சனி, நவம்பர் 29, 2008

திரைக்குப் பின்னே- 9

நம்பியார் - பரங்கிமலை!

தமிழகத்தில் கருப்புச் சட்டை என்றால் அது பெரியார் கட்சிக்குத்தான் சொந்தம். தனிமனித ஒழுக்கத்தினும் பொது ஒழுக்கம் முக்கியம் என்பதற்காகப் போராடியவர். அறுபது எழுபதுகளுக்குப் பிறகு அதிகரித்த கருப்புச் சட்டைகளுக்கு நம்பியார் முக்கிய காரணம். குறைந்தபட்சம் ஒரு மண்டலம் தனிமனித ஒழுக்கமாக இருப்பதற்கான உத்தியைக் கொண்டுவந்தவர் என்பதற்காக மகிழ்ந்து கொள்ளலாம்.



ஒரு தீபாவளி இதழுக்காக அவரைச் சந்தித்தேன். நம்பியாரைச் சந்திக்கத் தயாரானபோது "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் புத்தர் இருக்கும் புனிதமான ஆலயத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்குவாரே அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருந்தது. நம்பியாரின் வில்லத்தனத்திலேயே அதைத்தான் மன்னிக்க முடியாத குற்றமாக மனதில் பதித்து வைத்திருந்தேன். இது புனிதமான இடம் இங்கு சண்டை வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். எவ்வளவோ பொறுமையாக எடுத்துக் கூறியும் நம்பியார் அவரை அடிப்பார். அடிக்க அடிக்க எம்.ஜி.ஆர். மெல்ல ஆலயத்துக்கு வெளியே வந்துவிழுந்துவிடுவார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். அடிக்கிற அடி இருக்கிறதே... அதில் நேர்மை, நாணயம், கொள்கை எல்லாம் தெரிந்தது எனக்கு. அந்த மன பிம்பத்தோடு நான் நம்பியார் வீட்டுக்குப் போனேன். முன் வாசலில்- அவர் பின் கட்டில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். நான் வீட்டின் பின் கட்டுக்குச் சென்றேன். அங்கு ஒரு கதவு இருந்தது. அது சாத்தியிருக்கவே மெல்ல கதவைத் தட்டி "சார்?' என்றேன்.

"வாங்க... வாங்க'' என்று குரல் கேட்டது. பல திரைப்படங்களிலும் மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கேட்டுப் பழகிய அதே குரல்.

நான் இந்தப் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறேன்.. என்று கதவுக்கு மறுபக்கம் இருந்து அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

"அதெல்லாம் சரிதான். நாம ரெண்டுபேரும் இப்ப சந்திச்சுப் பேசறது இப்ப உங்க கையிலதான் இருக்கு. கதவை நீங்கதான் திறக்கணும்.'' என்றார்.

"வெளிப்பக்கம் திறந்துதான் இருக்கு'' என்றேன்.

"தெரியும். கதவை அழுத்தித் திறங்க''

புதிதாக வருகிறவர்களிடம் இப்படியெல்லாம் விளையாடுவாறோ என்ற குழப்பம் தொற்றிக் கொண்டது. அவர் சொன்ன படி கதவைத் தள்ளிப் பார்த்தேன். திறக்கவில்லை.

"என்னப்பா திறந்துவிடச் சொன்னா என்ன பண்றே அங்கே?'' குரலில் அலுப்பும் அழுத்தமும் வெளிப்பட்டது.

"சார் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறேன்.''

"காலையில சாப்பிட்டியா இல்லையா? நல்லா தள்ளுப்பான்னு சொல்றேன்''

நான் திரையில் பார்த்து பிரமித்துப் போயிருந்த ஒரு நடிகர். பேட்டி எடுக்க வந்த நேரத்தில் இப்படித் தடுப்புக்கு இருபுறமும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அறிமுகமாகிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் இருந்தது.

கதவை வேகமாக ஓர் உதைவிடச் சொன்னார்.

அப்படியே செய்தேன். மழையால் ஊறி பிடித்துக் கொண்டிருந்த கதவு படாரென்று திறந்தது. வெள்ளை ஜிப்பா, வேட்டியில் நம்பியார்.

காமுகன், கொள்ளைக்காரன், சதிகாரன், அயோக்கியன், திருடன், நயவஞ்சகன், செய் நன்றி மறந்தவன், துரோகி என்று நம்பியாரை உருவகிக்க நிறைய கருத்துருவம் இருந்தது. ஆனால் அது அத்தனையும் அவரைக் கதவைப் பிளந்து கொண்டு பார்த்த அந்த ஒரு நொடியில் தொலைந்தது.

அவர் அமைதியாக இட்லி சாப்பிட்றீங்களா என்று உபசரிக்க ஆரம்பித்து, இந்திய மலைகளிலேயே பரங்கிமலைதான் வயதில் மூத்த மலை என்பது குறித்து நீண்ட நேரம் பேசியது நினைவு இருக்கிறது. உதகையையோ, இமயத்தையோதான் பிரமித்து இருக்கிறோம். பரங்கிமலை பல லட்சம் ஆண்டு மூத்ததாக இருந்தும் அப்படி ஒரு மலை இருப்பதையோகூட நாம் கவனிப்பதில்லை என்றார்.

அவர் வயதில் பாதி வயது நிரம்பாதவர்கள்கூட பத்மஸ்ரீ விருது வாங்கிவிட்டார்கள். அவருக்கு விருது எதுவும் கிடைத்ததே இல்லை. அவர் இறந்த அன்று எனக்கு பரங்கிமலைதான் ஞாபகத்துக்கு வந்தது.




இசையமைதி!

பொறுமையாகச் செயல்படுவதில் இசையமைப்பாளர் தேவாவைப் போல இன்னொருத்தரைப் பார்க்க முடியாது. ஆண்டுக்கு 30 படங்கள் இசையமைத்த நேரத்திலும் அவரிடம் ஆர்ப்பாட்டமான, அகம்பாவமான நடவடிக்கையைப் பார்த்ததில்லை. செய்து வைத்தது மாதிரி ஒரு பாவனையோடு ஒரு முகம். இன்னும் சொல்லப் போனால் பழகிவிட்டவர்களிடம் மனம் திறந்து பல உண்மைகளைச் சொல்லுவார்.




"கொஞ்சமா பேசறுதுல ஒரு நன்மை இருக்கு. வாயைக் குடுத்து மாட்டிக்காம இருக்கலாம். வேகமா பேசினா நமக்கு மெட்ராஸ் பாஷைதான் வருது. அதனாலதான். லைட்டா ஒரு புன் சிரிப்போட நிறுத்திக்கிறேன்'' என்பார்.

சத்யராஜ் ஒரு ஒலிநாடா வெளியீட்டு விழாவில், "தேவாசார் மாதிரி பொறுமையான ஆளை நான் பார்த்ததே இல்லை. அவர் மியூசிக் கம்போஸ் பண்ணும்போது அந்த ஆர்மோனியப் பெட்டியில கறுப்பும் வெள்ளையுமா இருக்கிற கட்டைகள்ல நாலை பிடுங்கிக்கிட்டாகூட கோபப்படாம அமைதியா சிரிப்பாரு'' என்றார். அவருடைய அமைதியை இந்த அளவுக்கு மிகைப்படுத்தியதற்காகவாவது தேவா கோபப்பட்டிருக்கலாம். மேடையில் இருந்த தேவா அப்போதும் சிரித்தார்.

இளையராஜாவின் பல பாடல்களை தேவா அப்படியே காப்பியடித்து இசையமைப்பதாக பல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். எந்தப் பத்திரிகை மீதும் அவர் கோபப்பட்டதில்லை. நேரடியாக ஒரு முறை இதைக் கேட்டேன்.

