செவ்வாய், செப்டம்பர் 15, 2009

மில்லும் மில் சார்ந்த இடமும்


சாதாரண விஷயம் எப்படி செய்தியாகிறது என்பதற்கு உலக அளவில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கும். குறிப்பிட்ட கால வித்தியாசத்தில் ஒரு நபரையோ, ஒரு இடத்தையோ பார்க்கும்போது ஒரு அழகான ஆச்சரியம் இருப்பதும் சாதாரணம் செய்தி ஆவதில் ஒரு வகை.
சிறுவயதில் ஓட்டேரியில் பதினாலு குடித்தனங்கள் இருந்த ஒண்டிக் குடித்தன வீட்டில் இருந்தேன். அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் ஏற்பட்டது பற்றிப் பார்ப்போம்.
அந்த வீட்டில் பெரும்பாலும் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் வசித்தனர். அதாவது 12 குடித்தனக்காரர்கள் அங்குதான் வேலை செய்தனர். மீதி இரண்டு பேரில் என் அப்பா ஒருவர். சுற்றுப்பட்டில் இருந்த எல்லா வீட்டிலும் இதுதான் நிலைமை. சுமார் பதிமூன்றாயிரம் பேர் அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தனர். மூன்று ஷிப்ட். ஷிப்டுக்கு நான்காயிரம் பேர் நடமாட வேண்டிய சாலை. ஆலைச் சங்கு காலை பதினோரு மணிக்கு ஒரு தடவை கூவும். பெண்கள் தம் கணவன்மார்களுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு ஓடுவார்கள்.
பி அண்ட் சி ஆலை மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதையே நம்பியிருந்த பதிமூன்றாயிரம் தொழிலாளர் குடும்பங்களும் என்னென்ன விபரீதங்களுக்கு ஆளாயின என்பது ஆய்வுக்கான விஷயம். உளவியல் ரீதியான உலுக்கல் அது. அங்கே தடுக்கிவிழுந்தால் டீக்கடை. தொழிலாளர்களின் பிரதான உணவு. சரஸ்வதி, மகாலட்சுமி தியேட்டர்கள் அவர்களின் மையப் பகுதி. மேற்கே மேகலா தியேட்டரும் கிழக்கே புவனேஸ்வரி தியேட்டரும் தெற்கே ராக்ஸி தியேட்டரும் எல்லைகள். அப்போது மேகலாவில் எம்.ஜி.ஆர். படமும் புவனேஸ்வரியில் சிவாஜி படமும் ரிலீஸ் ஆகும். இப்போது எம்.ஜி.ஆரும் இல்லை, சிவாஜியும் இல்லை. அந்தத் தியேட்டர்களும் இல்லை. இதில் மகாலட்சுமியின் உயிர் மட்டும் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது. மற்றவை வேறு கான்கிரீட் அவதாரம் எடுத்துவிட்டன. டீக்கடைகள் இருக்கின்றன, இப்போதும் இருக்கும் உதிரித் தொழிலாளர்களின் உணவாக.
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கிருந்த சுற்றுப்பட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. அப்படியே ஒரு நாள் அது காணால் போனது. திரு.வி.க. அதன் தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தத் தொழிற்சாலைக்கு நிலக்கரி சுமந்து வரும் ரயில் ஒன்று உண்டு. அது தொழிற்சாலைக்குள்ளேயே போய் இறக்கும் வசதி இருந்தது. கூவம் ஆறும் அதனுள் ஓடும். அதில் படகுகள் மூலம் பஞ்சுப் பொதிகளும் தயாரித்த ஆடைகளும் வருவதும் போவதுமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் படகுகள் போய் வருவதை நானும் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் அந்தத் தொழிற்சாலையில் ரஜினிகாந்தும் ஸ்ரேயாவும் ‘சிவாஜி’ படத்துக்காக ஒரு நடனம் ஆடினார்கள். அந்தப் பக்கம் போயிருந்த போது மக்கள் முகத்தில் ரஜினி வந்திருக்காரு என்ற பரவசத்தைப் பார்த்தேன். உலகத்துக்கே துணி அளந்து கொண்டிருந்த ஒரு பேக்டரியின் இறுதி மூச்சைக் கேட்டேன்.
அத்தகைய சாதாரணர்கள் இருந்த வீடுதான் அது. இப்போது அதிமுக பிரமுகர் சேகர் பாபு அந்த வீட்டை வாங்கி அவருடைய இல்லமாக புணரமைத்துக் கொண்டார். ஏழைகளின் பெருமூச்சுகளால் நிரம்பியிருந்த அந்த வீடு இப்போது பளபளப்பாக நிம்மதியாக இருக்கிறது. ஒரு வேளை அவருடைய தந்தையும் அதில் வேலை பார்த்திருக்கலாம். அத்தனை உறுதியாகத் தெரியாது. ஆனால் சேகர் பாபு என்னுடன் அப்பு செட்டியார் பள்ளிக் கூடத்தில் படித்தார். ஏழாவது படிக்கும் போதே வாத்தியாரிடம் சண்டை போட்டுவிட்டு பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.

இப்போது அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin