செவ்வாய், ஜூன் 23, 2009

பங்கு ஆட்டோ பயணம்!




சென்னையில் ஷேர் ஆட்டோவில் பிரயாணிக்கிற மனிதர்களுக்கு சொந்த பந்தத்தோடு இன்பச் சுற்றுலா வந்தது மாதிரி ஒரு உணர்வு இருக்கும். அப்படி ஒரு நெருக்கம். பஸ்ஸில் நாம் ஒரு பெண்ணின் அருகில் அமரத் தயங்குவோம். அல்லது நம் அருகில் ஒரு பெண் வந்து அத்தனை சுலபத்தில் அமர்ந்துவிட மாட்டாள். ஷேர் ஆட்டோவில் இந்த இலக்கணம் இல்லை.

ஒருவரோடு ஒருவர் இணக்கமாக அமர்கிறார்கள். எதிரே அமர்பவரின் கால் முட்டி நம் காலின் மீது படும். ஒரு சிலர் மட்டும் "சாரி" சொல்கிறார்கள். பலர் சொல்வதில்லை. அது தேவைப்படுவதும் இல்லை. "இந்தப் பையைக் கொஞ்சம் அப்படி வையுங்களேன்'' என்று நம்மிடம் கொடுத்து பாரத்தை இறக்கி வைக்கிறார் ஒரு பெண்மணி. "ப்ளூ ஸ்டார் வந்தா நிறுத்தச் சொல்லுங்களேன்'' என்கிறார் ஒரு பெண்மணி நம் முதுகைத் தொட்டு. ஐந்து பேர்தான் அதில் ஏற்றப்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது போலும். அதைப் பின்பற்றுவதை பார்க்கவே முடியாது. ஒன்பது பேர் வரை ஏறிக் கொள்கிறார்கள். ஒருவர் மூச்சை மற்றவர் பெற்றுக் கொள்ளாமல் எந்த ஷேர் ஆட்டோ பயணமும் முடிவுக்கு வருவதில்லை. எல்லாவற்றையும் ஷேர் செய்து கொள்வதால் இதற்கு இந்தப் பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

எதிரே வரும் ஷேர் ஆட்டோக்காரர் "பார்த்துப்பா ரவுண்டானாவுல போலீஸ் நிக்கிறான்'' என்று தகவல் கொடுக்கிறார். நம் ஆட்டோக்காரர் சில பல சந்துகள் வழியாக நுழைந்து ரவுண்டானாவைத் தவிர்த்து வேறு பக்கமாகச் செல்கிறார். ஆட்டோவில் இருப்பவர்கள் மார்க்கம் எதுவாக இருந்தாலும் அடையப் போகும் இலக்கு ஒன்றுதான் போன்ற ஒரு சரணாகதி தத்துவத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆட்டோக்காரர் தடம் மாறிப் போவதை அவர்கள் தட்டிக் கேட்பதில்லை.

பாயிண்ட் டு பாயிண்ட் பயணிப்பவர்களாக இருந்தால் வார இதழை மடக்கிப் பிடித்துப் படித்துக் கொண்டு வருகிறார்கள். சிலர் செல் போனில் எஃப்.எம். வைத்து காதில் ஹெட் போன் செருகி பாடலில் கண் சொருகி வருகிறார்கள். சிலருக்கு எஸ்.எம்.எஸ். பணிகளை முடிக்க ஷேர் ஆட்டோ பயணம் தோதாக இருக்கிறது. சிலர் ஏறி உட்கார்ந்த மறுவினாடி போனைப் போட்டு ஒன்பது பேருக்கும் கேட்க சப்தமாகப் பேசுவோரும் உண்டு. சிலர் பக்கத்தில் இருப்பவர்க்கும் கேட்காதவாறு பேசுவார்கள். ட், ச் போன்ற சில வல்லின ஒற்றெழுத்துகள் மட்டும் கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைத் தவிர்க்க விரும்புபவர்களுக்குச் செல்போன்தான் சிறந்த ஆயுதம். தானுண்டு தன் செல்போனுண்டுபோல இருப்பார்கள்.

முகப்பேரில் இருந்து ஜெமினி போகிற ஆட்டோ. எனக்குப் பக்கத்தில் நாமம் போட்ட ஒருவர் ஏறி அமர்ந்தார். "எபோவ் சிக்ஸ்டிலாம் ட்ரெய்ன்ல பாதி டிக்கெட்தான் தெரியுமோல்யோ?'' என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுநரிடம். அவர் "தெரியாது சாமி'' என்றார் ஆரம்பத்தில். "ஷேர் ஆட்டோவில மட்டும் அநியாயமா வாங்றேளே. நான் பாதிக் காசுதான் தருவேன்.''

சட்டென்று எல்லோரும் முன்னே உந்தப்பட்டோம். ஆட்டோவை அப்படியே சரக்கென பிரேக் போட்டு நிறுத்தி "காசே தரவேணாம். நீ இங்கியே எறங்க்கோ.. சாவுகிராக்கி. காலங்காத்தால'' என்றார்.

"ஏடாகூடமா பேசப்படாது.. எப்படி சாவுகிராக்கினு சொல்லலாம்? திருப்பதியிலேயே வயசானவாளுக்கு தனிக் க்யூல பிரியாரிட்டி கொடுத்து அனுப்பறா... நீ என்னடானா லோகத்தில எதுக்கும் கட்டுப்படமாட்டேன்னு சொன்னா எப்படி?''

"ஐயரே.. நீ எறங்கப் போறீயா, இல்லையா?'' - ஆட்டோவின் கியர் லிவரை மூர்க்கமாகப் பார்த்தபடி கேட்டார் ஓட்டுநர்.

டயம் ஆகுதுப்பா என்று அதற்குள் ஆட்டோவில் குரல்கள். "அங்க வந்து தகராறு பண்ணே.. அவ்வளவுதான்'' என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைக் கிளப்பினார்.

முழுக்கட்டணத்தையும் கொடுத்துவிடுவாரா, பாதிக் கட்டணம்தான் தருவாரா? சேரும் இடத்தில் இது எப்படி முடியும் என்று எனக்கு ஆர்வமாகிவிட்டது.

"நீங்க எங்க போறேள்?''- இது என்னைப் பார்த்து. எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதற்குள் நான் பதிலைச் சொல்லிவிட்டிருந்தேன்.

"நீங்க என்ன பண்ணுங்க. ஸ்டெர்லிங் ரோட் கார்னர்ல எறங்கி அங்கிருந்து 47 புடிங்க... ஏ,பி,சி எதுவாக இருந்தாலும் போவும். பச்சையப்பாஸ் காலேஜ் கேட்டு இறங்கிடுங்க'' கேட்காமலேயே வழி சொன்னார்.

"இல்லை சூளை மேட்ல இறங்கி நடந்து போயிடுவேன்'' என்றேன்.

"சூளைமேட்ல இறங்கி எப்படிப் போவீங்க?''

வலிந்து வழி சொல்ல வந்தவர் என்னிடம் வழி கேட்டுக் கொண்டார். ஆனாலும் இது அவர் எனக்கு உதவி செய்த லிஸ்டில்தான் அடங்கும் போல் இருந்தது.

"என்னைப் போய் ஐயருங்கிறான்.. அவன் கிட்ட என்ன பேசறது?'' என்றார் இறுக்கிப்பிடித்த தடித்த குரலில். அது ஆட்டோக்காரருக்கு நிச்சயம் கேட்டிருக்கும். என்னையும் ஐயங்காரரின் உடந்தையாக நினைத்துவிடுவான் போல பயமாக இருந்தது. அந்த இடுக்கான இடத்தில் சற்றே தள்ளி உட்கார முயன்றேன்.

ஆட்டோக்காரர் சட்டைசெய்யவில்லை. அவர் ‘சிவனே' என்று வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார், வண்டியில் இருக்கும் வைணவரை மறந்து.

"குடும்பத்தில பையன், பொண்ணு, பேரன், கொள்ளுப் பேரன் எல்லாரையும் ஆட்சியில கொண்டாந்து வுக்கார வெச்சுட்டான். ஜனங்க அவனுக்குத்தான் ஓட்டுப் போடுது. ஒண்டிக்கட்டையா ஒருத்தி இருக்கா அவளுக்குப் போடமாட்டேங்கிறா'' என்ன தைரியத்திலேயோ சத்தமாகச் சொன்னார். திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். "வளர்ப்பு மகனும்கூட இல்லையே..'' எனக்கு அதில்தான் சந்தேகம் போல தெளிவுபடுத்தினார்.

எதைச் சொன்னாலும் பெருத்த விவாதமாக மாற்றுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். தலையசைத்தால்கூட அதைப் பெரிய வாய்ப்பாக்கிக் கொண்டு பேசுவார் என்று அசையாமல் இருந்தேன். உறங்கும் நேரம் தவிர எல்லா நேரத்திலும் பேசுவார் போல. நானும் என் செல் போனைத் துணைக்கு எடுத்தேன். அவர் என்ன விலை? என்று ஆரம்பித்தார். "நான் செல் வைச்சுக்கறதில்லே'' என்றார் தொடர்ந்து.

நான் சூளைமேட்டுக்கு முன்னாடியே இறங்கிவிட்டேன், "இங்க ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருக்கிறது'' என்று வாய் உளறலோடு ஒரு பொய்க் காரணத்தைக் கூறிவிட்டு.

ஜெமினியில் ஜெயித்தது ஆட்டோக்காரரா? ஐயங்காரா? என்பது மட்டும் எனக்கு பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது இன்றுவரை

LinkWithin

Blog Widget by LinkWithin