திங்கள், நவம்பர் 19, 2007

ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!







இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு சினிமாவில் சுவாரஸ்யமாகச் சொன்னார்கள். தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது "பேசாமொழி' ஆவணப்படம்.






இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட "பகீர்' கருத்துகள் இவை.

தமிழ்த் திரைப்பட வரலாறு 1931-ல் வெளியான "காளிதாஸ்' படத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் மெüன மொழிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் எத்தனை மெüன மொழிப் படங்கள் தயாரானது என்று தெரியவந்துள்ளதா? வேறு பகுதியில் தயாரான படங்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகச் செய்தி உண்டா?

1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே "லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்' என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

அப்போது திரைப்படங்கள் வெளியிட திரையரங்குகள் இருந்தனவா?





இல்லை. நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தித்தான் ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கப்பட்டன. மெüனப் படம் அதன் கதையை விளக்குவதற்காகக் கையில் குச்சியுடன் திரையருகே நின்றிருப்பார். 1928-ல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். நிரந்தர திரையரங்குகளைக் கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு 18 திரையரங்குகள் இருந்தன. கோயம்புத்தூரில் இருந்த வெரைட்டி ஹால் திரையரங்கு அவருடையதுதான். இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டரின் பெயரே எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கட்டடம் இப்போது சென்னை அண்ணா சாலை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தாதா சாகிப் பால்கேதான் இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் பால்கேவுக்குத் திரைப்பட ஆர்வம் வருவதற்கே காரணமாக இருந்தது சாமிக் கண்ணு காண்பித்தத் திரைப்படங்கள்தான்.

அவரைப் போல வேறு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் "கீசகவதம்' என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.

ஏன் இந்த நிலை? உங்கள் கருத்து என்ன?

பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.

இந்தப் படத்தின் விளைவுகள் ஏதேனும் உண்டா?

கோவையில் உள்ள சாமிக் கண்ணு வின்சென்டின் வாரிசுதாரர்கள் படத்தைப் பார்த்துவிட்டுப் பேசினார்கள். அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆவணங்களையும் அளித்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். அவர், சாமிக்கண்ணுவிடம் பணியாற்றியவரின் மகள். அவரும் பல தகவல்களைப் பகிரிந்து கொண்டார். விவரங்கள் எங்கோ கொட்டிக் கிடக்கின்றன. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்தான் அவை நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும். அந்த ஓர் அடிதான் இந்தப் பேசா மொழி.

தமிழ்மகன்

அன்புடன் கெளதமி..!


கமல்ஹாசனுடனான புரிதல், மார்பக புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்த அனுபவம் ஆகியவற்றை மனம் திறக்கிறார் நடிகை கெளதமி.



"நம்மவர்' படத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் இருப்பது போலவும் அவருக்குக் கெளதமி துணையாக இருப்பது போலவும் காட்சிகள் இருக்கும். அது அவர்களின் நிஜவாழ்க்கையின் ஒத்திகையாக அமைந்துபோனது காலத்தின் விளையாட்டு. நிஜத்தில் கெளதமிக்கு கேன்சர். கமல் உடனிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் கெளதமியைக் கமலின் அலுவலகத்தில் சந்தித்தோம்.






எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை? என்ற எளிமையான கேள்வியோடு (பதில் அத்தனை எளிமையானது அல்ல!) பேட்டியை ஆரம்பித்தோம்.

நல்லதாக நடந்தாலும் அவ்வளவு நல்லதாக நடக்கவில்லை என்றாலும் வாழ்க்கை இனிமையானது. அழகானது. அதை அப்படியே எதிர்கொள்வதில்தான் எல்லா ஆனந்தமும் ஒளிந்திருக்கிறது. தத்துவமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பொதுவாக எந்தத் தத்துவத்தையும் படிப்பதில்லை. படித்து தெரிந்து கொள்வது என்னை மேலும் குழப்பிவிடுகிறது. என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், அம்மா- அப்பாவின் அடுத்தடுத்த மரணம்.

கேன்சர்... எதுவும் நிரந்தரமல்ல என்ற பளீரென்ற நிதர்சனம் தந்த பாடம். என் குழந்தையைத் தாங்க வேண்டிய பொறுப்பு... சொல்லப் போனால் அது பொறுப்பு மட்டுமல்ல; அடுத்த தலைமுறையை வழிநடத்துகிற மிக அன்பான கடமை. எல்லாச் சோகமும் சோகமும் அல்ல, எல்லா மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அல்ல. இந்த எல்லா அனுபவங்களையும் என் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கற்றேன்.

இந்த மாற்றத்துக்கான விதை சிறுவயதிலேயே உங்களுக்கு இருந்ததாகச் சொல்ல முடியுமா?


என் தந்தை சேஷகிரி ராவ் ஒரு மருத்துவர். ரேடியாலஜிஸ்ட். இந்திய ராணுவத்தில் போர்க்காலங்களில் பணியாற்றியவர். போரின் கோரத்தாண்டவம் அப்பாவுக்கு வாழ்க்கையின் கேள்விக்குப் பதில் தேட வைத்திருக்கிறது. ரமணருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தபோது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரில் அப்பாவும் ஒருவர். அப்பாவுக்கு ரமணர் மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஜெ. கிருஷ்ணமூர்த்தி, யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களிடம் அப்பாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஆன்மீக ரீதியான தேடலுடனும் கடவுள் மறுப்பாளராகவும் அப்பா இருந்தார். இந்தச் சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது... ஒருநாள் என்னுடைய ஆசிரியை "நீ கோவிலுக்குப் போவாயா, சர்ச்சுக்குப் போவாயா' என்று கேட்டார். எனக்கு நிஜமாகவே அதைப் பற்றித் தெரியவில்லை. நான் அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று அவருக்கு போன் செய்தேன். ""உன்னைத்தானே கேட்டார்கள். உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் சொல்லு'' என்று கூறிவிட்டார்.

நான் என் குழந்தையையும் அப்படித்தான் வளர்க்கிறேன்... (உதவியாளரை அழைத்து மூன்றாம் வகுப்பு படிக்கும் தம் மகள் சுபலஷ்மியை வரவழைக்கிறார். மகளிடம் where is God? என்கிறார். குழந்தை ஆள்காட்டி விரலால் நெற்றியைக் காட்டுகிறது. முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு, நம்மைப் பார்க்கிறார். தாம் சொன்னதை உறுதிபடுத்திய புன்னகை.)

இந்த ஒற்றுமைதான் உங்களையும் கமலையும் இணைத்ததாகச் சொல்லலாமா?

ஆமாம். அவரிடம் இதுபோல எந்த விஷயத்தையும் பேசலாம். மதம், சினிமா, பெண்கள், சமுதாயம், இலக்கியம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆரோக்கியமான விவாதங்கள் தினம் தொடரும். "அட நாம இப்படி யோசிக்கவில்லையே' என்ற ஆச்சர்யம் தினமும் கிடைக்கிறது.

கேன்சர் விழிப்புணர்வு, ரத்ததான முகாம், பெண்கள் கருத்தரங்கு என்று அடிக்கடி பார்க்க முடிகிறது. இது சம்பந்தமான வேறு எதிர்காலத் திட்டங்கள்...?

கமல் நற்பணி இயக்கத்தினர் இதோ இந்த மாதம் முழுக்கவே ரத்ததான முகாம் நடத்துகிறார்கள். பல இதய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவியிருக்கிறார்கள். மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். நூலகம் கட்டித் தருகிறார்கள். அவர்கள் பலத்தோடு எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகப் பாடுபடவேண்டும் என்று விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட முதியவர்கள்... இந்த இரண்டு தரப்பினரும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. பெண்களுக்கு கவுன்சிலிங் தர விருப்பம் இருக்கிறது. எங்கெல்லாம் ஆதரவு கேட்டு கைகள் நீளுகிறதோ, அத்தனையையும் கைதூக்கிவிட விருப்பம் இருக்கிறது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரியும். யாரையும் குற்றம் சாட்டாத, கருணையோடு அணுகுகிற பக்குவம் எனக்குப் பிடிபட்டிருக்கிறது. இதைச் சேவைக்கான முதல் கட்டமாக நினைக்கிறேன்.

மற்றபடி பொழுது எப்படிப் போகிறது..?

இன்னும் இரண்டு மணிநேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிற மாதிரிதான் வேலைகள் இருக்கிறது. கமல் சார் அலுவலகத்தைப் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதை முழுக்க கவனிக்கிறேன். நற்பணி இயக்க பணிகளுக்கு நேரம் ஒதுக்குகிறேன். என் குழந்தையை நானேதான் பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறேன், கூட்டி வருகிறேன். தசாவதாரம் படத்தில் கமலுக்கான பத்துவகையான காஸ்ட்யூம் தயாரிக்கும் முக்கிய வேலையும் செய்கிறேன். நான் நடிக்க விரும்புகிறேனா என்பது பலருக்குத் தெரியாது. அந்தத் தயக்கத்தின் காரணமாகவும் என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம். நல்ல கதையாக இருந்தால் நடிக்கவும் விருப்பமிருக்கிறது. என்னவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே வாழ்க்கையை அலங்கரிக்கத்தான். ஏனென்றால் வாழ்க்கை அழகானது.


-தமிழ்மகன்

17-11-2007

LinkWithin

Blog Widget by LinkWithin