வெள்ளி, ஜூலை 28, 2006

தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?


தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?

தமிழ் சினிமா பாடல்களில் ஒரு வித நவீனத் தன்மை பெருகி வருகிறது. நவீனத் தன்மையென்றால் பழைய சிந்தனைகளுக்கு மெருகேற்றுவதல்ல.
நீலமலர்கள்' என்ற தமிழ்ப்படத்தில் பார்வை தெரியாத நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கிறாள்:
இது இரவா பகலா?
நாயகன் பதில் -ன்னொரு கேள்வியாக அமைகிறது... ''நீ நிலவா, கதிரா?''
அடுத்து பாடல் இப்படி தொடர்கிறது...
இது வனமா மாளிகையா?
''நீ மலரா ஓவியமா?''
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
''உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா?''
இதே பாடல் இப்போது ''உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா?'' என்று நவீனப்பட்டிருக்கிறது.
நாம் சொல்ல முனைந்தது இத்தகைய நவீனத்துவத்தைப் பற்றியல்ல.
தமிழ் சினிமா பாடல்களில் இப்போது அதிகரித்து வரும் அறிவியல் செய்திகளும் புள்ளிவிவரங்களும்தான் நாம் சொல்லும் நவீனம்.
வைரமுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புள்ளிவிவரங்கள் கொடுப்பார்... 'காதலன்' படத்தில் வரும் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் ''உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் அதில் காதல் நரம்பு எந்த பக்கம்?'' என்கிறார். அதே பாடலில் ''தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இரண்டு சொல்லடி அதிகபட்சம் என்று காதலன் காதலியிடம் ஏங்குவான். ''தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து'' என்பார் -ன்னொரு பாடலில். ''அட பூகம்ப வேலையிலும் வான்கோழி களவி கொல்லும்'' என்கிறது 'தாஜ்மகால்' படத்தில் இடம்பெறும் அவருடைய பாடல்வரி ஒன்று. உன் விழி ஈர்ப்பு விசையினிலே நான் வந்து விழுந்துவிட்டேன் என்பது போன்ற அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் ஏராளம், ஏராளம்.
வாலி நுனிப்புல் மேய்வது போல் சில விஞ்ஞான விஷயங்களைச் சொல்லுவார். விஞ்ஞானத்தைவிட விரசம் சற்று தூக்கலாகவே இருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ''ராஜா கைய வெச்சா'' பாடலில் காரையும் பெண்ணையும் ஒப்பிடுவார். ''கட்டியவன் விரல்தான் மேலே படணும், கண்டவன் கைபட்டா கெட்டுப் போயிடும்'' என்றும் ''காரும் பெண்போல வேகம் உண்டாக தேகம் சூடேறுமே'' என்றும் ஒப்பிட்டார்.
''காதல் வெப் சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும்'' பாடலில் ''ஹார்ட்வேர் உள்ளம் கெட்டுப் போனதென்ன? சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன?'' என்ற பாடல் வரிகள் இடம் பெருகின்றன. 'காதலர் தினம்' படத்தில் வரும் பாடலில் ''மனசை விட்டு மவுசை தட்டு மாட்டிடும் பதினெட்டு'' என்று எழுதியிருக்கிறார்.
பழனிபாரதி தன் பாடல்களில் நிறைய ஆங்கிலப் பிரயோகம் செய்தாலும் அவை விஞ்ஞான குறிப்புகள், விஞ்ஞான ஒப்புமைகள் தன்மையில் இடம்பெறுமா என்பது சந்தேகமே. 'பூக்கள் அவளிடம் ஆட்டோ கிராப் கேட்டன' பாணியில் அவருடைய ஆங்கிலப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.
இப்போது வந்திருப்பவர்களில் பா.விஜய் அறிவியலோடு பாடல் எழுதிவருகிறார். 'தெனாலி' படத்தில் இடம்பெற்ற ''சுவாசமே சுவாசமே'' பாடல் பல அறிவியல் செய்திகளை அடுக்கடுக்காகச் சொல்கிறது. ''அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்...'', ''இயற்கையின் கோளாய் இயங்கிய என்னை செயற்கை கோளாய் உன்னை சுற்ற வைத்தாய்..'', ''இசைத்தட்டாக இருந்த என்னை பறக்கும் தட்டாக மாற்றினாய்'',''நிலவு இல்லாத புதன் கிரகம் நானே முழு நிலவாக எனக்காக வந்தாய்...'' என்று சொல்லிக் கொண்டே போகிறார்.
இதற்கெல்லாம் முன்னோடி என்.எஸ்.கே. இதற்கெல்லாம் வெகு காலங்களுக்கு முன்பே ''விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி'' பாடல் மூலம் பார்முலா போட்டுக் கொடுத்தார் என்பது சாலப் பொருந்தும். ''பட்டனைத் தட்டிவிட்டா தட்டுல இட்டிலியும் காபியும் பக்கத்தில் வந்துடனும்'' என்றார்.
அதற்கும் மிகவும் முன்னால் சங்க இலக்கியப் பாடலில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த தலைவியின் காதுகளில் இருந்த தொங்கட்டான் ஊஞ்சலைவிட வேகமாக ஆடிக் கொண்டிருந்ததாகக் கவிஞன் வியந்திருக்கிறான்.
ஆரம் குறையக் குறைய அலைவு அதிகரிக்கும் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் அறிவித்திருக்கிறார்கள். என்ன செய்வது நம் தமிழ்க் கவிஞன் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டு பிடித்துவிட்டு அதை மேற்கொண்டு இட்டுச் செல்லாமல் அதற்கடுத்து மூக்குத்தி எப்படி ஜொலித்தது என்று வியக்கப் போய்விட்டான். பூமி சுழல்கிறது என்று கலிலியோ வந்த பிறகுதான் தெரிந்தது. சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்றார் வள்ளுவர்.
நம் கவிஞர்கள் இலக்கியத்தோடு அறிவியலையும் வளர்த்து வருகிறார்கள், அது சினிமா பாடல்களிலும் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. சினிமா கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பவர்களும் இதைக் கணக்கில் கொள்ளலாம்.
-தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin