சனி, பிப்ரவரி 13, 2010

திராவிட சமுதாயத்தின் நூற்றாண்டு வாழ்க்கை

ஜனவரி மாத புத்த்கம் பேசுது இதழில் வெட்டுப்புலி விமர்சனம்
ஜ.சிவகுமார்


கடந்த நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் - குறிப்பாக தமிழக அரசியல், சமூகம், நிலவியல் மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் - நிகழ்ந்த மாறுதல்களை மையப்படுத்தி தமிழ்மகன் எழுதிய 'வெட்டுப்புலி' நாவல் வெளிவந்துள்ளது. வெட்டுப்புலி (Cheeta Fight) தீப்பெட்டியை நாம் பார்த்திருப்போம். சிறுத்தையை ஒரு மனிதன் நேருக்கு நேர் நின்று அரிவாளால் வெட்டும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி அது. உண்மையிலேயே நிகழ்ந்த இச்சம்பவத்தின் தரவுகளைத் தேடி தமிழ்ச்செல்வன், பிரபாஷ், ஃபெர்னாண்டஸ் ஆகிய மூவரும் செல்கின்றனர். அதற்குள்ளிருந்து இரண்டு குடும்பங்களின் கதையும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்த இக்குடும்பங்களின் கதை சொல்லப்படும் முறை மட்டுமல்ல; களனும் கூட புதியது. சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் திருவல்லிக்கேணி, தங்கச்சாலை, மயிலாப்பூர் மிஞ்சிப் போனால் பட்டாளம், ஓட்டேரி எனத் தன் நிகழ்வுகளை முடித்துக் கொள்கின்றன. புறநகர்ப் பகுதிகளில் நிலத்தோடும் விவசாயத்தோடும் அங்கேயே தங்கியிருந்த மக்களைப் பற்றி இதுவரை எவ்விதப் பதிவுமில்லை.

இந்நாவல் செங்குன்றத்துக்கு அடுத்துள்ள சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் விநியோகத்துக்காக வெள்ளையனிடம் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்ததோடு, பிழைப்பிற்காக தன் நிலத்தை தானே வெட்டும் குடிமக்களின் சோகத்தை தமிழ்மகன் பதிவு செய்கிறார். அதேசமயம் சாதாரண மக்கள் தங்களை ஆள்வது வெள்ளையனா? இந்தியனா? என எந்த அக்கறையும் பாதிப்புமற்று வாழ்ந்திருந்தலையும் பதிவு செய்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் இந்திய விடுதலைக்கு ஆதரவான காங்கிரசும் அதனை இன மற்றும் மொழி ரீதியாக விமர்சித்த நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றன. நீதிக்கட்சி பின்னர் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாகியது. பார்ப்பனர்கள் தன்வயப்படுத்தாத அல்லது தன்வயப் படுத்த முடியாத இயக்கமாகவும் திராவிட இயக்கம் வளர்ந்தது. எனவே (வட) தமிழகத்தில் பிராமரணல்லாதார் பங்களிப்பும் எதிர்பார்ப்பும் உடையதாக இவ்வியக்கம் இருந்தது. இந்தப் பின்னணியில் தான் சின்னா ரெட்டி மற்றும் ஆறுமுக முதலி குடும்பங்களின் கதை சொல்லப்படுகிறது.சிறுத்தையை நாயுடன் வெட்டிக் கொன்ற சின்னாரெட்டி குறித்து தேடிப் போகிறவர் களுக்கு அங்கு வெவ்வேறு கதைகளையும் நபர்களையும் தெரிந்து கொள்கின்றனர்.

குறிப்பாக தசரத ரெட்டியின் மகன் லட்சுமண ரெட்டி, அதாவது தி.க. அனுதாபம், பறையர் பெண்ணைக் காதலித்து அவளையே திருமணம் செய்ய வேண்டும் எனத் தேடுவதும், பின்னர் சகுனம் பார்ப்பது மூடநம்பிக்கை என்பதை நிரூபிக்க விசாலாட்சியைத் திருமணம் செய்வது, தனது மகள்களுக்கு சாதி மீறிய திருமணம் செய்ய முயன்று முடியாமல் போவது, மகன் நடராஜன் தீவிர திராவிட இயக்கப் போராளியாவது, சாதி மீறி திருமணம் செய்வது, பின்னர் போராட்டத்தில் அடிபட்டு சித்த பிரமையாகி கிடப்பது வரை தொடர்கிறது. மற்றொரு புறம் ஆறுமுக முதலியின் சினிமா ஆர்வமும் தி.க. அனுதாபமும், அவரது மகன் சிவகுரு சினிமா ஆசையால் பிச்சைக்காரனாக வீதியில் இறப்பதும் சொல்லப்படுகிறது. ஆறுமுக முதலியின் அண்ணன் கணேசன் தீவிர தி.க. போராளியாகவே இறப்பது, அவரது மகன் தியாகராசன் தீவிர தி.மு.க. ஆதரவாளனாக இருப்பது, குடிப்பது, மிசாவில் கைதாகி சித்திரவதை செய்யப்படுவது, வாழ்வில் பிடிப்பேதுமற்ற தியானத்தில் ஈடுபடுவது எனக் கணேசனின் குடும்பக் கதை சொல்லப்படுகிறது.

தியாகராசன் தன் மனைவி ஹேமலதாவிடம் தன் கொள்கைகளைத் திணிக்க முயன்று அதனாலேயே அவள் தீவிர அ.தி.மு.க. அனுதாபி ஆகிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து, மனைவி வேறொருவனுக்குப் பிள்ளைப் பெறுகிறாள். துன்பக் காலத்தில் இருவரும் புரிந்து கொண்டு ஒன்று சேர்கின்றனர். இவ்வாறு இந்நாவலின் மனித உணர்வுகளின் பல பரிமாணங்களும் யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளன. தசரதன் தன் அண்ணிதான் இரவில் காலைச் சுரண்டியவள் என யூகித்து அடையும் அதிர்ச்சியும் குறுகுறுப்பும் இரவில் அவன் அடைந்த பதைபதைப்புகளும் ஏமாற்றமும் குழப்பமும் வாசகரையும் தொற்றிக் கொள்கின்றன.

இந்நாவலை எழுதுவதற்காக, தரவுகளைத் திரட்டுவதற்காக இவர் எடுத்துக்கொண்ட முயற்சி மதிக்கத்தக் கவை. அண்ணா பெரியாரைப் பிரிந்தது, கலைஞரை எம்.ஜி.ஆர். பிரிந்தது, மிசா காலம், இந்திரா காந்தி இறந்தது முதலான தகவல்களை எளிதாகத் தேடிப் பயன்படுத்தலாம்.

ஆனால் முப்பதுகளில் கிராமத்தார் காபி குடித்ததைச் சொல்வதிலுள்ள வெட்கம் கலந்த தற்பெருமை, பெண்கள் செருப்புப் போட்டுக் கொள்வதிலிருந்த கூச்சம், பெரியாருக்காக காமராசர் தற்போதுள்ள பெரியார் திடலை விட்டுத் தருமாறு பேசியது, நாடார்குல மித்தரனில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சி குறித்துப் பேசியது முதலான அரிய தரவுகளை கதைப் போக்கினூடாக தந்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே சாதிக்கு பல பட்டங்கள் இருப்பதைத் தொட்டுக் காட்டுகிறார்.

தவிரவும் மூன்று தலைமுறைகளாக செங்குன்றம் - பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கான வழித்தடத்தில் ஏற்பட்ட மாற்றம், கிராமத்துக்குள் கரண்ட், ரேடியோ, டி.வி. முதலானவற்றின் வருகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ரேடியோவில் பாட்டு கேட்பவர்கள் ரேடியோவுக்குப் பின்னிருந்து யாரேனும் பாடுகிறார்களா என அடையும் சந்தேகமும், டி.வி.யில் ஏரியலோடு மல்லக்கட்டுவதும் வாசகனை தன்னனுபவத்துக்கு இட்டுச் செல்லும்.

தவிரவும் திரைப்படத் துறைக்கும் அரசியலுக்குமான உறவும் முரணும் தெளிவாக சித்திரிக்கப் பட்டுள்ளது. இத்தனைத் தரவுகளைத் தேடியதும் நாவலில் பயன்படுத்தியதும் மட்டுமல்ல இவரது சிறப்பு. இது எதுவுமே நாவலில் துருத்திக் கொண்டு நிற்காமல், கதைப்போக்கினோடு ஒட்டியே புனைந்ததுதான் இவரது உச்சபட்ச வெற்றி.

திராவிட இயக்கங்களோடு பயணித்த நபர்களுக்கு ஒரு கட்டத்தில் தேக்கம் ஏற்படுகிறது. தியாகராசன் தன் மனைவியோடு 'அன்னை' ஆசிரமத்துக்குச் சென்று தியானம் செய்கிறான். கணேசனால் கலைஞரைத் தாண்டிப் போகமுடியவில்லை. தன் கல்லூரி நாட்களில் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடேசன் சுய நினைவற்ற நிலையிலும், தொலைக் காட்சியில் வெட்டுண்ட பிரபாகரனைப் பார்த்து உறைந்து போகிறான் தமிழ்ச் சமூகத்தைப் போல.

நாவலின் முன்னுரையில் இதனைத் திராவிடக் கண்ணாடி அணிந்து படிப்பது அவசியம் என்கிறார். ஆனால் எந்தவொரு தனி மனிதரையோ குறிப்பிட்ட இயக்கத்தையோ இவர் குற்றம் சாட்டவில்லை.

கதாபாத் திரங்கள் அவரவர் சமூக மற்றும் வரலாற்றுச் சூழல்களில் மௌனமான விமர்சனத்தோடு சித்திரிக்கப் பட்டுள்ளனர். தசரத ரெட்டியின் மனைவிக்கு புருஷன் முன்னால் சாப்பிடுவது கூட மரியாதையற்ற செயல். ஹேமலதாவுக்கு தன் மீது கொள்கைகளைத் திணிக்கும் கணவனைப் பழிவாங்க அ.தி.மு.க.வில் சேருவது சரியான செயல்.

நடராஜனுக்கு சாதி ஏற்றத்தாழ்வு களை உருவாக்கி நாட்டைக் கெடுத்த பார்ப்பனர்கள் மீது வெறுப்பு; பிராமின் எனும் ஒரே காரணத்தால் கிருஷ்ண ப்ரியையை மணக்க மறுக்கிறான். கிருஷ்ண ப்ரியைக்கு நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை, பிறகு ஏன் நடராஜன் நம்மை வெறுக்கிறான் எனும் கேள்வி.

இப்படி அவரவர்களுக்கு அவரவர் நியாயம் என்றாலும் பார்ப்பனர்கள் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலமாகவே அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர் எனும் தொனி நாவல் முழுதும் இருக்கிறது.

அதேசமயம் சாதியை ஒழிக்க வந்த திராவிட இயக்கங்கள் இந்துத்துவ அரசியலுக்குள்ளும், குடும்ப அரசியலுக்குள்ளும், சாதிய அரசியலுக்குள்ளும் இருந்து விடுபட்டு சமத்துவத்தை நோக்கி நகர்வது எப்போது எனும் கேள்வி மௌனமாக எழுப்பப்படுகிறது.

மொத்தத்தில் இந்நாவல் விறுவிறுப் பான கதைக்காக மட்டுமல்லாமல், 20-ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றையும் அறிய தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதவும். திராவிட இயக்கத்தினை எதிர்பார்த்து, நம்பி இக்குடும்பங்களைப் போல் பலர் சந்தித்த இழப்புகளுக்கு அர்த்தம் என்ன? சாதியை ஒழிக்கப் பிறந்த திராவிட இயக்கம் சார்ந்த கட்சிகளே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தாலும் சாதி சங்கங்களும் அதன் செல்வாக்கும் அதிகரித்ததற்கு என்ன காரணம்? அரசியல் கட்சியாகத் தொடங்கி பின்னர் நெருக்கடிகளால் பண்பாட்டுச் செயல்பாடுகளில் 'அக்கறை' காட்டிய தேசிய இயக்கத்தின் தோல்வியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் பண்பாட்டு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு அதனாலேயே மக்களுடைய ஆதரவும் பெற்று ஆட்சியைப் பிடித்த திராவிடர் இயக்கங்கள் பண்பாட்டு நடவடிக்கை களைத் தொடராமல் போனதேன்? இது ஆட்சியாளர்களின் பிரச்சனையா? அல்லது சமூகத்தின் பிரச்சனையா? முதலான கேள்விகள் இந்நாவலை வாசித்ததன் ஊடாக எழுகிறது.

