வெள்ளி, மே 23, 2008

கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை

கூட்டத்தின் கடைசியில் காத்திருந்தான் மைக்கேல்.

எல்லோருக்கும் உளவியல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தன. மைக்கேலுக்கு அடுத்து அமர்ந்திருந்தவர் "பணம் சாப்டா பசியாறுமாடா?' என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் இவரைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டார். மைக்கேலுக்கு மறுபக்கம் அமர்ந்திருந்தவர் அடிக்கடி டயம் கேட்டுக் கொண்டிருந்தார். அரை நிமிடத்துக்கு ஒருமுறை அவர் நேரம் கேட்டபோதும் அலுத்துக் கொள்ளாமல் சொல்வது தம் கடமை என்று நினைத்தான் மைக்கேல். ஒருவர் திடீரென்று திமிறி ஓடும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட்டார். சிலர் அமைதியாக இருந்தாலும் அவர்களுக்குள் ஓர் மெüனப் புயல் அடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

காத்திருப்பவர்களுக்கான டோக்கன் எண் அட்டையை வழங்கிக் கொண்டிருந்த பெண்மணி ""உங்க பேஷண்ட் இப்ப வந்துடுவாங்களா?'' என்றாள் மைக்கேலிடம்.

"நான்தான் பேஷண்ட்''

இருக்கவே முடியாது என திகைத்தாள். மிக நேர்த்தியாக முடிவெட்டி பிரெஞ்ச்பேட் தாடி வைத்து சீராக உடை உடுத்திய நாகரீக மனிதனை என்ன மாதிரியான வியாதிக்குள் அடக்குவது என அவள் குழம்பினாள். அந்தப் பெண் கேள்வியோடு பார்த்துவிட்டு அவனுக்கு ஒரு சலுகை போல மருத்துவரைப் பார்க்க சீக்கிரமே அனுமதி தந்தாள்.

டாக்டர் பரதன் நகரின் பிரசித்தி பெற்ற மன நல மருத்துவர். போதை மருந்துக்கு அடிமையானவர்கள், தேர்வு நேரத்தில் மாணவர்கள் மனநிலை உள்ளிட்ட கட்டுரைகளை பத்திரிகையில் எழுதுவோர் அவரிடம் கருத்து கேட்டு எழுதுவார்கள். அவரும் சளைக்காமல் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய மனோ நிலைகள் பற்றி கருத்து கூறி வருவார்.

"மிஸ்டர் மைக்கேல்?''

"யெஸ்''

"உங்கள் பிரச்சினை என்னவென்று சொல்ல முடியுமா?''

"என்னுடைய பிரச்சினை எளிமையானதுதான்'' என்று தயங்கிச் சிரித்தவன், "ஒருவேளை கடினமானதாகவும் இருக்கலாம்'' என்று முடித்தான்.

டாக்டரும் நாகரீகமாகப் புன்னகைத்துவிட்டு ""சொன்னால்தான் முடிவு செய்ய முடியும்?''
"என்னை ஒரு ரஜினிகாந்துக்கோ, விஜயகாந்துக்கோ ரசிகனாக்கிவிட்டால் போதும்''
டாக்டர் பத்திரிகையில் அடிக்கடி பேட்டி கொடுக்கிற பழக்கம் உள்ளவராக இருந்ததால் மைக்கேல் சொன்னது அவருக்குள் இப்படி கொட்டை எழுத்தில் ஒலித்திருக்க வேண்டும். சுதாரித்துக்கொண்டு "சுவாரஸ்யமான பிரச்சினைதான்'' என்றார்.
"இப்படி ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உணர்ந்தேதான் சொன்னேன்.''
சிரித்தார். "ரஜினிகாந்துக்கு ரசிகராவது ஒரு டாக்டரிடம் முறையிடும் விஷயமாகத் தெரியவில்லை''

"ரஜினியை ரசிக்கவிடாமல் என்னை பல்வேறு விஷயங்கள் ஆக்ரமித்துவிடுகின்றன. அதுதான் என் பிரச்சினை''

"எதனால் அப்படி?''

"இப்ப வரும்போது பஸ்ஸில் இடம் காலியாக இருந்தும்கூட ஒருத்தன் ஒரு பொண்ணுமேல வேணும்னே உரசிகிட்டு வந்ததைப் பார்த்தேன்... ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தமாகிவிட்டது. சாலையில் இசை வாத்தியம்போல ஹார்ன் இடித்துக்கொண்டு போகிறார்கள். எல்லோரையும் நிறுத்தி எதற்காக இப்படி ஹார்ன் அடிக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போல தோன்றுகிறது. ஆட்டவில் கூடுதல் இரைச்சல் ஏற்படுவதற்காக சைலன்ஸரில் ஏதோ தகடு வைக்கிறார்கள் என்று அறிந்தேன். மனசு பதறுகிறது ஐயா''

டாக்டர் இத்தகைய கேஸ்களை நிறைய அலசியவர் போலத்தான் தலையை ஆட்டினார்.

"உங்களுக்குச் சமூக அக்கறை அதிகமாக இருக்கிறது. எல்லாம் ஒருநாளில் மாறிவிட வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள். நாம் எல்லோரும் விலங்கிலிருந்து வந்தவர்கள் அநிமல் நேச்சர் நம் எல்லோரிடமும் இருக்கிறது. சிலருக்கு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. நீங்கள் கொஞ்ச நாள் டி.வி. பார்க்காமல் இருங்கள். பத்திரிகையும் படிக்காதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்'' என்றார்.

"நான் மட்டும் படிக்காமல், பார்க்காமல் இருந்தால் போதாது. மக்களும் பார்க்காமல் இருந்தால்தான் இது சாத்தியம்''

"மற்றவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களை மட்டும் யோசியுங்கள்''

மைக்கேல் டாக்டருக்குத் தன் நிலைமையை விவரிக்க முடியாமல் தவித்தான்.

"டாக்டர் நீங்களாவது என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்குச் செய்தியைச் சார்ந்துதான் வாழ்க்கையே. ஓயாமல் செய்திகள் நாடி அலைகிறார்கள். "என்ன ஸôர் கும்பகோணம் டிராஜிடியைக் கேட்டீங்களா' என்று சகஜமாக விசாரித்துவிட்டு அதை வளர்த்துகிறார்கள். அது மாதிரி நிகழாமல் இருக்க யோசனைகள் பரிமாறிக் கொள்கிறார்கள். நாடே சுத்த மோசம் என்கிறார்கள். அதே வேகத்தில் டி.வி. டிராமா பற்றி கொஞ்ச நேரம் பேசுகிறார்கள். யாருக்கும் நிஜமான அக்கறை இல்லை. அந்த டீச்சரை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளின் சாவுக்குக் காரணமான டீச்சரையா? அல்லது மெகா சீரியலில் வரும் டீச்சரையா என்று தெரியவில்லை. இப்படியா இருப்பார்கள்? குடி நீருக்காக விழுந்து விழுந்து அலைகிறார்கள். "நேத்து அதிகாரிகள் எல்லாம் புழல் ஏரியை பார்த்துவிட்டு தண்ணி குறைவா இருக்கறதால இனிமே மூணு நாளுக்கு ஒரு தரம்தான் தண்ணி விட்றதா முடிவு பண்ணியிருக்காங்களாம்' என்று பேசிக் கொள்கிறார்கள். செய்திகளைப் படித்துவிட்டுத்தான் அப்படி பேசுகிறார்கள். நீங்களே சொல்லுங்கள். அதிகாரிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் இப்படி ஏரியை எட்டிப் பார்ப்பதும் நீர் குறைந்துவிட்டதைக் கண்டுபிடிப்பதும் பிறகு மூன்று நாளுக்கு ஒருதரம் தண்ணீர் திறந்து விடுவதும் நியாயமா சொல்லுங்கள்? மக்களுக்குப் பேசுவதற்கு ஏதோ செய்தி வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்கள். இந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கிற விபரீதம் என்னைப் பாடாய்படுத்துகிறது. இரவெல்லாம் தூக்கம் வராமல் தத்தளிக்கிறேன். என்னால் முடியவே இல்லை. நான் மட்டும் பேப்பர் படிக்காமல் இருந்தால் மட்டும் இது சாத்தியமா? மக்கள் எல்லோரும் இந்த அபத்தச் செய்திகளைப் பேசாமல் இருந்தால்தானே சாத்தியம்?''

டாக்டர் அவனை சற்று விபரீதமாகப் பார்த்தார். பெருந்தன்மையாகப் பார்ப்பதாகவும் இருந்தது.
"எனக்கு இந்த மாதிரி எண்ணங்களெல்லாம் இல்லாமல் செய்ய வேண்டும். செய்திகள் எல்லாம் மிகையாகவோ அல்லது தவறாகவோ இருக்கிறது. "உடலுறவுக்குத் தடையாக இருந்ததனால் பச்சைக் குழந்தை கொலை' என்று போடுகிறார்கள். இதெல்லாம் நிஜமா? எனக்கு வேண்டாம் ஸôர். இந்தச் செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராயும் திராணி போய்விட்டது எனக்கு. ரஜினிபடம் எப்போது வரும் என்பது மாதிரியான லேசான கவலைகளைத் தாருங்கள். அது போதும்''

டாக்டர் முகத்தில் தீவிரம் கூடியது. "ஒழுங்காகப் பசிக்கிறதா?'' என்றார்.

"குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் இல்லை. சில நேரங்களில் பசித்து சாப்பிடுவேன். சில நேரம் சாப்பிட வேண்டிய நேரம் என்பதற்காகச் சாப்பிடுவேன்.''

மைக்கேலுக்கு வைத்தியமா பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவர் போல தலையை மேலும் கீழும் அசைத்தார். நிறைய கேள்விகள் கேட்டு கேஸ் இஸ்ட்ரி எழுதிக் கொண்டார்.

"எங்கள் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டுமானால் உங்கள் சார்பாக யாராவது கெயெழுத்துப் போட வேண்டும். நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள். உங்கள் உறவினர் யாரையாவது நாளை அழைத்து வர முடியுமா?''என்றார்.

"சரி''

மைக்கேலின் உறவின் முறை வட்டாரம் ஊழல் புரியாதவர்கள் பட்டியல் போல குறுகியதுதான். அவர்களும் தூத்துக்குடி பகுதியில் இருக்கிறார்கள். சென்னையில் அழன் ஈடு இருக்கும் உறவினன் என்றால் அது சார்லஸ் ஒருவன்தான். தனக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய இன்னலை அவனுக்கு விளக்குவதற்கே மைக்கேலுக்குப் பெரும்பாடாக இருந்தது. "உனக்கென்னடா பிரச்சினை, ஏன் இப்படி மனசைக் குழப்பிக்கிறே?'' என்றான். மைக்கேல் எம்.என்.சி. அந்தஸ்துள்ள கடன் வழங்கும் நிறுவனத்தில் காசோலையில் கையெழுத்திடும் தகுதியாளனகப் பணியாற்றுகிறவன். "இப்படி பைத்தியக்கார ஹாஸ்பித்திரியில் வைத்தியம் பார்த்துக் கொள்வது வெளியில் தெரிந்தால் அது அவனுடைய பணி சம்பந்தமான நெருக்கடிகளுக்கு வழி வகுக்கும்' என்றும் கூறினான். மைக்úல் அந்த வேலை பற்றிக் கவலையில்லை என்றான்.

தானாகவே முன்வந்து தன் னநிலை குறித்து விவரித்தற்காகப் பெருமைப்பட்டார் டாக்டர். மைக்கேலுக்கு அடக்கமான சிறிய அறையை ஒதுக்கியிருந்தார். இரண்டாவது மாடியில் சில அறைகள் ùயில்கள் போலவே இருந்தன. அதனுள் இருந்தவர்கள் கம்பிகளைப் பிடித்தபடி சோர்ந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தனர். முதல்மாடியில் மிதவாதிகள் மைக்கேலைப் பொறுத்தவரை மற்ற அறையில் இருப்பவர்கள் போல் பச்சை நிற அங்கியை அவன் அணிய வேண்டியதில்லை என்றும் டாக்டர் கூறியிருந்தார். சுலபமான சில யோகா பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தார்கள். இரவு நிóமதியாக உறங்குவதற்கு சில மாத்திரைகள் கொடுத்தார்கள்.