"சில டைரக்டர்கள் ஒரு சில பாட்டைச் சொல்லி அந்த மாதிரி வேணும்னு சொல்லுவாங்க. நாண அந்தமாதிரி போட்டா அவங்களுக்குத் திருப்தியா இருக்காது. சில நேரங்களில் அதையை போட்டுத் தர வேண்டியதா இருக்கு. உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்றேன். கும்பகோணத்துப் பக்கத்தில ஒருத்தன் கோவில் தேரை எரிச்சுட்டான். ரொம்ப பழைய தேர். குப்புனு எரிஞ்சுபோச்சு. கோர்ட்ல கேட்டாங்க. "ஏன்டா தேரை எரிச்சே'னு. அதுக்கு அவன் "சாமிதான் கனவுல வந்து அந்தத் தேரை எப்படியாவது எரிச்சுடுன்னு கேட்டுக்குச்சு. அதனாலதான் எரிச்சேன்'னு சொன்னான்.''

எதற்காக இந்தச் சம்பவம் என்று புரியவில்லை.

"எதுக்காகடா சாமித் தேரைக் கொளுத்தினேன்னு கேட்டா, சாமி சொல்லித்தாந் கொளுத்தினேன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அவன் சாமிக்கு விரோதமா செஞ்சான்னு சொல்ல முடியுமா? ஏன்டா இளையராஜா மியூசிக்கைக் காப்பியடிக்கிறேன்னு கேட்டா, அவரோட மியூசிக்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குது. இதுதான் பதில்'' என்றார்.

தேவா அப்படித் தன்னடக்கத்தோடு சொன்னாலும் அவருடைய தனித்துவமான பல பாடல்களைச் சொல்ல முடியும். ஆசை, அண்ணாமலை, வாலி, காதல் கோட்டை போன்ற பல படங்களின் பாடல்களைக் கேட்கும்போது அவர் சுதந்திரமாகவும் சிரத்தையாகவும் செயல்பட்டதை உணரமுடியும்.

உச்சக்கட்ட புகழில் இருந்தபோது தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பாடலாசிரியர்களும் மொய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் இப்படி இறங்கி வந்து பதில் சொல்லியிருக்க வேண்டியதில்லை.

இதுபோல் பதில் சொல்வதற்கு தன்னடக்கம் மட்டும் போதுமா என்று தெரியவில்லை. தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும் சிலரால்தான் இப்படிப் பதில் சொல்ல முடியும்.


இழக்கும் ஆச்சர்யங்கள்!

நடிகை சுவலட்சுமியின் வீட்டில் சத்யஜித் ரே புகைப்படம் இருக்கும். அவருடைய படம் ஒன்றில் நடித்திருப்பதாகப் பெருமையாகக் கூறுவார். கூர்மையான அவதானிப்பு உள்ள நடிகை அவர். "ஆசை' படத்தில் அஜீத் ஜோடியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த்.




"என் ஆச ராசாவே' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜிகணேசன் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சுவலட்சுமி தூரத்தில் உட்கார்ந்தபடியே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"அவரை ஏன்அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றேன்.

அங்கே அமர்ந்திருந்த மற்ற நடிகர்களைக் காட்டினார். "வித்தியாசம் தெரிகிறதா?'' என்றார்.

அது சாப்பாட்டு இடைவேளை. எல்லோருமே உண்ட களைப்பை அனுபவிப்பது மாதிரி ஓய்வில் உட்கார்ந்திருந்தனர் . "வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை'' என்றேன்.

"அவர் மட்டும்தான் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கிறார். மற்றவர் எல்லோரும் சரிந்தும் சாய்ந்தும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர் தியேட்டரில் இருந்து வந்தவர். அவருக்கு இது பால பாடம். அரிதாரம் பூசிவிட்டால் இப்படியும் அப்படியும் அசைந்து அதை உடையெல்லாம் பூசிக் கொள்ளக் கூடாது. கழுத்தில் இருக்கும் அரிதாரம் காலரில் படக்கூடாது என்கிற அக்கறையோடு அவர் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள். காலையில் ஆறு மணிக்கு வந்ததிலிருந்து அதே விரைப்போடு நிமிர்ந்தே உட்கார்ந்திருக்கிறார்'' என்று ஆச்சர்யப்பட்டார்.

ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கவனித்து ஆச்சர்யப்பட வேண்டிய நிறைய விஷயங்களை நாம் நம் அலட்சியத்தால் கணம் தோறும் இழந்து கொண்டே இருக்கிறோம்.

LinkWithin

Blog Widget by LinkWithin