நாவலுக்குள் இதற்கான விடை மௌனம்தான். இந்த மௌனம்தான் வாசகருக்கு பற்பல தேடல்களையும் அவதானங்களையும் உருவாக்கக் கூடியவை.

-ஜ.சிவகுமார்

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஆனந்தவிகடன்


வெட்டுப்புலி நாவல் குறித்து ஆனந்தவிகடன் (17.2.10) வார இதழில் வெளியான அறிமுகக் குறிப்பு.

திங்கள், பிப்ரவரி 01, 2010

வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.

மலரும் நினைவுகள் என்ற வலைப்பதிவில் நண்பர் ஆதவன் எழுதிய புத்தக அறிமுகம் இது.

வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்..
(திறனாய்வு அல்ல.. புத்தக அறிமுகம் மட்டுமே..)

புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை.
விலை: ரூபாய் 220/- (நாவலின் ஆசிரியர் உழைப்புக்கு இது மிகக் குறைவு)


நீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகம் வெட்டுப்புலி. படிக்கத் தொடங்கியதும், என்னைத் தானாகவே அடுத்தடுத்த பகுதிகளுக்கு இட்டு சென்றது புத்தகத்தின் சரடுகளே.. ஒரு நாவலாசிரியரின் வெற்றியும் அதுவே. படிக்கும் வாசகனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல், தோள் மீது கைப்போட்டு, அழைத்து சென்று ஒரு புதுப் பரவசத்தை ஏற்படுத்த வேண்டிய தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்த எல்லா நாவலாசிரியர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெட்டுப்புலி நாவல் மூலம் தமிழ்மகனும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


"cheeta fight" என்கிற தீப்பெட்டியில் ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுத்தைப் புலியை வெட்டப்போகும் காட்சி நாம் எல்லோரும் பார்த்ததே. ஆனால் அந்த ஒற்றைக் கட்சியின் வழியாக நூற்றாண்டு கால சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் பற்றிய மிக ஆழமான பதிவை தனது இந்த நாவலின் வழியாக சொல்லி இருக்கும் தமிழ் மகன் நிச்சயம் வரலாற்றில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர்.


எந்த விதத் திரிபும் இல்லாமல், ஒரு சாரார் பக்கம் மட்டுமே சாய்ந்துவிடாமல், இவ்வளவு நடுநிலைமையோடு ஒரு ஒரு பரப்பின் வரலாற்றை பதிவு செய்திருப்பது, அதுவும் புனைவுகளோடு, உயர்ந்த இலக்கியத் தரத்திற்கு ஈடாக உண்மைக் கலந்த கதையை, வரலாற்றோடு இணைத்து பதிவு செய்திருப்பது மிக போற்றத்தக்க முயற்சி.


ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலேயே இப்படியாக சொல்லி இருப்பார். "வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும், விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்."


திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தாலும், இந்த நாவல் அந்தக் கால சூழ்நிலையை தழுவி செல்கிறதே தவிர, அந்தக் கட்சியின் பக்கம் சாய்ந்து செல்லவில்லை. மிக சவாலான பணியது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணியை நாவலின் வழியாக படிக்கும்போது நாமும் அதே காலக்கட்டத்துக்கு சென்று வருவது நாவலின் காட்சிப்படுத்துதலுக்கு சிறப்பு. இந்த நாவலில் அண்ணா வருகிறார். கலைஞர் வருகிறார். பிரபாகரன் வருகிறார். பெரியார் வருகிறார். திராவிட இயக்கங்களின் வேரான திரைப்படத் துறையும் அதன் வளர்ச்சியும் இந்த நாவலின் வழியாக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.


