புதன், ஆகஸ்ட் 05, 2009

தமிழ்மகன்: மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

தமிழ்மகன்: மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்

வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

புத்தகம் பேசுது மார்ச் 2009



LinkWithin

Blog Widget by LinkWithin