சனி, மார்ச் 12, 2011

சுஜாதா சிருஷ்டி -3

"சுஜாதாவை ஜெயமோகன் அளவுக்குப் பெருமையாக அலசி ஆராய்ந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய பிளாகில் சுஜாதா என்று தட்டினால் பத்துமணிநேரத்துக்கு படிப்பதற்கு விஷயம் இருக்கிறது. நமக்கு எங்கே இடிக்கிறது என்றால் அவர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளை அப்படியே புறக்கணித்துவிடலாம் என்று ஒரு பிரயோகத்தில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக அவருடைய தமிழாசிரியர் கதையை...'' கணேஷ் சுருக்கமாக விவரித்தான்.
"எல்லாத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கு பாஸ்'' வசந்த் இப்படி சொன்னதும் பிரியா தன் இரண்டு பக்கங்களை அவசரமாக சரிபார்த்துக் கொண்டாள். வசந்துக்கே தான் சிலேடையாக சொல்லிவிட்டோம் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்தது.
"அந்தக் கதையில் அவர் விஞ்ஞானம் என்று என்னதான் சொல்ல வருகிறார்?''
"இந்த மாதிரி மொட்டையாகக் கேட்காதே''
"ஹிப்பியாவே கேட்கிறேன். சயின்ஸ் கதையென்றால் இன்றிலிருந்து ஒரு ஐநூறு வருஷம் தள்ளி நடக்க வேண்டும். வேற மாதிரி பேச வேண்டும்... வேற மாதிரி சாப்பாடு சாப்பிட வேண்டும்... வேறு கிரகங்களுக்குப் போக வேண்டும்.. அவ்வளவுதானா?''
"நீ சொன்னதெல்லாம் சப்போர்ட்டுக்கு. உண்மையில் ஒரு எதிர்காலம் அதில் தெரிந்தால் கதைக்கு வலு சேர்க்கும். வருங்காலத்தை நம்பகமான முறையில் யூகிக்கிற திறமையிருக்க வேண்டும். தமிழாசிரியர் கதைக்கே வருவோம். அது எதிர்காலத்தில் இருக்கிறது. அப்போது தமிழ் டெலிகிராம்போல போயிருக்கிறது...''
"இது நம்பிக்கை வறட்சிதானே?''
"கடந்த இரண்டாயிரம் வருஷத்தில் மொழி இந்தளவுக்கு மாறியிருக்கும்போது அது அப்படி மாறிவிடும் என்ற அபாயத்தைச் சொல்வது நம்பிக்கை வறட்சியில்லை... எச்சரிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது இப்போதே இன்னா டமாலா? புட்டுக்சா? லவ் யு டா டைப்பில்தான் பேசுகிறார்கள்.. அவர் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லும்போதுதான் அது கதையாக ரசிக்கத் தூண்டுகிறது. நீங்கள் சயின்ஸ் பிக்ஸன் ஏதாவது படிச்சிருக்கீங்களா?''
பிரியா இல்லை என்பதாக தலையாட்டிவிட்டு, "ஈ.டி., ஸ்டார் வார்ஸ், டெர்மினேட்டர், அவதார் எல்லாம் பார்த்திருக்கிறேன்'' என்றாள்.
"ரைட்... அதில் எல்லாம்கூட பாசம், காதல், அநீதியை எதிர்த்தல் எல்லாம்தான் மையம். மனிதன் அவனுடைய தர்மத்தையும் நியாயத்தையும் காலம் கடந்தும் எதிர்பார்க்கிறான். எதிர்காலத்தில் எதை நியாயம் என்பது? திருமணம் என்பது தடைசெய்யப்பட்ட முறையாக மாறிப்போய்விடலாம். வனவிலங்குகளை ஜூ என்ற சிறைச்சாலையில் அடைத்துவைக்கக் கூடாது என்று சட்டமாகலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை வரலாம். தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆள்கள் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்வது அத்தகைய ஒன்றுதான்.''
"நான் அந்தக் கதையைப் படிக்கவில்லை'' இந்த நேரத்திலாவது உண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற குற்ற உணர்வு தெரிந்தது பிரியாவின் தொனியில்.
கணேஷ் பிரியாவுக்காக தமிழாசிரியர் கதையைச் சொன்னான். ""வெரி இன்ட்ரஸ்டிங்'' என்றாள்.
கணேஷ் பிரசங்கம் போல தொடர்ந்து கொண்டிருந்தான். "பிரெய்ன் கண்ட்ரோல் பற்றி "நில்லுங்கள் ராஜாவே'னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். காலமானார், பதிமூன்றாம் கதை என்று நிறைய முயற்சி செய்தார்.... தொடர்ந்து முயற்சி செய்தார்.
"அவர் எழுதப் புகுந்த காலம் பொன்னியின் செல்வன், கல்லோ காவியமோ, பொன்விலங்கு என்று சரித்திரமும் பேராசிரியத் தமிழும் பின்னிப் பிணைந்திருந்த காலம். இவர் எழுதிய "இடது ஓரத்தில்..' என்ற சிறுகதை இப்படியும் எழுதலாமா என்று யோசிக்க வைத்தது. நைலான் கயிறு பழிவாங்கலை... புதுமாதிரி சொல்லியது.
கொலையுதிர் காலம் பேய் இருக்கிறதா, இல்லையா என்று பேசியது. அவர் எதிலும் தீர்மானமாக இல்லை. புதுமைப்பித்தன் பேய் நம்பிக்கையில்லாமல் பேய் என்றால் பயமாக இருக்கிறது என்று சொன்னது மாதிரி, எனக்குப் பெருமாள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் பக்தி இருக்கிறது என்று சொல்ல முடிந்தது.''
வசந்த் இடைமறிக்க எண்ணி குறும்பாகச் சிரித்தான். ""ஏதாவது தீர்மானமா இருந்திருக்க வேண்டும். எல்லாத்தையும் கிண்டலாகப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போவது வாசகனை சொறிந்துவிடும் வேலை என்றுதான் பலர் திட்டியிருக்கிறார்கள்.''
"நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது என்றாய்?'' வசந்த் பிரியாவைப் பார்த்துவிட்டு.. "அது வேற பாஸ்''..
"சுஜாதாவா நல்லா காமெடியா எழுதுவாரு.... தமிழ் நடையையே நீர்த்துப் போக வைத்தவர் அவர்தான்னு ஒருத்தர் சொன்னார்...''
"என்கிட்டயும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள்'' வசந்த் பின் பாட்டு பாடினான்.
"இந்தக் குற்றச்சாட்டு மேலோட்டமானது... தமிழாசிரியர் கதையிலேயே மாணவர்கள் யாரும் தமிழ் படிக்க வராததால் அந்த ஆசிரியரை அசதி பிரிவில் பணியாற்றச் சொல்லுவார்கள். அடைப்புக் குறியில் சதி- அசதி என்று போட்டிருப்பார். இந்த அடைப்புக்குறிக்குள் ஒரு நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. ஆனால் வலிந்து எட்டிய துணுக்குத் தோரணமல்ல. கதையில் அந்த நாளைய தமிழ் எப்படி இருந்தது என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டு வருவார். மொழி என்பது சுருக்கமான பரிவர்த்தனையாக மாறிவிடும் என்பது அவருடைய கணிப்பு. அதை அவர் சொர்க்கத் தீவிலிருந்தே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். ஆத்மா, நித்யா விஞ்ஞான சிறுகதைகள் தொடங்கி என் இனிய இயந்திரா வரைக்கும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.. நமக்கு அதை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்கிறது''
பிரியா டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று பிரிட்ஜை திறக்கப் போய்விட்டாள்.
"ஏன் மொழி இன்னும் சிறப்பாக செழித்தோங்கி வளர்ந்ததாக கற்பனை செய்யக்கூடாதா?'' என்றான் வசந்த்.
"ஒன்று கேட்கிறேன். புறநானூற்று காலத்திலிருந்து இப்போது மொழி வளர்ந்திருக்கிறதா தேய்ந்து கொண்டிருக்கிறதா?''
நெற்றி நரம்பை தேய்த்துவிட்டுக் கொண்டான்... "தேய்ந்த மாதிரிதான் இருக்கிறது... முன்னாள் அமைச்சர் காளிமுத்து ஒரு மீட்டிங்கில் பேசும்போது கேட்டேன்... ஒருவிஷயத்தை சொல்லுவதை தமிழர்கள் முப்பத்தி மூன்றுவிதமாக தெரிவித்தார்கள் என்று... சொல்லுதல், நவில்தல், செப்புதல், கூறுதல், அறிவித்தல், இயம்புதல் என்று சொல்லப்பட்ட விதத்தைப் பொறுத்து அது முப்பதுத்து மூன்று வகைப்படும் என்றார். இப்போது எல்லாமே சொன்னான் என்று ஆகிவிட்டது. இது தேய்மானம்தானே?''
வசந்த் எதற்காக காளிமுத்து கூட்டத்துக்குப் போனான் என்பதில் ஆச்சர்யப்பட்டு அதை அடக்கிக் கொண்டான். "இப்போது எல்லாமே சொன்னான்தான். ஆனால் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் புரிந்து கொள்கிறோம். மேனேஜர் ஃபைலை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். இது அறிவித்தல். அவன் அவளிடம் ஐ ல்வ் யூ சொன்னான்... ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய் என்று சொன்னான்... இந்த சொன்னான்களில் உள்ள வகைகளை நான் மனதில் வாங்கிக் கொள்கிறோம்... மலரை முகர்ந்துவிட்டு என்னே அருமையான நாற்றம் என இனிமேல் நாம் சொல்ல முடியுமா? நாஷ்டா துன்ட்யா வரைக்கும் வந்துவிட்டது.''
"அப்படியாயானால் செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ யறியும் பூவே - என்றெல்லாம் தமிழை வளர்க்க முடியாதா?''
"வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... தமிழ் எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டும் மூவாயிரம் ஆண்டுகளாக யாரும் கிட்டே நெருங்க முடியாதபடிக்கு செய்யுள் எழுதியும் வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருவதனாலேயே பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் பெரிதும் வித்தியாசப்பட்டு இருக்கிறது. மற்ற மொழிகளில் பெரிதாக வட்டார வழக்குகள் இல்லை. பிரிட்டன் இங்கிலீஷ் அமெரிக்கன் இங்கிலீஷ் அளவுக்குத்தான் பிரிவினை. இங்கே ஒவ்வொரு நூறு கிலோ மீட்டரிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்படி? அவ்வளவு தொன்மை. குறைந்தபட்சம் இரண்டாயிரம் வயசாவது இருந்தால்தான் பேச்சும் எழுத்தும் வித்தியாசப்படும்... பக்கத்தில் இருக்கிற கேரளத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவுக வந்துட்டாகளா? என்று பேசுகிறவர்களும் அவர்கள் வந்துவிட்டார்களா என்றுதான் உரைநடைத் தமிழில் எழுதுவார்கள். குஸ்டு அஸ்ட்டாம்பா என்பாரும் குடித்துவிட்டு அடித்துவிட்டான் என்பதுதான் உரைநடைத் தமிழ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவசரத்துக்குப் பேசினாலும் எழுதும்போது எல்லாம் சரியாக வந்துவிடும். இது மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு.''
பாஸ், பேசுகிறாரா, எழுது வைத்து வாசிக்கிறாரா என்று சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு.
அழைப்பு மணி அடித்தது.
"நான் திறக்கிறேன்'' பிரியா கதவைத் திறந்தாள்.
நான்கு முழம் வேட்டி, வெள்ளை கதர் சட்டை. கையில் சற்றுமுன் மடக்கி வைத்த குடை. பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. வெயிலில் நடந்து வந்த சூடு அவர் மீதிருந்து தாக்கியது.
"நான் தமிழாசிரியர்'' என்றார் அவர்.
"நீங்க தானா அது?''

(அடுத்த வாரம்)

LinkWithin

Blog Widget by LinkWithin