இரவு இரண்டு மணிவாக்கில் ஏதோ சலசலப்பு கேட்டுவிழித்தான். சற்றே பிரச்சினைகளிலிருந்து விலகியிருப்பதில் மைக்கேலுக்கு ஒரு சுகம் இருந்தாலும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது தீர்வல்ல என்றும் சமூகத்தை எதிர் கொள்ளத் தயங்குவது அவமானமாகவும் தோன்றியது. இப்போது சலசலப்பு அதிகமாகக் கேட்டது. யாரோ அலறும் சப்தமும் சிலர் ஓடுவது போலவும் யூகிக்க முடிந்தது. மைக்கேல் எழுந்து வெளியே வந்தான். பச்சை நிற அங்கி அணிந்த நோயாளி ஒருவரை ஐந்தாறு சேவகர்கள் சுவர் ஓரமாகத் தள்ளி அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். நோயாளி பயந்துபோய் குண்டுகட்டாக அமர்ந்திருந்தார்.

மைக்கேல் "ஏன் அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள்?'' என்றான்.

சேவகர்கள் மைக்கேலே ஆச்சர்யமாகப் பார்த்தனர். "இந்த நேரத்தில் எப்படி வெளியே வந்தாய் நீ?' என்பதான ஆச்சர்யம்.

"விடுங்கள் அவரை'' என்றான்.

அலட்சியத்துடன் மைக்கேலின் கையைத் தட்டிவிட்டான் ஒருவன். மைக்கேல், "அவரை என்னிடம் விடுங்கள் சமாதானப்படுத்துகிறேன். முரட்டுத்தனம் வேண்டாம்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவன், "நீ எப்படி வெளியே வந்தே? மாத்திரை போட்டியா இல்லையா?'' என்றான்.

"வெளியே வருவதற்கு தடை எதுவும் சொல்லவில்லையே... மாத்திரை போட்டுக் கொண்டனே''

"பச்சை கவுன் எங்கே?''

"டாக்டர் வேணாம்னு சொல்லிட்டாரு''

சேவர்கள் ஒருவரை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர். ""டாக்டர் சொன்னாரா? அப்படினா நீ டாக்டராதான் இருக்கணும். நாளைல இருந்து டாக்டர் ட்ரஸ் போட்டுக்க... இப்ப இந்த ட்ரஸ்ûஸ போட்டுக்க'' அங்கே மாட்டி வைத்திருந்த ஒரு பச்சை கவுனை எடுத்து வந்து கொடுத்தான். அது பெனாயில் வாசனை அடித்தது.

"விளையாட்டில்லை.. டாக்டர்தான் சொன்னார்...''

"சரி... சரீய்... எல்லாம் காலைல பேசிக்கலாம். முதல்ல நீ இதப் போடு''

"இதை அணிந்து கொள்வதில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் டாக்டர் அனுமதிச்சதை நீங்க ஏன் மறுக்கிறீங்க? அதுவுமில்லாம என்னை ஒருமையில அழைக்கிறதும் சரியில்லை''

எதிரில் நின்றிருந்தவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். இவனை இப்படி டீல் செய்யக்கூடாது என்ற தலையசைப்பு.

சுவரோரமாக ஒடுங்கி உட்கார்ந்திருந்த நோயாளியை ஓர் அதட்டல் போட்டு அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, எல்லோரும் மைக்கேல் பக்கம் திரும்பினர். ஒருவன் சட்டென மைக்கேலின் முஷ்டியை முறுக்கி பின்பக்கம் மடித்தான். ஒருவன் அப்படியே தலையை அழுத்தி "பெசாம உட்காரு'' என்றான்.

அதற்குள் ஒருவன் வேகமாக பச்சை அங்கியை எடுத்து அதில் மைக்கேலைச் சொருகினான்.

தன்னைத் தவறாக நடத்துவதைப் புரிந்து கொண்டு மைக்கேல் சுதாரிப்பதற்குள் அவனுடைய லுங்கியை நட்ட நடுஹாலில் அவிழ்த்தெறிந்தான் ஒரு சேவகன். இந்தக் களேபரத்தில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தவன் அஞ்சி ஓட ஆரம்பித்தான். சேவகர்களின் கோபம் இரட்டிப்பாகிவிட்டது. மைக்கேலை இழுத்தபடியே ஓடியவனை விரட்ட ஆரம்பித்தனர். எதிர்பார்க்காத இந்த வன்முறையினால் வசமிழந்து போனான் மைக்கேல். நிறைய சிராய்ப்புகளால் வலி பொறுக்க முடியாமல் திமிறினான். அதற்குள் ஒருவன் அவனை அவசரப்பட்டு அடிக்கவும் செய்தான்.


"என்ன நடந்தது மைக்கேல்?'' என்றார் டாக்டர்.

மைக்கேல் ரொம்பவும் தொய்ந்து போயிருந்தான். இரவு நடந்த களேபரம், அதன் பிறகு போட்ட இன்ஜெக்ஷன் எல்லாம் அவனை எதையுமே சிந்திக்கவிடாமல் செய்தன. பிரயத்தனப்பட்டுப் பேச வேண்டியிருந்தது.
"அந்த நோயாளியிடம் அவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்கலாம். அதனால்தான் பிரச்சினையே''

"நேற்று நீங்கள் செய்த குளறுபடியால் அந்த நோயாளி மருத்துவமனையை ùüவிட்டே ஓடிவிட்டார். அதனால்தான் உங்களிடம் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது...''

"இல்லை... என்னிடம் அப்படி நடந்து கொண்டதால்தான் அவர் ஓட வேண்டியதாகிவிட்டது''

"இரண்டும் ஒன்றுதான். காவல்துறையில் கம்ப்ளென்ட் செய்திருக்கிறோம். இனி இப்படிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள்'' என்றார். அவருடைய குரலில் உஷ்ணம் தெரிந்தது. இரண்டும் ஒன்றா என்பதைப் பற்றி யோசிக்க திராணியில்லாமல் இருந்தான் மைக்கேல்.

அவனை அறைக்கு அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்திருந்த சார்லûஸ அழைத்தார். "நல்லவேளை நல்ல நேரத்தில் இங்கே அனுமதித்தீர்கள். இல்லையென்றால் அவர் ஸ்பிலிட் பர்ஸனாலிட்டியாக மாறுவதற்கு வாய்ப்பிருந்தது. நேற்று தூங்குவதற்கு சப்ரஷன் டேப்ளட்ஸ் ஹெவி டோஸ் கொடுத்திருந்தேன். இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து கொண்டு இந்தப் பாடுபடுத்தியிருக்கிறார். அவருக்கு எவ்வளவு நாளா இப்படியிருக்கு?''

காட்சிகள் எப்படி மாறுகின்றன. நான் எங்கே அனுமதித்தேன். அவன் தானாக வந்துதானே அனுமதியானான் என்பதை சார்லஸ் சொல்லவில்லை.

"எப்படி?''

"இந்த மாதிரியான சோஷியல் டிப்ரஷன்... சமூக கவலை?''
"சின்னவயசிலிருந்தே நாடு நல்லா இருக்கணும்னு சொல்லுவான் சார்''
"க்ரானிக்... ஐ ஸீ... இன்னைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம். இந்த மாதிரி ஆசாமிகள் சிலருடைய மன எழுச்சியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. சங்கிலியால கட்டி வைக்க வேண்டியிருக்கும். உங்கள் நண்பருக்கு அந்தநிலை ஏற்படாம பாத்துக்கிறேன் போதுமா?''

"என்னால் நம்பவே முடியல ஸôர்'' என்று திகைத்த சார்லஸ் அவனை பழையபடி வீட்டுக்கே கூட்டிச் சென்றுவிடலாமா என்று யோசனை கேட்ட அஞ்சி, "அவன் ரொம்ப நல்லவன் ஸôர்'' என்றான். அதாவது அவனை விட்டுடுங்க ஸôர் என்ற தொனியில் அதைச் சொன்னான்.

டாக்டர் பயப்பட வேண்டியதில்லை நான் பாத்துக்கிறேன் தொனியில் "ரொம்ப நல்லவனா இருக்கறதும் மனநல குறைபாடுதான்'' எனப் புன்னகைத்தார்.


மைக்கேல் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தான். எதிர்ப்புற சுவரில் 100 என்ற எண்ணின் மீது நடிகன் ஒருவன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அழன் நடித்த படம் நூறுநாள்கள் ஓடியிருக்கிறது என்பது புரிந்தது. தெருவில் வண்டியில் ஒருவன் வாழைப்பழம் விற்றுக் கொண்டுபோனான். உச்சி வெயில். அந்தப் படம் நூறுநாள் ஓடக் காரணமானவனில் ஒருவனாக இருக்கக் கூடும் என்று நினைத்தான் மைக்கேல்.

LinkWithin

Blog Widget by LinkWithin