சனி, மார்ச் 14, 2009

திரைக்குப் பின்னே- 24

ஆட்டோராணியின் கதை!

சினிமாவுக்குக் கதை பண்ணுவது தனிக்கலை. அதாவது தமிழ்ச் சூழலில் (தெலுங்குச் சூழலிலும்) அப்படித்தான் நம்பப்பட்டு வருகிறது. நண்பர் புகழேந்திதங்கராஜின் மூலம் மீண்டும் இயக்குநர் வி.சி.குகநாதனுக்கு ஒரு திரைக்கதை செய்வதற்குக் குழுமினோம். எங்களுடன் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்தார்.

வி.சி.குகநாதன் ஒரு கதையைச் சொன்னார். உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் கதாபாத்திரம். குடும்பமே அவளை நம்பித்தான் இருக்கிறது. அவளை எதிர்க்கும் வில்லன் கூட்டம். அந்தப் பெண்ணின் சகோதரனே வில்லன்களின் வலையில் விழுந்து தன் அக்காவுக்கு எதிராக நிற்கிறான். ஆனால் அந்தப் பெண்ணின் காதலனும் அந்தக் காதலனை ‘ஒருதலை'யாகக் காதலிக்கும் ஆட்டோ ராணி என்ற பெண்ணும் நம் கதாநாயகிக்கு உதவுகிறார்கள். வில்லன்களை வீழ்த்திவிட்டு ஒரு தலைக்காதலோடும் தியாக உணர்வோடும் அந்த ஆட்டோ ராணி பெருந்தன்மையாக விலகிச் செல்கிறாள்.
என் ஞாபகம் சரியாக இருந்தால், இந்த மாதிரி ஒரு கதை. அவர் சொல்லி முடித்ததும் நானும் பிரபஞ்சனும் தற்செயலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். கதைதான் ரெடியாகிவிட்டதே அப்புறம் எதற்குக் கதை செய்ய வந்திருக்கிறோம் என்ற கேள்வி.
இதைப் புரிந்து கொண்டவர் போல எங்களிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்பதை விளக்கினார்.

கதாநாயகன், நாயகி, ஆட்டோ ராணி போன்றவர்களின் அறிமுகக் காட்சிகளுக்கான சம்பவங்களைக் கேட்டார்.
சொன்னோம்.
முதலில் நாயகி.. "நாயகி கோயிலில் இருந்து வெளியே வருகிறாள். பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுகிறாள். ஒரு பிச்சைக்காரன் நன்றாக இருக்கும் காலை சட்டென்று ஊனம் போல மடக்கி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறான். அநீதியைத் தட்டிக் கேட்கும் நம் நாயகி அவன் கன்னத்தில் ஓங்கி அறைவிடுகிறாள்.'

இப்படித்தான் கதையை உருவாக்கினோம். வி.சி.குகநாதன் 150 திரைக்கதைகளுக்கு மேல் உருவாக்கியவர். தெலுங்குப் பட உலகில் அவருக்கு அப்படியொரு மவுசு உண்டு.

'நாயகியின் தம்பி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறான் என்று சொன்னால் போதாது. அதற்கு ஏதாவது காட்சி வேண்டும்' என்றார்.

"பத்தாம் வகுப்பு பெயில் ஆகிவிட்டு மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்துவரும் தம்பி. சம்பாதிக்கும் காசை வீட்டுக்குத் தருவதில்லை. அவன் செலவுக்கே போதவில்லை. வீட்டிலிருந்தும் திருடுகிறான். அக்கா இரண்டு மூன்று முறை கண்டிக்கிறாள்.''

நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது குகநாதனின் முகம் பிரகாசிக்கவில்லை. "கதை சொல்லாதீர்கள்.. காட்சி சொல்லுங்கள்'' என்றார்.

சட்டென்று ஒரு காட்சியைச் சொன்னேன். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு தம்பி வீட்டுக்கு வருகிறான். அக்கா எழுந்து வந்து சாப்பாடு போட வருகிறாள். தம்பி மீது வினோத வாசனை. முகம் சுளித்துக் கொண்டு தட்டை எடுத்துவைத்து சோறு போடுகிறாள். திடீரென்று பவர் கட் ஆகிறது. அக்கா விளக்கேற்றுவதற்குத் தீப்பெட்டி தேடுகிறாள். தம்பி, தம் பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை எடுத்து சர்ரென்று கிழிக்கிறான்.