மதுரை, திருநெல்வேலி, போன்ற தென் மாவட்டங்களைப் பற்றி ஒரு விதமான பரவசத்துடனும், சென்னை போன்ற மாநகரத்தைப் பற்றி ஒருவிதக் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கும் தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் இந்த நாவலில் ஏதாவது ஒரு பகுதியை முழுமையாக படித்தால் (நேர்மையோடு) கூட சென்னை சார்ந்த ஒரு சிறந்தக் காவியம் உருவாகக் கூடும். சினிடோன் நாராயணன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுக முதலியார் எனும் கதாபாத்திரம் திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குவதில் தொடங்கி, தன் முயற்சியில் தொடர் தோல்விகள் அடைவது வரை மட்டுமே யாராவது திரைப்படமாக எடுத்தால், தற்கால சூழலில் அது மிக யதார்த்தமான படமாக இருக்கும்.


"பெரிய பாளையம் வரும்போதே உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவில் வாசலிலேயே உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்த கூழையும், ஊறுகாயையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இருவரும் சற்று நேரம் களைப்பாறினார். வேப்பமரத்து நிழலும் நடந்த களைப்பும் சட்டென இருவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சற்று தூரத்தில் குருவிக்காரர்கள் சிலர் உண்டிகோல் செய்துகொண்டும் மைனா, கிளி, அணில்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர்."


மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். ஏதோ மதுரை மாசி வீதியிலோ, திண்டுக்கல் நெய்க்காரன் பட்டியிலோ, நடந்த சம்பவம் அல்ல மேற்சொன்னது. இது நடந்தது சென்னையில். சென்னைப் புறநகரான பெரியபாளையம் பகுதியில்.


சென்னையில், குருவிகள் இல்லை, மைனா என்றொரு பறவையே இங்கு இருந்திருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் எல்லா மேதாவிகளும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் கூட சென்னை நகரின் மீது (நினைவிருக்கட்டும் நான் கூட சென்னையை பிறப்பிடமாக கொண்டவன் அல்ல.) கொண்ட அளவுக் கடந்த பாசத்தினால் நாவலை சென்னை சார்ந்த படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாவலாசிரியர் அப்படி எவ்விதமான பிரக்னையுமின்ரி சென்னை சார்ந்த எல்லா விசயங்களையும், இந்த ஒற்றை நாவலில் பதிவு செய்திருக்கிறார். பிற்காலத்தில் சென்னை நகரின் வரலாறு தவறாக திரிக்கப்படுமாயின் அதற்கு இந்த நாவல் மிக சரியான பதிலாக அமையும்.


ஒரு நாவலின் மிக முக்கிய பணி, எல்லாவற்றையும் மிக தெளிவாக, மிக நுணுக்கமாக விவரிப்பது. வெட்டுப்புலி நாவலில் சென்னையில் வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் உயர்ந்த பண்புகளும், மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.


நாவல் பற்றி சொல்ல வந்த எதை விடுவது, எதை தொடுவது என்கிற குழப்பம் எனக்குள் மேலோங்கி இருப்பதால், நான் எனக்கான, சென்னை நகரின் மேன்மையைப் போற்றும் ஒரு சில விடயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பேன். புனைவுக் கலந்த நாவல்தான் என்றாலும், அதன் ஆசிரியரே, எது நிஜம், எதுக் கற்பனை என்பதை முதலிலேயே சொல்லி விடுவதால் எவ்விதக் குழப்பமும் இன்றி நாவலை வாசிக்க முடிகிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியும், மிக கவனமாக வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசிப்பு உலகிற்கு புதிதாக வந்தவர்கள் கூட எந்த வித தயக்கமுமின்றி வாசிக்க வேண்டிய நாவல் வெட்டுப்புலி. காரணம் அதன் எளிய நடையும், மொழி வடிவமும். நமக்கு புரியாத ஒரு சில சொற்களுக்கு ஆசிரியரே பொருள் கூறிவிடுவதால் நமக்கு படிப்பதும், கதையை தொடர்ந்து செல்வதும் எளிதாகி விடுகிறது.


முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினால் போதும், அடுத்தடுத்த பகுதிகளுக்கு இந்த நாவல் உங்கள் கைப்பிடித்து அழைத்து செல்லும்.

வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.

எல்லோரும் அவசியம் வாசிக்க, நேசிக்க வேண்டிய நாவல்

LinkWithin

Blog Widget by LinkWithin