ஞாயிறு, நவம்பர் 23, 2008

செவ்வாய்க்கிழமை

"நா அக்கா வீட்டு வரைக்கும் போயிட்டு வந்திர்றேன் பாமாயிலும் சர்க்கரையும் வாங்கி வெக்கிறியா?'' என்று கேட்டுவிட்டு}மகேஷ் அதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டது போல்} ஐம்பது ரூபாய் எண்ணிக் கொடுத்தாள் பங்கஜம்.

"எனக்கொரு வேலை இருக்குதுமா'' என்றாள்.

"ரேஷன் வாங்கறதுக்கு இன்னிக்கிதான் கடைசி நாளு. உன் வேலைய நாளைக்கி வெச்சிக்கோ... சீக்கிரமா போய் லைன்ல நில்லு. அப்புறம் ஆயிடும்'' என்று சொல்லிவிட்டு ஒயர் பையில், அக்கா வீட்டுக்குக் கொண்டு போக வேண்டிய சில சமாச்சாரங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.

"வேலை விஷயமா போறேம்மா... இன்னிக்கி போனாத்தான்...''

"ரேஷன் வாங்கிட்டுப் போய்வா...''

"ஏழு மணிக்கி அங்க இருக்கணும்''

"சரி... போய்ட்டு வந்து வாங்கு...''

"வர்றதுக்கு எவ்ளோ நேரமாகும்னு தெரில''

"லேட் ஆகிற மாதிரி இருந்தா. நாளைக்கி வர்றேங்கனு தன்மையா சொல்லிட்டு வா, நானும் இன்னிக்கி வர்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்... எல்லோரும் திருவேற்காடு கோயிலுக்குப் போறோம். எல்லாரும் காத்துக்குனு இருப்பாங்க''

"அம்மா''

"என்னடா''
"அங்க செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமைதான் ஆள் எடுப்பாங்க.. நா போகணும்''

"அப்பன்னா அடுத்த வாரம் போ. இல்லாட்டி வேற யாரையாவது ஏற்பாடு பண்ணு. டெய்லி சுத்தரியே கண்டவன் கூட... இந்த வேலைசெய்யச் சொல்வான் பார்க்கலாம்?'' என்று கோபம் ஆனார்கள்.

மகேஷ் பேண்டை எடுத்து ஆவேசமாய் நுழைந்தான். சட்டை போட்டான். "ட்ரங்க்' பெட்டி திறந்து "ப்ள்ஸ்டூ' படித்த அடையாளக் காகிதங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டான். ஒரு நோட்டில் வைத்துக் கொண்டு, "நா வரேன்'' என்றான்.
பங்கஜம் "வீட்டுக்கு ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லை'' என்று விளக்கிக் கொண்டிருந்ததைப் பாதி கேட்டான், மீதியை யூகித்துக் கொண்டே வெளியே போனான்.

அது வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் செய்யும் நிறுவனம். இருநூறு, முன்னூறு பேர் வேலைக்கு இருந்தார்கள். தொண்ணூறு சதவீதம் பேர் தற்காலிக வேலையாளர்கள். சி.எல். மூன்று மாதத்திற்கொருமுறை நிறுத்தி விடுவார்கள். பாதிப்பேர் துன்பம் தாளமுடியாமல் ராஜினாமா செய்வார்கள். சிறிது அஜாக்கிரதையாக இருந்தால் உயிரையே பாதிக்கும் வேலைகள். எப்படியும் வாரத்திற்கொரு முறை ஆளெடுத்தாக வேண்டும். குறைந்து போனவர்களைக் கூட்டுகிற நாள் செவ்வாய், எல்லாம் தெரிந்து கொண்டுதான் மகேஷ் வந்திருந்தான். மகேஷ் எண்ணிவிட்டான். இவனோடு சேர்த்து மொத்தம் பதினேழுவர். நிறைய பேர் லூங்கியில் இருந்தார்கள்.

பேசிக் கொண்டிருந்த விதமும் இவனுக்குத் தோதாய் இல்லை. யாருடனும் பேசவில்லை. அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

"மச்சி கெடைக்குமா?''

"பாக்கலாம். போனவாரம் பாஞ்சிபேர் எடுத்தாங்களாம்.''

"பாஞ்சி பேரா?... எத்தினி பேர் வந்தாங்க?''

"இன்னா ஒரு முப்பது பேர் இருக்கும்... இன்னிக்கிப் பரவால்லயே... அன்னைக்கி நீ வந்திருந்தே...எள்சிட்டிருப்பே''

"ஏன்?''

"குமார கேட்டுப்பாரு, ஒரு மணி நேரம். செமையா எள்சிட்டான்''
மகேஷுக்கு நிம்மதி. ஐந்தே பேரை எடுத்தாலும் நமக்கு வேலை உண்டு என்று தீர்மானமானான்.
அங்கு வந்திருந்தவர்களில் "டீசென்ட்' விஷயத்தில் முதல் மார்க் போட்டுக் கொண்டான். நோட் புக்கின் பக்கங்களைக் கட்டை விரலால் "சார் சார்' என்று நீவினான். ப்ள்ஸ் டூ படித்த சான்றிதழின் நகலை நம்பிக்கையோடு பார்த்தான்.
மோகன்தாஸ் சாரோட முயற்சியால் தொகுதியின் மாணவர் அணி அமைப்பாளரைப் பிடித்து, மாவட்ட அணிச் செயலாளர் வரைக்கும் போனான் மகேஷ்.

"இப்படி மொட்டையா வந்து வேலை வேணும்னு கேட்டா எப்பிடி?''

"....''

"எம்ப்ளாய்மெண்ட்ல பதிவு பண்ணியிருக்கியா?''

"எண்பத்ரெண்ல பண்ணன் சார்''

"அங்க எவனையாவது பிடிச்சி "இண்டவியூ கார்ட்' வாங்கினு வா... அப்புறம் பாக்லாம்'' என்று சொல்லிவிட்டான். மறுபடி கட்சி பிரமுகர் தயவில் "எம்ப்ளாய்மெண்டில் ஆளைப்பிடித்து விசாரித்ததில், முன்னூறு ரூபாய்க்குக் குறைந்து பண்ணுவதில்லை என்று பிடியாய் இருந்தான்.

இதற்கு மேல் மோகன்தாஸ் என்ன செய்வார்?

முன்னூறு ரூபாய் இருந்தால், எம்ப்ளாய்மெண்டில் இருந்து கார்ட் வரவழைக்கலாம். இப்போதிருக்கும் அரசியல் பிரமுகர்களின் அறிமுகத்தால் வேலைக்குச் சேர்ந்துவிடலாம். மகேஷை நம்பி முன்னூறு ரூபாய் தருகிற அளவுக்கு வீடு இல்லை. இந்த நேரத்தில்தான் கோபி சொன்னான். இப்படி ஒரு கேஷுவல் லேபர் ஐடியாவை.

வாட்ச்மேன் கேட்டைத் திறந்து எல்லோரையும் உள்ளே வந்து நிற்கச் சொன்னான். நிற்கச் சொன்ன இடத்தில் மண்ணெல்லாம் கறுப்பாய் } இரும்புச் சத்து நிறைந்து இருந்தது. கறுப்பு நிறத்தில் காக்கி உடையில் இருந்த ஒருவன் கடந்து போனான்.
மேனேஜர் பளீரென்ற வெள்ளை சஃபாரியில் வந்தார்.

"எத்தனை பேர்?''

செக்யூரிட்டி, பதினேழு பேர் சார்'' என்றான்.

""ம்...பன்னென்டு பேர் போதும்... அஞ்சுபேர் அதிகம் இல்ல... '' என்று கணக்குப் போட்டார்.

"நீ இப்பிடி வா... ம் நீ...நீ... நீயும் வா....'' என்று ஒவ்வொருவராய் அழைத்தார். தனியே வரச் சொன்னவர்களை வீட்டிற்கு அனுப்பவா, வேலைக்குச் சேர்க்கவா என்பது புரியவில்லை.

மகேஷ் சற்றே முன்னே வந்து "சார்'' என்றான். மேனேஜர் கூர்ந்தார்.
பவ்வியமாய் அருகில் போய், நோட் புக்கைப் பிரித்து, "சர்டிபிகேட்' டை நீட்டினான். மேனேஜர் வாங்கி கவனமாகப் பார்த்தார்.

அனைவரும் மகேஷையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மகேஷுக்குச் சற்றே பூரிப்பாய் இருந்தது. எல்லோரையும் அலட்சியமாய் விரலால் வரச் சொல்லிக் கொண்டிருந்த மேனேஜருக்குப் பக்கத்தில்தான் ஒரு கெüரவமான நிலையில் நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான்.

"மேனேஜர் சான்றிதழைக் திருப்பிக் கொடுத்தார்.''

"இந்த மாதரி வேற யாராவது சர்டிபிகேட்லாம் கொண்டாந்திருக்கீங்களா?... அப்படி இருந்தா அவங்கள்லாம் கையைத் தூக்குங்க...'' என்றார்.

யாரும் தூக்கவில்லை.

மெதுவாய் மகேஷ் பக்கம் திரும்பி, "சரிப்பா... உருப்படியா வேற வேலை ஏதாவது பார் போ... '' என்றார்.

"சார்...?''

"இந்த வேலைக்குப் படிப்பு அவசியம் கெடையாது அதுக்குச் சொல்றேன்...''

"வேல வேலக்கி ட்ரை பண்றேன் சார்... அதுக்கு தான்...''
மேனேஜர் கவனிக்கவில்லை. ஒரு நான்கு பேரைத் தனியே அழைத்து வெளியேற்றினார்.

"இத பாருங்க... இங்கயே சேர்ந்து பர்மனன்ட் ஆய்ட்லாம்னுலாம் கனவு காணாதீங்க... மூணு மாசத்துக்கப்புறம் வீட்டுக்கு அனுப்பிச்சிருவோம். அப்புறம், எல்லாச் சிப்டும் வந்தாகணும். இல்லாட்டி எடுத்துருவோம். முதல் வாரம் சம்பளம் தரமாட்டம்...
கடைசில தான் தருவோம். ரெண்டாவது வாரத்ல இருந்து ஆடாமாடிக்கா சம்பளம் வரும். ஒரு நாளைக்கி பன்னெண்டு ரூபா... ஓ.டி.செய்தா பத்து ரூபா''

மகேஷ் மேனேஜருக்குப் பின்னால் நின்றிருந்தான்.

"நாலு, நாலு பேரா நில்லுங்க'' என்றார் எதிரில் இருந்த பன்னிருவரை.
நின்றார்கள்.

"இவங்க "ஏ' சிப்ட். இது "பி" இது "சி'..'' என்று செக்யூரிட்டியைப் பார்த்துச் சொன்னார். "பேரெல்லாம் எழுதிக்கய்யா'' என்றார்.
மேனேஜர் திரும்பியதும், ""சார்'' என்றான் மகேஷ்.

"நீ இன்னும் போலையா?'' என்றார்.

"வேற ஒரு வேலைக்கு ட்ரை பண்றான் சார்... அதனாலதான்...''

"வெரிகுட்...'' என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.
மகேஷ் அவர் போவதையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் புரியாமல் நின்றிருந்தான்.
வாட்ச்மேன் காத்திருந்து பார்த்துவிட்டு "வாய்யா வெளிய'' என்றான் கேட்டைத் திருந்து வைத்தபடி.

(தொடரும்)

LinkWithin

Blog Widget by LinkWithin