"வெரிகுட்'' என்றார்.

கதையைப் படித்துப் பார்த்துவிட்டு முடித்துவிட்டு "ஆட்டோராணி கேரக்டர் எதற்கு என்பதுதான் புரியவில்லை'' என்றோம்.

"படத்துக்கே ஆட்டோராணி என்று வைக்கலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் அந்தக் கேரக்டரே எதற்கு என்கிறீர்களே..? படத்தில் அவளுக்கு மூன்று ஃபைட் இருக்கிறது. இரண்டு கவர்ச்சி நடனம் இருக்கிறது. கடைசியில் நாயகனையும் நாயகியையும் சேர்த்துவைத்துவிட்டுப் பிரிந்து செல்கிற காட்சி டச்சிங்காக இருக்கும்'' என்றார்.
புரியத்தான் இல்லை.

லைலா- விக்ரமன் டிஸ்யூம்!

சினிமா நடிகை என்றால் அதற்கு ஏற்றார் போல பெயர் இருக்க வேண்டும் என்பது சினிமா உலகச் சட்டம். மும்பையில் இருந்து வந்து சேரும் ஒரு பெண்ணுக்கு முதல் கட்டமாக பெயர் வைக்கும் சடங்கு நடக்கும். ‘கள்ளழகர்' படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமான லைலாவுக்கு இயற்பெயரே அதுதான் என்றார்கள்.. படித்த குடும்பம். அவருடைய அண்ணன் ஒரு பல் மருத்துவர். லைலா பாலே நடனம் கற்றவர். செல்லமாகப் பேசும் இயல்பு அவருக்கு. குழந்தைத்தனம் முகத்தில் அப்படியே இருக்கும். பெரிய வதந்தி எதிலும் சிக்காமல் தப்பிக்க அது அவருக்குக் கை கொடுத்தது.
இதே போல இயக்குநர் விக்ரமன் எந்த விவகாரத்திலும் சிக்காமல் வந்தவர். செலவில்லாமல் படம் எடுப்பவர். அவருடைய படங்களில் வரும் கேரக்டர் போலவே எதையும் பொறுத்துக் கொண்டு செயலாற்றுபவர். விக்ரமன் இயக்கிய ‘உன்னை நினைத்து' படத்தில் நடித்தார் லைலா. அந்தப் படப்பிடிப்பின் போது லைலாவுக்கும் விக்ரமனுக்கும் பிரச்சினை என்றார்கள். ஒரு பாடல் காட்சி படமாகும் வரை படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே வரவில்லையாம் விக்ரமன்.
இவர்களுக்குள் எப்படி பிரச்சினை ஏற்பட முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.

அப்படியென்ன கோபம் என்று லைலாவைச் சந்தித்துக் கேட்டேன்.
"அந்தப் பாடல் காட்சிக்கு அவர் சொன்ன காஸ்ட்யூமை நான் போட்டுக் கொள்ளவில்லை என்று அவருக்குக் கோபம்'' என்றார்.
"ஏன் அவர் கொடுத்த காஸ்ட்யூம் ரொம்ப செக்ஸியான தோற்றம் தருவதாக இருந்ததா?''
"இல்லை.. நான் போட்டுக் கொண்டு நடித்த காஸ்ட்யூம் மிகவும் செக்ஸியாக இருந்ததாக அவருக்கு வருத்தம்.''

விவகாரம் புதிதாக இருந்தது. வழக்கமாக நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க மறுத்து படப்பிடிப்புத் தளங்களில் பிரச்சினை ஏற்படும். லைலா கவர்ச்சியான ஆடையைப் பயன்படுத்தினார் என்பதற்காக விக்ரமன் கோபித்துக் கொண்டு பாடல்காட்சி முடிகிற வரை படப்பிடிப்புத் தளத்துக்கே வராமல் தவிர்த்தது தமிழ்சினிமாவில் முதலும் கடைசியுமான சச்சரவாகத்தான் இருக்கும்.

லைலாவை நான் எடுத்த இந்தப் பேட்டிக்கு, சம்பந்தப்பட்ட அந்த காஸ்ட்யூமில் லைலா தோன்றிய புகைப்படத்தையே தேடிப்பிடித்துப் பிரசுரித்தேன். புகைப்படத்தைப் பார்த்தபோது பெரிய ஏமாற்றமாக இருந்தது. முதுகுப்பக்கம் சற்றே இறக்கித் தைக்கப்பட்ட ஒரு சுடிதார் அது. அதில் என்ன கவர்ச்சி இருந்ததாக விக்ரமன் நினைத்தாரோ? அதைத்தான் அணிவேன் என்று லைலா ஏன் அடம் பிடித்தாரோ?

என்ன செய்வது இரண்டு நல்ல மனசுக்காரர்கள் இணைந்தால் இப்படியான பிரச்சினைதான் வருமோ?


சேரனின் போர் கொடி

சேரன் இயக்குவதாக இருந்த ‘பாரசீக ரோஜா' படத்தின் கதை என்ன என்று பத்திரிகையாளர் பிஸ்மி ஒருமுறை வண்ணத்திரையில் எழுதியதற்காக சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் குழுவினரோடு அலுவலகத்தில் வந்து ஆக்ரோஷப்பட்டார் சேரன்.

உணர்ச்சிவசப்படுதலின் உச்சக்கட்டம் என்றால் நான் அறிந்த வரையில் அது இயக்குநர் சேரன். ‘பொற்காலம்' படப்பிடிப்பு நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது "என்ன ஸார் மீனாவுக்கும் உங்களுக்கும் காதலாமே?" என்று கேட்டதற்கு சட்டென வெடித்து, அழுது பிரஸ் மீட் கேன்சல்.

இன்னொரு முறை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதம் குறித்து தலா ஒரு சினிமா பிரபலத்திடம் கருத்து கேட்கச் சொல்லியிருந்தார்கள். அஜீத், சுவலட்சுமி, சேரன் என் ஐந்து பேரை அணுகி ஆளுக்கொரு பூதம் பற்றி கேட்டேன். குமுதத்தில் ஆளுக்கொரு பக்கம் சொல்வதாகத் திட்டம். சேரன் நிலம் பற்றிச் சொல்லியிருந்தார். பத்திரிகை வெளியானபோது போன் செய்து ஐந்து நிமிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
"நிலம் என்பது இப்படி ஒரு பக்கத்தில் முடிகிற விஷயமா?'' என்றார். இது கான்ஸப்ட். தனியாக உங்களுடைய பேட்டி என்றால் மூன்று நான்கு பக்கம் வரும், இது அப்படியானது அல்ல என்று போராடினேன்.

அடுத்து ஒருமுறை நானும் தினமணி இதழாசிரியர் இளையபெருமாளும் சந்திக்கச் சென்றிருந்தோம். என்னைப் பற்றி தினமணியில் ஒரு தலையங்கமாவது எழுதினீர்களா? என்றார். அதிர்ந்து போய் தனி நபர் பற்றியெல்லாம் எழுத மாட்டார்கள் என்றார் இளையபெருமாள். அப்படியென்றால் ‘தேசிய கீதம்' படத்தைப் பற்றியாவது தலையங்கம் எழுதலாமே? என்றார். சேரனின் ஆதங்கமும் அதற்கு இதழாசிரியரின் பதிலும் ஈர்ப்பான விஷயமாக இருந்தது. சினிமாவைப் பற்றியும் தலையங்கம் எழுதுகிற பழக்கமில்லை என்றார் பெருமாள். உரத்தகுரலில் இருவரும் ஆவேசமாக விவாதித்தனர். ஏன் நல்ல விஷயங்களை எழுதினால் என்ன, சினிமா என்றால் எழுதக்கூடாதா? என்றெல்லாம் அவர் கேட்க இவர் பதிலளிக்க... திரும்பி வந்தோம்.

ஏறத்தாழ சேரன் சம்பந்தமாக எப்போதும் எது எழுதினாலும் ஒரு விவாதம் இருக்கும். பத்திரிகை, சமூகம், அரசியல் என்று சகலத்தின் மீதும் அவருக்கு எப்போதும் எரிச்சல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவர் சார்ந்திருக்கிற சினிமாமீதும் அவருக்கு எரிச்சல் இருந்தது. அவர் சொல்வதுதான் நியாயமா? நமக்குத்தான் அவரைப் பற்றி எப்படி எழுதவேண்டும் என்பது தெரியவில்லையா என்றுகூட சில நேரத்தில் எண்ணியதுண்டு.

LinkWithin

Blog Widget by LinkWithin