செவ்வாய், நவம்பர் 06, 2007

கிளியின் கழுத்து வளையல் வேண்டும்!





""உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'' என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ""ஆலங்குயில் கூவும் ரயில்'' பாடலில் ஆராதிக்கப்பட்டு ""எகிறி குதித்தேன் வானம் இடித்தது'' பாடலுக்குப் பிறகு உச்சம் தொட்டவர் கவிஞர் கபிலன். "தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசனோடு கடந்த ஆறுமாதமாக நடித்து வருகிறார் கவிஞர் கபிலன். அதுவும் கவிஞர் கபிலனாகவே.

"கமல் உங்களை நடிகராக்கியதற்குக் காரணம் இருக்க வேண்டுமே?' என்று ஆரம்பித்தோம் கபிலனிடம்.

""என்னைப் பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்த ஆசைபட்டவர் அவர்தான். என்னுடைய "தெருவோவியம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்காக "தெனாலி' படப்பிடிப்பில் இருந்து வந்து போகும் போது விமானம் கிடைக்காமல் ரயிலில் சென்றார். எனக்காக இப்படி ஒரு தியாகம். அந்தப் படத்தில் பாடல் வாய்ப்புக்காகவும் சொன்னார். ரஹ்மானிடம் என்னுடைய ""உன் சமையல் அறையில்'' பாடலைக் கொடுத்தேன். ஆனால் அதற்குள் பாடல் கம்போஸிங் வேலைகள் எல்லாமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் அந்தப் படத்தில் அப் பாடலைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அந்தப் பாடலை விக்ரம் நடித்த தில் படத்தில் பயன்படுத்தினார் இயக்குநர் தரணி.

இப்போது நடிப்பு அறிமுகம். திடீரென்று அழைத்து அவருடைய காரிலேயே மாமண்டூர் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். ""படத்தில் பாட்டெழுதும் வாய்ப்புக்காக கூப்பிடவில்லை. நடிப்பதற்காக'' என்றார். ""நான் நடிப்பதா?'' என்று தயக்கத்தைத் தெரிவித்தேன். கவியரங்கத்தில் கவிதை வாசிப்பது போல சில கவிதைகளை வாசித்தால் போதும் என்றார். மைக்குக்குப் பதில் கேமிரா இருக்கும்; அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் நீங்களாகவே வந்தால் போதும்'' என்று காட்சிகளையும் சொன்னார்.

மகா கலைஞனோடு நடிக்க வேண்டிய பயமும் ஆர்வமும் சேர்ந்து ஆட்டிப் படைத்தது. அவருடைய நட்பு தந்த தைரியத்தில் சம்மதித்தேன். ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வேலை, அக்டோபர் வரை என்னை ஆட் கொண்டுவிட்டது. நடித்ததில் ஒரு சுவாரஸ்யம். கவியரசர் வைரமுத்துவின் "பூமரங்களின் சாமரங்க'ளையும் "பனிவிழும் மலர் வன'த்தையும் தியேட்டரில் முன் வரிசையில் உட்கார்ந்து கைதட்டி ரசித்தவன் நான், இப் படத்தில் இடம் பெறும் நடன அரங்கேற்றத்துக்காக அவர் எழுதிய பாடலுக்கான காட்சி ஒன்றை படம் பிடித்தார்கள். நான், கமல், கே.ஆர்.விஜயா, நாகேஷ் எல்லோரும் உட்கார்ந்து ரசிப்பதாகக் காட்சி. நடிப்புக்காக ரசித்தது வித்தியாசமான அனுபவம். ஓய்வு கிடைத்தால் எல்லோரும் குடும்பத்தோடு கோவிலுக்குப் போவார்கள். அல்லது சுற்றுலாவோ, சும்மாவோ இருந்து பொழுதைக் கழிப்பார்கள். கமல்ஹாசனுக்கு ஓய்வு என்றால் சுஜாதா, மதன், புவியரசு, ஞானக்கூத்தன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுவது. அந்த வரிசையின் கடைசி உறுப்பினராக நானும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார் கபிலன்.

நடிப்பு வேலை முடிந்தது. ""கிளியின் கழுத்தில் இருக்கும் வளையல் வாங்கி அணிய வேண்டும்'' என்று விஜி இயக்கும் "வெள்ளித்திரை' படத்துக்கான பல்லவியோடு கம்போஸிங் ஸ்பாட்டுக்குப் புறப்பட்டார் அவர். கமல் படத்தில் கபிலனாகவே நடிப்பது அப்படியான ஒரு மகிழ்ச்சிதான் அவருக்கு.

-தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin