வெள்ளி, மார்ச் 30, 2012

100 ஆண்டுகளுக்குப் பிறகு...தாதா சாகேப் பால்கே 1912- &ல் அரிச்சந்திரா என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். இந்தியாவின் முதல் திரைப்படம். முதல் மவுனப் படம். முதல் கறுப்பு வெள்ளைப் படம் என்ற பல் முதல்கள் இருந்தாலும் அந்தப் படத்துக்கு அவர் ‘முதல்’ போட்டதுதான் பெரிய விஷயம். படத்தின் வியாபாரம் எப்படி இருக்கும் என்ற எந்த சாதக பாதகங்களும் தெரியாத நிலையில் அதில் பணத்தை போடுவதற்குப் பலரும் தயங்கினர். அந்தப் படத்துக்காக அவர் முயன்று செலவிட்டார். அப்படியும் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் கிடைக்கவில்லை. தன் குடும்ப உறுப்பினர்களை நடிகர்களாக்கினார்.
அதன் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியான ஒரு படத்துக்கும் அதே சிரமம்.
சங்ககிரி ராசுகுமார் இயக்கிய ‘வெங்காயம்’ படம்தான் அது. தன் வீடு, தன் உறவினர்கள் வீடுகள், தன் தந்தை, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, மாமா, அத்தை, பாட்டி, தம்பிகள், தங்கைகள் அனைவரையும் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தில் முற்போக்குக் கருத்துகளைச் சொன்னார். சிறுவர்களை வைத்து அதைச் சாதித்திருக்கிறார் என்பதையெல்லாம்விட முக்கியமானது அவருடைய முயற்சி. பத்து கோடி, நூறு கோடி என்று பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தயங்கித் தயங்கி நுழையக்கூடிய சினிமா உலகம் ஒரு சாமானியனின் குடிசைத் தொழிலாக மாறியிருப்பது அசாதாரணமான முரண். படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா, விக்கிரமன், சேரன், ஆர்.கே.செல்வமணி, ரோகிணி போன்ற பல இயக்குநர்கள் இந்த அரிய முயற்சியை மனம் திறந்து பாரட்டியதோடு, தகுந்த விளம்பரத்தோடு வெளியிடலாம் என்று படம் வெளியான இரண்டாவது நாளே படத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். சொல்லியபடியே இயக்குநர் சேரன் இப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

எப்படி இந்தத் துணிச்சல் வந்தது? -சங்ககிரி ராச்குமாரைச் சந்தித்த போது கேட்டேன்.
‘‘துணிச்சல் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. இயலாமைதான் காரணம். என்னிடம் ஒரு கதை மட்டும் இருந்தது. அதுதான் என் மூலதனம். அதில் எந்த நடிகரையும் நடிக்க வைக்க என்னிடம் பொருளாதாரம் இல்லை. கதையில் மொத்தம் 105 பேர் நடிக்க வேண்டியிருந்தது. நாயகன், நாயகிக்கு மட்டும் இரண்டு பேரை வெளியில் இருந்து தேர்வு செய்தேன். மீதி 103 பேரும் என்னுடைய உறவினர்கள்தான். நானே க்தை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய பொறுப்புகளை செய்தேன். ஒரு கேரக்டரில் நடிக்கவும் வேண்டியிருந்தது. மேக் அப், சமையல் போன்ற பொறுப்புகளும்கூட எங்கள் குடும்பத்தினரே செய்தனர்.
ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு ஒரு போட்டோ எடுப்பதே ஆடம்பரமான விஷயமாக இருக்கும்போது ஒரு சினிமாவை எடுப்பதற்கான துணிச்சலைத் தந்தவர்கள் என் குடும்பத்தினர்தான். பத்தாயிரம், இருபதாயிரம், என்று கடன் வாங்கித்தான் படத்தை தயாரித்தேன். எப்போதெல்லாம் ரெட் ஒன் கேமிராவை வாடகைக்கு எடுக்க காசு கிடைக்கிறதோ அப்போதொல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அன்றைக்கு வயல் வேலைகளை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு எனக்கு உதவி செய்ய வந்து விடுவார்கள் என் குடும்பத்தினர். எல்லோரும் அவரவர் உடையில் வந்து நடித்தனர். அவர்களுடைய லுங்கிகள், டவுசர்கள், பாவாடைச் சட்டைகள்தான் காஸ்ட்யூம். நடிகர் சத்யராஜை அணுகி என் முயற்சியைச் சொன்ன போது அவர், அவராகவே ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடிக்க சம்மதித்தார்.
குடும்பத்தினர் யாருக்கும் சினிமா அனுபவமோ, நடிப்பில் அனுபவமோ இல்லை. படத்தில் கூத்துக் கலைஞனாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் என்னுடைய தந்தை’’ என்றார்.
படத்தில் பலரும் வெகு இயல்பாக நடித்திருந்தனர். குறிப்பாக ராச்குமாரின் அப்பா. கண்கலங்க வைத்துவிட்டார்.
சர்வதேச விருது பெறும் பல திரைப்படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரானவைதான். நியூஸிலாந்தில் பாடல் காட்சி, தேவையில்லாத பிரம்மாண்டம், போன்றவற்றில் இருந்து தமிழ் சினிமாவை மீட்க முடியும் என்பதற்கு என்னால் முடிந்த நிரூபணம் இது’’ என்கிறார் ராசுகுமார்.
வெங்காயம்... உரிக்க உரிக்க பல உண்மைகளைச் சொல்லுகிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin