவ்வாய், ஜூன் 30, 2009

யாகவா முனிவர் சுனாமியை அறிந்திருந்தாரா?





சமீபத்தில் ஜெயக்குமார் என்ற நண்பர் கடலில் படகில் சென்று வருவதற்கு அழைத்தார். அவர் என் ‘மீனவ நண்பர்'. கடலையும் சினிமாவையும் இணைத்து வைத்ததில் அவருடைய பங்கு ஏராளம். சினிமாவில் தமிழகக் கடல் சம்பந்தப்பட்டிருக்குமானால் அதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார். ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசனைப் படகில் கட்டி, கடலில் தூக்கி எறியும் காட்சியில் அவருடைய படகுதான் பயன்படுத்தப்பட்டது. சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் அவர். ஓர் இழையில் உயிர் தப்பியவர். அவரைச் சார்ந்திருந்த பலரும் உயிரையும் உடமையையும் இழந்தனர். இனிக் கடல் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார் போலத்தான் நினைத்தேன். சில நாள்களிலேயே அவர் மீண்டும் கடலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

அவர்களின் வாழ்க்கை கடலால் ஆனது. அதற்கு முன்னால் தேவாரம் காவல் அதிகாரியாகப் பணியாற்றியபோது மீனவக் குடியிருப்புகளை அகற்ற முனைந்த போதும் மீனவர்கள் துப்பாக்கிக்கு அஞ்சாமல் உயிரைக் கொடுத்தார்களே அன்றி கடலைவிட்டு அகலவில்லை. நிலத்தையும் நீரையும் படகால் பாவு பின்னிக் கொண்டிருக்கும் தீரமிக்க வாழ்க்கை அவர்களுடையது. கால் பங்கு நிலத்தைச் சுற்றி எப்போதும் சூழ்ந்திருக்கும் கடலின் ஆபத்து, ஒரே ஒரு டாடாவையும் அவரைச் சுற்றியிருக்கும் அவருடைய ஒரு லட்சம் தொழிலாளர்களையும் போன்றது.

நண்பரின் கடல் உலா அழைப்புக்கு இன்னும் நான் செவி சாய்க்கவில்லை. காரணம் மேற் சொன்ன ஆபத்தின்பால் அல்ல. சுனாமிக்கு முன்பு இருந்தே அவர் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார், நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி, தவிர்த்து வந்திருக்கிறேன். அதற்கு நிஜமான காரணம், நான் கடற்கரையில் காற்று வாங்காமல் வெற்றிடம் வாங்குபவனாக இருப்பதுதான்.

கடற்கரைக்குச் செல்வதற்கு எனக்குத் துணிச்சல் இருந்ததில்லை. மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும் தினமும் ஜன்னல் வழியாகவே பார்க்க முடிகிற கடலை, நெருங்கிச் சென்று பார்த்தது ஓரிரு முறையாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து கடற்கரை ஓரக் கல்லூரியில் படித்தும் ஒட்டு மொத்தமாக இருபது அல்லது முப்பது முறைதான் கடற்கரைக்குச் சென்றிருப்பேன். கடற்கரைக்குச் சென்று மணலில் விளையாடுவதோ, பஜ்ஜி சாப்பிட்டு பலூன் சுடுவதோ, காற்று வாங்குவதோ, வாக்கிங் செல்வதோ கடலை ‘மிஸ் யூஸ்' செய்வதாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இது ஒரு வகை மன நோயாக இருக்கலாம்; அல்லது ஒருவகை மரியாதையாகவும் இருக்கலாம்.

உதாரணத்துக்கு பாரதியாரைப் பார்க்கச் சென்று "கொஞ்சம் வத்திப் பெட்டி இருந்தா கொடுப்பா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? பெரிய மனிதரை ஒரு தகுந்த காரணத்துடன் சந்திக்க வேண்டும் என்பது போன்றதொரு தயக்கம். கடலுடனான நெருக்கம் அப்படி ஆகிவிடக்கூடாதென்று பயப்படுகிறேன். நான் இப்படி நினைப்பதெல்லாம் கடலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கடல் எதிரில் நிற்கும்போது எதிரில் இருக்கும் பிரமாண்ட பரப்பைப் போல மனதுக்குள் ஒரு மகா வெற்றிடம் ஏற்படுகிறது. சொல்லப் போனால் அது கடலைவிடப் பெரியதாக இருக்கிறது. மனதில் உருவாகும் சுனாமி, வலிக்காமல் விழுங்குகிறது. கொஞ்ச நஞ்ச அகந்தையும் அழிந்து போய் கடல் துளி போல அங்கே கிடக்க வேண்டியதாக இருக்கிறது. சுற்றியிருப்பவர்களை எல்லாம் மறந்து கடலே பிரதானமாக ஆக்கிரமித்துவிடுகிறது. கடற்கரையிலிருந்து வீடு திரும்பிய பின்னும் அந்த வெறுமை, நிரப்ப வசதியின்றி அப்படியே இருக்கிறது. கடலின் பிரமாண்டம் அத்தகையது. சிலரைச் சந்தித்து கோடி விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று யோசித்துவைத்து, நேரில் பார்க்கும்போது வெறுமனே வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவதில்லையா அத்தகைய நிறைவுறா ஏக்கம்.

இந்த எண்ணம் மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் சிறுவயதில் குடும்பத்தினருடன் அண்ணா சமாதி பார்த்துவிட்டு கடற்கரைக்குச் சென்ற தருணத்தில் நான் பார்த்த கடல், வேறு யோசனையை முன் வைத்தது.

நான் பணக்காரனாவது இந்தக் கடலின் கையில்தான் இருக்கிறது என்பதுதான் அந்த யோசனை. கடல் நீரில் இருந்து உப்பு தயாரிக்கப்படுவது பற்றிப் படித்திருந்தாலும் கடலைப் பார்த்தபோது, அதை வற்றச் செய்தால் ஏகப்பட்ட உப்பு தயாரிக்க முடியும் என்று தெரிந்தது. கடல் நீரை உப்பாக்கி விற்றுப் பணக்காரர் ஆகாமல் மக்கள் ஏன் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன்.

வயதுக்கு ஏற்ப கடலை அனுபவிக்க முடிவது சாத்தியமாக இருக்கிறது. காலம் இன்னொரு அனுபவத்தைத் தரலாம்.

இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னால் இந்தக் கட்டுரை நிறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது.


90களின் ஆரம்பத்தில் யாகவா முனிவர் என்று ஒருவர் உலக நடப்புகளை முன் கணித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். எதைப் பற்றிக் கேட்டாலும் அவர் யோசிக்காமலேயே பதில் சொல்பவர் போல சொல்லுவார். சந்தித்துவிட்டுத் திரும்பியவர்கள் சிரித்துச் சிரித்துச் சொல்லுவார்கள். சதா சிகரெட்டைப் பிடித்தபடி இனன்ய மொழி என்ற இலக்கணத்துக்கு அடங்காத பாஷையைப் பேசுவார். காக்கா, குருவி பாஷையெல்லாம் தெரியும் என்பார். அவர் கணித்துச் சொன்னதில் சில..

கலைஞர் அடுத்த ரவுண்டு ஆட்சிக்கு வருவார். டெல்லியே இவர் பேச்சுக்குக் கட்டுப்படும் என்றார். தேவையான அளவுக்குக் கட்டுப்பட்டதாகத்தான் தெரிகிறது.

2007க்குப் பிறகு இந்தியாவிடம் அமெரிக்கா கடன் கேட்கும் நிலைமை வரும் என்று சொல்லியிருந்தார். அங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவு இதையும்கூட பலிக்க வைக்கலாம்.

கடல் பொங்கி மயிலாப்பூர் வரைக்கும் பாயும் என்று அவர் சொன்னது சுனாமி உருவான அன்று ஞாபகம் வந்தது.

அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ எனப் பேதலித்துத் தவித்தேன்.

இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு இன்னொன்றைச் சொல்லியிருந்தார். அதை வைத்து உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

"எனக்கு இப்போது இரண்டாயிரம் வயசாகிறது... இன்னும் இரண்டாயிரம் வயசு இருப்பேன்.''

LinkWithin

Blog Widget by LinkWithin