செவ்வாய், டிசம்பர் 29, 2009

பலுபலுக்கன்மா?




ஒரு மொழியின் உச்சபட்ச பயன்பாடு விளம்பரங்களில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே ஒரு சொல் மனிதர்களை ஆட்டிப் படைத்துவிடுகிறது. தெறிக்கும் நட்சத்திர பிரகாச படத்தின் நடுவே "இலவசம்' என்று பெரிதாக எழுதியிருந்தால் உடனே மக்கள் ஒரு கணம் அங்கே உறைந்து போகிறார்கள்.

அது, ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசமாக இருக்கும். ஒரு வீடு வாங்கினால் ஒரு வீடு இலவசம்... ஒரு பேப்பர் வாங்கினால் ஒரு பேப்பர் இலவசம்... எதுவாகவும் இருக்கலாம். நம்மில் பெரும்பான்மையானவர்கள் அதற்கு முன்னால் எத்தனை அனுபவம் அடைந்திருந்தாலும் அதிக வட்டிக்காக ஒரு பெனிபிட் ஃபண்டில் மீண்டும் மீண்டும் பணத்தைப் போடுகிறார்கள். பளிச்சிடும் வெண்மை தரும் என்று புதிய சோப்பை வாங்குகிறார்கள். நான்கே நாள்களில் சிவப்பாக மாறிவிடலாம் என்று புதிய கிரீமை வாங்குகிறார்கள். இந்த விளம்பரங்களை நம்பி ஏமாறுகிறவர்கள் பற்றி எழுத வேண்டியது தனிக் கட்டுரை... இங்கே அந்த விளம்பரத்தில் நாம் எதிர் கொள்ளும் தமிழைப் பற்றியதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விளம்பரம்.
ஒரு சிவந்த பெண்மணி சீரியஸôன முகத்துடன், ""உங்களுக்கு ஸ்பூன் பலுபலுக்கன்மா... துண்மினி பலுபலுக்கன்மா?'' என்று கேட்டுவிட்டு ""எங்கல் சோப்பப் போட்டா துணிலாம் பலுபலுக்கும்'' என்றார்.

அது ஒரு சோப்பு விளம்பரம் என்பது புரிந்தது. ஆரம்பத்தில் பலுபலுக்கன்மா என்கிறாரே அது என்ன என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

டி.வி. பார்க்கிற சிலர் சோப்பில் இருக்கும் ஏதோ முக்கியமான மகத்துவம் பற்றிச் சொல்கிறார் என்று விளக்கம் சொன்னார்கள். அப்படி என்ன ரசாயனமாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. கடைசிவரை எனக்குத் தெரிந்த "கெமிஸ்ட்ரி எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை'.

பிறிதொரு நாள் வேறு ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும்போது என் குழப்பத்துக்கு விடை கிடைத்தது.

அது இன்னொரு சோப்பு கம்பெனியின் விளம்பரம். அந்த சோப்பை வாங்கினால் ஒரு ஸ்பூன் இலவசம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முன்னர் பார்த்த சோப்பு விளம்பரத்தில் என்ன சொல்கிறார்கள் என்பது வேகமாக விளங்க ஆரம்பித்தது. கெமிஸ்ட்ரிக்கு பதிலாக லாஜிக் ஒர்க் அவுட் ஆனது...

சோப்பு வாங்கினால் இலவசமாக ஸ்பூன் தருகிறார்கள். அதை நம்பி அந்த சோப்பை வாங்குகிறீர்களே... உங்களுக்கு ஸ்பூன் பளபளக்க வேண்டுமா? துணி மணிகள் பளபளக்க வேண்டுமா? என்பதைத்தான் முந்தைய விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்னதுபோல் ஸ்பூன் என்பது தூண்டிலில் வைக்கும் புழு. இலவச ஸ்பூன் என்பதை வைத்து ஒருவன் சோப்பு விற்கிறான். அது எப்படியோ போகட்டும்.
நம்முடைய அடுத்த கவலை.. இப்படியான தமிழை நம் தலையில் கட்டுவதைப் பற்றியது.
இதைக் கேட்கிற குழந்தைகள் "பளபளக்க வேண்டுமா?" என்று கேட்பதைவிட "பலுபலுக்கன்மா?' என்று கேட்பதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதையே ரசிக்கிறார்கள். இது ஒரு ஆபத்தின் அறிகுறியாக இருந்தது. நல்ல வேளையாக அந்த சோப்பு நம் மக்களிடம் வெகுநாள்கள் தாக்குப் பிடிக்கமுடியாமல் போய் அந்த விளம்பரமும் அல்பாயுளில் முடிந்து போனது.

இப்போது விளம்பரம்...

இரண்டு குழந்தைகள் வீட்டு வாசல்படியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கின்றன. பெரியவன். இளையவள்.

இளையவள் கேட்கிறாள்..""அணா, நாமப்பயேன் தொங்கறம்?''
""அம்ம பாக்கணும்னுதான்''
""அம்ம பாத்தா என்னாஹும்''
""அம்ம நமக்கு காம்ப்ளான் குடுப்பாங்க''
} புத்திசாலித்தனமான குழந்தைகள். தம்முடைய அம்மாவுக்குத் தாங்கள் உயரமாக வளரவிரும்புவதை இப்படித் தொங்குவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஹிந்தியில் தயாரான இந்த விளம்பத்தில் இந்தக் குழந்தைகள் இதே போல் புத்திசாலித்தனமாகத்தான் உணர்த்தியிருப்பார்கள். தமிழில் மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் இருந்தது.

இந்தக் குழந்தைகளுக்காகத் தமிழில் வேறு இரு குழந்தைகள் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால் உச்சரிப்பில் ஒருவித வசீகரிக்கும் தவறு இருக்கிறது. இப்படி வித்தியாசமான குரல்களை மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகே விளம்பரப் படம் எடுப்பவர்கள் கண்டெடுப்பதாக அறிந்தேன். விளம்பர வசனங்கள் சட்டென ஈர்த்து நிறுத்த வேண்டும் என்பது விளம்பரதாரர்களுக்கு முக்கியமான கோரிக்கை. எங்க சேனலில் சன் டி.வி., கே.டி.வி., சன் மியூஸிக் எல்லாமே தெரியும்... என்று கூறிவிட்டு டண் டணா டன் என்று சொல்வது இதற்காகத்தான். வினோதமான குரலில் விபரீதமாக எதையாவது சொல்ல வேண்டும்.

ஒரு பெயிண்ட் கம்பெனி விளம்பரம். இந்த பெயிண்டைத் தடவிவிட்டால் எவ்வளவு புழுதி பறந்தாலும் சுவரின் மீது தூசு ஒட்டாது என்பது விளம்பரம் செய்ய வேண்டிய செய்தி.

துணிச்சலான மன்னர். அவரை நோக்கிப் புழுதிக்கால் பிடறிப்பட ஓடி வருகின்றன சில நூறு குதிரைகள். அரசர் அசையாமல் நிற்கிறார். கூட்டமாக நிற்கும் மக்கள் அவருடைய துணிச்சலை வியக்க வேண்டும். ஆனால் புழுதியால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் மன்னரை கவனிக்காமல் அவருக்குப் பின்னால் இருக்கும் மாளிகை தூசி படாமல் ஜொலிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருவன் சொல்கிறான்... ""மாலிக... மாலிக மின்னுது''} அதாவது எவ்வளவு தூசு பட்டாலும் மாளிகை மின்னிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படி வினோதமாகச் சொல்கிறான்..

இப்படியான பிழையான தமிழில் பேசுவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் மும்பையில் தயாராகின்றன. பெரும்பாலும் இந்தி பேசும் சூழலில் இந்த விளம்பரங்கள் உருவாகின்றன. பின்பு அதே விளம்பரங்கள் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஓரிய, கன்னட என மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி தெரிந்த அந்தந்த மொழிகாரர்களை அணுகி வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள். இப்படி மொழி பெயர்க்கும்போதே சில நேரங்களில் தவறு நடந்துவிடும். பிறகு அந்தத் தவறான தமிழை உச்சரிக்க அங்கேயே உள்ள மாநில மொழி பேசுபவர்களை அணுகிறார்கள். மும்பையில் செட்டிலாகி, தங்கள் பிராந்திய மொழியை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் வாயின் வழியாக அது மேலும் தவறாக மாறி, நம்மை வந்து அடைகிறது.} இது இன்னொரு வகை ஆபத்து.

விளம்பரங்கள் குழந்தைகளை எளிதில் வசீகரிக்கக் கூடியவை. செய்திகளோ, வயலும் வாழ்வு நிகழ்ச்சியோ, நேருக்கு நேர் அரசியல் அரங்கமோ அவர்களை அவ்வளவாகத் தூண்டுவதில்லை. இந்த விளம்பரத் தமிழ் குழந்தைகளை பாதிக்கும் என்றே தோன்றுகிறது. தூசுகளை அண்டவிடாத பெயிண்டுகளையோ, அழகுதரும் கிரீமையோ விற்பதாகச் சொல்லி இப்படி ஆபத்தை வரவேற்கலாமா?

மேலும் ஒரு சொல் நமக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள்தரக்கூடியதாக இருக்கிறது. சிங்கம் என்ற சொல் ... இந்த நான்கு எழுத்துகள் நம் கண் முன் ஒரு உருவத்தை கொண்டு வந்து நிறுத்துகிறது. அது காட்டில் வாழும். மான்களைக் கடித்துத் தின்னும். குகைக்குள் படுத்திருக்கும் என்று பல்வேறு எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் ஒரு மனிதனைக் காட்டி சிங்கம்யா அவன் என்பதையும் கேள்விப்படுகிறோம். அவனும் காட்டுக்குள் கையில் படுத்து உறங்குவான் என்ற எண்ணமோ, மான்களை விரட்டிச் சென்று கடிப்பான் எண்ணமோ ஏற்படுவதில்லை. மாறாக அவனை வீரன் என்று பழக்கப்படுத்திக் கொள்கிறோம். எழுத்துகளை மாற்றி உச்சரிக்கும் போது அது வேறுசில குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே விளம்பரதாரர்கள் சரியாக பிரயோகிப்பது நல்லது.
நான்கு எழுத்துகளின் சேர்க்கை ஒருவனை கோபமூட்டுவதாகவோ, மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகவோ மாறிவிடுகிறது. ஒருவனை முட்டாள் என்றதும் கோபப்படுகிறான். அறிவாளி என்றால் சந்தோஷம் அடைகிறான். சொல் என்பது வெறும் அர்த்தம் மட்டுமில்லை. அது நிறைய உணர்வுகளை வழங்குவதாக இருக்கிறது.

கொஞ்ச நாளைக்கு முன் புதிதாக ஒரு மிக்ஸி விற்பனைக்கு வந்தது. வட இந்தியரின் கம்பெனி அது. மிக்ஸியின் பெயர் "கஞ்சன்'. இங்கு யாருமே அதை வாங்கவில்லை. தமிழ் நாட்டில் ஏன் யாரும் கஞ்சன் மிக்ஸி வாங்கவில்லை என்பது தெரியாமலேயே அந்த கம்பெனி மூடப்பட்டுவிட்டது.



--

சனி, டிசம்பர் 26, 2009

தினமலரில்...

'உயிர்மை' பதிப்பக நூல் வெளியீட்டு விழா
டிசம்பர் 26,2009,

சென்னை:""நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம், சமூகம் சார்ந்த அறிவை மாணவர்கள் பெற முடியும்,'' என எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பேசினார்."உயிர்மை' பதிப்பகத்தின் சார்பில், 12 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், "உயிர்மை' பதிப்பக நிர்வாகி மனுஷ்ய புத்திரன் பேசும் போது, ""நல்ல நூல்களை உருவாக்குவதன் மூலம், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தரமான நூல்கள் வெளிவருவது அதிகரிக்க வேண்டும்.மாணவர்கள் நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் சமூகம் சார்ந்த அறிவை பெற முடியும். இன்றைய அரசியல் நிகழ்வுகள், வாழ்க்கை தத்துவங்கள் உள்ளிட்டவைகளை, பல நூல்களை கற்றுத் தேர்வதன் மூலமே அறிந்து கொள்ள முடியும்,'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், மனுஷ்ய புத்திரன் எழுதிய என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், அதீதத்தின் ருசி, பிரபஞ்சன் எழுதிய தாழப்பறக்காத பரத்தையர் கொடி, சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய அவரவர் வழி, சுப்ரபாரதி மணியன் எழுதிய தண்ணீர் யுத்தம், கோமுவின், சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும், தமிழ்மகன் எழுதிய வெட்டுப் புலி, ஜெயபாலனின், அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது, தமிழ்நதியின் கானல் வரி, லஷ்மி சரவணக்குமார் எழுதிய நீல நதி, விஜய் மகேந்திரனின் நகரத்திற்கு வெளியே, உமா சக்தி எழுதிய வேட்கையின் நிறம் உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை கவிஞர் ஞானகூத்தன், தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாரதி மணி, சுகுமாரன், முருகேச பாண்டின், தேவேந்திர பூபதி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

வெள்ளி, டிசம்பர் 25, 2009

வெட்டுப்புலி நூல் வெளியீட்டு விழா-தினமணி




உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​ திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​


சமகால படைப்புகள் பாடத்திட்டத்தில் கூடாது: தினமணி ஆசிரியர்

சென்னை, ​​ டிச.25: "சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது' என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது:

""எல்லாக் காலங்களிலும் படைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.​ எல்லா எழுத்தாளனுக்குமே தான் படைத்த படைப்பெல்லாம் இலக்கியம்தான்;​ சிறந்ததுதான்.​ இதில் எதை நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது?​ இலக்கியம் என்கிற அங்கீகாரம் பெற என்னதான் அளவுகோல்?

காலம் என்கிற பரிசோதனைச் சாலையில் அங்கீகாரம் பெறாத எந்த எழுத்தும் இலக்கியமாகாது.​ குறைந்தது ஒரு தலைமுறையைத் தாண்டி அந்தப் படைப்பு நின்றால் மட்டுமே அது இலக்கியம்.​ எழுதப்படும்,​​ வெளியிடப்படும் படைப்புகளில் 90% படைப்புகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.​ ​அதேபோல,​​ சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி,​​ கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது.​ குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள் மட்டுமே பாடத் திட்டத்தின் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.​ சமகாலப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது,​​ ஆட்சிக்கும்,​​ பாடத்திட்டக் குழுவுக்கும் வேண்டியவர்களின் தரமற்ற இலக்கியப் படைப்புகள்கூடப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாகத் தரப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.​ இதன் தொடர் விளைவாகத் தரமற்ற நாளைய தலைமுறை உருவாகிவிடும் என்பது மட்டுமல்ல,​​ இலக்கியத்தின் தரமும் தாழ்ந்துவிடும்.

நமது எழுத்தும்,​​ பேச்சும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்;​ மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்;​ அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்'' என்றார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.

இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு​ பி​ரபஞ்சன் அழைப்பு

First Published : 26 Dec 2009 01:44:55 AM IST

Last Updated :

உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள்

வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​

கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​

சென்னை, ​​ டிச.25: ""இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என்று திரைப்படத் துறையினருக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அழைப்பு விடுத்தார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

""இலக்கிய அறிவு இல்லாத எங்களை எதற்கு இந்த விழாவுக்கு அழைத்தீர்கள்?'' என்று இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

இலக்கியத்தோடு பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே அவர்களை மனுஷ்ய புத்திரன் அழைத்துள்ளார்.​ 1960}70}ம் ஆண்டுகளில் படைப்பாளிகள் ஓவியர்களோடு இணைந்து பணியாற்றினார்கள்.​ அதன் மூலம் சிறந்த ஓவியர்கள் உருவானார்கள்.​ சிறந்த படைப்புகளும் உருவாகின.

அதுபோல,​​ திரைப்படத் துறையினரும்,​​ படைப்பாளிகளும் இணைந்து பணியாற்றினால் சிறந்த படைப்புகள் உருவாகும்.​ சிறந்த இயக்குநர்களும் உருவாக முடியும்.​ இலக்கியத் துறையில் இருந்து திரைப்படத் துறைக்குச் சென்ற பலர் சாதனை படைத்துள்ளனர்.

ஆண் }​ பெண் உறவுச் சிக்கல்களை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை.​ அதனால்தான் சமுதாய முன்னேற்றம் தடைபடுகிறது.​ அதனை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் தனது "அவரவர் வழி' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் நமக்கு புரிய வைத்துள்ளார்' என்றார் பிரபஞ்சன்.​ முன்னதாக 11 எழுத்தாளர்கள் எழுதிய 12 நூல்களை "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர்கள் பிரபஞ்சன்,​​ சாரு நிவேதிதா,​​ பாரதி மணி,​​ தேவேந்திர பூபதி,​​ சுகுமாரன்,​​ திரைப்பட இயக்குநர்கள்​​ தங்கர்பச்சான்,​​ எஸ்.பி.​ ஜனநாதன்,​​ வெற்றிமாறன்,​​ அறிவழகன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

வெளியிடப்பட்ட நூல்களும்,​​ எழுத்தாளர்களும்:​ "தாழப்பறக்காத பரத்தையர் கொடி' }​ கட்டுரைகள் ​(பிரபஞ்சன்),​​ "என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' }​ கட்டுரைகள்,​​ "அதீதத்தின் ருசி' }​ கவிதைகள் ​(மனுஷ்ய புத்திரன்),​​ "வெட்டுப் புலி' }​ நாவல் ​(தமிழ்மகன்),​​ "அவரவர் வழி' }​ சிறுகதைகள் ​(சுரேஷ்குமார் இந்திரஜித்),​​ "தண்ணீர் யுத்தம்' }​ சுற்றுச் சூழல் கட்டுரைகள் ​(சுப்ரபாரதி மணியன்),​​ "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்' }​ நாவல் ​(வா.மு.​ கோமு),​​ "அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது' }​ குறுநாவல்கள் ​(வ.ஐ.ச.​ ஜெயபாலன்),​​ "கானல் வரி' }​ குறுநாவல் ​(தமிழ் நதி),​​ "நீலநதி' }​ சிறுகதைகள் ​(லஷ்மி சரவணக்குமார்),​​ "நகரத்துக்கு வெளியே' }​ சிறுகதைகள் ​(விஜய் மகேந்திரன்),​​ "வேட்கையின் நிறம்' கவிதைகள் ​(உமா ஷக்தி).

வெளியிடப்பட்ட 12 நூல்கள் பற்றி 12 பேர் விமர்சன உரையாற்றினார்கள்.​ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

புதன், டிசம்பர் 23, 2009

தமில் பேசுவது தப்பா? -2 பஞ்ச் டயலாக்!





திரைப்படங்களில் கதாநாயன் ஒரு சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது பஞ்ச் டயலாக் என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு படத்தில் இப்படியொரு வசனம் கேட்டேன்:

"நான் ஒரு முடிவு எடுத்துட்டா அப்புறம் நானே என் பேச்சைக் கேட்க மாட்டேன்.''

}இது என்ன பரிதாபம் என்றுதான் முதலில் தோன்றியது. நம்மமுடைய பேச்சை இரண்டாவது நபரோ, மூன்றாவது நபரோ கேட்காமல் போவது சரி. நாமே நம் பேச்சைக் கேட்காமல் போவதா? இந்த நிலைமை நமக்கு ஜென்மத்துக்கும் ஏற்படக்கூடாது.

"சாமி கிட்ட சாந்தமா பேசுவேன். சாக்கடைங்க கிட்ட சாந்தமா பேச மாட்டேன்' என்று அதே நடிகரின் அடுத்த அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ரூம்போட்டு யோசிக்கிறார்கள் என்பது உண்மைதான். அதிலும் இதை பூஜை ரூமில் யோசித்தார்களா? பாத் ரூமில் யோசித்தார்களா என்று அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

"இது எப்படியிருக்கு' என்று பதினாறு வயதினிலே படத்திலேயே ரஜினிக்கு இப்படி பஞ்ச் டயலாக் பேசியிருந்தாலும் இதற்குப் பெயர் சூட்டுவிழா நடத்தியது நான்தான் என்று என் ஞாபகம்.

அருணாச்சலம் படம் துவங்குவதற்கு முன்பு பஞ்ச் டயலாக் என்று சொல்வது புழக்கத்தில் இருந்ததாக எனக்கு நினைவில்லை. அப் படத்தின் அறிவிப்புக்கு ரஜினி பத்திரிகையாளர் சிலரை மட்டும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். பட அறிவிப்பு, யாரெல்லாம் நடிக்கிறார்கள், எங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது இப்படியாகப் பேசி முடித்துவிட்டுக் கிளம்பினோம். ரஜினியிடம் இந்தப் படத்தில் நீங்கள் அடிக்கடி பேசும் வசனம் என்ன என்று கேட்டேன். நான் என்ன கேட்கிறேன் என்று அவருக்கு சட்டென்று விளங்கவில்லை. "பஞ்ச்சாக ஒரு டயலாக் பேசுவீர்களே அது'..

"பஞ்ச் டயலாக்... நல்லா இருக்கில்ல...? பஞ்ச் டயலாக்..' என்று சிரித்தார். ரஜினி அந்த வார்த்தையை அப்போதுதான் கேள்விபடுவதாக பூரித்ததனால் அந்த நிமிடம் வரை அவருடைய அத்தகைய வசனங்களுக்குப் பெயர் சூட்டப்படாதது தெரிந்தது.
பிறகு சுந்தர் சியிடம் கேட்டு, "ஆண்டவன் சொல்றான்.. அருணாசலம் கேட்கிறான்' என்ற பஞ்ச் டயலாக்கை பத்திரிகையில் வெளியிட்டேன். ரஜினியின் பஞ்ச் டயலாக் என்ற வரிகள் என்ற பிரயோகம் அதன் பிறகு, பரவலாகப் பரயோகிக்கப்பட்டது. சிம்பு, தனுஷ், விக்ரம், அஜீத், விஜய் போன்ற பலர் இப்படித் திரும்பித் திரும்பிச் சொல்லும் வசனங்களுக்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. நடிகர் விவேக் படத்துக்குப் படம் பஞ்ச் டயலாக் என்ற வார்த்தையைப் பிரபலப்படுத்தினார். இப்போது சினிமாவில் விலேஜ் சப்ஜெக்ட், சிட்டி சப்ஜெக்ட் என்பது போல ஒரு வார்த்தையாகிவிட்டது.

இதற்காக நான் பெருமை பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. ஆப்பிள் எவ்வளோவோ காலமாக கீழே விழுந்து கொண்டிருந்தாலும் அதற்குப் புவியீர்ப்பு விசை என்று பெயர் சூட்டிய நியூட்டனோடு என்னை ஒப்பிட்டுக் கொள்கிற விஷயமல்லவே இது. அதுவுமில்லாமல் இந்த டயலாக்குகள் மீது எனக்கு எப்போதும் அதீத வெறுப்பு உண்டு.

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'' என்பதெல்லாம் எந்த கணக்கு அமைவுகளுக்கும் பொருந்தாதவை. அது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதாகத்தான் மனது அடித்துக் கொள்ளும். ஒரு தடவை சொல்வது ஒரு தடவை சொல்வதற்குத்தான் சமமாக இருக்க முடியும்.

இப்படி தவறான தமிழை அல்லது தவறான மொழியை சினிமாவில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான வசனங்களின் போது
இன்னொரு ஆபத்தையும் கவனிக்கலாம்.

அப்படி வசனம் பேசுகிறவர்கள் "துளசி வாசம் மாறினாலும் மாறும்.. இந்த தவசி பேச்சு மாற மாட்டான்டா'' என்று பேசுகிறார்கள். "இந்த சாரதிகிட்ட சண்டை வெச்சிக்கிட்டவங்க தப்பிச்சுப் போனதா சரித்திரம் இல்லடா'' என்றோ, "எம் பேரு சிம்பு.. என்கிட்ட வெச்சுக்காத வம்பு'' என்றோ.. "இந்த அண்ணாமலையை பகைச்சுக்கிட்டா இதுதான்டா தண்டனை... இந்த வாங்கிக்கோ டுமீல்'' என்றோ டயலாக் பேசுகிறார்கள்.


இந்த உலகில் யாருமே இப்படி பேசுவதற்கு வாய்ப்பில்லை. "என்னைப் பகைச்சுக்கிட்டா இதுதான்டா தண்டனை' என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. "நான் பேச்சு மாற மாட்டேன்டா' என்பானா "இந்த தவசி பேச்சு மாற மாட்டான்டா' என்பானா? தானே தன் பெயரைத் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும் விபரீதம் தமிழ் மொழிக்குப் புதிது.. எனக்கு உலக மொழிகள் பற்றி தெரியாது. அதிலும்கூட இப்படி இருக்காது என்று நம்புகிறேன். தொடர்ந்து இத்தகைய வசனங்களைக் கேட்கும் குழந்தைகள், அதைப் போல பேசுவதற்கு ஆரம்பிக்கின்றன. "எம்பேரு அஷோக்கு.. இந்தா புஸýக்கு'

என்று பேசுகின்றன. சில பெற்றோர்கள் பூரித்துப் போய் பக்கத்துவீட்டுக்காரர்களை அழைத்துக் காட்டவும் செய்கிறார்கள்.

சில குழந்தைகளோ சினிமாவில் வருகிற மாதிரி அன்று தகராறு செய்த அந்த ஆட்டோகாரனிடம் தம் அப்பா ஏன் டயலாக் பேசவில்லை, சுழன்று சுழன்று சண்டை போடவில்லை என்று மனம் பாதிக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு மொழிச் சிதைவும் மனச் சிதைவும் அரங்கேறி வருகிறது.

ஒரு சிலர் அஜீத் கால்ஷீட் வேண்டும் என்பதற்காக, விஜய்யை மட்டம் தட்டி சில டயலாக்குகளை எழுதி அவருடைய மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

விஜய்க்கு "திருமலை' படம் ரிலீஸôன நேரத்தில் "எவன்டா மலை.. நான்தான்டா தல' என்பது போன்ற டயலாக்குகளை எழுதுகிறார்கள். விஜய்யும் அஜீத் ரேஸ் ஓட்டுவதைக் கிண்டல் செய்து, "ரேஸ்ல ஃபர்ஸ்ட்டு மொதல்ல வர்றது முக்கியமில்லடா.. கடைசியில மொதல்ல வர்றதுதான்டா முக்கியம்' என்பார் அவருடைய படத்தில். தியேட்டரில் விசில் பறக்கும். இப்படியான தனிமனித துவேஷத்தை வளர்ப்பதும் தமிழில்தான் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

பஞ்ச் டயலாக் எழுதும் வசனகர்த்தாக்கள் இயக்குனர்கள் மனம் வைப்பர்கலா?

also see in www.koodu.in

செவ்வாய், டிசம்பர் 22, 2009

சனி, டிசம்பர் 19, 2009

வெட்டுப்புலி நாவல் முன்னுரை



நாவலுக்குள்...

இப்போதுதான் இந்த நாவலை இன்னொரு தரமும் படித்துவிட்டு வெளியே வந்தேன். எனக்கு நெருக்கமான ஒருவரின் டைரியைப் படித்தது மாதிரி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மனதில் வெவ்வேறு வடிவம் கொண்டு இப்போது தாளில் இறக்கி வைத்துவிட்டபின்பு கைவிட்டுப் போனதுபோல இருக்கிறது. அதன் காரணமாகவே ஏற்படும் அன்னியத்தன்மையும் சேர்ந்து கொள்கிறது. ஒரு சுதந்திரமும் சோகமும் ஆயாசமுமாக இருக்கிறது.

எனக்கு நன்கு பரிச்சையமான பலரும் இந்த நாவலில் வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நானே வருவது போலவும் பிரமைதட்டுகிறது. ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதா பாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதை விமர்சிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மத, மொழி, இன ரீதியான பல பிரிவினரும் சேர்ந்து பாரதக் குடையின் கீழ் சேர்ந்து இருப்பதில் நிறைய யோசனையும் தயக்கமும் ஏற்படத் தொடங்கியது.
ஒரு கூட்டுக் குடும்பப் பெரியவர் மண்டையைப் போடும் தருணத்தில் குடும்பத்தில் இருக்கும் நாற்பது ஐம்பது உறுப்பினர்களுக்கும் பாகம் பிரிக்கும் போது ஏற்படும் மனக்கசப்புகளைப் போன்றது அது. ஒருவரோ பெரியவர் போய்ச் சேரட்டும் அப்புறம் நம் பிரிவினைகளைப் பார்ப்போம் என்றார். மற்றொருவரோ பெரியவர் இருக்கும்போதே பிரித்துக் கொள்ளலாம் என்கிறார். வெள்ளைக்காரனைக் குடும்பத்தலைவர் என்று உவமித்ததை அப்படியே ரேடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. உதாரணங்கள் நூறு சதவீதம் பொருத்தமானவையாக இருப்பதில்லை.

மராட்டியத்தில் ஜோதிராவ் புலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாட்டின் விடுதலையைவிட சமூக விடுதலை முக்கியமானது.. பிரிட்டாஷார் மட்டும் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியாவுக்கு சாபவிமோசனமே ஏற்பட்டிருக்காது. அவர்கள் இந்தியாவுக்குக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று கூறியிருக்கிறார். பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை அடைவதுதான் முதல் கடமை என்பது அவருடைய வாழ்நாள் பிரசாரமாகக் கொண்டிருந்தார்.

ஏறத்தாழ ஜஸ்டிஸ் பார்ட்டிக்கும் அதே போன்ற நோக்கம்தான். ஜஸ்டிஸ் பார்ட்டி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயல்பட ஆரம்பித்தது.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது போல திராவிட நாடு என்று பிரித்துக் கொள்வதற்கும் சிலர் ஆசைப்பட்டனர். பாகிஸ்தான் பிரிந்து போனது போலவே அதுவும் மோசமான முடிவாக மாறியிருக்கக்கூடும். ஆனால் அந்த யோசனையை தகுந்த நியாயங்களோடு பிரிவதற்கு ஆசைப்பட்டவர்கள் முன் மொழிந்தனர். வழி நடத்த சிலர் நிஜமாகவே ஆசைப்பட்டனர். பலர் சத்தியாவசத்தோடு தியாகம் செய்தனர்.

வேறு மதத்தவன் நம்மை ஆளுவதா என்ற கோபம் சிலருக்கு. வேறு நாட்டவன் நம்மை ஆளுவதா என்பது இன்னும் சிலருக்கு. பார்ப்பனர்கள் வேறு நாட்டினர் என்றும், இந்தியாவில் குடியேறிய வேறு சமய நம்பிக்கைகள் கொண்டவர்கள் என்றும் வலியுறுத்தியவர்களுக்கு முதல் விடுதலை ஆரியர்களிடமிருந்து தேவைப்பட்டது. கிருஸ்தவர்கள் வந்தார்கள், அதற்கு முன்னர் இஸ்லாமியர் வந்தார்கள், அதற்கும் முன்னர் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர் வந்தார்கள்.... எங்களுக்கு முதல்விடுதலை ஆரியர்களிடமிருந்து... என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

வரலாற்று உண்மைகள்.. அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது.

``ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவனைஇவ்வளவு தாமதமாக எதிர்ப்பது ஏன்?'' என்ற கேள்வி எழுந்தது..

``இல்லை, புத்தரே பிராமண கருத்துகளுக்கு எதிராக எழுந்தவர்தான் என்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகள் புத்த தத்துவத்தைத் தழுவியர்களின் ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றது...''

ஆனாலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லையா என்ற இயல்பான இன்னொரு கேள்வி..

சங்கரரும் ராமாநுஜரும் மீண்டும் இந்து தத்துவங்களைத் தழைக்கச் செய்துவிட்டனர்.

அட இந்தியா முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த ராஜாங்கத்தை இவர்கள் எப்படி அழிக்க முடியும்..?

சிந்து சமவெளி நாகரீகமே ஆரியர் படையெடுப்பால்தானே அழிந்தது? மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் வசித்தவர்களை தென்னிந்தியா நோக்கி விரட்டி அடித்தவர்கள் அவர்கள்தானே? ஆயிரம் ஆண்டுகளில் எல்லாம் அவர்களை அழித்துவிட முடியாது. அவர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்..

அவ்வளவு எதிர்ப்பு சக்தி கொண்டவர்களா அவர்கள்..?

ஆலகால விஷங்கள்... அழிக்கவே முடியாதவர்கள்...

இந்திய ஒற்றுமையைக் குலைக்க காலனி ஆதிக்கத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட சதிகள் இவை யாவும். இந்தியா வேதங்களின் நாடு, உலகத் தத்துவங்களுக்கெல்லாம் உயர்ந்த தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடு. இதன் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கலாமா? அரசியல் ஆதாயத்துக்காக அபாண்டமான கருத்துகளைச் சொல்லும் இந்தப் பாவிகளுக்குக் காலம்தான் பதில் சொல்லும்?

வானியல் சூத்திரங்கள், கணிதக் கோட்பாடுகள், ஆழ்ந்த இதிகாசங்கள்... அடடா இதையெல்லாம் இடக்கையால் புறம்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு வால் பிடிக்கும் அக்கிரமக்காரர்களை வருங்காலம் மன்னிக்காது..


நீ சூத்திரனாகப் பிறந்ததற்கு உன் விதிதான் காரணம்... எல்லாம் அவன் செயல்... என்கிற பிற்போக்குச் சிந்தனைகள்தான் வேதங்கள். ஒவ்வொருத்தனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் வைத்திருக்கும் மடத்தனம்தான் இதிகாசங்கள். காட்டு மிராண்டியாக இருந்த மனிதர்களுக்குச் சொன்ன கதைகளைக் கண்டு மலைக்காதே... அவை காலத்துக்கு ஒப்பாதவை...

இந்தியத் தத்துவ தரிசனங்களை அறியாத மூடர்கள் ஒட்டு மொத்தமாக இப்படிஒதுக்கித் தள்ளுகிறார்கள். இப்படி வேறு மதத்தின் தத்துவங்களை இவர்களால் விமர்சிக்க முடியுமா? கொன்றுவிடுவார்கள். இந்திய மதங்கள் சகிப்புத் தன்மை மிக்கவை...

அயோத்தியில் மசூதியை இடித்தபோதும் குஜராத்தில் உயிரோடு கொளுத்தியபோதும் தெரிந்துவிட்டதே இவர்களின் சகிப்புத்தன்மை...

மாற்று மதத்தினர் இந்து மதத்தை அழிக்க ஆண்டுக்கு எத்தனை கோடிகள் செலவிடுகிறார்கள் என்று தெரியுமா?

........கருத்து மோதல்கள்.. அவரவர் ஈடுபாட்டுக்கு ஏற்ப சத்தியாவேசங்கள்...

இது போன்ற சில சத்தியாவேசங்களுக்குத் தடையாக இருந்ததாகக் கருதப்பட்டதால் மகாத்மா காந்தியும் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தங்கள் இன்னுயிரை பலி கொடுக்க நேரிட்டது.



கிராமராஜ்ஜியம், ராட்டை, கிராமங்களின் தன்னிறைவு என்று மகாத்மா காந்தி கனவு கண்டு கொண்டிருந்தபோது, டெஸ்ட் ட்யூப் பேபி, ஒரு குடியிருப்புப் பகுதிக்கு ஒரே ஒரு சமையலறை என்று பரவலானஎல்லைகளைத் தொட்டார் பெரியார் ஈ.வே.ரா.

நடு இரவில் நகைகள் அணிந்த பெண் தனியாக சுற்றி வந்தால்தான் சுதந்திரம் என்றார் காந்தி. பெண்கள் நகைகள் அணியாமல் அலங்காரம் செய்யாமல் ஆண்கள் போல் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார் ஈ.வே.ரா. மகாத்மா இங்கிலாந்து அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். பெரியார் இந்தியர்களால் ஆளப்பட்ட அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். காந்திக்கும் பெரியாருக்குமான முக்கியப் புள்ளி இது.
மேலோட்டமாக பார்க்கும்போது தேவையில்லாமல் காந்தியையும் பெரியாரையும் இணைத்துப் பேசுவவதாகவே தோன்றும். தென்துருவத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் வட துருவம் என்ற ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. காந்தத் துண்டு ஒன்றுதான். ஒரு துருவம் இல்லாமல் இன்னொரு துருவம் இல்லை.

காந்தியை ஹீரோ என்பவர்களுக்குப் பெரியார் வில்லன். பெரியாரை ஹீரோ என்பவர்களுக்கு காந்தி வில்லன். சரியாகப் புரிந்து கொண்டால் இருவருமே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோக்கள் என்பது புரியும்.
சுந்திரத்துக்காகப் போராடிய காந்தி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரத்தை வரவேற்கவில்லை. சுதந்திரத்துக்கு இப்போது அவசரமில்லை என்று அவர் கருதினார். பெரியார் அதையே கொஞ்சம் முன்னாடி சொன்னார்.
காந்திக்கு எல்லா மதமும் ஒற்றுமையாக இருக்கும் நாளில் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. பெரியாருக்கு எல்லா சாதியும் சமமாக இருக்கும் நாளில் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.


இப்படியாக ஒரு மாற்று அரசியல் சிந்தனை இந்தியா முழுக்க இருந்தது போலவே சென்னை, செங்கல்பட்டு பிராந்தியத்தையும் தழுவிக் கொண்டிருந்தது. திராவிட பின்னணியில் சில குடும்பங்கள் செயல்பட்டன. தென் தமிழகத்தைவிட வட தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது. திராவிட கட்சிகளின் அரசாட்சியும் சேர்ந்து கொள்ள அவர்களில் தீவிரமான சிலர் எந்தவித பலனுமின்றியே அந்த இயக்கங்களுக்கு வேராக இருந்து மடிந்தனர். வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க வேண்டியிருந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும் விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதை இந்தக் கதையைப் பின்னிச் செல்லும் அடிச்சரடு. முடிந்த அளவுக்கு அது ஒரு உண்மைக்கதைதான். தீப்பெட்டியின் மேல் இருக்கும் படம்... கடந்த முக்கால் நூற்றாண்டு திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மவுன சாட்சியாக இருக்கிறது. இந்த மூன்றையுமே தொடர்புபடுத்த முடிந்திருப்பது இதை ஒரு படைப்பிலக்கியமாக்க உதவியிருக்கிறது.

பூண்டி அணைக்கட்டுக்குப் போய் சிறுத்தையை வெட்டியவர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டுவரலாமா என்று கேட்டதும் "சரி வா'' என்று அடுத்த நொடி என்னை அழைத்துச் சென்ற என் மைத்துனர் விவேகானந்தன்.. அவர் உதவி இல்லையென்றால் இந்த நாவலை நான் இப்படித் தொடங்கியிருக்கமுடியாது.

நிகழ்கால சரித்திரக்கதையாக இருப்பதால் முடிந்த அளவு ஜாக்கிரதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது. முதல் வாசகராக இருந்து அபிப்ராயங்கள் சொன்ன கே.ரகுநாதனுக்கு என் முக்கியமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பல தயக்கங்களுக்கு அவர் விடையாக இருந்தார்.

நண்பர்கள் கடற்கரய், ரெங்கையா முருகன், த.அரவிந்தன், மரக்காணம் பாலா போன்றவர்கள் வெட்டுப்புலி பின்னணியை வெகுவாக உற்சாகப்படுத்தியவர்கள்.

நாவலின் காலகட்டத்தைத் தவறில்லாமல் சித்திரிக்க "தினத்தந்தி' ஐ.சண்முகநாதன், "ராணி' அ.மா.சாமி, அண்ணாவோடு நெருங்கிப் பழகிய ஜே.வி.கண்ணன், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம்.உமர், தினமணி சிவகுமார், வரலாற்றறிஞர் பெ.சு.மணி, நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆகியோரிடம் பேசும்போது கிடைத்த பல தகவல்களைப் பயன்படுத்திக் கொண்டேன். நாவலில் ஒரு வரியாகவோ, ஒரு சம்பவமாகவோ அவை உருமாறியிருக்கின்றன. அவர்களுக்கு என் நன்றிகள். என் மனைவி திலகவதி நாவலில் இடம் பெறும் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பேசும் வழக்கு மொழியும் நாவலுக்கு மிகவும் பயன்பட்டது. ஒரு நூற்றாண்டைத் தழுவி எழுதுவதற்கே ஏராளமான நூல்களின் துணை தேவையாக இருந்தது. இன்னொரு பத்தாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டுமானாலும் சுமார் ஆயிரம் சந்தேகங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

இங்கிருந்து இந்த இடத்துக்குச் செல்ல சாலை இருந்ததா? அந்த இடமே அப்போது இருந்ததா? எத்தகைய வாகனத்தில் சென்றனர். என்ன உடை உடுத்தினர். எதற்காகச் சென்றனர். என்னவிதமான பொருளீட்டினர்? எப்படி சேமித்தனர். என்ன நாணயம் இருந்தது. என்ன பேச்சு இருந்தது? யார் ஆண்டனர், எப்படி வரி வசூலித்தனர், யார் மூலமாக வசூலித்தனர். சினிமா இருந்ததா, பேப்பர் இருந்ததா, என்ன முறையில் அச்சடித்தனர், எப்படி பேசினர், யாரை எதிர்த்துப் பேசினர், யார் யார் பேச்சைக் கேட்டனர், என்ன உண்டனர், எப்படி உழைத்தனர், என்ன சிகிச்சை, கிராமம் எப்படி இருந்தது, நகரம் எப்படி இருந்தது... என்ன கோயிலில் என்ன சாமி.. எப்படி வழிபட்டனர்.. குடுமி வைத்திருந்தவர் எத்தனை சதவீதம், யாரெல்லாம் ஓட்டு போட்டனர், எப்படியெல்லாம் வீடு கட்டினர்.. எதற்கெல்லாம் கோபப்பட்டனர், எதற்கெல்லாம் சந்தோஷப்பட்டனர், அந்த சந்தோஷம் எந்த மாதிரியானது?

போன தலைமுறை சந்தோஷங்களும் துக்கங்களும் வேறு மாதிரி இருந்தன. ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. கிராமத்தில் குழந்தை ஒன்று காணாமல் போய்விட்டது. பத்து இருபது வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் அப்படி எங்கு தொலைந்துவிட முடியும்? நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை. கொசஸ்தலை ஆற்றில் இறங்கி விளையாடப் போயிருக்கலாம் என்று சந்தேகித்தனர். நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. எல்லோரும் பதறிக் கொண்டிருக்க, வீட்டின் பெரியவர் சொன்னார்: "நரி சாப்பிட்டுட்டு இருக்கும்மா... பெசாம படுங்க... காலைல பாத்துக்கலாம்''

குழந்தையைக் கொஞ்சுவதிலெல்லாம் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பார். திடீரென்று இல்லாமல் போய்விட்டால் தாங்கிக் கொள்வீர்களா? என்பார். குழந்தைகள் சிறிய சீக்கு வந்தாலும் இறந்துவிடக் கூடியவை என்பது அவர் நம்பிக்கை. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக பிரியம் வைப்பதே அவருக்கு வியப்பாக இருந்தது. அவர் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசம் வெளியில் தெரியாத ரகசியமாக இருந்ததை நான் அறிவேன். என் மகனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த நேரத்தில் அவர் சொன்னார்: "இன்னும் நாலு வருஷம் சமாளிச்சு வளத்துட்டியனா பையன் தருப்தி ஆயுடுவான்''

(தருப்தி ஆயுடுவான் என்பதின் பொருள் உலகின் ஒரு நபராக கணக்கில் வந்துவிடுவான் என்பது. அவருடைய உலக மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கணக்கில் வருவார்கள்.)

டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் கொஞ்சிக் கொள்வது புதிதாக கற்பித்த உணர்வாக இருக்கிறது. டி.வி.மூலமாக புதுவிதமான பாசத்தைக் கற்றுக் கொண்டு வருவது தெரிகிறது. கணவனும் மனைவியும் கூலிவேலைக்குச் சென்றுவிட இரண்டு வயதுகூட நிரம்பாத குழந்தை தனியாக வீட்டில் கிடக்கும். பசி எடுக்கும்வேளையில் கூழ் பானையில் கையைவிட்டு எடுத்து உடம்பெல்லாம் பூசிச் சாப்பிட்டுக் கொள்ளும். மாட்டுக்கு வைத்த தண்ணீரைக் குடித்துக் கொள்ளும். முப்பது ஆண்டுகளில் அதே கிராமம் மாறிப் போய்விட்டது. மம்மி சொல்லு, மம்மி சொல்லு என்று கொஞ்சுகிறார்கள். கான்வென்ட் வேனில் ஏற்றிவிட்டு "இன்னும் ஒழுங்கா டை கட்ட தெரியலை..'' என்று இரண்டாம் கிளாஸ் பையனை நொந்தபடி செல்கிறார் தாய்.
தி.மு.க.வுக்கு முன் தி.மு.க.வுக்குப் பின்.. சினிமாவுக்கு முன் சினிமாவுக்குப் பின்.. சன் டி.வி.க்கு முன்.. சன் டி.வி.க்குப் பின் என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சிலர் நினைவுகூரும் சம்பவங்கள் இதில் இருந்தாலும் முப்பதுகளில் இருந்துதான் கதை நகர ஆரம்பிக்கிறது. பெரியார், அண்ணா, எஸ்.எம். உமர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பலர் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். எம்.ஆர்.ராதா, கலைஞர், பெரியார்தாசன், சுப.வீ., டி.வி., சன் டி.வி., தமிழ்நாடு மின்சார வாரியம், ஏவி.எம். ஸ்டூடியோ போன்ற பல விஷயங்கள் இந் நாவலின் சரித்திர முக்கியத்துவத்துக்கு உதவும். செங்கல்பட்டை காசி வரை இணைத்த சாலை எங்கோ மறைந்து போய் அருகிலேயே புதிய தங்க நாற்கர சாலை உருவானதும் பத்தடி ஆழத்தில் கவளை ஓட்டி நீர் இறைத்துக் கொண்டிருந்த கிணறு இப்போது நூற்றி ஐம்பது அடி ஆழ ஆழ்துளை கிணறாக மாறிப்போய்விட்டதும் சமூக மாற்றத்தின் நீள ஆழத்தைச் சொல்லும் முக்கிய காரணிகள். சமூக, அரசியல் நிலைகளை சார்புத்தன்மை இல்லாமல் பார்க்க முடிவதில்லை. காந்தியையும் சோனியா காந்தியையும் காங்கிரஸ்வாதி என்பதும் பெரியாரையும் ஜெயலலிதாவையும் திராவிட இயக்கத்தினர் என்பதும் ஒரு சுவையான முரண்பாடு.

என்னுடைய சிறுவயதில் ஒருவரை இப்போதும் நடுக்கத்தோடு நினைத்துப் பார்க்க முடிகிறது. அவர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குடித்துவிட்டு, தெருவில் கலைஞர் வாழ்க என்று சாக்பீஸôல் எழுதுவார். பக்கத்தில் இருக்கும் அதிமுக மன்றத்திற்கு அருகே போய் நின்று கொண்டு கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க என்று உயிர் போகிற வரை கத்துவார். கோபத்தில் அந்த மன்றத்து ஆள்கள் அவரை அடித்து நொறுக்குவார்கள். இன்று மாலைக்குள் அவர் இறந்துவிடுவார் என்று பதறுவேன். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த அந்தப் பத்து ஆண்டுகளும் அவர் அப்படித்தான் கத்திக் கத்தி உதைபட்டுக் கொண்டிருந்தார்.

அரசியலில் எல்லாம் சகஜமாகிவிட்டது. காங்கிரஸýம் திமுகவும் கூட்டணி வைத்தபோது அதிர்ச்சி அடைந்த திமுக தொண்டன், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்தபோது அரசியலில் எல்லாம் சகஜம் என்பதன் பொருள்புரியாமல் விழித்தான்.



இதுதான் கதை நடக்கும் காலகட்டம். படைப்பின் தர்மத்தை மீறாமல் இந்தக் கதையை நான் சொல்லியிருக்கிறேன்.

நாவலோடு தொடர்புடைய ஒரே ஒரு விஷயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன். இது கொஞ்சம் புனைவு கலந்த குறிப்புதான்...

சிறுத்தையால் தாக்கப்பட்ட சின்னா ரெட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அங்கே மருத்துவ உதவிகள் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் மருத்துவமனையின் வாசலில் இருந்த ஒரு கல் திண்டில் படுத்துக் கொண்டு தானே தனக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டார்.
எந்த மருத்துவ முறையை பிறருக்குச் சொன்னால் பலிக்காது என்று அவர் கருதினாரோ அதை அவர் ஒரு சிறிய சபலத்துக்காக மீற வேண்டியதாகிவிட்டது. பக்கத்தில் சென்ரல் சினிமா தியேட்டரில் சினிமா படம் ஓடுவதாக ஒரு முஸ்லிம் பெரியவர் தகவல் சொன்னார். ஏற்கெனவே ஆறுமுக முதலி சினிமா எடுப்பதற்கு மூங்கில் கேட்டுவிட்டுப் போனசம்பவம் சின்னா ரெட்டிக்கு நினைவு வந்தது. தம் மகன் வருகிற வரை பொறுத்திருக்க அவருக்கு முடியவில்லை. ஓர் அணா இருந்தால் படம் பார்த்துவிட முடியும் என்ற நிலையில் தம் ரண சிகிச்சை மருத்துவத்துக்கான மூலிகை இதுவென்று அந்த பாயிடம் சொல்லி இரண்டணா பெற்றுக் கொண்டார். அவருடனேயே சென்று படம் பார்த்தார். சினிமா உற்சாகம் வேறு சில மருத்துவ உத்திகளையும் அவரிடம் சொல்லுவதற்குக் காரணமாகிவிட்டது. அணையில் ஏற்பட்ட சிறுவெடிப்பு இத்தனை நாள் பாதுகாக்கப்பட்ட மொத்த நீரையும் வெளியேற்றுவதற்குக் காரணமாக இருந்துவிடுவதில்லையா? அப்படித்தான் ஆகிவிட்டது.

அதன் பிறகு சின்னா ரெட்டிக்கு தம் மருத்துவத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. இனி அது பலிக்காது என்று நம்ப ஆரம்பித்தார். சிறுத்தை அடித்துப் பிழைத்தவர் சிறிய வண்டு கடித்து இறந்து போனதற்கும் அவருடைய பிடிமானம் கைநழுவிவிட்டதுதான் காரணம். அந்த முஸ்லிம்தான் பின்னாளில் மஞ்சள் காமாலைக்கும் எலும்பு முறிவுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை செய்பவராக மாறி, ஏராளமான பணம் சம்பாதித்து மும்பையில் குடியேறிவிட்டவர்.

நாவலில் இந்தப் பகுதியை எங்கே சேர்ப்பதென்று எனக்குப் புலப்படவில்லை. நாவலுக்கு இது அத்தனை முக்கியமா என்பதும் தெரியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இது நாவலை முடித்து அச்சுக்குக் கொடுத்த பின்புதான் நினைவுக்கு வந்தது. இதை எங்காவது புகுத்தப் போய் ஏடாகூடமாய் தொக்கி நிற்குமோ என்றுவிட்டுவிட்டேன். வாசகர்கள் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் பொருத்தமான இடத்தில் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வாசித்துக் கொள்ளலாம்.

மற்றபடி,

ஒன்றுமில்லை.

திங்கள், டிசம்பர் 14, 2009

மெகா ஆராய்ச்சி!




தமிழ் சானல் ஒன்றில் பல ஆண்டுகளாக ஒரு மெகா சீரியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிப்பதற்கு என்னுடைய அறியாமையே காரணம். இந்தியாவில் உள்ள அனைத்துச் சானல்களிலும் இப்படி பல ஆண்டுகளாக பல மெகா சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சீரியல்கள் அனைத்துமே முதலிலேயே கதை தீர்மானிக்கப்பட்டு ஒன் லைன் தயாரிக்கப்பட்டு வசனம் எழுதப்பட்டு படப்பிடிப்புக்கு போனவை அல்ல. இதன் பொது அம்சம் பிரதானமாக ஒரு பெண் பாத்திரம் இருக்க வேண்டும். செல்வி, அரசி, தங்கம், அபி.. இப்படி. இந்தக் கதைகளில் ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொள்வார்கள். நம் கதாநாயகிக்குத் துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கும். காலை எழுந்து இரவு வரை துன்பம்தான். சுற்றியிருப்பவர்கள் பலரும் முதுகில் குத்துவார்கள். கருணையே வடிவான கதாநாயகி, பரவாயில்லை இருக்கட்டும் என்றபடி அடுத்தபடிக்கட்டில் கால் வைப்பாள். வாழ்க்கையில் உயர்ந்து லேடி பில்கேட்ஸ் நிலைக்கு வருவாள். அப்பாடா கதை இந்த வாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், அந்த வாரம்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் வகித்திருக்கும்.

"நல்லாத்தானே இருக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே?''} இது சானல் சஜஷன்.

விடுவார்களா, மீண்டும் கூடவே இருந்த அவளுடைய தம்பி கள்ள நோட்டு வழக்கில் அவளைச் சிக்க வைத்து அவளை ஆரம்பநிலைக்கே கொண்டு வந்துவிடுவான்.

மீண்டும் புதிய புதிய ஆள்கள் கதைக்குள் நுழைந்து அவளை ஏமாற்றுவார்கள், காட்டிக் கொடுப்பார்கள், கற்பழிக்க துரத்துவார்கள், கொலை செய்ய முயலுவார்கள்... அவ்வப்போது வருகிற பத்திரிகை செய்திகள், ஹாலிவுட் படக் காட்சிகள் எல்லாமே தமிழலங்காரம் செய்யப்பட்டு அதில் அரங்கேற்றப்படும். வீண் பழி சுமத்திய தம்பி, அவளுக்கு தம்பியே இல்லை என்பது தெரியவரும். இருபத்தைந்து வருஷங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த ஒரு ரகசியத்தை அப்போதுதான் அவன் ஆரம்பிப்பான்.

கதை எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று யாரும் அணுமானிக்க முடியாது... சுருக்கமாகச் சொன்னால் எல்லோரும் ஆசைப்படும் திருப்பங்களோடு வளரும்.

எனக்குப் பொய் சொன்னா பிடிக்காது என்று சொன்ன கேரக்டர் பொய்யாகச் சொல்லிக் கொண்டு போகும். கொலை செய்வதற்காக ஊருக்கு வந்தவன் தான் வந்த வேலையை மறந்துவிட்டு சமூக சேவை செய்து கொண்டிருப்பான். கதைக்கு எப்போது திருப்பம் தேவையோ அப்போது அவன் கொலை வாளினை எடுப்பான். இப்போது மட்டும் ஏன்டா எடுத்தாய் என்று கேள்வி கேட்க முடியாது. இருக்கவே இருக்கிறது "இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன்'' என்று ஒரு வரி வசனம்.

தொடரில் நடிப்பவர்கள் கதாபாத்திரங்களாக ஆண்டு கணக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் பல்வேறு சிக்கல்கள்.. உதாரணத்துக்கு ஒரு சீரியல் நாயகி, குண்டாக.. ஒல்லியாக என பல்வேறு மாற்றங்கள் பெற்றுவிட்டார். நடுவிலே இரண்டு முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைகளும் இப்போது ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்துவிட்டன. கதைப்படி அக் கதையின் நாயகி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். அப்புறம் எப்படி கர்ப்ப காட்சிகளையெல்லாம் சமாளித்தார்கள் என்பது அந்தத் தொலைக் காட்சித் தொடரைவிட சுவாரஸ்யமானது.

தமிழில் வரும் தொடர்களில் பெண்களுக்கு மட்டும் விசேஷமான பிரச்சினைகள்.

சில லட்சிய வாதப் பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கு ஒரு காரணமும் இல்லாமல் முட்டுக் கட்டையாக இருக்கும் ஆண்களோடு மல்லு கட்டுகிறார்கள். சில கதைகளில் குடும்பப் பகை காரணமாக ஒரு வம்சத்தையே அழிக்க வீறு கொண்டு எழுகிறாள் ஒரு பெண். அவள் போன் செய்தால் சர்வதேச மாபியா கும்பல் எல்லாம் தொடை நடுங்கி, சரி மேடம் என்று சலாம் போடுகிறது.
ஐந்து பெண்களின் தந்தை அந்தப் பெண்களை கல்யாணம் செய்து வைத்து ஒவ்வொரு பெண்ணாகக் கரையேற்றுகிறார். இரண்டாம் தாரத்துப் பெண்களும் முதல் தாரத்துப் பெண்களும் சமரசமாக பழகிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள். பெண்டாட்டியைத் தீர்த்துக் கட்டி விட்டு இன்ஸþரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான் கணவன். வாடகைத் தாய், தான் பெற்றுக் கொடுத்த குழந்தையைக் காண முடியாமல் துடிக்கிறாள். பிறந்தவீட்டினர் தம் கணவனை அகவுரவப் படுத்துவதைக் காணச் சகிக்காமல் பொறுமுகிறாள் ஒருத்தி.

நாகங்களைப் பிரியமாக வழிபடும் பெண்களை கழுகு அரக்கர்களிடமிருந்து காப்பாற்றும் நாகக் கன்னி. அது பாம்பாக இருந்தாலும் ஒரு பெண் பாம்பின் வைராக்கிய கதையைத்தான் சொல்ல வேண்டும்போல ஒரு தீவிரம் தெரிகிறது.

மேற்படி காட்சிகளெல்லாம் டி.வி.யைப் பார்க்கும் பெண்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை மிகச் சிறந்த உளவியல் மேதைகளாலும் ஆய்ந்துணர முடியாது. பெண்கள் இந்தத் தொடர்களை இமை கொட்டாமல் பார்க்கிறார்கள். மாமியார், மருமகள், மகள், தாய் என பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு சீரியலில் ஒவ்வொருவரின் மேன்மைகள் சொல்லப்படுகின்றன. சில சீரியல்களில் இரண்டு மூன்று உறவுகளின் மேன்மைகள்.

காட்சிகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களுக்கு மேல் இழுக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி (சற்றே வேறுவிதமாக). ஒருவர் அமைதியாக பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். வேவ்வேறு கோணங்களில் அவர் பேப்பர் படிப்பது காண்பிக்கப்படுகிறது. இன்னொருவருவர் வேகமாக வருகிறார். ஆனால் நிதானமாக பேசுகிறார்.

"விஷயம் தெரியுமா?'' என்கிறார்.

"சொன்னாத்தானே தெரியும்?''

"ஊருக்கே தெரிஞ்சிருக்கு. உங்களுக்குத் தெரியாதா?''

"அட அப்படி என்ன விஷயம்.. எனக்குத் தெரியாமா போச்சி?''

"தெரிஞ்சுக்கிட்டு தெரியாத மாதிரி நடிக்கிறீரோனு சந்தேகமா இருக்கு..''

"ரயில் கட்டணம் உயர்ந்துட்டதா பேப்பர்ல போட்டிருக்கானே அதச் சொல்றீங்களா?""

"அட உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?''

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க?''

"நம்ம வனிதாவோட புருஷனுக்குக் கேன்சராமே?''

-இதைச் சொல்வதற்கு இவ்வளவு இழுத்தது ஏன் என்பது புரியாமல் தவிக்கிறோம். கேமிரா ஜூம் இன் ஜூம் அவுட் என்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரின் அதிர்ச்சியைக் காட்டுகிறது. பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுகிறார். இப்போது சமையல் அறையில் இருந்த அவருடைய சம்சாரம் வருகிறார். மயங்கிக் கிடக்கும் கணவரைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

"என்ன ஆச்சு?''

வந்தவர் "உங்களுக்காவது விஷயம் தெரியுமா'' என்கிறார்?

"என்ன விஷயம்?''

"அந்தவிஷயத்தைச் சொன்னதும் மயங்கி விழுந்துட்டாரு..''

"அப்படி என்ன விஷயம்?''

"அப்படினா உங்களுக்கும் தெரியாதா?''

"சத்தியமா தெரியாது..''

"உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு மட்டும் தெரியாம போனது ஆச்சர்யமாத்தான் இருக்கு... நம்ம வனிதவோட புருஷனுக்கு கேன்சராம்...''

"அடக் கொடுமையே'' என்று சம்சாரம் அலற.. அவருடைய மருமகள் வருகிறாள்..

"மாமிக்கும் மாமாவுக்கும் என்ன ஆச்சு?''

நம்ப மாட்டீர்கள்.. வந்தவர் மீண்டும் ஆரம்பிக்கிறார்... "உங்களுக்கும் விஷயம் தெரியாதா? ''

"நான் உள்ள வந்தேன். உங்க மாமா பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தாரு... என்னங்க விஷயம் தெரியமானு கேட்டேன். தெரியாதுனு சொன்னார். நிஜமாவே தெரியாதானு கேட்டேன்.. அப்புறம் விஷயத்தைச் சொன்னேன்.. அதிர்ச்சியில மயக்கமாயிட்டாரு. அத பாத்துட்டு உங்க மாமியார் ஓடி வந்தாங்க...''

-மன்னிக்கவும் நான் அடைந்த எரிச்சலை இதற்கு மேல் விளக்குவதற்காகக் கூட முடியவில்லை.

இவ்வளவு இழுவையாக இழுத்துவிட்டு இறுதியில் இவ்வளவையும் அண்ணிக்காரி ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக முடிக்கிறார்கள். அது ஏன் என்பது மறுநாள் வரை நீடிக்க வேண்டிய சஸ்பென்ஸ்.



முத்தமிழில் இளைய தமிழான நாடகத் தமிழுக்கு இப்படி ஒரு சோதனை. மக்களின் வாசிப்பு தாகத்தையும் இந்தத் தொலைக் காட்சி மோகம் பாதிப்பதால் வேதனை இரட்டிப்பாகிறது. தவறான பொழு போக்கு, நல்ல வாய்ப்புகளையும் நேரங்களையும் சேர்த்துக் கொல்கிறது. நம் இலக்கிய மரபை கேலி செய்கிறது. படைப்புலகத்தைப் பாழாக்குகிறது என்கிற கவலைகூட ஒருபுறம் இருக்கட்டும். ஒருவரிடம் எப்படி தெளிவாகப் பேச வேண்டும் என்பதையும் மழுங்கடிக்கிறது அதுதான் உச் சகட்டம். டி.வி.யில் ஆயிரம் காட்டுவான், ரிமோட் கண்ட்ரோல் நம் கையில்தானே இருக்கிறது என்கிறீர்களா?

ஒரு புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் தாம் எழுதிக் குவிப்பதற்கு டி.வி.க்கு நன்றி சொல்லியிருந்தார்.

டி.வி.யைப் பார்த்து எப்படி எழுதிக் குவிக்க முடியும்?

"டி.வி. யைப் போட்டதும் தாள முடியாத வெறுப்பு ஏற்படும். உடனே என் அறைக்குச் சென்று எழுத ஆரம்பிப்பேன்.. நான் இவ்வளவு எழுதியதற்கு டி.வி. நிகழ்ச்சிகள்தான் காரணம்'' -இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதைத்தான் நம் திருவள்ளுவர் "கேட்டினும் உண்டோர் உறுதி' என்கிறார்.

திங்கள், நவம்பர் 30, 2009

வருகிறது வெட்டுப் புலி!



இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தில் நிறைய மாற்றங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இந்தியச் சுதந்தரம், தமிழகத்திலும் தடயங்களை ஏற்படுத்தியது. திராவிட இயக்கங்கள் தொடர்ந்து உருவாகின. சினிமா உருவானது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு நாவல் உருவாக்க நினைப்பது ஒரு வகை. ஒரு தீப்பெட்டியை ஆராய முனைந்த போது சுதந்தரம், சினிமா, திராவிடம் ஆகியவை தவிர்க்க இயலாத துணைப் பாத்திரங்களாகிவிட்டன. என் வெட்டுப் புலி நாவல் உருவானது இப்படித்தான்.

இருபதாம் நூற்றாண்டில் வெட்டுப் புலி தீப்பெட்டி நிறுவனம் உருவானது. அதனுடைய சரித்திரத்தை ஆராய்ந்த போதும் மேற்படி சினிமாவும் திராவிட சிந்தனையும் தவிர்க்க முடியாததாக இருந்தது. திராவிட உணர்வு சராசரி மக்களின் வாழ்வில் எப்படி பங்கெடுத்துக் கொண்டது என்பது உருக்கமான கதை. சினிமாவில் சவாரி செய்பவர்களை தெரியும்; சினிமா யார் மீதெல்லாம் சவாரி செய்தது என்பதும் உருக்கமான இன்னொரு கதை. இந்த இருதரப்பு மனிதரிடத்து மடிகளிலும் பாக்கெட்டுகளிலும் ஒரு மவுன சாட்சியாக மறைந்திருந்தது வெட்டுப் புலி தீப்பெட்டி.

கடந்த நூற்றாண்டு முழுக்க சட்ட நகலை எரித்த போதும் சினிமா பூஜையில் குத்து விளக்கு ஏற்றிய போதும் தீப்பெட்டி அங்கே இருந்தது.

எழுதுவதற்கு மூன்றாண்டுகள் ஆகின. இதை எழுத வேண்டும் என்று நினைத்தது பத்தாண்டுகளுக்கு முன்.

டிசம்பர் 25 அன்று சென்னை எல்.எல்.ஏ. கட்டடத்தில் வெளியாக இருக்கும் வெட்டுப்புலி நாவல், சினிமா- திராவிடம்- தீப்பெட்டி இந்த மூன்றையும் ரத்தமும் சதையுமாக இணைத்திருக்கிறது.

சுமார் நானூறு பக்க நாவல்... விலை? விலை தீர்மானம் ஆகும்போது நாவல் குறித்து இன்னும் சில தகவல்களைச் சொல்கிறேன்.

வெளியீட்டு விழா அறிவிப்புக்கு சொடுக்கவும்.
http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2258

புதன், நவம்பர் 04, 2009

நாளைய தீர்ப்புக்குப் பிறகு இன்றைய தீர்ப்பு!

ஒரு முகம் தமிழர்களின் ரசனைக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படுவது சிக்கலான உளவியல் முடிச்சுகள் கொண்டது.
விஜய் முகம் ரசிகப்பட்டாளத்தால் தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு முன்னால் இதற்கு முன்னால் மக்களின் மனத்தில் குடியிருந்த வேறு முகங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். பி.யூ. சின்னப்பா பாட்டால் எட்டமுடியாத உச்சத்தைத் தன் ஸ்டண்ட் நடிப்பால் தாக்குப்பிடித்தார்.
தியாகராஜ பாகவதர் பயணம் செய்த ரயிலை நிறுத்தி தரிசித்த மக்கள், மூன்று தீபாவளிகளைக் கடந்து அவருடைய தேவகானத்தில் மயங்கித் திளைத்தனர். இன்னமும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது அது. பாகவதரின் அழகான முகமும் பாடும் திறமையும் குறிப்பிட்ட சதவீதத்தில் இணைந்து தமிழர்களின் மனங்களை வசப்படுத்தி வைத்திருந்தது. பாடும் திறமையற்றவரை நடிகராகக் கருத முடியாத காலம், எம்.ஜி.ஆர். சிவாஜி வருகைக்குப் பிறகு மறைந்தது.
எம்.ஜி.ஆரின் சிவந்த கட்டுடல் தோற்றத்துக்கு மயங்கினர். நடிகர்கள் சிவப்பாக மழுமழு முகத் தோற்றத்தோடு சுருள் முடியோடு இருப்பது நடிகராவதற்கான முதல்தகுதியாக இருந்தது. சிவாஜி கணேசன் வசனம் நன்றாகப் பேசுவதைச் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். வாள் சண்டை, கம்புச் சண்டை, மான் கொம்புச் சண்டை என்று எம்.ஜி.ஆர். தன் ஸ்டண்ட் திறமைகளை எடுத்து வீசிக் கொண்டிருந்த போது "கணேசன்' தாய் தந்தையரைச் சுற்றி வந்து பழத்தைத் தானே பெற்றுக் கொண்ட புத்திசாலித்தனமும் நடந்தது. சிவப்பாகவும் சண்டைபோடும் திறமையும் கொள்கைப் பாடல்களும் ஒரு பக்கம் என்றால் மாநிறக் கலைஞன் தன் மிடுக்கான வசன உச்சரிப்பினாலும் தத்துவப் பாடல்களால் ஈடுகட்ட முடிந்தது.
கமல்}ரஜினி காலகட்டம்..
சிவந்த, நாட்டியத்திறமை கொண்ட, திரைக்கதை வசனம் கவிதை எழுதி இயக்கிப் பாடி நடித்து படம் தயாரிக்கும் திறமை கொண்ட கட்டுடம்பு கமல் ஒரு பக்கம். கறுத்த, சிறிய கண்கள் கொண்ட, தமிழ் உச்சரிப்பு துல்லியமில்லாத ரஜினி இன்னொரு பக்கம்.
இவர்கள் தங்கள் ஐம்பதாம் வயதை நெருங்கிய தருணத்தில் அடுத்த முகத்துக்கான அவசியம் ஏற்பட்டபோது விஜய்க்காக ஒரு கர்ச்சீப்பை போட்டவர் எஸ்.ஏ.சி.
எஸ்.ஏ.சி. நாளைய தீர்ப்பு என்றார். சலனம் எதுவும் இல்லை. தேவா, விஷ்ணு போன்ற அவருடைய படங்களில் விஜய் நடிகையரின் பாதுகாப்போடு நடித்ததாக குற்றச்சாட்டுகள் உண்டு. அவருடன் நடித்த சங்கவி, சுவாதி, யுவராணி போன்றவர்களின் கிளுகிளுப்புக்கு நடுவே அவர் துறுதுறுப்பாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தை ஏற்க தமிழ் ரசிகர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர். ஒரு முகம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக மாறுவதற்கு அதைத் தொடர்ந்து பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தக் கடமையைத் தந்தையாகிய எஸ்.ஏ.சி. மிகச் சிறப்பாகச் செய்தார். விஜய்காந்தின் தம்பியாக நடிக்க வைத்தும் அதைப் பழக்க அவர் முயற்சி எடுத்தார். அவருடைய ஒவ்வொரு அடியும் பைல் பவுண்டேஷன் அடி போல இறங்கியது. ஒரு முகம் கமல், ரஜினிக்கு மாற்றாக.. அல்லது அதன் தொடர்ச்சியாகப் பழக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் அவருடைய முகம் கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்த முகத்தோடு ஒருவர் எப்படி நடிக்க வரலாம் என்பது அந்தக் கேள்வியில் இருந்த ஆவேசம்...
ஆனால் அதன் பிறகுதான் விஜய்யின் முகம் தமிழர்களுக்குப் பரிச்சயப்பட்டது. அதற்கு ஆதாரம் அவர் எதற்காக நடிக்க வந்தார் என்ற பத்திரிகைதான். அவர்கள்தான் விஜய் வாழ்க்கைத் தொடர் வெளியிட்டார்கள். அதே தொடரை இன்னொரு முறை இன்னொரு வார இதழில் வெளியிட வேண்டியிருந்தது. ஒரு நடிகரின் வாழ்க்கைத் தொடர் அடுத்ததடுத்த ஆண்டுகளில் இரண்டு முறை வெளியிடப்பட்டது உலக சினிமா நடிகர் வரலாற்றிலேயே விஜய் வாழ்க்கை ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
அவர் வாழ்க்கைத் தொடர் வெளியானால் பத்திரிகை சர்குலேஷன் ஏறும் என்பதும் அவருடைய அட்டைப் படம் வெளியானால் அந்த வாரம் ரிடர்ன் இருக்காது என்பதும் பத்திரிகையில் உலகில் உறுதி செய்யப்பட்டது. அவர் நடித்த படங்கள் என்றால் நம்பி வாங்கலாம் என்பது திரையுலகில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒரே நேரத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் சென்னையில் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது.
வசந்த் இயக்கத்தில் நடித்த நேருக்கு நேர் படமும் பாசில் இயக்கத்தில் நடித்த கண்ணுக்குள் நிலவு படமும் அவர் அடக்கி வாசித்தபடங்கள். ஆனால் இந்த இரண்டிலும் அவருக்கு வசூல் அமையவில்லை. இந்த அளவோடு அவருடைய பரீட்சார்த்தங்களை நிறுத்திக் கொண்டார்.
சூப்பர் குட் பிலிம்ஸின் மூன்று படங்களில் அவர் தொடர்ந்து நடித்தார். அது அவர் நடித்த பட்ஜெட் படங்களாக இருந்தும் வசூல் சாதனையான படங்களாக அமைந்தன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் நடிகர் என்ற இந்த அந்தஸ்த்தை ஏற்படுத்தியது. இது அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்.
ரஜினி போல குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஏற்றுக் கொள்ளும் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற கதாபாத்திரங்களை ஏற்கலாமா? அல்லது சொந்தப் பணத்தைப் போட்டு குருதிப் புனல், ஹேராம் என்று பரீட்சித்துப் பார்க்கலாமா என்று முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம்.
ஒரு நடிகரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றவுடன் உருவாகும் தலைவலி இது.
சிவாஜியா? எம்.ஜி.ஆரா?
கமல்ஹாசனா? ரஜினியா?
எதாவது ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இங்கு நடிகர்கள் இரண்டுவதமாக இருப்பதுபோல ரசிகர்களும் இரண்டுவிதமானவர்களாக இருக்கிறார்கள்.
இந்தத் தீவிர இரண்டு போக்குகளுக்கு நடுவே பிரயாணிக்க விரும்புகிறவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெயசங்கர் போல பதட்டமில்லாத ஒரு பாதையைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். விஜய் போன்ற துடிப்பு மிக்க இளைஞர் குணச்சித்தித்திரமான அத்தகைய பாதையை தேர்ந்தெடுக்க விரும்ப வேண்டியதில்லை. அவருடைய தந்தையும் அதற்கு உடன்பட மாட்டார்.
விஜய் ஒரு முடிவுக்கு வந்தார். அவர் ரஜினியைப் போல கல்யாண மண்டபம் கட்டினார். அதுவும் அடுத்தடுத்து இரண்டு கல்யாண மண்டபங்கள்.
ரஜினியைப் போலவே எந்த ஆபத்துக்கும் நிலை குலையாத அலட்சியப் போக்கு அவருக்குத் தேவைப்பட்டது. விஜய்யின் கோயமுத்தூர் அண்ணா வழக்குத் தமிழில் அந்தத் தொனி சுலபமாகக் கிடைத்தது. ரஜினி பாணியின் இன்னொரு ஆபத்துக்கும் அவர் அடிபணிய வேண்டியதாகிவிட்டது. அவர் எல்லாரையும் சுலபமாக அடித்து வீழ்த்துபவராகவும் எல்லா அநீதிகளையும் சடுதியில் தரைமட்டமாகிறவராகவும் மாறினார். வீராவேசமான வசனங்களை அவர் பேச வேண்டியதாக இருந்தது. நான் ஒரு தடவை சொல்லிட்டா அப்புறம் என்னாலேயே என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாது என்ற வசனம் அவருக்குத் தேவைப்பட்டது. அவருக்காக ஜனாதிபதி ஸ்டாம்ப் வெளியிடுவதாகக் காட்ட வேண்டியிருந்தது. ரஜினிக்குத் தன் 140}வது படத்தில் ஏற்பட்ட நெருக்கடி, விஜய்க்கு தன் 40}வது படத்திலேயே ஏற்பட்டுவிட்டது.
தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களைத் தமிழ்ப்படுத்திப் பார்ப்பதில் ஈடுபட்டார். பத்ரி, ஆதி போன்றவை விஜய்க்கு மொழி வாரி ரசனை வேறுபாட்டைப் பற்றி பாடம் நடத்தின.
தமிழிலேயே அழுத்தம் திருத்தமாக வணிக ரீதியில் கதை பண்ண முடியாதா என்ன?
திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களின் வெற்றி அதே போல கமர்ஷியல் அம்சங்கள் இருந்த போக்கிரி, குருவி போன்ற படங்களின் ரிசல்ட்டை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. என்னடா இது இப்படி ஏறினால் அப்படி சறுக்குகிறது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ரஜினி பார்மூலாவில் ரஜினி நடிப்பதே சிரமமாக இருக்கும் வேளையில் இவரும் அந்த பாணியில் தொடர முடியுமா என்பது சோதனைதான்.
இனி அவர் கமல் போலவும் அவ்வப்போது முயற்சி செய்து பார்க்கலாம்!

செவ்வாய், அக்டோபர் 27, 2009

'ராஜா' கைய வெச்சா அது 'ராங்காகவும் போவும்!




பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் வாய்த் தகராறில் ஆரம்பித்து அது கைத்தகராறில் முடிவதைப் பார்த்திருக்கிறேன். அவர் இசையமைக்கிற எல்லா பாடல்களுமே தேவகானமாக இருந்தது. இப்பவும் இருக்கிறதுதான்.ஒரு சபையில் மிகவும் துணிவான ஆசாமிகள்தான் அவரைத் தாக்கிப் பேச முடிந்தது. கொஞ்சம் இளப்பமான ஆசாமியாக இருந்தால் சுற்றியிருப்பவர்கள் அவரை அடித்தே போட்டுவிடுவார்கள்.


நேற்று என் மகனைத் தேடி வந்திருந்த அவனுடைய நண்பர்கள் சம்பாஷணையின் போது, "இளையராஜாகிட்ட புதுசா ரிசர்ச்சே இல்லடா.. அதே டண்டணக்குத்தான்...'' என்று பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
அவர்களுக்கு இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கமோ ஆர்வமோ இல்லை. மிகவும் இயல்பான விமர்சனமாக இருந்தது. இளையராஜா வந்த போது விஸ்வநாதனை அப்படிச் சொல்வதைக் கேட்டிருந்ததால் இப்போது ரஹ்மான் வந்துவிட்ட பின்பு இளையராஜாவைச் சொல்வதையும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டேன்.


இந்த மாதிரி காலம் தோறும் தலைமுறைகளுக்கிடையை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. வால்காவில் இருந்து கங்கை வரை நூலில், ஆதிநாளில் ஒருவன் ஏர் ஓட்டி உழவு செய்ய ஆரம்பித்த போது ஏற்பட்ட எதிர்ப்பலையைப் பற்றி எழுதியிருப்பார். "நிலத்தைக் கீறுவது மாபெரும் பாவம். தானாக உற்பத்தியாகும் உணவை மட்டுமே புசிக்க வேண்டும். நாமாக பயிர் செய்ய நினைப்பது இறைவனுக்கு எதிரான செயல்'' என்பதாகப் பேசுவார் ஒரு பெரியவர்.எல்லா காலத்திலும் மாற்றத்துக்குத் தடையும் எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது.


இவான் துர்கனேவ் எழுதிய தந்தையும் தனயரும் இந்தத் தலைமுறை இடைவெளியை உணர்த்தும் உன்னதமான நாவல்.தன் மகன் வருகைக்காகக் காத்திருக்கிறார் தந்தை. மகன் அர்க்காதி தன் நண்பன் பஸாரவ் -வுடன் வந்து இறங்குகிறான். சென்ற தலைமுறை ஆசாமிக்கும் பஸாரவ்வுக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் பட்டு வராமல் போவது ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் வனத்தில் ஓடும் ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை ரசிக்கும் வினோதமான ஆர்வங்கள் பஸாரவ்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.அவனுடைய சட்டை, தலைமுடி, பேச்சு எதையுமே அர்க்காதியின் பெரியப்பாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்குமான வேற்றுமை நாவல் முழுவதும் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஆளுக்கொரு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.


யாருக்கு சாமார்த்தியம் இருக்கிறதோ அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அர்க்காதியின் பெரியப்பா முதலில் சுடுகிறார். அவருடைய குறி தவறிவிடுகிறது. அடுத்தது பஸாரவ். மிகச் சரியாகச் சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான்.அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான். இப்போது பஸாரவ்வை எதிர்க்கொள்வதற்கு அர்க்காதியின் பெரியப்பாவுக்குச் சங்கடமாக இருக்கிறது.


இதனிடையே பஸாரவ் மீது காதல் கொள்ளும் பெண் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸôரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான்.


அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.அதுதான் பஸாரவ்.


"இந்த நாவலின் பஸாரவ் பாத்திரத்தை உருவாக்குவதற்காக நான் என்னிடம் இருந்த அத்தனை வண்ணங்களையும் இழந்துவிட்டேன்' என்று இவான் துர்கனேவ் கூறியிருக்கிறார்.


ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இயந்திர யுகம் காரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த நிலை கொள்ளாத அலைபாயும் மனத் தன்மை நாவலின் பின்னணிக் களமாக இருப்பதை உணர முடியும். அன்றைய இளைஞர்களுக்குள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த இஸங்களின் ஆதிக்கத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. அதன் காரணமாகவே நாவல் ஒரு நூற்றாண்டின் மனச்சித்திரத்தை உருவாக்கும் தரத்தோடும் மிளிர்கிறது.


பூ. சோமசுந்தரத்தின் மிக நேர்த்தியான மொழி பெயர்ப்பு நம்மை நாவலோடு கட்டிப் போட்டுவிடுகிறது.தலைமுறைகள் கடந்தும் தலைமுறை இடைவெளியை அலசும் இந்த நாவல் சிலாகிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதன் ரகசியமும் அந்தத் தலைமுறை இடைவெளியில்தான் ஒளிந்திருக்கிறது.


தந்தையரும் தனயரும்

இவான் துர்கனேவ்

சந்தியா பதிப்பகம்,

57, 53-வது தெரு,9-வது அவென்யூ,

அசோக் நகர்,

சென்னை- ௮௩

ரூ. 100

சனி, அக்டோபர் 24, 2009

பறக்கும் குதிரை!


தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் ஒட்டு மொத்த சாராம்சமாக ஒரு கதையை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அரசன் ஒருநாள் தன் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவருக்கு சிரச்சேதம் அளிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான். அதே நேரத்தில் இவ்வளவு நாள் பழகிய தன் அமைச்சர் மீது அவருக்கு ஒரு மெல்லிய பரிதாபம். அமைச்சருக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தால் அதை நிறைவேற்றும்படி கூறிவிடுகிறார்.
சேவகர்கள் கடைசி ஆசையை விசாரிக்கிறார்கள்.
அமைச்சருக்கு ஒரு திடீர் யோசனை. அங்கே கட்டி வைத்திருக்கும் குதிரையைக் காட்டி, "எனக்கு இந்தக் குதிரைக்குப் பறக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஒரு ஆசை இருக்கிறது. அனுமதிப்பீர்களா?'' என்கிறார் அமைச்சர்.
சேவகர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். குதிரை பறக்குமா?
அரசனிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். அரசருக்கும் குதிரை பறக்குமா என்று திடீர் ஆர்வம் ஏற்படுகிறது. அமைச்சரின் ட்ரிக்ஸ் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம்.
"ஆறுமாசம் அவகாசம்.. அதற்குள் பறக்க வைத்துவிட வேண்டும்.. அதன் பிறகு சிரச்சேதம்'' என்கிறார் அரசர்.
எல்லோரும் போன பின்பு சேனாதிபதி வந்து அமைச்சரிடம் கேட்கிறார்.. "அமைச்சரே.. குதிரை பறப்பது சாத்தியமா? என்ன இது வேடிக்கை?'' என்கிறார்.
"சேனாதிபதி.. இந்த ஆறுமாத அவகாசத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் இயற்கையாகவேகூட இறந்துவிடலாம். அல்லது வேறு ஒரு அரசர் நாட்டைப் பிடிக்கலாம். அல்லது அரசர் நான் குற்றமற்றவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்... இவ்வளவு ஏன் குதிரையேகூட பறப்பதற்குப் பழகிக் கொண்டுவிடும்..''
-கால அவகாசம் என்ன மாற்றத்தையும் செய்யும் என்பதற்கு உதாரணமாக இதைச் சொன்னார்.
மிகவும் பொறுமையான மனிதராக இருந்தார் அவர். ஒரு முறை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை எனக்குத் தமிழ் ஊடகப் பேரவையில் வழங்கினார்கள். என்னுடைய பேச்சுத் திறமை ஒரு நிமிடத்தில் பாதி அளவுக்குக்கூட நீடிக்கவில்லை.
தகவல்களை எப்படிப் பெறுகிறேன்? என்ற தலைப்பில் அவர் ஒரு மணிநேரத்துக்குப் பேசினார். ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வரும் பெரும்பான்மையான கதைகளை எடுத்து நாட்டு நடப்புக்கு ஏற்பப் பயன்படுத்துவேன் என்று சொன்னார்.
ஒருமுறை ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் கமலாத்மானந்தர், ரேடியோ ஸ்டேஷனுக்குப் போன் செய்து தென்கச்சியைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னாராம். வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தென்கச்சி சந்திக்கச் சென்றிருக்கிறார். கமலாத்மானந்தர், "உங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்... கதைகள் மிக அருமையாக இருக்கின்றன. அதைப் பிரசுரிப்பதற்கு அனுமதித்தால் விஜயத்தில் தொடர்ந்து வெளியிடுவேன்'' என்றாராம்.
இப்படியாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் கேள்வி நேரம்.
ஒரு பதிலுக்கு அவர், "எனக்கு எந்த லட்சியமும் இல்லை. அதனால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். லட்சியவாதிகள் யாரேனும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற முடிகிறதா? காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், காரல் மார்க்ஸை எடுத்துக் கொள்ளுங்கள், பெரியாரை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும்போது முதலில் பலியாவது அவனுடைய ஆனந்தம்தான்'' என்றார்.
கூட்டத்துக்கு வந்திருந்த பலருக்கு இதில் உடன்பாடில்லை. பெரியார் மட்டும் இல்லை என்றால் நாமெல்லாம் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்று கூச்சலிட்டனர்.
"அது உண்மைதான். ஆனால் பெரியார் எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதைத்தான் சொல்கிறேன். அதுவுமில்லாமல் நான் என்னுடைய ஆனந்தத்தின் ரகசியத்தைத்தான் சொல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போதுகூட நீங்களெல்லாம் லட்சியவாதியாக இருப்பதால்தான் கோபப்படுகிறீர்கள்.. இப்போதும் சொல்கிறேன் நான் அலட்சியவாதிதான்'' என்று கூறிவிட்டார்.
அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் ஒரு தனிமனிதனாக எல்லாவற்றுக்கும் மனதைத் திறந்து வைத்திருக்கிற ஒரு மனப்பான்மை என்று எடுத்துக் கொண்டேன். எந்தக் கருத்தையும் அப்படியே நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கும்
அது எல்லா விஷயத்திலும் பொருத்தமானதாக நினைக்க வேண்டியதில்லை என்பதற்கும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரிடம் இதே போல் கேள்வி நேரத்தின்போது விடைகிடைத்தது.
நகைச்சுவைக் கதைகள் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்களால் சோகமான கதையைச் சொல்ல முடியுமா? என்று கேட்டார்கள்.
"கதை சொல்ல வேண்டியதில்லை... ஒரு வரியே போதும்... அதைவிட ஒரு சோகக்கதை இருக்க முடியாது...
இலங்கைத் தமிழர்கள்'' என்றார்.

சின்ன.. சின்ன ஊசிகள்!



பத்திரிகையாளர்களின் பீஷ்மராகப் போற்றப்படுபவர் சின்னக்குத்தூசி. இன்டர்நெட் உலகம் தழைத்தோங்கும் முன்னர் அவர்தான் இணைக்கும் தளமாக இருந்தார். எந்தத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைத்தார்கள். யார் எத்தனை இடங்களில் ஜெயித்தார்கள்... என்று ஒரு போன் காலில் தெரிந்து கொள்ளலாம். புதிய கல்விக் கொள்கை குறித்து கட்டுரை எழுத வேண்டுமா, திராவிட இயக்க வரலாறு குறித்துத் தகவல் தெரியவேண்டுமா, நேரில் போய் அமர்ந்தால் அத்தனை தகவல்களும் சரமாரியாக வந்துவிழும். திருமணம் செய்து கொள்ளாமல் தன்னையே தகவலாகத் தந்து கொண்டிருக்கிறார் அவர்.
ஒரு பத்திரிகையில் வேலை போய்விட்டதா, அடுத்த பத்திரிகையில் சேர வேண்டுமா.. அவரிடம் சிபாரிசு கேட்டு வந்துநிற்பார்கள். தமிழகத்தின் எல்லா பத்திரிகை ஆசிரியரிடமும் அவருக்கு நல்ல நெருக்கம் உண்டு. ஆனால் அந்த அத்தனை நெருக்கத்தையும் முரசொலி நிறுவனருக்காக உதறித் தள்ளக்கூடிய அளவுக்கு அவருக்கு அந்த நிறுவனரிடத்தில் அத்தனை ஈடுபாடு.
இதயம் பேசுகிறது வார இதழ் நடத்திய இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் எனது தொடர்கதை முதல் பரிசு தேர்வான அறிவிப்பை ஒரு நபரை வீட்டுக்கு அனுப்பித் தெரிவிக்கச் சொன்னார் ஆசிரியர் மணியன்.
நான் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டேரியில் இருந்து என் நண்பனுடன் கிண்டியில் இருந்த இதயம் அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தேன். மணியனின் மருமகன் ஸ்ரீராம், இவர்தான் உங்கள் நாவலைத் தேர்வு செய்தார். மொத்தம் இருநூறு நாவல்கள் போட்டிக்கு வந்தன என்றெல்லாம் சொன்னார். என் நாவலைத் தேர்வு செய்தவர் வெள்ளைக் கதர் வேட்டி, சட்டையில் ஒல்லியாக இருந்தார். அவர் பெயரை தியாகராசன் என்று அறிமுகப்படுத்தினார்.
ஆறு ஆண்டுகள் கழித்து கலாநிதி மாறன் முழுக்க வண்ணத்தில் வெளியிட்ட தமிழன் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தபோது முரசொலியில் இருந்து சின்னக்குத்தூசி அழைப்பதாகத் தெரிவித்தார்கள். (இரண்டு நாளிதழும் அடுத்தடுத்த மாடியில் இயங்கின) சந்தித்தபோது என்னைத் தெரிகிறதா என்றார். தெரியவில்லை என்று சொன்னேன்.
"நான்தான் உங்கள் நாவலை இதயம் பேசுகிறது இதழில் தேர்வு செய்தவன்'' என்றார்.
"அது தியாகராசன் என்பவர் என்று அறிமுகப்படுத்தினார்களே?''
வேகமாக ஆறு ஆண்டுகளுக்கு முன் சில நிமிடங்கள் பார்த்த அந்த முகத்தை நினைவுபடுத்த முயன்றேன்.
"வெங்கடேசன் என்று உங்களுக்கு இயற்பெயர் இல்லையா? அப்படி எனக்கு தியாகராசன் என்பது இயற் பெயர்''
"மன்னிக்கணும் சார்.. எனக்கு இந்தப் பெயர் குழப்பத்தால தெரியாம போயிடுச்சி'' என்றேன். சொல்லி முடிப்பதற்குள் கூச்சமும் அவமானமும் போட்டி போட்டுக் கொண்டு பிடுங்கித் தின்றன. சின்னக்குத்தூசி என்றால் முரசொலி என்றுதான் யாருக்குமே நினைவு வரும். அவர் எப்படி மணியன் இதழில் நாவல் போட்டி நடுவராக இருக்க முடியும் என்பதால்கூட அவரையும் இவரையும் சேர்த்துப் பார்க்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதுவும் இல்லாமல் நாவல் போட்டி தேர்வான சமயத்தில் எனக்கு இருபத்தோரு வயது. மணியனையே சென்று சந்திக்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. பரிசாக டி.வி.எஸ். 50 பெற்றுக் கொண்டதைக்கூட அவரிடம் தெரிவிக்கவே இல்லை. கையில் ஏழு ரூபாய் இருந்தால் போதும் பெட்ரோல் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு முரசொலியில் இருந்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் சின்னக்குத்தூசியை எதிர் கொள்ளும் நேரங்களில் குற்ற உணர்வு பொங்க ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பல முறை வேலை வாய்ப்புகளை இழந்த சமயங்களிலும் அவரிடமிருந்து ஒரே ஒரு சிபாரிசையும் பெற்றதில்லை. எந்தக் கட்டுரைக்கும் அவரிடமிருந்து தகவல்கள் கோரியதில்லை. அவருடைய மேன்ஷன் எங்கிருக்கிறது என்பதைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் இதயம் பேசுகிறது நாவல் போட்டியில் என் நாவலைத் தேர்வு செய்ததன் மூலம் அவர் எல்லா சிபாரிசையும் செய்து முடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இன்னமும் அதுதான் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆண்களுக்கான திருமண வயது 21!



வீட்டுக்குப் புதிதாகக் குடித்தனம் வந்தார் ஒரு பேச்சலர். வயது இருபத்தொன்று முடிந்து சில நாள்களாவதாகச் சொன்னார். வேலை பார்த்தபடியே படிக்க வேண்டியிருப்பதால் தனிமை தேவைப்படுவதாகச் சொல்லி வீடு கேட்டு வந்தார். என்ஜினியரிங் முடித்திருந்த அவருக்குக் கல்லூரியில் படிக்கும்போதே நல்ல வேலைக்குத் தேர்வாகிவிட்டார். படித்தாகிவிட்டது, வேலையும் கிடைத்துவிட்டது, பிறகு என்ன படிக்கிறீர்கள் என்றேன்.
என்ஜினியரிங் படிப்பைவிட இப்போது கேட் படிப்புக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஐஐஎம் படிப்புக்கு மொத்தம் மூன்று லட்சம் பேர் எழுதுகிறார்கள்... தேர்ந்தெடுக்கப்போவது மூவாயிரம் பேர்கள்தான் என்றெல்லாம் சொன்னார். எனக்கு கேட் பற்றியெல்லாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. படித்து முடித்த பின் என்ன டிகிரி தருவார்கள் என்றேன். எம்.பி.ஏ. என்றார். அஞ்சல் வழிக் கல்லூரியிலேயே இப்போது எம்பிஏ படிக்கும் வசதி வந்துவிட்டதே என்று என் புத்திசாலித்தனத்தைக் காட்டினேன். அவருடைய முகக் குறிப்பில் எனக்கு விளக்குவது தேவையற்றது என்பது அவருடைய முகக் குறிப்பில் கொட்டை எழுத்தில் தெரிந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன்னியல்பாக என்னுடைய 21 வயது நினைவுக்கு வந்தது.
என்னுடைய இருபத்தொன்றாம் வயதில் கடைசி ஆண்டு பி.எஸ்ஸி. தேர்வுக்கு ஒன்றுக்கும் போகாமல் கன்னிமரா நூலகத்துக்குப் போய் நாவல் எழுதும் வேலையில் தீவிரமாக இருந்தேன். ஏனென்றால் நாவல் போட்டி இருபத்தோரு வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
கல்லூரிப் பாடம் பாக்கியிருந்ததால் காலையில் எழுந்ததும் எங்கே போவதென்ற பிரச்சினை. லைப்ரரி.. லைப்ரரி என்று போய் வந்து கொண்டிருந்ததால் சும்மாதானே இருக்கிறான் என்று அடுத்த சில மாதங்களிலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். ஆண்களுக்கான திருமணத்துக்கான வயது 21 என்ற விளம்பர அறிவிப்பு மட்டுமே என் திருமணத்துக்குத் தகுதியாக இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருக்கும்போதே திருமண நாள் நெருங்கிவிட்டது. சொல்லச் சொல்ல கேட்காமல் கல்யாணம் செய்ததற்காகப் பழி வாங்கும் நோக்கமிருந்தது.
திருமணமான புதிது. வேலைக்குப் போகிற ஆசையெல்லாம் வரவேயில்லை. என்ன மாதிரி அலுவலகத்தில் என்னமாதிரி வேலை செய்யத் தெரியும் என்ற அவதானிப்பும் இருக்கவில்லை. அப்போது பேச்சாளர்களை அழைத்துச் சென்று என் மாமனார் ஊரில் கூட்டங்கள் போடுவதுதான் முழு நேரப் பணியாக இருந்தது. மாதத்துக்கு ஒரு தரம் பெரியார் தாசன், சுப.வீரபாண்டின் போன்றவர்களை ஊருக்கு அழைத்துச் சென்று சீர்திருத்தக் கூட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். வருகிறவர்களுக்கு வீட்டில் அசைவ விருந்து நடக்கும். இத்தனைக்கும் என் மாமனார் வள்ளலார், ராமகிருஷ்ணர் ஆகியோரின் தீவிர பக்தர்.
வருகிறவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் வேறு. திண்ணையில் அமர்ந்து கடவுளைக் கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தனர். சமயத்தில் என் மாமனாரும் அவர்களுடன் கடவுள் பற்றிய கிண்டல்களுக்குச் சிரித்துக் கொண்டிருந்தார். என்னால் அவரைப் பழிவாங்கவே முடியவில்லை. சகிப்புத் தன்மையும் பொறுமையும் கடைசியில் எனக்குத் தொற்றிக் கொண்டதுதான் மிச்சம்

புல்லுக்கு இறைத்த நீர்... நெல்லுக்கும் புசிந்து..




எம்.ஜி.ஆர்.- லதா, ரஜினி- ஸ்ரீ ப்ரியா, கமல் ஸ்ரீதேவி என்று எழுதப்பட்ட அந்தச் சிறிய ராட்டினத்தை எத்தனை பேர் கவனிக்கிறோம்? கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அந்த ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு வந்து குழந்தைகளை உட்கார வைத்து கையால் சுழற்றிச் சந்தோஷப்படுத்தும் அந்த நபரை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இத்தகைய ராட்டனங்கள் தயாராகும் பட்டறை எங்கே இருக்கிறது?
தோளில் சாய்த்திருக்கும் மூங்கில் கொம்பில் ஜவ்வு மிட்டாயைச் சுற்றி விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்திருக்கிறீர்களா? வண்ணப்பட்டைகளாக ஈ மொய்க்கும் அந்த இனிப்பு நினைவில் இனிக்கிறதா இப்போதும்? கையில் ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டிவிட்ட கையோடு சின்னத் துண்டைப் பிய்த்து உங்கள் கன்னத்தில் ஒட்டிவிட்டது நினைவுக்கு வருகிறதா?
பை நிறைய பலூன் வைத்துக் கொண்டு, கேட்கும் குழந்தைகளுக்கு வாய் வலிக்க ஊதித் தரும் முதியவரிடம் உங்களுக்கும் பரிச்சயம்தானே?
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல தீபாவளி நேர நெரிசலில் ப்ளாஸ்டிக் பை நிறைய பாப் கார்ன் விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியைக் கொஞ்சம் நினைவுபடுத்தினால் அடையாளம் காண முடிகிறதுதானே?
பரபரப்பான சிக்னல் நடுவே மஞ்சள் துணி விற்கும் சிறுவர் சிறுமியர் தெரிகிறதா?
நான்கு சைக்கிள் சக்கரங்களால் கோர்க்கப்பட்ட நான்கு சக்கர வண்டியில் ஆய்வுச் சாலையில் இருக்கும் பெரிய கண்ணாடிப் பேழை போன்ற புட்டியில் சோன் பப்படி விற்பவர் தெரிகிறதா? அவர் அந்த புட்டியை எங்கே வாங்குகிறார்? யார் தயாரிக்கிறார்கள்... இந்த புட்டி சோன்பப்படி தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
இந்தத் தொழில்களையெல்லாம் யார் தீர்மானித்தார்கள். யார் வழி மொழிந்தார்கள்? நாம் இந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இதைச் செய்பவர்களுக்கு எப்படித் தோன்றியது? அப்படித் தோன்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதா... திணிக்கப்பட்டதா?
பலூனும் எம்.ஜி.ஆர்- லதா ராட்டினமும், ஜவ்வு மிட்டாயும் வியாபாரம் ஆகி அதில் குடும்பம் நடத்த முடியும் என்று எப்படி நம்புகிறார்கள்?
என் சிறு வயதில் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் ஒருவர் இந்த மாதிரியான தள்ளு மாடல் ராட்டினம் வைத்திருந்தார். அதை நிறுத்துவதற்கு வீட்டின் முன்னால் மூத்திரசந்தின் மூலையில் ஒரு இடம் எப்போதும் இருக்கும். அதை தினமும் சங்கிலி போட்டு பூட்டி வைப்பார். ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு செல்வதற்கு உதவும் சிறுவர்களுக்கு இனாமாக சுற்றுவதற்கு அனுமதி. அதாவது காசு கொடுத்து ராட்டினம் சுற்றுபவர்கள் இரண்டு பேர்தான் இருந்தார்கள் என்றால்.. மறுபக்கம் பாலன்ஸ் செய்வதற்கு இரண்டு சிறுவர்களை இனாமாக உட்கார வைப்பார்.
அந்த ராட்டினத்துக்குச் சொந்தம் கொண்டாடி அவரும் அவருடைய தம்பியும் கட்டி உருண்டனர் ஒரு நாள். அது தனக்குத் தான் சொந்தம் என்பதில் இருவருக்கும் கொலைவெறி கரை புரண்டது. ஐந்து ஐந்து பைசாவாகச் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த ராட்டினத்தை நம்பி இருவர் சண்டை போட்டுக் கொண்டது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. அது ஒரு குலத் தொழில் போல இருந்தது அவர்களுக்கு. அவருடைய அப்பாவும் அந்த ராட்டினத்தை நம்பித்தான் இவர்களை ஆளாக்கினாரோ என்னவோ? அடுத்த தலைமுறையைத் தயாரிக்க அது இப்போதும் தேவைப்படுவதால்தான் அந்தச் சண்டை நடந்தது என்று தோன்றுகிறது.
பண்டிகை நாள்களில் செல் போன் விற்பவர்களும் போத்தீஸ் கடையிலும் தீபாவளி ஆஃபர் என்ற பெயரில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த உப தொழில்களுக்கும் கொஞ்சம் ஈரம் பாயப்படுவதை நினைக்கும்போது எந்தப் பண்டிகையையும் மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
--

ஞாயிறு, அக்டோபர் 18, 2009

படுகொலைகளைப் பார்ப்பது எப்படி? -



சாதாரணமாக அலுவலகங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கலாம். இரண்டு பேருக்கு மனஸ்தாபம் என்றால் அதை எரியவிட்டுக் குளிர் காய்ந்து ஆதாயம் தேடும் மனிதர்கள் இருப்பார்கள். இரண்டு கிராமங்களுக்கு, இரண்டு மனித இனங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு என்று இதை வளர்த்துக் கொண்டே போகலாம். பிரச்சினை ஏற்படும் தளத்துக்கு ஏற்ப ஆதாயமும் பிரச்சினையை எரியவிடும் போக்கும் பிரம்மாண்டமாக இருக்கிறது.


உதாரணத்துக்கு ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்குப் பிறகு சீக்கியர்களுக்கும் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இந்திராகாந்தி கொல்லப்படுகிறார். சீக்கியர்கள் எண்ணிறந்த பாதிப்புகளுக்கும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள்.

சிங்களர்களின் கொடுமைகளுக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் அமைதி ஏற்படுத்த விரைந்த இந்திய ராணுவமே இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகளானார்கள். ராஜீவ் காந்தி படுகொலையில் வந்து முடிகிறது. இப்போது ஒரு லட்சம் தமிழர்கள் வரை பலியாகியிருக்கிறார்கள். இதெல்லாம் நேரடியான ஒற்றைப்படையான நமது பார்வைகள். இந்தப் பிரச்சினைகளை எரியவிட்டுக் குளிர் காய்கிறவர்கள் யார் என்பது அதிர்ச்சியூட்டும் திகில் கதைக்கு ஒப்பானதாக இருக்கிறது.ஜான் பெர்கின்ஸ் எழுதியுள்ள "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற நூல் நாம் மேற்படி விஷயங்களை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஒரு நாட்டின் அதிபர் திடீரென்று மரணம் அடைவதில் பொதுவாக ஆதிக்க நாடுகளுக்கு ஏற்படும் எண்ணிறந்த ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நாடு தன் நிலைத்தன்மையை, தன்னிறைவை இழக்கும் தருணம்தான் ஆதிக்க நாடுகளுக்கு வரப்பிரசாதம். அவர்களின் கரங்களை சுரண்டுவதற்காக நீட்டுவதற்கான அரிய சந்தர்ப்பம் அது.


பொதுவான லத்தின் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக ஈகுவாடாரில், இந்தோனேஷியாவில், சவுதி அரேபியாவில் என அமெரிக்கக் கைகூலிகள் எப்படி செயல் பட்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த நூல். (கூலிகள் என்பதால் ரயில்வேகூலியை, விவசாயக்கூலியையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. இவர்கள் உலகின் மிக உயர்ந்த பி.எம்.டபிள்யு காரில் கோட் சூட் அணிந்து பிரயாணிப்பவர்கள்). ஜான் பெர்கின்ஸ் "மெய்ன்' என்ற நிறுவனத்தில் கட்டடப் பொறியாளர் வேலைக்குச் சேருகிறார். இவருடைய திடமான மனமும் உடற்கட்டும் இவருக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்குகிறது. அடுத்தடுத்து பதவி உயர்வுகள். ஒரு பெண்மணி வந்து சந்திக்கிறார். அவருடைய முதல் பேச்சே ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது என்கிறது. அவர்கள் சொல்லும் நாட்டுக்கு உடனடியாக பயணிக்க வேண்டும். அங்கே நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை வேகமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன கட்சிகள் இருக்கின்றன, யாருக்கு செல்வாக்கு அதிகம்?, எந்த மாதிரியான ஆவேசமான சூழல் நிலவுகிறது? எந்த விஷயத்தைத் தொட்டால் மனிதர்கள் செண்டிமென்ட்டாக பாதிக்கப்படுவார்கள்? என்றெல்லாம் தகவல் தர வேண்டும். இது முதல் கட்டம். (இரண்டாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும். உதாரணத்துக்கு விநாயகர் ஊர்வலம் போனால் மக்கள் கலவரத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்றால் அங்கு கலவரத்தை வெடிக்க வைக்க வேண்டும்.. சீக்கியர்களை உசுப்பிவிட்டு இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டும்) .
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நேரடியாக இன்னொரு நாட்டில் தனது ஆட்களை இறக்குமதி செய்து பணத்தை அனுப்பிக் காரியம் சாதிக்க முடியாது என்பதால் மெய்ன் போல பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக வேறு நாடுகளுக்குள் இறங்குகின்றன. அது கட்டடம் கட்டும் நிறுவனமாக இருக்கலாம். செல் போன் நிறுவனமாக இருக்கலாம். மெயின் நிறுவனத்தின் மெய்ன் பிஸினஸ் நாட்டைச் சுரண்டுவது... பிரச்சினை ஏற்படுத்துவது... சைடு பிசினஸ்தான் கட்டடம் கட்டுவது. ஜான் பெர்கின்ஸுக்கு இந்த வேலை மிகவும் பிடிக்கிறது. வேகமாக காரியங்களைச் சாதிக்கிறார். பதவி உயர்வுகள்.. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் டைரக்டருக்கு நிகரான சம்பளமே அவருக்கு வழங்கத் தயாராகிறது. ஈகுவடாரிஸ் அணைகள் கட்டி, எண்ணெய் வளத்தைச் சுரண்டி, அங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே பாழாக்கி, இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியை சின்னா பின்னமாக்கி, அந் நாட்டு அதிபரைக் கொன்று.. என இவர் விவரித்துக் கொண்டே போகிறார். நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. பக்கத்தில் "டயம்" என்ன என்று கேட்டால் கூட ஏதாவது அதில் உள் நோக்கம் இருக்குமா?' என்று அஞ்ச வேண்டியதாக இருக்கிறது. 2001 செப்டம்பர் பதினோரம் தேதி இரட்டைக் கோபுரமும் பென்டகன் நிறுவனமும் தாக்கப்பட்டன. அத்தனை பாதுகாப்புகள் நிறைந்த அமெரிக்காவிலேயே பின்லேடன் உள்ளே நுழைந்துவிட்டானே என்று ஆச்சர்யப்படுவது மேலே குறிப்பிட்டபடி இந்த விஷயத்தை நேரடியாக அணுகுவது. பெர்கின்ஸ் தரும் குறிப்புகளைப் பாருங்கள்..
"ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக 1971 லிருந்து 1977 வரை பணியாற்றிய காலத்திலும் 76 முதல் 77 வரை சி.ஐ.ஏ.வின் தலைவராகவும் பணியாற்றிய போதும் பின்லேடன் குடும்பத்தினருக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உறவுகள் வேர்விட்டு வளர்ந்தன. கடந்த 20 ஆண்டுகளாக வணிக, அரசியல் உறவாக அது நீடித்து வருகிறது. செப்டம்பர் பதினொன்றாம் தேதி தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் குடும்பத்தினர் மற்றும் பணம் படைத்த சவுதி அரேபியர்கள் அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்த விமானங்களைப் பறக்க அனுமதித்து யார் என்று இதுவரை தெரியவில்லை.''இப்படி உலகத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னணியில் பதுங்கியிருக்கும் மற்றொரு அதிர்ச்சியை நூல் முழுக்கச் சொல்லிக் கொண்டே போகிறார் பெர்கின்ஸ்.


தான் செய்யும் தொழில் மீது அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. எப்படி ஒரு பெண்ணின் மூலம் இந்தத் தொழிலில் இறங்குவதற்குக் காரணமாக இருந்தேனோ அதே போல் இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் இந்த இழி செயலைப் புரிந்து கொண்டேன் என்கிறார். எந்த கணத்தில் அவர் அதை உணர்ந்தாரோ அப்போது முதலே அவருடைய நிறுவனத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்பும் ஆபத்தும் வரும் என்பது புரிந்து போகிறது. தனது உயிருக்கு நாள் குறிக்கப்பட்டு விடும் என்று தெரிந்து கொள்கிறார். நிறுவனமோ அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறது. "நீங்கள் நமது நிறுவனத்துக்கு எதிரான கருத்துத் தொனிக்கும் கட்டுரையை எழுதியிருப்பதாக அறிகிறோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் சலுகைகளும், பதவிகளும் காத்திருக்கின்றன'' என்று எலிக்கு மசால் வடை காட்டி அழைத்துப் பார்க்கிறார்கள். அதிலே மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. மறுத்தால் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து போகிறது. சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வருகிறார். அவருக்குத் தான் செய்யும் தொழில் விபசாரத்துக்கு ஒப்பான தொழிலாக கேவலமாகப்படுகிறது. ஆனாலும் வேறுவழியில்லை.


ஆப்ரிக்காவில் தம் செயலால் சுரண்டப்பட்ட பகுதிகளைப் பார்க்கிறார்.அவருடைய நடையிலேயே அப்படியே தருகிறேன்...

"கடலிலிருந்து ஒரு கணம் பார்வையைத் திருப்பியபோது ஆப்ரிக்க இல்லங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட அடிமைகளால் கட்டப்பட்ட சுவர்கள் கண்ணில் பட்டன. அதைக் காணச் சகிக்காமல் அப்பால் திரும்பியபோது தரையில் கிடந்த ஒரு பருமனான தடியைக் கண்டேன். பாய்ந்து அதை எடுத்துக் கொண்டு கல் சுவர்களை அதனால் விளாசத் தொடங்கினேன். உடலில் உள்ள சக்தியெல்லாம் வற்றிப் போகும் வரை சுவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்தேன். பின்பு புல்லில் விழுந்து உயரத்தில் மேகங்கள் நகர்வதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்ன செய்ய வேண்டுமென்று எனக்குப் புரிந்துவிட்டது. இனி பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றால் அவ்வளவுதான். ஒழிந்தே போக வேண்டியதுதான். சம்பள உயர்வுகளும், சலுகைகளும் லாபங்களும் கட்டிப் போட்டுவிடும். பணியில் நீடிக்க, நீடிக்க வெளியேறுவது மென்மேலும் கடினமாகிவிடும். அடிமையாகிவிடுவேன். தப்பி ஓடிவிட வேண்டும்... இரண்டு நாள் கழித்து பாஸ்டன் திரும்பினேன். 1980 ஏப்ரல் 1 அன்று பால் பிரிட்டியின் அலுவலகத்துக்குச் சென்று வேலையை ராஜினாமா செய்தேன்.''ராஜினாமா செய்த பிறகு பெர்கின்ஸஸுக்குத் தொடர்ந்த மிரட்டல்களும் அதன் பின்பு இந்த நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியானதும் துப்பறியும் நாவலுக்குரிய இன்னொரு பாகம்.இரா. முருகவேள் சுவாரஸ்யமான காவிய நடையில் இதை மொழி பெயர்த்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பெயர்ப்பு நூல்.நாமிருக்கும் உலகம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள உதவும் ஒப்பற்ற நூல்.


பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ்

தமிழில்:இரா. முருகவேள்

விடியல் பதிப்பகம்,

11, பெரியார் நகர்,

மசக்காளி பாளையம் (வடக்கு),

கோயமுத்தூர்- 641 015.

மின்னஞ்சல்: sivavitiyal@yahoo.co.inphone: 0422 - 25776772

செவ்வாய், செப்டம்பர் 15, 2009

மில்லும் மில் சார்ந்த இடமும்


















சாதாரண விஷயம் எப்படி செய்தியாகிறது என்பதற்கு உலக அளவில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கும். குறிப்பிட்ட கால வித்தியாசத்தில் ஒரு நபரையோ, ஒரு இடத்தையோ பார்க்கும்போது ஒரு அழகான ஆச்சரியம் இருப்பதும் சாதாரணம் செய்தி ஆவதில் ஒரு வகை.
சிறுவயதில் ஓட்டேரியில் பதினாலு குடித்தனங்கள் இருந்த ஒண்டிக் குடித்தன வீட்டில் இருந்தேன். அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் ஏற்பட்டது பற்றிப் பார்ப்போம்.
அந்த வீட்டில் பெரும்பாலும் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் வசித்தனர். அதாவது 12 குடித்தனக்காரர்கள் அங்குதான் வேலை செய்தனர். மீதி இரண்டு பேரில் என் அப்பா ஒருவர். சுற்றுப்பட்டில் இருந்த எல்லா வீட்டிலும் இதுதான் நிலைமை. சுமார் பதிமூன்றாயிரம் பேர் அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தனர். மூன்று ஷிப்ட். ஷிப்டுக்கு நான்காயிரம் பேர் நடமாட வேண்டிய சாலை. ஆலைச் சங்கு காலை பதினோரு மணிக்கு ஒரு தடவை கூவும். பெண்கள் தம் கணவன்மார்களுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு ஓடுவார்கள்.
பி அண்ட் சி ஆலை மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதையே நம்பியிருந்த பதிமூன்றாயிரம் தொழிலாளர் குடும்பங்களும் என்னென்ன விபரீதங்களுக்கு ஆளாயின என்பது ஆய்வுக்கான விஷயம். உளவியல் ரீதியான உலுக்கல் அது. அங்கே தடுக்கிவிழுந்தால் டீக்கடை. தொழிலாளர்களின் பிரதான உணவு. சரஸ்வதி, மகாலட்சுமி தியேட்டர்கள் அவர்களின் மையப் பகுதி. மேற்கே மேகலா தியேட்டரும் கிழக்கே புவனேஸ்வரி தியேட்டரும் தெற்கே ராக்ஸி தியேட்டரும் எல்லைகள். அப்போது மேகலாவில் எம்.ஜி.ஆர். படமும் புவனேஸ்வரியில் சிவாஜி படமும் ரிலீஸ் ஆகும். இப்போது எம்.ஜி.ஆரும் இல்லை, சிவாஜியும் இல்லை. அந்தத் தியேட்டர்களும் இல்லை. இதில் மகாலட்சுமியின் உயிர் மட்டும் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது. மற்றவை வேறு கான்கிரீட் அவதாரம் எடுத்துவிட்டன. டீக்கடைகள் இருக்கின்றன, இப்போதும் இருக்கும் உதிரித் தொழிலாளர்களின் உணவாக.
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கிருந்த சுற்றுப்பட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. அப்படியே ஒரு நாள் அது காணால் போனது. திரு.வி.க. அதன் தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தத் தொழிற்சாலைக்கு நிலக்கரி சுமந்து வரும் ரயில் ஒன்று உண்டு. அது தொழிற்சாலைக்குள்ளேயே போய் இறக்கும் வசதி இருந்தது. கூவம் ஆறும் அதனுள் ஓடும். அதில் படகுகள் மூலம் பஞ்சுப் பொதிகளும் தயாரித்த ஆடைகளும் வருவதும் போவதுமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் படகுகள் போய் வருவதை நானும் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் அந்தத் தொழிற்சாலையில் ரஜினிகாந்தும் ஸ்ரேயாவும் ‘சிவாஜி’ படத்துக்காக ஒரு நடனம் ஆடினார்கள். அந்தப் பக்கம் போயிருந்த போது மக்கள் முகத்தில் ரஜினி வந்திருக்காரு என்ற பரவசத்தைப் பார்த்தேன். உலகத்துக்கே துணி அளந்து கொண்டிருந்த ஒரு பேக்டரியின் இறுதி மூச்சைக் கேட்டேன்.
அத்தகைய சாதாரணர்கள் இருந்த வீடுதான் அது. இப்போது அதிமுக பிரமுகர் சேகர் பாபு அந்த வீட்டை வாங்கி அவருடைய இல்லமாக புணரமைத்துக் கொண்டார். ஏழைகளின் பெருமூச்சுகளால் நிரம்பியிருந்த அந்த வீடு இப்போது பளபளப்பாக நிம்மதியாக இருக்கிறது. ஒரு வேளை அவருடைய தந்தையும் அதில் வேலை பார்த்திருக்கலாம். அத்தனை உறுதியாகத் தெரியாது. ஆனால் சேகர் பாபு என்னுடன் அப்பு செட்டியார் பள்ளிக் கூடத்தில் படித்தார். ஏழாவது படிக்கும் போதே வாத்தியாரிடம் சண்டை போட்டுவிட்டு பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.

இப்போது அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

செவ்வாய், செப்டம்பர் 08, 2009

பெரிய மனிதர்.. சின்ன வீடு!

எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இரண்டு முறை பேசியிருக்கிறேன். ‘ஊருக்கு நூறு பேர்', ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி', ‘ஆயுத பூஜை' என்று அவருடைய லட்சியம் பேசும் கதைகளைத்தான் முதலில் படித்திருந்தேன். "சில நேரங்களில் சில மனிதர்கள்', ‘கங்கை எங்கே போகிறாள்', ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற அதற்கு முந்தைய நாவல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருப்பதாக ஒரு மேலோட்டமான அபிப்பிராயம் இருந்தது. இந்த வாசிப்புப் பின்னணியில்தான் ஜெயகாந்தனைச் சந்தித்தேன்.
முதல் முறை பேசியது டெலிபோனில்.
போலீஸ் செய்தி என்ற புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றியபோது அந்தப் பத்திரிகையின் ரத்தவாடையைப் போக்கிவிட நினைத்து நான் எடுத்த முயற்சியின் ஒரு பங்காக சிலவிதமான குற்றங்களுக்கு எழுத்தாளர்களின் கருத்துகளை வாங்கிப் போடலாம் என்று யோசனை சொன்னேன். உதாரணத்துக்குக்கற்பழிப்பு' என்ற குற்றம் குறித்து சேலம் அருள்மொழி, ஜெயகாந்தன் இருவரையும் பேச வைக்கலாம் என்று திட்டமிட்டேன். ஜெயகாந்தனிடம் இதைச் சொன்னபோது "நான் இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதையோ, பேசுவதையோ தவிர்த்துவிட்டேன்'' என்று கூறிவிட்டார்.
போலீஸ் செய்தி பத்திரிகையை சமூக இலக்கிய ஏடாக மாற்றும் யோசனையை பிரபஞ்சனிடம் வாசகர் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதன் மூலம் ஓரளவுக்குத் தீர்த்தேன்.
அதன் பிறகு போலீஸ் செய்தி வேலை இழந்து (சசிகலா) நடராசன் நடத்திய தமிழரசி இதழில் ஃப்ரிலான்ஸராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு விக்ரமன் ஆசிரியராக இருந்தார். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியானசின்னவீடு' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
சின்னவீடு' என்று ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பது எவ்வளவு கேவலம்? இது குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தார் விக்ரமன்.
போனில் பேசினால் தவிர்த்துவிடுவாரோ என்ற தயக்கம். காலையில் நேரில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.
மீசையைத் தடவிவிட்டுக் கொண்டு மிடுக்காக விசாரித்தார். என்னவோ ஒரு வசீகரம் இருந்தது அவரிடத்தில். பிரமிப்பும் இருந்தது. எனக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் நாக்குழற ஏதோ பேசினேன்.
"மேலே இருங்கள் வருகிறேன்'' என்றார்.
மாடியில் ஓலை வேய்ந்த கொட்டகை இருந்தது. அங்கே அவர் பைப் பிடிப்பது போல பெரிய போட்டோ ஒன்று மாட்டியிருந்தது. எனக்கு மாக்ஸிம் கார்க்கி மனதில் ஓடினார்.
சின்னவீடு' பற்றிப் பேசுவதற்கு எனக்கே கூச்சமாக இருந்தது.
தோளின் மீது ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தார் ஜெயகாந்தன். நான், வெளிவந்திருக்கும் அந்தப் படத்தின் தலைப்பைப் பற்றிச் சொன்னேன்.
"சின்னவீடு என்றால் என்ன அர்த்தம்?'' என்றார். அவர் தெரிந்து கொண்டே கேட்கிறாரா தெரியாமல் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
"முதல் மனைவிக்குப் பிறகு ஒருவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை சின்னவீடு என்று சொல்கிறார்கள். அது பெண்களை கொச்சைப் படுத்துவதாக இருக்கிறது... உங்கள் கருத்து வேண்டும்'' என்றேன்.
"எனக்கு இந்த மாதிரியான சீப்பான வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாது'' என்று கூறிவிட்டார்.
"சரி சார்'' என்று எழுந்து வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
பின்னாளில் அவருக்கு இரண்டு மனைவியர் என்ற செய்தியும் தெரிந்த போது அவரிடம் போய் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுச் சங்கடப்படுத்திவிட்டோமே என்று அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது.
ஒருசில அறிமுகங்கள் பிறகு அவர்களை எப்போதும் சந்திக்க வழியில்லாமல் சுவர் எழுப்பிவிடும். ஜெயகாந்தனுடனான இந்தச் சந்திப்பும் அப்படியான ஒன்றுதான். அதன் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin